Search This Blog

Wednesday, August 15, 2012

தலைமைத்துவம்



ஏன் தலைமைத்துவம் பற்றிப் பேசுகின்றோம்?
திருகோணமலை மாவட்டத்தில் ஒரு வறிய கிராமம். இங்குள்ள மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் பல வருடங்களாக இயங்காமல் இருந்தது. ஒவ்வொரு முறையும்; புதிய நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவு செய்யுங்கள், அதனை கிராம சேவையாளருக்கும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தருக்கும் தெரியப்படுத்துங்கள் என்று பல தடவைகள் விழுது பணியாளர்கள் அங்கு போய் ஆலோசனை சொல்லியும் ஒன்றும் நடந்தபாடில்லை. அரச உத்தியோகத்தர்கள் வருவதற்கு கால தாமதம் ஆகின்றது என்றார்கள். அவர்கள் வருகின்ற நேரம் வரட்டும் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயங்க ஆரம்பியுங்கள் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. அப்படியும் ஒன்றும் நடக்கவி;ல்லை. கடைசியாக விழுது அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் அங்கு சென்றபோது, ஏன் இன்னும் நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டு அவர்கள் இயங்கவில்லை எனக் கேட்டபோது, எல்லாரையும் அடையாளம் பண்ணி வைத்திருக்கின்றோம், ஆனால் யாராவது ஒரு தலைவர் இருந்தால்தானே அவர் முன்னிலையில் நாங்கள் தெரிவு செய்யலாம் என்றனர். அப்படியே அங்கேயே வைத்து விழுது உயர் அதிகாரிகள் முன்னிலையிலேயே அவர்கள் தங்கள் நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவு செய்தனர். கடைசியில் மனத்திருப்தியுடன் கலைந்து சென்றார்கள்.
இந்தக் கதையில் நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவு செய்தது முழுக்க சங்க அங்கத்தினரே. பின் எதற்காக ஒரு 'தலைவரு'க்காகக் காத்திருந்தனர்? . . .உங்கள் மத்தியில் இதன் காரணங்களைக் கலந்துரையாடிவிட்டு தொடர்ந்து படியுங்கள். எங்கள் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனேகம் பேர் விஷயங்களைக் கொண்டு நடத்துவது எப்படி என்று தெரிந்திருந்தும் தாமே அதனைச் செய்வதற்குரிய ஆளுமை இல்லாதவர்களாகும்.  அவர்களுக்கு யாராவது ஒரு தலைவர் அவசியம் தேவைப்படுகின்றது. நீங்கள் அங்கத்துவம் வகிக்கும் சங்கங்களின் நடவடிக்கைகளை உற்றுப் பாருங்கள். ஒவ்வொரு சங்கத்திலும் எத்தனையோ நூற்றுக்கணக்கான பேர் அங்கத்துவம் வகித்தாலும், எல்லா வேலைகளையும் ஓடியாடிச் செய்பவர்கள் ஓரிரண்டு பேர்களே. இவர்களைத்தான் தலைவர்களாகவும் செயலாளர்களாகவும் சங்க அங்கத்தினர் ஒவ்வொரு முறையும் தெரிவு செய்கின்றனர். ஏன் என்று கேட்டால், 'இவ(ர்)தான் வெளிவேலையளை ஓடிச் செய்யக்கூடியவ(ர்)' என்று சொல்லுகின்றனர். இப்படியான சிலர் தற்செயலாக சங்கத்திலிருந்து விலகினாலோ அல்லது மாற்றலாகி வேறு ஊருக்குப் போனாலோ உடனேயே அச்சங்கம் படுத்து விடுவதைக் காணலாம். இது நாள்வரையும் நடந்து வந்த கூட்டங்கள் நடத்தப்படாது, அப்படி நடத்தப்பட்டாலும் அங்கத்தவர்கள் வர மாட்டார்கள். சங்கத்துக்குள்ளும் ஏதாவது முரண்பாடுகளும் முறுகல் நிலையும் இருக்கும்.  அதே போல விழாக்கள் நடத்தும் கொமிட்டிக்களை நீங்கள் பார்த்தீர்களானால் அங்கும் ஓரிரண்டு பேர்தான் ஐடியா முழுக்கக் கொடுப்பார்கள், அவற்றை நடத்தி முடிப்பார்கள். இப்படி எங்கேயும் எப்பொழுதும் எதுவும் தொடர்ந்து நடப்பதற்கு தலைமைத்துவப் பாத்திரங்களை வகிக்கும் மக்கள் தேவையாக இருக்கின்றதைப் பார்க்கின்றோம். அதனால்தான் சமூகப் பணியில் ஈடுபடுபடுபவர்களுக்கெல்லாம் தலைமைத்துவம் பற்றிப் பேசுவது முக்கியமாகின்றது.

தலைமைத்துவம் என்றால் என்ன?
பொதுவாக பகிரங்க மேடையில் பேசுபவர்கள் தலைமைத்துவம் உள்ளவர்கள் என்று கருதப்படுகின்றது. பேச்சாற்றல் தலைமைத்துவம் உள்ளவரின் ஒரு பண்பாக இருக்கலாமேயொழிய பேச்சாற்றல் மட்டுமே தலைமைத்துவம் ஆகாது. அதே போல விஷயங்களை செயற்படுத்தும் இயல்பு உள்ளவர்கள் தலைவர்களாகக் கணிக்கப்படுகின்றனர். விஷயங்களைச் செயற்படுத்தும் திறமை தலைமைத்துவத்தின் ஒரு பண்பேயொழிய அது மட்டுமே தலைமைத்துவம் ஆகாது. முதல் பகுதியில் மேலே நாங்கள் பார்த்த உதாரணச் சம்பவங்களை ஆராய்ந்து 'ஏன் இங்கு ஒரு தலைமைத்துவம் தேவையானது?' என்கின்ற கேள்விக்குப் பதில்களை ஒன்றொன்றாகக் கண்டு பிடித்தோமென்றால் தலைமைத்துவம் என்றால் என்ன என்று சொல்லி விடலாம். அந்தக் கதையில் ஒரு கிராமத்தின் அபிவிருத்திக்காக உழைக்கும் சங்கத்தக்கு தலைமைத்துவம் தேவையாக இருந்ததைப் பார்த்தோம். ஆனால் அது மக்கள் எல்லோரும் சமமாகப் பங்கேற்றல் என்பது போன்ற குறித்த கொள்கைகளைக் கொண்டியங்கவேண்டும் என்றும் கண்டோம். அத்துடன் சண்டை சச்சரவுகள் இல்லாமல் எல்லோரும் ஒற்றுரமையாக இயங்க வைப்பதும் தான் இல்லாவிட்டால்கூட சகல விடயங்களும் நடத்திக் காட்டுவதும் இதன் அம்சங்கள் என்றும் பார்த்தோம். இவற்றை வைத்துக்கொண்டு தலைமைத்துவம் என்றால்,
ஒரு பொது நன்மை அல்லது இலக்கினைக் குறித்து ஒற்றுமையுடன் இயங்கும் பொருட்டு ஒரு மக்கள் குழுவிற்கு வழிகாட்டுவது,
மனிதாபிமானம் சார்பான கருத்தியலையும் விழுமியங்களையும் அடிப்படையாகக் கொண்டதாக ஒழுகுவது,
சகலருடனும் சுமுகமான உறவுகளைப் பேணி அவர்கள் மத்தியில் எழக்கூடிய முரண்பாடுகளைத் தீர்ப்பது,
தன்னைப்போலவே இயங்கக்கூடிய வேறு தலைமைகளை உருவாக்குவது,
என இவ்வாறாக விளக்கலாம். இவை ஒவ்வொன்றையும் இன்னும் ஆழமாகப் பார்ப்போம்.
1. ஒரு பொது நன்மை அல்லது இலக்கினைக் குறித்து ஒற்றுமையுடன் இயங்கும் பொருட்டு ஒரு மக்கள் குழுவிற்கு வழிகாட்டுதல்
ஒருவர் தன்னுடைய சொந்தத் தேவைகளைத் தீர்த்துக் கொள்ளும் கெட்டித்தனம் மிக்கவராக இருந்தாலும் அவரை தலைமைத்துவப் பண்பு உள்ளவர் என்று நாம் கூற முடியாது. தலைமைத்துவமானது ஒரு அமைப்பைச் சார்ந்த மக்களுக்கோ அல்லது ஒரு மக்கள் குழுவிற்கோ அல்லது ஒரு சமூகத்திற்கோ அல்லது ஒரு நாட்டுக்கோ அதிலுள்ளவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் அல்லது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வழிகாட்டுதலைச் செய்யும். எனவே, தலைமைத்துவத்தை நாம் வரையறுக்கும்போது அங்கே ஒரு பொது இலக்கு, ஒற்றுமை ஆகியன இருக்க வேண்டும் என்பதைப் பார்க்கின்றோம். ஒரு குழு மக்களை ஒழுங்கமைத்து ஒற்றுமையாக இயங்க வைப்பதற்கு பல திறமைகளும் இயல்புகளும் அவசியம்.
1.1. அகத்தூண்டல் அல்லது உள்ளார்வத்தை ஏற்படுத்தும் பண்பு
மனிதர்கள் தாமே புத்தாக்கத்துடன் இயங்குவதற்கு அவர்களுக்கு அகத் தூண்டல் ஏற்படுவது மிக அவசியமாகும். ஒரு குறித்த இலக்கினை அடைய வேண்டும் என்கின்ற ஆர்வமும் அதனை அடையலாம் என்கின்ற நம்பிக்கையுமே அகத்தூண்டலாகும். தன்னுடன் பணி புரியும் ஏனையோருக்கு இவ்வகையான அகத்தூண்டipனை ஏற்படுத்துவதற்கு ஒரு தலைமை முதலில் குறித்த இலக்கின்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். உதாரணமாக, பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பணிபுரியும் ஒருவர் தனக்குள்ளே 'எப்பிடிப் பார்த்தாலும் பெண்கள் ஆண்களுக்குக் கீழ்ப்படிந்துதான் ஆகவேண்டும்..' என்று நினைப்பாராயின், அங்கு அவரால் தன்னுடன் இருக்கும் ஏனையோரைத் தூண்ட முடியாத தடையை எதிர்நோக்க வேண்டிவரும். தானே நம்பாத விஷயத்தை எப்படி மற்றவர்களை நம்ப வைப்பது?  எனவேதான் தன்னுடைய இலக்கில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பதன் மூலம் ஏனையோரைஅந்த இலட்சிய வழியில் தூண்டுவது தலைமைத்துவத்தின் முக்கிய இலக்கணமாகிறது.

