Search This Blog

Thursday, March 20, 2014

ஒரு சீனத்து பெண்ணுக்கு இருக்கும் தமிழ்ப் பற்று தமிழக பெண்களுக்கு வருமா?


தமிழர்களின் பண்பாடு கவர்ந்ததால் தமிழ் பேச கற்றுக் கொண்டேன்- சீன வானொலி பெண் தொகுப்பாளர் பேட்டி...!

‘தமிழர்களின் பண்பாடு என்னை வெகுவாகக் கவர்ந்ததால், தமிழ் மொழியை கற்றுக் கொண்டேன்’ என்று சீன வானொலியின் பெண் தொகுப்பாளர் பெருமையுடன் கூறினார். சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு தலைவராக இருப்பவர் சவோ ஜியாங் (36).

தமிழ் மொழி மீது அதிக பற்று கொண்டதால், தனது பெயரை கலைமகள் என மாற்றிக் கொண்டார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள இவருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடந்தது நிகழ்ச்சிக்குப் பிறகு நிருபர்களிடம் கலைமகள் கூறியதாவது:

சீன நாட்டு வானொலியில் 1963-ம் ஆண்டு தமிழ்ப் பிரிவு தொடங்கப்பட்டது. இந்தப் பிரிவின் தலைவராக பணியாற்றி வருகிறேன். தமிழ்ப் பிரிவின் பொன்விழா, கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. எங்கள் வானொலியின் தமிழ்ப் பிரிவுக்கு வாசகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், செல்வாக்கும் கூடுகிறது.
தமிழர்களின் வரலாறு, தமிழர்களின் பண்பாடு ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தன. அதனால்தான் தமிழ் பேச கற்றுக் கொண்டேன். சீன தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த ஆண்டு ஜனவரியில் ‘சீனாவில் இன்ப உலா’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டேன். இதில் சீனாவைப் பற்றி எழுதியுள்ளேன். இந்த புத்தகத்தை தமிழ் நண்பர்கள் படிக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜூனில் ‘சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி’யை தொகுத்து வெளியிட்டுள்ளேன். இந்த அகராதியில் சுமார் 27 ஆயிரம் சொற்கள் உள்ளன. தமிழர்கள் சீன மொழியை படிப்பதற்கு, இந்த அகராதி மிகவும் உதவியாக இருக்கும்.
பாரதியாரை பிடிக்கும் எனக்கு மிகவும் பிடித்தவர் பாரதியார். சீனாவில் தமிழ் பேசும் மக்கள் குறைவு. சீன மக்களிடையே தமிழை கொண்டு செல்வதற்கான போதிய விளம்பரம் இல்லை. நான் பணியாற்றும் வானொலியின் தமிழ்ப் பிரிவு மூலம் சீன மக்களிடம் தமிழை கொண்டு செல்வேன். உலக அளவில் தமிழ் ஒலிபரப்பாளராக புகழ் பெற வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்காக கடுமையாக முயற்சி செய்வேன். 2002-ம் ஆண்டு தமிழகம் வந்தேன். அதன்பின், 10 ஆண்டுகள் கழித்து தமிழகம் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

சீனாவில் தமிழ்த் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு இல்லை. விரைவில் தமிழ் படங்களை பார்க்க முயற்சி செய்வேன். போதி தர்மன் கதையை மையப்படுத்தி வந்துள்ள 7-ம் அறிவு படத்தை விரைவில் பார்ப்பேன். எனக்கு மிகவும் பிடித்த திருக்குறள், ‘நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று’.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது சீன வானொலியில் தமிழ்ப் பிரிவில் பணியாற்றும் சவுசின் என்பவர் உடன் இருந்தார். இவரும் தமிழ் மீதுள்ள பற்றினால், தனது பெயரை ஈஸ்வரி என்று மாற்றிக் கொண்டார். இவர் புதுச்சேரியில் தங்கி தமிழ் படித்து வருகிறார்.

No comments:

Post a Comment