“ரோஸ் பட்” என்கிற சொல்லை வாழ்வின் கடைசிச் சொல்லாகச் சொல்லி மரணிக்கிற ஒருவரின் இரகசியத்தை அறியும் முயற்சியாக “சிட்டிசன் கேன்” என்கிற திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஆர்சன் வெல்ஸ் இயக்கத்தில், 1941ல் வெளியான சிட்டிசன் கேன் திரைப்படம், சார்லஸ் ஃபோஸ்ட்டர் கேனின் மிகப் பிரமாண்டமான மாளிகையில் செவிலியின் துணையுடன் தனித்திருக்கும் கேன், “ரோஸ் பட்” என்று சொல்லி மரணிக்க, அந்த ஒற்றைச் சொல்லின் வழியே அவரின் வாழ்வைப்பற்றிய புதிரை அறிவதாக அமைந்திருக்கிறது. இந்தச் சொல்லுக்கும் அவர் வாழ்வுக்கும் என்ன தொடர்பு என்பதை நண்பர்கள், எதிரிகள், காதலியின் பார்வையில் தேடிச் செல்கிறதாக கதையின் இழை பின்னலிட்டுள்ளது. ஒரு தடுப்புவேலியில் “அத்துமீறி நுழையாதே” என்கிற உத்தரவுப்பலகையில் தொடங்குகிற திரைக்காட்சியில், அந்த உத்தரவை மீறி, உள்நுழைந்து செல்கிற காட்சியில் திரைப்படத்தின் கதை தன்னைத் திறக்கிறது. பல்வேறு தடைகளைக் கடந்து பத்திரிகைத் துறையில் வெற்றிபெற்று செல்வந்தனாக ஆகி அரசியலில் தோற்று ஆடம்பரமான மாளிகையில் தனித்து மரணித்த ஒரு மனிதனின் வாழ்வு என்பது தான் ஒரு வரியாக அமைந்த கதை. ஆனால் மரணத்தைத் தொடுகிறவனின் இறுதிச்சொல் திறக்கும் கதவுகள் எண்ணற்றவை.
“ரோஸ் பட்” என்கிற அந்தச் சொல்லின் மறைபொருளைத் தேடித் பயணிக்கும் பத்திரிக்கையாளர், அதற்கு ஒருவேளை ஒருபொருளும் இல்லையோ எனத் தோல்வியுற்று திரும்ப, தேவையற்றதாகக் கருதப்படுகிற சார்லஸ் கேனின் எரிக்கப்படுகிற பொருள்களில், அடர்ந்து எரிகிற தீயின் மேல் திரைப்படக்காட்சி நகர்ந்து நிலைக்கிறது. சார்லஸ் கேன் சிறுவனாக இருந்தபொழுது அவன் அம்மா அவனுக்குப் பரிசளித்த பனிச்சறுக்கு விளையாட்டுக்கருவியும் எரியும் நெருப்பில் தூக்கியெறியப்படுகிறது. தீயில் எரிந்து கருகும் அந்தப் பனிச்சறுக்குப் பலகையில் “ரோஸ் பட்” என்று எழுதப்பட்டிருக்க மீண்டும் “அத்துமீறி நுழையாதே” என்கிற உத்தரவுப்பலகையுடன் படம் முடிவடைகிறது.
