Search This Blog

Wednesday, November 19, 2014

அன்பளிப்பு - கு. அழகிரிசாமி

மறுநாள் ஞாயிற்றுக்கிழமைதானே என்று, இரவு வெகுநேரம் கண்விழித்துப் படித்துக் கொண்டிருந்து விட்டேன். சனிக்கிழமை இரவு படுத்துக் கொள்ளும் போது மணி இரண்டிருக்கும். எவ்வளவு காலதாமதமாகித் தூங்கப் போனாலும், தூக்கம் வருவதற்கு மேற்கொண்டு ஒரு அரைமணி நேரமாவது எனக்கு ஆகும். எனவே இரண்டரைக்குத்தான் தூங்க ஆரம்பித்திருப்பேன். சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கும்போது, முதுகில் நாலைந்து கைகள் வந்து பலமாக அடிக்க ஆரம்பித்து விட்டன. அடிகளால் ஏற்பட்ட வலியை விட, அவற்றால் ஏற்பட்ட ஓசை  மிகப் பெரியதாக இருந்தது. தூக்கம் கலைந்து கண் விழிப்பதற்குள், வலதுபுஜத்தில் எறும்பு கடிப்பதுபோல இருந்தது.
“தூங்குமூஞ்சி மாமா!....” ku ar.sized
“மணி ஏழரையாகிவிட்டது....”
“எழுந்திருக்கிறீர்களா, பலமாகக் கிள்ளவா”
“முகத்தில் ஜலத்தைக் கொண்டுவந்து தெளித்துவிடுவோம். இன்னும் இரண்டு நிமிஷத்துக்குள்  எழுந்துவிட வேண்டும்”...
இப்படியே பல குரல்கள் பேசிக் கொண்டிருந்தன. பேச்சின் நடுவே இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து ‘சிரிடா சிரி’ என்று சிரித்தார்கள். கண் விழித்துவிட்டேன்.
“யார் அது? உம்! இதோ வருகிறேன். தூக்கத்திலே வந்து....” என்று அதட்டிக்கொண்டே எழுந்து உட்கார்ந்தேன். ஒரு பையனைத் தவிர, அதாவது சாரங்கராஜனைத் தவிர, மற்ற எல்லாக் குழந்தைகளும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
”கடிகாரத்தைப் பாருங்கோ மாமா! மணி எட்டு ஆகப் போகிறது! இன்னும் தூங்கு மூஞ்சி மாதிரி தூங்கிக் கொண்டு....” என்று சொல்லி விட்டுச் சிரித்தாள் சித்ரா. “அது இருக்கட்டும், விடிந்ததும் எங்கே இப்படிப் பட்டாள ‘மார்ச்’ பண்ண ஆரம்பித்துவிட்டது?” என்று கேட்டேன்.
“இரவில் வெகு நேரம் கண் விழித்தால் உடம்புக்குக் கெடுதல் என்று எங்கள் பாடப் புத்தகத்தில் போட்டிருக்கிறது, மாமா” என்றான், இதுவரையில் மௌனமாக இருந்த சாரங்கராஜன்.
”நான் படித்த பாடப் புத்தகத்திலும் அப்படித்தான் போட்டிருந்தது! என்ன செய்வது?” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனால் சிறுவன் சாரங்கனிடம் அவ்விதம் சொல்லாமல், “நாளை முதல் சீக்கிரமாகவே தூங்கி விடுகிறேன். கண் விழிக்கவில்லை” என்றேன். அவனுக்குப் பரம சந்தோஷம்... அவன் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டதற்காக..
மறு நிமிஷத்தில், எல்லோருமாகச் சேர்ந்து ஒருமிக்க, “என்ன புத்தகம் கொண்டு வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
“ஒரு புத்தகமும் கொண்டு வரவில்லை!”
“பொய், பொய், சும்மா சொல்கிறீர்கள்!”
”நிஜமாக, ஒரு புத்தகமும் கொண்டு வரவில்லை”
“நேற்று புத்தகம் கொண்டு வருவதாகச் சொன்னீர்களே!”
“நேற்றுச் சொன்னேன்...”
“அப்புறம் ஏன் கொண்டு வரவில்லை?”
”புத்தகங்கள் ஒன்றும் வரவில்லை. வந்திருந்தால் தான் கொண்டு வந்திருப்பேனே.”
”பிருந்தா! மாமா பொய் சொல்கிறார்; கொண்டு வந்து எங்கேயாவது ஒளித்து வைத்திருப்பார். வாருங்கள், தேடிப் பார்க்கலாம்” என்றாள் சித்ரா.
அவ்வளவுதான், என்னுடைய அறை முழுவதும் திமிலோகப் பட்டது. ஒரே களேபரம். சித்ரா மேஜையைத் திறந்து உள்ளே கிடக்கும் பெரிய காகிதங்களையும், துண்டுக் காகிதங்களையும், கடிதங்களையும் எடுத்து வெளியே எறிந்தாள். துழாவித் துழாவிப் பார்த்தாள். மேஜையில் புத்தகம் எதுவும் இல்லாது போகவே, அதிலிருந்து சாவிக்கொத்தை எடுத்துப் பெட்டியைத் திறந்து தேட ஆரம்பித்துவிட்டாள்.
பிருந்தாவும், சுந்தரராஜனும் பீரோவைத் திறந்து புத்தகங்களை எடுத்துக் கண்டபடி கீழே போட்டார்கள்.
சின்னஞ் சிறு குழந்தையான கீதா கீழே உட்கார்ந்து, இறைந்து கிடக்கும் ஆங்கிலப் புத்தகங்களை அர்த்தமில்லாமல் திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
சித்ரா பெட்டியில் உள்ள சலவைத் துணிகளை எடுத்து வெளியே போட்டாள். என்னுடைய பழைய டைரிகள், எனக்கு வந்த பழைய கடிதங்கள், இரண்டொரு புத்தகங்கள் - எல்லாம் ஒரே குப்பையாக வந்து வெளியே விழுந்தன.
பீரோவைச் சோதனை போட்ட பிருந்தாவும் சுந்தரராஜனும் ஜன்னல்களில் அடுக்கியிருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே போட்டார்கள்.
சாரங்கன் ஒருவன் தான் என்னோடு அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் எப்பொழுதுமே குறும்பு பண்ணமாட்டான்; விளையாட மாட்டான். மற்றக் குழந்தைகள் எல்லோரும் ஒரு விதம்; அவன் ஒருவிதம். என்னிடத்தில் பயபக்தியோடு நடந்து கொள்ளும் சிறுவன் அவன் ஒருவன் தான்.
ஜன்னலில் இருந்த புத்தகங்கள் ஒவ்வொன்றாக வந்து விழும் போது, ஒரே சந்தடியும் இரைச்சலுமாய்ப் போய் விடவே, சமையற் கட்டிலிருந்து என் தாயார் ஓடிவந்தாள். வந்து பார்த்தால் எல்லாம் ஒரே கந்தர் கோளமாகக் கிடந்தது.
“என்னடா இது, இந்தக் குழந்தைகள் இப்படி அமர்க்களம் பண்ணுகிறார்கள், நீ பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாயே” என்று என்னைப் பார்த்துக் கோபித்துக் கொண்டாள்.
“நீ வீட்டுக்குள் போ அம்மா. இது எங்கள் விவகாரம். நீ எதற்கு வேலையைப் போட்டுவிட்டு இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறாய்?” சொல்லிவிட்டுச் சிரித்தேன்.
”இவ்வளவு வயதாகியும் இன்னும் குழந்தைகளோடு குழந்தையாய் விளையாடிக் கொண்டிருப்பது ரொம்ப அழகாகத்தான் இருக்கிறது!” என்று சொல்லிக் கொண்டே அம்மா உள்ளே போய்விட்டாள். பாதி தூரம் போனதும் அங்கே நின்ற வாக்கிலேயே, “ஏண்டா நீ எப்போது ஸ்நானம் பண்ணப் போகிறாய்?” என்று இரைந்து கேட்டாள்.
