Search This Blog

Friday, July 15, 2011

சிறுகதை : அம்மா


பரமேஸ்வரி இருக்கையின் நுனியில் அமர்ந்தார். முழுமையாக அமர அவருக்குக் கூச்சமாக இருந்தது. புதிதாகக் கட்டியிருந்த பட்டுச் சேலை உடலை என்னவோ செய்தது. இதுவரை சாதாரண கந்தலாடையோ, மிஞ்சி மிஞ்சிப் போனால் டவுனிலிருந்து ஆண்டுக்கு ஒருதடவை வாங்கி வரும் நானூறு ரூபாய் சேலையோ தான் உடுத்திப் பழக்கம். முதல் முறையாக நான்கிலக்க பணத்தில் பட்டுச் சேலையைக் கட்டியது அவஸ்தையாய்ப் பட்டது.
   
முன்பக்கமாக இருந்த சூட்கேசைக் கொஞ்சம் தள்ளி வைத்துக் காலை நீட்டினாள். அவருக்கு முன்னால் பல்வேறு வகையான மனிதர்கள். சிலர் கோட் சூட்டுடன் நடந்தார்கள். இன்னும் சிலர் ரொம்ப காஸ்ட்லி சட்டையோ, பேண்டோ போட்டிருந்தார்கள். பெண்கள் பெரும்பாலும் பேண்ட் ஷர்ட், சிலர் சுடிதார், சிலர் சேலை. தான் மட்டுமே பட்டுச் சேலையுடன் அன்னியப்பட்டது போல தோன்றியது பரமேஸ்வரிக்கு. இருந்தாலும் மனசுக்குள் நிறுத்தாத அலையாக ஆனந்தமும் அடித்துக் கொண்டுதான் இருந்தது. மகன் கிரிலால் வாங்கித் தந்ததில்லையா !

“ஒவ்வொரு நாளும் இத்தனை பேரா பிளைட் ஏற வாறாங்க “ ஏர்போர்ட்டில் நுழையும் போதே மகனுடைய கையைப் பிடித்துக் கேட்டாள் பரமேஸ்வரி.
“அம்மா, இந்த நைட்ல இருந்து நாளைக்கு நைட் வரைக்கும் இருந்து பாத்தீங்கன்னா தெரியும், எத்தனை ஆயிரக்கணக்கான பேர் பிளைட் ஏறராங்கன்னு. இந்த சென்னை ஏர்போர்ட் மாதிரி எல்லா இடத்துலயும் ஏர்போர்ட் இருக்கு. கணக்கு போட்டுப் பாருங்க ஒவ்வொரு நாளும் எத்தனை பேரு அமெரிக்கா போறாங்கன்னு தெரியும்” கிரிலால் சிரித்தான்.

“சரிங்கம்மா.. இங்கே உக்காருங்க. செக்கின் பண்ணணும், போர்டிங் பாஸ் வாங்கணும் நிறைய வேலையிருக்கு… கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்று சொல்லிக் கொண்டு முன்னால் நடந்தான் கிரிலால். அவனுடைய கண்களில் காஃபி ஷாப் தெரிந்தது. திரும்பி அம்மாவிடம் வந்தான்.

“அம்மா, சாய காப்பி ஏதாச்சும் வாங்கிட்டு வரட்டா ?”

“வேண்டாம் மக்களே…”

“லேட் ஆவும்மா.. ஏதாச்சும் குடிங்க.. “

“செரி அப்போ ஒரு சாய வாங்கிட்டு வா”

கிரிலால் ஒரு டீ வாங்கி அம்மாவின் கையில் கொடுத்து விட்டு பேகேஜ் செக்கிங் ஏரியா நோக்கி நடந்தான்.

பரமேஸ்வரி கையிலிருந்த டீயைக் குடித்துக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரே பையன். ராஜப்பன் உயிரோடு இருந்த காலம் ஒரு சின்ன சொர்க்கமாகத் தான் இருந்தது. நெய்யாற்றின் கரையில் ரெண்டு ஏக்கர் வயலுக்கு நடுவே பெரிய வீடு. பாறசாலை பக்கம் ஆறு ஏக்கர் தென்னந் தோப்பு. காலை முதல் மாலை வரை ராஜப்பனுக்கு தோட்டத்தின் வேலை செய்தாலே போதுமாயிருந்தது.

