Search This Blog

Wednesday, April 15, 2020

ஊரடங்கின் போது பலர் கற்றுக்கொண்ட உண்மை.


1. அமெரிக்கா முன்னணி நாடு அல்ல.
2. உலக நலனைப் பற்றி சீனா ஒருபோதும் சிந்திக்காது.
3. ஐரோப்பியர்கள் படித்தவர்கள்.ஆனால்
அவர்கள் நாம் நினைக்கும் அளவுக்கு அல்ல.
4. ஐரோப்பாவிற்கோ, அமெரிக்காவிற்கோ செல்லாமல் நம் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும்.
5. தமிழர்களின் நோய் எதிர்ப்பு சக்தி உலக மக்களை விட மிக அதிகம்.
6. பாதிரியார், மௌலவி, மதகுருமார்கள், சாமியார்களால் ஒரு நோயாளியையும் காப்பாற்ற முடியாது.
7. அரசு சார்ந்த சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், நிர்வாகப் பணியாளர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் ,
கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் கால்பந்து வீரர்கள் அல்ல.
8. தங்கம் மற்றும் எரிபொருளுக்கு நுகர்வோர் இல்லாமல் உலகில் எந்த முக்கியத்துவமும் இல்லை.
9. இந்த உலகமும் தங்களுக்கு சொந்தமானது என்று விலங்குகளும் பறவைகளும் முதல்முறையாக உணர்ந்தன.
10. நட்சத்திரங்கள் உண்மையில் மின்னும், இந்த நம்பிக்கை முதலில் பெருநகரங்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டது.
11. உலகின் பெரும்பாலான மக்கள் தங்கள் வேலையை வீட்டிலிருந்தும் செய்யலாம்.
12. நாமும் நம் குழந்தைகளும் 'பாஸ்ட் பூட் ' இல்லாமல் கூட வாழலாம்.
13. தூய்மையான வாழ்க்கை வாழ்வது கடினமான காரியம் அல்ல.
14. பெண்கள் மட்டுமே உணவு சமைக்க வேண்டும் என்று கிடையாது.
15. பெரும்பாலான ஊடகங்கள் பொய்கள் மற்றும் முட்டாள்களின் ஒரு கூடாரம் மட்டுமே.
16. நடிகர்கள் பொழுதுபோக்குக் கலைஞர்கள் மட்டுமே,
வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்கள் அல்ல.
17 தூய்மையாக இருப்பதன் காரணமாக வீடு கோயிலாக மாறும்.
18. பணத்திற்கு மதிப்புக் குறைவே.