“இரண்டு நிமிஷத்திலேயே வந்து விடுகிறேன்” என்று அம்மாவுக்குப் பதில் குரல் கொடுத்துவிட்டு இந்தப் பக்கம் திரும்பும்போது, ஜன்னலிலிருந்து பத்துப் பதினாறு கனமான புத்தகங்கள் ‘தட தட’ வென்று அருவி மாதிரி கீழே விழுந்தன. ஒரு பழைய தமிழ் அகராதி அட்டை வேறு புத்தகம் வேறாகப் போய் விழுந்தது. குப்புற விழுந்த சில புத்தகங்கள் மீது சில கனமான புத்தகங்கள் அமுக்கவே கீழே அகப்பட்ட புத்தகங்கள் வளைந்து, ஒடிந்து, உருக்குலைந்து விட்டன. புத்தகங்கள் ஒரே மொத்தமாகக் கீழே விழுந்துவிட்டதைக் கண்டு எல்லாக் குழந்தைகளும் பயந்ஹ்டு விட்டார்கள். கீழே விழுந்து கிடக்கும் புத்தகங்களையும் என்னையும் திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். கீழே விழுந்தவை மொத்தம் அறுபது புத்தகங்களாவது இருக்கும். குழந்தைகளின் முகத்தில் பயத்தின் சாயல் படர ஆரம்பித்துவிட்டது. நான் என்ன சொல்லப் போகிறேனோ என்று எதிர்பார்த்துக் கொண்டு கண்ணிமைக்காமல் என் முகத்தையே பார்த்தார்கள். மற்றக் குழந்தைகளின் பயத்தைப் பார்த்த ஐந்து வயது நிரம்பாத கீதாவும் பயந்து போய் என்னைப் பார்த்தாள். நான் வேண்டுமென்றே மௌனமாக இருந்தேன். புத்தகங்களையும் குழந்தைகளையும் வெறித்த பார்வையோடு பார்த்தேன். மௌனம் நீடித்தது. ஒரு நிமிஷம், இரண்டு நிமிஷம், மூன்று நிமிஷம்... குழந்தைகளுக்கு என் மௌனம் சித்திரவதையாக இருந்தது. ஒவ்வொரு குழந்தையும் மூச்சுப் பேச்சிழந்துவிட்டது. சித்ராவின் முகத்தில் வியர்க்க ஆரம்பித்துவிட்டது. பயம் அறியாத சித்ராவே பயந்து விட்டாள். என்னை ஒட்டி உட்கார்ந்து இருந்த சாரங்கன் நாலு அங்குலம் நகர்ந்து உட்கார்ந்து கொண்டான். என்னைத் தொடவே அவனுக்குப் பயமாகி விட்டது. அவனுடைய சலனத்தால் தூண்டப்பெற்று, “நான் வீட்டுக்குப் போகிறேன்” என்று கிளம்பிவிட்டாள் பிருந்தா.
”பிருந்தா! இங்கே வா” என்று யாதொரு உணர்ச்சிப் பிரதிபலிப்பும் இல்லாமல் சொன்னேன்.
நான் சொன்னபடி அவள் உள்ளே வந்தாள். இதற்கு மேல் குழந்தைகளை பயமுறுத்த நான் விரும்பவில்லை.
எழுந்து நின்றேன். என் அறையின் மற்றொரு ஜன்னல் பக்கம் சென்றேன். அங்குள்ள புத்தகங்களில் கை வைத்தேன். என் ஒவ்வொரு அசைவையும் குழந்தைகளின் கண்கள் சர்வ ஜாக்கிரதையுடன் கவனித்துக் கொண்டிருந்தன. புத்தகங்களின் நடுவில் பெரிய புத்தகங்களுக்குக் கீழே இருந்த பதின்மூன்று கதைப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு திரும்பினேன். கட்டிலில் வந்து உட்கார்ந்து கொண்டு, “தோற்றுப் போய்விட்டீர்களா? நீங்கள் தேடு தேடு என்று தேடினீர்களே, புத்தகங்கள் உங்களுக்குத் தட்டுப்பட்டதா? வாருங்கள், வாருங்கள்” என்று ஒரே உற்சாகத்துடன் சொன்னேன். குழந்தைகளுக்கு உயிர் வந்துவிட்டது. என்னைப் பார்த்து ஓடோடியும் வந்தன. சாரங்கன் என் பக்கம் நெருங்கி உட்கார்ந்தான். என் இடது கையில் சாய்ந்தும் உட்கார்ந்து கொண்டான். சித்ராவுக்கு ஏனோ என் மேல் கோபம் வந்துவிட்டது. வெகுநேரம் மௌனமாக இருந்து அவர்களைப் பயத்தில் ஆழ்த்தி வைத்ததை எண்ணிக் கோபப் பட்டாளோ? அல்லது தான் பயந்ததற்காக வெட்கப்பட்டு, தான் பயப்படவில்லை என்பதாகக் காட்டிக்கொள்ளுவதற்கும், அதன் மூலம் வெட்கத்தை மறைப்பதற்குமாகக் கோபப்பட்டாளோ? ‘விறு விறு’ என்று கட்டிலில் ஏறினாள். எனக்குப் பின்புறமாக வந்து, “பொய்தானே சொன்னீர்கள், புத்தகங்கள் கொண்டு வரவில்லை என்று? உம், இனிமேல் பொய் சொல்லாதீர்கள், சொல்லவில்லை என்று சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு, “சொல்லுங்கள், சொல்லுங்கள்” என்று எச்சரித்துக் கொண்டே முதுகில் தன் பலங்கொண்ட மட்டும் அடித்தாள்.
“ஐயோ! ஐயோ! பொய் சொல்லவில்லை. இனிமேல் பொய் சொல்லவில்லை!” என்று வேதனையோடு சொல்கிறவன் மாதிரி சொன்னேன். குழந்தைகள் எல்லோரும் சிரித்தார்கள்.
சுந்தரராஜன் வந்து, “சாரங்கா, அந்தப் பக்கம் நகர்ந்துக்கடா” என்று சொல்லி அவனைத் தள்ளிவிட்டு எனக்கும் அவனுக்கும் நடுவில் வந்து உட்கார்ந்தான். என் கையிலுள்ள அத்தனை புத்தகங்களையும் ‘வெடுக்’கென்று பிடுங்கிக் கொண்டு ‘விறுவிறு’ என்று ஒவ்வொன்றின் பெயரையும் உரக்க வாசித்தான். கடைசிப் புத்தகத்தின் பெயரை வாசித்ததும் ‘பளிச்’ சென்று எழுந்து “இத்தனையும் எனக்குத்தான்” என்று சொல்லிக் கொண்டே வெளியே கிளம்பிவிட்டான்.
குழந்தைகள் உடனே அழுவதற்கு ஆயத்தமாகி விட்டன. அப்பொழுது மௌனமாக இருந்தவன் சாரங்கன்தான்.
“சுந்தர்! இதோ பார். இந்தப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு ஓடினால் அப்புறம் உனக்குப் புத்தகங்களே கொண்டு வர மாட்டேன்” என்றேன்.
அவன் ‘கடகட’வென்று சிரித்துக் கொண்டே, “பாவம். மாமா பயந்து விட்டார்!” என்று கூறிக் கொண்டு உள்ளே வந்தான்.
புத்தகங்களை என் கையில் வாங்கி ஏழு புத்தகங்களில், “என் பிரியமுள்ள சித்ராவுக்கு அன்பளிப்பு” என்று எழுதி என் கையெழுத்தையும் போட்டுச் சித்ராவிடம் கொடுத்தேன். மீதியுள்ள ஆறு புத்தகங்களிலும், ”என் பிரியமுள்ள சுந்தரராஜனுக்கு அன்பளிப்பு” என்று எழுதி அவ்விதமாகவே கையெழுத்திட்டுச் சுந்தரராஜனிடம் கொடுத்தேன்.