எப்போதும் வீட்டில் நான்கைந்து வேலைக்காரர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். தேங்கா வெட்டு, கிருஷி, மரச்சினி வெட்டு என ஏதாச்சும் ஒரு வேலை இருந்து கொண்டே இருக்கும். தேங்கா, சக்கைப்பழம், மரச்சீனி, நெல் என எதையுமே கடையில் வாங்கியதில்லை பரமேஸ்வரி. கோழி கூட கூட்டிலிருந்து தேவைப்படும்போது விரட்டிப் பிடித்து குழம்பு வைப்பது தான்.


கிரிலால் சின்ன வயதிலிருந்தே ரெண்டு பேருக்கும் ரொம்ப செல்லம். அவனை தோளை விட்டு இறக்கவே மாட்டார் ராஜப்பன். போதும் என்கிட்டே பையனைக் கொஞ்ச நேரம் குடுங்க என அம்மா அடம்பிடித்து தான் வாங்க வேண்டும். பையனுக்கு மூன்று வயதாகும் போதே தன்னுடன் வயலுக்கும், தென்னந்தோப்புக்கும் கூட்டிப் போவார். அவனுக்கும் அது ரொம்பவே பிடித்தமான பொழுது போக்காய் இருந்தது.

“பயலை இப்படியே கூட்டிட்டு போய் போய் அவனையும் கிருஷில இறக்கி விடாதீங்க. அவனைப் படிக்க வைக்கணும்”

“அதுக்கு இன்னும் ரெண்டு கொல்லம் இருக்கில்லியா. மூணு வயசு தானே ஆவுது. அஞ்சு வயசுல பள்ளிக்கூடம் சேக்கலாம்”

“சேக்குதது செரி. நீங்க வேலைக்கு போவும்போ. வீட்டில விட்டிட்டு போங்க. அவனுக்கு இல்லைங்கி வீடு, தோட்டம், வயலுன்னு அதுல நாட்டம் போயிடப் போவுது” பரமேஸ்வரி முரண்டு பிடிப்பார்.

“அதெல்லாம் நான் பாத்துக்கறேன். அவனை பெரிய ஆளாக்கி அமெரிக்கா அனுப்பி வெச்சு. நாமளும் அவன் கூடவே அமெரிக்கா போய் செட்டிலாயிடணும்” ராஜப்பன் தோளில் கிடக்கும் துண்டை இரண்டு கைகளாலும் பிடித்தபடி, சிவாஜி ஸ்டைலில் கர்வமாய்ச் சொல்வார்.

பரமேஸ்வரிக்கு உள்ளூர பெருமிதமாய் இருக்கும்.

கனவுகளெல்லாம் சட்டென உடைந்து போகுமென அவள் கொஞ்சம் கூட நினைத்திருக்கவில்லை. தோப்பில் தேங்காய் வெட்டிக் கொண்டிருந்தபோது ஒரு தேங்காய் மடல் சாய்ந்து நேராக இவருடைய தலையில் வந்து விழுந்தது.

ஒற்றைத் தேங்காய் விழுந்ததும் உடனடியாக மூச்சு போகுமென யாருமே நினைத்திருக்கவில்லை. ராஜப்பனுக்கு உச்சந்தலையில் தேங்காய் வாக்கில்லாமல் விழுந்ததாக வைத்தியர் சொன்னார்.

நான்குவயது கூட ஆகாத பையனைக் கையில் பிடித்துக் கொண்டு திக் பிரமை பிடித்து நின்றாள் பரமேஸ்வரி. நீளமாய் தெரிந்த வாழ்க்கைச் சாலை சட்டென நிலநடுக்கம் வந்து புதையுண்டு போனது போல பதறினாள். ஊரே உலுங்கும்படியாக கதறி அழுதாள். அவளுடைய அழுகை ஒரு வாரம் வரை தெருவில் கேட்டுக் கொண்டே இருந்தது.