இரவுப் பாடகன் P .B .ஸ்ரீநிவாஸ்

P .B .ஸ்ரீநிவாஸ் 1947இல் மிஸ்.மாலினியில் தன் முதல் பாடலைப் பாடிய போது நான் பிறந்திருக்கவில்லை. சிறு வயதில் அவர் என் விருப்பத்துக்குரிய பாடகருமல்ல.
அந்தப் பருவத்தில் என் ஆர்வம் வீர, தீர,சாகஸப் படங்களில் மையம் கொண்டிருந்தது. குறிப்பிட்ட வயது வரை எம்.ஜி.ஆர்.தான் என் ஆதர்ஸ நாயகன். டி .எம் .சௌந்தரராஜனை மிஞ்சிய பாடகன் எவருமில்லை .1961 இல் நான் பார்த்த முதலாவது எம்.ஜி.ஆர். படமான 'அரசிளங்குமரி'யில் வரும் 'சின்னப் பயலே,சின்னப் பயலே சேதி கேளடா !' என்ற பாடல் மூலம் மனதில் அழுத்தமாகப் பதிந்து விட்டவர் அவர்.
'நான் ஆணையிட்டால்' என்று சவுக்கை சொடுக்கிய போதும், 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்' எனக் கப்பல் கம்பத்தில் தொங்கிய படி கை வீசிய போதும் கதாநாயகனையும் பாடகனையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. 'குரல் வழி நடிகனான ' சொந்தரராஜனின் உரத்த தொனியும், தெளிவான உச்சரிப்பும் ,பாவமும் உற்சாகத்தைத் தூண்டிய காலம் அது. மீசை அரும்பி ,எம்.ஜி.ஆரின். 'குகை'யிலிருந்து நான் வெளியேறத் தொடங்கிய காலத்தில் இரண்டு குரல்களைப் 'புற்கள் மறைத்த பூக்கள் ' போல் கண்டு கொண்டேன் .
இனிமையும்,குளிர்மையும்,மென்மையும் ,குழைவும் கொண்ட ஏ.எம்.ராஜா, P .B .ஸ்ரீநிவாஸ் ஆகியோரின் அந்த இரண்டு குரல்களும் ஒரு காலத்து என் ஆதர்ஸ நாயகன் எம்.ஜி.ஆருக்கு அவ்வளவு பொருந்தி வராதவை . நடிப்பில் உரத்த தொனியை வெளிப் படுத்திக் கொண்டிருந்த சிவாஜிக்கும் கூட இந்த இருவரும் சரிவரப் பொருந்தவில்லை.
இந்த இருவருடைய குரல்களும் பெரும்பாலும் ஜெமினிக்கு அளவெடுத்துத் தைத்த சட்டைகள் போன்ற பிரமையைத் தந்தன .
இரைச்சல் என்பதைத் தன்னியல்பாகக் கொண்ட தமிழ்த் திரையுலகில் மிகையுணர்ச்சி நடிப்பை மட்டுப் படுத்தி ,தணிவான நடிப்பை வெளிப்படுத்திய ஜெமினி கணேசனும் , மென்மையான குரல்களைக் கொண்ட ஏ.எம்.ராஜாவும் , P .B .ஸ்ரீநிவாசும் ஒரு கோட்டில் இணைந்து கொண்டமையில் வியப்பில்லை. ரசிகர்களும் அதை வரவேற்றார்கள் .
டி.ஏ.மோதி (காணா இன்பம் கனிந்ததேனோ - சபாஷ் மீனா / 'இதை யாரோடும் எவரோடும் நீ சொல்லக் கூடாது -அம்மா / 'ஓ மோஹனச் செந்தாமரை-மகுடம் காத்த மங்கை' ) ,ரகுநாத் பாணிக்ரஹி ('நான் தேடும்போது நீ ஓடலாமோ'-அவள் யார் ) ,புருஷோத்தமன் (தென்றலே நீ செல்வாய் -மந்திரவாதி ) போன்றே பி.பி.ஶ்ரீனிவாஸுடையதும் மிகவும் மிருதுவான குரல் . ரசிகனை அவர் பட்டுப் பாதையின் வழியாக அழைத்துச் செல்கிறார். ‘டிங்கிரி டிங்காலே’, ‘அடி என்னடி ராக்கம்மா ‘ போன்ற உரத்த துள்ளல்களை அவரிடம் எதிர் பார்க்க முடியாது . ஆனால் அவரிடமிருந்து அபூர்வமாக வெளிப்பட்ட ‘பதுமைதானா’ , ‘கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே’ ,’நல்லவன் எனக்கு நானே நல்லவன் ‘ போன்ற உற்சாகப் பாடல்களிலும் நிதானம் கெடாத ஓர் அழகிருக்கும். அவருடைய சோகப் பாடல்களும் மாரிலடித்துக் கொண்டு எழும் ஒப்பாரி ரகங்கள் அல்ல. ரசிகனின் மனதில் மெல்லெனப் பரவும் மௌனமான சோகம் அது. அந்த நுட்பத்தை அறிய ‘நிலவே என்னிடம் நெருங்காதே ‘ ,‘உடலுக்கு உயிர் காவல்’ , ‘மயக்கமா கலக்கமா’ ,’நெஞ்சம் மறப்பதில்லை ‘, போன்ற பாடல்களைக் கேட்க வேண்டும்.