பிருந்தாவும் தேவகியும் “எனக்கு?” என்று ஏககாலத்தில் கேட்டனர்.
“சித்ராவிடமும் சுந்தரிடமும் வாங்கிப் படித்துக் கொள்ளுங்கள். இதுவரையிலும் நீங்கள் மற்றப் புத்தகங்களை எப்படி வாங்கிப் படித்தீர்களோ, அப்படியே இப்பொழுதும் வாங்கிப் படித்துக் கொள்ளுங்கள்” என்றேன்.
அந்த இரண்டு பெண்களும் நான் சொன்னதை ஆட்சேபமின்றி ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.
“மத்தியானத்துக்குள் இந்த ஏழு புத்தகங்களையும் படித்து விடுவேன். படித்து முடித்த பிறகு வருகிறேன், மாமா” என்று கூறிவிட்டுப் புறப்பட்டு விட்டாள் சித்ரா. அவளைத் தொடர்ந்து, சாரங்கனைத் தவிர எல்லோரும் எழுந்து தத்தம் வீடுகளுக்குக் கிளம்பினார்கள். சாரங்கன் இரண்டொரு தடவை என் முகத்தையே ஏறிட்டுப் பார்த்தான். அவன் ஒன்றும் பேசவில்லை. அவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிவிக்கும் சலனமும் முகத்தில் இல்லை. அப்பொழுது அவன் அவ்வாறு பார்த்ததற்கு ஒரு முக்கியத்துவமோ, ஒரு அர்த்தமோ இருந்ததாக நான் கருதவும் இல்லை. நான் எழுந்து குப்பையாகக் கிடக்கும் புத்தகங்களையும் துணிமணிகளையும் எடுத்து அவையவை இருக்கவேண்டிய இடத்தில் வைக்க ஆரம்பித்தேன். சுருண்டு நசுங்கிக் கிடந்த புத்தகங்களை நிமிர்த்துச் சரி பண்ணினேன். அவற்றின்மீது பெரிய புத்தகங்களைப் பாரமாகத் தூக்கி வைத்தேன். இந்த வேலைகளைச் செய்யும்போது சாரங்கன் நான் எதிர்பாராமலே எனக்கு உதவி செய்து கொண்டிருந்தான்.
“எந்த வகுப்பு பாஸ் பண்ணினால் இந்தப் புத்தகத்தைக் கஷ்டமில்லாமல் படிக்கலாம்?” என்று ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு கேட்டான் சாரங்கன். அவன் குரலில், மூச்சைத் திணற வைக்கும் சங்கோஜம் நிறைந்திருந்தது. அது மட்டுமின்ரி, பயந்தவனைப் போல, முயற்சியில் தோல்வியடைந்து புண்பட்டவனைப் போல, அவன் பேசினான்.
“சாரங்கா! நீ கெட்டிக்காரப் பையன், உன் வயதில் நான் இவ்வளவு கெட்டிக்காரனாக இருந்ததில்லை. அதனால் நீ எஸ். எஸ். எல். ஸி  வகுப்புக்கு வந்ததும் இந்தப் புத்தகத்தைச் சிரமமில்லாமல் படித்துப் புரிந்து கொள்ளலாம் என்று பரிவோடு சொன்னேன்.
அவன் கையில் வைத்துக் கொண்டிருந்தது வால்ட் விட்மனின் கவித் தொகுதி.
"அப்படியானால் இன்னும் இரண்டு வருஷம் இருக்கிறது” என்று அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். பிறகு கையிலுள்ள புத்தகத்தை ஜன்னலில் கொண்டு போய் வைத்துவிட்டு வந்து உட்கார்ந்தான்.
என் தாயார் கோபமாக என்னென்னவோ சொல்லிக் கொண்டு அங்கே வந்தாள். “ஏண்டா, நான் எத்தனை தட்வை உனக்குச் சொல்லுகிறது? வெந்நீர் ஆறி அலர்ந்து ஜில்லிட்டுப் போய்விட்டது” என்று சொல்லிவிட்டு “இந்தப் பொல்லாத குட்டிகளை இப்படி அமர்க்களம் பண்ண விடலாமா? என்ன பிரியமோ இது? ஊரார் குழந்தைகளுக்கு இத்தனை சலுகை காட்டுகிறவர்களை நான் பார்த்ததே இல்லை.... நீ ஸ்நானம் பண்ணப் போடா, நான் எடுத்து வைக்கிறேன்” என்று வந்தாள் அம்மா.
“அம்மா! உனக்குப் புத்தகங்களை இனம் பிரித்து அடுக்கத் தெரியாது. நீ போ, நான் ஒரு நிமிஷத்தில் வந்துவிடுகிறேன்.”
”இன்றைக்கு அடுக்கி வைக்கவேண்டியது; நாளைக்கு அவர்கள் வந்து குப்பையாக்க வேண்டியது; அப்புறம் பழையபடியும் அடுக்கி வைக்க வேண்டியது. உனக்கு வேறு வேலை என்ன?” என்று சொல்லிவிட்டு அவள் சமையற் கூடத்துக்குச் சென்றுவிட்டாள்.
நானும் வெகு சீக்கிரத்திலேயே ஸ்நானம் பண்ணக் கிளம்பிவிட்டேன். அப்பொழுது என்னோடு நடுக்கூடம் வரையில் நடந்து வந்தான் சாரங்கன். அப்புறம் பளிச்சென்று மறு பக்கமாகத் திரும்பி, “போய்விட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
“அம்மா! குழந்தைகளை இப்படிக் கோபித்துக் கொள்ளுகிறாயே! அதுகள் ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம்!” என்று சொலிவிட்டு ஸ்நான அறைக்குள் சென்றேன். நான் சொன்னது புகை மூட்டிய அடுப்பங் கரையில் திக்குமுக்காடும் அம்மாவுக்குக் கேட்டதோ என்னவோ?
***
ஒவ்வொரு குழந்தையும் ஒரு பொக்கிஷந்தான். மாம்பலத்துக்கு வீடு மாற்றிவந்ததை என் பாக்கியம் என்றே நான் கருதினேன். இங்கே வந்திராவிட்டால் இந்தப் பொக்கிஷங்களை நான் சந்தித்திருக்க முடியுமா? இங்கு வந்து நான்கு வருஷங்களாகின்றன. வீட்டில் நானும் என் தாயாருந்தான். ஒரு பெரிய வீட்டில் ஒரு பகுதியிலே தான் எங்கள் குடித்தனம். வந்து ஆறு மாதங்களாகும் வரையில் இந்தக் குழந்தைகளின் நட்பு எனக்கு ஏற்படவே இல்லை. ஒரு நாள் திடீரென்று இரண்டு குழந்தைகள் சுந்தரராஜனும் சித்ராவும் வந்தார்கள். அன்று வநதது போலவே தினமும் வந்தார்கள். சில நாட்களுக்குள் சம்பிரதாய மரியாதைகள், நாசூக்குகள் எல்லாம் மறைந்தன. உண்மையான மனப்பாசம் கொள்ளத் தொடங்கினோம். ஒன்றாக உட்கார்ந்து கதைகள் படிப்பது, பத்திரிகைகள் வாசிப்பது, கதைகள் சொல்லுவது, செஸ் விளையாடுவது - இப்படிப் பொழுது போக்கினோம். நான் வேலை செய்யும் பத்திரிகாலயத்துக்கு மதிப்புரைக்கு வரும் புத்தகங்கள் சிலவற்றாஇ எடுத்து, விமர்சனம் எழுதும்படி தலைமையாசிரியர் என்னிடம் கொடுப்பார். அப்படி மதிப்புரைக்காக வந்த புத்தகங்கள் என்னிடம் ஏராளமாக இருந்தன. குழந்தைகளுக்கு அவை நல் விருந்தாக இருந்தன. ஒரே ஆவலோடு ஒரு சில தினங்களுக்குள் அத்தனை புத்தகங்களையும் சுந்தரராஜனும் சித்ராவும் படித்துத் தீர்த்துவிட்டார்கள். அவர்களுடைய புத்தகத் தேவையை என் மதிப்புரைப் புத்தகங்களைக் கொண்டு ஈடு செய்ய முடியவில்லை. இதனால் அவ்வப்போது சில குழந்தைப் புத்தகங்களை விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பேன். அதனால், அவர்கள் தினந்தோறும் நான் காரியாலயம் போகும்போது, “இன்று ஞாபகமாகப் புத்தகங்கள் கொண்டு வரவேண்டும்” என்று சொல்லியனுப்புவார்கள். சாயங்காலத்தில் வெறுங்கையோடு வீடு திரும்பினால் ஒரே கலாட்டாதான்.