திரைப்படத்தில் தொடக்கக்காட்சிகளில் ஒன்றில், அம்மாவிடமிருந்து ஒன்பது வயதில் கேன் பலவந்தமாகப் பிரிக்கப்படும்பொழுது சார்லஸ் கேன் விளையாடிக்கொண்டிருந்த பனிச்சறுக்குப் பலகை அவனிடமிருந்து தனித்து விடப்பட்டுப் பனிப்பொழிவினால் மூடப்படுகிறது. சார்லஸ் கேனின் மரணத்திற்குப் பிறகு வேறு யாரும் முக்கியம் என்று கருதாத பழைய பொருள்களுடன் அந்தப்பலகையும் எரிந்து சாம்பலாகிறது. உண்மையில் மற்றவர்களின் கண்களுக்கு முக்கியத்துவப்படாத ஒன்றில் தான் சம்மந்தப்பட்டவரின் இரகசியம் அல்லது வாழ்வு அடங்கியிருக்கும். அதிகாரம், செல்வாக்கு, புகழ் என எல்லாம் அடைந்து, அரசியலில் தோற்று, இரண்டாவது மனைவியையும் பிரிந்து வயோதிகத்தில் தனித்திருக்கும் ஒருவனின் மனத்தில், அவன் இழந்த குழந்தைமையும் அம்மாவின் நினைவுமே ஆழப்பதிந்திருக்கிறது. இவை சார்ந்த நினைவாகவே இந்த “ரோஸ் பட்” என்கிற சொல்லை உணரமுடிகிறது. அந்தச் சொல்லுக்குப் பொருளை அறியவியலாமல் திரைப்படம் நிறைவடைகையில், இன்னொருவர் அத்துமீறி நுழைந்து கண்டறியவியலாத நினைவுகள் எல்லோருக்கும் இருக்கும் என்பதை நினைவூட்டுகிறது. மரணத்தருவாயில் ஒவ்வொருவருக்கும் ஒரு சொல் அவர்களை நிறைவு செய்யும். அந்தச் சொல்லில் பொதிந்திருக்கும் முழுமையான வாழ்வை இன்னொருவர் அறியவே இயலாது. அனேகமாக மரணிக்கிற அத்தனை ஆண்களின் நினைவுகளின் சொல்லாக பெண்ணே இருக்கிறாள். அந்த நினைவுக்குள் அயலார் யாருமே அத்துமீறி நுழையமுடியாது என்பதாக இந்தத் திரைப்படத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஒருவரின் நினைவு என்பதே சொல்லாக இருக்கிறது. சொற்களின் வழியாக மனிதர்களை நினைவு கொள்கிறோம். ஒருவர், தான் பேசுகிற சொற்களின் வழியாகவே அடையாளம் காணப்படுகிறார். சொல்லில் தெளிவும் நேர்மையும் வேண்டும் என்பதும் கொடுத்த வாக்கை எப்படியாவது காக்கவேண்டும் எனவும் தொடர்ந்து பயிற்றுவிக்கப்படுகிறது. ஒற்றைச் சொல்லுக்காகக் காத்திருப்பதும், சொற்களுக்குள் அடைக்கலமாவதும், சொற்களுக்குள் சிக்கிக்கொள்வதும், சொற்கள் பிறழ்வதும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் ஒருவர் பேசும் சொற்கள் அவரின் அடையாளம் ஆகிறது. இன்னொருபக்கம், “ஆதியிலே சொல் இருந்தது” என “சொல்லை” தெய்வீகமாக நினைக்கப் பழகியிருக்கிறோம். “இறைவாக்குச்சொல்” என்பது குறிப்பிட்ட சிலருக்கே கேட்கமுடியும் என்பதாகவும் கேட்பவர்களை இறைத்தூதர்கள் என்றும் அவர்களின் வாக்கு இறைவனின் வாக்காக “சொல்” மீதான நம்பிக்கைத் தொடர்ந்திருந்தது. சொற்களின் மீதான அவ்விதமான தெய்வீக நம்பிக்கை ஒருபக்கம் தகர்க்கப்பட்டாலும் மறுபக்கம் சகமனிதருக்கு கொடுத்த வாக்கை காப்பதும், ஒருவரின் வாக்கை மூன்றாம் மனிதர் யாரேனும் செயல்படுத்த இயலுமா எனவும் சொற்கள் பிறழாமல் வாழ்கிறவர்களையும் காணமுடிகிறது. தன்னுடைய சொற்களில் வழுவாமல் இருப்பவர்களுக்கு மத்தியில் கொடுத்த வாக்கினைக் காக்கத் தவறுகிறவர்களை இழிவாக நினைக்கத் தோன்றுகிறது. இவ்வாறு சொற்களை ஏற்றும் மறுத்தும், சொற்களின் வழியாகவே ஒட்டுமொத்த வாழ்வும் இயங்கிக்கொண்டிருக்கிறது.
