Excavations at the Palaeolithic Site of Attirampakkam, South India
1.5 Million-year-old tools found near Chennai (South India)
Gudiyam Cave
மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் கடந்துவிட்டன. அவனின் பரிணாம வளர்ச்சி அளவிடற்கரியது. நனி நாகரிகம் சிறந்த வாழ்வை வெளிப்படுத்தியவர்களாகத் தமிழர்கள் திகழ்கிறார்கள். அவர்களது இத்தகைய அபரிமிதமான முன்னேற்றத்துக்கு யார் காரணம்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் எனப் பல கேள்விகள் நமக்குள் எழுகின்றன. தமிழர்களைப் பற்றி இலக்கியங்கள் கூறும்பொழுது, ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி’ என்று குறிப்பிடுகின்றன. அத்தகைய மூத்தகுடி, இந்தியாவில் முதன்முதலில் எந்தப் பகுதியில் தோன்றியது? அதன் உண்மை வரலாறு என்ன? போன்ற கேள்விகளுக்கு அகழாய்வுச் சான்றுகளின் முடிவுகளுடன், வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் வல்லுநர்களும் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்றால், தமிழகத்தின் தொன்மைவாய்ந்த பகுதிகளை அகழாய்வு செய்து அதன்மூலம் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் கூறப்பட்டால், அவை வரலாற்றுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என்பார் கே.கே.பிள்ளை அவர்கள். அது முற்றிலும் உண்மைதான். வரலாற்று நிகழ்வுகள் மீது அவரவர்க்குத் தோன்றியதுபோல் தங்களது சொந்தக் கருத்தைக் கூறாமல், அகழாய்வில் கிடைத்த தொல்லியல் சான்றுகளைக் கொண்டு உறுதிபடக் கூற வேண்டும்.
தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளைக் கவனத்தில் கொண்டும், தமிழகத் தொல்லியல் துறையின் மூலம் நடைபெற்ற அகழாய்வுகளில் பெரும்பகுதி பங்கேற்று ஆய்வு செய்தவன் என்ற வகையிலும், இவ்வகையில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் சான்றுகளை முறைப்படுத்தியும், காலவரிசையாக வரலாற்றை காண்பதே ‘தமிழக அகழாய்வுகள் காட்டும் பண்டைய தமிழர் சமூகம்’ என்னும் இப்பகுதி. (இப்பகுதியில், உரிய இடத்தில் நிழற்படங்கள் இணைத்துத் தெளிவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது).
மனிதன் தோன்றிய காலம் முதலாக அவன் பெற்ற பரிணாம வளர்ச்சிகளையும், அவன் ஆரம்பக் காலத்தில் முதன்முதலாகப் பயன்படுத்திய கல் அயுதங்கள் அவனால் தயாரிக்கப்பட்டன என்பதையும், அவன் அவற்றை எவ்வாறு தயாரித்தான், எப்படிப் பயன்படுத்தினான் என்பதிலும் தொடங்கி, அவன் வளர்ந்த விதமும், அவன் கண்டறிந்த பல அறிய கல் ஆயுதங்களின் படைப்புகளைக் குறித்தும் தகுந்த சான்றுகளுடன் இனி காண்போம்.
இத்தொடர், ஆதிகால மக்களின் வாழ்க்கை முறையில் தொடங்கி, அவன் புதிய பரிமாணத்தைப் பெற்று புதிய கற்கால மக்களாக வலம் வந்து, விவசாயத்தையும், உணவுப் பொருட்களை சேமித்தலையும் கற்ற விதம் குறித்தும், மனிதன் கூட்டமாக வாழ்ந்தமையும், கூட்டங்கள் குழுக்கலாக மாறியதும், பின்னர் அவை அரசு உருவகம் பெற்றமையும், தொடர்ந்து சங்க காலத்தின் துவக்கம் அமைந்து தமிழக வரலாற்றுக் காலம் தொடங்குவது வரையும் காணலாம்.
முதன்முதலின், கொற்றலை ஆற்றுப் படுக்கையில் வாழ்ந்த தமிழர் தம் வாழ்க்கையிலிருந்து தொடங்கலாம்.
கொற்றலை ஆறும் தமிழர் வாழ்வும் – பகுதி 1
கொற்றலை ஆறு
இந்தியத் தொல்லியல் வரலாற்றில் சிறப்புமிக்க ஓர் தனியிடத்தைப் பெற்றுள்ள பகுதிதான் கொற்றலை ஆறு. கொற்றலை ஆறு, சென்னைக்கு அருகாமையில் ஓடுகிறது. (இதை குஸஸ்தலை ஆறு என்றும் சொல்வார்கள்). இன்றைய வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைக்கு அருகில் பாலாற்றில் இருந்து கிளை பிரிந்து செல்லும் ஒரு நதியே கொற்றலையாக உருமாறி அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி வழியாகச் சென்று எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டிக்கு அருகாமையில்தான் தொல் மனிதர்கள் வாழ்ந்த பழமைவாய்ந்த பகுதிகள் அமைந்துள்ளன என்பதை மனத்தில் கொள்ளலாம்.
