Search This Blog

Saturday, March 3, 2012

பண்டைய காலத்தில் வடஆபிரிக்காவுடன் யாழ்ப்பாணம் வணிக உறவில் ஈடுபட்டதற்கான அரிய சான்றுகள் அல்லைப்பிட்டியில் கண்டுபிடிப்பு.





பண்டைய யாழ்ப்பாணத்திற்கும் - வட ஆபிரிக்காவிற்குமிடையில் வர்த்தகத் தொடர்புகள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்ாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வாராம் அல்லைப்பிட்டியில் கிணறு வெட்டியபோது எதிர்பாராமல் சில தொல்பொருட்ச் சின்னங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை அவதானித்த அல்லைப்பிட்டி பாரதி வித்தியாலய ஆசிரியர் நடராசா வாகிசன் அதுபற்றிய தகவலை எமது துறைக்குத் தெரியப்படுத்தினார்.
அங்கு சென்ற தொல்லியல் ஆய்வு உத்தியோகத்தர் ப.கபிலன், எஸ். மணிமாறன் ஆகியோர் அங்கு கிடைத்த சில தொல்பொருட்ச் சின்னங்களான மனித சிலையின் தலைப்பாகத்திற்குரிய சிற்பம் யாழ்ப்பாணத்தின் பழமை பற்றியும் பண்டைய காலத்தில் அது பிற நாடுகளுடன் கொண்டிருந்த வணிக, கலாசார உறவுகளை அறிந்து கொள்ளவும் பெரிதும் உதவுகின்றது.
14 சென்ரி மீற்றர் உயரமும், 12 சென்ரி மீற்றர் அகலமும் கொண்ட சிலையின் தலைப்பாகம் ஒரு வகை மங்கலான வெள்ளி போன்ற உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது. விஞ்ஞான ரீதியாக இதன் உலோகத் தன்மையை அடையாளப்படுத்தும்வரை இது பற்றி விரிவாக எதையும் கூறமுடியாதிருக்கிறது.
ஆயினும் இந்த மனித தலையின் உருவ அமைப்பு ஐரோப்பிய நாட்டு மக்களுக்கோ அல்லது ஆசிய நாட்டு மக்களுக்கோ உரியதல்லதென்பதை உறுதியாகக் கூறமுடியும்.
பொதுவாக இச்சிற்பத்தில் காணப்படும் முன்தள்ளிக்கொண்டிருக்கும் தாடை, பின்நோக்கிய நெற்றி, சுருண்ட முடி, தடித்த உதடு, பின்பக்கம் அகண்ட தலை, நீண்ட களுத்து, அகன்ற துவாரமுள்ள காது என்பன ஆபிரிக்க கலைமரபுக்குரிய தனித்துவமான பண்பாகும். இதனால் அல்லைப்பிட்டியில் கிடைத்த இச்சிற்பத்தை ஆபிரிக்கா குறிப்பாக வடஆபிரிக்கா மக்களுக்குரியதெனக் கூறலாம்.
வரலாற்று தொடக்க காலத்தில் இருந்து வடஆபிரிக்காவில் உள்ள பப்பரவர் அல்லது மொரெரக்கன் சமூகத்துடன் வடஇலங்கை தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாண வைபவமாலை யாழ்ப்பாண அரசு காலத்தில் பப்பரவர் என்ற வணிக சமூகம் யாழ்ப்பாணம் வந்தது பற்றிக் கூறுகிறது.
சமஸ்கிருதத்தில் பப்பரதேசம் என்பது தமிழ் நிகண்டில் வடஆபிரிக்காவைக் குறிக்கிறது. இப்பப்பரவர் சமூகம் இஸ்லாமியர் அல்லாத சமூகம் என்பதை யாழ்ப்பாணவை பவமாலை வேறுபடுத்திக் காட்டுகிறது.
கி.பி.1790 க்கு உரிய ஒல்லாந்தர் கால யாழ்ப்பாணம் பற்றிய ஆவணமும் இஸ்லாமியரில் இருந்து இச்சமூகத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. வணிக நோக்கோடு யாழ்ப்பாணம் வந்த இச்சமூகம் காலப்போக்கில் இங்கேயே நிரந்தமாகக் குடியேறியதற்கான சான்றுகள் காணப்படுகின்றன.
உதாரணமாக தீவகத்தில் சாலைக்கு அருகில் உள்ள பப்பரபிட்டி, நயினாதீவில் உள்ள பப்பரவன்சல்லி முதலான இடப்பெயர்கள் இதற்குச் சான்றாகும். சில சந்தர்ப்பங்களில் நயினாதீவே பப்பரவத்தீவு என அழைக்கப்பட்டமைக்கு ஆதாரங்கள் உண்டு.
இச்சமூகம் சமகாலத்தில் இந்தியாவில் குஜராத், தமிழகத்தில் இராமேஸ்வரம் போன்ற இடங்களிலும் குடியேறியதற்குச் சான்றுகள் உண்டு. இவ்வாதாரங்கள் போத்துக்கேயர் வருகைக்கு முன்னரே தென்னாசியாவில் குறிப்பாக வட இலங்கைக்கு வணிக நோக்கோடு வடமேற்கு ஆபிரிக்காவில் இருந்து வந்த பப்பரவர் சமூகத்தில் சில, காலப்போக்கில் யாழ்ப்பாணத்திலேயே நிரந்தரமாகக் குடியேறினர் எனக் கருத இடமளிக்கிறது.
அதை மேலும் உறுதி செய்வதில் அல்லைப்பிட்டியில் கிடைத்த ஆபிரிக்கக் கலை மரபுச் சிற்பத்திற்கு முக்கிய இடமுண்டு.
சமீபகாலத் தொல்லியற் கண்டுபிடிப்புக்கள் மேற்காசியா, ஆபிரிக்கா மற்றும் தென்கிழக்காசியா,கிழக்காசிய நாடுகளுக்கும் இடையிலான பண்டைய கால வணிக உறவில் வடஇலங்கை அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத் தீபகற்பம் முக்கிய வணிகப் பரிமாற்று மையமாக இருந்ததை உறுதி செய்கின்றன.
இதற்கு அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வாய்வில் கிடைத்த 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மேற்காசிய நாடுகளுக்கு உரிய தொல்லியற் சின்னங்களைக் குறிப்பிடலாம்.
1980களில் அல்லலைப்பிட்டியில் ஜோன்காஸ்வெல் மேற்கொண்ட அகழ்வாய்வில் 10-11 நூற்றாண்டைச் சேர்ந்த சீன நாட்டு கடற்கலத்தின் உடைந்த பாகங்கள், இந்நாட்டுப் பீங்கான்கள், நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலைiயில் அங்கு வடஆபிரிக்கக் கலைமரபில் அமைந்த சிலையொன்று கிடைத்திருப்பது தொடர்ந்தும் அல்லைப்பிட்டியில் ஆய்வு மேற்கொள்ள எம்மைத் தூண்டியுள்ளன என வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment