பழக்க வேஷம்
பறக்கும் காற்றாடியை கீழே இறக்கியாகி விட்டது. நூற்கண்டைச் சுற்றுகிறான் ஒரு சிறுவன். உருண்டை கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி வருகிறது. "சட்"டெனக் கையிலிருந்து நழுவி, கீழே விழுந்து உருண்டு செல்கிறது. சுற்றப்பட்ட நூல் கொஞ்சம் பிரிந்து விடுகிறது. " ஹும்.......மீண்டும் சுற்றவேண்டும்..." என்னும் அலுப்பு வருகிறது அவனுக்கு.
ஒரு பழக்கத்தை ஏற்படுத்துவதோ, விடுவதோ அல்லது ஒரு மாற்றுப் பழக்கத்தை உருவாக்குவதோ சற்றுக் கடினமான விஷயந்தான். ஆனால் முடியவே முடியாத காரியம் அல்ல. 19ஆம் நூற்றாண்டில் William James என்னும் உளவியல் அறிஞர் இதற்கு ஒரு உபாயம் சொல்கிறார். 21 நாள் பத்தியம் அது. ( ஒரு சிலர் இதை 66 நாட்கள் என்றும் கூறுகின்றனர் )
ஒரு புதிய பழக்கத்தை உருவாக்க முதலில் அதை 21 நாட்கள் தொடர்ந்து செய்யுங்கள். எந்த நாளும் விதி விலக்கு கிடையாது. இடைவெளி இல்லாமல் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அது நம் நரம்புகளில் குடிகொண்டு விடும். பின்னர் நம்மை விட்டு விலகாது.
ஆனால், அதை அமல் படுத்த, கிடைக்கும் முதல் வாய்ப்பையே பயன்படுத்திவிட வேண்டும். தள்ளிப் போட்டால் சுருதி குறைந்து போகும். .Stimuli எனப்படும் தூண்டும் உணர்வை முழுமையாக்க வேண்டும். அப்போதுதான் reflex எனப்படும் எதிர்விளைவு நம்முள் ஊன்றி நிற்கும்.
பழக்கம் சம்பந்தப்பட்ட அறிமுகமும் புரிதலும் பெரும்பாலும் ஒருதலைப் பட்சமாகவே இருக்கிறது. நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், தீய பழக்கத்தைப் பற்றிக் குறிப்பிடும் பொழுதோ அரக்கன், பேய் என்று அடைமொழி தந்து விடுவார்கள்.
இது உண்மையே எனினும், தீய பழக்கத்தை வெல்ல நினைக்கும் நமக்கு, அதற்கு இணை இல்லாத எதிரியாக நம்மைக் கருதும் வாய்ப்பு உண்டு. பழக்கம் என்ற விஷயத்தில், நல்லது தீயது இரண்டுமே ஒரே பாதையில்தான் பயணிக்கின்றன. தூண்டல் / எதிர்வினை பொதுவானது.
நாம் அடிமையாகி விட்ட ஒரு தீய பழக்கத்தை, மனமானது ஆசையோடு ஆலிங்கனம் செய்து கொள்கிறது. ஆனால், அதை விடவேண்டும் என்னும் முயற்சியில் அரவணைப்பு தானாக சுரப்பதில்லை. முனைந்து செய்ய வேண்டியுள்ளது. 21 நாட்களுக்குப் பின் தூ / எ தானாக உருவாகிறது. இதுதான் ரகசியம்.
ஒரு செயல், பழக்கம் என ஆகும் வரை, அதை, பழக்கம் போல "பாவித்து"ச் செய்ய வேண்டும். அந்த முகமூடியை, வேஷத்தை நாம் போட்டுக் கொள்ள வேண்டும்..... முதலில் பழக்க வேஷம்.... பின்னர் அதுவே நம் இயல்பாகி ( second nature ) விடும்.
காலையில் கடிகாரத்தின் " விழிப்பு மணி " அடிக்கிறது. நாம் பொருத்தி வைத்த நேரம்தான். ஆனால், அதன் தலையில் தட்டி விட்டு, நாம் மீண்டும் உறங்கச் சென்றால் நமது தூண்டும் சக்தி வலிமையற்று இருக்கிறது என்று பொருள். வைராக் கியத்தைத் திடப்படுத்தினால் விழிப்பும் வரும்.... வாழ்க்கையில் விடியலும் வரும் !!
ரசித்ததும் புசித்ததும் |
No comments:
Post a Comment