கற்காலம்
‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவரின்*1 வாய்மொழிக்கு ஏற்ப, மக்கள் நீர்நிலைகளை அடுத்தே தங்களது வாழ்விடங்களை அமைத்துக்கொண்டனர். அங்கு வரும் விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்தனர். காடுகளில் அலைந்து அங்கு காணப்பட்ட காய், கனிகள், கிழங்குகள் ஆகியவற்றைக் கொண்டுவந்து உணவாக உட்கொண்டனர். இந்தக் காலகட்டத்தில், இவர்களது பாதுகாப்புக்காகக் கருவிகள் தேவைப்பட்டன. அதன் அடிப்படையில் உருவானவைதான் கற்கருவிகள்.
வலிமையான கற்களைக் கொண்டு தாமே கற்கருவிகளைத் தயாரிக்க முற்பட்டனர். எளிதில் கிடைக்கக்கூடிய மரம், செடிகளைவிட, அருகாமையில் காணப்பட்ட இயற்கையான, உருண்டையான கற்கள், பயனுள்ளவை, வலிமையானவை என்பதை உணர்ந்து, அவ்வகைக் கற்களைக் கொண்டு, தமது தேவைக்கேற்ப கருவிகளைத் தயாரிக்க முற்பட்டனர். கருவிகள் செய்ய அதிக அளவில் கற்களைப் பயன்படுத்தியதால், அக்காலத்தைக் ‘கற்காலம்’ என்று குறிப்பர்.
பழைய கற்காலம்
கற்கருவிகளின் தொழில்நுட்ப அடிப்படையிலும், மண்ணடுக்குகளின் அடிப்படையிலும், பழைய கற்காலத்தை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை - முதல் பழைய கற்காலம் (Lower Palaeolithic Age), இடைப் பழைய கற்காலம் (Middle Palaeolithic Age), கடைப் பழைய கற்காலம் (Upper Palaeolithic Age) என்பவை.*2
இந்தியாவில் பழைய கற்காலம் குறித்த ஆய்வுகள்
இந்தியத் தொல்லியல் ஆய்வில், இந்தியாவிலேயே சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில்தான், முதல்முதலாகப் பழைய கற்காலக் கருவியை, 1863-ம் ஆண்டு மே மாதத்தில், இந்தியத் தொல்பழங்காலத்தின் தந்தை எனப் போற்றப்படும் சர். இராபர்ட் புரூஸ் புட் (இவரைப் பற்றி தனி கட்டுரையாகப் பிறகு பார்க்கலாம்) கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார்*3. இதனைத் தொடர்ந்து, அவரும் அவரது அலுவலர் வில்லியம் கிங் என்பவரும் சேர்ந்து, கொற்றலை ஆற்றுப் பள்ளத்தாக்கில் தீவிரமான கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, அத்திரம்பாக்கத்தில் அதிக அளவு கற்கருவிகளையும், குடியம் என்ற ஊருக்கு அருகில் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த குகைகளையும் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தனர்.
கொற்றலை ஆற்றுப் பகுதியில்தான், உலகத்தின் தொன்மையான வாழ்விடம் அமைந்துள்ளது என்பது வரலாற்று உலகுக்குச் சிறப்பு சேர்க்கும் செய்தி ஆகும். இராபர்ட் புரூஸ் புட், இந்தியாவில் தனது ஆய்வை மேற்கொண்ட பிறகு, ஆய்வாளர்கள் கோஜின் பிரௌன் (Coggin Brown - 1917), காக்பர்ன் (Cock Burn - 1888) மற்றும் அய்யப்பன் (1942) ஆகியோர், ராஜ்புத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிஸா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் பழைய கற்காலத் தடயங்கள் உள்ள பல இடங்களைக் கண்டறிந்து, ஆய்வு மேற்கொண்டனர்*4.
இராபர்ட் புரூஸ் புட் அவர்களின் மறைவுக்குப்பின் (1912), இந்த ஆய்வில் தொய்வு ஏற்பட்டு, பிறகு 1930-ல் மீண்டும் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டது எனலாம். காமியாட், பர்கிட், வி.டி.கிருஷ்ணசாமி, டி.டி.பேட்டர்ஸன் மற்றும் கே.வி.சௌந்திரராஜன் போன்ற அறிஞர்கள், மீண்டும் இப்பகுதிகளை ஆய்வுசெய்து, பல அறிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இவற்றில் குறிப்பிடத்தக்கது, கொற்றலை ஆற்றுப் பள்ளத்தாக்கில் நான்கு படிவுப் படுக்கைகள் (Four Fold Terrace System) உள்ளன என்றும், வடமதுரையில் கூழாங்கற்திரளை அடுக்கின் பகுதி (Boulder Conglomerate Horizon) ஒன்று காணப்படுகிறது என்றும் தெரியவந்தது. மேலும், இப்பகுதியில் இரண்டு வகை மண்பரப்புகளை அடையாளம் கண்டு வெளிப்படுத்தினர். அவை - இப்பகுதியில் சிறப்பாகக் காணப்படும் செம்மண் படிவங்களின் பரப்பு (Latrite Formation), மற்றும் பிளைஸ்டோசின் கால சிதைந்த செம்மண் படிவப் பரப்பு என்பன ஆகும். இப்பகுதியில் காணப்படும் பழைய கற்காலப் பண்பாட்டை, ‘சென்னைக் கைக் கோடாரி தொழிற்கூடம்’ (Madras Hand Axe Industry) என்று குறிப்பிட்டனர்*5.
