Search This Blog

Sunday, October 2, 2011

மது குடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தும் மாத்திரை கண்டுபிடிப்பு

உலகம் முழுவதும் மது போதைக்கு ஏராளமானவர்கள் அடிமைகளாக உள்ளனர். அவர்களை மது குடிப்பதில் இருந்து கட்டுப்படுத்த தற்போது புதிய மாத்திரையை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இந்த மாத்திரை சாப்பிட்டவுடன் மது குடித்தால் ஏற்படும் போதை உணர்வு முகத்தில் உண்டாகும். அதை தொடர்ந்து அதிக அளவு மது குடிப்பது கட்டுப்படுத்தப்படும். இந்த மாத்திரை சாப்பிடுவதால் வேறு எந்த பக்க விளைவு பாதிப்பு ஏற்படாது. இந்த மாத்திரைகள் முதலில் எலிகளுக்கு சோதனை நடத்தப்பட்டது. அது வெற்றிகரமாக முடிந்தது. எனவே அந்த மாத்திரைகளை போதை அடிமைகளாக இருக்கும் மனிதர்களுக்கும் பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அந்த மாத்திரைகள் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் மூலிகைகள்

உலக மக்களிடையே நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கு காரணம் உணவு உண்ணும் முறையே. நகர வாழ்க்கையின் தாக்கத்தினாலும் போதிய உடற்பயிற்சியின்மையாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயை கட்டுபடுத்தும் மூலிகைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மஞ்சள்: கிருமி நாசினியாகவும், உடல் தேற்றியாகவும், ஜலதோஷம், காய்ச்சல் முதல் புற்று நோய் வரை அனைத்து நோய்களிலும் பயனளிப்பதாக நிரூபணம் செய்யப்பட்டுள்ள மஞ்சளானது நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது. நெல்லிவற்றலுடன் சேர்ந்து வழங்கும் போது சர்க்கரை நோயில் அதிக பலன் அளிப்பதுடன் நீண்ட கால பின் விளைவுகளைத் தடுத்து சிறுநீரக செயலிழப்பு, அதிக ரத்தக் கொழுப்பு ஆகியவற்றையும் தடுக்கிறது. நாவல்: நாவலின் பட்டை, பழம், விதை ஆகிய மூன்றும் பாரம்பரியமாக சித்த மருத்துவத்தில் நீரிழிவுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக நாவல் விதை மற்றும் விதையின் மேல்தோல் ஆகியவை இன்சுலின் அளவை அதிகரிப்பதை நவீன ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. மேலும் சர்க்கரை நோயில் உண்டாகும் சிறுநீரக, கல்லீரல் மாற்றங்களை நாவல் விதை சரி செய்கிறது. பாகற்காய்: பாகல் இலை, காய், விதைகளில் தாவர இன்சுலின் என்ற புரதச் சத்து உள்ளது. இது இன்சலின் போல் செயல்படுவதாகவும், இன்சுலின் சார்ந்த மற்றும் இன்சுலின் சாராத இருவகை நோயர்களுக்கும் பயன்படுவதாகவும், கணையத்தில் செயல்பட்டு பீட்டா செல்களை உயிர்ப்பிப்பதாகவும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. பாகற்காயானது ரத்தத்தில் சர்க்கரை அளவை 50% வரை குறைக்கிறது. இது சர்க்கரை விழித்திரை நோயைத் தடுக்கிறது. நரம்புகளின் பாதிப்பையும் சரி செய்கிறது. சர்க்கரையிலிருந்து கொழுப்பு உண்டாவதை அதிகரிப்பதாகவும், கொழுப்பில் இருந்து சர்க்கரை உருவாகி ரத்தத்தில் கலப்பதைக் குறைக்கிறது. வெந்தயம்: வெந்தையத்தில் காணப்படும் ட்ரைகோனெல்லின் அதிகரித்த ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, கொலஸ்டிராலையும் 25% அளவு குறைக்கிறது. எனவே மாரடைப்பு ஏற்படாமல் காக்கிறது. குடலில் சர்க்கரை ஊறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்கிறது. சர்க்கரைக் கொல்லி மூலிகைகள்: மேலும் வேம்பு, வேங்கை, கொன்றை, மருது, கறிவேப்பிலை, கடுகு ரோகிணி ஆகிய மூலிகைகளும் சர்க்கரை நோயில் பலன் அளிப்பதை தற்கால ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இத்தகைய சிறப்புகள் உடைய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் வில்வம் மாத்திரை, சீந்தில் மாத்திரை, கடலழிஞ்சில் மாத்திரை, நாவல்மாத்திரை, நீரிழிவு சூரணம், ஆவாரை, குடிநீர், திரிபலா கற்பம், சிறுகுறிஞ்சான் சூரணம் போன்ற பல மருந்துகளில் ஏற்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்படி எடுத்து வரலாம். மூலிகை மருந்துகள், உணவுச் சீரமைப்பு, தக்க உடற்பயிற்சி ஆகிய மும்மூர்த்திகள் உதவியுடன் சர்க்கரைநோயை வெல்ல நிச்சயம் முடியும்

உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் தூக்கமின்மை

மனிதர்களுடைய தினசரிச் செயல்களில் நித்திரை மிக முக்கிய இடத்தை பெறுகிறது. தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு நித்திரை கொண்டு ஓய்வெடுக்காமல் இருந்தால் மறுநாள் மனிதனால் ஒழுங்காக வேலை செய்ய முடியாது. நாள் முழுவதும் உழைக்கிற நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வெடுக்கத் தான் இந்தத் தூக்கம் அவசியமாகிறது. எனவே ஒவ்வொருவருக்கும் நித்திரை கொள்வது மிக முக்கியமானது. சாப்பிடாமல் கூட சில நாட்களுக்கு உயிரோடு இருந்து விடலாம். ஆனால் நித்திரை கொள்ளாது விழித்திருக்க முடியாது. ஒருவேளை நம்மால் நித்திரை கொள்ள முடியலை என்றால் என்ன நடக்கும்? சில நாட்களுக்கு மனிதன் நித்திரை கொள்ளாமல் இருந்தால் மனித இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து நோய் எதிர்ப்புத் தன்மையும் குறையும். தசைகளின் வலிமை குறையும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்காது. உடல் வெப்பநிலை மாறுபடும். இதுமாதிரி உடலுக்குச் சிக்கலை தூக்கப் பிரச்சினை ஏற்படுத்தும். உள்ளத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தும். நித்திரை கொள்ளாது இருப்பதனால் இரத்தத்தில் இருக்கும் மன அழுத்தத்துக்கு காரணமான கார்ட்டிசோல் என்கிற ரசாயனத்தின் அளவு கூடுது. ஞாபகசக்தி குறைவு, வேலைகளில் தவறுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். உடலையும், மனதையும் ஒருசேர பாதிக்கிற ஆற்றல் தூக்கமின்மைக்கு உண்டு. எனவே தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.