“இலக்கியத்தைப் போல, திரைப்படப் பாடல்கள் என்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடியவை அல்ல. ஆனால், அந்தப் பாடல்களும் கூட, இலக்கியத்துக்கு நிகராக நிலைத்து நிற்க முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக கவி.கா.மு.ஷெரீப் அவர்களின் பாடல்கள் உண்டு. இன்றைக்கும் ‘ஏரிக்கரையின் மேலே போறவளே, பெண் மயிலே’ என்கின்ற பாடலைக் கிராமப் புறத்திலே உள்ளவர்களெல்லாம் பாடக்கேட்டு, அவர்கள் அந்தப் பாட்டிலே, ஒரு மகிழ்ச்சியை உருவாக்கிக் கொண்டு நடப்பதைக் கண்டு நான் பூரிப்படைந்திருக்கிறேன்.”
என்று, கவி கா.மு.ஷெரீப் அவர்களின் திரைப்படப் பாடல்களைக் குறித்து, எழுதியிருக்கிறார் கலைஞர் கருணாநிதி அவர்கள். இந்த வரிகள், கலைஞரின் சுய சரிதை நூலான, நெஞ்சுக்கு நீதி எனும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமா உலகில், இன்றைக்கும் புகழ் மங்காது ஜீவித்துக் கொண்டிருக்கும் பராசக்தி திரைப்படத்தின் வசனங்களை உருவாக்கியவர் கலைஞர் என்பது யாரும் அறிந்த செய்தி. ஆனால், சினிமா உலகில் கலைஞர் காலடி எடுத்து வைத்த வரலாறு, எத்தனை பேர் அறிந்த செய்தி?
இன்றைய சினிமா உலகத்தைப் போல அல்ல, அன்றைய சினிமா உலகம். அது ஒரு இரும்புக் கோட்டை. அதில் நுழைவது அவ்வளவு எளிதானது அல்ல.
”ஒளி” எனும் இதழொன்றை கவி கா.மு.ஷெரீப் அவர்கள், திருவாரூரில் நடத்திக் கொண்டிருந்தார். அந்த சமயம், கலைஞர் அவர்களின் எழுத்தைக் கண்டு, அவரை ஒளி-யில் எழுத வைத்தார். பின்னாட்களில், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வசன கர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும், ஆஸ்தானக் கவிஞராகவும் ஒளி வீசிக் கொண்டிருந்த கவி அவர்கள், எழுத்தின் மூலம் அறிமுகமான கலைஞரை, தனது சிபாரிசில் சினிமா உலகத்திற்கு கொண்டு வந்தார். ஆம், சேலம் மாடர்ன் தியேட்டரில்தான் கலைஞரின் சினிமா உலகம் ஆரம்பமானது. அவரின் வசனங்கள் தமிழகம் முழுமைக்கும் சென்றடைந்தது. இதற்கான திறவுகோலை ஏற்படுத்திக் கொடுத்தவர்தான் கவி கா.மு.ஷெரீப் அவர்கள்.
இதுமட்டுமா, கவியரசர் கண்ணதாசனை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்து, நட்பை உருவாக்கிக் கொடுத்தவரும் கவி கா.மு.ஷெரீப் அவர்கள்தான்.
இன்றைக்கு நூற்றாண்டு கடந்து நிற்கும் கவிஞர் அவர்கள், பண்முகங்களைக் கொண்டவர். 20-ம் நூற்றாண்டின் தமிழக அரசியலில், இன்றுள்ள மூத்த அரசியல்வாதி நல்லக்கண்ணு அவர்களுக்கு ஒப்பானவராக திகழ்ந்தவர். இன்று தமிழ் தேசிய பார்வைகள் கூர்மை அடைந்திருக்கிறது. தமிழ் தேசிய அரசியல் எங்கும் கேட்கத் தொடங்கியிருக்கிறது. இந்தத் தமிழ் தேசிய அரசியல் களத்தில், அரசியல் செய்பவர்களின் பேனர்களில் ம.பொ.சி தவிர்க்க இயலாதவராக இடம் பெற்றிருப்பார். ஆனால், ம.பொ.சி அவர்களைவிடவும் தமிழ் தேசிய அரசியல்வாதியாய் தனது இறுதிக் காலம் வரை வாழ்ந்து மறைந்தவர் கவி கா.மு.ஷெரீப் அவர்கள் என்பது இங்கு அறியப்படாமலே போன வரலாறாக உள்ளது.
அரசியல் மட்டுமல்ல, இவர் சிறுவயதில் மாட்டு வண்டி ஓட்டுபவராகவும், விவசாயியாகவும் இருந்துள்ளார். பின்னாட்களில், கவிஞராக, விடுதலைப் போராட்ட வீரராக, திரைப்படப் பாடலாசிரியராக, வசன கர்த்தாவாக, எழுத்தாளராக, பதிப்பாளராக, வரலாற்று ஆசிரியராக, சொற்பொழிவாளராக, ஆன்மீகவாதியாக என பல பரிணாமங்களைப் பெற்றுத் திகழ்ந்தவர்.
இந்த நூற்றாண்டு சகாப்த மனிதனின், எண்ணற்ற தளங்களைத் தேடிய ஆய்வின் சிறிய தொகுப்புதான் இந்தக் கட்டுரை.
1914-ம் வருடம், ஆகஸ்டு மாதத்தின் 11-வது தேதியில், திருவாரூர் மாவட்டத்திலுள்ள கொரடாச்சேரி எனும் ஊருக்கு அருகிலுள்ள அபிவிரூத்திஷ்வரத்தில் பிறந்தார் கா.முகம்மது ஷெரீப் அவர்கள். காதர்ஷா இராவுத்தர் – முகம்மது இப்ராஹீம் பாத்து அம்மாள் ஆகியோருக்கு பிறந்த ஒரே வாரிசு ஆவார் இவர்.
இவரின் பெற்றோர்களது ஊர், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள, விநாயகர் கோட்டையாகும். இங்கிருந்து தொழில் நிமித்தமாக, இவரின் பெற்றோர்கள், திரூவாரூறிற்கு வந்துள்ளனர். கவிஞர் பிறந்தது அபிவிருத்தீஷ்வரம் என்றாலும், அவர் சிறு வயதில் ‘வேளுக்குடி’ எனும் கிராமத்திலேயேதான் வளர்ந்தார்.
தனது 14-ம் வயதிலேயே தந்தையை இழந்து நின்ற கவிஞர், முறைப்படி பள்ளி சென்று எந்தக் கல்வியையும் கற்காதவராகத்தான் இருந்தார். தனது தந்தை இருந்தபோது, அவரின் தூண்டுதலில் திண்ணைப் பள்ளியில் சில காலம் பயின்றதோடு, தமிழ் இலக்கியங்களின்பால் கவனமும் பெற்றார். நாகூருக்கு அருகிலுள்ள பொதக்குடி எனும் ஊரில், அரபிப் பாடம் பயின்றிருக்கிறார் என்பதைத் தாண்டி, அவரின் மற்ற எல்லாக் கல்விக்கும் பின்புலம் அவரின் தாயாராகவே விளங்கியிருக்கிறார்.
