புலம் பெயர்தல்!
-முனைவர் சி. சேதுராமன்.
அன்று தொட்டு இன்று வரை புலம் பெயர்தல் என்பது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. புலம் என்பதற்கு இடம் எனப் பொருள் கொண்டு இடம் பெயர்தல் என்று இதனைக் குறிப்பிடலாம். இடம் பெயர்தல் என்பது மனிதன் தோன்றிய காலத்திலிருந்து நடந்து வரக்கூடிய ஒன்றாகும். நாகரிகமற்ற காலத்தில் மனிதன் நாடோடியாக ஒவ்வொரு இடமாகப் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்தான்.
புலம்பெயர்தலும் இயற்கையும்
மனிதன் தனது தொடக்கக் காலத்தில் இருந்தே கூட்டம் கூட்டமாகப் புலம் பெயர்ந்து வாழ்தலைக் கடைப்பிடித்து வந்தான். பறவைகள், விலங்குகள் போன்றவை உணவிற்காகவும், நீருக்காகவும், வாழிடங்களுக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் இயற்கையாக இடம் பெயர்தல் உண்டு. இயற்கையே இதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது எனலாம்.
வெளிநாட்டுப் பறவைகள் வேடந்தாங்கலுக்குப் பறந்து வந்து இங்கு தங்கி தனது இனத்தை விருத்தி செய்து கொண்டு மீண்டும் அது முடிந்தவுடன் தங்களது இருப்பிடங்களுக்குச் செல்கின்றன.
புலம்பெயரக் கூடியவை பெரும்பாலும் மீண்டும் தங்களது பூர்வீக இருப்பிடத்திற்குத் திரும்புவதுண்டு. இல்லையெனில் புதிதாகத் தாங்கள் வந்த இடத்திலேயே தங்கி விடுவதும் உண்டு. சில விலங்குகள் மற்றும் பறவையினங்கள் ஒவ்வொரு இடமாகப் புலம் பெயர்ந்து கொண்டு செல்வதுமுண்டு.
தொல்காப்பியம்-சங்க இலக்கியம் இவற்றில் புலம்பெயர்தல்
சங்க காலத்திலும் இப்புலம் பெயர்தல் என்பது அதகமாக நிகழ்ந்திருப்பதற்குச் சான்றுகள் உள்ளன. தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள,
‘‘திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே”
என்ற நூற்பாவிற்கு உரை எழுதும் உரையாசிரியர்கள் ஒரு நிலத்திலுள்ளவை மற்றொரு நிலத்திற்கு வந்து திரியினும் அதனை நீக்க மாட்டார்கள்” என்று உரை எழுதுகின்றனர். இங்கு திரிதல் என்பதற்கு உலவி வருதல் என்று பொருள் கொள்ளலாம். வழக்கத்தில் ஒருவன் வீட்டில் தங்காது வெளியிடங்களுக்குச் சென்று வந்தால் அவனைப் பார்த்து வீட்டில் உள்ள பெரியோர்கள், ‘‘எங்கே போய் திரிந்து விட்டு வருகின்றாய்?“ என்று கேட்பர். இங்கு திரிதல் இடம் விட்டு இடம் சென்று வருதல் என்ற பொருளைக் குறிக்கின்றது. திணை மயக்கம் என்பது, மலையில் வசிக்கும் (குறிஞ்சி) பறவைகளோ, விலங்குகளோ, காடு, வயல் சார்ந்த இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று உறைந்து (தங்கி) வருவதனைக் குறிக்கும். இதனைப் புலம்பெயர்தல் என்று கூறலாம்.
