Search This Blog

Monday, November 3, 2014

மருமகள் வாக்கு-கிருஷ்ணன் நம்பி

கிருஷ்ணன் நம்பி (நன்றி : ஸ்நேகா பதிப்பகம் வெளியீடு. )
மறுநாள் தேர்தல். பூனைக்கும் கிளிக்கும் இருமுனைப் போட்டி. கிளி அபேட்சகர் வீரபாகுக் கோனாரும் பூனை அபேட்சகர் மாறியாடும் பெருமாள் பிள்ளையும் உயிரைக் கொடுத்து வேலை செய்தார்கள். ஊர் இரண்டு பட்டு நின்றது.
சமையல் வேலைக்குச் செல்பவர்களும் கோவில் கைங்கரியக்காரர்களும் நிறைந்த அக்ரகாரத்துப் பிள்ளையார் கோவில் தெரு, கிளியின் கோட்டை என்று சொல்லிக்கொண்டார்கள். அந்தக் கோட்டைக்குள் பல குடும்பங்களுக்கும் பால் வார்த்துக்கொண்டிருந்தவர் வீரபாகுக் கோனார்தான்.
modern_art_gallery.-contemporary_galleries_of_modern_art_paintings.merello.-_la_nina_sevillana
மீனாட்சி அம்மாளிடம் சொந்தமாகப் பசு இருந்தது. வேளைக்குக் கால்படிப் பாலை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு மிச்சத்தை நியாயமாகத் தண்ணீர் சேர்த்து விலைக்கு விற்றுவிடுவாள். ரொக்கந்தான். கடனுக்குத்தான் இந்தக் கடங்கார வீரபாகுக் கோனார் இருக்கிறானே!
மீனாட்சி அம்மாள் அப்படியொன்றும் வறுமைப்பட்டவள் அல்ல. இருந்த வீட்டுக்கும், ஊரடியில் அறுபத்தாறு சென்ட் நஞ்சைக்கும் அவள் சொந்தக்காரி. தாலுக்கா பியூனாக இருந்து சில வருஷங்களுக்கு முன் இறந்து போன அவள் கணவன் அவள் பெயருக்குக் கிரயம் முடித்து வைத்த சொத்து இது. ராமலிங்கம் ஒரே பையன், ஸாது. தகப்பன் வேலையைப் பாவம் பார்த்துப் பையனுக்கே சர்க்கார் போட்டுக் கொடுத்துவிட்டது அவனுடைய அதிர்ஷ்டந்தான். கல்யாணமும் பண்ணி வைத்துவிட்டாள் மீனாட்சி அம்மாள். தள்ளாத வயதில் உதவிக்கு ஒரு மருமகள் வேண்டும் அல்லவா?
ருக்மிணி மெலிந்து துரும்பாக இருந்தாலும் வேலைக்குக் கொஞ்சமும் சளைக்காதவள். அதிகாலையில் வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போடுவதிலிருந்து படுக்கப் போகும் முன் மாட்டுக்கு வைக்கோல் பிடுங்கி வைப்பது வரை எல்லா வேலைகளையும் அவள் அப்பழுக் கில்லாமல் செய்துவிடுவாள். சமையலில் அவளுக்கு நல்ல கை மணம். வெறும் வற்றல் குழம்பும் கீரைக் கறியும் பண்ணிப் போட்டால் கூடப் போதும்; வாய்க்கு மொரமொரப்பாக இருக்கும். (மாமியார்கள் எப்போதும் ஏதேனும் குற்றம் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். எல்லாம் மருமகள்காரிகள் திருந்து வதற்கும் மேலும் மேலும் முன்னேறுவதற்கும் தானே.)