என்ன நடந்தது என்பதை முழுதாய் விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் இருந்தான் சிறுவன் கிரிலால்.

அம்மா, அப்பா தோப்புல இருந்து வரமாட்டாரா ?

என் கூட பேச மாட்டாரா ?

எங்கேம்மா போயிருக்காரு ?

ஊருக்கா ?

இப்படி ஏதேதோ கேள்விகளுடன் சேலை தொங்கும் பையன் அடங்கிக் கிடக்கும் ஒப்பாரியை உடைத்து விடுவான். மகனையும் கட்டியணைத்துக் கொண்டு கதறி அழுவாள்.

நிஜத்தை உணர்ந்து இயல்புக்கு வரவே அவளுக்கு ஆறு மாதங்களாயிற்று. நரகத்தின் ஒரு பாகத்தை அனுபவித்தது போல இருந்தது அவளுக்கு. அந்தக் காலகட்டத்தில் தான் வயதான மாமியாரின் அருகாமை அவளுக்கு எரிமலையை அணைக்கக் கிடைத்த மழைத்துளி. பையன் மட்டும் இல்லையேல் அப்போதே பரமேஸ்வரியும் போய்ச் சேர்ந்திருப்பாள்.

பையனை அமெரிக்கா அனுப்பணும்  - எனும் ராஜப்பனின் குரல் தான் அடிக்கடி அவளை உலுக்கி எழுப்பும்.

கிரிலால் சின்ன வயசிலிருந்தே படிப்பில் ரொம்பச் சுட்டியாய் தான் இருந்தான். வீட்டில் பாடம் சொல்லிக் கொடுப்பது, சமைப்பது, அவனை பள்ளிக்கூடம் அனுப்புவது என எல்லாமே அவள் தான்.

வருடங்கள் கடந்தபின் அவளுக்கு ராஜப்பன் ஒரு நினைவாக மட்டும் ஆகிப் போனார். எப்போதேனும் கனவில் வருவார். அப்படிக் கனவில் வந்து ஏதாச்சும் சொன்னால் ஏதோ ஒன்று நடக்கும் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.

ஒருமுறை ஒரு கனவு “வீட்டு முற்றத்தில் நின்ற ஒரு செடி பட்டுப் போயிருக்கிறது. ஈஸ்வரி.. இதோ பாரேன். நல்லாயிருந்த செடி பட்டுப் போச்சே” என்றான்.

மறு நாள் மாமியார் திடீரென இறந்து போனார்.

“அப்பாக்கு போன் பண்ணிப் பேசு… அவருக்கு உடம்பு சரியில்லை” என்றான் ஒரு முறை கனவில். விடிந்தும் விடியாமலும் அப்பாவுக்குப் போன்பண்ணினாள் பரமேஸ்வரி.

“அப்பா எப்படிம்மா இருக்காரு ?”

“அவருக்கு நைட் மைல்டா ஹார்ட் அட்டாக் வந்துடுச்சுடி.. ஹாஸ்பிட்டல்ல சேத்திருக்கோம். இப்போ பரவாயில்லை. ஆமா உனக்கெப்படி தெரியும் ?”

“கனவுல அவரு வந்து சொன்னாரும்மா…”

இப்படி ராஜப்பன் அப்பப்போ கனவில் வருவதும் தகவல்கள் சொல்வதுமெல்லாம் அவளுக்கு ரொம்ப சகஜமான சமாச்சாரங்களாகியிருந்தன. பல மாதங்கள் கனவில் வராமல் இருப்பதும் திடீரென ஒருநாள் வருவதும் என கனவின் மர்மத்தை விளக்காமலேயே இருந்தான் ராஜப்பன்.

“அம்மா.. பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்துப் படிக்கப் போறேன். படிச்சு முடிச்சா ஐ.டில வேலைக்கு ஏறலாம்மா” பன்னிரண்டாம் வகுப்பு முடித்த கையோடு சொன்னான் கிரிலால்

“ஐ.டில போனா அமெரிக்கா போவ முடியுமாடா ?”