P .B .ஸ்ரீநிவாஸ் அவர்கள் பல வகைப் பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆனால் என் கணிப்பில் அவர் தன் குரலில் காதலைக் கசிய விட்ட ஓர் 'இரவுப் பாடகர்'. காதல்தான் அவருடைய பெரும் பாலான பாடல்களின் மையம். சோகம் ,ஆற்றாமை, தன்னம்பிக்கை , உயிர்த்தெழல் என்ற கிளை நதிகள் அங்கிருந்து ஊற்றெடுத்துத்தான் அவருடைய பாடல்களில் பரவிச் செல்லுகின்றன.
மென்மையான சோகத்தைப் பரவ விடும் அவருடைய பாடல்கள் பலவற்றைக் கேட்ட படி நான் தூங்கிய நாட்கள் இருக்கின்றன.
ஊரடங்கிய இந்த நாட்களிலும் அவர்தான் இரவென்ற ஆற்றைக் கடக்க வைக்கும் படகோட்டி. அவர் பாட ஆரம்பித்ததும் நான் ஆகாயத்தை அண்ணாந்து பார்க்க ஆரம்பிக்கிறேன் . மேகங்களுக்குள் ஒளிந்த நிலவை அவர் மீட்டெடுக்கிறார் . நட்சத்திரங்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றன .இரவு ஆற்றில் படகு நகர்ந்து கொண்டிருக்கிறது . .
(எனக்குப் பிடித்த அவருடைய பாடல்கள் சிலவற்றைக் கீழே தருகின்றேன்.)
1958- நெஞ்சம் அலை மோதுதே (மணமாலை )
1959- மலரோடு விளையாடும் (தெய்வபலம்)
1959- பதுமைதானா (கூடி வாழ்ந்தால் கோடி நன்மை)
1959- கனிந்த காதல் இன்பம் (அழகர் மலைக் கள்ளன்)
1959- அழகே...அமுதே – (ராஜா மலையசிம்மன்)
1960- பண்ணோடு பிறந்தது (விடிவெள்ளி)
1960- மாலையில் மலர் (அடுத்த வீட்டுப் பெண் )
1960- சிட்டுக் குருவி பாடுது (பாதை தெரியுது பார் )
1960- இன்ப எல்லை காணும் (இவன் அவனேதான்)
1960- கண்ணாலே பேசிக் (அடுத்த வீட்டுப் பெண் )
1960- தேடிடுதே (உத்தமி பெற்ற ரத்தினம்)
1960- அன்பு மனம் கனிந்த (ஆளுக்கொரு வீடு )
1960- ஏன் சிரித்தாய் ( பொன்னித் திருநாள் )
1960- நீயா நானா (மன்னாதி மன்னன்)
1961- என்றும் சொந்தமில்லை (புனர் ஜென்மம்)
1961- காற்று வெளியிடை (கப்பலோட்டிய தமிழன்)
1961- ஒரே கேள்வி – (பனித்திரை )
1961- என்னருகே நீ இருந்தால் (திருடாதே )
1961- காலங்களில் அவள் வசந்தம் (பாவமன்னிப்பு)
1961- பார்த்துப் பார்த்து நின்றதிலே- (மணப்பந்தல்)
1961- உடலுக்கு உயிர் காவல் (மணப்பந்தல் )
1981- யார் யார் யார் (பாசமலர்)
1962- சின்னச் சின்ன ரோஜா(அழகு நிலா )
1962- என்னைப் பார்த்தா (செங்கமலத் தீவு)
1962- ஒருத்தி ஒருவனை (சாரதா)
1962- அழகிய மிதிலை (அன்னை )
1962- நினைப்பதெல்லாம் (நெஞ்சில் ஓர் ஆலயம்)
1962- இந்த மன்றத்தில் (போலீஸ் காரன் மகள் )
1962- பொன்னென்பேன் (போலீஸ் காரன் மகள் )
1962- நிலவுக்கு என் மேல் (போலீஸ் காரன் மகள் )
1962- ஆண்டொன்று போனால் (போலீஸ் காரன் மகள் )
1962- ஆதி மனிதன் (பலே பாண்டியா )
1962- அத்திக்காய் காய் (பலே பாண்டியா
1962- அழகான மலரே (தென்றல் வீசும்)