ருக்மிணிக்கு பால் கறக்கவும் தெரியும். பால் கறந்தால் நெஞ்சு வலிக்கும் என்று பக்கத்து வீட்டுப் பெண்கள் சொல்வதுண்டு. ஆனால் பலரும் பேசுவார்கள்; ஒன்றையும் காதில் போட்டுக்கொள்ளக்கூடாது, பதில் பேசவும் கூடாது. ஏன் யாரிடமும் எதுவுமே பேசாமலிருப்பது ரொம்ப ரொம்ப உத்தமம். நாம் உண்டு, நம் காரியம் உண்டு என்று இருந்துவிட வேண்டும். இப்படி, மருமகள் வந்த அன்றே மாமியார் புத்திமதிகள் கூறியாகிவிட்டது. மேலும், கல்யாணத்துக்கு முன்பே ருக்மிணிக்கு லேசாக மார்வலியும் இறைப்பும் உண்டு. டாக்டர்கள் அவளைப் பரிசோதித்திருந்தால் `டிராபிகல் ஈஸ்னோபீலியா’ என்றிருப்பார்கள். ஆனால் ஏன் அப்படிப் பரிசோதிக்க வேண்டும்? வைத்தியம் செய்கிறேன் என்று வருகிறவர்கள் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்களுக்குக் காசு ஒன்றுதான் குறி. மீனாட்சி அம்மாளுக்குத் தெரியாதா? அவள் வயசு என்ன? அநுபவம் என்ன? ஒரு குழந்தை பிறந்துவிட்டால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று சொல்லி விட்டாள். அவள் மட்டுமல்ல; டாக்டரிடம் போவதற்கு இங்கு யாரும் சாகக் கிடக்கவில்லையே?
மருமகளை ஏவி விட்டுவிட்டு மாமியார் மீனாட்சி அம்மாள் ஒன்றும் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்துவிடவில்லை. அவளுக்கும் வேலைகள் உண்டு. பாலுக்குத் தண்ணீர் சேர்ப்பது, அளந்து விற்பது, வருகிற காசுகளை (ராமலிங்கம் சம்பளம் உள்பட) வாங்கிக் கணக்கிட்டுப் பெட்டியில் பூட்டுவது, பார்த்துப் பார்த்துச் செலவு செய்வது, தபால் சேவிங்க்ஸில் பணம் போடுவது எல்லாம் அவள் பொறுப்புதான். இவை மட்டுமா? ஓய்ந்த நேரங்களில் ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம் என்று ஒரு நோட்டுப் புத்தகத்தில் லட்சத்துச் சொச்சம் தரம் எழுதி, அக்ரகாரத்துப் பெண்களை அதிசயத்தில் ஆழ்த்திவிட்டிருக்கிறாள். சாவதற்குள் பத்து இலட்சத்து ஒன்று எழுதி முடித்துவிட வேண்டும் என்பது அவள் திட்டம்.
ருக்மிணியும் மாமியாரும் என்றுமே சேர்ந்துதான் சாப்பிடுவார்கள். பரிமாறியபடியே, `பெண்டிற்கழகு உண்டி சுருக்குதல்’ என்று மீனாட்சி அம்மாள் அட்சரச் சுத்தத்துடன் கணீரெனக் கூறுகையில், அந்த அரிய வாக்கை மீனாட்சி அம்மாளே அவளது சொந்த அறிவால் சிருஷ்டித்து வழங்குவதுபோல் தோன்றும் ருக்மிணிக்கு. மேலும் அதிகமாகச் சாப்பிட்டால் ஊளைச் சதை போட்டுவிடும் என்று மாமியார் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று மருமகள் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. (ரொம்பவும் பொறுக்க முடியாமல் போய், யாரும் அறியாதபடி ருக்மிணி அள்ளிப் போட்டுக் கொண்டு தின்றது இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில்தான்.)
மருமகள் என்று வருகிறவர்களின் வாயைக் கிளறி எதையாவது பிடுங்கிக்கொண்டு போய், மாமியார்க்காரிகளிடம் கோள்மூட்டிச் சண்டை உண்டாக்கி வேடிக்கை பார்க்காவிட்டால் ஊர்ப் பெண்களுக்குத் தூக்கம் வராதல்லவா? ஆனால், ருக்மிணியிடம் அவர்கள் வித்தைகள் எதுவும் செல்லுபடியாகாமல் போனது அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. சதா வீட்டோடு அடைந்து கிடக்கும் போது அவள் எப்போதாவது கோவிலுக்கோ குளத்துக்கோ அனுப்பப்படும்போது, அவளை விரட்டிக்கொண்டு பின்னால் ஓடிய பெண்கள் இப்போது ஓய்ந்து, `இந்தப் பெண் வாயில்லாப் பூச்சி’ என்று ஒதுங்கிக்கொண்டு விட்டார்கள்.