வாக்கு என்பது ஒரு வடமொழிச் சொல். வாக்கு என்றால் பேச்சு, சொல் அல்லது அது உருவாக்கிய மனம். வேதகாலத்தில் வாக்கு என்பது பெண் தெய்வமாகத் தொழுகை செய்யப்பட்டது. பிற்காலத்தில் வாக்கின் தெய்வம் சரஸ்வதி என்று வழங்கப்பட்டது. ஆக, ஒரு சொல்லைக் காப்பது என்பது பெண்ணைப் காப்பது, ஒரு சொல்லை மதிப்பது என்பது பெண்ணை மதிப்பது என்பதாகத் தோன்றுகிறது. அப்படியெனில் ஒருவரின் சொல் என்பதே பெண்ணாக இருக்கிறது. என்றபோதிலும் வாழ்கிற காலம்மட்டும் காதலின் சொல் பற்றி பெண்தான் வாழ்கிறாள். ஆணுக்கு ஒரு சொல்லைவிட்டு, அந்த சொல் சார்ந்த நினைவைவிட்டு நகர்ந்து செல்வதற்கான காரணங்களும் சூழலும் அமைந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் பெண்ணுக்கு, அவள் செல்கிற தூரம்மட்டும் நேசித்தவனின் சொற்களே வாழ்க்கைத் துணையாக இருக்கிறது.
தேவாரம் பாடிய மூவருள் ஒருவரான அப்பர் என்கிற திருநாவுக்கரசரின் சகோதரி திலகவதியார். திலகவதியாரை கலிப்கையாருக்கு திருமணம் பேசி முடிவு செய்கிறார்கள். அப்பொழுது நாட்டில் போர்ச்சூழல் ஏற்பட சோழமன்னனின் படையில் இணைந்து போர்செய்ய கலிப்பகையார் செல்கிறார். போர்க்களம் சென்றிருந்த காலத்தில் திலகவதியாரின் தாய் மாதினியார் தகப்பன் புகழனார் இருவரும் இறந்துவிடுகிறார்கள். வெற்றியுடன் திரும்பி வருவேன் என்று சொல்லிச் செல்கிற கலிப்பகையாரும் போர்க்களத்தில் இறந்துவிடுகிறார். கலிப்பகையார் இறந்த செய்தி கேட்டவுடன் அவருடனேயே இறந்துவிட திலகவதியார் முயலுகிறார். தாய் தகப்பன் இறந்தபொழுது உடன் இறந்துவிட எந்தப்பெண்ணும் நினைப்பதில்லை. தன்னுடைய வாழ்வே அவன்தான் என நம்பிய ஒருவன் இறந்தபின்பு தனக்கென தனித்த வாழ்வு ஒன்றுமில்லை என பெண் நினைக்கிறாள். தமக்கையின் முடிவினை தம்பி தடுத்து உயிர்வாழும்படிக் கெஞ்சுகிறார். அதன்பிறகு, மிகச் சிறியவனான தன்னுடைய தம்பி அப்பர் எனப்பட்ட மருள்நீக்கியாரைப் பார்த்துகொள்ளும் பொறுப்பு இருப்பதால் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்கிறார். “கலிப்பகையாரின் சொற்களின் நினைவுடன் நான் என் வாழ்நாளைக் கடத்திவிடுவேன்” எனத் தன்னுடைய தம்பிடம் சொல்கிறார். தன்னை நேசித்தவன் அல்லது கணவன் சொல்லிச் சென்ற “வந்துவிடுவேன்” என்ற ஒற்றைச் சொல்லின் முழுமையாக பெண் தன்னுடைய மீதி வாழ்வையும் வாழ்ந்து நிறைகிறாள்.
அவ்விதமான காதலின் சொற்களை மனதில் ஏந்தியிருக்கும் பெண் தன்னுடைய காலங்களைக் கடந்துவிடுகிறாள் என்று சொல்வதைவிடவும் அவளுக்குக் காலங்களே இல்லை என்று சொல்லலாம். சங்கப் பெண்பாற்புலவர் பொன்மணியாரின் குறுந்தொகைப்பாடல்,
“உவரி யொருத்தல் உழாது மடியப்
புகரி புழுங்கிய புயல்நீங்கு புறவில்
கடிதுஇடி உருமின் பாம்புபை அவிய
இடியொடு மயங்கி இனிதுவீழ்ந் தன்றே
வீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர்
கையற வந்த பையுள் மாலைப்
பூஞ்சினை இருந்த போழ்கண் மஞ்ஞை
தாஅம்நீர் நனந்தலை புலம்பக்
கூஉந் தோழி பெரும் பேதையவே.”