“அம்மா ஐ.டி ன்னா அமெரிக்கா ரொம்ப ஈசிம்மா..”

“அப்போ படி மோனே” பேருந்தின் போர்ட் தவிர எதையும் வாசிக்கத் தெரியாத அம்மா வேறு என்ன தான் சொல்ல முடியும்.

அப்படித்தான் அவன் பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தது. கடைசி செமஸ்டரிலேயே ஒரு கேம்பஸ் இண்டர்வியூவிலும் தேறிவிட்டான். எல்லாமே பரமேஸ்வரிக்கு ரொம்பப் பிடித்திருந்தாலும் அந்த ரெஷ்மி பெண்ணின் சகவாசம் மட்டும் தான் சுத்தமாய்ப் பிடிக்கவில்லை.

“மோனே.. அவளோட பார்வையும், பேச்சும் ஒண்ணுமே செரியில்லை. அவ நம்ம குடும்பத்துக்கு ஒத்து வரமாட்டா”

“உனக்கென்னம்மா தெரியும் ? நீ வயல்லயே கிடந்து வளந்தவ. அவ அப்பா கலிபோர்ணியால இருக்கிறவரு. இவளோட படிப்பு முடிஞ்சதும் அமெரிக்கா போறா. இப்படி ஒரு ஆளு கிடைக்கிறது நம்ம லக்குன்னு சொல்லணும்”

“மோனே.. நம்ம சம்பாத்யத்தில பெண்ணை அமெரிக்கா கூட்டியோண்டு போணும். அது தான் மரியாதி. அவளுக்க கூட நாம போவக் கூடாது. அது செரியாவாது.”

“யாரு கூட போனா என்னம்மா ? அவ அப்பாக்கு கிரீன் கார்ட் இருக்கு. உங்கிட்டே என்னம்மா இருக்கு ? சும்மா நொய் நொய்ன்னு பேசாதீங்க”
மகனின் பேச்சுகள் பரமேஸ்வரியை காயப்படுத்தும். அதுவும் முதன் முறையாக ரெஷ்மிக்காக தன்னை மகன் எடுத்தெறிந்துப் பேசியபோது ராஜப்பனின் கல்லறையில் கவிழ்ந்து கிடந்து பல மணி நேரங்கள் அழுதாள்.

ரெஷ்மி வீட்டுக்கு வந்திருந்தபோதும் அவள் தன்னை மதிக்கவில்லை எனும் கவலை பரமேஸ்வரிக்கு இருந்தது. .

“ஐயோ அம்மா.. உனக்கு தான் எல்லாம் தப்பா தோணுது… அவ நல்ல பொண்ணு. கொஞ்சம் மாடர்ன் டைப்…“ என்றான் கிரி.

அதன்பிறகு வேறு வழியில்லை. தன்னுடைய ஒரே ஆதரவு அவன் தானே. அவன் செய்வதையெல்லாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் பரமேஸ்வரி. தமிழே வாசிக்கத் தெரியாத அவளுக்கு மருமகளும், மகனும் பேசும் ஆங்கிலமென்ன புரியவா போகிறது.

திருமணம் நடந்தது.

பெரிய ஹோட்டலில் வைத்து. தான் நின்று நடத்த வேண்டிய திருமணத்தில் தான் ஒரு உறுப்பினராகக் கலந்து கொள்ள நேர்ந்ததில் அவள் ரொம்பவே உடைந்து போனாள். ஆனாலும் ஒரே மகனின் ஆனந்தம் மட்டுமே அவளுக்கு பெரிதாய்த் தெரிந்தது.

“அம்மா.. நாம் யு.எஸ் போயிட்டு எல்லாம் செட்டப் பண்ணிட்டு வந்து உன்னை கூட்டிட்டு போறேன்மா”

“செரி மோனே… “ கட்டிப் பிடித்து கதறி அழுது தான் வழியனுப்பி வைத்தாள் பரமேஸ்வரி.