இரவு நேரத் திண்ணை வம்புகளின்போது, ``மாட்டுப் பெண் எப்படி இருக்கா?’’ என்று துளைக்கிறவர்களிடம், ``அவளுக்கென்ன, நன்னார்க்கா’’ என்று மேல் அண்ணத்தில் நா நுனியை அழுத்திப் பதில் சொல்லி அடைத்துவிட்டு அடுத்த விஷயத்துக்கு நகர்ந்து விடுவாள் மீனாட்சி அம்மாள். ``அவளா? அவளை ஜெயிக்க யாரால் முடியும்?’’ என்பார்கள் ஊர்ப் பெண்கள், ஒருவித அசூயையுடன்.
தேர்தலுக்கு முன்தின இரவுப் பேச்சுக் கச்சேரியில் தேர்தல் விஷயம் பிரதானமாக அடிபட்டதில் ஆச்சரியம் இல்லை. மீனாட்சி அம்மாள் வாக்கு யாருக்கு என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், ``ஒங்க ஓட்டு கிளிக்குத்தானே மாமி?’’ என்று விஷமமாக வாயைக் கிளறினாள் ஒருத்தி. ``ஏண்டி எல்லாம் தெரிஞ்சு வெச்சுண்டே என்னச் சீண்டறயா?’’ என்றாள் மீனாட்சி அம்மாள். ``ஒங்க மாட்டுப் பொண் ஆருக்குப் போடப் போறாளோ?’’ என்று இன்னொருத்தி கண்ணைச் சிமிட்டவும், மீனாட்சி அம்மாளுக்குக் கோபம் வந்துவிட்டது. ``பொண்டுகளா, என்னயும் அவளயும் பிரிச்சாப் பேசறேள்? நானும் அவளும் ஒண்ணு, அது தெரியாதவா வாயிலே மண்ணு’’ என்று அவள் ஒரு போடு போடவும் எல்லாரும் பெரிதாகச் சிரித்தார்கள்.
காலையில் வாக்குப் பதிவு சற்று மந்தமாகவும் மதியத்துக்கு மேல் ரொம்பச் சுறுசுறுப்பாகவும் இருந்தது. மீனாட்சி அம்மாள் முதல் ஆளாகப் போய் வோட்டுப் போட்டுவிட்டு வந்துவிட்டாள். வீட்டிலிருந்து கூப்பிடுகிற தூரத்தில் ஆற்றுக்குப் போகிற வழியில் இருக்கிற தொடக்கப் பள்ளிதான் சாவடி. ராமலிங்கம் குளித்துவிட்டுத் திரும்புகிற வழியில் ஆட்கள் பிடித்திழுக்க, ஈரத் துணியோடு அவன் வோட்டளிக்கும்படி ஆயிற்று.