நிலம் என்பதை இடம் எனக் கொண்டால் மலை (குறிஞ்சி), காடு (முல்லை), வயல் (மருதம்), கடல்(நெய்தல்), மணல் சார்ந்த இடம் (பாலை) என ஐந்நிலமும் ஐந்து வகையான நிலப்பகுதிகளைக் (இடங்களாக) குறிக்கும் எனலாம். முல்லை நில மக்கள் பால், தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பாற்பொருள்களை மருத நிலத்திற்கு எடுத்துச் சென்று விற்று வந்தனர். கடற்புரத்தில் வசித்த பரதவர், உமணர் போன்றோர் மீன், உப்பு ஆகியவற்றை மருத நிலத்திற்குக் கொண்டு சென்று உப்பையும், மீனையும் கொடுத்து விட்டு நெல்லையும், பிற உணவுப் பொருள்களையும் பெற்று வந்தனர். எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
பட்டினப்பாலை இத்தகு செய்திகளை விரிவாக எடுத்துரைக்கின்றது. இவை பெரும்பாலும் வணிகத்திற்காகப் புலம் பெயர்தலைக் குறிக்கின்றது. இங்ஙனம் வணிகத்திற்காகப் புலம் பெயர்தல் என்பது தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நிகழ்வதுண்டு.
புலம்பெயர்தல் வகைகளும் அதற்கான காரணங்களும்
புலம்பெயர்தலை தற்காலிமாகப் புலம் பெயர்தல், நிரந்தரமாக இடம் பெயர்தல் என்று இரு வகையாகப் பகுக்கலாம். தற்காலிகமாக இடம் பெயர்தல் என்பது தாங்கள் கொண்டு சென்ற பொருள்களை ஓரிரு நாள்களில் விற்று விட்டு மீண்டும் தங்களிருப்பிடத்திற்கு வந்து விடுதலைக் குறிக்கும். சிலர் வணிகத்தின் பொருட்டுத் தங்களிருப்பிடத்தை விட்டு நெடுந்தொலைவு சென்று அங்கேயே தங்கி விடுவதும் உண்டு. இத்தகைய புலம்பெயர்தலைப் “பிரிவு” பற்றிக் குறிப்பிடும் போது தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.
“ஓதல் பகையே தூதிவை பிரிவே”
என கல்விக்காகவும், பகைப் புலம் நோக்கிப் படையெடுக்கும் காரணமாகவும், பொருள் காரணமாகவும், தூதுவராகச் செல்வதற்காகவும் (பணி காரணமாக இடம்பெயர்தல்) புலம் பெயர்தல் உண்டு. இத்தகைய புலப்பெயர்வுகள் தற்காலிகமானவையாகும். அவ்வாறு புலம் பெயர்ந்து சென்றோர் தாங்கள் மேற்கொண்ட பணி முற்றுப் பெற்றவுடன் மீளத் தம்முடைய இருப்பிடத்திற்குத் திரும்பி வந்து விடுவர். போர் காரணமாகப் புலம் பெயர்ந்து சென்று மீண்டதை முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை போன்றவை குறிப்பிடுகின்றன.
சங்க காலத்தில் தமிழகம் சேர, சோழ, பாண்டிய நாடுகளாகப் பிரிக்கப்பட்டு மூவேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது. பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையார் நட்பின் காரணமாகத் தூண்டப்பட்டுப் புலம் பெயர்ந்து, சோழநாடு வந்து தனது நண்பன் கோப்பெருஞ்சோழன் இறந்த இடத்திலேயே இறந்தார். இஃது நிரந்தரப் புலம் பெயர்தலை சார்ந்ததாகும். குறிஞ்சி நிலமாகிய மலை நாட்டில் நண்பர் பாரியுடன் வசித்து வந்த கபிலர் தனது நண்பர் மூவேந்தர்களது சூழ்ச்சியினால் கொல்லப்பட்டவுடன் பரம்பு மலையை விட்டுப் புலம் பெயர்ந்தார். பாரியின் மகள்களை மணமுடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் பரம்புமலைக்கு வந்து அங்கு வடக்கிருந்து உயிர் துறந்தார். தனது நண்பன் தன்னிடம் கொடுத்த கடமையை நிறைவேற்றி விட்டு மீண்டும் பரம்பு மலைக்கு வந்து அங்கு வடக்கிருந்து உயிர் துறந்ததைப் புறநானூறு தெளிவுறுத்துகின்றது. கபிலர் புலம் பெயர்ந்தது தற்காலிகப் புலம் பெயர்தலைச் சேர்ந்ததாகும்.