வெளிநாடு போனபின் வாரம் ஒருமுறை தொலைபேசி சிணுங்கும். போதிமரத்தில் புத்தன் தவமிருந்தது போல அந்த அழைப்புக்காகக் காத்திருப்பாள். அடிக்கடி போனை எடுத்துக் காதில் வைத்து வேலை செய்கிறதா என்பதையும் கவனித்துக் கொண்டே இருப்பாள்.

வாரம் ஒருமுறை என்பது, இரண்டு வாரத்துக்கு ஒருமுறை என்றாகி, மாதம் ஒருமுறை என்றாகி, எப்போதாவது என்றாகி விட்டது.

மகன் வரவில்லை.

மகனுக்கு என்னாச்சோ, எப்படி இருக்கிறானோ எனும் பதட்டம் அவளை அரித்துக் கொண்டே இருக்கும். எப்போதாவது போன்பண்ணி, நல்லா இருக்கேம்மா. கொஞ்சம் வேலை ஜாஸ்தி. இன்னும் வீடு செட்டாகலை. இன்னும் டிக்கெட் கிடைக்கலை. விசா சரியில்லை. என அவனுக்கு ஏதோ ஒரு சாக்குப் போக்கு கிடைத்துக் கொண்டே இருந்தது.

பின் நீண்ட இடைவேளை.

“அம்மா… பையன் பொறந்திருக்காம்மா…. “  போன் பண்ணினான் அவன்.

“அப்படியாப்பா.. பையன் எப்படி இருக்காம்பா.. அப்பா மாதிரி இருக்கானா ? செவப்பா இருக்கானா ? “ பரமேஸ்வரி துடியாய்த் துடித்துப் பேசினாள்.

“நீயே வந்து பாரும்மா.. உன்னை நான் இங்கே கூட்டிட்டு வரப்போறேன்”

“உள்ளதா மோனே.. உண்மையாவா சொல்றே” பரமேஸ்வரி கதறினாள். அவளுடைய அழுகை தொலைபேசியையே உலுக்கியிருக்க வேண்டும். சேர்த்து வைத்த ஏக்கத்தையெல்லாம் சேர்த்துக் கதறினாள்.

“ஆமாம்மா.. பையனைப் பாத்துக்கவும் ஆள் வேணும். நானும் உன்னைப் பிரிஞ்சு எவ்வளவு நாள் தான் இருப்பேன்”

பரமேஸ்வரிக்கு தன் வாழ்நாள் தவத்துக்கான பதில் கிடைத்தது போல இருந்தது. போன் வைத்ததும் நேராக ராஜப்பனின் கல்லறையில் ஓடினாள்.
கல்லறைமீது கண்ணீரோடு புலம்பினாள்.

“நம்ம பையன் வராங்க. என்னைக் கூட்டிட்டு போறான். நீங்க வரமுடியாம போயிட்டீங்களே.. “ என அரற்றினாள்

அடுத்த மாதமே வந்திறங்கினான் கிரிலால்.

அந்த வயல் வீடு மறுபடியும் ஒரு வசந்தத்தின் கிளைக்குத் தாவியது. உற்சாகமும், சந்தோசமும் மழையாய்க் கொட்டின.

ஒரு மாதம் ஓடிவிட்டது.

இதோ விமான நிலையத்தில் இன்று அமரவே கூச்சப்பட்டு பரமேஸ்வரி அமர்ந்திருக்கிறாள். தன்னை கையோடு அழைத்துக் கொண்டு மகன் அமெரிக்கா போகிறான். இதைவிடப் பெரிய சந்தோசம் ஒரு அம்மாவுக்கு என்ன வேண்டும் ?

பேரன் எப்படி இருக்கானோ ? என்னைப் போல இருப்பானோ ? அவரைப் போல இருப்பானோ எனும் சிந்தனைகள் தான் மனதை அலைமோதின.

“இருபது மணி நேரம் பிளைட்மா, ரொம்ப கஷ்டம்…. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”

சொல்லி தான் கூட்டி வந்திருக்கிறான். பேரனை மனசில் சுமந்து கொண்டிருந்தால் நேரம் என்ன நேரம் ?