மத்தியான்ன உணவுக்குப் பிறகு வழக்கமாகிவிட்ட சாப்பாட்டு மயக்கத்தில் மீனாட்சி அம்மாள். தாழ்வாரத்து நிலைப்படியில் தலைவைத்துப் படுத்துக் கிடந்தாள். ருக்மிணி தொழுவத்தில் மாட்டுக்குத் தவிடும் தண்ணீரும் காட்டிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் அது சுமட்டுக் கட்டுக்கு ஒரு கட்டுப்புல் தின்று தீர்த்திருந்தது. அது குடிப்பதையும் தின்பதையும் பார்த்துக்கொண்டே இருப்பது ருக்மிணியின் மிகப்பெரிய சந்தோஷம்; மாமியாரின் அதிகார எல்லைகளுக்கு வெளியே கிடைக்கிற சந்தோஷம். ``சவமே, வயத்தாலிக் கொண்டே எம்பிட்டுத் தின்னாலும் ஒம் பசி அடங்காது’’ என்று பொய்க் கோபத்துடன் அதன் நெற்றியைச் செல்லமாய் வருடுவாள். ``மாடுன்னு நெனைக்கப்படாது, மகாலக்ஷ்மியாக்கும்! ஒரு நாழி கூட வயிறு வாடப்படாது; வாடித்தோ கறவையும் வாடிப் போயிடும். கண்ணும் கருத்துமாக் கவனிச்சுக்கணும்’’ என்பது மீனாட்சி அம்மாளின் நிலையான உத்தரவு. ``பசுவே, நீ மட்டும் பெண்டிர் இல்லையா? உண்டி சுருக்கற நியாயம் ஒனக்கும் எங்க மாமியாருக்கும் மாத்ரம் கெடையாதா சொல்லு!’’ என்று அதன் முதுகில் தட்டுவாள் ருக்மிணி. அவளுக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வரும். அதன் கழுத்துத் தொங்கு சதையைத் தடவிக் கொடுப்பதில் அவளுக்குத் தனியான ஆனந்தம், அதற்கும் இது பிடிக்கும். முகத்தை இவள் பக்கமாகத் திருப்பி இவள்மேல் ஒட்டிக்கொள்ளப் பார்க்கும். ``நான் இன்னிக்கு ஓட்டுப் போடப் போறேன். ஒனக்கு அந்த ஒபத்ரவம் ஒண்ணும் கெடையாது. நான் ஆருக்குப் போடணும் நீ சொல்லு. செல்லுவியா? நீ ஆருக்குப் போடச் சொல்றயோ அவாளுக்குப் போடறேன். ஒனக்குப் பூனை பிடிக்குமோ? கிளி பிடிக்குமோ? சொல்லு, எனக்கு ஆரப் பிடிக்குமோ அவாளைத்தான் ஒனக்கும் பிடிக்கும், இல்லையா? நெஜமாச் சொல்றேன், எனக்குக் கிளியைத்தான் பிடிக்கும். கிளி பச்சப்பசேல்னு எம்பிட்டு அழகா இருக்கு! அதுமாதிரி பறக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. பூனையும் எனக்குப் பிடிக்கும். ஆனா, அதைவிடக் கிளியைப் பிடிக்கும். ஆனா பூனைக்குக் கிளையைக் கண்டாலே ஆகாது.’’
வாளியில் தண்ணீர் தணிந்து விடவே, குடத்திலிருந்து மேலும் தண்ணீரைச் சரித்துத் தவிடும் அள்ளிப் போட்டாள். அதற்குள் பசு அழியிலிருந்து ஒரு வாய் வைக்கோலைக் கடித்துக்கொண்டு அப்படியே தண்ணீரையும் உறிஞ்சத் தொடங்கவே, எரிச்சலுடன் அதன் வாயிலிருந்து வைக்கோலை அவள் பிடுங்கி எறியவும், வாளி ஒரு ஆட்டம் ஆடித் தண்ணீர் சிந்தியது. ``சவமே, எதுக்கு இப்படிச் சிந்திச் செதறறாய்? தேவாளுக்காச்சா, அசுராளுக்காச்சா? ஒழுங்கா வழியாக் குடியேன்’’ என்று அதன் தாடையில் ஒரு தட்டுத் தட்டினாள். அது இடம் வலமாய்த் தலையை ஆட்டி அசைக்க, தவிட்டுத் தண்ணீர் பக்கங்களில் சிதறி ருக்மிணியின் மேலும் பட்டது. அவள் புடைவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.