1.2. நல்ல தொடர்பாடல் திறன்கள்
ஒரு குழுவாக மக்கள் இயங்கும்பொழுது, இங்கு இலக்கு என்ன, அதனை எப்படி அடையப் போகின்றோம், அதற்கு நாம் என்ன செய்யப்போகின்றோம், ஏன் அப்படித்தான் செய்ய வேண்டும் என்பது போன்ற விளக்கங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும். இந்த விளக்கங்கள் மக்களைச் சென்றடைய சிறந்த தொடர்பாடல் திறன்கள் தேவை. பேச்சாற்றல் எழுத்தாற்றல் போன்றவையே தொடர்பாடல் திறன்களாகும். எளிமையாக, மக்களால் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய சொற்களை உபயோகித்து மக்களுடன் கலந்துரையாட வேண்டும். தொடர்பாடல் திறன்களைப் பிரயோகிக்கும்போது நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், ஆயிரம் வசனங்களைவிடவும் ஒரு படம் கூடிய விளக்கம் கொடுக்கும் என்பதும், கண்களுக்கும் செவிகளுக்கும் ஒருசேரச் சென்றடையும் செய்தியானது தனியே கண்களுக்கோ செவிகளுக்கோ சென்றடையும் செய்தியைவிடவும் சக்தி வாய்ந்தது என்பதுமாகும்.
இன்று வெகுசன ஊடகங்கள் மக்கள் மத்தியில் வெகுவாகப் பிரபலம் பெற்ற காலமாகும். இதனால் பத்திரிகை, தொலைக்காட்சி, ரேடியோ, நாடகம், பொம்மலாட்டம், நாட்டுக்கூத்து, வில்லுப்பாட்டு போன்ற ஊடகங்களைப் புத்தாக்க முறையில் உபயோகிப்பதனால் செய்திகள் மக்களைச் சென்றடையும் வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன.
1.3. பணிகளைப் சகலருக்கும் பிரித்துக் கொடுத்து அவை ஒழுங்காக மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் முகாமைத்துவத் திறமை
பலர் சேர்ந்து இயங்கும்போது அங்கே அவர்கள் மத்தியில் ஓர் ஒழுங்கு காணப்படவேண்டும். இல்லாவிட்டால் குழப்பமே எஞ்சும். அத்துடன் எல்லோரும் இருக்கும் வேலையைப் பங்கு போட்டுக் கொண்டால் வேலையும் இலகுவாக முடிவடைகின்றது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து இயங்கும்பொழுது அவர்களை ஒற்றுமையாக பணி செய்ய வைப்பது ஒரு கலையாகும். இதற்குரிய முகாமைத்துவத் திறன்களை வளர்த்தெடுத்துக் கொள்ளுதல் தலைமைத்துவத்தின் இன்னுமொரு பண்பாகும்.
2. மனிதாபிமானம் சார்பான கருத்தியலையும் விழுமியங்களையும் அடிப்படையாகக் கொண்டதாக ஒழுகுதல்
தலைமைத்துவமானது ஒரு பொது இலக்கை நோக்கி மக்களை வழிநடத்துவது என்று மேலே பார்த்தோம் அல்லவா? இந்தப் பொது இலக்கு எப்படித் தீர்மானிக்கப்படலாம் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தலைமைத்துவமானது சமத்துவம், சகோதரத்துவம், பாகுபாடின்மை, சுதந்திரம் போன்ற அடிப்படை விழுமியங்களைத் தன்னுடைய பற்றுக்கோடாகக் கொண்டதாகும். அவ்வாறு அது இருந்தால்தான் தான் தலைமை தாங்கும் மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் உள்ளார்வத்தையும் இயங்கும் உத்வேகத்தையும் ஏற்படுத்த முடியும். தனது மாதர் சங்கத்தில் சில அங்கத்தவர்களுக்கு மட்டும் சலுகைகளை வழங்கி பாரபட்சம்hக நடக்கும் தலைவியை நல்ல தலைமைத்துவம் என்று கூற மாட்டோமல்லவா? அதே போலத்தான் எமது சமூகத்திலும் நாட்டிலும் சமத்துவத்தினை நிராகரித்து பிரிவினைகளைத் தோற்றுவிப்பவர்கள் ஒருநாளும் தலைமைத்துவமாகக் கருதப்படமாட்டார்கள். ஏனெனில் இவர்கள் ஒரு பொது நன்மையை நோக்கி மக்களை ஒற்றுமையாக வழிநடத்த முடியாதவர்களாவர். இதனால்தான் மனிதாபிமானம் சார்ந்த கருத்தியல் ஒரு தலைமைத்துவத்திற்குத் தேவையாகும்.மனிதாபிமானம் சார்பான கருத்தியல் கொண்டு இயங்குவதற்கு ஒரு தலைமைத்துவத்திற்கு சில குணாம்சங்கள் தேவை.
2.1. சமூக அழுத்தங்களுக்கு வளைந்து கொடுக்காத தன்மை
குடும்பம், நண்பர்கள், சக பணியாளர்கள், சமயத் தலைவர்கள், அரசியல் சக்திகள் போன்ற திசைகளிலிருந்து சமூக அழுத்தங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கும். இவற்றுக்கு ஈடு கொடுத்து தான் கொண்ட கொள்கையிலிருந்து வழுக்காத தன்மை கொண்டதுதான் நல்ல தலைமைத்துவமாகும். நாம் வாழும் சமூகத்தில் ஏராளமான ஏற்றத் தாழ்வுகளும் பாரபட்சமான உணர்வுகளும் உண்டு. எமது மரியாதைக்குரிவர்களும் எமக்கு நெருங்கியவர்களும் இதற்கு விதி விலக்கல்ல. தங்களைப் போலவே ஏனையோரும் சிந்திக்க வேண்டும் வாழ வேண்டும் என்று அவர்கள் அழுத்தங்களைச் செலுத்தும்போது, அவர்கள் நம்மீது வைத்திருக்கும் அபிமானமும் பிரியமும் குறையாமல் இருக்க வேண்டுமேயென்ற அக்கறையினால் பல சமயங்களில் அவர் பக்கம் சாய நேரிடுகின்றது.
