சில வருடங்களுக்கு முன்பு, ஒரு காலனி வீட்டில் குடியிருந்தேன். காலனியின் முதல் வீட்டில்
இருந்த ஆறு வயதுப் பெண் குழந்தையன்று, Ô‘என்ன அங்கிள், எப்போ பார்த்தாலும் நீங்க உங்க பையனுக்கே பூந்தி, மிக்ஸர் வாங்கிட்டு வர்றீங்க..? எனக்கு ஏன் எதையும் வாங்கிட்டு வர மாட்டேங்குறீங்க?’Õ என்று கேட்டது. ஒரு நிமிஷம் சுள்ளென சாட்டையால் அடித்த மாதிரி இருந்தது. நிஜம்தானே..? நம் குழந்தைகள் மட்டும்தான் நம் கவனத்தில் இருக்கிறார்கள். நமது அண்டை வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது நம் நினைவில் இருப்பதில்லையே!
பையனுக்கு வாங்கி வந்த ஸ்வீட்டை எவ்வளவோ முறை பங்கு போட்டு அந்தக் குழந்தைகளுக்கும் கொடுத் திருக்கிறோம். ஆனாலும், அந்தக் குழந்தையின் ஆசை இயல்பானதுதான் இல்லையா? அடுத்த வீட்டு மாமா தனக்கென ஏதாவது வாங்கி வர வேண்டும் என்று அந்தக் குழந்தை ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கிறது?
நம் வீட்டில் இருக்கும் அதே இட்லி & சட்னிதான் அடுத்த வீட்டிலும் கிடைக்கிறது என்றாலும், அந்த இட்லிக்கும் சட்னிக்கும் எப்படியோ தனி ருசி வந்துவிடுகிறது. சிறு வயதில் யார் வீட்டில் சாப்பிடச் சொன்னாலும் நான் சாப்பிட்டுவிடுவேன். ‘அடுத்த வீட்டில் சாப்பிடாதே!’ என்று அம்மா திட்டுவார்கள். அடுத்த வீட்டுக்கும் நமக்குமான உறவு வெறும் பேச்சு மட்டும்தானா? என் வகுப்புத் தோழர்களின் வீடுகளில் துவங்கி, யார் என்றே தெரியாத நபர்களின் வீடுகள் வரை நான் சாப்பிட்டிருக்கிறேன். அவர்களும் தயக்கமில்லாமல் சாப்பாடு போடுவார்கள். அல்லது தின்பண்டங்கள் தருவார்கள். நாம் சாப்பிடும் அழகை வேறு ரசிப்பார்கள். இந்தச் சுதந்திரம் சில நேரங்களில் எல்லை மீறி, நானே அந்த வீடுகளின் சமையல் அறைக்குப் போய், ‘அத்தை, முறுக்கு கொடு’ என்று உரிமையோடு கேட்டுச் சாப்பிடும் நிலைமைக்கு வளர்ந்திருக்கிறது.
அடுத்த வீட்டில் சாப்பிட்டேனா, இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக வீட்டில் கையை நீட்டச் சொல்லி முகர்ந்து பார்ப் பார்கள். அப்படிக் கையில் வாசனை யைக் கண்டுபிடித்து விடுகிறார்கள் என்பதற்காகவே, வரும் வழியில் மணலில் கைகளை நன்றாகத் தேய்த்து புழுதியாக்கிவிடும் தந்திரம் கற்றிருந்தேன். ஆச்சர்யமான உண்மை என்னவென் றால், நான் அடுத்த வீட்டில் சாப்பிட்டு வருவதைப் போலவே எங்கள் வீட்டிலும் எப்போதும் ஒன்றிரண்டு சிறுவர் சிறுமிகள் வந்து சாப்பிட்டுப் போவார்கள். சிறு வயதில் எங்களது தெருவில் குடியிருந்தவர்களில் எனக்கு ரொம்பவும் விருப்பமானவராக சர்வேயர் அக்கா இருந்தாள். அவர்கள் வீட்டில் சிறு குழந்தைகள் இல்லை. கல்யாண வயதில் இரண்டு பெண்கள் இருந்தார்கள். அந்த மாமா ஒரு சர்வேயர் என்பதால், அக்காவும் சர்வேயர் அக்கா. அவளுக்கு வேலையே இருக்காது என்பது போல எப்போதும் வீட்டில் தாயம் ஆடிக் கொண்டும், சிறுவர்களை அழைத்து வைத்து பேசிக்கொண்டும் இருப்பாள். அக்காவின் ஊர் பந்தல்குடி. வாரம் ஒரு முறை தன் அம்மாவின் வீட்டுக்குப் போய்விடுவாள். ஊரிலிருந்து திரும்பி வரும்போது கருப்பட்டி மிட்டாய், பொரி உருண்டை, பால்கோவா என்று ஏதாவது கொண்டு வந்து கூப்பிட்டுக் கொடுப்பாள்.