பசு இப்போது தண்ணீரை உறியாமல் வாளியின் அடியில் வாயைத் தணித்து, பிண்ணாக்குக் கட்டி ஏதாவது கிடைக்காதா என்று துழாவ, தண்ணீரின் மேல்மட்டத்தில் காற்றுக் குமிழிகள் சளசளவென வெளிப்பட்டன. மூச்சு முட்டிப் போய் முகத்தைச் சடக்கென அது வெளியே எடுத்து, தலையை மேல்நோக்கி நிமிர்த்தி, முசு முசென்றது. அதன் முகத்தைச் சுற்றி விழுந்திருந்த தவிட்டு வளையத்தைப் பார்க்க அவளுக்குச் சிரிப்பு வந்தது. ``கேட்டாயா, பசுவே! நீ இப்போ மட்டும் இப்படிக் கறந்தாப் போறாது. எனக்குக் கொழந்தை பொறந்தப்புறமும் இப்படியே நெறயக் கறந்துண்டிருக்கணும். எங் கொழந்தை ஒம் பாலைக் குடிக்க வேண்டாமா? ஒங்கொழந்தை குடிக்கற மாதிரி எங்கொழந்தையும் ஒம் மடீல பால் குடிக்க சம்மதிப்பியோ? எங்காத்துக்காரர் சொல்றாப்லே, எனக்குத் தான் மாரே கெடையாதே. மார்வலிதான் இருக்கு. மாரில்லாட்டாப் பாலேது? ஆனா, நிச்சியமா எனக்கும் கொழந்தை பொறக்கத்தான் போறது. பெறப் போறவள், எங்க மாமியார் சொல்றாப்லே, எப்பவாவது ஒரு தரம் படுத்துண்டாலும் பெறத்தான் செய்வாள். பெறாதவ என்னிக்கும் பெறப் போறதில்லை. யுத்தத்திலே செத்துப் போனானே எங்கண்ணா மணி, அவன்தான் எனக்குப் பிள்ளையா வந்து பொறக்கப் போறான். தெரியுமா ஒனக்கு? கொம்பக் கொம்ப ஆட்டு. ஓரெழவும் தெரியாது ஒனக்கு. நன்னாத் திம்பாய்!’’ பசு பொத் பொத்தென்று சாணி போட்டு, ஒரு குடம் மூத்திரத்தையும் பெய்தது. உடன் அவளே அவசரத்துடன் சாணியை இரு கைகளாலும் லாகவமாக அள்ளிக் கொண்டுபோய்ச் சாணிக் குண்டில் போட்டுவிட்டு வந்தாள். புல்தரையில் கையைத் துடைத்துவிட்டு, மிகுந்திருந்த தண்ணீருடன் வாளியையும் குடத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். பசு அவளை நிமிர்ந்து பார்த்து, `ம்மா’ என்று கத்திற்று. ``போறேன், போய் ஓட்டுப் போட்டுட்டு வந்து கன்னுக்குட்டியைக் குடிக்க விடறேன். மணி மூணுகூட இருக்காதே. அதுக்குள்ள ஒனக்கு அவசரமா?’’ பால் கட்டி மடி புடைத்துக் காம்புகள் தெறித்து நின்றன.
மீனாட்சி அம்மாள் சொல்லி வைத்திருந்தபடி, பக்கத்து வீட்டுப் பெண்கள் சிலர் ருக்மிணியையும் சாவடிக்கு அழைத்துச் செல்ல, இருப்பதில் நல்ல உடைகளணிந்து வந்திருந்தனர். கிணற்றடியில் கை, முகம் எல்லாம் கழுவிக்கொண்டு ருக்மிணி வீட்டுக்குள் வந்தாள். ``சரி, சரி, தலய ஒதுக்கிண்டு, நெத்திக்கிட்டுண்டு பொறப்படு’’ என்று மாமியார் முடுக்கவும், ருக்மிணி அலமாரியைத் திறந்து சிறிய சிறிய பச்சைப் பூக்கள் போட்ட ஒரு வாயில் ஸாரியைக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு மறைவுக்காக ஓடினாள். முகத்தின் மூன்றில் ஒரு பங்கு தெரிகிற கையகல வட்டக் கண்ணாடியில் முகம் பார்த்து, சீப்பு சமயத்துக்குத் தட்டுப்படாமல் போனதால் விரல்களாலேயே முடியை ஒதுக்கிவிட்டுக்கொண்டு, நெற்றியில் ஏதோ ஒரு இடத்தில் குங்குமம் வைத்துக்கொண்டு வாசல் பக்கத்துக்கு ஓடோடியும் வந்தாள். வந்திருந்த பெண்களில் ஒருத்தி மீனாட்சி அம்மாள் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, ``ஏண்டி, எம்பிட்டு நேரம்டீ?’’ என்று கேட்கவும் ருக்மிணிக்குத் துணுக்கென்றது. ``தலயக் கூடச் சரியா வாரிக்காமன்னா ஓடிவரேன்’’ என்று அவள் அடைக்கிற குரலில் பதில் சொல்லி முடிப்பதற்குள், ``சரி, சரி, கிளம்புங்கோ!’’ என்று எல்லாரையும் தள்ளிவிட்டாள் மாமியார் அம்மாள். படி இறங்கியவளைக் கையைத் தட்டி, ``இந்தா, சொல்ல மறந்துட்டேனே, ஒரு நிமிஷம் இங்க வந்துட்டுப் போ’’ என்று வீட்டுக்குள் கூட்டிப் போனாள். குரலைத் தணித்து, ``ஞாபகம் வைச்சிண்டிருக்கியா? தப்பாப் போட்டுடாதே. ஒரு சீட்டுத் தருவா. பூனப் படமும் கிளிப்படமும் போட்டிருக்கும். பூனப் படத்துக்குப் பக்கத்திலெ முத்திரை குத்திடு. வழிலெ இதுகள்கிட்ட வாயெக் குடுக்காத போ’’ என்றாள்.
