தனிமையில் வாடும் முதியவர்களின் பிரச்னை, விளையாட்டை, இயல்பை தொலைக்க வைத்த கல்விமுறை, பெண்கள் மீதான பாலியல் தொந்தரவு எல்லாவற்றையும் ஒரே படத்தில் சொல்லி விடமுடியும் என்று நிரூபித்திருக்கிறது கலிகாலம் மலையாளத் திரைப்படம்….
55 வயதான தேவகி டீச்சர் (சாரதா) தன் வீட்டில் தனியாக வசிக்கிறார்… திருமணமான அவரது பிள்ளைகள் வேறு ஊர்களில் வசிக்கிறார்கள்… கல்லறைக்குள் இருக்கும் கணவனோடு பேசுவது, அக்கம்பக்கம் குழந்தைகளோடு நேரம் செலவழிப்பது, தன் வயது நண்பர்களோடு உரையாடுவது என அவரது நேரம் போகிறது… பசு பிரசவித்ததை கூட கொண்டாடும் ஒரு மனது அவரிடம் இருக்கிறது…
தங்கள் வேலைகளில் அம்மாவை மறந்து போகும் பிள்ளைகளைத் தேடி அவர்களது வீடுகளுக்கு அடிக்கடி செல்கிறார் தேவகி டீச்சர்… பேரப் பிள்ளைகள் பாட்டியிடம் உயிராக இருக்கின்றன… வீட்டில் இருக்கும் நந்தினி பசு பிரசவிக்க, புதிய பாலில் செய்த இனிப்புகளோடு மங்களூர், பாலக்காடு என ஆளுக்கொரு திசையில் இருக்கும் பிள்ளைகள் வீட்டுக்கு பயணமாகிறார் தேவகி டீச்சர்..
ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு பேருந்து ஏற்றி விடும் வேலையைச் செய்வதற்கு கூட பிள்ளைகள் சலித்துக் கொள்கிறார்கள்… யாராவது ஒருத்தர் வீட்ல நிரந்தரமா இருந்தா என்ன? என எரிச்சல்படுகிறார்கள்… டீச்சரின் யாரையும் சாராமல் தனித்தியங்கும் குணநலன் அவர்களை எரிச்சல்படுத்துகிறது… இப்படியான பயணத்தின் போது, வணிகமயமாகி விட்ட கல்வி முறையால் தன் பேரப்பிள்ளைகள் மீது திணிக்கப்படும் அழுத்தத்தை உணர்ந்து வருந்துகிறார் தேவகி டீச்சர்.
மகள் வீட்டில் இருந்து மகன் வீட்டிற்கு செல்லும் பேருந்து பயணத்துக்கு இடையில், கேரளாவில் திடீர் வேலைநிறுத்தத்தை ஒரு கட்சி அறிவிக்கிறது… அம்மாவிற்கு என்ன ஆனது எனத் தெரியாமல் பிள்ளைகள் பதறுகிறார்கள்….. மயங்கிய நிலையில் காட்டிற்குள் தேவகி டீச்சர் போலீஸாரால் கண்டெடுக்கப்படுகிறார்…. மருத்துவமனையில் நினைவு திரும்பும்போதெல்லாம், அடக்க முடியாமல் தன்னை மீறி சப்தமெழுப்புவார் தேவகி டீச்சர்… அப்போதுதான் அவர் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டது பிள்ளைகளுக்கு தெரிய வருகிறது…
ஒரு வயதான பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த ஆண்கள் மீது கோபம் வருவதற்கு பதிலாக, தன் அம்மா மீது பிள்ளைகளுக்கு எரிச்சல் வருகிறது… அவரது சுயமாக இயங்கும் தன்மையை கேள்வி கேட்கிறார்கள்… தங்களை அவமானப்படுத்தி விட்டதாக, கோபம் கொள்கிறார்கள்… அம்மாவை யார் பார்த்துக் கொள்வது என சண்டையிடுகிறார்கள்…. இறுதியில் யாருக்கும் தெரியாமல் அம்மாவை ஒரு அறைக்குள் அடைத்து வைக்கிறார்கள்… பேரப் பிள்ளைகளை கூட அருகில் நெருங்காமல் பார்த்துக் கொள்கிறார்கள்… அம்மாவை பார்க்கும் பார்வையில் வெறுப்பு மட்டுமே தெரிகிறது….