சிறு கடை ஒன்றில் எழுத்தராகப் பணியாற்றிவிட்டு வீடு திரும்பும் கவிஞருக்கு, தமிழின் தொன்மையான இலக்கிய நூல்களை உண்ணக் கொடுத்திருக்கிறார், அவரின் தாயார் பாத்து அம்மாள். இவரின் தொடர்ந்த உற்சாக மூட்டல்களில், இலக்கியங்களைத் தாண்டி, எழுத்துலகின் பலதரப்பட்ட சுவையைக் கண்டுணர்ந்த கவிஞர், தனது 15-ம் வயதில் ’தந்தை பெரியாரின்’ சுயமரியாதை இயக்கத்தின் வாயிலாக, முதல் அரசியல் பயணத்தையும் துவக்கியுள்ளார்.
தனது 18-ம் வயதில் கவிதை எழுதத் தொடங்கிய கவிஞரின், முதல் கவிதை 1933-ம் ஆண்டில், ‘குடியரசு’ ஏட்டில் வெளியானது. இதுவே இவரின் கவிதைக்கான முதல் அங்கீகாரமாக உருவானது. இந்தக் கவிதை அநேக இடங்களில் பெரியாரைப் போற்றியதாக அமைந்திருந்தது.
1934-ம் ஆண்டில் கவிஞர் மண வாழ்க்கையைக் கண்டார். அவரின் மனைவி முகம்மது பீவி அவர்கள், உடல் நலக் குறைவால் சில ஆண்டுகளிலேயே மரணித்துப் போய்விட்டார். மனைவியின் பிரிவில் சில காலம் கழித்த கவிஞர், 1940-ம் ஆண்டில் ஜமீலா பீவி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். ஒன்பது ஆண்களும், இரண்டு பெண்களும் என பதினோரு பிள்ளைகளுக்குத் தந்தையாக விளங்கிய கவிஞர், பன்னிரண்டாவதாக ஒரு வளர்ப்பு மகளையும், எடுத்து வளர்த்தினார். இந்த வளர்ப்பு மகளின் கதை, கவிஞரின் மனிதநேயத்திற்கான தன்னிகரற்ற சான்று என்றே சொல்லலாம்.
வயதின் மோகத்தால், ஒருவனால் கர்ப்பிணியாக்கப்பட்டப் பெண், பின்னர் அவனால் கைவிடப்பட்டு விடுகிறாள். இவள் வேறு யாருமல்ல, கவிஞருடைய நண்பரின் மகள்தான். இந்த நண்பர், ஒரு பிராமணச் சமூகத்தைச் சார்ந்தவர்.
தன் மகளுக்கு நேர்ந்த துயரத்தைச் சொல்லி, கருவை கலைக்கப் போவதாக கவிஞரிடம் சொல்லியிருக்கிறார், பிராமண நண்பர். உடனே கவிஞர் அவர்கள், ‘ஒரு உயிரை அழிக்கும் உரிமை நமக்கு இல்லை’ என்று சொல்லி அவரைத் தடுத்ததோடு, அவரின் மானத்தைக் காக்கும் பொருட்டு, அந்தப் பெண்ணை தனது வீட்டில் அழைத்து வந்து வைத்துவிட்டார்.
கர்ப்பிணியான அந்தப் பெண்ணையும், தனது மனைவியையும், கவிஞர் தான் வளர்ந்த ஊரான லெட்சுமாங்குடிக்கு அருகிலுள்ள வேளுக்குடிக்கு அனுப்பி வைத்தார். முறையாகக் கவனிக்கப்பட்ட அந்தக் கர்ப்பிணிப் பெண், தன் சிசுவை ஈன்றெடுத்தாள். இதன்பிறகே அவளை, நண்பரின் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார் கவிஞர்.
அந்தப் பெண் ஈன்றெடுத்த சிசுதான், கவிஞரின் வளர்ப்பு மகள். ஆம், பிராமண நண்பரின் மானம் காக்க, ஒரு இசுலாமிய நண்பரின் உதவிதான், அந்த வளர்ப்பு மகள். தன்னலமற்ற, யாரும் செய்திட முன்வராத இந்த உதவியை, மனிதநேயம் என்கிற ஒற்றை வார்த்தை கொண்டு வர்ணித்துவிட இயலாது.
நண்பரின் மானம் காத்த கவிஞருக்கு, நண்பர் செய்த உபகாரம், தனது மகளின் திருமணத்திற்கு அழைப்பு கொடுக்காமல் புறக்கணித்ததுதான். இந்தச் செய்தியை அறிந்த கவிஞரின் மனைவி, இதுபற்றி தன் கணவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், ‘என்னைக் காண்பதில் அவர்களுக்கு சங்கடம் ஏற்படும். குற்ற உணர்வு வரும்’ என்பதால் அழைக்காமல் விட்டிருப்பார்கள் என சமாதானம் செய்து வைத்தார். இந்தத் தன்மைகள் இங்கு எவருக்கு வரும்? இப்படிக் கவிஞரின் மேன்மை குணங்கள் ஒன்றா? இரண்டா? ஓராயிரம் உண்டு அவர் வாழ்வில். சுருங்கச் சொன்னால் இவர் ஓர் வாழ்வின் இலக்கணம் என்றே சொல்லலாம்.
1939-ல், தனது 25-ம் வயதில் “தமிழின் தொன்மையைப்” பாடினார் கவிஞர். இது ‘சந்திரோதயம்’ எனும் இதழில் வெளியாகிப் பலரின் கவனத்தைப் பெற்ற ஒன்றாக இருந்திருக்கிறது. இந்த வயதிலேயே கவிஞரின் கவிப்புலம் இவ்வளவு செம்மை அடைந்திருக்கிறது எனில், இவரின் தாய் இவருக்கு எந்த அளவிற்கு கல்வியைக் கொடுத்திருப்பார் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. ஒரு முஸ்லீம் பெண்மணி தமிழ் இலக்கியங்களை, தன் பிள்ளைக்கு விருந்தாய் கொடுத்திருக்கிறார் எனில், மொழிப் பற்று இங்கு எவ்வளவு மிகுந்திருக்கிறது என்பதனை நாம் ஆராய வேண்டும்.
ஆனால், இன்றைய இசுலாமியர்கள் இதில் பின்தங்கி, முன்னோர்களின் அர்ப்பணிப்புகளை, நிர்மூலமாக்கிக் கொண்டுள்ளோம். தாய் மொழியினின்றும் வெகுதூரம் சென்று கொண்டுள்ளோம். இந்தச் சூழல் நம்மில் எப்படி விளைந்தது என்கிற காரணிகளைத் தேடி, அவைகளைக் களைய வேண்டிய கட்டத்தில் நாம் இன்று இருக்கிறோம். கவிஞரின் வாரிசுகள் நாம் என்பதனை சற்று மீளாய்வு செய்துப் பார்க்க நாம் தவறிவிடக் கூடாது.
கவி உலகில் கால் பதித்த கவிஞர், 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் களம் கண்டு, சுதந்திரப் போராட்ட வீரராக உருவெடுத்தார். இது தொட்டு அவரின், விடுதலைக் கனல்கள் அவரின் வாழ்க்கை முழுவதும் பரவிக் கிடப்பதை நம்மால் காண முடியும். தன்னுடைய கொள்கையின் உறுதியான நிலைப்பாடு, அவரின் மரணம் வரை மாறாத ஒன்றாக இருந்துள்ளது.