அது ஒரு முல்லைநிலம். ஆயர்கள் ஆடுகளையும் மாடுகளையும் மேய்த்துத் திரியும் பரந்த சமவெளி. தலைவன் வெகுதூரம் பொருள்தேடிச் சென்றிருக்கிறான். மழைக்காலத்திற்குள் வந்துவிடுவதாக தலைவியிடம் கூறியிருக்கிறான். உவரி என்னும் உப்புமண்ணை உடைய கரம்புநிலம் எருது பூட்டி உழாமல் வெடித்துக் கிடக்கிறது. மழையற்று வறண்ட அந்த நிலத்தில், எருதுகள் உழுதல் செயலை செய்யாமல் கொட்டிலில் சோம்பிக்கிடந்தன. மழை பெய்தலை நீங்கிய காட்டில் புள்ளிமான்கள் வெம்மையால் புழுங்கின. இன்று, இப்பொழுது கரிய மேகங்கள் அடர்ந்து வானம் இடிக்கத் தொடங்குகிறது. இடியோசையின் முழக்கத்தில் அந்த ஓசை தாளாது பாம்புகள் தங்கள் படம் ஒடுங்கிக்கிடந்தன. அவ்வாறு மழை பொழிவதற்காகத் தாழ்ந்த மேகங்களைப் பின்தொடர்ந்து தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிகள் செயலற்றுப் போகும்படியான மாலைப்பொழுதும் வந்தது. மழை எல்லோருக்கும் இனிமை தந்தது. மேகங்களுக்காகவும் மழைக்காகவும் ஏங்கிக்கிடக்கும் பெண்மயில்கள் பூத்திருக்கும் கிளையிலிருந்து நீரில் தாவி தங்களுடைய துணையான ஆண்மயில்களை அழைத்துக் கூவுகின்றன. ஆனால் இந்த மயில்கள் பேதமையுடைவை என தோழியிடம் தலைவி சொல்கிறாள்.
பாடலில் அவள் உணர்த்துவது, உண்மையில் மழை பொழியவேயில்லை, இடி இடிக்கவேயில்லை, பாம்புகள் தங்கள் படத்தினை ஒடுக்கிக்கொள்ளவே இல்லை, மொத்தத்தில் கார்காலம் இன்னும் தொடங்கவேயில்லை. இந்தப் பெண்மையில்கள் சென்ற மழையின் நினைவில் தானாக கூவுகின்றன. கார்காலம் தொடங்கியிருந்தால் சொல்லிச் சென்ற தலைவன் திரும்பி வந்திருப்பான். அவன் சொன்ன சொல் தவறாதவன், அதனால் எருதுகளும், புள்ளிமான்களும், பாம்பின் படமும், இடியோசையும், மயிலின் அழைப்பும் தவறுதலாக இருக்ககூடும். தலைவன் சொல் எப்பொழுதும் மிகச் சரியாக இருக்கும் என்பதால் கார்காலமே இன்னும் வரவில்லை என்பதை அறியாத பெண்மயில்கள் பேதமையில் இருப்பதாக தலைவி சொல்கிறாள். தலைவனின் சொற்களுக்கு முன்பாக காலமும் பருவமும் சூழலும் அவளுக்கு நம்புவதற்கு அற்றதாக இருக்கின்றன.
தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாத எதன்மீதும் பிடிப்பற்று வாழவும் குடும்ப உறுப்பினர்களுக்கான கடமைகளைச் செய்யப் பயிற்றுவிக்கப்பட்ட பெண் அவளுக்கு விருப்பமான ஆணைக் கண்டடைந்தவுடன் நெகிழ்நிலமாகிறாள். பெண்ணின் வாழ்வில் அவள் நேசிக்கிற ஆணின் வரவுக்கு முன்பான அவளின் நிலையை முழுமையுடையதாக அவள் நம்புவதில்லை. தி.பரமேஸ்வரியின் கவிதை,
“பாலை மட்டுமே
பழகிய கண்களுக்குக் காட்டினாய்
குறிஞ்சி முல்லை
மருதம் நெய்தலையும்
உணர்த்தினாய் உணர்ந்தேன்
கரைத்தாய் கரைந்தேன்
மீண்டும் பாலைக்குள் நுழையும்படி
நேர்ந்த தருணத்தில்
எங்கோ பெய்யும் மழையின் வாசம்,
நினைவூட்டுகிறது என்னை.”
சூழலின் காரணமாக பிரிந்து செல்கிற நேசிப்புகுரியவர்கள் மனத்தில் சொற்களின் வாசமாக ஒருவர் மற்றவரை நிரப்பியபடியே இருப்பார்கள். எங்கோ பொழிகிற மழையின் வாசம் இவளை நிரப்ப, மழையின் துளிர்ப்பை எங்கோ தூரத்திலிருக்கும் அவனும் அந்தக்கணம் உணரக்கூடும். ஒருவேளை அவன் அப்போது உணராது இருந்தாலும். இவளின் நேசிப்பின் அடர்வு அவனது மரணப்படுக்கையின் நிறைவுச் சொல்லாக அவளையே நிறுத்திவிடும்.
