Search This Blog

Thursday, July 12, 2012

அன்புடன். G. வசந்த பாலன் இயக்குனர்.


கி.பி.2000க்கு முன் வரை மேல்மட்ட, பணக்கார படைப்பாளிகள் மட்டுமே, உலக திரைப்பட விழாக்களில்கலந்து கொள்கிற,உலகத் திரைப்படங்களை பார்க்கிற பாக்கியம் பெற்றவர்கள். கிபி2000 ஆண்டுக்கு பின்பு,உலகத் திரைப்படங்களை நடுத்தர,ஏழை படைப்பாளிகளும் பார்க்கக்கூடியசந்தர்ப்பத்தை,சுதந்திரத்தை,புரட்சியை தொழில்நுட்பம் செய்தது.அதை மதுரை ப்ளாட்பார்ம் வரை,திருட்டு விசிடி கொண்டு வந்து சேர்த்தது. இந்த நேரத்தில் திருட்டு விசிடிகாரர்களிடம் மறைமுகமாக கைகுலுக்கிக் கொள்வோம்.

மதுரையின் குக்கிராமத்திலிருக்கிற ரசனையான பார்வையாளனும், Spring Summer fall Winter and springபடத்தைப் பற்றியும், Legend of 1900 படத்தைப் பற்றியும், Osama படத்தைப்பற்றியும், கேன்ஸ் படங்கள் பற்றி விவாதிக்கின்ற ஒரு தன்மையை காண முடிகிறது.பைரசி புரட்சிக்கு பிறகு தான், ரசனையான எல்லா உதவி இயக்குனர்களின் அறைகளிலும்,உலக சினிமாபற்றிய நூற்றுக்கணக்கான விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், செழியன் போன்றவர்களின் உலக சினிமா பற்றிய அறிமுகம், சினிமா பற்றி இன்னும் நுட்பமான,கூர்மையான புரிதல்களை ஏற்படுத்தி இருக்கிறது.

உலக திரைப்படங்களை உன்னிப்பாக கவனிக்கும் போதுதான், தமிழ் சினிமாவில்காணக்கிடைக்காத பல விஷயங்கள், தமிழ் வாழ்க்கையில் காணக் கிடைக்கிற பல விஷயங்களை படமாக, கதையாக காணுகிற ஒரு புரிதலை எனக்குள் ஏற்படுத்தியது. வெயில் படத்தின் மூலம் தோல்வியுற்றவனுடைய வாழ்க்கையை,வலியை, வெற்றி பெற்றவனை பக்கத்தில் வைத்துக் கொண்டு, நேர்த்தியாக கதை சொல்லுகிற ஒரு கலையை, உலக சினிமாவை தொடர்ச்சியாக பார்த்து கற்றுக்கொண்ட பயிற்சியின் மூலம் சாத்தியமானது. அப்படித்தான் நமக்கு நன்கு பரிட்சயமான, நாம் அன்றாடம் கடந்துபோகிற ரங்கநாதன்தெருஅங்காடித்தெருவின் கதையாக உருக்கொள்ள காரணமாக இருந்தது.

ஒரு படத்தை ஒரு முறை பார்ப்பதிலேயே,அதில் உள்ள அத்தனை விஷயங்களயும் நம்மால் உள்வாங்கிவிட முடியாது.நல்ல கலைப் படைப்பென்பது, பல்வேறு அழகியல் அடுக்குகள் கொண்டதாக,ஒவ்வொரு முறை பார்க்கும் போது, வெவ்வேறு விதமான அனுபவத்தை ஏற்படுத்தும்.தொடர்ந்து பத்திரிக்கையில் காணக்கிடைக்கிற,உலக சினிமா பற்றிய எல்லா எழுத்துக்களும்,சினிமா படைப்பாளிகளுடைய ரசனையை மேம்படுத்துகிற ஒரு செயலாகத்தான் நான் பார்க்கிறேன்.அந்த விதத்தில் உமாசக்தி தான் பார்த்து வியந்த உலகப்படங்களை, நுண்ணிய பார்வையுடன் ஒரு சிறுகதையை போல விமர்சனமாக, கதைச்சுருக்கமாக நமக்கு அறிமுகம் செய்கிறார்.
இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள உலக திரைப்படங்களை,நுட்பமான மொழி முலம்,மிக எளிமையாகவாசகனுக்கு கடத்தியதோடு,படத்தை பார்க்க தூண்டும் ஒரு ஆர்வத்தையும் ஏற்படுத்தும் அளவுக்கு மிக ரசனையாக எழுதி உள்ளார்.அவருடைய இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன்.
G. வசந்த பாலன்
இயக்குனர்.

(என் இரண்டாவது புத்தகம் ‘திரைவழிப் பயணத்திற்கு’ இயக்குனர் வசந்தபாலன் அவசரமாக ஒரிரு நாட்களில் படித்து முடித்து கொடுத்த முன்னுரை.)

No comments:

Post a Comment