ஒரு பெண் எந்த வயதில் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டாலும் அவளை நம் குடும்பங்கள் இப்படித்தான் நடத்துகின்றன…. குடும்பத்தின், சமூகத்தின் வெறுப்பை சுமப்பதற்கு அவள் தான் பெண்ணாய் பிறந்ததை நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை… தேவகி டீச்சரின் நாட்கள் இப்படியே போய்க் கொண்டிருக்க, அவர் கருவுற்றிருப்பதாய் மருத்துவர் சொல்ல.. பிள்ளைகள் இன்னும் எரிச்சல் அடைகிறார்கள்…. அம்மாவை அருவெருப்பாய் பார்க்கிறார்கள்… அபார்ஷன் செய்வது இந்த வயதில் உயிருக்கு ஆபத்தாய் முடியும் என டாக்டர்கள் எச்சரிக்க, அம்மா இறந்தாலும் பரவாயில்லை என பிள்ளைகள் சொல்கிறார்கள்…
பிள்ளைகளின் அவமதிப்புகளை அவ்வளவு நாட்கள் பொறுத்துக் கொண்ட தேவகி டீச்சர், குழந்தையை கலைக்க முடியாது என மறுக்கிறார்… இந்த இடம் தான் படத்தில் என்னை வெகுவாக கவர்ந்த இடம்.. பாலியல் வன்புணர்வால் கிடைத்த குழந்தையை கூட பெற்றுத்தான் ஆக வேண்டுமா என்கிற கேள்வியை இங்கு எழுப்ப முடியாது… ஏனெனில் தன் உயிரைக் கொடுத்து இந்தக் குழந்தையை கலைக்க முடியாது என தேவகி டீச்சர் மறுப்பார்… தான் செய்யாத தவறுக்கு ஏன் சாக வேண்டும் என்கிற கேள்வி மிக ஆணித்தரமானது… மானம், அவமானம் என்கிற கற்பிதங்களை விட தனக்கு உயிர்வாழ உரிமை இருக்கிறது என தேவகி டீச்சர் நம்புகிறார்… ஒரு நொடியில் எல்லோரையும் உதறித்தள்ளிவிட்டு அவர் வயிற்றில் குழந்தையோடு கிளம்புவார். அதைப் பெற்று வளர்க்கவும் செய்வார்… தியேட்டராய் இருந்திருந்தால், இந்த இடத்தில் விசில் அடித்து கொண்டாடி இருப்பேன்…
55 வயதில் ஒரு பெண் அப்படி முடிவெடுப்பதாய் காண்பிப்பதற்கு துணிச்சல் வேண்டும்… இந்த துணிச்சலுக்காகவே நான் மலையாளப் படங்களை அதிகம் விரும்புகிறேன்… பெண்ணின் பார்வையில் படைப்புகள் மலையாளத்தில் மட்டுமே வருவதாக நம்புகிறேன்… இந்த சமூகம் பெண் மீது திணித்து வைத்துள்ள எல்லா நம்பிக்கைகளையும் மலையாளப் படம் தகர்த்தெறியத் தொடங்கி வெகுநாளாகி விட்டது… தமிழில் அப்படியாகத் தேடினால் ‘’பூ’’ படத்தை மட்டுமே சொல்ல முடிகிறது…
கலிகாலம்
இயக்கம் : ரெஜிநாயர்
Related Posts : World Cinema
No comments:
Post a Comment