சாவடி அமைதியாக இருந்தது. பல வளைவுகளுடன் ஒரு பெண் வரிசையும் சற்று நேராக ஓர் ஆண் வரிசையும். பெண் வரிசையின் நீளம் சிறிது அதிகம். வர்ணங்கள் நிறைந்த பெண் வரிசை மலர்கள் மலிந்த ஒரு கொடி போலவும் ஆண் வரிசை ஒரு நெடிய கோல் போலவும் தெரிந்தன. வோட்டளித்து வெளிவந்த சில ஆண் முகங்களில் தந்திரமாய் ஒரு காரியம் நிகழ்த்தி விட்ட பாவனை தென்பட்டது. ஒரு சாவுச் சடங்கை முடித்து வருவது போல் சில முகங்கள் களையற்று வெளிப்பட்டன. அநேகமாய், பெண்கள் எல்லாருமே மிதமிஞ்சிய, அடக்கிக்கொள்ள முயலும் சிரிப்புகளுடன், பற்களாய் வெளியே வந்தனர். ருக்மிணிக்கு ரொம்பச் சந்தோஷம். எல்லாமே அவளுக்குப் பிடித்திருந்தது.
அந்தப் பள்ளிக் காம்பவுண்டுக்குள் செழிப்பாக வளர்ந்து நின்ற வேப்பமரங்களை அவள் மிகவும் விரும்பி நோக்கினாள். வெயில் மந்தமாகி, லேசுக் காற்றும் சிலுசிலுக்க, அது உடம்பை விட மனசுக்கு வெகு இதமாக இருப்பதாய் அவள் உணர்ந்தாள். கண்ணில் பட்டதெல்லாம் அவளைக் குதூகலப்படுத்திற்று. `இன்னிக்கு மாதிரி என்னிக்காவது நான் சந்தோஷமா இருந்திருக்கேனா?’ என்று அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். ஆ! அதோ அனிசமரம்! ஒரு கோடியில், ஒரு கிணற்றடியில் ஒற்றைப்பட்டு அது நிற்கிறது. அது அனிச மரந்தானா? ஆம், சந்தேகமே இல்லை. வேம்பனூரில்தான் முதல் முதலாக அவள் அனிசமரத்தைப் பார்த்தாள். அதற்குப் பின் இத்தனை வருஷங்களில் வேறு எங்குமே அவள் பார்க்கவில்லை. உலகத்தில் ஒரே ஒரு அனிசமரந்தான் உண்டு; அது வேம்பனூர் தேவசகாயம் ஆரம்பப் பாடசாலைக் காம்பவுண்டுக்குள் இருக்கிறது என்று உறுதிப்படுத்திக் கொண்டிருந்தவள் இவ்வூரில் இன்னொன்றைக் கண்டதும் அதிசயப்பட்டுப் போனாள். ஒருகால் அந்த மரமே இடம் பெயர்ந்து இங்கே வந்துவிட்டதா? ஆ! எவ்வளவு பழங்கள்! ருக்மிணிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. அனிசமரம், அனிசமரம் என்று உரக்கக் கத்த வேண்டும் போலிருந்தது. அனிசம்பழம் தின்று எவ்வளவு காலமாகிவிட்டது! அதன் ருசியே தனி!