இங்ஙனம் புறநானூறு பல்வேறு வகையாக இப்புலம்பெயர்தலை எடுத்துரைக்கின்றது.
ஆற்றுப்படை நூல்கள் அனைத்தும் புலம் பெயர் மக்களைப் பற்றியதாக அமைந்திலங்குகின்றது. இவை ஒரு நிலத்தில் உள்ளோர் தங்களுக்கு அருகில் உள்ள நிலத்திற்குச் சென்று வாழ்ந்ததைக் குறிப்பிடுகின்றது.
“புலம்பெயர் மாக்கள் கலந்தினிது உறையும்”
என்று வெளிநாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்து புகாரில் வாழ்ந்தவர்களைப் பற்றி பட்டினப்பாலை எடுத்துரைக்கின்றது.
“பதியெழு அறியாப் பழங்குடி கெழீஇய” (சிலம்பு)
எனப் புலம் பெயராது ஒரே இடத்தில் மக்கள் வாழ்ந்த செய்தியையும் செவ்வியல் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்களின் வறுமையைப் போக்குவதற்குப் புலவர்கள், பாணர்கள், கூத்தர்கள், பொருநர், விறலியர் ஆகியோர் தங்களின் வாழிடத்தை விட்டு வள்ளல்கள் இருக்கும் இடத்திற்கு இடம் பெயர்ந்து சென்றதை ஆற்றுப்படை இலக்கியங்கள் தெளிவுறுத்துகின்றன. அங்ஙனம் சென்றவர்கள் பரிசில்களைப் பெற்று மீளத் தாம் வாழ்ந்த பகுதிகளுக்குச் சென்று வறுமையில் வாடியோரோடு தங்கள் பெற்ற செல்வங்களைப் பகிர்ந்து கொண்டு வாழ்ந்தனர்.
தலைவன் தான் விரும்பிய தலைவியை மணப்பதற்குரிய பொருளைத் தேடி வேறு புலத்திற்கு இடம்பெயர்ந்து சென்று பொருளீட்டி மீண்டு வந்து தலைவியை மணந்து கொண்டதையும், தன் மனையையும், தன்னைச் சேர்ந்தோரையும் வளமாக வாழ வைக்கக் கருதிய தலைவன் தனது தலைவியைப் பிரிந்து பொருளீட்டப் புலம் பெயர்ந்து சென்றதையும் அக இலக்கியங்கள் குறிப்பிடுவது நோக்கத் தக்கதாகும். வணிகத்திற்காகத் தமிழர்கள் புலம் பெயர்ந்து சென்றதையும் இலக்கியங்கள் நன்கு புலப்படுத்துகின்றன.
காப்பியங்களில் புலம்பெயர்தல்
கண்ணகியுடன் புகாரை விட்டு நீங்கி மதுரைக்குக் கோவலன் சென்றது பொருளீட்டும் வகையில் அமைந்தது புலப்பெயர்வு நிகழ்வாகும். கணவனைப் பறிகொடுத்து விட்டு மதுரையைத் தீக்கிரையாக்கி விட்டு மனமொடிந்த நிலையில் பாண்டிய நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து சேரநாட்டிற்குச் சென்று கண்ணகி அங்கு தெய்வமாவதைச் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது.
மணிமேகலைக் காப்பியம் பிறருடைய பசிப்பிணியைப் போக்கிட ஆபுத்திரன், மணிமேகலை ஆகியோர் புலம் பெயர்ந்து சென்றதை விவரிக்கின்றது. மேலும் இதே காப்பியம் சாதுவன் வணிகத்தின் பொருட்டுப் புகாரிலிருந்து புலம் பெயர்ந்து சென்று மீளவும் பொருளுடன் புகாருக்கு வந்த தற்காலிகப் புலம்பெயர்தலை விவரிக்கின்றது.