பெரியாரின் சுயமரியாதைக் கழகம், காங்கிரஸ் என அரசியலில் பயணம் செய்த கவிஞர், இந்திய அரசியலில் நம்பிக்கையற்றுப் போய், ‘தேசியவாத’ அரசியல் பார்வைக்குத் திரும்பினார். அதே சமயம் பெரியாரின் மீதும், காந்தியடிகளின் மீதும் மிகுந்த மரியாதையும், நட்பும் கொண்டிருந்தார்.
’தமிழ் தேசியம்’ தனித் தமிழ் நாடு போன்ற கொள்கையில் மிகுந்து போயிருந்த கா.மு.ஷெரீப் அவர்கள், ம.பொ.சிவஞானம் அவர்களின் தலைமையிலான ‘தமிழரசுக் கழகத்தில்’ தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர், தமிழரசுக் கழகத்தின் பொதுச் செயலாளராக உருவெடுத்து, அக்கட்சியின் தலைவர்களில் ஒருவராகத் தமிழகம் எங்கும் வலம் வந்தார். இந்தக் கால கட்டத்தில், ‘செங்கோல்’ எனும் ம.பொ.சி அவர்களின் இதழில் தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வந்தார் கவிஞர். இவரின் கட்டுரைகள் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியதைவிட, தமிழரசுக் கழகத்தின் கொள்கைகளை ஒவ்வொரு தமிழனுக்கு கொண்டுபோய் சேர்த்ததை எவராலும் மறுக்க முடியாது. ஆனால் ம.பொ.சி-யை தெரிந்த தமிழ் தேசியவாதிகளுக்கு, கவிஞர் காணப்படாமலேயே போய்விட்டார் என்பது எவ்வளவு துரதிர்ஷ்டவசமானாது.
‘சிவாஜி’ எனும் இதழொன்றில் துணை ஆசிரியராகப் பணியில் அமர்ந்து, ஒரு பத்திரிக்கையாளனாகப் புதிய அவதாரத்தை எடுத்தார் கவிஞர். பின்னர், 1948-ம் ஆண்டில், திருவாரூரில் ‘ஒளி’ எனும் மாத இதழை ஆரம்பித்து, அதன் ஆசிரியராகப் பொறுபேற்றார்.
ஒளி இதழைத் தொடர்ந்து, 1952 முதல் 1969 வரை, ‘தமிழ் முழக்கம், சாட்டை’ போன்ற இதழ்களையும் நடத்தியிருக்கிறார் இவர். இந்த இதழ்கள் மாதமாகவும், மாதமிருமுறையாகவும், தின இதழாகவும் கூட வெளி வந்திருக்கின்றன. இப்படி பத்திரிக்கை உலகில் கோலோச்சிய அதே வேளை, திரைப்படத் துறையிலும் ஒளி வீசியிருக்கிறார் கா.மு.ஷெரீப்.
1948-ம் ஆண்டில், பேரறிஞர் அண்ணாவின் ‘சந்திரமோகன்’ நாடகத்தில், “திருநாடே” என்று கவிஞர் எழுதிய பாடல், அக்காலத்தில் மிகப்பெரும் அதிர்வலையையும், வரவேற்பையையும் ஏற்படுத்திய வரலாற்றைக் கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து. ’கொலம்பிய கம்பெனி ரிக்கார்டுகளுக்காக’ வசனமும், பாடலும் எழுதத் தொடங்கிய கவிஞர், 1948-ல் வெளிவந்த ‘மாயாவதி’ எனும் திரைப்படத்தில் முதன் முதலாகப் திரைப் பாடல் எழுதினார். இதே காலத்தில், ‘பெண் தெய்வம்’, ‘புதுயுகம்’ போன்ற படங்களுக்கு வசனமும் எழுதி இருந்திருக்கின்றார் கவிஞர்.
கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பு, 1946-ம் ஆண்டில் வெளியானது. இது “ஒளி” எனும் தலைப்பைப் பெற்று, ஒளி வீசியதை, தமிழ் இலக்கிய உலகம் என்றைக்கும் மறைந்து போய் விட முடியாது. இந்தக் கவிதைத் தொகுப்பிலும், கவிஞரின் விடுதலை வேட்கையை நம்மால் காண முடியும். இதில் இடம்பெற்றுள்ள பல கவிதைகள், விடுதலை கீதங்களாக ஒலித்துக் கொண்டுள்ளன. பாட்டில் புரட்சி செய்த பாரதியைப் போற்றும் நம் தமிழ் மக்கள், கவிஞரின் சுந்திர கீதங்களை சுவாசிக்க மறந்து போய்விட்டனர்.
தத்துவப் பாடலாசிரியர் என அறியப்படுகிற கண்ணதாசனுக்கெல்லாம் மூத்தவரும், வழிகாட்டியுமாக விளங்கியிருக்கிறார், கவிஞர் அவர்கள். இதனைக் கண்ணதாசனின் ஒரு கூற்றிலிருந்தே நம்மால் அறிய முடிகிறது.
“அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே, அவரின் கவிதைத் தொகுதி வெளிவந்துவிட்டது. “ஒளி” எனும் தலைப்புடைய அந்தத் தொகுதியை, நான் சுவைத்திருக்கிறேன்.”
என்கிறது கவியரசர் கண்ணதாசனின், காமு ஷெரீப் அவர்களைப் பற்றிய கூற்று.
இதனைத் தொடர்ந்து கவிஞர் கா.மு. அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப் பாடல்களை இயற்றியுள்ளார். அப்படி அவர் இயற்றி, காலத்தால் இன்றளவும் தனித்துவத்தோடு விளங்கும் பாடல்களில் சில:
”சிட்டுக் குருவி சிட்டுக் குருவி செய்தி தெரியுமா?, பொன்னான வாழ்வு மண்ணாகிப் போகுமா?, வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா, பணம் பந்தியிலே குணம் குப்பையிலே, அன்னையைப் போல ஒரு தெய்வமில்லை, ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா?, பூவா மரமும் பூத்தது பொன்னும், மணியும் விளைந்தது, வானில் முழு மதியைக் கண்டேன். வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன், நான் பெற்ற செல்வம் நலமான செல்வம், உலவும் தென்றல் காற்றினிலே, வாராய் நீ வாராய்” போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம். இவைகளைத் தவிர்த்து இன்னொன்றை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
அது திருவிளையாடல் படத்தில் இடம் பெற்ற, இறுதிப் பாடலான “பாட்டும் நானே, பாவமும் நானே” என்கிற பாடலாகும்.
இந்தப் பாடல் திரைப்படத்தில் இடம் பெற்றபோது, டைட்டிலில் கண்ணதாசனின் பெயரை பாடலாசிரியர் என்று போட்டிருக்கிறார், அப்படத்தின் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் அவர்கள்.