சுந்தரராஜனும் சித்ராவும் நான் குடியிருக்கும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக் குழந்தைகள்; பணக்காரக் குழந்தைகள். குழந்தை என்று சொன்னாலும் சுந்தரராஜனுக்குப் பதின்மூன்று வயது; சித்ராவுக்கு ஒன்பது வயது. இந்த இருவரின் புத்திசாலித்தனம், களை நிறைந்த தோற்றம்,  எல்லாவற்றையும் விடச் சீரிய மனப்பாங்கு - எல்லாம் சேர்ந்து என்னை வசீகரித்தன; என்னை ஆட்கொண்டு விட்டன. அவர்கள் மேல் நான் வைத்திருந்த அன்பு இம்மட்டு அம்மட்டு என்றில்லை. தினந்தோறும் அவர்களுக்குப் புதியதொரு மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும் என்றெல்லாம் என் மனம் துடித்துக் கொண்டிருக்கும். இவர்களுடைய நட்பு தொடங்கி சில வாரங்கள் ஆவதற்குள்ளாக மற்றக் குழந்தைகளின் பரிச்சயமும் எனக்கு ஏற்பட்டது. பிருந்தா, தேவகி, கீதா, சாரங்கராஜன் ஆகியவர்களும் வர ஆரம்பித்தார்கள். பிருந்தாவும் தேவகியும் சித்ராவுடன் ஒரே வகுப்பில் படிக்கும் சமவயதுக் குழந்தைகள். கீதா, தேவகியின் தங்கை. சாரங்கராஜன் சுந்தரராஜனுடைய பள்ளித் தோழன். எல்லோருடைய வீடுகளும் ஒன்றையடுத்து ஒன்றாக இருந்தன. இவர்களில் சாரங்கனுடைய வீட்டார் தான் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள். மற்றக் குழந்தைகள் சொந்த வீடு உள்ள பணக்காரக் குழந்தைகள்.
எல்லோரிடத்திலும் நான் ஒன்று போலவே அன்பாக இருந்தேன். சுந்தரராஜனும் சித்ராவும் எனக்கு முதலில் பரிச்சயமானவர்கள் என்பதற்காகவோ என்னவோ அவர்களிடத்தில் எனக்கு ஒரு அலாதிப் பிரியம் இருந்தது. ஆனால் வெளிப்படையான பேச்சிலும் நடவடிக்கைகளிலும் ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் நான் வித்தியாசம் காட்டி நடந்து கொள்ளவில்லை. உள்ளன்பிலும் வேற்றுமை காட்டவில்லை. முன்னால் சொன்னதுபோல ஏதோ ஒரு அலாதிப் பிரியம் சித்ராவிடமும் அவளது அண்ணனிடமும் ஏற்பட்டிருந்தது. ஆனால் குழந்தைகளோ என்னை ஒரே மாதிரி நேசித்தன. அவர்களுடைய பிரியத்தில் வேற்றுமை இல்லை. ஒவ்வொரு குழந்தையும் தனக்காகவே இந்த உலகத்தில் பிறந்த நண்பன் என்று என்னை நினைத்தது. ஒவ்வொன்றும் ஒரு மகத்தான நம்பிக்கையாக, ஒரு பெரிய ஆறுதலாக, ஒரு நல்ல வழிகாட்டியாக என்னைக் கருதியது. எந்த விதத்திலும் தனக்குச் சமதையான ஜீவன் என்று என்னைக் கருதியது. குழந்தைகள் என்னைப் பெரிய மனித பீடத்தில் தூக்கி வைக்காமல், நட்பு முறையில் கைகோத்துக் கொள்ள வந்தார்கள். இவர்கள் என்னோடு விளையாடினார்கள்; என்னோடு சண்டை போட்டார்கள்; என்னை அடித்தார்கள்; என்னைக் கண்டித்தார்கள்; என்னை மன்னித்தார்கள்; என்னை நேசித்தார்கள்.
உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும், அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும், ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப் பொம்மையாகக் கருதி அதற்குத் தக்கவாறு நடந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை; அவர்களுடைய அன்பில் அந்த விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள். இந்த உண்மை எனக்கு என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனத்தில் தைத்தது. அன்று முதல் நான் அவர்களைக் குழந்தைகளாக நடத்தவில்லை. நண்பர்களாக நேசித்தேன். உற்ற துணைவர்களாக மதித்தேன். உள்ளன்பு என்ற அந்தஸ்தில் அவர்களும் நானும் சம உயிர்களாக மாறினோம். மாம்பலத்தில் எனக்கு இவர்கள்தான் நண்பர்கள். குழந்தைகளுடன் இம்மாதிரிப் பழகுவதும் இம்மாதிரி விளையாடுவதும் அம்மாவுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஐம்பது வயதுத் தாயாருக்குத் தன் மகனை மனைவி மக்களுடன் குடித்தனம் செய்யும் தகப்பனாகக் காணத்தான் பிடிக்குமே தவிர, குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடிக் கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் இருப்பதைக் காணப் பிடிக்குமா?
பதின்மூன்று புத்தகங்களை எடுத்துக் கொடுத்த அந்தத் தினம், அந்த ஞாயிற்றுக்கிழமை கழிந்து இரண்டு வாரங்கள் ஆகியிருக்கும். பிருந்தா ஜுரத்தோடு படுத்துவிட்டாள். அவளுடைய பெற்றோர்களை எனக்கு நேரில் தெரியாது. அதனால் அவளைப் போய்ப்பார்த்துவிட்டு வர எனக்கு சங்கோஜமாக இருந்தது. ஆனால் மற்றக் குழந்தைகளிடத்தில், “பிருந்தாவின் உடம்பு எப்படி இருக்கிறது?” என்று தினமும் விசாரித்துக் கொண்டிருந்தேன். குழந்தைகள் அதற்கு எப்படிப் பதில் சொல்லும்! ஜுரம் அதிகமாக இருக்கிறதா, குறைந்திருக்கிறதா என்று அவர்களுக்குச் சொல்லத் தெரியவில்லை. “பிருந்தா எப்போது பார்த்தாலும் படுத்துக் கொண்டே இருக்கிறாள்” என்று மட்டும் தெரிவித்தார்கள்.
ஒருநாள் இரவு எட்டு மணி இருக்கும். வீட்டு முற்றத்தில் ஈஸிச்சேரைப் போட்டுக் காற்றாட நிலா வெளிச்சத்தில் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது தெரு வழியாகப் போய்க் கொண்டிருந்த பிருந்தாவின் வீட்டு வேலைக்காரனை அழைத்து, “பிருந்தாவின் உடம்பு எப்படி இருக்கிறது? ஜுரம் குறைந்திருக்கிறதா” என்று கேட்டேன்.
”இல்லை ஸார், நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது. எதுவும் சாப்பிடுவதில்லை. இந்த நான்கு நாட்களில் குழந்தை துரும்பாக மெலிந்து போய்விட்டது. தூக்கத்தில் உங்களை நினைத்துத்தான் என்னென்னவோ புலம்பிக் கொண்டிருக்கிறாள்” என்றான் வேலைக்காரன்.
”என்னை நினைத்துப் புலம்புகிறாளா!” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.
