Search This Blog

Sunday, March 23, 2014

இதய மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்பவர்களுக்கு செயற்கை இதயம் ரெடி:

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் செயற்கை உறுப்புகளைப் பொருத்தும் முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றின் உச்சகட்ட வளர்ச்சியாக, இதயம் செயலிழந்து, இதய மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்பவர்களுக்கு மாற்று இதயம் கிடைக்கும் வரை உயிரைப் 'பிடித்து' வைக்க செயற்கை இதயத்தைப் பொருத்தும் அறுவை சிகிச்சையும் தற்போது பிரசித்தமாகி வருகிறது. சமீபத்தில் பிரான்சில் 'கார்மட்' எனும் உயிரி மருந்தியல் துறை நிறுவனம் புதிய செயற்கை இதயத்தை வடிவமைத்து சாதனை புரிந்துள்ளது.
மாரடைப்பு வந்தவரின் இதயத்தில் எல்லா தமனி ரத்தக் குழாய்களும் அடைபட்டு ஆஞ்சியோ பிளாஸ்டி, பைபாஸ் சிகிச்சை எதுவும் பலனளிக்காமல் போனால், அவருக்குச் செயற்கை இதயத்தைப் பொருத்தலாம். இதயத்தின் கீழறைகள் இரண்டும் மிகவும் பாதிக்கப்பட்டு, மகா தமனிக்குள்ளும், நுரையீரல் தமனிக்குள்ளும் ரத்தத்தைச் செலுத்த முடியாத அளவுக்கு இதயம் செயலிழந்து போனாலும் இதைப் பொருத்தலாம். இதய இடைச் சுவர்களில் துளை விழுந்து அல்லது இதயத்தில் உள்ள எல்லா வால்வுகளும் பழுதடைந்து, இதயம் பலூன்போல் விரிந்துவிட்டால் செயற்கை இதயம் பயன்படும்.
இப்படிப் பலருக்கும் பயன் தருகின்ற செயற்கை இதயத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சி 50 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள்தான் இதில் முன்னோடிகள். இந்த மையத்தைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் ஜார்விக் என்பவர் 1982ல் வடிவமைத்த 'ஜார்விக் & 7' (Jarvik 7) எனும் செயற்கை இதயம், மருத்துவ உலகில் மிகவும் பிரபலம்.
இது பாலியுரேத்தேன் எனும் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டது. ஒரு நெல்லிக்காய் அளவு பேட்டரியில் இயங்குகின்ற 'ஜார்விக் &7' கருவியை நோயாளி யின் பழுதடைந்த இதயத்தோடு பொருத்தி விடுகிறார்கள். இதில் 2 பலூன்கள் இதயத்தை ஒட்டி யிருக்கும். ஒரு சிறிய குழாய் மூலம் பலூனுக்குள் காற்று செல்கிறது. அக்காற்று தருகின்ற அழுத்தத்தில் பலூன்கள் விரிந்து சுருங்கும்போது இதயமும் இயங்குகிறது. பேட்டரி சார்ஜ் குறைந்துபோன காரை 4 பேர் பின்பக்கத்திலிருந்து தள்ளிவிட்டு நகரச் செய்வதைப் போலத்தான் இதுவும்.
இதைப் பயன்படுத்துவதில் பல சிரமங்கள் இருந்தன. இதன் பேட்டரி இணைந்த கருவி ஒரு பெரிய கேமரா அளவிற்கு இருக்கும். இதை இடுப்பில் எந்நேரமும் சுமந்து கொண்டிருப்பது நோயாளிகளுக்குச் சிரமத்தைத் தந்தது. இது காற்றைச் செலுத்தும்போது ரத்தம் உறைந்து போனது. இது தருகின்ற காற்றழுத்தம் நுரையீரல்களின் செயல்பாட்டைத் தடுத்தது. இதன் செயற்கை வேதிப்பொருள்களை உடல் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, இது அதிகபட்சமாக 6 மாதங்களே செயல்பட்டது. ஆகையால், இதைவிட சிறந்த கருவியைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் முடுக்கிவிடப்பட்டனர்.