இந்தப் பாடலை, ‘சிவலீலா’ எனும் திரைப்படத்திற்காகத்தான் கவிஞர் எழுதிக் கொடுத்திருக்கிறர். ஆனால் இந்தப் படத்தின் வேலைகள் இடையிலேயே நின்று போய்விட்டது. அதனால் சிவலீலா படத்தின் தயாரிப்பாளர் எம்.ஏ.வேணு அவர்களும், திருவிளையாடல் படத்தின் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் அவர்களும் கவிஞரின் பாடலை திருவிளையாடலில் பயன்படுத்திவிட்டு, கவிஞரின் பெயருக்கு மாற்றாக, கண்ணதாசனின் பெயரை போட்டு திருவிளையாடலை கவிஞரிடம் செய்துவிட்டனர். இந்தச் செய்தி, பின்னாட்களில் ’எழுத்தாளர் ஜெயகாந்தன்’ அவர்களின் மூலமாக வெளி உலகத்திற்கு தெரியவந்தது.
இதனை அறிந்த ஜெயகாந்தன் அவர்கள், இதுகுறித்து கவிஞர் அவர்களிடத்தில் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், ‘யார் பெயராக இருந்தாலென்ன, பாடல் நன்றாகத்தானே இருக்கிறது’ என்று பெருந்தன்மையாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாராம். கவிஞருக்கு வேண்டுமானால் அது சாதரணமானதாகத் தெரிந்திருக்கலாம், ஆனால் சிந்தித்துப் பாருங்கள் இந்தச் சகிப்புத்தன்மை யாருக்காவது வருமா என்று!
பிறருடைய படைப்பை எடுத்து அதில், தன்னுடைய பெயரைப் போட்டுக் கொள்ளும் உலகில், தன்னுடைய படைப்பை பிறர் பயன்படுத்தியது தெரிந்தும் கவிஞர் அமைதியாய் கடந்திருக்கிறார். இந்த மனம் இன்று நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்கும்? இப்படிப்பட்ட பண்பாளரை, இசுலாமியக் கோட்பாட்டின் படி வாழ்வின் ஒவ்வொரு கணங்களையும் அமைத்துக் கொண்டு வாழ்ந்த கொள்கை மறவரை, இசுலாமியர்கள் இன்று மறந்து நிற்பதும், அவரை அறிந்தவர்கள் புறக்கணிப்பதும் எவ்வளவு பெரிய துரோகம் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
கவிஞரின் இந்தச் சகிப்புத் தன்மையினை, “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” எனும் தனது புத்தகத்தில், 110-113 வரையிலான பக்கங்களில் குறிப்பிட்டிருக்கிறார், ஜெயகாந்தன் அவர்கள்.
மேலும் இந்தப் பக்கங்களில் கவிஞரின் பண்புகளைப் பற்றிய ஒரு செய்தியையும் சொல்லியிருக்கிறார் அவர். கொஞ்சம் இதில் கருத்தூன்றிப் பாருங்கள். சினிமா என்றாலே சீரழிவுவாதிகள்தான் இருப்பார்கள் என்கி்ற பிம்பத்தை, கவிஞரின் வாழ்வு எப்படி உடைத்தெறிக்கிறது என்பதனை இதில் அறிந்து கொள்ளலாம்.
“ஷெரீப் பல நற்பண்புகளின் உறைவிடமாய் இருந்தார். திரையுலகத் தொடர்பிருந்தும், அதன் சீரழிவுகளில் சிக்கிக் கொள்ளாத உயர் பண்பு அவரிடம் இருந்தது. ஒரு கவிஞர் வறுமையிலும் செழுமையாக எப்படி வாழ்வது என்பதை, நான் அவரிடமிருந்துதான் கற்றேன். கவிஞர் ஷெரீப் ஒரு முஸ்லீமாக இருந்த போதும் தீவிரமான சைவர். அதுகுறித்து அவரை நாங்கள் பரிகாசம் செய்வதுண்டு.
நான் புகைப் பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தவன். புகைப்பிடிப்பதை கண்டித்ததால், நான் ஒரு கம்பெனியில் வேலையைவிட்டே வந்துவிட்டேன். ஆனால், ஷெரீப் அவர்கள் புகைப் பிடிப்பவரல்ல. அதனால் நான் அவரின் எதிரில், ஒரு மரியாதைப் பண்பு கருதிப் புகை பிடிக்காமல் இருக்கும் பழக்கத்தை மேற்கொண்டேன்.”
என்று கவிஞரின் பண்புகளையும், கவிஞரின் மேல் தான் வைத்திருக்கும் மரியாதையையும் குறிப்பிட்டிருக்கிறார் ஜெயகாந்தன் அவர்கள். கவிஞரின் நற்பண்புகள், ஜெயகாந்தன் அவர்களிடம் எவ்வளவு தாக்கங்கள் ஏற்படுத்தியிருந்தால் புகைப் பிடிக்கும் பழக்கத்தை கவிஞரின் முன் கைவிட்டிருப்பார் ஜெயகாந்தன்? என்பதை நாம் கவனிக்கத் தவறிவிடக் கூடாது.
இன்னும் கவிஞரின் திரைத் துறை பணிகள் பலவற்றை நம்மால் காண இயலுகிறது. அலிபாபாவும் 40 திருடர்களும் எனும் படத்தில் இடம் பெற்ற, ‘மாசிலா உண்மைக் காதலே’ எனும் பாடலுக்கு பல்லவியை அமைத்துக் கொடுத்தவர் கவி அவர்களே. இந்தப் பாட்டின் சரணத்தை, மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் அவர்கள் அமைத்திருக்கிறார். இதுபோக, சில பாடல்களில் மருதகாசி அவர்களோடு சேர்ந்தும் வரிகளை எழுதிக் கொடுத்திருக்கிறார் கவிஞர் அவர்கள்.
இப்படித் திரையுலகில் புகழின் உச்சஸ்தானத்தில் இருந்தும், கவிஞர் வறுமையான வாழ்க்கையிலேயே வாழ்ந்து கொண்டிருந்தார். இந்தத் தருணத்தில் கவிஞரின் திரையுல நண்பர்கள் கவிஞரிடத்தில் ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார்கள்.
“முதலமைச்சர் உங்களுக்கு நன்கு தெரிந்தவர் தானே, அவரிடத்தில் ஒரு வீடு கேளுங்களேன்” என்ற கோரிக்கைதான் அது.
அதற்கு கவிஞர் சொல்லியிருக்கிறார், “நான் வல்ல இறைவனையன்றி, வேறு எவரிடமும் கையேந்த மட்டேன்” என்று. இப்படியானவரை, சினிமாவில் பாட்டெழுதினார் என்கிற காரணத்தாலோ என்னவோ, இசுலாமியச் சமூகம் திரும்பிப் பார்க்காமலேயே போய்விட்டது. இது அவர் கொண்டிருக்கும் இறை நம்பிக்கைக்கான அழுத்தமான சான்று. ஒரு இடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து ஒன்றைச் சொல்லினார், “ஷெரீப் அவர்கள் ஒரு உண்மையான இசுலாமியர்” என்று. வைரமுத்துவிற்கு புரிந்தது, நமக்கு ஏன் புரியாமல் போய்விட்டது? இந்த வரலாற்றுப் பிழையை மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பில் நாம் இருந்து கொண்டுள்ளோம் என்பதையாவது அறிய வேண்டும்.