சர்வேயர் அக்காவுக்குப் பையன் இல்லை என்பதால் சிறுவர்கள் மீது மிக வாஞ்சையாக இருப்பாள். நான் சாப்பிடும்போது தலையைத் தடவியபடி, ‘மெதுவா சாப்பிடுடா’ என்று சொல்வாள். சாப்பிட்டு முடித்து நாக்கில் சுவையடங்காது இன்னொரு பண்டத்துக்காக அவள் முகத்தைப் பார்க்கும்போது கேலியாக, ‘போதும்டா... தீர்ந்து போச்சு!’ என்று சொல்வாள். ஆனால், அவள் மடியில் இன்னொரு பொரி உருண்டை இருக்கும் என்பது எனக்கு நிச்சயம் தெரியும். ஒரேயரு முறை அக்கா ஊருக்குப் புறப்படும் நாளில், அவளோடு நானும் ஊருக்கு வருவேன் என்று முரண்டு பிடித்து தெருவில் விழுந்து அழுதேன். என்னைச் சமாதானம் செய்யமுடியாமல் அக்கா என்னை கூட்டிக் கொண்டு போவதற்குச் சம்மதித்தாள். இருவருமாக பஸ் ஏறி அவளது ஊரான பந்தல்குடிக்குப் போய்ச் சேர்ந்தபோது இரவாகியிருந்தது. அவர்கள் வீட்டில் யாவரும் உறங்கியிருந்தார்கள்.
எனக்கு வழியில் வயிறு பசிக்கத் துவங்கி இருந்தது. வீட்டில் போய்ச் சாப்பிடலாம் என்று அக்கா சொன்னதால், வழியில் கிடைத்த அதிரசத்தைச் சாப்பிட்டுவிட்டு, அவள் ஊரைப் பார்க்கும் ஆவலில் இருந்தேன். எங்கள் ஊரைப் போலவே அதுவும் சிறிய ஊர்தான். ஊர் இருட்டியிருந்தது. தெருவில் கட்டப்பட்டிருந்த ஆட்டுக்குட்டிகள்கூட துவண்டு படுத்திருந்தன. தெரு விளக்கில்லாத கிராமம் என்பதால், சாக்கடைகளைத் தாண்டித் தாண்டி அவள் வீட்டுக்குச் சென்றோம். நான் நினைத்ததற்கு மாறாக, அந்த வீடு மிகச் சிறியதாக இருந்தது.
வீட்டில் வயதான நபர் ஒருவர் கயிற்றுக் கட்டிலில் சுருண்டு படுத்திருந்தார். சர்வேயர் அக்கா வந்த சத்தத்தைக் கேட்டு, பாட்டி ஒருத்தி சிம்னி விளக்கைத் தூண்டிவிட்டாள். என்னை அவர்கள் யார் என்று கூடக் கேட்கவில்லை. ரகசியமான குரலில் சர்வேயர் அக்கா, ‘‘சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?’ என்று கேட்டாள். ‘கொஞ்சம் புளிச்ச கஞ்சி கிடந்தது. அதையும் கோழிக்கு ஊற்றி விட்டேன்’’ என்றாள் பாட்டி.
சமையல் செய்து தருவதற்கு நேரமில்லை என்பதால் அக்கா எங்கிருந்தோ ஒரு கொய்யாப் பழத்தைத் தேடி எடுத்து வந்து, ‘‘இதைச் சாப்பிட்டுப் படுத்துக் கொள், காலையில் உனக்கு பருப்புக் குழம்பு வைத்துத் தருகிறேன்’’ என்று சமாதானம் செய்து தின்னக் கொடுத்தாள். வீட்டின் வாசலில் பாயை விரித்தாள். அக்கா எதையும் சாப்பிடவில்லை. அவள் மௌனமாக வானத்தைப் பார்த்த படியே படுத்துக் கிடந்தாள்.