சீவகசிந்தாமணியில் தனது குறிக்கோளை அடைவதற்காகச் சீவகன் ஒவ்வொரு நாடாகப் புலம் பெயர்ந்து சென்று மீண்டும் தனது நாட்டிற்கு வந்து பகை முடித்து அரசனாகின்றான். சீவகனது புலம் பெயர்வு நிகழ்வு தற்காலிகமானதும், காரிய வெற்றியைக் குறித்துமானதுமாகும்.
சங்க இலக்கியங்களும், காப்பிய இலக்கியங்களும் கூறக்கூடிய புலம் பெயர்தல் பொருளீட்டுதல், நாடுகாவல், பகை முடித்தல் உள்ளிட்ட தற்காலிகப் புலம் பெயர்தலாகும். சிற்றிலக்கியங்களுள் குறவஞ்சி இலக்கியங்ள் குறி சொல்லும் குறத்தி குறிசொல்லும் தன் திறனை வைத்துப் பல நாடுகளுக்கும் தன்னிருப்பிடத்தை விட்டுப் புலம் பெயர்ந்து சென்று பல்வேறு பரிசுப் பொருள்களைப் பெற்று மீண்டும் தன் இருப்பிடத்திற்கு வந்த்தை எடுத்துரைக்கின்றன.
புலம்பெயர் இலக்கியங்கள்
இன்றைய நிலையில் இலக்கியங்கள் கூறும் புலம்பெயர்தலுக்கான காரணங்கள் மிகுந்திருப்பினும், வேறு சில புதிய காரணங்களும் இதில் சேர்ந்துள்ளன. பொருளீட்டல், வேலை, கல்வி, மருத்துவம், சாதீயப் பூசல், வறுமை, வேலையின்மை, உள்நாட்டுப் போர், அயல்நாட்டாரின் படையெடுப்பு, அரசியல் ஆகிய காரணங்கள் புதிதாகப் புலம் பெயர்தலுக்குரியனவாக விளங்குகின்றன. இருப்பினும் உள்நாட்டுப் போர் காரணமாகவும், மனித உரிமை மீறல்களின் காரணமாகவும் மக்கள் தங்களது வாழிடங்களை விட்டு அயல்நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்று அங்கேயே நிரந்தரமாக வாழத் தொடங்கி விடுகின்றனர்.
அதுபோல பொருளீட்டுவதற்காகப் புலம்பெயர்ந்தோரும் தாம் சென்ற நாடுகளிலேயே குடியுரிமை பெற்று நிரந்தராமாகத் தங்கி வாழ்கின்றனர். இவ்வாறு வாழ்வோர் தங்களது பண்பாட்டை மறவாது அதனைப் பின்பற்றி வாழ்கின்றனர். இவ்வாறு புலம் பெயர்ந்து வாழ்வோர் தங்களது நிலையையும், தங்களது தாயகத்தின் நினைவுகளையம், தங்களது கனவுகளையும், தாங்கள் புலம் பெயர்ந்து சென்ற போது அடைந்த துயரங்களையும், புலம் பெயர்ந்து வாழும் நாட்டில் தங்களது வாழ்க்கை நிலையையும் குறித்து பல்வேறு விதமான இலக்கியங்களைப் படைக்கின்றனர். இத்தகைய இலக்கியங்களே புலம் பெயர்ந்தோர் படைத்த இலக்கியங்களாகப் பரிணமிக்கின்றன.
ஈழத் தமிழர்களின் இலக்கியங்களும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, மொரீசியஸ் உள்ளிட்ட பல நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள் படைக்கின்ற இலக்கியங்கள் அனைத்தும் புலம் பெயர் இலக்கியங்களாக விளங்கி அவை புதியதொரு இலக்கிய வரலாறாக அமைந்திலங்குகின்றன எனலாம்.
No comments:
Post a Comment