சமயப் பாரம்பரியங்களைப் பின்பற்றுவது இதற்கு நல்ல உதாரணமாகும். இவை தாம் கொண்ட கொள்கைக்கு முரணாக இருந்தாலும், தமது சமூகத்தின் பிழையான அபிப்பிராயத்துக்கு ஆளாகக் கூடாது என்கின்ற பயத்திலேயே பலர் அது பற்றி ஒன்றும் பேசாது பின்பற்றுகின்றதை நாங்கள் பார்க்கலாம். வாக்காளர்கள் ஆதரிக்க மாட்டார்களெயென்று நல்ல முற்போக்கான கொள்கைகளைக் கைவிடும் அரசியல்வாதியின் நிலைமையும் இதுதான்.  நல்ல தலைமைத்துவமானது எங்கும் எப்பொழுதும் தான் நம்புவதை உறுதியாகப் பற்றியிருக்கும், மாறாது. என்றும் தனக்கு சரியென்று பட்டதைச் செய்யும்.  
2.2. திட நம்பிக்கை
ஒரு கொள்கையில் அல்லது கருத்தியலில் உறுதியாக நிற்பதற்கு திட நம்பிக்கை மிகவும் அவசியம். இது முக்கியமாகத் தன் ஆற்றலிலே அதீத நம்பிக்கை வைக்கும் இயல்பாகும். அத்துடன் சிந்தித்து தெளிந்த ஒரு சித்தாந்தத்தில் ஏற்படும் நம்பிக்கையுமாகும்.
தன்மீது நம்பிக்கை வைப்பது என்பது தனது பலங்களை உணர்ந்து அவற்றை மேலும் வலுப்படுத்துவதும், தனது பலவீனங்களை அவதானித்து அவற்றைப் பலங்களாக மாற்றுவதுமாகும். ஒரு விழுமியத்தில் அல்லது கோட்பாட்டில் நம்பிக்கை கொள்வது சிறிது வித்தியாசமானது. யார் என்னதான் சொன்னாலும், என்னதான் நடந்தாலும் அதே கோட்பாட்டில் நிற்பது அல்ல அது. மாறாக, தன்னுடைய வாழ்வின் அனுபவங்கள் தான் நேற்று உண்மையென்று நம்பியதை இன்று பொய்யாக்கிவிடும்போது, தான் முன்பு தவறாகக் கருதியதை ஒப்புக்கொள்ளும் மனத் தைரியமாகும். இந்த வகையான திட நம்பிக்கை தான் செய்த பிழையை ஒத்துக்கொள்ளும் நம்பிக்கையாகும். தான் நேற்றிலும்விட இன்று மேலும் கற்றுத் தெளிந்திருக்கின்றேன் என்று பிரகடனம் செய்யத் துணிந்த நம்பிக்கையாகும். இந்த வகையான நம்பிக்கை உள்ள தலைமைத்துவம் தான் கற்று முன்னேறுவதோடு, தன்னைச் சேர்ந்தவர்களும் கற்றுக் கொள்வதை ஊக்குவிக்கின்றது.  
இந்த இருவகை நம்பிக்கைகளும் ஒன்றுடன் ஒன்று பிணைந்த இயல்புகளாகும். தனது ஆற்றல் மீது அதீத நம்பிக்கை கொண்ட ஒருவர்தான் தான் விட்ட தவறுகளையும் பகிரங்கமாகப் பிரகடனம் செய்யும் துணிச்சல் உள்ளவராவார். ஏனெனில் அந்தத் தவறுகளினால் தனது மேன்மை கிஞ்சித்தும் குறையவில்லை என்கின்ற நம்பிக்கை அவருக்கு நிறையவே இருக்கின்றது. அதைப் பற்றிய தாழ்வுச் சிக்கல்கள் அவரிடம் கொஞ்சமும் இல்லை.
3. சகலருடனும் சுமுகமான உறவுகளைப் பேணி அவர்கள் மத்தியில் எழக்கூடிய முரண்பாடுகளைத் தீர்ப்பது,
இந்த உலகத்தில் எத்தனை மனிதர்கள் உள்ளனரோ அத்தனை வித்தியாசமான அபிப்பிராயங்களும் இருக்கின்றன என்பதைக் கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம். ஒருவர் சிந்திப்பது போல இன்னொருவர் சிந்திக்க முடியாதல்லவா? இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட மக்கள் கூடும் இடங்களிலெலல்லாம் ஏதோவொரு அபிப்பிராயபேதம் ஏற்படத்தான் செய்கின்றது. அபிப்பிராயபேதங்கள் ஆரோக்கியமானவை. புதுப்புது ஐடியாக்களைக் கொண்டுதரும். ஆனால் அவையே மனிதர்களுக்கிடையிலான முரண்பாடுகளாகவும் வன்முறைகளாகவும் மாறுமென்றால் எமக்கு தீங்காக முடியும். நல்ல தலைமைத்துவமானது அபிப்பிராயபேதங்களை ஊக்குவிக்கும் அதே சமயத்தில் அவற்றை முரண்பாடுகளாக வளரச் செய்யாது சமாதானம் காக்கும். இதற்கு அது கைக்கொள்ள வேண்டிய சில முறைகள் உண்டு.
3.1. செவிமடுக்கும் திறன்
ஒருவர் ஒரு கருத்துச் சொல்லும்போது அவர் உபயோகிக்கின்ற சொற்கள் மட்டுமல்ல, ஆனால் அதை அவர் சொல்லுகின்ற விதங்கள் அவருடைய உடல் பாவனை எல்லாமே அவருடைய கருத்துக்கு விளக்கம் சேர்க்கின்றன. இதனை உன்னிப்பாகக் கவனிப்பதனால் அவர் ஏன் இந்தக் கருத்தினைக் கூறினார், அவர் இவ்வாறு கூறுவதற்குத் தூண்டிய அனுபவங்கள் யாவை என்பதையெல்லாம் அனுமானிக்க கூடுமாகின்றது. அந்த விளக்கத்தைக் கொண்டுதான் எந்தப் பிரச்சினையையும் தீர்க்கக்கூடிய அணுகுமுறைகள் தோன்றுகின்றன. எனவே, ஒருவர் ஒரு கருத்துச் சொல்லும்போது அதனை ஆழ்ந்து அவதானித்து கேட்டறியும் ஆற்றல் ஒரு தலைமைத்துவத்திற்குத் தேவையாகும்.