கொற்றலை ஆற்றுப் பகுதியில் காணப்படும் படிவுப் பகுதியில், முதல் இரண்டு படிவுப் படுக்கைகள், வடமதுரை, அத்திரம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளன என்கிறார் வி.டி.கிருஷ்ணசாமி (1947). ஏனெனில், வடமதுரையில் காணப்படும் கற்கருவிகள் மிகவும் பழமையானவை. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகளில் அச்சூலியன் தொழில்நுட்பம் சற்று முரண்பட்டதாகக் காணப்படுகிறது. ஆனால், குடியம் மற்றும் பூண்டி சுற்றுப்பகுதிகளில், அச்சூலியன் பண்பாடே அதிக அளவில் விரவிக் காணக் கிடக்கின்றன என குறிப்பிட்டு, தனது நான்கு படிவப் படுக்கைகள் பற்றித் தெளிவுபடுத்துகிறார்*6.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், முதல் பழைய கற்காலக் கைக் கோடாரிகள் கிடைத்துள்ளன. கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களிலும், தமிழகத்தில் தென்மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களிலும், அதிக அளவில் கரடுமுரடான கற்கருவிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் மேலும், சுரண்டிகள், மூலக்கற்களான கூழாங்கற்களும் இங்கு காணப்பட்டன*7. அத்திரம்பாக்கம் பகுதியில்தான், சிறிய வடிவில் நன்கு முழுமை பெற்ற அழகிய வடிவமைப்புடன் கூடிய, பழைய கற்கால கைக் கோடாரிகள் கிடைத்துள்ளன. வேட்டையாடும் தொழிலையும், மீன்பிடித்தல் தொழிலையும் மேற்கொண்டிருந்த இவர்களிடம், கலைநயம்மிக்க அறிவும் காணப்பட்டதை இக் கைக் கோடாரிகள் மூலம் உணரமுடிகிறது*8.
பழைய கற்காலக் கற்கருவிகள், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பரவலாகக் கிடைத்துள்ளன. அவற்றை, மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அவை -
1. குகைத் தலங்களில் காணப்படும் கற்கருவிகள்
2. தரைத்தளத்தில் கிடைத்த கற்கருவிகள்
3. ஆற்றுப்படுகைகளில் காணப்படுபவை*9
தமிழகத்தில் குகைப் பகுதிகளில் காணப்படும் கைக் கோடாரிகள் என, குடியம் பகுதியில் காணப்படுபவற்றைக் குறிப்பிடலாம். தரைப்பகுதியில் காணப்படுபவற்றை, தொழில்பட்டறை வகையில், குறிப்பாக வறட்டனப்பள்ளியைக் (இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம்) குறிப்பிடலாம். ஆற்றுப்படுகையில் காணப்படுபவையாக, அத்திரம்பாக்கம், பரிகுளம் (இன்றைய திருவள்ளூர் மாவட்டம்) போன்றவற்றையும் கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன.
இடைப் பழைய கற்கால மக்கள் பயன்படுத்திய மூலக்கற்கள், படிகக் கல் வகை (Quartz), செர்ட் (Chert), அகேட் (Agate) (மணி வகை ரத்தினங்களில் ஒன்று), ஜாஸ்பர் (Jasper) (பழுப்பு நிற மணிக் கல் வகை) மற்றும் சால்சிடோனி (Chalcedony) (வெண்ணிற மணிக் கல் வகை). இதுவும் படிகக் கல் வகையைச் சார்ந்ததுதான். இவற்றில், செர்ட் வகைக் கற்களே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன*10.
இந்தியாவில் இரண்டுவிதமான தொழிற்பட்டறைகள் இருந்தன என ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளனர்*11. அவை, தென்னிந்தியாவில் சென்னைத் தொழிற்கூடம் (Madras Hand Axe Industry). அடுத்து, வடஇந்தியாவில் சோகன் தொழிற்கூடம் (Sohan Hand Axe Industry).