இதேபோல் எம்.ஜி,ஆர் அவர்கள், கவிஞரை பலமுறை அழைத்திருக்கிறார். ஆனால் கவிஞர் செல்ல மறுத்ததோடு, அழைக்க வந்தவர்களிடம், “நான் ராமாவரம், போகாவரம் வாங்கி வந்திருக்கிறேன்” என்று பதில் கூறி, அழைப்பை நிராகரித்துள்ளார். அந்தளவிற்கு கவிஞர் வறுமையை விரும்பி வாழ்ந்துள்ளார்.
மேலும் இன்னொரு சம்பவத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். கவிஞரின் மனைவி தன் மகனின் வேலைக்கு சிபாரிசு செய்யும்படி கேட்டு, கலைஞர் கருணாநிதி அவர்களிடம் சென்றுள்ளார். அதற்கு கலைஞர் அவர்கள், “அண்ணன் அவர்களுக்கு சிபாரிசு செய்வது பிடிக்காதே. நீங்கள் அவரிடமிருந்து கடிதம் வாங்கி வாருங்கள்” என்று சொல்லியிருக்கிறார். இந்தச் சம்பவத்தை கவிஞரிடம் அவர் மனைவி சொல்லியிருக்கிறார். அதற்கு கவிஞர் கண்டித்ததோடு, கலைஞர் பதவியில் இல்லாத போதன்றி நான் அவரைச் சந்திக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
எவ்வளவு பெரிய சுயமரியாதைக்காரராக கவிஞர் வாழ்ந்திருக்கிறார் பாருங்கள். இந்தப் பண்பினை கவிஞர் மிக இயல்பாகவே தன்னில் கொண்டிருந்திருக்கிறார். கலைஞரிடம் தான் நெருங்காததற்கு இன்னொரு மிக முக்கியமான காரணம் யாதெனில், அது கவிஞர் கொண்டிருந்த தமிழ் தேசிய அரசியலே ஆகும். கலைஞரோ திராவிட அரசியலில் இருப்பவர் அல்லவா!
திரைத் துறையில் இருந்தும் வறுமை நீங்காத கவிஞர், திரைத் துறையில் இருந்து திடீரென வெளியேறினார். இனிமேல் சினிமாவில் பாடல் எழுதப் போவதில்லை என அறிவிப்புச் செய்தார். இதனைச் சொல்லுகிறபோது அவர், புகழின் உச்சியில் இருந்திருக்கிறார் என்கிற செய்தி, நாம் உற்று நோக்கிப் பார்க்க வேண்டிய ஒன்று.
“கவிஞன் என்பவன் தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளை மாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக் கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் என பொறுப்புடனும் எழுத வேண்டும்.”
என்று ஒருமுறை தனது கட்டுரை ஒன்றில் எழுதினார் கவிஞர். தான் எழுதிய வரிகளுக்கு, தன்னைவிட நேர்மையாளன் இன்னொருவன் இல்லை என்பதனை தெளிவாக்கினார், சினிமா உலகில் இருந்து விலகியதன் மூலம்.
தேர்த் திருவிழா எனும் படத்தில், “ஏ...குட்டி, என்னா குட்டி, எகிறிப் போகும் கன்னுக் குட்டி” என்ற பாடலைக் கேட்டதும் கவிஞர் மனம் நொந்து போய் சினிமாவில் பாடல் எழுதுவதை நிறுத்திக் கொண்டார். காரணம் அதிலிருந்த ஆபசமான வார்த்தைகள்தான். தரம் தாழ்ந்து போன சினிமாவில், இனி எழுத மாட்டேன் என்று அவர் சொன்னது அதற்குத்தான். ஒரு கவிஞனின் பொறுப்புணர்வு என்ன என்பதை விளக்கியவர் அல்லவா கவிஞர் அவர்கள். அந்தப் பொறுப்புணர்வை காக்கும் பொருட்டே அவர் சினிமா உலகில் தொடர முடியாமல் வெளியேறினார். இப்பேற்பட்டவரை இனம் காணாமல் போய்விட்டதே இந்த இசுலாமியச் சமூகம்? இது எவ்வளவு பெரிய இனத் துரோகம்?
மேலும், எங்கள் வீட்டுப் பிள்ளை படத்தில், “நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்” என்கிற பாடல் வெளியானது. இதனைக் குறித்து கவிஞர் கூறுகையில், “என்னை சினிமாவை விட்டுத் துரத்தியப் பாடல் இது” என்று குறிப்பிட்டார்.
இந்தப் பாடல் குறித்த தன்னுடைய கண்டனத்தை, 07.11.1986-ல் வெளியான வண்ணத்திரை இதழில் இப்படி பதிவு செய்தார் அவர்:
“ஒழுக்கக் கேடு இது. தமிழ்க் கலாச்சாரமும், பெண்மையும் இதுபோன்ற பாடல்களால் இழுக்குப்படுகின்றன.”
தான் நேசிக்கின்ற தமிழுக்காக, தமிழ் கலாச்சாரத்திற்காக, இசுலாமிய கொள்கை நெறிகளுக்காக கவிஞர் எப்படிப்பட்ட வாழ்வை துறந்திருக்கிறார்! மேலும், இதில் கவிஞர் பெண்ணினத்தின் மீது கொண்டிருந்த மரியாதைப் பண்புகளையும் இந்தக் கூற்றில் அழுத்தமாகக் காண முடியும்.
சினிமா உலகில் சுற்றியடித்துக் கொண்டிருந்த போதே கவிஞர் தீவிர அரசியலிலும் ஈடுபட்டுத்தான் கொண்டிருந்தார்.
ஆங்கில மொழித் திணிப்பிற்கு எதிரான போராட்டங்களிலும், இந்தி எதிர்ப்பு போராட்டங்களிலும், தமிழரசுக் கழகத்தின் முன்னனி தலைவராய் இருந்து சுழன்றிருக்கிறார் கவி கா.மு.ஷெரீப் அவர்கள்.
சென்னைய ஆந்திராவிலிருந்து மீட்டெடுத்தப் போராட்டமாகட்டும், கன்னியாகுமரியை கேரளத்திடமிருந்து காப்பாற்றிய போராட்டமாகட்டும், திருத்தணியை தமிழகத்திற்கு திருப்பிய போராட்டமாகட்டுமென எல்லை மீட்புப் போராட்டங்களில் வீரியத்தோடு போராடியும் சிறைகளைக் கண்டவராகவும் இருந்திருக்கிறார் கவிஞர்.
தை மாதப் பிறப்பன்று பொங்கல் விழா கொண்டாடப்பட வேண்டும் என்கிற கோரிக்கையில் வென்று காட்டினார்கள் தமிழரசுக் கழகத்தினர். இந்தக் கோரிக்கைகாவும், கவிஞர் பலவாறு ம.பொ.சி அவர்களோடு தோள் நின்று உழைத்திருக்கிறார்.