பரமேஸ்வரி நிமிர்ந்து பார்த்தாள். மணி நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பத்தரை மணிக்கு உட்கார்ந்தது. ஒன்றரை மணி நேரமாகிவிட்டிருந்தது. பழைய நினைவுகளை அசைபோட்டு முடிக்க.

இரண்டு எட்டு முன்னால் வைத்து எட்டிப் பார்த்தாள். ஒன்றும் புரியவில்லை. ஏகப்பட்ட வரிசைகள் அங்கும் இங்குமாய் தெரிந்தன.
மீண்டும் வந்து அதே இருக்கையில் அமர்ந்தாள்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது. வெகு நேரமாகிவிட்டது. எங்கே போனான் மகன் ?

கடிகாரம் மணி இரண்டு என்றது.

பரமேஸ்வரியை பதட்டம் பிடித்துக் கொண்டது. பையனுக்கு ஏதாச்சும் ஆயிருக்குமோ ? யாரிட்டயாவது கேக்கணுமோ ?
  வேண்டாம். அவன் பாரின் எல்லாம் போயிட்டு வந்தவன் அவனுக்குத் தெரியாதா ? மனதைத் திடப்படுத்திக் கொண்டு அமர்ந்தாள்.

கடிகாரம் மணி ஐந்து என்றது. பரமேஸ்வரியின் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது.

“அம்மா.. இதுலயெல்லாம் ஒப்பு இடும்மா…” கடந்த வாரம் கத்தையாய் பத்திரங்கள் கொண்டு வந்து நீட்டினான் கிரிலால்.

“என்ன மோனே இதெல்லாம்”

“இனி நாம அமெரிக்கால தானேம்மா இருக்கப் போறோம். இதையெல்லாம் யாரு பாத்துக்கிறது. அதனால எல்லாத்தையும் விற்றிட்டு பணத்தை உன் பேரில போட்டிடறேன்”

“வீடு…”

“அமெரிக்கால நமக்கு இது போல பத்து மடங்கு பெரிய வீடும்மா.. ஏன் பயப்படறே ?”

“இல்லடா அவரோட கல்லறை…”

“அதையாராவது விப்பாங்களாம்மா ? அந்த இடத்தை அப்படியே தான் விட்டு வைக்கப் போறேன். கல்லறை கெடந்தா லேண்ட் வில போவாது. “

பரமேஸ்வரி மகிழ்ச்சியுடன் தான் கையொப்பமிட்டாள். மகன் இருக்கையில் வேறு என்ன வேண்டும் என்றது மனது.

அதற்கு முந்தின நாள் தான் கனவில் வந்தான் ராஜப்பன், “நம்ம புளிய மரத்தில இருந்து குருவிக் கூடு தவறி விழுறது போலயும், தாய்க்குருவி பெடைக்கிறது போலவும் கனவு கண்டேண்டி”

விமான நிலையத்திலிரிந்த பரமேஸ்வரியின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன.

மணி காலை எட்டாகியிருந்தது.

அதற்குள் அந்த பகுதியிலிருந்த பலரும் வந்து விசாரிக்கத் தொடங்கினார்கள்.

“எம்மா ? உடம்பு சரியில்லையா ? நேற்று நைட்டே இருக்கீங்க போல.. என்னாச்சு ?”

“என் பையன்… இருக்க சொல்லிட்டு போனான்.. வருவேன்னு சொன்னான். அமெரிக்கா போணும்..” அப்பாவியாய் ஒலித்தது பரமேஸ்வரியின் குரல்
“அமெரிக்கா பிளைட் எல்லாம் போயாச்சேம்மா…”

“இல்ல இங்க இருக்க சொல்லிட்டு தான் அவன் போனான். என் பேரனைப் பாக்கணும். நான் இங்க இருக்குதேன்”

பரமேஸ்வரி இருக்கையைக் கெட்டியய்ப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

கொஞ்சம் கொஞ்சமாய் விமான நிலையத்தில் செய்தி பரவ, உதவிக்கு ஆட்கள் வரத் தொடங்கினார்கள்.

“உங்க பாஸ்போர்ட் எங்கேம்மா ?”