“ஆமாம் ஸார். நேற்று ராத்திரிகூட ‘மாமா புத்தகம்’, ‘மாமா புத்தகம்’ என்று என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள்” என்றான்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இந்த குழந்தையைப் போய்ப் பார்க்காமல் இருந்ததற்காக மிகவும் வருத்தப்பட்டேன். என் சங்கோஜத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு மறுநாள் காலையில் அவசியம் போய்ப் பார்த்து விட்டு வரவேண்டுமென்று தீர்மானம் செய்து கொண்டேன். “போய்வா” என்று வேலைக்காரனை அனுப்பிவிட்டு, தனியாகப் படுத்து என்னென்னவோ யோசித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்ற நிலைமை வந்துவிட்டது. அவ்வளவுதான், உடனே எழுந்து வீட்டுக்குள்போய் சட்டையை மாட்டிக் கொண்டு ‘விறு விறு’ என்று பிருந்தாவின் வீட்டுக்குச் சென்றேன். அவளுடைய பெற்றோர்கள் என்னை உள்ளே வரும்படி சொன்னார்கள். பிருந்தா படுத்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன். அவள் கண்களை வெறுமனே மூடிக் கொண்டிருந்தாள்.
”பிருந்தா!” என்றேன்.
கண் விழித்து என்னைப் பார்த்தாள். அப்போது அவளுடைய முகத்தில் யாதொரு மாறுதலும் ஏற்படவில்லை. அப்புறம் ஒருமுறை கண்களை மூடித் திறந்து என்னை நன்றாக உற்றுப் பார்த்தாள். ஒரு நிமிஷம் இப்படியே பார்த்துவிட்டு, திடீரென்று ‘மாமா!’ என்று உரக்கக் கூவினாள்; அப்படியே எழுந்து உட்கார்ந்து விட்டாள்.
“பிருந்தா! படுத்துக்கொள் அம்மா” என்று சொன்னேன்.
அவள் கேட்கவில்லை. எழுந்து என் பக்கம் வந்தாள். என்னைக் கட்டிக் கொண்டு, என் தோள் மீது முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அவளுடைய உ டம்பு அனலாகச் சுட்டது. அவளைத் தட்டிக்கொடுத்து, படுக்கையில் கொண்டு போய்ப் படுக்க வைத்தேன்.
“எந்நேரமும் உங்கள் நினைப்புத்தான்” என்றாள் பிருந்தாவின் தாயார்.
என்னால் ஒன்றும் பேச முடியவில்லை. வாய் அடைத்துவிட்டது. மௌனமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். சுமார் ஒரு மணி நேரம் அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்து விட்டு, வீட்டுக்கு வருவதற்காகப் புறப்பட்டு விட்டேன்.
”போகவேண்டாம் இங்கேயே இருங்கள் மாமா!” என்று பிடிவாதம் பிடித்தாள், பிருந்தா. அப்புறம் அவளைப் பலவிதமாகச் சமாதானப்படுத்தி, “நாளைக் காலையில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வந்தேன்.
அவ்விதமே மறுநாள் காலையில் சென்றேன். வெகு நேரம் அங்கேயே இருந்தேன். அவள் ஜுரத்தினால் கஷ்டப்படுகிறவள் மாதிரியே இல்லை. என்னோரு பேசிக்கொண்டு தான் இருந்தாள். ஆபிசுக்கு நேரமாகி விட்டதென்று அவளிடம் கூறிவிட்டு வெளியே எழுந்து வந்தேன். தெருவோடு வந்து கொண்டிருக்கும்போது சாரங்கன் தன் வீட்டு ஜன்னல் வழியாக என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கிருந்த வாக்கிலேயே, “மாமா” என்று கூபிட்டான். நான் திரும்பிப் பார்ப்பதற்குள்ளாகத் தெருவுக்கு ஓடி வந்து விட்டான்.
”எங்கள் வீட்டுக்கும் வாருங்கள்” என்று கையைப் பிடித்து இழுத்தான்.
“உங்கள் வீட்டிற்கு எதற்கு?”
”பிருந்தா வீட்டுக்கு மட்டும்...”
“பிருந்தாவுக்கு ஜுரம். அதனால் போய்ப் பார்த்து விட்டு வந்தேன்.”
“ஊஹூம், எங்கள் வீட்டுக்கும் வரவேண்டும். ஆமாம்.”
“சாரங்கா! இன்னொரு நாளைக்கு வருகிறேன். கையைவிடு. எனக்கு ஆபிசுக்கு நேரமாகி விட்டது.”
நான் சொன்னபடியே கையை விட்டுவிட்டான். தன் இடது கையில் வைத்திருந்த இரண்டு நெல்லிக் காய்களில் ஒன்றை எடுத்து “இந்தாருங்கள்” என்று எனக்குக் கொடுத்தான். நான் சிரித்து விட்டேன். “வேண்டாம், நீயே வைத்துக்கொள்” என்றேன். அவனோ கட்டாயப்படுத்தி என்னிடம் கொடுத்தான். நான் என்ன சொல்லியும் கேட்கவில்லை. அந்த நெல்லிக்காயை வாங்கிக் கொள்ளாவிட்டால் அவன் என் சிநேகிதத்தையே உதறித் தள்ளி விடுவான் போல் இருந்தது. அதனால் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொண்டேன். அவனுக்கு அப்பொழுது சொல்ல முடியாத ஆனந்தம்.
நான் புறப்படும்போது, “எப்போது எங்கள் வீட்டுக்கு வருவீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே என்னைத் தொடர்ந்து நடந்து வந்தான்.
“அடுத்த ஞாயிற்றுக்கிழமை” என்று பேச்சுக்குச் சொல்லி வைத்தேன்.
“கட்டாயம் வர வேண்டும்”
“சரி”
அவன் வீட்டுக்குப் போய்விட்டான்.
அதற்குப் பிறகு நான் பிருந்தாவின் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் ”ஞாயிற்றுக்கிழமை வர வேண்டும்; கட்டாயம் வர வேண்டும்” என்று எனக்கு ஞாபகமூட்டிக் கொண்டே இருந்தான்.
பிருந்தாவுக்கு மூன்று நாட்களில் ஜுரம் குணமாகி விட்டது ஓர் ஆச்சரியமாகவே இருந்தது. நான் தினமும் அவள் வீட்டுக்குப் போய் வந்தது தான் அவளுக்கு மருந்தாக இருந்தது என்று அவளுடைய தகப்பனார் என்னிடம் கூறினார். நான் போய் வந்ததன் காரணமாக ஒரு குழந்தையின் நோய் குணமாகிவிட்டது என்று அவர் சொன்னதைக் கேட்க எனக்கு எப்படியோ இருந்தது.  “எப்படியாவது உடம்பு குணமாயிற்றே, அது போதும்” என்றேன். அப்புறம், அவர் சொன்னது ஒரு வேளை உண்மையாக இருக்கலாமோ என்றுகூட எனக்குத் தோன்றியது.
சனிக்கிழமையன்று குழந்தைகளுக்கு விடுமுறை. பிருந்தா உட்பட எல்லாக் குழந்தைகளும் என் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். புது வருஷம் பிறந்து இரண்டு மூன்று தினங்களே ஆகியிருந்தன. நான் வாக்களித்தபடி சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் இரண்டு டைரிகள் வாங்கிக் கொண்டு வந்திருந்தேன். அவற்றில் வழக்கம் போல “அன்பளிப்பு” என்று எழுதி அந்த இருவர் கையிலும் கொடுத்தேன். மற்றக் குழந்தைகள் தமக்கு டைரி வேண்டுமென்று என்னிடம் கேட்கவில்லை. நான் எத்தனை புத்தகங்கள் கொண்டு வந்தாலும், என்ன பரிசு கொடுத்தாலும் சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் தான் கொடுப்பேன் என்று ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும். அவர்கள் இருவர்தான் இப்படிப்பட்ட அன்பளிப்புக்குத் தகுதியானவர்கள், அவர்களுக்குக் கொடுப்பதுதான் நியாயம் என்று எல்லாக் குழந்தைகளும் ஒப்புக்கொண்ட பாவனையில் பேசாமல் இருந்தன. முதல் நட்பு என்ற காரணத்தினால்தானோ என்னவோ, ஒரு அலாதிப் பிரியத்துடன் அவர்களுக்கு மட்டும் நான் புத்தகங்களைக் கொடுப்பது வழக்கமாகி விட்டது. இந்த நெடுநாளைய வழக்கம் மற்றக் குழந்தைகளுக்குப் பழகியும் போய்விட்டது.