இதேபோல, “மெட்ராஸ்” என்று ஆங்கிலப் பெயரைத் தமிழில் மாற்ற வேண்டும் என்று தமிழரசுக் கழகம் தீர்மானம் போட்டது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற முற்றுகைப் போராட்டங்களை நடத்தியது. இந்த முற்றுகைப் போராட்டத்தில், ம.பொ.சி கலந்து கொள்ளவில்லை. வழக்கமாக ம.பொ.சி ஸ்தானத்தில் கவிஞர்தான் அதிகமாகத் தலைமை வகிப்பார். அப்படி இந்தப் போராட்டத்திலும் கவிஞரே தலைமை வகித்து, தொண்டர்களை தினந்தோறும் சரியாக அணிவகுத்துக் கொண்டு போராடினார். அப்படிப் போராடி, இதிலும் சிறைகளைக் கண்டார் கவிஞர்.
இந்தியா சுதந்திரத்திரம் அடைந்தற்குப் பிறகு, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு “தியாகி பென்ஷன்” கொடுக்கப்பட்டது. அப்படி இது கவிஞருக்கும் அறிவிக்கப்பட்டபோது, கவிஞர் அதனை ஏற்காமல் நிராகரித்துவிட்டார். தான் செய்த தொண்டு பணத்திற்காக அல்ல. அதனை பணத்தைக் கொண்டு அளவிடுவது அநாகரீகமானது என்று எண்ணியோ என்னவோ, கவிஞர் அவைகளைத் தூக்கி எறிந்தார். கவிஞர் லட்சங்களுக்காக வாழ்ந்தவர் அல்ல, லட்சியங்களுக்காக வாழ்ந்தவர் என்பதனை இந்தச் சம்பவம் படம் பிடித்துக் காண்பிக்கிறது.
மேலும், 1953-ம் ஆண்டு கன்னியாகுமரி ஈத்தா மொழியில் “தெற்க்கெல்லை விடுதலைப் போராட்ட ஆதரவு மாநாடு” தமிழரசுக் கழகம் மற்றும் எல்லைப் போராட்ட ஆதரவாளர்களின் கூட்டமைப்பில் நடைபெற்றது. இந்த மாநாட்டிலும் கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்கள் முன்னனி வகித்தார். இதில் ம.பொ.சி அவர்களும் பங்கு கொண்டார். இந்த மாநாட்டின் செயல்பாட்டாளராக கொடிக்கால் செல்லப்பா எனும் சேக் அப்துல்லா அவர்கள் இருந்து செயல்பட்டிருக்கிறார்.
இப்படி ம.பொ.சி அவர்களோடு இணைந்து தேசியவாத அரசியலில் தீவிரமாகச் சுழன்ற கவிஞர். ம.பொ.சி அவர்களின் கொள்கைத் தடுமாற்றங்களால் கட்சியைவிட்டு வெளியேறிவிட்டார்.
தேசியவாதம் பேசிக் கொண்டிருந்த ம.பொ.சி அவர்கள், தனது கட்சியை திமுக-விடம் ஒப்படைத்து, தேசியவாத அரசியலில் இருந்து பின் வாங்கியதே இதற்குக் காரணம். இந்தத் தருணத்தில் கவிஞரின் விலகல் குறித்து, ம.பொ.சி அவர்கள் கூறுகையில்,
”பழுத்த இலை உதிர்ந்துவிட்டது” என்று சொல்லியிருக்கிறார்.
அதற்கு கவிஞர் அவர்கள், “பட்ட மரத்திலிருந்து, பழுத்த இலைதானே உதிரும்” என பதில் அறிக்கை அளித்துள்ளார்.
இத்தோடு ம.பொ.சி அவர்கள் வேறெதையும் பேச இயலாமல் வாயடைத்துப் போய்விட்டார்.
தமிழரசுக் கழகத்தின் ஆரம்பம் முதல் தன்னை ஈடுபடுத்தி, அர்ப்பணித்து, பொதுச் செயலாளராகவும், பல போராட்டங்களில் தலைவராகவும் சுழன்ற கவிஞரை ம.பொ.சி அவர்கள் அரசியலில் மட்டும் கை கழுவவில்லை. மாறாக, ”எனது போராட்டம்” என்கிற தலைப்பில் தான் எழுதிய 1007 பக்கம் கொண்ட புத்தகத்தில் ஒரே ஒரு இடத்தில் கூட கவிஞரின் பெயரைக் குறிப்பிடாமல் இருந்திருக்கிறார் அவர்.
எப்படியானவரின் பெயரை இருட்டடிப்பு செய்திருக்கிறார் தெரியுமா?
ம.பொ.சி-யின் 50-வது பிறந்த தின விழாவிற்கு 50-பவுன் நகையை மேடையில் அளிப்பதாக கட்சியினர் தீர்மானித்து முடிவெடுத்தனர். ஆனால் இறுதி நேரத்தில் அவர்களுக்கு அந்தளவிற்கு பணம் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனைத் தெரிந்து கொண்ட கவிஞர் அவர்கள், “சொன்னது சொன்னபடி செர்ணத்தைக் கொடுத்துவிட வேண்டும்” என்று சொல்லிவிட்டு, தனது மனைவியின் நகைகளை விற்று, மீதித் தொகைக்கு ஈடு செய்திருக்கிறார். கவிஞரின் வாக்கு வன்மைக்கு இதைவிட இன்னொரு சான்று வேண்டுமா என்ன?
பின்னாட்களில் பவுனிற்காக கொடுக்கப்பட்ட தொகையில்தான் ம.பொ.சி ‘பியட்’ காரை வாங்கிப் பயன்படுத்தினார்.
இப்படிபட்ட கவிஞரின் பெயரைத் தான், தனது புத்தகத்தில் இருட்டடிப்பு செய்திருக்கிறார் ம.பொ.சி அவர்கள்.
ம.பொ.சி அவர்களின் இந்த மோசமான செயல்பாடுகளை, வளவன் என்கிறவர் தனது, ”நெஞ்சத் திரையில் நினைவுக் கோடுகள்” எனும் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
“சிலம்புச் செல்வர், தன்னல வெறியாலும், பதவிப் பித்தாலும், கடுமையாக வளர்ந்துவிட்ட தமிழரசுக் கழகத்தை, திமுக எனும் கடலில் கரைத்த பெருங்காயமாய் ஆக்கிக் கரைத்துவிட்டு, கையையும் கழுவி விட்டு, பேராயக் கட்சியில் போய்ச் சேர்ந்தார்.
’எனது போராட்டம்’ எனும் தனது 1007 பக்க நூலில் ஒரு சாதனையை மறைமுகமாகச் செய்துள்ளார். அது, தமிழரசுக் கழகத்தில் தனக்கு அடுத்த தலைவராகவும், 10 ஆண்டுகளுக்கு பணியாற்றியவரும், பல்வேறு போராட்டங்களில் மாபெரும் பங்கு வகித்தவருமான கவி கா.மு.ஷெரீப் பற்றிய செய்திகளை மறைத்துவிட்ட சாதனையாகும்.”
என்று உண்மையை உலகிற்கு எடுத்துப் பேசியிருக்கிறார் வளவன்.