சென்னைத் தொழிற்கூடம்
ஒரே வகையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் காணப்படும் கற்கருவிகளின் தொகுதியை, அப்பகுதி சார்ந்த தொழில் மரபாகக் கருதினர். அவ்வாறு, இந்தியாவில் காணப்படும் கற்கருவிகளின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், பழைய கற்காலத்தை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
தமிழகத்தில், சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொற்றலை ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் கிடைக்கும் கற்கருவிகளை ‘சென்னை மரபு சார்ந்தது’ என்று பகுத்தனர்*12. சென்னைப் பகுதியின் மேற்பரப்பாய்விலும் அகழாய்விலும், அதிக அளவு கைக் கோடாரிகளே காணப்பட்டன. எனவே, இதனைக் குறிப்பாக, ‘சென்னைக் கைக் கோடாரி பண்பாடு’ (Madras Hand Axe Culture) எனக் குறித்தனர்.
இக்கற்கருவிகள் பெரும்பாலும், படிகக் கல்லில் இருந்து (Quartzite) செய்யப்பட்டவை. படிகக் கல்லில் இருந்து சில்லுகளைப் பெயர்த்து எடுப்பது எளிமையானது. எனவே, இக்கற்களை அதிகம் பயன்படுத்தியதால், இப்பகுதியில் வாழ்ந்த பழைய கற்கால மக்களை, ‘படிகக் கல் மனிதர்கள்’ (Quartze Men) என்றும் அழைக்கலாம் என்பர். இங்கு காணப்படும் பழைய கற்காலக் கற்கருவிகள், இரண்டு பக்கமும் (Bifacial) சில்லுகள் பெயர்த்த நிலையில் அமைந்துள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேதான், இங்கு கிடைக்கும் பழைய கற்காலக் கருவிகளை, சென்னைத் தொழிற்கூடத்தைச் சார்ந்தவை எனப் பிரித்தனர். சென்னைத் தொழிற்கூடத்தில் காணப்படும் கற்கருவிகள், ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்கா போன்ற இடங்களில் காணப்படும் கற்கருவிகளைப் போன்று அமைந்துள்ளன*13.
சோகன் தொழிற்கூடம்
சோகன், சிந்து நதியின் ஒரு கிளை நதி ஆகும். இங்கு இரண்டுவிதமான மரபுகள் பின்பற்றப்பட்டதாக, எச்.டி.சங்காலியா தெரிவிக்கிறார். கூழாங்கற்களைப் பயன்படுத்தி செய்யப்பட்ட கைக் கோடாரிகள் இங்கு அதிக அளவில் கிடைத்துள்ளன. இயற்கையாகக் கிடைக்கும் கூழாங்கற்கள் மற்றும் அவற்றின் சில்லுகள் பெயர்த்த கற்கருவிகளும் இங்கு கிடைத்துள்ளன. எனவே, சோகன் தொழிற்கூடத்தில் இரண்டு வகையான பண்பாடு காணமுடிகிறது. ஒன்று, கூழாங்கற் கருவி. இன்னொன்று, சில்லுகள் பெயர்த்த கற்கருவி. இந்த இரண்டு வகைக் கற்கருவிகளும் மண்ணடுக்குகளிலேயே கிடைத்துள்ளன என ஆய்வாளர்கள் குறித்துள்ளனர்.
இங்கு காணப்படும் பழைய கற்காலக் கற்கருவிகளில், ஒருமுகமாக (Unifacial) சில்லுகளைப் பெயர்த்தெடுத்த நிலையைக் காணமுடிகிறது. இந்த வகைத் தொழில்நுட்பத்தைக் கொண்டு, சோகன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் காணப்பட்ட கற்கருவிகளை சோகன் தொழிற்கூடத்தைச் சார்ந்தவை எனப் பிரித்தனர். சோகன் ஆற்றங்கரைப் படிமங்களில், அதிக அளவில் பழைய கற்கால கைக் கோடாரிகள் காணப்பட்டதால், இதை ‘சோகன் பண்பாடு’ என, டி டெரா மற்றும் பேட்டர்ஸன் (De Terra & Patterson) அழைத்தனர்*14.
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள்
பழைய கற்காலம் குறித்த அகழாய்வுகள், தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொற்றலை ஆற்றுப் பகுதியான பூண்டியைச் சுற்றியுள்ள இடங்களில்தான் அதிக அளவில் நடைபெற்றுள்ளன. பூண்டி, குடியம், நெய்வேலி, வடமதுரை, அத்திரம்பாக்கம், பரிக்குளம் போன்றவை பிற இடங்களாகும். இந்திய அரசு தொல்லியல் துறையின் கே.டி.பானர்ஜி - நெய்வேலி (1962-67), குடியம் (1962-64), பூண்டி (1965-68), வடமதுரை (1966-67), அத்திரம்பாக்கம் (1963-71); சாந்தி பப்பு (1999-2006) - சர்மா மரபியல் ஆய்வு மையம், சென்னை மற்றும் தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறை (2006) சார்பில் பல்வேறு காலகட்டங்களில், தமிழகத்தில் பழைய கற்கால அகழாய்வுகள் நடத்தப்பட்டு பல புதிய தகவல்கள் வெளிக்கொணரப்பட்டன.
தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற மண்ட உதவி இயக்குநர் து.துளசிராமன் அவர்கள், தமிழகப் பழைய கற்காலக் கற்கருவிகள் மற்றும் தொல்பழங்கால இடங்களான குடியம், அத்திரம்பாக்கம் பகுதிகளில் தீவிரமான கள ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 107 இடங்களில் பழைய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளதையும் அவர் குறித்துள்ளார். இவரது கள ஆய்வுத் தகவலின்படி, பரிக்குளம் என்ற இடத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுப் பணியை மேற்கொண்டது. இப்பணியில், து.துளசிராமன் அவர்களும் நானும், துறையின் தொல்லியல் ஆய்வாளர்களும் இணைந்து ஈடுபட்டோம். இந்த அகழாய்வின் முடிவில், இப்பகுதியில் இங்கு பழைய கற்காலக் கற்கருவிகள் தயாரிக்கும் தொழிற்பட்டறை இயங்கிவந்தது கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
அகழாய்வுகள் ஒரு பார்வை -
பூண்டி
கே.டி.பானர்ஜி தலைமையில், இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை, 1965-66-ம் ஆண்டு அகழாய்வை மேற்கொண்டது*15. இங்கு, ஏழு வகை மண் அடுக்குகள் வெளிக் கொணரப்பட்டன. இடைப் பழைய கற்காலத்தின் பிந்தைய காலத்தின் அசூலியன் வகைக் கற்கருவிகள் இங்கு கிடைத்துள்ளன*16.
நெய்வேலி
திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டிக்கு அருகில் உள்ள ஊர். இங்கு, 1962-63-ல் கே.டி.பானர்ஜி தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, 1963-64-ம் ஆண்டுகளிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு பல கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கைக் கோடாரி, வெட்டுக் கருவிகள், கூர்முனைக் கருவிகள் போன்ற, இடைப்பட்ட பழைய கற்காலக் கருவிகளும் கிடைத்தன. இங்கு, நீண்ட கத்தி போன்ற அமைப்புடைய அச்சூலியன் தொழில்நுட்பத்தைச் சார்ந்த கற்கருவிகளும் கிடைத்துள்ளன*17.
குடியம்
திருவள்ளூர் மாவட்டம், பூண்டியை அடுத்து, குடியம் எனும் பழங் கற்கால மக்கள் வாழ்விடமான, இயற்கையான குகைத்தலத்துடன் கூடிய ஊர்ப்பகுதி அமைந்துள்ளது. இக்குடியம் குகைத்தலம், கூனிபாளையம், பிளேஸ்பாளையம் ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இவை, பூண்டியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றன. இங்கு மொத்தம் 16 குகைகள் உள்ளன. இக்குடியம் குகையின் உட்பகுதியில், ஒரு அகழ்வுக் குழியும், வெளியில் இரண்டு அகழ்வுக் குழிகளும் இடப்பட்டன*18.
இவ்வாய்வில், இரண்டு வகையான கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. குழியின் அடிப்பகுதியில், அச்சூலியன் வகையைச் சார்ந்த கற்கருவிகளும்; மேல்பகுதியில், இடைக்கால அச்சூலியன் வகையைச் சார்ந்த கற்கருவிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. அச்சூலியன் வகைக் கற்கருவியில் இருந்து, நுண் கற்காலக் கருவிகளின் வளர்ச்சி நிலைகள் வரை தொடர்ச்சியாக இடைவெளியின்றி இங்கு காணப்படுகின்றன. இங்குள்ள மண்ணடுக்குகளும், முறையான வளர்ச்சி நிலையையே காட்டுகின்றன.
இங்கு கிடைத்த கைக் கோடாரி, கிழிப்பான்கள் (Cleaver), சுரண்டிகள் (Scrapper), வெட்டுக்கத்திகள் (Blade) போன்ற கற்கருவிகள் குறிப்பிடத்தக்கவை. இக் கற்கருவிகளில், அதிக அளவில் சில்லுகள் பெயர்த்த நிலையைக் காண முடிகிறது. இவையே பின்னர், நுண் கற்கருவிகள் தொழிற்கூடத்துக்கு வழிவகுக்கக் காரணமாக அமைந்துள்ளதை இதன்மூலம் அறியமுடிகிறது. குகைகளில் வாழ்வதைவிட வெளியிலேயே அதிகமாக வாழ்ந்துள்ளனர் என்ற கருத்தை, இங்குக் கிடைத்த கைக் கோடாரிகளின் அளவை வைத்து, இங்கு அகழாய்வு மேற்கொண்ட கே.டி.பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இங்கு கிடைத்துள்ள பழைய கற்காலக் கற்கருவிகள் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் செதுக்கப்பட்டவை. வடிவத்தில் இதயம் போன்றும், வட்ட வடிவிலும், நீள்வட்ட வடிவிலும், ஈட்டிமுனை போன்ற கற்கருவிகளும் இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கூர்மையான முனைகளும், பக்கவாட்டின் முனைகளும் கருவியை மிகவும்; கூர்மைபடுத்துவதற்காக நுன்னிய சில்லுகளைப் பெயர்த்துள்ளதும் நன்கு தெளிவாக அறியமுடிகிறது. இவை அனைத்தும் சென்னை கைக் கோடாரி மரபைச் சார்ந்தவை என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்தாகும். அடுத்து, இங்கு சேகரிக்கப்பட்ட கைப்பிடியுடன் கூடிய ஓர் கற்கருவி மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் தொழில்நுட்ப அறிவு காண்போரை வியக்கச் செய்கிறது. இக்கற்கருவி ஆமை வடிவத்தில் அமைந்துள்ளது. இதனை து.துளசிராமன் அவர்கள் தனது கள ஆய்வின்போது கண்டறிந்தார். இக்கருவியை ஆமை வடிவ (Micoqurin) கைக் கோடாரி என்றே குறித்தனர். இவை மட்டுமின்றி, கற்கருவிகள் செய்யப் பயன்படுத்திய கல் சுத்திகள் பலவும் இவ்வாய்வில் சேகரிக்கப்பட்டன. இக் கல் சுத்திகள், பல வடிவங்களில் கிடைத்துள்ளன. இவை அனைத்தும், தமிழகத்தில் பரிக்குளம் அகழாய்வில்தான் முதன்முதலாக கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்திரம்பாக்கம்
திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையில் இருந்து சத்தியவேடு செல்லும் சாலையில் 56 கி.மீ. தொலைவில், கொற்றலை ஆற்றின் அருகே குன்றுகளும் காடுகளும் நிறைந்த பகுதியின் நடுவே, வரலாற்றுச் சிறப்புமிக்க அத்திரம்பாக்கம் அமைந்துள்ளது. இந்த ஆற்றை ஒட்டியுள்ள மேட்டில் இருந்து, பழைய கற்காலக் கற்கருவிகளை, 1863-ல் இராபர்ட் புரூஸ் புட் கண்டறிந்தார். மேலும், இங்கு காணப்படும் மேட்டுப்பகுதியில் உள்ள கூழாங்கற்கள் படிவடுக்கில், கைக் கோடாரிகளும், அவற்றுடன் மனித எலும்புப் பகுதியின் தொல்லுயிர்ப் படிமம் (fossil) ஒன்றையும் அவர் கண்டெடுத்தார்*19. இவருக்குப் பிறகு, வி.டி.கிருஷ்ணசாமி, பேட்டர்ஸன், எச்.டி.சங்காலியா போன்ற தொல்லியல் அறிஞர்கள் ஆய்வு செய்து, பழைய கற்காலக் கருவிகள் செய்யப்பட்ட தொழிற்கூடமாக அத்திரம்பாக்கம் விளங்கியது எனத் தெரிவித்தனர்.
இங்குதான், பழைய கற்காலத்தைச் சார்ந்த முதல், இடை, கடைநிலைப் பழைய கற்காலக் கற்கருவிகள் கிடைத்துள்ளன. இவற்றை, சென்னை மரபு சார்ந்தவை என்றும், இவை சென்னைத் தொழிற்பட்டறையில் தயாரானவை என்றும் தரம் பிரித்துக் காட்டினர்.
உலகப் புகழ்பெற்ற பழைய கற்காலத் தடயங்களைக் கொண்ட பகுதியாக இப்பகுதி திகழ்ந்தது. இங்குதான், 1964-65-ல் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, நான்கு மண்ணடுக்குகள் இருப்பதைக் கண்டறிந்தனர். இப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில், பழைய கற்கால மக்கள் வாழ்ந்தமைக்கான எச்சங்கள் காணப்படுவதைக் கண்டறிந்தனர்*20.
1999-2004-ம் ஆண்டுகளில், சாந்தி பப்பு என்பவர், சென்னை, சர்மா மரபியல் கல்வி மையம் மூலம், அத்திரம்பாக்கம் பகுதியில் அகழாய்வுப் பணியை மேற்கொண்டு சில கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்*21. அகழாய்வில், முதல், இடை, கடைப் பழைய கற்காலப் பண்பாடுகள் தொடர்ச்சியாக நிலவியிருந்ததை மண்ணடுக்குகளின் ஆய்வு மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
2,50,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய கற்கால மக்கள் வாழ்ந்த தரைப்பகுதி, அச்சூலியன் வகைக் கற்கருவிகளுடன் வெளிப்படுத்தப்பட்டது. மேலும், மாட்டினுடைய நீள்வட்ட வடிவமான 17 காலடித் தடங்கள் (Bovid Hoof Impression), மூன்று மீட்டர் ஆழத்தில் பழைய கற்கருவிகளுடன் காணப்பட்டன. பழைய கற்கால மனிதனுடன் வாழ்ந்த விலங்கினுடைய காலடித் தடங்கள், இந்தியாவிலேயே இங்குதான் முதன்முறையாக அகழாய்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 3.6 மீட்டர் ஆழத்தில், அச்சூலியன் கால தரைப்பகுதியும், அங்கு பழைய கற்காலக் கைக் கோடாரிகளுடன், மூலக் கற்கலான பெரிய பெரிய கூழாங்கற்களும் காணப்பட்டதாக சாந்தி பப்பு குறிப்பிட்டுள்ளார்*22.