3.2. பொதுத் தளத்தைப் பற்றும் திறமை
எந்தளவு வேற்றுமையான கருத்துக்களாக இருந்தாலும் அவற்றிற்கு ஒரு பொதுத் தளம் கட்டாயம் இருக்கும். இதற்கு உதாரணமாக ஈழத் தமிழர் பிரச்சினையை எடுக்கலாம்.ஒற்றையாட்சி என்பர் சிங்கள மக்கள், தனித் தமிழீழம் என்கின்றனர் தமிழர். இவ்விரண்டு அபிப்பிராயங்களுக்குமிடையில் பொதுத்தளம் என்ன என்று சிறிது சிந்தித்துப் பாருங்கள். ஒற்றையாட்சியோ தமிழீழமோ இரண்டிலுமே மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய ஜனநாயக முறைமை வேண்டும் என்றுதான் இருவரும் சொல்லுவர். எனவே ஜனநாயக ஆட்சிதான் இங்கு பொதுதத்தளமாகும். முதலில் இப்பொழுது ஜனநாயக ஆட்சியைக் கொண்டுவருவதற்கு எல்லோரும் சேர்ந்து பாடுபடலாம். அப்படிச் சோந்து இயங்க ஆரம்பிக்கும்போது ஜனநாயக ஆட்சியின் சில வரைமுறைகளைப் பற்றி இருவரும் சிந்திக்க வேண்டியதாக இருக்கும். ஒவ்வொரு மக்கள் குழுவும் தங்கள் அடையாளத்தைப் பேணிக்கொண்டு, தங்கள் வாழ்வைத் தாங்களே நிர்ணயம் செய்யும் உரிமையே ஜனநாயகமாகும். இதன் அடிப்படையில் இலங்கையில் வாழக்கூடிய சகல இனங்களும் தமக்கென அரசியல் அலகினைத் தோற்றுவிப்பது சரியெனப் படும். இது தமிழீழத்தின் காரணத்தை சிங்கள மக்களுக்கு உணர்த்துவதாக இருக்கின்றது.
இதில் பாருங்கள் முதலில், இருக்கக்கூடிய சகல மக்களும் ஒத்தக்கொள்ளும் ஒரு பொது வேலைத் திட்டத்தினைப் பற்றிக் கதைத்தோம். பின்பு அந்த வேலைத்திட்டத்தினைப் படிப்படியாக விரிவுபடுத்திக் கொண்டு போகும்போது அடுத்த கட்ட நகர்வுகள் தானே அவிழ்ந்து கொள்ளுகின்றன. ஆனால் முதலிலிருந்தே இரு சாராரும் தத்தமது நிலைப்பாடுகள் பற்றி அசையாமல் இருந்திருந்தால்...? ஆங்கு எங்கள் நாட்டில் நிகழ்ந்ததுபோல வன்முறையும் போரும்தான் மிஞ்சும். எந்த விவாதத்திலும் ஒரு பொதுத்தளத்தைப் பற்றி அதிலிருந்து வேலை செய்யத் தொடங்குவதால் தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்படுகின்றன. மக்கள் தங்கள் அனுபவங்களிலிருந்துதான் கற்றுக்கொள்கின்றனர் என்பதால் இந்த வகையான பொதுத் தளங்கள் அந்த அனுபவங்களை அவர்களுக்கு அளிக்க உதவி செய்கின்றன. அவற்றின் மூலமாகவே அடுத்த கட்டத்தைப்பற்றி சிந்திப்பதற்கு மக்கள் தயாராகின்றனர்.
4. தன்னைப்போலவே இயங்கக்கூடிய வேறு தலைமைகளை உருவாக்குதல்
நாங்கள் அனேகமான சங்கங்களின் நிர்வாக உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசும்போது, ' எல்லாத்துக்கும் நான்தான் ஓடவேணும்.. நான் இல்லாட்டி ஒண்டும் நடக்காது..' என்று அவர்கள் முறைப்பாடு செய்வதைப் போல ஆனால் உண்மையில் மிகுந்த மனத்திருப்தியுடன் சொல்லுவதைக் காணலாம். தங்களைவிட்டால் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது இவர்களைப் பொறுத்தவரையில் பெருமைக்குரிய விஷயமாகவே இருக்கின்றது. பார்க்கப் போனால், தங்களுக்குத்தான் பெயர் கிடைக்க வேண்டும் என்பதிலும் இவர்கள் குறியாக இருப்பார்கள்.  இப்படியானவர்கள் நல்ல தலைவர்கள் அல்ல. வேறு பல நல்ல தலைவர்களை உருவாக்குபவரே உண்மையான நல்ல தலைவராவார். எல்லோரும் 'நாமே இதனைச் செய்தோம்' என்று கூற வைப்பது நல்ல தலைமைத்துவமாகும். அவ்வாறு புதிய தலைமைத்துவங்களை உருவாக்குவதற்கு தேவையான அணுகுமுறைகளைக் கீழே தருகின்றோம்.
4.1. பொறுப்புக்களையும் கடமைகளையும் பிரித்துக் கொடுத்தல்
எந்த வேலையைச் செய்யும்போதும் தங்களுடன் இருப்பவர்களுக்கான வேலைகளையும் பொறுப்புக்களையும் பிரித்துக் கொடுத்துவிட வேண்டும். இந்த வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பது மூலந்தான் மற்றவர்கள் தன்னம்பிக்கையையும் புதிய திறமைகளையும் பெற்றுக் கொள்ளுகிறார்கள். ஆரம்பத்தில் இவர்களுக்கு வேலைகளைப் பிரித்துக் கொடுக்கும்போது அவற்றை அவர்கள் ஒழுங்காகச் செய்கிறார்களா என்பதை விசேடமாகக் கண்காணிக்க வேண்டும். அப்பொழுதுதான் பெரிய தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ளலாம். பெரிய பெரிய தவறுகள் தற்செயலாக நடந்து விட்டால் அவர்களே தங்களால் இது முடியாது என்று கைவிடும் நிலைக்குத் தள்ளப்படுவர். இக்காரணங்களினால் நெருங்கிய மேற்பார்வை தேவை. இது நிறைய வேலை என்றாலும், இதன் மூலமாக எதிர்காலத்தில் தலைமைத்துவத்தில் இருப்பவர்களுடைய வேலைப்பழு குறையும் நன்மைகள் ஏற்படுகின்றன.
அத்துடன், ஒவ்வொரு நிகழ்வும் வேலைத்திட்டமும் முடிவடைந்தவுடன் அது செயற்படுத்தப்பட்ட முறை பற்றிய மீளாய்வொன்றினை மேற்கொள்ளுவது அவசியமாகும். இந்த மீளாய்வு, திட்டமிட்டபடி செயற்படுத்தப்பட்டதா, எங்கு தவறுகள் நிகழ்ந்தன, அவற்றைத் தவிர்ப்பதற்கு எதிhகாலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது கலந்துரையாடப்படவேண்டும். இக்கலந்துரையாடலில், 'நீ இங்கு பிழை, நீ அங்கு பிழை..' என்பது சொல்வதல்ல. தனிநபர்களில் கவனம் செலுத்தாமல் நடந்த முறை பற்றி ஆராயவேண்டியது அவசியமாகும். அதில் தலைமைத்துவம் மீதும் குற்றம் இருந்தால் உடனேயே தயங்காமல் அக்குற்றத்தினை ஒப்புக்கொள்ள வேண்டும். இது, தலைமைத்துவத்தின் நேர்மையினை பிறருக்குக் காட்டும். கலந்துரையாடப்பட்ட திருத்தங்கள் ஆவணப்படுத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு அனுசரிக்கப்படவேண்டும். இந்த வகையில் ஒரு குழுவில் உள்ள எல்லோரும் தங்களைச் சுற்றி நடக்கும் விடயங்களைப் பகுப்பாய்வு செய்யவும் புதிய மூலோபாயங்களை கைக்கொள்ளவும் படித்துக் கொள்கிறார்கள்.
4.2. வெளிப்படையாகப் பாராட்டுதல்கள் வழங்குதல்
ஒருவர் ஒரு வேலையை ஒழுங்காக செய்து முடித்தால் அவரைப் பகிரங்கமாகப் பாராட்ட வேண்டும். இந்த சாதனைக்கு அந்த ஆள்தான் காரணம் என்பதை அடையாளம் காட்டிவிடுங்கள். அந்தப் பெருமையில் அடுத்த தடவை அவர் பம்பரமாகச் சுழலுவார். படித்தவரோ படிக்காதவரோ, பணக்காரரோ ஏழையோ, சகல மனிதர்களுக்கும் தமது சக மனிதர்களுடைய அங்கீகாரம் மிக மிக முக்கியமாகும். அந்த மரியாதையையும் அங்கீகாரத்தையும் நாம் வழங்கும்போது அவர் கொளரவப்படுத்தப்பட்ட மனிதராகின்றார். அவருடைய தன்னம்பிக்கை உயருகின்றது, வேலையில் ஈடுபாடும் அதிகரிக்கின்றது.
முடிவு
முடிவாக, தலைமைத்துவம் என்பது ஒரு பரிமாண விஷயம் அல்ல என்பதை உணரவேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் தமது தலைமைத்துவத்தினைக் காட்டுவார்கள். சிலர் நிகழ்ச்சிகளை எற்பாடு செய்வதில் வல்லவர்கள். அவர்களுடைய இந்தத் திறமை காணப்பட்டால், அதற்கு அவரையே பொறுப்பாக விட்டுவிடவேண்டும். செய்ய வேண்டிய நடவடிக்கைகளை வரிசைப்படுத்தி, அதற்கு ஒவ்வொருவரையும் பொறுப்பாக வைத்து அவர்களே நடத்தி முடிப்பார்கள். அதே போல சங்கத்துக்கான நிதி முதல்களை சேர்ப்பதில் சிலர் வல்லவராக இருக்கக்கூடும். வேறு வேறு அலுவலர்களைச் சந்தித்து பிரச்சினைகளை விளக்கி வேண்டிய உதவிகளைப் பெற்றுக் கொண்டு வருவார்கள். அதற்கு அவர்களைப் பொறுப்பாக விட்டால் நிர்வாகக்குழுவுக்கு தலையிடி தீரும். எனவே இங்கு முக்கியமாக ஒவ்வொருவரினதும் விசேட ஆற்றல்களைக் கண்டறிந்து அவற்றிற்கெல்லாம் களம் அமைத்துக் கொடுப்பதுதான் உண்மையான தலைமைத்துவம் என்பதைச் சொல்லலாம்.
கலந்துரையாடலுக்கான வழிகாட்டி
1. உங்கள் சங்கம் அல்லது குழுவுக்கு தலைமைத்துவம் உண்டா? உண்டாயின் அது ஓரிருவரின் தலைமைத்துவமா?
2. உங்கள் சங்கம் அல்லது குழுவுக்குள் எத்தகைய தலைமைத்துவம் இருக்கின்றது? ஒவ்வொரு சம்பவமாகக் குறித்து விளக்கி, அது வகிக்கும் பங்கு என்ன என்பதை மற்றவர்களுடன் விவாதிக்கவும்.
3. உங்கள் குழுவுக்குள் எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள் என்று கருதுகிறீர்கள்? அவர்கள் ஒவ்வொருவரும் எந்தெந்தத் துறையில் தலைமைத்துவம் கொடுக்க முடியும்?
4. உங்கள் அமைப்புக்குள் நல்ல பல தலைவர்களை உருவாக்குவதற்கு நீங்கள் என்ன மாதிரியான வேலைத் திட்டங்களை செயற்படுத்த உத்தேசித்திருக்கிறீர்கள்? அதற்கு உங்களுக்கு எவ்வளவு காலம் தேவை?
5. ஏற்கனவே உங்களுக்கு அதிகாரம் மிக்க தவறான தலைமைத்துவம்தான் இருக்கின்றதெனில், அத்தலைமைத்துவத்தை மாற்றுவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பீர்கள்?