இத்தனை பெரிய துரோகத்தை யாரால் தாங்கிக் கொள்ள இயலும்? ஆனால் கவிஞர் இவைகளையும், கனத்துப் போன இதயங்களோடு கடந்து போயிருக்கிறார்.
கவிஞரின் போராட்டங்கள், சமூகத் தொண்டு எனப் பார்த்தால் அது நீண்ட பட்டியலில் செல்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்தியச் சுதந்திரத்திற்கான போராட்டங்கள், சுதந்திரத்திற்குப் பிறகு எல்லை மீட்புப் போராட்டங்கள், மொழி மீட்புப் போராட்டங்கள், புதிய தமிழக அமைப்பு, மன்னர் ஒழிப்பு, தமிழ் ஆட்சி மொழிக்கான போராட்டங்கள், தமிழகப் பெயர் அமைப்பு, தமிழிசை இயக்க ஈடுபாடு, பாரதிப் பாடல்கள் தேசியமயமாக்கிடுதல், நாடக வரிச் சட்ட நீக்கம், திராவிட நாடு தட்சின ராஜ்ய எதிர்ப்பு, தொழிலாளர் போராட்டம் போன்றவற்றைக் கூறலாம்.
இப்படியான தீவிர அரசியலில் சுழன்ற கவிஞர், மா.பொ.சி-யின் தூரோகத்தாலும், தமிழக அரசியலின் திசை மாற்றங்களாலும் சற்று தள்ளி நின்று கொண்டார். சினிமாவை விட்டு அவர் வெளியேற என்ன காரணமோ, அதே காரணங்கள்தான் அரசியலிலிருந்தும் அவர் வெளியேறியது. வடிவங்களும், சம்பவங்களும் வேறாக இருக்கலாம் ஆனால் காரணம், தூய்மை, நேர்மை இவைகள் இல்லாது போனதுதான். அதனால்தான் கொள்கை மறவரால் இரண்டிலுமே நீடிக்க இயலவில்லை. கொஞ்சம் அனுசரித்துப் போயிருந்தார் என்றால், இவர் கோடிக்கு அதிபராகியிருப்பார். அரசியலில் பல பதவிகளைப் பெற்று வாழ்ந்திருப்பார். ஆனால் கவிஞரை இதிலிருந்து தடுத்தே வந்துள்ளது, தான் ஏற்றுக் கொண்ட இசுலாமிய கொள்கையும், தமிழ் தேசிய அரசியலும்.
தமிழகம் எப்படி இருக்க வேண்டும் எனக் கவிஞர் குறிப்பிடுகிறார்:
“அன்றையத் தமிழகம் உலகின் முன் உயர்ந்த நாடாக, புகழ் மிக்க நாடாக, பொருள் வளமிக்க பூமியாக, கற்றோர்களையும், கவி வாணர்களையும், வீரர்களையும் கொண்டு திகழ்ந்தது. இன்றோ நம் தமிழர்கட்கு, இன, மொழி நாட்டுப் பற்றுதலுமில்லை, பக்தியுமில்லை. இந்த நிலை மாற, நாம் நமது மக்களை தேச பக்தர்களாக, மொழி பக்தர்களாக, இனப் பற்றுதல் உடையவர்களாக ஆக்கிடுதல் வேண்டும்.”
என்கிற வார்த்தைகள்தான் அது. இது 1959-ம் ஆண்டில் கவிஞர் அவர்கள் சாட்டை எனும் இதழில் எழுதிய ஒரு கட்டுரையின் வரிகளாகும்.
கவிஞரின் தேசிய உணர்வினை படம் பிடித்துக் காட்டும், பொன்னான வரிகளாகும் இவைகள். இன்று யார் யாரையோ தேசிய இனத்தின் அடையாளங்களாக, தமிழ் தேசியவாதிகள் முன்னிறுத்திக் கொண்டுள்ளனர். அவர்களின் பார்வைக்கு கவிஞர் எப்படித்தான் விடுபட்டுப் போனாரோ?
1970-ம் ஆண்டில் தமிழகமெங்கும் சுற்றிய கவிஞர் அவர்கள். ஒவ்வொரு ஊர்களிலும் சீறாப்புராணத்தின் தொடர்ச் சொற்பொழிவுகளை ஆற்றினார். கவிஞர் அவர்கள் சீறாப்புராணத்தின் வரிகளுக்கு உரைநடை வாசிக்க, அதனை குமரி அபூபக்கர் அவர்கள் பாடலாக மக்கள் மத்தியில் எடுத்து வைப்பார்.
சீறாப்புராணத்தின் சொற்பொழிவுகளுக்காக தமிழகம் முழுமைக்கு பயணித்த கவிஞர் ஒரு வழிப்போக்கனாகவே வாழ்ந்துள்ளார். இரவு நேரத்தில் மசூதிகளில் படுத்துறங்கியிருக்கிறார். தமிழகத்தின் இரண்டு முதலமைச்சர்களின் வளர்ச்சிக்கு காரணமானவர், வறுமையில் வாடிய கோலத்தை எண்ணி நம்மாலேயே சகித்துக் கொள்ள இயலவில்லை. கவிஞர் எப்படித்தான் வாழ்ந்தாரோ!
கவிஞரின் சொற்பொழிவுகளைக் குறித்து, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறுகிறார்:
“சீறாப்புராணம் சொற்பொழிவைக் கேட்ட பிறகு, அவரை ஒரு சொற்பொழிவாளராக அறிந்து மகிழ்ந்தேன்”. என்று.
இதேபோல கவிஞரின் கவித்துவத்தைக் குறித்து,
“தம்பி ஷெரீப் கவிஞன் என்று கண்டு கொண்டேன். அவருடையப் பாக்களைப் படித்து, அதனின்றும் இன்பத்தைக் கங்கு, கரையின்றி அனுபவிப்பீர்களாக.”
என்று 1946-ம் ஆண்டில் பாரட்டியுள்ளார், அறிஞர் வ.ரா அவர்கள்.
“கலைமாமணி விருது பெற்ற கவிஞர். அருந்தமிழ் இலக்கியங்கள்
இலக்கணங்கள் அனைத்தையும் பாங்குறக் கற்றுத் தெளிந்தவர்கள்”
என்று போற்றுகிறார், சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள்.
இப்படிப் பலராலும் பற்பல பாரட்டுகளைப் பெற்றிருக்கிறார் கவிஞர். அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்துள்ளது. ஆனாலும் இந்த விருதுகளைக் கொண்டு, கவிஞருக்கு எந்தப் பெருமையும் இருந்திருக்கவில்லை. விருது என்பது இன்று, இரகசிய விலை பேசப்படும் பொருளாக உள்ள காலத்தில், நாம் விருதுகளைக் கொண்டு கவிஞரை இழுக்கப்படுத்த வேண்டியதில்லை.
முஸ்லீம், இந்து என்கிற மத மோதல்கள் திட்டமிட்டு சிலரால் ஏற்படுத்தபட்டுக் கொண்டிருக்கிற நாட்டில், இஸ்லாம் இந்து மத்திற்கு விரோதமானதா? என்கிற நூலை எழுதி சமத்துவத்தை மேலோங்கச் செய்திருக்கிறார் கவிஞர். இப்படி கவிஞரின் எழுத்துலகப் பணி என்பதும் நீண்ட ஒன்று.