டைரிகளை வாங்கிக்கொண்டு அந்த இருவரும் சாப்பிடப் போய் விட்டார்கள். அவர்கள் போனபிறகு மற்றவர்களும் புறப்பட்டார்கள். ஆனால் அன்று சாரங்கன் மட்டும் போகவில்லை. எல்லோரும் போன பிறகும் கூட அவன் உட்கார்ந்து கொண்டுதான் இருந்தான். என்னிடத்தில் அந்தரங்கமாக, “மாமா! நாளைக்கு எங்கள் வீட்டுக்கு வருவீர்களா? நாளைக்குத்தான் ஞாயிற்றுக்கிழமை” என்றான்.
”சரி சாரங்கா, எத்தனை தடவை சொல்லுகிறது? ஒரு தடவை சொன்னால் ஞாபகமிருக்காதா?” என்றேன்.
அவன் எழுந்து, வால்ட் விட்மனின் கவித் தொகுதியைக் கையில் எடுத்தான்.
“இந்தப் புத்தகத்தை எனக்குத் தருவீர்களா?” என்று கெஞ்சுதலாகக் கேட்டான். எனக்கு அது வேடிக்கையாக இருந்தது. சிரித்துக் கொண்டே, “இந்தப் புத்தகம் உனக்கு எதற்கு? அது உனக்கு இப்பொழுது புரியாது. நான் அன்றைக்கே சொல்லவில்லையா? நீ எஸ்.எஸ்.எல்.ஸி வகுப்புக்கு வந்ததும் கேள்; தருகிறேன்” என்றேன்.
நான் சொன்னதை அவன் கேட்கவில்லை. பதின்மூன்று வயதுப் பையன் ஐந்து வயதுக் குழந்தையைப் போல முரண்டு பண்ணிக்கொண்டு, அந்தப் புத்தகத்தை அவசியம் கொடுத்தாக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான்.
”சாரங்கா! உனக்குப் புரியாது. சொன்னால் கேள்” என்று சொன்னேன். அப்புறம் அவன் கையிலிருந்து புத்தகத்தை வாங்கி ஜன்னலில் கொண்டு போய் வைத்தேன்.
சாரங்கனின் முகம் ஏமாற்றத்தினால் வெளிறிப்போய் விட்டது. வறண்ட பார்வையோடு என்னைப் பார்த்தான். ஒன்றுமே சொல்லாமல் எழுந்து வாசல் பக்கம் போனான். சரி, வீட்டுக்குப் போகிறான் என்று நினைத்து, நான் என் வேலையைக் கவனிக்கலானேன். இரண்டு நிமிஷ நேரத்துக்குப் பிறகு, திடீரென்று ஒரு அழுகைக் குரல் கேட்டது. அழுதது சாரங்கன்தான். “சாரங்கா! ஏன் அழுகிறாய்? சேச்சே, அழாதே ராஜா” என்று சொல்லிக்கொண்டே அவன் பக்கத்தில் எழுந்து சென்றேன். ஆனால், நான் போகும் வரையில் அவன் அங்கே நிற்கவில்லை, அழுகையை நிறுத்தினான். என்னைத் திரும்பிப் பார்த்துப் பெருமூச்சு விட்டான். அவனுடைய வயிறு அசாதாரணமாக குழிந்து புடைத்தது. அப்பொழுது முகம் ரத்தம் போலச் சிவந்துவிட்டது. இதெல்லாம் எதற்கென்றே எனக்குப் புரியவில்லை. அவன் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தேன். என்னைப் பார்க்கவே அவனுக்கு வெட்கமாகப் போய்விட்டது. நான் போய் கையை எட்டிப் பிடிப்பதற்குள் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.
“சாரங்கா!.... சாரங்கா!”
அவன் ஓடியே விட்டான். அன்று அவன் நடந்து கொண்ட விதம் எனக்கு ஒரு புதிராக இருந்தது. எப்பொழுதும் அவன் பிடிவாதம் பண்ணமாட்டான். என்னிடத்தில் பேசுவதற்கே கூசுவான். அப்படிப்பட்ட பையன் எதற்காகப் பிடிவாதம் பிடித்தான்? எதற்காக அப்படி அழுதான்? எதற்காகத்தான் அழுதானோ? அவனைப் பின் தொடர்ந்து சென்று, அழுத காரணத்தைக் கேட்காவிட்டால் என் நெஞ்சு வெடித்துவிடும் போல இருந்தது. ஆனால், அவன் வீட்டுக்குப் போகவும் என்னால் இயலவில்லை. அவனுடைய பெற்றோர்கள், பிற பெற்றோர்களைப் போலவே எனக்குப் பரிச்சயமில்லாதவர்கள்.
பாவம்! ஏங்கி ஏங்கி அழுதான், அவமானப்பட்டவன் போல் அழுதான். பிற்பகலில் குழந்தைகள் என் அறைக்கு வந்தால், அவர்களை அனுப்பி அவனை அழைத்துவர வேண்டுமென்று தீர்மானித்தேன். மூன்று மணிக்கெல்லாம் முதல் ஆளாக சுந்தரராஜன் வந்து சேர்ந்தான். அவனைச் சாரங்கனிடம் அனுப்பி வைத்தேன். சாரங்கன் தூங்கிக் கொண்டிருப்பதாக சுந்தரராஜன் என்னிடம் வந்து தெரிவித்தான். அதற்குப் பிறகு அவனை வரவழைக்கும் முயற்சியை நிறுத்தினேன். மறுநாள் காலையில் அவன் வந்தால்  பார்க்கிறது. இல்லையென்றால் நானே அவன் வீட்டுக்குப் போவது இதே தீர்மானத்துடன் மற்றக் குழந்தைகளுடன் அன்றைய மாலைப் பொழுதைப் போக்கினேன்.
இரவில் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொண்ட பிறகு தான் என் மனம் மிகமிகக் கஷ்டப்பட்டது. பக்கத்தில் யாருமில்லாத அந்தத் தனிமையில் மனத்துயரம் பெரிதாகிக் கொண்டே இருந்தது. உள்ளத்தில் எத்தனையோ துயரம் படிந்த சிந்தனைகள்; ‘ஏன் அழுதான்? நான் அவனை ஒன்றும் சொல்லவில்லையே! எல்லாக் குழந்தைகளையும் போலவே அவனையும் என் கண்ணுக்குக் கண்ணாக வைத்துக் கொண்டிருக்கிறேன். வால்ட் விட்மன் கவித் தொகுதியைக் கேட்டான், அது அவனுக்குப் புரியாது என்று வாங்கி வைத்துவிட்டேன், இதற்காகவா அவன் அழுதிருப்பான்? அவன் விபரம் தெரிந்த பையன். எப்போதும் நான் சொல்வதை மறுதலிக்காமல் ஏற்றுக்கொள்பவன். அப்படிப்பட்ட பையன் புத்தகத்தை நான் திருப்பி வாங்கிக்கொண்டதற்காக இப்படி அழுதிருக்க முடியாது. நான் திரும்பி வாங்கிக் கொண்ட காரியம், விம்மிவிம்மி அழத்தக்க மன வேதனையைத் தர நியாயமில்லை! சாரங்கா! எதற்காக அழுதாய்? எதற்காக அழுதாயடா”
ஞாயிற்றுக் கிழமை.