இதன் பலனாக போனிக்ஸ்&7 (Phoenix 7), அபியோகோர் (AbioCor), சின்கார்டியா (SynCardia) என்று பல செயற்கை இதயங்கள் செயலுக்கு வந்தன. இவை டைட்டானியம் மற்றும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை. இதயத்தின் வெளிப்பக்கத்திலிருந்து 'ஜார்விக்&7' இயங்கியது என்றால், இவை நோயாளியின் இதயத்துக்குள்ளேயே பொருத்தப்பட்டு செயல்பட்டன. பழுதடைந்து போன இதயத்தின் இரண்டு கீழறைகளையும் 4 வால்வுகளையும் அகற்றி விட்டு, அந்த இடத்தில் இக்கருவி ஒன்றை இணைத்து விட்டனர். இவற்றில் 2010ல் சிட்னி& செய்ன்ட் வின்சென்ட் மருத்துவமனையில், 50 வயது முதியவர் ஆஞ்சலோ தைகோனோ என்பவருக்குப் பொருத்தப்பட்ட சின்கார்டியா செயற்கை இதயம் மட்டும் 4 வருடங்களுக்குச் செயல்பட்டது. இதுவும் காற்றழுத்தம் மூலம் இதயத்தை இயங்கவைத்த காரணத்தால்... இதிலும் ரத்த உறைவு மற்றும் நுரையீரல்களில் காற்றழுத்தப் பிரச்னைகள் ஏற்பட்டன.
இன்னும் மேம்படுத்தப்பட்ட கருவிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இப்போது 'கார்மட்' எனும் செயற்கை இதயம் மூலம் பலன் கிடைத்துள்ளது. இதை உருவாக்கிய டாக்டர் அலென் கார்ப்பென்டியர் கூறுகையில், “எங்கள் நிறுவன ஆராய்ச்சியாளர்கள்தான் இக்கருவியைக் கண்டுபிடித்தார்கள் என்றாலும், டென்மார்க்கைச் சேர்ந்த ஐரோப்பிய ஏரோநாடிக் டிஃபன்ஸ் மற்றும் ஸ்பேஸ் நிறுவனம் இதை மேம்படுத்திக் கொடுத்தது. பாரீஸில் உள்ள ஜார்ஜஸ் போம்பிடௌ மருத்துவ மனையில் இதயம் செயலிழந்த 75 வயது முதியவருக்கு இது பொருத்தப்பட்டது. டாக்டர் கிறிஸ்டியன் லேட்டர்மெளலி இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார்.
இது லித்தியம் பேட்டரி மூலம் இயங்குகிறது. பேட்டரியை இடுப்பில் அணிந்துகொள்ள வேண்டும். இது, சில உயிரிப்பொருள்களுடன் பசுவின் திசுக்களும் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால், இயற்கை இதயத்துக்கு நிகராக இது கருதப்படுகிறது. ஆகவே, இதை உடல் எளிதாக ஏற்றுக்கொண்டது. இயற்கை இதயத்திலிருந்து செயற்கை இதயத்துக்கு ரத்தம் வருகின்ற இடம் பிளாஸ்டிக் இழைகளால் தயாரிக்கப்படாமல், பசுவின் திசுக்களால் தயாரிக்கப்பட்டதாலும், காற்றுக்குப் பதிலாக ஹைட்ராலிக் திரவத்தின் அழுத்தம் கொண்டு இது இயக்கப்படுவதாலும் ரத்தம் உறைந்து கட்டியாவது தடுக்கப்பட்டுள்ளது. இதில் சென்சார் மற்றும் கணினி தொழில்நுட்பமும் இணைந்துள்ளதால், காய்ச்சல், அயர்ச்சி, மகிழ்ச்சி போன்ற நோயாளியின் உடல், மன மாறுதல்களுக்கு ஏற்ப தன் இயக்க சக்தியை மாற்றிக் கொள்ளும் திறனும் இதற்கு உண்டு. இதன் எடை 900 கிராம். இது 5 ஆண்டுகளுக்கு நீடித்து உழைக்கும்” என்கிறார்.
'கார்மட்' இதயம், அறிவியல் கண்டுபிடிப்பில் ஓர் அரிய வரம்!
via தினகரன்

No comments:

Post a Comment