1962- காற்று வந்தால் (காத்திருந்த கண்கள்)
1962- துள்ளித் திரிந்த (காத்திருந்த கண்கள் )
1962- வளர்ந்த கலை ( காத்திருந்த கண்கள் )
1962- கண் படுமே பிறர் (காத்திருந்த கண்கள்)
1962- கவலைகள் கிடக்கட்டும் (பந்த பாசம்)
1962- மாலையும் இரவும் (பாசம்)
1962- பால் வண்ணம் (பாசம்)
1962- மயக்கமா ,கலக்கமா (சுமைதாங்கி)
1962- மனிதன் என்பவன் (சுமைதாங்கி)
1962- எந்தன் பருவத்தின் கேள்விக்கு (சுமைதாங்கி)
1962- நினைப்பதெல்லாம் (நெஞ்சில் ஓர் ஆலயம் )
1962- ரோஜா மலரே (வீரத்திருமகன் )
1962- பாடாத பாட்டெல்லாம் ( வீரத்திருமகன் )
1962- பொன்னொன்று (படித்தால் மட்டும் போதுமா)
1962- பூஜைக்கு வந்த (பாத காணிக்கை]
1963- எந்த ஊர் என்றவளே (காட்டு ரோஜா)
1963- நினைப்பதற்கு - (நினைப்பதற்கு நேரமில்லை )
1963- அவள் பறந்து (பார் மகளே பார்)
1963- மதுரா நகரில் (பார் மகளே பார்)
1963- என்னைத் தொட்டு (பார் மகளே பார் )
1963- நெஞ்சம் மறப்பதில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)
1963- அழகுக்கும் மலருக்கும் (நெஞ்சம் மறப்பதில்லை )
1963- பூ வரையும் பூங் கொடியே (இதயத்தில் நீ )
1963- யார் சிரித்தால் என்ன (இதயத்தில் நீ )
1964- நாளாம் நாளாம் (காதலிக்க நேரமில்லை )
1964- அனுபவம் புதுமை (காதலிக்க நேரமில்லை )
1964- போகப் போகத் தெரியும்- ( சர்வர் சுந்தரம் )
1964- கண்ணிரண்டும் மின்ன (பச்சை விளக்கு )
1964- நான் பாடிய பாடலை (வாழ்க்கை வாழ்வதற்கே )
1965- நீ போகுமிடமெல்லாம் (இதயக்கமலம்)
1965- தோள் கண்டேன். (இதயக்கமலம்)
1965- இரவு முடிந்து விடும் (அன்புக்கரங்கள்)
1965- செந்தூர் முருகன் கோயிலிலே (சாந்தி)
1965- சித்திரமே சொல்லடி – (வெண்ணிற ஆடை)
1965- காதல் நிலவே ( ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் )
1965- இளமைக் கொலுவிருக்கும் (ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் )
1965- ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் ( ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் )
1965- மையேந்தும் விழியாட [பூஜைக்கு வந்த மலர்]
1965- நேற்று வரை நீ யாரோ- [வாழ்க்கைப் படகு]
1965- சின்னச் சின்னக் கண்ணனுக்கு- (வாழ்க்கைப் படகு)
1965- பூத்திருக்கும் விழி எடுத்து(கல்யாண மண்டபம்)
1965- பார்த்தேன் சிரித்தேன் (வீர அபிமன்யூ )
1965- போவோம் புது உலகம் (வீர அபிமன்யூ )
1965- இரவின் மடியில் (சரசா B A )
1966- நீயே சொல்லு [குமரிப்பெண் ]
1966- காத்திருந்த கண்களே (மோட்டோர் சுந்தரம்பிள்ளை )
1966- மௌனமே பார்வையால் ( கொடிமலர் )
1966- நிலவே என்னிடம் [ராமு]
1967- கனவில் நடந்ததோ (அனுபவம் புதுமை )
1968- உன் அழகை கண்டு கொண்டால் (பூவும் பொட்டும்)
1968- தாமரைக் கன்னங்கள் ( எதிர் நீச்சல் )
1969- எங்கேயோ பார்த்த முகம் (நில் கவனி காதலி)
1969- ஆசை வைத்தால் அது மோசம்
1969- தேவி ஸ்ரீதேவி (தேவி)
-உமா வரதராஜன்