கடைக் கற்காலப் பண்பாடு (Upper Palaeolithic Phase) இருந்ததற்கான சான்றுகள், மண்ணடுக்குகளில் துல்லியமாகக் காணப்படுவதை முதன்முறையாக இங்கு கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்து, விலங்குகளின் தொல்லுயிர்ப் படிமங்களாக, எருமை, கொம்புகளற்ற மான், குதிரை போன்றவற்றின் பற்கள் இங்கு கிடைத்துள்ளன.
எனவே, அத்திரம்பாக்கம் 5,00,000 ஆண்டுகளுக்கு முன்னர், வெப்ப மண்டலச் சமவெளியாக இருந்தது என்பதை, வெப்ப மண்டலச் சமவெளிப் பகுதியில் வாழும் விலங்குகளின் எச்சங்கள் காணப்பட்டதன் மூலம் உணரலாம் எனத் தெளிவுபடுத்தியுள்ளார். அதன் அடிப்படையில், அத்திரம்பாக்கம் அகழாய்வின் காலத்தைக் கீழ்க்கண்டவாறு பகுத்துள்ளனர். அவை -
முதல் பழைய கற்காலம் (Lower or Early Palaeolithic): 5,00,000 - 2,50,000 ஆண்டுகள்.
இடைப் பழைய கற்காலம் (Middle Palaeoloithic): 2,50,000 - 30,000 ஆண்டுகள்.
கடைப் பழைய கற்காலம் (Upper Palaeolithic): 30,000 - 10,000 ஆண்டுகள்.
இவ்வாறு, தனது அகழாய்வு மூலம், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் அத்திரம்பாக்கம் எவ்வாறு சிறப்பு பெற்றிருந்தது என்பதையும், சென்னை தொழில்நுட்பத்தையும் இதன்மூலம் சாந்தி பப்பு தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், அத்திரம்பாக்கம் தொல்லுயிர்ப் படிமங்களின் அடிப்படையில், இதன் காலத்தை 15,00,000 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆய்வு அறிக்கை தெரிவிப்பதாக, புதிய கருத்தாக அண்மையில் அவர் குறிப்பிட்டுள்ளார்*23.
சாந்தி பப்புவின் இந்தக் காலக்கணிப்பு ஆய்வுக்குரியது. மேலும், முதல் மற்றும் இடைப் பழைய கற்காலத்தைச் சார்ந்த கைக் கோடாரிகள் அதிக அளவில் இங்கு கிடைத்துள்ளன. கடைப் பழைய கற்காலம், நுண் கற்காலத்தின் துவக்க நிலை என்பதையே, இந்த அகழாய்வு மண்ணடுக்குகள் வெளிப்படுத்துகின்றன.
வட மதுரை
ஆரணி ஆற்றின் கிழக்குப் பகுதியில், சென்னையில் இருந்து 42 கி.மீ. வட மேற்கே அமைந்துள்ளது வடமதுரை. இங்கு, பழைய கற்காலக் கருவிகள் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கற்கருவிகளை ஆய்வு செய்த பேட்டர்ஸன் (1939) மற்றும் வி.டி.கிருஷ்ணசாமி (1947) இருவரும், கருவிகள் மேல் படர்ந்திருந்த மென்பாசிப் படலத்தின் (Pattination) அடிப்படையிலும், தொழில்நுட்ப அடிப்படையிலும் மூன்று பிரிவாகப் பிரித்தனர்*24.
கருக்கற்கள், உருண்டையான பெரிய அளவிளான சரளைக் கற்களில் இருந்து வந்தவை என்றும், அதனை மேலும் இரண்டு பிரிவாகப் பிரித்து, கரடுமுரடானவை என்றும் அச்சூலியன் வகையைச் சார்ந்தவை என்றும் கற்கருவிகளைப் பகுத்தனர். இங்கு அகழாய்வு மேற்கொண்ட கே.டி.பானர்ஜி, தனது அகழாய்விலும் இதேபோன்று மூன்று பிரிவுகளைச் சேர்ந்த கற்கருவிகள் கிடைத்துள்ளதை உறுதிசெய்துள்ளார்.
இங்கு வெட்டுக்கருவிகள், கிழிப்பான்கள், சுரண்டிகள் மற்றும் கைக் கோடாரிகள் போன்றவை கிடைத்துள்ளன. தொழில்நுட்ப அடிப்படையில், வடமதுரை அகழாய்வில் காணப்படும் தொழிற்கூடமானது, பழமையான அச்சூலியன் (Early Acheulian) வகையைச் சார்ந்தது என பானர்ஜி தெரிவிக்கிறார்*25. மேலும், இவ்வகழ்வாய்வில் கிடைத்த கற்கருவிகளை, அதன் மீது படர்ந்துள்ள மென்பாசிப் படலத்தின் அடிப்படையில் கடைக் கற்காலத்தைச் சார்ந்தவை எனக் கூறுகிறார். மென்பாசிப் படிவ அமைப்பைக் கொண்டு காலத்தை நிர்ணயிப்பது ஏற்புடையதாக இல்லை. இதன் தொழில்நுட்ப அடிப்படை மற்றும் மண்ணடுக்கு நிலை இவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு காலத்தைக் கணிப்பதே சிறந்தது.