வேம்பனூரில் அவள் ஐந்தாவது வரை படித்தபோது எத்தனை பழங்கள் தின்றிருப்பாள்! கணக்கு உண்டா அதற்கு? பையன்களுடன் போட்டி போட்டுக்கொண்டு அவள் மரத்தில் ஏறுவாள். இரு தொடைகளும் தெரியப் பாவாடையைத் தார்பாய்ச்சிக் கட்டிக் கொள்வாள். மரம் ஏறத் தெரியாத அவளுடைய சிநேகிதிகள், `ருக்கு, எனக்குப் போடுடி, எனக்குப் போடுடி’ என்று கத்தியபடி கீழே அண்ணாந்து, நிற்க, மரத்தின் உச்சாணிக் கிளைகளில் இருந்தபடி பழம் தின்று கொட்டைகள் துப்பி மகிழ்ந்ததை நினைத்தபோது அவளுக்குப் புல்லரித்தது. கண் துளிர்த்தது. புளியங்கொட்டை ஸாரும் சள்சள் ஸாரும் ஞாபகம் வரவே அவளுக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. பாவம், அவர்கள் எல்லாம் செத்துப் போயிருந்தாலும் போயிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டாள். மீண்டும் சின்னவளாகிப் பள்ளிக்குப் போக முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று தோன்றியது அவளுக்கு!
மரங்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. ருக்மிணி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அந்த அனிசமரத்தின் ஒரு நுனிக்கிளையில் ஒரு பச்சைக்கிளி சிவந்த மூக்குடன் பறந்து வந்து உட்கார்ந்து கிரீச்சிட்டது கிளை மேலும் கீழுமாக ஊசலாடியது. என்ன ஆச்சரியம்! `கிளியே, வா! நீ சொல்ல வேண்டியதில்லை. என் ஓட்டு உனக்குத்தான். முன்பே நான் தீர்மானம் செய்தாயிற்று. ஆனால், என் மாமியாரிடம் போய்ச் சொல்லிவிடாதே. பூனைக்குப் போடச் சொல்லியிருக்கிறாள் அவள். நீயே சொல்லு, கிளிக்குப் போடாமல் யாராவது பூனைக்குப் போடுவார்களா?. என் மாமியார் இஷ்டத்துக்கு வித்தியாசமாக நான் இதைச் செய்ய வேண்டியிருக்கிறது. என்ன செய்ய, சொல்லு? சரி, இப்போது நீ எங்கிருந்து வருகிறாய்? எங்கள் வீட்டுக்கு வாயேன். நீ எப்போது வந்தாலும் என்னைப் பார்க்கலாம். மாட்டுத் தொழுவத்தில் தான் இருப்பேன். இப்போது வரச் சௌகரியமில்லை என்றால் பின் எப்போதாவது வா. எனக்குக் குழந்தை பிறந்த பிறகு வந்தாயானால் ரொம்பச் சந்தோஷமாக இருக்கும். என் குழந்தையும் உன் அழகைப் பார்ப்பான் அல்லவா? வரும்போது, கிளியே, குழந்தைக்குப் பழம் கொண்டு வா!’
ருக்மிணி அன்றுவரை கியூ வரிசைகளைக் கண்டவள் இல்லை. இது அவளுக்குப் புதுமையாகவும் ஒரு நல்ல ஏற்பாடாகவும் தெரிந்தது. ரெயில் மாதிரி நீளமாக இருந்த வரிசை இப்போது குறுகிப் போய்விட்டதே! ஆண்கள் ஏழெட்டுப் பேரே நின்றனர். சாவடி அவள் பக்கம் வேகமாக வந்துகொண்டிருந்தது. அவளுக்கு முன்னால் எட்டொன்பது பேர் பெண்கள். தான் அறைக்குள் பிரவேசித்ததும் வேற்று ஆண்களின் அருகாமை அவளுக்குக் கூச்சத்தையும் ஒருவகை மனக்கிளர்ச்சியையும் உண்டு பண்ணிற்று. யாரையும் நிமிர்ந்து பாராமல், சுற்றியிருப்பவற்றை மனசில் கனவுச் சித்திரமாக எண்ணிக்கொண்டு முன் நகர்ந்தாள்.