அவன் சொல்லின் மீதான பெண்ணின் நம்பிக்கை எந்த நவீனக்காலத்திலும் மாற்றமடைவது இல்லை. அவனுடைய சொற்களை நம்புகிற பெண்ணின் மனத்திற்கு சிலசமயம் அவன் சொற்கள் பொய்யானவை எனத் தெரிந்தாலும் “அவனுடைய சொற்கள் பொய்யானது” என்று சொல்கிற அவளுடைய அறிவை அவள் நிராகரிக்கவே விரும்புகிறாள். அவ்விதமாக அவனுடைய சொற்களை நம்புகிற பெண்ணின் நினைவையே அந்த ஆண் தன்னுடைய இறுதிச் சொல்லாக வைத்திருக்கிறான். காதலியாகவோ தோழியாகவோ
மனைவியாகவோ தாயாகவோ இருக்கிற யாரோ ஒரு பெண்ணின் நினைவைக் கொண்டே ஒவ்வொரு ஆணும் தன்னை நிறைக்கிறான்.
******************************************************************************************************************
பொன்மணியார் :
இவர் எழுதிய பாடலாக குறுந்தொகை -391 மட்டும் கிடைத்துள்ளது.
இவர் ஆணா பெண்ணா என்கிற குழப்பம் உள்ளது, ஆனால் இவர் பாடியிருக்கும் பாடலின் பொருள்குறித்தும் பெயரின் பொருள் குறித்தும் (பொன், மணி என பெண்கள் பிரத்தியேகமாக இடையில் அணிந்துகொள்ளும் அணிகலன்களை குறிக்கும் பெயராக இருப்பதால்) பெண்பாற்புலவர் எனக்கருதப்படுகிறார்.
“பொன்னும் மணியும் போலும் யாழநின்
நன்னர் மேனியும் நாரிருங் கதுப்பும்” (நற்றிணை:166 )என்கிற பாடலில் பாடியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. இந்தப்பாடலின் பொருள் குறித்தும் பாடலின் சொற்கள் குறித்தும் இந்தப்பாடலும் பொன்மணியாரின் பாடலாகவும் இருக்கலாம் என டாக்டர் தாயம்மாள் அறவாணன் குறிப்பிட்டுள்ளார்.
***************************************************************************************************************
பொன்மணிமாலை:
சங்ககாலத்தில் பெண்கள் இடையில் அணிந்துகொள்ளும் அணிகலன்கள் பல இருந்தன. மேகலை(ஏழுவடம்), காஞ்சி(எட்டுவடம்), கலாபம்(பதினாறு வடம்), பருமம்(பதினெட்டுவடம்), விரிசிகை(முப்பத்திரண்டு வடம்), இவை மட்டுமல்ல, தோரை, அத்து, மனா, அரைப்பட்டிகை, அரைஞாண், உதரபந்தம், இரதனம், கடி சூத்திரம், சீர்த்தி முகம், இடைச்செறி, சதங்கை மணிக்கோவை, ஐம்படைக்கோவை, அரைச் சதங்கை, அரைவடம், அரைமூடி, கச்சைப்புறம் போன்றவை பெண்கள் இடையில் அணிகிற அணிகலன்களாக குறிக்கப்படுகின்றன.
”வண்டிருப்பன்ன பல்கா ழல்குல்“ பொருநராற்றுப்படை- 39 அல்குல் மேலே அணியப்பட்ட அணிகலன் வண்டின் ஒழுங்கைப்போல அமைந்திருப்பதாகவும் “பொன்னோடு மணிமிடை அல்குல் மடந்தை- குறுந்:274) பொன் அரைஞாணில் மணிகளுடன் கூடி பெண்கள் அரையில் அணியும் பிரத்தியேகமாக பொன் ஆபரணம் தான் பொன்மணி என அறியமுடிகிறது. இந்தவகை அணிகலன்களின் ஒட்டி வழங்கப்படுகிற இன்னொரு பெண்பால் பெயர் மணிமேகலை.
************************************************************************************************************************
நன்றி: ஓவியம் Shyam Sankar
Sakthi Jothi