பரிக்குளம்
திருவள்ளூர் மாவட்டம், பூண்டிக்கு தென்மேற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது பரிக்குளம். இங்கு, தென்பகுதியில் காணப்படும் செம்மண் சரளைக்கல் மேடு (Laterite Gravel Deposit), சுமார் 5,00,000 ஆண்டுகளுக்கு முன் நிலவிய பிளைஸ்டோசின் காலத்தில் தோன்றியதாகும். இங்கு நான்குவிதமான படிவ அடுக்குகள் அமைந்துள்ளன. அவை –
சிதைந்த சரளைக்கல் அடுக்குகள் (Detrital Laterite Deposit)
சிறு கூழாங்கற்களுடன் கூடிய சரளைக்கல் (Laterite Mixed with Pebble)
பெருங்கற்களுடன் கூடிய சரளைக்கல் (Laterite Mixed with Boulders)
கெட்டியான களிமண் பகுதி (Sriperumbudur or Avadi Shale)
இந்த நான்கு படிவங்களும், மண்ணடுக்கில் தெளிவாகக் காணப்பட்டன*26.
பரிகுளம் அகழாய்வில், இரண்டுவிதமான பழைய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன*27. அவை -
அபிவில்லியன் - அச்சூலியன் பண்பாட்டைச் சேர்ந்தவை.
அச்சூலியன் பண்பாட்டைச் சேர்ந்தவை.
அபிவில்லியன் கைக் கோடாரி
ஃபிரான்ஸ் நாட்டின் சோம பள்ளத்தாக்குப் (Somme in France) பகுதியில் உள்ள அபிவில்லி (Abbeville) (அ) அபிவில்லியன் (Abbevillean) என்ற இடத்தில் கிடைத்த கைக் கோடாரிகள், அவ்விடத்தின் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன*28. தொழில்நுட்ப அடிப்படையில் காணும்பொழுது, இவற்றில், அதிக அளவில் சில்லுகள் பெயர்க்கப்படாமல் ஆழமாகப் பெயர்க்கப்பட்டும், அதிக வேலைப்பாடும் இல்லாமல் இருக்கும்.
அச்சூலியன் கைக் கோடாரி
அச்சூலியன் கைக் கோடாரியும் இடத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. இவற்றில், அதிக அளவில் சில்லுகள் பெயர்த்தும், வேலைப்பாடுகள் நிறைந்தும் காணப்படும். முழுமை பெற்ற அழகிய இலை வடிவ அமைப்பைக் கொண்டதாக இருக்கின்றன.
ஃபிரான்ஸ் நாட்டில் சோம் பள்ளத்தாக்கில் உள்ள அச்சூல் (Acheul) பகுதியில்தான், இக்கோடாரிகளை பொ.மு. 1836-ல் பௌச்சர் (Boucher) கண்டறிந்தார்*29.
பரிக்குளம் அகழாய்வில் 243 கற்கருவிகள் சேகரிக்கப்பட்டன. அவை தரம்வாரியாகப் பிரித்து பட்டியலிடப்பட்டுள்ளன*30. இவற்றின் மேல் பகுதியில், அதிக காலம் மண்படிவத்தில் தேங்கி இருந்ததால் ஏற்படும் மென்பாசிப் படலம் காணமுடிகிறது. இங்கு அகழாய்வில் சேகரிக்கப்பட்ட கற்கருவிகள், வரலாற்றுச் சிறப்புமிக்கவை. இவற்றை விரிவாக ஆய்வு செய்து, தொழில்நுட்ப விவரங்களோடு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது*31.
கைக் கோடாரிகள் (Hand Axe)
இதய வடிவிலான கைக் கோடாரிகள் (Cordate Hand Axe)
முக்கோண வடிவ கைக் கோடாரிகள் (Triangular Hand Axe)
வெட்டுக்கத்திகள் (Cleavers)
சுரண்டிகள் (Scrappers)
சிறிய வெட்டுக் கருவிகள் (Small Choppers)
கூர்முனைக் கருவிகள் (அ) துளையிடும் கருவி (Points)
வட்டுகள் (Ovate)
கல் சுத்தி (Stone Hammer)
இதுபோன்ற பல்வேறுவிதமான கற்கருவிகள் வகைப்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கற்கருவிகளில் அதிக அளவில் சில்லுகள் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி பழைய கற்காலத்தில் கற்கருவிகள் செய்யும் தொழிற்கூடமாக (Factory Site) விளங்கியிருக்க வேண்டும்.
Courtesy:
http://www.dinamani.com/…/%E0%AE%A4%E0%A…/article3034481.ece