இளம் கறுப்பாய் மயிர் இன்றிக் கொழுகொழுவென இரு கைகள், ஒரு நீள் சதுர மேசையின் மேல் காகித அடுக்குகள், சிவப்பு, மஞ்சள் பேனா பென்சில்களுக்கிடையே இயங்க, அவளுக்கு ஒரு வெள்ளைச் சீட்டு நீட்டப்பட்டது. யார் யாருடையவோ கால்கள் குறுக்கும் நெடுக்குமாய்க் கோடுகளிட்டன. ஒரு நாணயம் தரையில் விழுந்த சத்தம் காதில் விழுந்தது. கடைசியில் ஒரு ஸ்கிரீன் மறைப்புக்குள் எப்படியோ தான் வந்துவிட்டதை ருக்மிணி உணர்ந்தாள். அவளுக்குப் பின்னால் திரைக்கு வெளியே ஒரு பெண் சிரிப்பொலி தெறித்து, நொடியில் அடங்கிற்று. ருக்குவின் நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. பொறுக்க முடியாதபடி மூத்திரம் முட்டிற்று. `ஸ்வாமி. என்ன அவஸ்தை இது!’ பற்கள் அழுந்தின. `ஐயோ, பால் கறக்க நேரமாயிருக்குமே’ என்ற நினைவு வர மடியில் பால் முட்டித் தெறிக்க மருகும் பசுவும், கட்டிலிருந்து தாவித் தவிக்கும் அதன் கன்றும் `ம்மாம்மா’ என்று அவள் செவிகளில்அலறிப் புடைக்கலாயின. அவள் உடம்பு இப்படிப் பதறுவானேன்? மாரும் லேசாக வலிக்கிறது. ஆ, கிளி! கிளிக்கு எதிரே முத்திரை நெருங்கிவிட்டது. இப்போது ஒரு கை ருக்மிணியின் கையைப் பற்றவும், திடுக்கிட்டு, `யாரது?’ என்று அவள் திரும்பிப் பார்த்தாள். யாரும் அங்கில்லை. ஆனால், அவள் கையை வேறொரு கை இறுகப் பற்றியிருந்தது என்னவோ நிஜந்தான். பெண் கைதான். வேறு யாருடைய கையும் அல்ல; மாமியார் மீனாட்சி அம்மாளின் கைதான். கிளிக்கு நேர் எதிராக இருந்த அவள் கையை, பூனைக்கு நேராக மாமியார் கை நகர்த்தவும், பளிச்சென்று அங்கு முத்திரை விழுந்துவிட்டது. ஆ! ருக்மணியின் வாக்கு பூனைக்கு! ஆம், பூனைக்கு!
பரபரவெனச் சாவடியை விட்டு வெளியேறினாள் அவள். அவளுக்காகப் பெண்கள் காத்திருந்தனர். இவள் வருவதைக் கண்டதும் அவர்கள் ஏனோ சிரித்தனர். பக்கத்தில் வந்ததும், ``ருக்கு, யாருக்குடி போட்டே?’’ என்று ஒருத்தி கேட்க, ``எங்க மாமியாருக்கு’’ என்ற வார்த்தைகள் அவள் அறியாது அவள் வாயிலிருந்தது வெளிப்படவும் கூடிநின்ற பெண்கள் பெரிதாகச் சிரித்தார்கள். ருக்மிணி தலையைத் தொங்கப் போட்டபடி, அங்கு நிற்காமல் அவர்களைக் கடந்து விரைந்து நடந்தாள். முன்னை விடவும் மார்பு வலித்தது. பொங்கி வந்த துக்கத்தையும் கண்ணீரையும் அடக்க அவள் ரொம்பவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

No comments:

Post a Comment