நேற்று பிற்பகலில் அவன் வராமல் இருந்து விட்டதால் இன்றும் வரமாட்டான் என்றே எண்ணியிருந்தேன். சப்தரிஷி மண்டலம் போன்ற எங்கள் கூட்டத்தில் இந்த ஒரு நக்ஷத்திரம் மறைந்து நிற்பதை மற்றக் குழந்தைகள் பொருட்படுத்தவில்லை. அத்துடன் அவர்கள் கவலைப்படுவதற்கும் இங்கே என்ன இருக்கிறது? ஒருநாள் பிற்பகலில் அவன் வராமல் இருந்தது அவர்களுக்கு ஒரு பிரிவாகத் தோன்ற நியாயமில்லை. எனக்கும் மற்றச் சமயங்களில் இது கவனத்தைக் கவரத்தக்க விஷயமாக இல்லாமல், சகஜமான காரியமாக இருந்திருக்கும். ஆனால், அவன் நேற்று எந்த நிலையில் என்னைப் பிரிந்து சென்றான். எந்த நிலையில் என்னை விட்டுவிட்டுச் சென்றான் என்ற விபரங்கள் எனக்கல்லவா தெரியும்?
காலை பத்து மணி இருக்கும். ஞாயிற்றுக்கிழமையானதால் சாப்பாட்டைப் பகல் ஒரு மணிக்கு ஒத்திப் போட்டுவிட்டு, காலையில் பலகாரம் பண்ணி நானும் என் தாயாரும் சாப்பிட்டோம். அப்புறம் நான் என் அறைக்கு வந்து ஏதாவது படிக்கலாம் என்று உட்கார்ந்தேன். மனம் என்னவோ அந்த வால்ட் விட்மனின் கவித் தொகுதியைத் தான் படிக்க விரும்பியது. அதைக் கையில் எடுத்து விரித்ததும் என் கண்களுக்குக் கவிதா வாசகங்கள் தென்படவில்லை; சாரங்கன் தான் காட்சியளித்தான்; அவனுடைய கண்ணீரும் ஏக்கமும்தான் காட்சியளித்தன. இது சோதனையாக இருக்கிறதே! அவனாவது இங்கு வரக்கூடாதா? அல்லது வேறு குழந்தைகளாவது வரக் கூடாதா என்று மறுகிக்கொண்டு கிடந்தேன்.
சிறிது நேரத்திற்குப் பிறகு பிருந்தா வந்தாள். பாக்கிய தேவதை என ஒரு தெய்வ மகள் உண்மையிலேயே இருந்து, ஒரு தரித்திரனின் வீட்டில் அடியெடுத்து வைத்தது போல இருந்தது பிருந்தாவின் வரவு.
”வா பிருந்தா! பிருந்தா என்ற பெயரை மாற்றி ‘பிரியதர்சினி’ என்று பெயர் வைத்தால் உனக்குப் பொருத்தமாக இருக்கும் பிருந்தா!” என்றேன்.
என் பரவசம் அவள் உள்ளத்தைத் தொடவில்லை. என் சொற்கள் அவள் செவிக்கு எட்டவும் இல்லை.
”சுந்தரராஜனும் சித்ராவும் சினிமாவுக்குப் போய் விட்டார்கள்” என்று காரண காரியமில்லாமல் சொன்னாள் பிருந்தா.
“சாரங்கன்?” என்று ஆவலோடு கேட்டேன்.
”நான் பார்க்கவில்லை” என்று சொல்லிவிட்டாள்.
மேற்கொண்டு நான் சாரங்கனைப் பற்றி விசாரிக்கத் தொடங்கும்போது, பிருந்தாவின் வீட்டு வேலைக்காரன் வந்து, “அம்மா கூப்பிடுகிறார்கள்” என்று சொல்லி அவளை அழைத்தான். பிருந்தா உடனே, “போய் வருகிறேன்” என்று சொல்லிக் கிளம்பிவிட்டாள். அவள் போன பிறகு பழையபடியும் அந்தக் கவித் தொகுதியை எடுத்து விரித்தேன். அப்போது பிருந்தா வெகுவேகமாக ஓடிவந்தாள். வந்து, “சாரங்கன் வருகிறான்” என்று சொல்லிவிட்டு அந்த க்ஷணத்திலேயே தன் வீட்டை நோக்கி ஓடிவிட்டாள்.
என் இதயம் ‘படபட’வென்று அடித்துக்கொண்டது. அதிவேகமாக வால்ட் விட்மனின் புத்தகத்தை மறைத்து வைத்து விட்டேன். அதைப் பார்த்தால் சாரங்கனுக்குப் பழையபடியும் அழுகை வந்துவிடுமோ என்று எனக்குப் பயம்.
சாரங்கன் வந்துவிட்டான்.
“சாரங்கா....”
“உம்.”
“ஏன் நீ இவ்வளவு நேர வரையிலும் வரவில்லை? நேற்றும் வரவில்லை?”
அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை, அவன் முகத்தில் துயரமோ, வேறு விதமான ஆழ்ந்த உணர்ச்சிகளோ பிரதிபலிக்கவில்லை. ஒரே சந்தோஷமாகத்தான் இருந்தான். இது மகிழ்ச்சிக்குரிய மாறுதல்தான் என்று நான் நினைத்துக் கொண்டேன்.
“எங்கள் வீட்டுக்குப் போவோமா?”
”உங்கள் வீட்டுக்கா?”
“ஆம். நீங்கள் வருவதாக அன்றே சொல்ல வில்லையா?”
“சும்மா வேடிக்கைக்குச் சொன்னேன், சாரங்கா! உங்கள் வீட்டுக்கு எதற்கு?”
“எதற்கோ? நீங்கள் வாருங்கள்” என்று இரண்டு கைகளாலும் என் கையைப் பிடித்து இழுத்தான்.
அவனுடைய வேண்டுகோள் எனக்கு ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது. அன்று பிருந்தாவின் வீட்டிலிருந்து வரும்போது அவனுடைய கட்டாயத்தைப் பார்த்து, “ஞாயிற்றுக்கிழமை வருகிறேன்” என்று சொல்லி வைத்தேன். அந்த விஷயத்தை அவன் இவ்வளவு தூரம் வற்புறுத்துவான் என்று தெரிந்திருந்தால் அப்படிச் சொல்லியிருக்கவே மாட்டேன். இந்தச் சிறுவனின் வேண்டுகோளுக்காக வேற்றார் வீட்டுக்குப் போவது எப்படி? போவதற்குக் காரணமும் வேண்டுமே! பிருந்தா வீட்டுக்குப் போனதற்காவது அவளுடைய தேக சௌக்கியம் காரணமாக இருந்தது. இங்கே போவது எதற்காக? இவனுடைய அப்பாவை வீதியிலும் பஸ் ஸ்டாண்டிலும் ஆயிரம் தடவைகள் பார்த்திருக்கிறேன். ஒரு தடவைகூட நாங்கள் பேசிக் கொண்டதில்லை. ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் என்று எவ்வித சைகை ஜாடையின் மூலமாகக் கூடக் காட்டிக் கொண்டதில்லை. அப்படியிருக்க அங்கு நான் எப்படிப் போவது?
சாரங்கன் மிகவும் அதிகமாக வற்புறுத்தத் தொடங்கினான். அவசரப்படவும் ஆரம்பித்தான். எனக்கு அது ஒரு தொந்தரவாகவே ஆகிவிட்டது. ’இத்தனை நாளும் இவன் வாய்மூடி மௌனியாக இருந்தது போதும், இன்று பாடாய்ப் படுத்துவதும் போதும்’ என்று சலித்துக் கொண்டேன்.
“வாருங்கள் மாமா. சொல்லிவிட்டு மாட்டேன் என்கிறீர்களே?” என்று கெஞ்சினான்.
“சாரங்கா! நீ சிறு பிள்ளை. உன் பேச்சைக் கேட்டுக் கொண்டு நான் வருவது எப்படி? இந்த நாசூக்கு எல்லாம் உனக்குப் புரியாது. என்னை விட்டுவிடு” என்று பொறுமையிழந்து சொன்னேன்.