 





ஐ.நா பாதுகாப்புச் சபைப் பிரேரணைகள் 1325உம் 1820உம்




ஐ.நா பாதுகாப்புச் சபை பற்றிய அறிமுகம் 
சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் 1948ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதற்கு முந்தைய ஆண்டுகளிலே இரண்டாம் உலக மகா யுத்தம் நடந்தபோது, ஐரோப்பா அதுவரை உலகம் கண்டிராத பெரும் அழிவைக் கண்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். யுத்தத்தில் இறந்த 60 மில்லியன் மக்களைத் தவிர, 6 மில்லியன் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இந்த அனுபவம் இனியும் வரவேண்டாம் என்று சூளுரைத்துத்தான் உலக நாடுகளே திரண்டு, தங்களுடைய அங்கத்துவத்தின் மூலம்,  ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தை உருவாக்கின. அதற்கான சர்வதேச ஒப்பந்தத்தினை ஏற்படுத்தின. அந்த ஒப்பந்தமே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் சாசனம் ஆகும்.
இவ்வாறாக, சமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுவதற்கு ஐ.நா ஸ்தாபனம் உருவாக்கிய அங்கமே பாதுகாப்புச் சபையாகும். இச்சபையின் அதிகாரங்கள் ஐ.நா சாசனத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. அவையாவன, சமாதானத்தை ஏற்படுத்தல், அதற்கு இணங்கி வராத நாடுகளுக்கு எதிராக சர்வதேச பொருளாதாரத் தடைகளை செயற்படுத்துதல், தேவையான பொழுது அவ்வாறான நாடுகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்பனவாகும். நீங்கள் ஐ.நாவின் அமைதி காக்கும் படைகள் பற்றி பத்திரிகைகளில் வாசித்திருப்பீர்கள். இவை செயற்படுத்தப்படுவது பாதுகாப்புச் சபையின் அதிகாரத்தின் கீழாகும். இந்த நடவடிக்கைகளெல்லாம் ஐ.நா பாதுகாப்புச் சபையின் பிரேரணைகள் மூலம் உலகுக்குத் தெரியப்படுத்தப்பட்டு அமுலுக்கு கொண்டு வரப்படுகின்றன.
இவ்வளவு முக்கியமான அதிகாரங்களை, அவற்றை ஐ.நாவின் அதியுயர் அதிகாரங்கள் என்று கூடச் சொல்லலாம், இப்பாதுகாப்புச் சபை கொண்டிருப்பதால், அதில் உலகின் வல்லரசுகள் முக்கிய அங்கத்துவம் வகிக்கின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகியவை தடையுத்தரவு அதிகாரம் (வீட்டோ) மிக்க நிரந்தர அங்கத்துவ நாடுகளாகும். இவை தவிர மேலும் 10 நாடுகள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு அங்கத்துவம் பெறலாம். காலத்துக்குக் காலம், முக்கிய பிரச்சினைகளைப் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வருவதால் அவற்றைத் தீர்ப்பதற்கான காத்திரமான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்கும் வண்ணம் பிரேரணைகளை அச்சபை கொண்டு வருவதற்கு உதவலாம். இவ்வாறு, உலகெங்கும் உள்ள பெண்கள் அமைப்புக்கள் போட்ட அழுத்தத்தினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையே 1325 ஆகும். இதைக் கொண்டு வருவதற்கு உதவியாக அப்போதைய அங்கத்துவ நாடுகளில் ஒன்றான நமீபியாவின் பெண் அமைச்சர் நெடும்போ நந்தி என்டைட்வா என்பவர் கடுமையாக உழைத்தார். இப்பெண்களின் இடையறாத உழைப்பின் பயனைத்தான் இன்று உலக நாடுகளின் பெண்கள் எல்லோரும் அனுபவிக்கின்றனர்.


பாதுகாப்புச் சபை பிரேரணை 1325
பிரேரணை 1325 ஆனது 2000ம் ஆண்டு ஒக்டோபர் 31ந் தேதி அங்கீகரிக்கப்பட்டது. இது பெண்களின் உரிமைகள், மற்றும் அவர்களின் பாதுகாப்பு சமாதானம் போன்ற விடயங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியாக எடுக்கப்பட்ட மிக முக்கியமான சட்ட பூர்வமான தீர்மானம் என்றால் மிகையாகாது. சட்ட பூர்வம் என்றால், பாதுகாப்புச் சபையின் இத்தீர்மானத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு கோர்ட்டில் கூட வழக்காடலாம் என்பது பொருள். இப்பிரேரணையானது பெண்களின் உரிமைகளை மதிக்கும் பொருட்டும், சமாதானத்தை உருவாக்குதலிலும் யுத்தத்தின் பின்பான புனர் நிர்மாணப் பணிகளிலும் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் கோரிக்கை விடுக்கிறது. யுத்தத்தினால் பெண்கள் அதி விசேடமாகப் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொண்ட முதல் பாதுகாப்புச் சபை ஆவணம் இதுவாகும். பெண்கள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது மிகக்குறைவு என்று அவதானித்து, அவர்கள் பங்குபற்றுவதால் சமாதான நிலைமைகள் இன்னும் விருத்தியாகும் என்று தெளிவாகத் தெரிவித்திருக்கின்றது. அடிதடிபிடியில் உடனேயே இறங்காமல் சுமுகமாகப் பழகும் இயல்பும், அதிகாரம் மிக்க பதவிகளை அதீத பேராசையோடு நாடாத இயல்பும் உள்ளவர்கள் பெண்களல்லவா? அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் அரசியல், ஆண்கள் பெரும்பான்மையாக இருக்கும் அரசியலைவிட சற்று வித்தியாசமானதாகத்தானே இருக்கும்?
இப்பிரேரணையைச் சுருக்கமாகக் கூறப்போனால்....
1. உள்ளுர், தேசிய, சர்வதேச அரங்குகளில் சமாதானத்தை உருவாக்கும் சகல நடவடிக்கைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்தல்

2. ஐ.நா தன்னுடைய அங்கத்துவ நாடுகளுக்கு அவ்வப்போது அனுப்பும் விசேட பிரதிநிதிகளில், உதாரணமாக யுத்த காலத்தில் காணாமற் போனோரை விசாரிப்பது அல்லது பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது என்று இத்தகைய பிரச்சினைகளை ஆராய்ந்து ஐ.நாவுக்கு அறிவிக்கும் எந்த விசேடப் பிரதிநிதிகள் மத்தியிலும், பெண்களும் அடங்குவதாகச் செய்தல்

3. அமைதி காக்கும் படைகள், அல்லது கண்காணிப்புக் குழுக்கள் என்று ஐ.நா அமைப்பு யாரை அனுப்பினாலும் அதில் பெண்களும் சமமாகப் பங்குபெறச் செய்தல்

4. யுத்த காலத்தில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் குற்றங்களை யுத்தக் குற்றங்களாகக் கருதி அதற்குப் பொறுப்பானவர்களுக்கு உரிய தண்டனைகளை வழங்குதல். அவை நடைபெறாத வண்ணம் உறுதியான நடவடிக்கைகளைக் கைக்கொள்ளல்

5. அகதி முகாம்களில் ஏற்படக்கூடிய பெண்களைக் கடத்தும் பிரச்சினைகள், எச்ஐவி எய்ட்ஸ் தொற்று போன்றவற்றைத் தீர்ப்பதற்கான விசேட பயிற்சிகளைப் பெண்களுக்கும் முகாம் பணியாளர்களுக்கும் வழங்குதல்