“பாஸ்போர்ட்டா ? அதெல்லாம் என் மோனுக்கு தான் தெரியும்?”

“எந்த பிளைட்மா ?”

“அதெல்லாம் என் மோனுக்கு தான் தெரியும்”

“எங்கேம்மா போறீங்க”

“அமெரிக்கா…”

“அமெரிக்கான்னு சொன்னீங்களே.. அமெரிக்கால எங்கே”

“அது என் மோனுக்குத் தான் தெரியும்” சொல்லிக் கொண்டு விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள் பரமேஸ்வரி.

ஊழியர்கள் விமான நிலையம் முழுவதும் சுற்றியடித்தும் கிரிலால் சிக்கவில்லை. இரவில் புறப்பட்ட பயணிகள் லிஸ்ட் புரட்டப்பட்டது. அவன் நள்ளிரவு விமானத்திலேயே அமெரிக்கா சென்று விட்டது ஏர் இந்தியாவின் பயணிகள் லிஸ்ட் பார்த்தபோது புரிந்தது.

அம்மாவுக்கு டிக்கட் எடுக்கப்படவே இல்லை.

அவனுடைய ரிட்டர்ன் டிக்கெட் வரும்போதே எடுக்கப்பட்டிருந்தது.

சுற்றியிருந்தவர்களுக்கு விஷயம் புரிந்து போனது. அம்மாவை அமெரிக்கா கூட்டிக் கொண்டு போகிறேன் என்று சொல்லி ஏமாற்றி விமான நிலையத்தில் அமர வைத்து விட்டு அவன் மட்டும் கிளம்பிப் போயிருக்கிறான். சிரித்துச் சிரித்து அம்மாவை நம்ப வைத்து அம்மாவிடமிருந்து சொத்தையெல்லாம் பிடுங்கியிருக்கிறான். அம்மாவுக்கோ ஒரு பாஸ்போர்ட் கூட இல்லை.

நடந்த விஷயங்களை யாராலும் நம்ப முடியவில்லை. இப்படி ஒரு புள்ளை இருக்க முடியுமா எனும் அதிர்ச்சி விமான நிலையத்தின் ஒவ்வோர் இருக்கையிலும் வந்து அமர்ந்தது.

“அம்மா.. மணி பன்னிரண்டாகப் போகுது. உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராச்சும் இருக்காங்களா ?” அந்த நடுத்தர வயதுப் பெண் கேட்டாள்.
“இல்லை..” பரமேஸ்வரி தலையாட்டினாள்.

“வீடு..”

“எல்லாத்தையும் விற்று மோனுக்குக் குடுத்திட்டேன்”

“சரி வாங்க நான் உங்களைக் கூட்டிட்டுப் போறேன்” பரமேஸ்வரியின் கையைப் பிடித்து எழுப்பினாள் அவள்.

“இல்ல வேண்டாம். மோன் வருவான்… நான் இங்கே இருக்கேன்”

“அவன் வரமாட்டான்மா…. அவன் உங்களை ஏமாத்திட்டான்”

“இல்லே அவன் வருவான். பேரனை பாத்துக்க வேற ஆள் இல்லேன்னு சொன்னான். பேரனை இந்த பாட்டி தான் பாத்துக்கணும்” பரமேஸ்வரியின் கண்கள் நிறுத்தாமல் வழிந்தன.

“அவன் வந்தா உடனே அவன் கிட்டே உங்களைக் கொண்டு வந்து விடறேம்மா.. இது சத்தியம்.. வாங்க”

அவள் மெதுவாக பரமேஸ்வரியை எழுப்பினாள்.

“நீங்க யாரும்மா ? எங்கேருந்து வரீங்க ? ” அருகிலிருந்த விமான நிலைய ஊழியர் கேட்க அவள் ஒரு விசிட்டிங் கார்ட் எடுத்து நீட்டினாள்.

விமலா, “அன்னை முதியோர் இல்லம்”, வேளச்சேரி.


ஒரு உண்மைக் கதையின் புனைவு !

No comments:

Post a Comment