Search This Blog

Tuesday, June 20, 2017

சரபேசுவரர் சிற்பங்கள்

எட்டுக் கால்களைக் கொண்ட விலங்கொன்று மேற்குத்தொடர்ச்சி மலைகளில் வாழ்வது உங்களுக்குத் தெரியுமா? இதை நம் சங்க இலக்கியமும் பதிவு செய்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? இச்செய்தியை அறிய நாம் புராணத்திருந்து தொடங்கவேண்டும். மேற்குத்தொடர்ச்சி மலைவாழ் உயிரினத்துக்கும் புராணத்துக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? தொடர்பை உருவாக்கி வைத்துள்ளார்களே, என்ன செய்வது?

இரணியன் பிரகலாதன் கதையை நாம் அறிவோம். இரணியன் இறை மறுப்பாளர். அவருடைய மகன் பிரகலாதனோ திருமால் பக்தன். கடவுள் எங்கே இருக்கிறார் என்கிற இரணியனின் கேள்விக்கு அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் எனப் பிரகலாதன் பதில் சொல்ல இந்தத் தூணில் இருக்கிறாரா எனக்கேட்டு இரணியன் ஒரு தூணைப் பிளக்க அதிலிருந்து நரசிம்மம் வெளிப்பட்டு இரண்யன் கொல்லப்பட்டார் என்பது வைணவத்திலுள்ள புராணக் கதை.
இதைப் பின்தொடர்கிறது சைவப் புராணக்கதை. இரணியணைக் கொன்ற நரசிம்மர் சினம் அடங்காது போகவே அவரை ஆற்றுப்படுத்த, சிவன் எட்டுக்கால்கள் கொண்ட சிம்புள் பறவை உருவம் எடுக்கிறார். இது வடமொழியில் சரபம் எனப்படுகிறது. இவ்வுருவம் எடுத்ததும் சிவன் நரசிம்மரின் தோலை உரித்து ஆடையாக உடுத்திச் சினத்தை அடக்கியதால் சரபேஸ்வரர் என்கிற பெயரைப் பெறுகிறார். ஆனால் இக்கதை வைணவத்தைத் தாழ்த்த சைவ சமயத்தினர் உருவாக்கியக் கட்டுக்கதை என்பது வைணவர்களின் குற்றச்சாட்டு. இது எப்படியோ போகட்டும். சரபேசுவரர் சிற்பங்களைப் பார்ப்போம்.

சரபேசுவரர் சிற்பங்கள் தமிழகக் கோயில்களில் பிற்காலச் சோழர் காலத்திலிருந்தே தொடங்குகின்றன. வடநாடுகளை வென்ற சோழர்கள் இதை அங்கிருந்து கொண்டு வந்திருக்கலாம். இதை வழிப்பட்டால் எதிரிகள் அழிந்துப் போவர் என்பது நம்பிக்கை. இந்நம்பிக்கையில்தான் மேளாள் முதல்வர் ஜெயலலிதா திருபுவனம் கோவிலில் ‘சத்ருசம்கார’ யாகம் நடத்தினார். தமிழகத்தில் நாச்சியார்கோவில் அருகேயுள்ள துக்காச்சி எனும் ஊரிலுள்ள ஆபத்சகாயேசுவரர் கோயிலில்தான் முதலில் இச்சிலை நிறுவப்பட்டுள்ளது. நிறுவியவர் விக்கிரமச் சோழன் என்கிறார்கள்.
சரபேஸ்வரர் பறவை, மனிதர், விலங்கு ஆகிய மூன்றும் கலந்ததொரு ஆற்றல் மிகுந்த உருவம் என்று வடமொழி நூல்கள் கூறுகின்றன. மகாபாரதத்தில் புலி, யானை, சிங்கம் முதலியவற்றைக் கொன்றுண்ணும் விலங்காகச் சரபம் சொல்லப்பட்டிருக்கிறது. சிற்பங்களில் சிங்கமுகமும் இடுப்புவரை நான்கு கைகளைக் கொண்ட மனித உடலும் அதற்கிரு இறக்கைகளும் கொண்டதாக இது இருக்கிறது. இடுப்புக்கு கீழே நீண்ட வாலுடன் கூடிய ஒரு விலங்கின் உடல்.
ஆனால் இப்படியொரு விலங்கு நம் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் வாழ்ந்ததாகவும் அதை நம் சங்க இலக்கியம் பதிவு செய்திருப்பதாகவும் அன்பர் ஒருவர் கூறியபோது அதிர்ச்சி அடைந்தேன். எட்டு கால்களுள்ள ஓர் உயிரினத்தை உலகின் எந்தவொரு இயற்கையலாளர்களும் இதுவரை கண்டதில்லை. ஆனால் இக்கற்பனை உருவம் தமிழ்நிலத்தைச் சார்ந்தது என்கிற பழிச்சொல்லைத்தான் தாங்க முடியவில்லை. உயிரினங்கள் குறித்து நுண்மான் நுழைப்புலத்துடன் விவரிக்கும் நம் இலக்கியத்தில் இப்படியொரு அபத்தம் நிகழ வாய்ப்பில்லை. பாலையும் நீரையும் அன்னம் தனித்தனியே பிரிக்கும் என்பது போன்ற ஒருசில மிகை கற்பனைகள் இருக்கிறதே தவிர, புதியதொரு உயிரினத்தையே உருவாக்கி அது உலாவ விடாது என்பது என் நம்பிக்கை.
ஆனால் அன்பர் தமிழில் புலமை வாய்ந்தவர். எனவே அவரிடமே விளக்கம் கேட்டேன். அவர் இலக்கியங்களில் அது 'எண் கால் புள்' என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். எனக்கு அன்று உடனே விளங்கவில்லை. ஆனாலும் அன்பருக்கு தமிழ்மேலுள்ள பற்றைவிடச் சைவ சமயத்தின் மேலுள்ள பற்று அதிகமென்பதால் எனக்குள் ஓர் உறுத்தல் இருந்துக்கொண்டே இருந்தது. பி.எல் சாமி அவர்களின் சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம் என்கிற நூலைப் படித்தபோது இவ்வுறுத்தல் தீர்ந்தது.
மீமிசைக் கொண்ட கவர் பரிக் கொடுந் தாள்
வரை வாழ் வருடை வன் தலை மாத் தகர்
- மலைபடுகடாம் (502 - 503)