கொய்யாப்பழம் வயிற்றில் பசியை அதிகப்படுத்திவிட்டது போலும். தூக்கம் வராமல் புரண்டுகொண்டு கிடந்தேன். அக்கா உறங்கியிருந்தாள். தெருவில் நான் படுத்திருந்த இடத்துக்கு எதிரே ஒரு கழுதை கால்கள் கட்டப்பட்ட நிலையில் நின்றிருந்தது. அது நெடுநேரமாக இருளில் ஒரு சிலை போல நின்றிருந்தது.
நான் பசியில் இரவெல்லாம் புரண்டு கொண்டே இருந்தேன். காலையில் எழுந்தபோது அக்காவைக் காணவில்லை. அவள் காட்டு வேலைக்குப் போய்விட்டாள் என்று அங்கிருந்த பாட்டி சொன்னாள். நான் உதட்டைக் கடித்தபடி வாசலில் கிடந்த உரலில் உட்கார்ந்து கொண்டேன். சாப்பிடுவதற்கு சோளக்கஞ்சி கொண்டு வந்து தந்தாள் பாட்டி. அது எனக்குப் பிடிக்கவே இல்லை. ‘எனக்கு இட்லி வேண்டும்’ என்று சொல்லி அழுதேன். ‘இட்லிக்கு எங்க போறது?’ என்று சொல்லி, பாட்டி என் முன்னே கஞ்சியை வைத்துவிட்டுப் போய்விட்டாள். எனக்கு ஆத்திரமாக வந்தது. நேரமாக ஆக, பசியில் குடல் கவ்வத் துவங்கியது. வழியில்லாமல் கஞ்சியைக் குடித்தேன். பாட்டி வீட்டுக்கு வந்த ஒரு சிறுவன் என்னை விநோதமாகப் பார்த்தபடி நின்றான். கட்டிலில் படுத்துக் கிடந்தவர் இருமிக்கொண்டே இருந்தார். பகல் நீண்டு விரிந்திருந்தது.
மதியத்தின்போது அக்கா வீட்டுக்கு வந்து சமையலை ஆரம்பித்தாள். பாவற்காயும் வத்தல்களும் கொண்ட சாப்பாடு. எனக்கு வாய் குமட்டியது. அக்கா ஒரு மண்டைவெல்லத்தைத் தொட்டுக்கொள்ளத் தந்தாள். இரண்டு நாட்களில் நான் அக்காவுடன் பத்து வார்த்தை பேச நேரமில்லாமல் போனது. அவளுக்கு இடிப்பது. முள் வெட்டுவது, தண்ணீர் தூக்குவது, திரிப்பது என ஓயாமல் வேலை இருந்துகொண்டே இருந்தது. எப்போது வீட்டுக்குப் போவோம் என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. ஊருக்குப் புறப்படும்போது, அக்கா ஊர் வந்த இரவில் தான் கழற்றி வைத்த சேலையைத் திரும்ப கட்டிக்கொண்டாள். பஸ்ஸில் வரும்போது என் கையைப் பிடித்துக்கொண்டு, நடந்த எதையும் என் வீட்டில் சொல்லக் கூடாது என்றாள். நானும் தலையாட்டினேன். வழியில் அவள் வாங்கிக் கொடுத்த வெள்ளரிக்காயைக்கூடத் தின்னாமல் பையில் வைத்துவிட்டேன்.
ஊர் வந்து சேர்ந்து தெருவில் வரும்போதே அவளை விட்டுவிட்டு ஓட்டமாக என் வீட்டுக்கு ஓடினேன். எதற்கு என்று காரணமில்லாமல் அழத் துவங்கினேன். அம்மா என்ன நடந்தது என்று கேட்டாள். நான் எதையும் சொல்லவில்லை. ஆனால், அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அம்மா, அக்கா வீட்டுக்குப் போய், ‘என்ன நடந்தது?’ என்று கேட்டு வந்தாள். ‘ரெண்டு நாளாகவே வீட்டு ஞாபகம் வந்து அழுதுகொண்டே இருந்தான்’ என்று அக்கா பொய் சொல்லி அனுப்பியிருந்தாள்.