Tuesday, April 14, 2020

ஆசியாவின் முதலாவது வானொலி இலங்கை வானொலி


இலங்கை வானொலி சேவையை தொடங்கிய நாள் டிசம்பர் 16 ,1925
இலங்கை வானொலி இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும். இங்கிலாந்தில் பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த நிலையில் இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது. 1922 இல், தந்தித் திணைக்களத்தால் இலங்கையில் சோதனை முறையில் ஒலிபரப்பு தொடங்கப்பட்ட சேவை.



ஆரம்பம்
1921 ஆம் ஆண்டு தந்தி அலுவலகத்துக்குத் தலைமைப் பொறியாளராக பதவியேற்று இலங்கை வந்த எட்வேர்ட் ஹாப்பர் (Edward Harper) என்பவரே இலங்கையில் ஒலிபரப்புச் சேவையைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவராவார்.
இன்று எட்வேர்ட் ஹாப்பர் இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை எனப் பலராலும் போற்றப்படுகிறார்.
கொழும்பின் முதலாவது வானொலிச் சோதனையின் போது, மத்திய தந்தி அலுவலகத்தின் மிகச்சிறிய அறையொன்றிலிருந்து தந்தித் திணைக்களப் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட ஒலிபரப்பியைப் பயன்படுத்தி கிராமபோன் இசை ஒலிபரப்பப்பட்டது.
சோதனை வெற்றியடையவே, மூன்று ஆண்டுகளின் பின்னர் முறையான ஒலிபரப்புச் சேவை இலங்கையில் இடம்பெறத் தொடங்கியது.
இது கொழும்பு வானொலி என அறியப்பட்டது. இது 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி அன்றைய பிரித்தானிய இலங்கை ஆளுனர் சேர் இயூ கிளிஃபர்டு என்பவரால் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பு வெலிக்கடை பகுதியில் ஒரு கிலோ வாற்று வலுக்கொண்ட பரப்பியை கொண்டு மத்திய அலை அலைவரிசையில் தன் ஒலிபரப்பை ஆரம்பித்தது.
மாணவர்களுக்கான கல்விச் சேவை நிகழ்ச்சிகள் 1931,மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இரண்டாம் உலக போரின் போது கொழும்புச் சேவை வானொலி நிலையம் நேச நாட்டு படைகளால் பொறுப்பேற்கப்பட்டு தென் கிழக்காசியாவில் இருந்த நேசப படைகளுக்கு செய்திகள் ஒலிபரப்பட்டது. போரின் முடிவில், மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை அரசின் தனித்த திணைக்களம் ஒன்றின் கீழ் வந்த கொழும்பு வானொலியின் பெயர் 1949 ஆம் ஆண்டு இலங்கை வானொலி என மாற்றப்பட்டது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
1967ம் ஆண்டு ஒலிபரப்பு திணைக்களமாக இருந்துவந்த இந்நிலையம், மேலதிக அதிகாரங்களையும் நெகிழ்வுப்போக்கையும் கொண்ட கூட்டுத்தாபனமாக மாற்றம் கண்டது. 1966 இல் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 37ம் இலக்க கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் இந்த மாற்றம் நிகழ்ந்தது. இன்றுவரை இந்நிறுவனம், கூட்டுத்தாபனமாகவே இருந்துவருகிறது.