இவ்வரிக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் வருடை என்ற சொல்லுக்கு 'முதுகிடத்தே கொண்ட நிலத்தைக் கைக்கொள்ளும் செலவினையுடைய, வளைந்த காலையுடைய வரையிடத்தே வாழும் எண்கால் வருடையின் வலிய தலையினையுடைய பெரிய கிடாய்' என்றெல்லாம் சுற்றி வளைத்துப் பொருள் கூறியுள்ளார். அதாவது 'வரை வாழ் வருடை' என்கிற மலைவாழ் வருடைக்கு மேலும் நான்கு கால்களைக் கூட்டி எட்டுக்கால்களை உடைய விலங்காக மாற்றிவிடுகிறார்.
இவர் மீது மட்டும் குற்றமில்லை. நிகண்டுகளில் எண்காற் புள்ளென்பது 'வருடை' எனக் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார் பி.எல்.சாமி. சேந்தன் திவாகரம், பிங்கலந்தை ஆகிய நிகண்டுகள் 'வருடை சரபம் வரை யாடாகும்' என்று கூறியுள்ளது என்கிறார் அவர். உண்மையில் இப்பாடல் வரிகள் வருடை என்கிற விலங்கின் நடத்தையைக் (behaviour) குறித்த அறிவியல் செய்தியாகும். மீமிசை என்பது உயர்ந்த மலைப்பகுதி. இம்மலையில் வாழும் விலங்குதான் வருடை. இது செல்லும் செங்குத்தானச் சரிவில் மனிதர் நடக்க முடியாது. ஆனால் வருடை ஓர் உச்சியிலிருந்து வேறொரு உச்சிக்கு தாவும். அப்படித் தாவுகையில் சறுக்கி கீழே வீழாது. ஏனெனில் அதன் கால்கள் பாறையை வலுவாகப் பிடித்துக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இதைதான் மேற்கண்ட பாடல் வரிகள் விளக்குகின்றன. ஆனா இதில் எட்டுக்கால்கள் எங்கிருந்து முளைத்தன என்றுதான் தெரியவில்லை.
பின்பு இது முளைத்த இடத்தையும் கண்டுப்பிடிக்கிறார் பி.எல்.சாமி. 'வானாடும் பரியாயும் அரிணமாயும் வண்கேழற் களிறாயும் எண்காற் புள்மான் தானாயும்' என்கிற நீலகேசி பாடல் வரியைக் குறிப்பிட்டு இதில்தான் 'எண்காற் புள்மான்' என்றொரு பறவையும் விலங்கும் கலந்து வரும் ஓர் உயிர்வகை வருவதாகக் குறிப்பிட்டு அய்யத்தைத் தீர்க்கிறார்.
'வருடை' என்பது தற்காலத்தில் 'வரையாடு' என்று அழைக்கப்படுகிறது. Nilgris Tahr என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இதுதான் தமிழகத்தின் மாநில விலங்கு. நல்லவேளை! தமிழ்நாட்டின் மாநில விலங்கு ‘வரையாடு’ இல்லை அது ‘சரபம்’தான் என்று மாற்றாமல் விட்டீர்களே, அதுவரைக்கும் நன்றி!

No comments:

Post a Comment