"என்னங்க, இன்னைக்கி ஆபீஸ்ல என்ன நியூஸ்?"
"ஆபீஸ்ல என்ன... எப்பவும் போல தான், ஒண்ணுமில்ல'ம்மா"
"என்னைக்கு சொல்லி இருக்கீங்க இன்னிக்கி சொல்றதுக்கு... ஹ்ம்ம்..." என அவள் பெருமூச்சு விட
"அது..."
"சரி விடுங்க... எங்க ஆபீஸ்ல இன்னைக்கி புதுசா ஒரு பொண்ணு ஜாயின் பண்ணி இருக்கு. இப்ப தான் காலேஜ் முடிச்சுருக்கும் போல, செம ஸ்மார்ட்"
"அப்படியா?"
"ஆமா... பாக்கறதுக்கு அசப்புல எங்க அத்த பொண்ணு ரஞ்சனி மாதிரியே இருக்கு"
"அவ்ளோ கொடுமயாவா?" என அவன் சிரிக்க
"என்ன கிண்டலா? ரஞ்சனியும் நானும் சின்னதுலே இருந்தே எவ்ளோ க்ளோஸ் தெரியுமா? லீவுக்கு அத்தை வீட்டுக்கு போனா விடிய விடிய அரட்டை தான், வாயே மூட மாட்டோம்"
"இப்ப மட்டும் என்ன?" என மனதிற்குள் நினைத்து கொண்டான்
"ரஞ்சனியோட தம்பி ரமேஷ் இருக்கானே, அவன் செம வாலு சின்னதுல, ஒரு தடவ நானும் ரஞ்சனியும் மருதாணி அரைச்சு வெச்சுருந்தோம், இவன் எங்களுக்கு தெரியாம அதுல மொளகா பொடிய போட்டுட்டான் கொரங்கு. அது தெரியாம நாங்க ஆசை ஆசையா கைல காலுல எல்லாம் மருதாணி வெச்சோம். வெச்சு கொஞ்ச நேரத்துல எல்லாம் ஒரே எரிச்சல். அன்னைக்கி அத்தைகிட்ட செம அடி வாங்கினான் அவன்" என சொல்லி சிரித்தாள்
"ம்"
"நீங்க இப்படி எல்லாம் ஒண்ணும் ரகளை பண்ணினதில்லையா சின்னதுல?"
"பெருசா ஒண்ணும் சொல்லிக்கறா மாதிரி இல்ல"
"ம்... இன்னொருவாட்டி இப்படிதான் எங்க பேமிலி எல்லாம் சேந்து பழனிக்கு ட்ரிப் போய் இருந்தோம். அங்க மலை ஏறும் போது ஒரு செம காமடி" என தன் காமடியை நினைத்து தானே சிரித்து கொண்டாள் மாளவிகா
"ம்"
"எவ்ளோ இண்டரெஸ்ட்டா சொல்லிட்டு இருக்கேன், நீங்க சுவாரஷ்யமே இல்லாம ம் கொட்டறீங்க" என அவள் முறைக்க
"சொல்லு சொல்லு ரெம்ப ஆர்வமாத்தான் கேட்டுட்டு இருக்கேன்" என்றான் வழிய வரவழைத்து கொண்ட சிரிப்புடன்
உற்சாகமாகி "என் ரெண்டாவது அத்தையோட பொண்ணு ராதாவுக்கு கொரங்குன்னா ரெம்ப பயம்..."
"உன்னை பாத்த பின்னாடியுமா?" என மனதிற்குள் நினைத்து கொண்டான், சத்தமாய் சொல்லி சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ள விரும்பவில்லை
"என்ன மாயமோ தெரில, அங்க இருந்த கொரங்கு எல்லாமும் அவளையே வெரட்டுச்சு, இனம் இனத்தோட சேரும்னு சொல்லி அவளை செம ஓட்டு ஓட்டினோம். என் பக்கம் ஒண்ணு கூட வர்ல தெரியுமா?" என்றாள் பெருமையாய்
"அப்படியா? அது கூட உன்னை பாத்து பயந்திருக்கு பாரேன்" என அவன் உள் அர்த்தத்துடன் கூற
அவள் அதை புரிந்து கொள்ளாமல் "தேங்க்ஸ்" என்றாள் மகிழ்வாய், ஏதோ ஜனாதிபதி விருது வாங்கியது போல்
"போன மாசம் ரமேஷ் கல்யாணத்துல பாத்தப்ப கூட இதை சொல்லி ராதாவை ஓட்டினோம், ஹ்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம். அப்புறம் ராதாவோட அண்ணா ரவி இருக்கானே, எனக்கும் அவனுக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம் தான். எப்பவும் சண்டை போட்டுட்டே இருப்போம்" என்றாள் சிரிப்புடன்
"நீ யார் கூட தான் சண்டை போடாம இருந்தே" என மனதிற்குள் நினைத்து கொண்டான்
"ஐயையோ...மறந்தே போய்ட்டேங்க..." எனவும்
"என்ன? உன் மாமா பொண்ணு மஞ்சு கூட மெட்ராஸ் பீச்ல மணல் வீடு கட்டினது தானே...அதை நீ ஏற்கனவே மூணு வாட்டி சொல்லிட்டியே மாலு" என்றான் பாவமாய் முகத்தை வைத்தபடி
"ஐயோ அதில்லைங்க... எங்க சித்தி பொண்ணு சுதாவுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகி இருக்காம். சித்தி இன்னிக்கி போன் பண்ணி இருந்தாங்க, மாப்ளகிட்டயும் சொல்லிடுனு சொன்னாங்க"
"மாப்ளைக்கே இனி தான் சொல்லணுமா? அப்புறம் எப்படி கல்யாணம்?" என பிரதாப் புரியாமல் விழிக்க
"ஐயோ... அவங்க மாப்ளனு சொன்னது உங்கள"
"ச்சே ச்சே... நீ இருக்கும் போது நான் எப்படி இன்னொரு கல்யாணம்...அதெல்லாம் தப்பு மாலு..."