6. யுத்தத்திற்குப் பின்பான புனர் நிர்மாணப் பணிகளில் பெண்களினதும் பெண் பிள்ளைகளினதும் பிரச்சினைகளை, விசேட தேவைகளைக் கவனத்திற் கொண்டு அதற்கான குறித்த திட்டங்களைச் செயற்படுத்தல்

7. இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் பெண் போராளிகளது விசேட தேவைகளைக் கவனித்து அவர்களது அபிவிருத்தியை நிச்சயப்படுத்திக்கொள்ளுதல்

8. யுத்த நாடுகளின் இராணுவ சிவில் அமைப்புக்களுக்கு பெண்கள் பிரச்சினை தொடர்பான அறிவையும் விளக்கத்தையும் கொடுக்கும் விழிப்புணர்வுத் திட்டங்களுக்கு உரிய வளங்களை ஒதுக்குதல்

9. யுத்தத்தினாலும் வன்முறையினாலும் பாதிக்கப்பட்ட சகல நாடுகளிலும், அங்கு பெண்களின் நிலைமை என்னவாக இருக்கின்றது என்பதை ஆராயும் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான வளங்களை ஒதுக்குதல்

10. யுத்தங்கள், கலவரங்களினால் பாதிக்கப்படும் ஒவ்வொரு நாடும் தாம் பெண்களையும் பெண்பிள்ளைகளையும் பாதுகாப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன என்பதை அறிவிப்பதற்கு கிரமமாக பாதுகாப்புச் சபைக்கு ஒரு முன்னேற்ற அறிக்கை சமர்ப்பித்தலை நிர்ப்பந்தித்தல். அந்த முன்னேற்ற அறிக்கையைக் கொண்டு ஒவ்வொரு நாட்டிற்கும் தேவையான இடங்களில் அழுத்தத்தைப் பிரயோகித்தல் 

என்பனவாகும்.

பிரேரணை 1325 கொண்டுவரப்பட்டதால் உலகமெங்கும் பலதரப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஐரோப்பியப் பாராளுமன்றம் சமாதான நடவடிக்கைகளில் பெண்கள் குறைந்தது 40வீதமாவது ஈடுபடுத்தப்படவேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. பெண்கள் அமைப்புக்கள் முன்னரைவிட இன்னும் துணிகரமாக சமாதானத்துக்கான அறைகூவலை முன்வைத்திருக்கின்றன. இதற்கு உதாரணங்களை எங்கள் நாட்டிலும் இஸ்ரேலிலும் காணலாம். யுத்தம், சமாதானம் என்னும் விடயங்கள் எங்கும் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருப்பதனால் பெண்கள் அரசியலில் கூடிய பிரதிநிதித்துவம் பெறவேண்டும் என்பது பெரிய கோஷமாக வளர்ந்து வந்திருக்கின்றது. எங்கள் நாடு அதற்கு நல்லதொரு உதாரணமாகும். 

இது தவிர, வேறு குறிப்பிட்ட நன்மைகளும் ஏற்பட்டிருக்கின்றன.

13,000 பேரைப் பலி கொண்ட யுத்தம் நிகழ்ந்த நேபாளத்தில், லிலி தபா என்னும் பெண், விதவைகள் மற்றும் காணாமல் போனோரின் மனைவிமார் என்கின்ற அடிப்படையில் சமாதானப் பேச்சுவார்த்தை மேசையில் ஒரு பிரதிநிதித்துவம் இவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று வாதாடி வென்றிருக்கிறார். ஈராக்கில் பெண்கள் அமைப்புக்கள் மரியாதைக்குரிய முன்னணி சமாதான அமைப்புக்களாக வளர்ந்து வருகின்றன. அடிமட்டத்திலிருந்து பல தலைவிகள் உருவாகி சர்வதேச மட்டத்தில் சமாதானம் பேசக்கூடியவர்களாக வந்திருக்கின்றனர். இதற்கு உதாரணமாக, பிஜி நாட்டைச் சேர்ந்த ஷரோன் ரோல்ஸ், உகண்டாவில் பிறந்த மொபீனா ஜெஃபர், எங்கள் ஊரில் ராதிகா குமாரசுவாமி அத்தகைய பெயர் பெற்ற பெண்ணாவார். அவர் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகவும், இப்பொழுது படைகளில் பிள்ளைகள் சேர்க்கப்படுவதற்கு எதிராகவும் பணிபுரியும் ஐ.நாவின் விசேட பிரதிநிதியாக இருக்கிறார்.

பாதுகாப்புச்சபை பிரேரணை 1820

பிரேரணை 1325இன் பயனாகக் கொணரப்பட்ட இன்னொரு பிரேரணைதான் 1820 ஆகும். 2008ம் ஆண்டு ஜ}ன் 19ந்தேதி, முழு ஆதரவுடன் பாதுகாப்புச் சபை இப்பிரேரணையை நிறைவேற்றியது. இது, முதன்முறையாக பாலியல் வன்புணர்ச்சியினை யுத்த ஆயுதமாக உபயோகிப்பதை வன்மையாகக் கண்டித்துள்ளது. இவ்வகையான குற்றச் செயல்கள் யுத்தக் குற்றங்களாகக் கண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன்பு வழக்காக கொண்டுவரப்படலாம் என்கின்றது. யுத்தத்தின் போதான பாலியல் வன்புணர்ச்சியானது மனித குலத்திறகெதிரான குற்றமாகவும், இனப்படுகொலையாகவும் விபரிக்கப்பட்ட முதல் உத்தியோகபூர்வ ஆவணம் இந்தப் பிரேரணையாகும். இந்தக் குற்றத்துக்கு எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிப்பு வழங்கப்படக்கூடாதென்கின்ற கட்டளையையும் விதித்திருக்கின்றது.

பாதுகாப்புச் சபை பிரேரணை 1820 கொண்டுவரப்படுவதற்கு சில வரலாற்றுக் காரணிகள் உள்ளன. 1990களில் முன்னைய யூகோஸ்லாவியப் பிராந்தியத்தில் சேர்பியத் துருப்புக்கள் அந்நாட்டில் குடியிருந்த முஸ்லிம் சிறுபான்மையினருக்கெதிரான போரினை ஆரம்பித்திருந்தனர். இந்தப்போரில், முஸ்லிம் மக்களின் மீதான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாக முஸ்லிம் பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஈடுபடுத்தியவிதம் உலகையே கலக்கியது. இது உத்தியோகபூர்வமாக சேர்பிய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்த யுத்த உபாயம் என்பதும் நிறுவப்பட்டது. இக்குற்றத்திற்காக சேர்பியத் தலைவர் மிலோசவிச் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார். அதன் பிறகுதான், குறிப்பாக பாலியல் வன்புணர்ச்சி யுத்த ஆயுதமாக உபயோகிக்கப்படும் கொடுமையைத் தடை செய்யும் எண்ணம் உலகுக்குத் தோன்றியது.

பிரேரணை 1820 ஆனது  பிரேரணை 1325இன் பல அம்சங்களைப் பொதுவில் கொண்டிருந்தாலும், அது ஐ.நாவின் செயலாளர் நாயகத்தை பொறுப்புக் கூறுபவராக ஆக்குவதில் வித்தியாசப்படுகின்றது. இதன்படி, செயலாளர் நாயகம் அவர்களே யுத்த நாடுகளில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்ச்சி சம்பவங்களைக் கண்காணிப்பவராகவும், அவற்றைப் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வருபவராகவும் நியமிக்கின்றது. இதைத் தவிர, நாடுகள் தங்கள் நடவடிக்கைகள் பற்றி பாதுகாப்புச் சபைக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கும்பொழுது, அந்த அறிக்கைகளை மேலும் தரமுள்ள உண்மையான அறிக்கைகளாக மாற்றுவதற்கான வழிமுறைகளைக் காட்டும் பொறுப்பையும் அவரிடமே விடுகின்றது.    

கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:
1. யுத்தம், வன்முறை, மற்றும் கலவரங்களினால் பெண்கள் பிரத்தியேகமாகப் பாதிக்கப்படுகின்றார்கள் என்று கூறப்படுவது ஏன்? காரணங்களை ஆராய்க.

2. அவர்கள் ஆண்களிலும் விட வித்தியாசமாகப் பாதிக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் விவரமாக எடுத்துக்கூறுக.

3. யுத்தத்தின்போது பாலியல் வன்புணர்ச்சி எவ்வாறு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை ஆகலாம்?

4. இந்தக் கட்டுரையில், பிரேரணை 1325 கடும் உழைப்பினால் கொண்டுவரப்பட்டது என்று கூறப்பட்டிருக்கிறதே. இந்தக் கடும் உழைப்பு எதைக்குறித்து இருந்திருக்க முடியும்?