“ஏன் வரமாட்டேன் என்கிறீர்கள்?” என்று என் முகத்தைக் கூர்ந்து பார்த்துக்கொண்டு ஏக்கத்துடன் கேட்டான்.
“அங்கே எதற்கு?”
“அதென்னமோ, கட்டாயம் வரத்தான் வேண்டும்.”
நான் கோபப்பட்டவன் போல் நடித்து, “என்னால் வரமுடியாது. எனக்கு அவசரமான வேலை இருக்கிறது. இன்னொரு நாளைக்கு வேண்டுமானால் பார்த்துக் கொள்வோம்” என்று சொல்லிவிட்டு மறுபுறம் திரும்பிக் கொண்டேன். ஏதோ ஒரு புத்தகத்தைத் தேடுபவன்போல் மேஜையைத் துழாவிக் கொண்டிருந்தேன்.
சாரங்கன் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.
ஒரு நிமிஷம் கழிந்திருக்கும். அவனை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். நான் பார்த்த மாத்திரத்தில் அவனும் ஒரு முறை பெருமூச்சு விட்டுக்கொண்டு “வரமாட்டீர்களா” என்று தடுமாறும் குரலில் கேட்டான்.
அவனுடைய இந்தக் கடைசி முயற்சியைத் தகர்த்து விட்டால், பழையபடியும் அழ ஆரம்பித்து விடுவான் என்பதற்குரிய அடையாளம் அவன் முகத்தில் தென்பட்டது. சாரங்கனைத் திரும்பத் திரும்ப அழ வைத்துப் பார்க்க எனக்கு இஷ்டமில்லை. ‘தங்கமான பையனை ஏன் இப்படிக் கஷ்டத்துக்கு ஆளாக்க வேண்டும்? போய்விட்டுத் தான் வருவோமே! நம்மை வரவேண்டாமென்றா சொல்லப் போகிறார்கள்? அப்படியிருக்க ஒரு முறை போய் வருவதில் என்ன நஷ்டம்?” என்று அதிசீக்கிரமாக யோசித்து முடிவு கட்டினேன். அவன் கண்ணீர் சொரிவதற்குள் என் சம்மதத்தை தெரிவித்துவிட்டேன்.
“சாரங்கா! வா! உன் வீட்டுக்கே போகலாம்”
இருவரும் கைகோத்துக்கொண்டே சென்றோம். அவன் வீட்டுக்கு முன்னால் போனதும், என் கையை விட்டுவிட்டு வீட்டுக்குள்ளே வேகமாக ஓடினான். அப்புறம் வெளியில் வந்து வாசல் பக்கத்திலுள்ள அறையைத் திறந்து, “வாருங்கள், வாருங்கள்” என்று படபடப்பாக இரைந்து சொன்னான். என்னுடைய தயக்கத்தையும், என்னுடைய சங்கோஜத்தையும் அளவிட்டுச் சொல்ல முடியாது. வேறு வழியில்லாமல் அந்த அறைக்குள் சென்றேன். அறையின் சூழ்நிலையைக் கொண்டே சாரங்கனின் பெற்றோர்கள் ஏழைகள் என்று எளிதில் தீர்மானிக்க முடிந்தது. நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, பக்கத்தில் கிடந்த அவனுடைய சரித்திரப் புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். சாரங்கன் வீட்டுக்குள்ளே ஓடிவிட்டான். அப்போது வெளியிலிருந்து வந்த அவனுடைய தகப்பனார், அறைக்குள் எட்டிப் பார்த்தார். என்னைப் பார்த்து “வாருங்கள்” என்று சொல்லிவிட்டு, உள்ளே போய்விட்டார். “என்ன விசேஷம்?” என்று என்னை அவர் விசாரிக்காமல் விட்டது எனக்கு ராஜமரியாதை செய்தது போல் இருந்தது.
சாரங்கன் திரும்பி வரும்போது, ஒரு தட்டில் உப்புமாவும், ஒரு டம்ளரில் காபியுமாக வந்து சேர்ந்தான். நான் திடுக்கிட்டு விட்டேன்; என் சுவாசம் அப்படியே நின்று விட்டது.
“ஐயோ! இதெல்லாம் எதற்கு? நான் இப்போதுதானே சாப்பிட்டேன்?”
சந்தோஷப் படபடப்பில் ஒன்றுமே சொல்லாமல் வந்து அவன் என் வலது கையைப் பிடித்து இழுத்து உப்புமாத்தட்டில் கொண்டு போய் வைத்தான். சாரங்கன் ரொம்பவும் சிறுபிள்ளையாக இருக்கிறான். இனிமேல் இவனிடம் கொஞ்சம் கண்டிப்பாகத்தான் நடந்து கொள்ளவேண்டும். இன்று மட்டும் ஏதோ கசப்பு மருந்தைச் சாப்பிடுவோம். வேறு வழியில்லை என்று எண்ணிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தேன். சிறு பையன் பேச்சைக் கேட்டு விருந்தாட வந்த என்னைப் பற்றி அவனுடைய பெற்றோர் என்ன நினைப்பார்களோ என்ற பயம் ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு அதிர்ச்சி கொடுத்த வண்ணமாக இருந்தது.
ஒருவழியாகச் சாப்பிட்டு முடிந்தது. தட்டையும் டம்ளரையும் உள்ளே கொண்டுபோய் வைக்கப் போனான் சாரங்கன்.
’இந்தப் பையனுக்கு எதற்கு என் மேல் இவ்வளவு அன்பு? இவன் அன்பு என்னைத் திணற அடிக்கிறதே! இது தாங்கமுடியாத அன்பு! தாங்க முடியாத பேதைமை! இரண்டும் சேர்ந்து என்னை குரங்காட்டம் ஆட்டுகின்றன. ஆனால் இவனைக் கோபிக்கக் கூடாது. இவன் இப்போது எனக்குக் கொடுக்கும் தொந்தரவே இவனுடைய அன்பை அளந்து காட்டுகிறது. ஏதோ ஒரு நாள் என்னைக் கஷ்டப்படுத்துவதனாலவது, இவன் திருப்தியடையட்டும். என்னுடைய முயற்சி எதுவும் இல்லாமல், என்னால் மட்டுமே ஓர் உயிர் சந்தோஷமும், திருப்தியும் கொள்ள முடிகிறது என்றால், அதை எந்தச் சமயத்திலும் தடுக்கக் கூடாது. தடுக்க முயலுவது அமானுஷிகம்’ என்று எண்ணித் தேற்றிக்கொண்டேன்.
சாரங்கன் வெளியே வந்தான். மேஜையைத் திறந்து ஒரு பவுண்டன் பேனாவை எடுத்தான். என் முகத்துக்கு எதிரில் நிற்காமல் என் முதுகுப் புறமாக வந்து நின்று கொண்டான். அங்கே நின்ற வாக்கிலேயே, நான் கையில் வைத்திருந்த சரித்திரப் புத்தகத்தை மெதுவாகப் பிடித்து இழுத்துத் தூரத்தில் வைத்தான். தூங்கும் குழந்தையின் கையிலிருக்கும் கிலுகிலுப்பையை எவ்வளவு ஜாக்கிரதையாகத் தனியே எடுத்து அப்புறப்படுத்துகிறோமோ, அது போல அதை அப்புறப்படுத்தினான். பிறகு அவன் வலது கையால் தன் கால் சட்டையின் பையில் கையை விட்டு எதையோ எடுப்பதுபோல் எனக்கு ஜாடையாகத் தெரிந்தது. அதை என் முன்பாக மேஜைமேல் வைத்தான்.
அது ஒரு டைரி. நான் சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்த டைரிகளைப் போன்ற ஒரு டைரி. அதே கம்பெனியில் செய்தது. அதே நிறமுடையது. அப்புறம் பேனாவை என் கையில் கொடுத்து “எழுதுங்கள்” என்றான்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன எழுத?” என்று கேட்டேன்.
“என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு” என்று எழுதுங்கள்.”
****
சக்தி அக்-நவ 1951

No comments:

Post a Comment