"ஓஹோ...அப்படி வேற ஒரு நெனப்பு இருக்கா..." என அவள் முறைக்க
"ஐயோ... நீ தான சொன்ன"
"சொல்றத ஒழுங்கா காதுல வாங்கினா தானே, அந்த லாப்டாப்பை மொதல்ல தூக்கி வீசணும். எங்க சித்திக்கு நீங்களும் மாப்ள முறை தானே, அந்த அர்த்ததுல சொன்னாங்க. போதுமா?"
"ஹ்ம்ம், நான் கூட ஒரு நிமிஷம் என்ன என்னமோ..." என பெருமூச்சு விட
"நெனப்பீங்க நெனப்பீங்க... அப்புறம் என் பிரெண்ட் கீதா இருக்காளே...ப்ச்... நான் சொல்றத கவனிக்காம எப்ப பாரு இந்த லாப்டாப் ஒண்ணு" என முறைக்கிறாள்
"இல்லம்மா... கேட்டுட்டு தான் இருக்கேன் சொல்லு... உன் பிரெண்ட் கீதாவுக்கு என்ன?" என்றான் பிரதாப் பொறுமையை இழுத்து பிடித்து
"கீதாவோட ஹஸ்பன்ட்'க்கு அவங்க கம்பெனில இருந்து சிங்கப்பூர் ட்ரிப் போயிட்டு வர்றதுக்கு டிக்கெட் தந்து இருக்காங்களாம்"
"ஓ... நல்ல விஷயம்"
"அப்புறம்..." என அவள் ஆரம்பிக்க
"மாலு, நான் ஒண்ணு கேப்பேன், நீ தப்பா நெனச்சுக்க மாட்டியே" என்றான் தயக்கமாய்
"என்ன?"
"இல்ல, நீ சொல்றதுக்கு 'ம்' போட்ட எனக்கே வாய் வலிக்குது, உனக்கு வாயே வலிக்காதா?" என்றான் பின்னால் வரப்போகும் விபரீதத்தை உணராமல்
ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் அவனை பார்த்தவள், "என்ன பண்றது, எங்க வீட்ல என்னை சூது வாது தெரியாம வளத்துட்டாங்க மனசுல எதையும் வெச்சுக்க தெரியாம பேசிடறேன். உங்க குடும்பம் மாதிரி, மனசுக்குள்ள ஆயிரம் வெச்சுக்கிட்டு பேசறதுக்கே காசு கேக்கற பழக்கம் எங்களுக்கு இல்ல. ஒண்ணு தெரியுமா உங்களுக்கு, அளவா பேசறவங்க எல்லாம் அறிவாளியும் இல்ல, வாய் மூடாம பேசறவங்க எல்லாம் வெட்டி ஆபிசர்களும் இல்ல" என்றபடி எழுந்து உள்ளே சென்றாள்
"என்ன சொன்னாலும் ஒரு பதில ரெடியா வெச்சுருக்காளே, ச்சே..." என தனக்கு தானே புலம்பி கொண்டிருந்தான் பிரதாப்
*******************
"என்ன டாக்டர் சொல்றீங்க?" என்றாள் மாளவிகா அதிர்ச்சியின் உச்சத்தில்
"கொஞ்சம் அளவா பேசுன்னா கேட்டாதானே, சொன்னா அதுக்கும் சேத்து எனக்கு பல்ப் தரமட்டும் தெரியும், இப்ப எங்க வந்து முடிஞ்சுருக்கு பாரு" என்றான் பிரதாப் கோபமாய்
"நான் என்ன..." என மாளவிகா குரலை உயர்த்த
"ஷ்... மிசஸ் மாளவிகா, ஜஸ்ட் காம் டௌன். இப்ப ஒண்ணும் ஆய்டல. உங்க வோகல் கார்ட்ல (Vocal Cord) ஏதோ இன்பெக்சன் காரணமா ஒரு சின்ன கிரேக்(crack) மாதிரி இருக்கு. பயப்பட ஒண்ணுமில்ல, ஒரு மாசம் நான் குடுக்கற மெடிசன்ஸ் எடுத்து நான் சொல்ற அட்வைஸ் பாலோ பண்ணினா கிரேக் சரி ஆய்டும்..."