5. எங்கள் ஊரில் பெண்களுக்கு இருக்கக்கூடிய பாதுகாப்புப் பிரச்சினைகள் என்னென்ன? சம்பவங்களாக எடுத்து விளக்குதல் நல்லது.

6. எங்களுக்கு நிரந்தர சமாதானம் ஏற்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன? அவை நடக்கின்றனவா? அவற்றில் பெண்கள் பங்குபற்றுகிறார்களா? ஆம் என்றால் என்ன என்றும் இல்லையென்றால் ஏன் என்றும் குறிப்பிடுக.

7. பிரேரணைகள் 1325, 1820 ஆகியன இலங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம் பெண்களாகிய எங்களுக்கு ஏதும் பிரயோசனம் தரும் பிரேரணைகளா? அவை எப்படிப் பிரயோசனமாகின்றன, அல்லது எங்களுக்கு முக்கியமாகின்றன?

8. அவற்றை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்யலாம்? நாங்கள் எங்கள் ஊரில் செய்யக்கூடிய ஒவ்வொரு விடயத்தையும் விபரிக்க. நீங்கள் கூறியவற்றைச் செய்வதனால் பெண்களாகிய எங்கள் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படுமா?

9. பெண்களின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படுவதாலும், அவர்கள் பங்குபற்றுவதாலும் சமாதானம் நிலைக்க முடியும் என்று கூறப்படுகிறதே, அது உண்மையா? ஏன்? எப்படி?

10. இது தொடர்பாக நாம் செய்யவேண்டிய, செய்யக்கூடிய  நடவடிக்கைகளை முதலிலிருந்து முன்னுரிமைப்படுத்தி எல்லோரும் பார்க்கும் வண்ணம் எழுதி எடுத்துக்கொள்ளுக.

11. ஆரம்பிக்கவேண்டிய நடவடிக்கைகள் என்று நீங்கள் குறிப்பிடும் நடவடிக்கைகளை உங்களில் யார் எப்போது செய்து முடிக்கப்போகிறீர்கள்? ஓவ்வொருவரும் உங்கள் சொந்த நடவடிக்கைத் திட்டத்தினைப் போடுங்கள். அதை ஒவ்வொருவராகவோ பலராகவோ செய்து முடிக்கலாம். உங்கள் அடுத்த வாசகர் வட்டக் கலந்துரையாடலில், நீங்கள் சொன்ன விடயங்களெல்லாம் செய்து கொண்டு வந்திருக்கிறீர்களா என்று நிறுவவேண்டும் என்பதைத் தயவு செய்து மறக்காதீர்கள்.







  






அரசியலில் பெண்கள் பங்குபற்றுவதன் முக்கியத்துவம்



அரசியல் என்றால் என்ன?
சட்டம், ஒழுங்கை நிலை நாட்டி, மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஏற்படுத்தப்படும் கட்டமைப்புக்களும், அவற்றினிடையேயான உறவு முறைகளும் அரசியல் எனப்படும். அரசியல் என்றவுடன் எங்களுக்கு அனேகமாக பாராளுமன்றம்தான் நினைவுக்கு வரும். மக்கள் எங்கள்; வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளே பாராளுமன்றத்தை அமைக்கின்றார்கள். இப்பாராளுமன்றம் எங்கள் வாழ்க்கை தொடர்பான சகல சட்டங்களையும் இயற்றுகின்றது.  உதாரணமாகக் கூறப்போனால், குடியுரிமைச் சட்டம், கல்விச் சட்டம், காணிச் சட்டம், தொழிற்சட்டம், வீட்டுச் சட்டம், விவாகப்பதிவுச் சட்டம், கூட்டுறவுச் சட்டம், பாலியல் வன்முறைச் சட்டம், தேர்தல் சட்டம் என இவ்வாறு எல்லாமே பாராளுமன்ற உறுப்பினர்கள் கைகளினூடுதான் வருகிறது. பார்த்தீர்களா? எங்கள் பொதுவாழ்க்கையிலிருந்து சொந்த வாழ்க்கை வரை எல்லாமே எப்படி அரசியலினால் தீர்மானிக்கப்படுகின்றதென்று?
பிரதானமான அரசியல் கட்டமைப்புக்கள் எவை?
பாராளுமன்றம் ஒரு சட்டவாக்க அமைப்பு என்று முதல் கண்டோம். பாராளுமன்றம் உருவாக்கிய சட்டத்தினை செயற்படுத்துவதற்கு அமைச்சுக்கள் இருக்கின்றன. அமைச்சுக்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தெரிவாகி நியமிக்கப்படும் அமைச்சர்கள் தலைமை தாங்கி நடத்துகின்றனர். அமைச்சுக்கள் தமக்கென திணைக்களங்கள் என்றும், பிரிவுகள் என்றும் நிர்வாகக் கட்டமைப்புக்களை நியமித்து தமது வேலைகளைக் கொண்டு செல்கின்றன. அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்புக்கள் நேரடியாக அரசியலில் இல்லையென்றாலும், அவை அரசியல் கட்டமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டன.
சகல மக்களின் சகல தேவைகளையுமே ஒரு நாட்டின் மத்திய அரசு சரிவரக் கவனிக்க முடியாதபடியினால், ஒரு நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்திற்கெனவும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டன. உள்ளுராட்சி மன்றங்கள் ஒவ்வொரு பிரதேசத்தின் சனத்தொகையைப் பொறுத்து மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை எனப் பெயர் பெறும். இந்த உள்ளுராட்சி மன்றங்கள், பாராளுமன்றமும் அமைச்சுக்களும் ஒருசேர இருப்பது போன்ற கட்டமைப்புக்களாகும். அவற்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் உள்ளனர். இவர்கள் பாராளுமன்றம் போலவே தமது அதிகாரத்திற்குட்பட்ட விடயங்களில் சட்டங்களை ஆக்கலாம். இச்சட்டங்களை செயற்படுத்த இவர்களுக்கு ஒரு நிர்வாகக் கட்டமைப்பு ஒன்று உண்டு. இந்த ஆட்சிமன்றங்கள் ஒரு பிரதேசத்தின் கல்வி, சமூக, சுகாதார, பொருளாதார விருத்திக்காகப் பலவித பணிகளைச் செய்யக்கூடியன.
உள்ளுராட்சி மன்றங்கள் பல சிறப்புத் தகைமைகள் கொண்ட அமைப்புக்களாகும். அவையாவன,
1) இதில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள், தாம் ஆட்சி செய்யும் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, உள்ளுர் மக்களின் பிரச்சினையை நன்குணர்ந்தவர்களாவார்கள்.

