பத்து பைசா செலவில்லாமல் காற்றில் இயங்கும் ஹைபிரிட் கார்!
காற்று மற்றும் சூரிய சக்தியில் புதிய ஹைபிரிட் கான்செப்ட் காரை சென்னை எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நாகை மாவட்டம், தரங்கம்பாடியிலுள்ள ஹைடெக் புராஜெக்ட்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் பல முன்னணி எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்துக்கான தேவையான மாற்று எரிசக்தியில் இயங்கும் புதிய கார்களை கண்டுபிடித்து வருகின்றனர்.
இந்த வரிசையில், தற்போது சென்னை, தாம்பரத்திலுள்ள சாய்ராம் எஞ்சினியரிங் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் குழு, தரங்கம்பாடியிலுள்ள ஹை-டெக் புராஜெக்ட்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆராய்ச்சியாளர்கள் முரளி, ஜெயராஜ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்புடன் காற்று சக்தியில் இயங்கும் புதிய காரை கண்டுபிடித்துள்ளனர்.
பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் முன்னிலையில் இந்த ஏர் கார் சமீபத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்களும், பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இந்த புதிய ஏர் காரை வடிவமைத்த மாணவர்கள் மற்றும் ஆலோசனை வழங்கிய ஆய்வாளர்கள், பேராசிரியர்களை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள சிறிய புரொப்பல்லர் உதவியுடன் இந்த கார் காற்று சக்தியில் கடகடவென ஓடி பார்ப்பவர்களை பரவசப்படுத்துகிறது. தவிர, இந்த காரின் பின்புறத்தில் சோலார் செல் பேனல் பொருத்தப்பட்டிருக்கிறது.
இதன்மூலம், இந்த காரை எலக்ட்ரிக் மோட்டார் உதவியுடனும் இயக்க முடியும். 120 கிலோ எடை கொண்ட இந்த கார் 5.5 அடி நீளமும், 4.5 அடி உயரத்தையும் கொண்டிருக்கிறது. தவிர, இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் சோலார் பேட்டரி மூலம் வீட்டிற்கு மின் சப்ளையை பெறும் வசதியும் இருக்கிறது.
இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் கூறும்போது," இந்த காரை வடிவமைக்க ரூ.55,000 செலவானது. போதிய நிதி ஆதாரம் கிடைத்தவுடன் இந்த காரை மேம்படுத்தி விற்பனைக்கு கொண்டு வரும் திட்டமும் இருக்கிறது.
சுற்றுச் சூழலுக்கு துளி கூட மாசு விளைவிக்காத இந்த காரை விற்பனைக்கு கொண்டு வருவதே எங்கள் லட்சியமாக உள்ளது," என்றனர்.
Related Posts : Cars,
Technology
No comments:
Post a Comment