அதன் பிறகு ஏனோ சர்வேயர் அக்கா வீட்டின் பக்கம் போனாலே, நிற்காமல் ஓடிவிடுவேன். அவள் தன் வீட்டுப் படியில் உட்கார்ந்தபடி என் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவாள். நான் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. ஒரு நாள் அவர்கள் வீட்டைக் காலி செய்து போகும்போதுகூட அக்காவைப் பார்க்கப் போகவே இல்லை.
பல வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் தற்செயலாக ராமேஸ்வரத்தில் ஒரு சத்திரத்தில் அவளைப் பார்த்தேன். எனக்குப் வயது பதினாறு கடந்திருந்தது. மீசை அரும்ப வளர்ந்திருந்தேன். அவள் என் கைகளைப் பிடித்தபடி வாஞ்சையாக, ‘‘அக்கா மேல கோபமாடா... ஏன் பேசவே மாட்டேங்குறே?’’ என்று கேட்டாள். அவள் கையைப் பிடித்திருப்பது கொஞ்சம் கூச்சமாக இருந்தது. கையை உதற முயன்றேன். ‘‘பெரிய மனுசன் ஆகிட்டே இல்ல?’’ என்றபடி அவள் கண்கள் தானே கசிந்தன. ஆனால், அதை மற்றவர்கள் பார்த்துவிடக் கூடாது என்பது போல சிரித்தபடியே சொன்னாள்.
‘‘என் பொண்ணுகள்ல ஒருத்தியைக் கட்டிக்கோ! உன்னை வீட்டோட மாப்பிள்ளையா வெச்சு விதவிதமா சாப்பாடு போடுறேன்டா!’’ என்றாள். அவள் கைப்பிடியில் இருந்து தப்பி பல வருடங்களாகியும், அந்த பந்தல்குடி எளிய வீட்டின் காட்சிகள் ஒரு தைல வண்ண ஓவியம் போல, அப்படியே மனதில் தன் நிறம் மங்காமல் ஒளிர்ந்துகொண்டு இருக்கிறது. நகரில் இப்போதும் பகலிரவாக மூடிக்கிடக்கும் அண்டை வீடுகளைக் காணும்போது என்னை அறியாமல் அக்காவின் நினைவு வந்துவிடுகிறது.
பிரியமானவர்களை எதிர்பாராத இடத்தில் சந்திக்கும் தருணம் மிக அபூர்வமானது. அது பேச்சற்று மௌனத்தில் கரைந்துவிடக் கூடியது. கேட்பதற்கும் சொல்வதற்கும் எவ்வளவோ இருந்தபோதும், காலம் அந்தச் சந்தர்ப்பத்தைத் தராமல் நிசப்தமாக்கிவிடுகிறது. அக்காவிடம் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. ஆனால், பேச்சு மனதிலிருந்து கிளைவிடவே இல்லை.
அபூர்வமான தருணங்களில் ஒன்றாக இருந்த எதிர்பாராமையை எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது எம்.வி. வெங்கட்ராமின் ஏழை என்ற கதை.
எம்.வி. வெங்கட்ராம் மிகச் சிறந்த சிறுகதையாசிரியர். அவரது கதையுலகம் நம்மைச் சுற்றிய மனிதர்களால் நிரம்பியது. சௌராஷ்டிர மக்களின் வாழ்க்கைப்பாடுகளை முக்கியக் களமாகக் கொண்டது. வாழ்வின் போராட்டங்களும், துளி சந்தோஷமும் கலந்தது.
இக்கதை கூட! ஒரு மழை நாளில், பத்து வருடங்களுக்குப் பிறகு ராஜு என்ற மனிதனைத் தேடி, அவனது காதலி கல்யாணி தனது மகன் கண்ணன் என்ற சிறுவனைக் கூட்டிக்கொண்டு வருகிறாள். வந்தவள், மழையில் நனைந்து போனதால் மாற்று உடை கேட்கிறாள். பிறகு சிறுவன் சாப்பிடுவதற்கு ஏதாவது வேண்டும் என்கிறாள். வீட்டில் நீராகாரம் மட்டுமே இருக்கிறது. அதைச் சிறுவன் சாப்பிடுகிறான். அவள் இரண்டு நாட்களாகப் பட்டினிஎன்றும், தானே சமைத்துச் சாப்பிடாமல் வேறுஎங்கும் சாப்பிடுவதில்லை என்றும் சொல்கிறாள்.