”புதுயுகம், தமிழரசுக் கழகம் ஏன் வந்தது? என்ன சொல்கிறது?, காதலும் கடமையும், தமிழரசில் முஸ்லீம்கள், இலக்கியத்திலும் பித்தலாட்டமா?, வீரன் செண்பகராமன் வரலாறு, கண்ணகியின் கனவு, தமிழரின் சமய நெறி, பொது சிவில் சட்டம் பொருந்துமா?, மச்சகந்தி, புலவர் புகழேந்தி, பல்கீஸ் நாச்சியார் காவியம், நபி தம் பேரர், ஆயிஷா நாச்சியார் பிள்ளைத் தமிழ், இஸ்லாமும் ஜீவகாருண்யமும், மகளே கேள், நபியே எங்கள் நாயகம்”
இப்படி கவிஞர் பெற்றெடுத்த புத்தகங்கள் ஏராளம் உண்டு. இதில் நாடக நூல்கள், சிறுகதைகள், கவிதைகள், வரலாற்று நூல்கள், அரசியல் & இலக்கிய கட்டுரை நூல்கள், புதினங்கள் உள்ளிட்ட பல்வேறு நூல்கள் இருக்கின்றன. இவரின் நூல்களில் சில, இவரின் வெளியீட்டகமான “சீதக்காதி வெளியீட்டகத்தின்” மூலமாகவும் வெளிவந்திருக்கின்றன.
கவிஞரின் புத்தகங்களில், தஞ்சை இளவரசி, வள்ளல் சீதக்காதி வரலாறு, விதியை வெல்வோம், இறைவனுக்காக வாழ்வது எப்படி?, இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?, நல்ல மனைவி உள்ளிட்டவைகள் அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
இத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரரான கவிஞர், 07.07.1994-ம் ஆண்டில், சென்னை மாநகரில், தனது இறுதி நாளைக் கண்டார். தமிழ் மொழியின், தமிழ் நாட்டின் அடையாளங்களுள் ஒருவரான கவிஞர், அன்றைய தினத்தில் காலமாகிப் போனார். தமிழினத்தின், தமிழ் தேசியத்தின் ஒப்பற்ற ஓர் விடுதலைக் குரல் அன்று ஓய்ந்து போனது.
கவிஞர் மறைந்து இன்று இருபது ஆண்டுகள் கழிந்துவிட்டன. அதேசமயம் அவர் பிறப்பின்படி நூற்றாண்டுகளைத் தொட்டும்விட்டுள்ளார்.
கவிஞரின் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும், தமிழ் இன உணர்வுகளும், மொழி உணர்வுகளும், தன்னலமற்ற மாந்த நேயங்களும், கொள்கை மாறா தூய உறுதியும், கிஞ்சிற்றும் குறைவற்ற உயர் பண்புகளும் இன்று காலத்தால் மறைந்து போய், அவரைப் பற்றிய குறிப்புகள் மறைக்கடிக்கப்பட்டும் போய் உள்ளது.
இந்தத் தருணத்தில் அவரின் நூற்றாண்டு விழாக்கள் தற்போது தமிழகத்தில் வெகு சிலரால் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது சற்றே ஆறுதலான ஒன்று. மறந்துவிட்ட மாமனிதருக்கு ‘சாகித்ய அகாடமி’ விழா எடுத்துள்ளதையும் இந்த நேரத்தில் நாம் வரவேற்க வேண்டும்.
கவிஞர் தமிழ் மொழிக்கு ஆற்றிற்கும் பெரும் பங்கை விளக்கிச் சொல்லுகிறபோது, கலைமாமணி விக்கிரமன் அழுத்தம் திருத்தமாக ஒன்றைச் சொல்லுகிறார், “முஸ்லீம்கள் தமிழ் வளர்ச்சிக்கு செய்திருக்கும் தொண்டைப் பற்றி, பெரிய நூலே எழுதலாம்” என்று.
இந்தக் கூற்று எவ்வளவு உண்மையானது. முஸ்லீம்கள் மீதும், அவர்களின் மொழி, இனப் பற்றின் மீதும் பரப்பப்படுகிற அவதூறுகளுக்கு நேரெதிராக இசுலாமியர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு நம்முடைய கவிஞர் காதர்ஷா முகம்மது ஷெரீப் அவர்கள், ஓர் ஒப்பற்ற முன்மாதிரியாக இருக்கிறார்.
இவ்வளவு மொழிப் பற்றும், இத்தனை இசுலாமிய கொள்கைப் பிடிப்புகளும் கொண்டிருந்து என்ன பயன்? கவிஞரை இசுலாமியர்களும் கண்டுகொள்ளவில்லை. தமிழ் தேசியவாதிகளும் கண்டுகொள்ளவில்லை.
சினிமாக்காரர்கள் என்றாலே நடத்தை கெட்டவர்கள் என்கிற போக்கு எல்லோர் மத்தியிலும் பரவிக் கிடக்கிறது. ஆனால், கவிஞர் சினிமாவில் இருந்தும் எப்பேற்பட்ட வாழ்வினை வாழ்ந்திருக்கிறார். தூய இசுலாமிய நெறியை அவர் ஒருபோதும், எவற்றிற்காகவும் விட்டுக் கொடுத்திடவே இல்லை. இப்படியான கவிஞரை இசுலாமியச் சமூகம் தூக்கிக் கொண்டாடி இருக்க வேண்டாமா?
காங்கிரஸ் கட்சி மகாகவி பாரதியாரைத் தூக்கிப் பிடித்ததைப் போல, திராவிடக் கட்சிகள் பாவேந்தர் பாரதிதாசனை முன்னிறுத்தியதைப் போல, கம்யூனிஸ்டுகள் பட்டுக்கோட்டையாரைக் கையிலேந்தியதைப் போல, தமிழ் தேசியவாதிகள் கவி கா.மு.ஷெரீப் அவர்களைத் தாங்கியிருக்க வேண்டாமா?
ஒரு மனிதர் வாழும் போதும் புரிந்து கொள்ளப்படாமலும், இறந்தப் பின்னரும் புரிந்து கொள்ளப்படாமலும் போனது எவ்வளவு பெரிய வேதனை..!
கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்கள், தமிழின் மறைக்கப்பட்ட ஓர் அடையாளம். மறைக்கப்பட்டவரை மீட்டெடுக்காமல், நாமும் மறந்து போகலாமா?
“புதிய தமிழகம் தோன்றி உழைத்தவர்களில், ஒருவன் நான் என்பதை, வரலாறு எழுதுவோர் மறந்துவிட முடியாது” என்று நம்மீது நம்பிக்கை கொண்டு வார்த்தைகளைச் சொல்லி சென்றுள்ள கவிஞரின் நம்பிக்கையை நாம் வீணடித்து விடாமல், இந்தத் தமிழ்ப் போராளியை தமிழுலகம் அறியச் செய்ய வேண்டும். அதுவே அவருக்கு நாம் செய்யும் ஈடாகும்!
- பழனி ஷஹான்
(நன்றி: சமநிலைச் சமுதாயம், மார்ச் 2015)
thanks http://keetru.com/