"மண்டைல தான் கிராக்னு நெனச்சேன், தொண்டைலயுமா?" என பிரதாப் முணுமுணுக்க, மாளவிகா முறைத்தாள்
டாக்டர் தொடர்ந்தார் "ஒரு மாசத்துக்கு நீங்க முடிஞ்ச வரை லிக்விட் டயட் இல்லைனா நல்லா குழைவா செஞ்ச சாதம் தான் சாப்பிடணும், இந்த நிமிசத்துல இருந்து ஒரு மாசத்துக்கு நீங்க பேசவே கூடாது"
"ஐயோ..." என மாளவிகா அலற
"ப்ச்... இப்ப தானே சொன்னேன் பேசாதீங்கன்னு" என டாக்டர் கண்டிப்புடன் கூற, வாய் மீது கை வைத்து சரி என்பது போல் தலை அசைத்தாள் மாளவிகா. அதை நம்ப இயலாமல் பார்த்தான் பிரதாப்
"ஆஹா... இப்படி ஒரு ஜாக்பாட் அடிக்கும்னு நான் கனவுல கூட நினைக்கலையே" என மனதிற்குள் சந்தோசமாய் சிரித்து கொண்டான்
*******************
அதன் பின் வந்த ஒரு ஒரு நாளும் ஒரு சவாலாகவே அமைந்தது. முதல் இரண்டு நாட்கள் தான் பேச நினைப்பதை ஒரு பேப்பரில் எழுதி காண்பித்தாள் மாளவிகா
பின் அது சலித்து போக, அடுத்த இரண்டு நாட்கள் சைன் லேங்க்வேஜ் (கை அசைவால்) மூலம் சொல்ல முயன்றாள்
பின் அதுவும் வெறுத்து போக, அமைதியாய் எதுவும் செய்யாமல் அறைக்குள் அடைந்து கொண்டாள்
அன்று வேலன்டைன்ஸ் டே(Valentines Day). காலையில் கண் விழித்தவள் படுக்கையின் அருகில் இருந்த மேஜையில் ஒரு வாழ்த்து அட்டையை பார்த்ததும் ஆர்வமாய் பிரித்தாள்
அதில் பிரதாப் எழுதி இருந்தது....
"டியர் மாலு,
மொதல்ல உண்மைய சொல்லிடறேன், நீ ஒரு மாசம் பேசக் கூடாதுன்னு டாக்டர் சொன்னப்ப நான் கொஞ்சம் சந்தோசப்பட்டேன். இதை படிக்கறப்ப உனக்கு கோபம் வரும், இந்த கிரீடிங் கார்டை கிழிச்சு வீசலாம்னு நெனப்ப, என்னை கன்னா பின்னானு திட்டனும்னு கூட உனக்கு தோணும். அப்படி திட்டனாலும் பரவால்ல, உன் குரல் கேட்க மாட்டோமானு இருக்கு இப்போ எனக்கு
சிலருக்கு சினிமா பிடிக்கும், சிலருக்கு ஊர் சுத்த பிடிக்கும், சிலருக்கு படிக்க புடிக்கும், ஆனா உனக்கு பேச பிடிக்கும், இப்ப.... எனக்கு கேட்க பிடிக்கும்னு புரியுது, அதுக்கு காரணமும் நீ தான்...:)
மத்தவங்க சாதாரணமா சொல்ற ஒரு விசயத்த கூட நீ சொல்லி கேட்கும் போது அதுக்கு தனி அழகு வந்துடுதோனு தோணுது. சாக்லேட்டை பத்தி பேசினாலும் சாக்ரடீஸை பத்தி பேசினாலும் ஒரே மாதிரி அனுபவிச்சு ரசனயோட நீ பேசற அந்த அழகை நான் வேற யார்கிட்டயும் பாத்ததில்ல
மழலையின் பேச்சை போல மனைவியின் பேச்சிலும் ஒரு தனி அழகு இருக்குனு அதை இழந்த இந்த ஒரு வாரத்துல நான் உணர்ந்துட்டேன்
Yes, I confess now, I miss listening to your stories, I miss our sweet nothings my love. So, whether it is your childhood stories or complaints or just non-stop nonsense, I don't care, I just want to hear you. Get well soon and bring back the joy in my life. Happy Valentines Day
I love you...
Yours,
Pratap"
படித்து முடித்து கண்ணில் நீர் வழிய நிமிர்ந்தவள், அறையின் வாயிலில் பிரதாப் நிற்பதை பார்த்ததும், விசும்பலுடன் ஓடி சென்று கட்டி கொண்டாள்
"ஐ லவ் யு மாலு" என நெகிழ்வுடன் அவளை அணைத்து கொண்டான் பிரதாப்
(முற்றும்)
:)))
No comments:
Post a Comment