1972 மே 22 ஆம் நாள் இலங்கை, குடியரசாக மாற்றம் பெற்றதை தொடர்ந்து இந்நிறுவனம் இன்றுவரை கொண்டிருக்கும் பெயரான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரைப் பெற்றது. இன்று இந்நிறுவனம் இலங்கை அரசின் ஊடக, தகவல் அமைச்சின் கீழ் இயங்குகிறது.
புகழ்பெற்ற ஒலிபரப்பாளர்கள்
இலங்கை வானொலி தெற்காசியாவிலேயே பல சிறப்பான ஒலிபரப்பு வல்லுனர்களை உருவாக்கியுள்ளது எனலாம். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: லிவி விஜேமான, வேணன் கொரெயா, பேர்ள் ஒண்டாட்ஜி, டிம் ஹோர்ஷிங்டன், கிறெக் ரொஸ்கோவ்ஸ்கி, ஜிம்மி பாருச்சா, மில் சன்சோனி, கிளோட் செல்வரட்னம், அமீன் சயானி, எஸ். பி. மயில்வாகனம், தேவிஸ் குருகே, விஜயா கொரெயா இன்னும் பலர்.
இலங்கை வானொலியின் வர்த்தக சேவை
1950 செப்டம்பர் 30இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வானொலியின் வர்த்தக சேவை இந்தியத் துணைக் கண்ட அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இமயமலையில் உச்சியில் கால் பதித்த ஹிலறியும் ரென்சிங்கும் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பைத்தான் முதலில் கேட்டார்கள். கிளிஃபோர்டு டோட் (Clifford Dodd) எனும் ஆஸ்திரேலியர் இவ்வர்த்தக சேவையின் இயக்குநராக இருந்தார்.
அகில இந்திய வானொலியில் சினிமா பாடல்களுக்கு 1952 இல் இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சராக இருந்த பி.வி.கேசகர் (B.V.Kesakar) விதித்திருந்த தடை தமிழ் சினிமாத் துறையினர் தங்கள் திரைப்படம் வெளியாகும் சமயம் இலங்கை வானொலியை விளம்பரத்திற்கு முற்றாகச் சார்ந்திருக்க வைத்தது. இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு ஏற்படுத்திய தாக்கத்தைத் தணிக்க அகில இந்திய வானொலி ’விவித் பாரதி’ வர்த்தக ஒலிபரப்பை 1957 ஆம் வருடம் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஆரம்பித்தது.
பின்னர் அரசியல் நிலைமையாலும் தகவல் தொடர்பு சாதனங்களில் ஏற்பட்ட உலகளாவிய மாற்றங்களாலும் இலங்கை வானொலி செலுத்திய ஆட்சி இந்திய துணைக்கண்டத்தில் இழந்தது.
இசைத் தட்டுகள்
உலகில் எந்த ஒரு வானொலி நிலையத்திலும் இல்லாத அளவு ஒரு லட்சத்திற்கும் அதிகமான சிங்கள, தமிழ், ஆங்கிலப் பாடல்களின் இசைத்தட்டுகள் இலங்கை வானொலி கொண்டுள்ளது. 1920-30 ஆண்டுகளில் வெளிவந்த மிக அரிதான 78RPM இசைத் தட்டுகளும் (அசல்) உள்ளன.

சிற்றி எப்எம், தென்றல், ஆங்கில சேவை என்பன 2009ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் செய்திமதி தொழில்நுட்பத்தில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.

Thanks Batti Express