Search This Blog

Monday, May 5, 2014

கணவனுக்காக மனைவிகட்டிய தாஜ்மஹால்(கிணறு)

குஜராத்தில், கணவனின் நினைவுக்காக, மனைவி கட்டிய, 'ராணி கி வாவ்' படிக்கிணறு, யுனஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம் பெறுவதற்கு, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், வட இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. எனவே தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்காக, ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் ஆயிரக்கணக்கில் படிக்கிணறுகளை கட்டினர். குறிப்பாக குஜராத் மாநிலத்தில் அதிகளவிலான படிக்கிணறுகளை கட்டினர்.பருவமழைக் காலங்களில் பெறப்படும் மழைநீரை சேகரிக்கவும், வாணிபத்துக்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் தங்குவதற்கும் இக்கிணறுகள் கட்டப்பட்டன.

இதில் குறிப்பிடத்தக்க 'ராணி கி வாவ்' படிக்கிணறு, குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் உள்ளது.சோலங்கி வம்சத்து அரசனான பீமதேவருக்கு 1050ல் அவருடைய மனைவி உதயமதி இப் படிக்கிணறை கட்டினார். காதலியின் நினைவுக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹாலை போல, கணவனின்நினைவுக்காக மனைவி உதயமதி கட்டிய 'ராணி கி வாவ்' படிக்கிணறும், நம் நாட்டு கலாசாரத்துக்கு எடுத்துக்காட்டு.

64 மீ. நீளமும், 20 மீ. அகலமும், 27 மீ. ஆழமும் கொண்ட இப்படிக்கிணறு, 1958 வரை மண் மூடிக்கிடந்தது. அதன் பின் அரசின் கவனத்துக்கு வந்தது. 1972ல், அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1984ல், பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.குஜராத்துக்கு சுற்றுலா செல்லும் பெரும்பாலான பயணிகள் ராணி கி வாவ்வுக்கு கட்டாயம் செல்வர். குஜராத்தில் உள்ள படிக்கிணறுகளின் ராணி என போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. ஐ.நா., சபையின் கலாசாரா அமைப்பான யுனஸ்கோ ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டிலும் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டு அந்த இடத்துக்கு புகழ் சேர்க்கும். ஒவ்வொரு நாட்டிலும் இதற்கென பிரத்யேக வல்லுனர் குழு அமைக்கப்படும்.

இந்த ஆண்டு வல்லுனர் குழு ராணி கி வாவ்வையும், இமாச்சல் பிரதேசத்தில்உள்ள நேஷனல் பார்க்கையும் பாரம்பரிய பட்டியலுக்கு பரிந்துரைத்துள்ளது. 1998லும் ராணி கி வாவ் பரிந்துரைக்கப்பட்டாலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இம்முறை தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment