ஒரு ஜப்பானியர் தன் மனைவி – குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் சென்றாராம். சில நாட்கள் கழித்து அவரிடம் இருந்து ஒரு கடிதம் வந்ததாம் மனைவிக்கு. கடிதத்தில் எழுதி இருந்தது இது தான் – “நான் வீட்டை விட்டு வெளியூர் வந்து சில நாட்கள் ஆகிவிட்டன. எனினும் நமது சமையலறையிலிருந்து சுவையான உணவு பதார்த்தங்கள் சமைக்கும் வாசனை வருகிறதே. நான் இல்லையென்றாலும் எல்லாம் நன்கு சமைத்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள் போல…”. படித்துப் பார்த்த மனைவிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அன்றிலிருந்து சமையல் செய்வதை விட்டாள். தானும் குழந்தைகளும் இருக்கும் ஏதாவது பழைய உணவினை, பழங்களை சாப்பிட்டு பசியாறினார்களாம்.
இன்னும் சில நாட்கள் கழித்து ஒரு கடிதம். “நான் அங்கில்லாவிட்டாலும், நீயும் குழந்தைகளும், சூப் குடிப்பதற்கு விலை உயர்ந்த வெள்ளிக் கிண்ணங்களையும், தேக்கரண்டிகளையும் பயன்படுத்துகிறீர்களாமே?” என்று எழுதி இருந்ததாம். அன்றிலிருந்து வெள்ளிக் கிண்ணங்களையும், தேக்கரண்டிகளையும் உள்ளே வைத்து விட்டு மரக்கிண்ணங்களையும், தேக்கரண்டிகளையும் பயன்படுத்த ஆரம்பித்தாளாம் அப் பெண்.
ஐந்தாறு நாட்கள் சென்றது. அடுத்த கடிதத்தில் என்ன இருக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு நம்மிடமும்.
மூன்றாவது கடிதமும் வந்தது. “என்ன இது, நான் உங்களுடன் இல்லையே என்ற கவலையே உங்களுக்கு இல்லையோ? இரவுகளில் விளக்குகள் எரிகின்றனவே நம் வீட்டில்?” அடடா என்ன இது சோதனை. விளக்குகளையும் அணைத்து விட்டு இருட்டிலே பொழுதினைக் கழிக்க ஆரம்பித்தனர் அந்தப் பெண்ணும் அவர் குழந்தைகளும். இன்னும் என்ன சோதனை வரப் போகிறதோ அந்தப் பெண்ணுக்கு.
அடுத்து வந்த கடிதம் தான், சவப்பெட்டியில் அறையப்பட்ட கடைசி ஆணி போல, கடைசிக் கடிதம். ”நான் உங்களுடன் இல்லையே என்ற கவலையே இல்லாது நீங்கள் நன்கு உறங்குகிறீர்களே. ஆழ்ந்த உறக்கத்தில் நீங்கள் விடும் மூச்சுச் சத்தம் இங்கு வரை கேட்கிறது. நான் இல்லாத போது கூட இந்த மூச்சு வருகிறதே உங்களுக்கு?”
இந்தக் கடிதம் கண்ட உடனேயே அந்தப்பெண், தன் குழந்தைகளையும் மாய்த்து, தன்னையும் மாய்த்துக் கொண்டதுடன் முடிகிறது கதை.
இந்தக் கடிதம் கண்ட உடனேயே அந்தப்பெண், தன் குழந்தைகளையும் மாய்த்து, தன்னையும் மாய்த்துக் கொண்டதுடன் முடிகிறது கதை.
என்ன ஒரு சோகம் கதையில். பாவம் அந்தப் பெண். கதை நடந்த வருடங்களில் ஜப்பானிலும் பெண்களுக்கு மதிப்பில்லாது தான் இருந்திருக்கிறது போல.
மேலும் கதைகள் தொடரும்...
மீண்டும் சந்திப்போம்…..
நட்புடன்
வெங்கட்.
No comments:
Post a Comment