அவளைப் பல வருடங்களுக்கு முன்பு ராஜு காதலித்தான். அவளும் விரும்பினாள். திருமணம்கூட ஏற்பாடாகியிருந்தது. ஆனால், திருமணத்தன்று கல்யாணி எங்கே என்று சொல்லிக் கொள்ளாமல் காணாமல் போய்விடுகிறாள். இத்தனை வருடமாக எங்கே போயிருந்தாள் என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறான் ராஜு. அவளோ மழை இரவில் அகல் விளக்கின் முன், பத்மாசனமிட்டு தியானம் செய்கிறாள். பிறகு, தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவனிடம் பயணத்துக்குக்காசு வாங்கிக்கொண்டு வீட்டைவிட்டுப் போய்விடுகிறாள். வாழ்வின் எதிர்பாராத தருணம் கூடிவந்து நிசப்தமாகக் கலைந்து போய்விடுகிறது. ஒரு மின்னல் வெட்டைப் போல இந்தச் சம்பவம் நடந்தேறிவிடுகிறது.
எதற்காக வந்தாள்? ஏன் இப்படிச் சாமியார் போல் இருக்கிறாள்? ஏன் இன்னும் இத்தனை பிடிவாதம்? எங்கே போகிறாள்? இப்படிக் கேள்விகள் மழையைப் போல முடிவற்றுப் பெய்துகொண்டே இருக்கின்றன. வாழ்க்கையில் நிறையக் கேள்விகள் பதிலற்று இருப்பதுதான் அதன் சுவாரஸ்யம் போலும்!
வெங்கட்ராமின் கதை ஓர் அபூர்வமான கணத்தை அப்படியே பதிவு செய்துள்ளது. பேசிக் கொள்ள முடியாத துக்கத்தைப் போல வலி தரும் விஷயம் உலகில் இல்லை என்பதைத் துல்லியமாக வெளிப்படுத்துகிறது.
எப்போது பெய்யும் எப்போது நிற்கும் என்பது மழைக்கு மட்டும் இல்லை. வாழ்வின் அரிய கணங்களுக்கும் பொருந்துகிறது. ஒருவேளை எதிர்பாராமையின் பெயர்தான் மழையோ என்றும் தோன்றுகிறது!
சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறந்த கதாசிரியரான எம்.வி. வெங்கட்ராம், 1920&ம் ஆண்டு கும்பகோணத்தில் சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்தவர். பி.ஏ., பொருளாதாரம் படித்தவர். பட்டு ஜரிகை தொழில் செய்து வந்தவர்.16 வயதில் மணிக்கொடி இதழில் கதைகள் எழுதத் துவங்கி, இலக்கியத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டு இருந்தார். இருநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். இவரது நாவல்களில் வேள்வித் தீ, நித்ய கன்னி இரண்டும் மிக முக்கியமானவை. நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் என்ற தலைப்பில் முப்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவரது “காதுகள்” தமிழ் நாவல் வரிசையில் தனித்துவமானது. சிறந்த மொழிபெயர்ப்பாளருமான வெங்கட்ராம், ஆங்கிலத்தில் இருந்து நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். தேனீ என்ற இலக்கிய இதழைச் சில காலம் நடத்தினார். அவரது வீடு இலக்கியவாதிகளின் சந்திப்புவெளியாக எப்போதும் இருந்து வந்தது. தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, திருலோக சீதாராம், தேனுகா, பொதிகைவெற்பன் என்று இவரது இலக்கிய நண்பர்களின் பட்டியல் மிக நீண்டது. இவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பாக எம்.வி.வெங்கட்ராம் கதைகள் என்ற பெயரில் வெளியாகியிருக்கின்றன
|
நன்றி: கதாவிலாசம் , ஆனந்தவிகடன் பிரசுரம்.