2) இப்பிரதிநிதிகள் மக்கள் மத்தியில் வாழ்பவர்களாகையால், மக்களுக்கு பொறுப்புக் கூறுபவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்
3) ஓவ்வொரு உள்ளுராட்சி மன்றமும் அதைத் தெரிவு செய்த மக்களுக்கருகாமையிலேயே இருப்பதனால், அதன் நடவடிக்கைகளில் மக்கள் பங்குபற்றக்கூடியதாக இருக்கின்றது.  
எனவே, மக்களின் அடிப்படைத் தேவைகளை சரிவர பூர்த்தி செய்வதற்கு உள்ளுராட்சி மன்றங்கள் ஒரு சிறந்த கருவி என்பதில் ஐயமில்லை.
உள்ளுராட்சி மன்றங்கள் என்றால் என்ன,  பாராளுமன்றம் என்றால் என்ன, இவற்றில் அங்கத்துவம் வகிப்பதற்கும் அரசாங்கம் அமைப்பதற்கும் அரசியல் கட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் மக்களின் வாழ்க்கை எப்படி நெறிப்படுத்தப்படவேண்டும் என்கின்ற தனித்தன்மையான சித்தாந்தம் கொண்ட நிறுவனமாகும். இந்தக் கட்சிகளில் ஏதாவதொரு கட்சிக்குப் பெரும்பான்மை ஆதரவு மக்களால் வழங்கப்படும்போதுதான் அந்தக் கட்சி தனக்குரிய அமைச்சரவையையும் அதன் தலைவரான பிரதம மந்திரியையும் தேர்ந்தெடுத்து ஆட்சிப்பொறுப்பில் அமர்கின்றது. தனது சித்தாந்தத்தை சட்டங்களாகவும், கொள்கைத் திட்டங்களாகவும் நடைமுறைப்படுத்துகின்றது. எனவே, ஒருவரினது அரசியல் வாழ்க்கையை வரைந்து பார்ப்போமானால், அவர் முதலில் கட்சித் தொண்டராகி, பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினராகி, பின் பாராளுமன்ற உறுப்பினராகி, பின் அமைச்சராகி, பின் பிரதம மந்திரியாக உயரலாம்.
எங்கள் நாட்டில் ஜனாதிபதி ஆட்சி முறைமையும் உண்டு. ஜனாதிபதியானவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர். அவர் பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கு அடிபணிய வேண்டியவராயினும், தனக்கென்று அதீத அதிகாரங்கள் கொண்ட தனிநபராக இருக்கின்றார். இதன்படி, அமைச்சுக்கள் பல பணிகளைச் செய்யலாமென்றாலும், அவற்றின் அமைச்சர்களைத் தீர்மானிப்பதும், அந்த அமைச்சுக்களையெல்லாம் நினைத்த நேரத்தில் தனது நேரடி அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவதும் என் ஏகப்பட்ட அதிகாரங்கள் அவருக்கு உண்டு.
அரசியலில் பெண்கள் ஏன் பங்குபற்ற வேண்டும்?
ஆதிகாலத்தில், மனிதர்கள் குடிகளாக வாழ்ந்தபொழுது பெண்கள் அக்குடிகளின் தலைமைத்துவத்தை வைத்திருந்தார்கள் என வரலாறுகள் எமக்குக் கூறுகின்றன. அதன் பிறகு, படிப்படியாக ஆண்களின் செல்வாக்கு சமூகத்தில் உயர்ந்தபோது, அவர்களே அரசராக முடிசூடும் வழக்கம் வந்தது. இவர்கள் மத்தியில் பெண்கள் அரசாளும் இராணிகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தபோதும், அரசு என்றால் ஆண்களுக்குரியது என்கின்ற படிமம் எல்லோர் மனதிலும் விதைக்கப்பட்டுவிட்டது. அப்படிப்போலத்தான் கல்வி என்றால் பெண்களுக்கு வராது, வெளியே சென்று தொழில் செய்ய பெண்களுக்கு முடியாது என்று பெண்களைப் பூட்டி வைத்திருந்தது எங்கள் சமூகம்.
இந்த அடக்குமுறையிலிருந்து படிப்படியாக  பெண்கள் விழித்தெழுந்தார்கள். இன்று கல்விக்கான சமவாய்ப்பினைப் பெற்றுவிட்டார்கள். எங்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியாகும் பட்டதாரிகளில் சராசரி 57 சதவீதமானவர்கள் பெண்கள் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அது மட்டுமல்லாது பெண்கள் வெளியே போய் வேலை செய்வது மட்டுமன்றி கடல் கடந்து வெளிநாடுகளுக்குச் சென்றும் வேலை செய்கிறார்கள். எங்கள் நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முதல் மூன்று தொழிற்றுறைகளிலும் பெரும்பான்மையாக உழைப்பது பெண்களே. மத்திய கிழக்கு நாடுகளில் தொழில், ஆடைத்தொழிற்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள் என இந்த மூன்று முக்கிய துறைகளிலும் பெண்களின் உழைப்புத்தான் பிரதானமாக இருக்கின்றது. எனவே, எங்கள் நாட்டில் பெண்கள், குடும்பங்களின் கண்களாக மட்டுமன்றி, நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் திகழ்கின்றனர்.
இப்படியெல்லாம் திகழ்ந்தென்ன? எங்கள் அரசியல் களத்தை எடுத்துக் கொண்டால் அதில் பெண்களைத் தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும். 1948ல் நாங்கள் சுதந்திரம் கண்ட நாள்முதல் இன்று வரை எங்கள் பாராளுமன்றத்தில் 5 வீதத்திற்கு மேலாக பெண்கள் இருந்ததில்லை. எங்கள் உள்ளுராட்சி மன்றங்களிலோ 2 வீதத்திற்கு மேலாக இருந்ததில்லை. இதற்கு, எங்கள் இலங்கை நாட்டில் 1931ம் ஆண்டே பெண்கள் உட்பட சகலருக்குமான வாக்குரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டுவிட்டது. இன்றும்கூட பெண்கள்தான் அதிகூடிய வாக்காளர்களாக ஒவ்வொரு தேர்தல்களிலும் அவதானிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படியானால், பெண்களின் உழைப்பு வேண்டும்;. அவர்களின் வாக்குகள் வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் அரசியல் பதவிகள் மட்டும் அவர்களுக்கு வேண்டாமா? இது நியாயமா என்று நீங்கள் யோசித்துச் சொல்லுங்கள்.
பெண்கள் அரசியலில் பங்குபற்றுவதற்கான தடைகள்
பெண்கள் அரசியலில் பங்குபற்றுவதற்கு மதம், பாரம்பரியம், சமூகம், பொருளாதார நிலை போன்ற சகல தடைகளும் உண்டு. அவையாவன,.
1. வீடுதான் பெண்களுக்கான இடம் என்று எங்கள் சமூகம் கருதுகின்றது. அதனால் பகிரங்க இடமாகிய அரசியலுக்குள் அவர்கள் நுழைவதைத் தடை செய்கின்றது. இதற்காகப் பல காரணங்களைக் காட்டுகின்றது. குடும்பத்தைக் கவனிக்கவேண்டும் என்கின்றது. ஒரு பெண்ணைப் போலவே ஒரு ஆணுக்கும் குடும்பம் தேவைதான். இதில் ஆணுக்கு மட்டும் குடும்பப் பொறுப்புக்கள் எதுவும் இருக்காதது ஏனோ? 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?' என்று சொல்லித்தான் அவர்களுக்கு கல்வியுரிமையை எங்கள் சமூகம் மறுத்தது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். குடும்பப் பொறுப்பைக் காரணம் காட்டித்தான் முன்பு வெளியில் சென்று தொழில் செய்யவும் விடவில்லை. இதிலிருந்து இது நொண்டிச் சாக்கு என்பதை அறிந்து கொள்ளலாம்.

2. அரசியலில் ஈடுபடுவதென்பது, நீண்ட நேரத்தைச் செலவழிக்க வேண்டிய விஷயமாகும். கூட்டங்களில் கலந்து கொண்டும், மக்களைச் சந்தித்துக் கொண்டும் திரியவேண்டும். இதைச் செய்வதற்கு குடும்ப ஒத்தாசை நிறையவேண்டும். அது குறிப்பாக குடும்பத்தின் ஆண் அங்கத்தவர்களிடமிருந்து கிடைப்பதில்லை. ஏனெனில், பெண்கள் அதிகாரபூர்வ பதவிகளில் அமர்வதை அனேகமாக அவர்களின் குடும்பத்து ஆண்கள் நேரடியாகவோ இரகசியமாகவோ வெறுக்கிறார்கள். அதிகாரம் கிடைத்தபின்பு தங்களை மதிக்க மாட்டார்களே என்கின்ற பயந்தான் இதற்குக் காரணம்.

3. வெளியில் திரிய விடாமல் வளர்க்கப்பட்டதனால், பெண்களுக்கும் வெளியுலகைப் பற்றிய அனுபவம் குறைவு. அத்துடன் அரசியல் விடயங்களில் ஆர்வத்துடன் வளர்க்கப்படும் பெண்கள் மிகக்குறைவு. எங்கள் மத்தியில் எத்தனை பெண்கள் கிரமமாக பத்திரிகை வாசித்து ரேடியோவில் செய்தி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்?. ஆனால் ஆண்களைப் பாருங்கள். அவர்கள் எந்த நேரமும் அரசியல் பேச்சுத்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். தங்களுக்குத் தெரியாது, சமாளிக்க முடியாமல் போய்விடும் என்கின்ற காரணத்திற்கும் பெண்கள் தாங்களே பயந்து அரசியலுக்குள் நுழையத் தயங்குகிறார்கள்.

4. இன்று எங்கள் நாட்டின் அரசியல், வன்முறை நிறைந்த விடயமாக மாறிவிட்டது. தேர்தல் என்றால் குத்து வெட்டு சூடு என்று அர்த்தமாகி விட்டது. குண்டர்கள் இல்லாமல் அரசியல் பண்ணவே முடியாத நிலை. இதற்குப் பயந்தும் பெண்கள் ஒதுங்குகிறார்கள். ஆனால், பெரும்பாலும் அமைதியான அணுகுமுறை கொண்ட, அதிகார ஆசையும் போட்டிகளும் அதிகம் கிடையாத பெண்கள் இல்லாதபடியினால்தான் எங்கள் அரசியல் கலாசாரம் இவ்வளவு சீரழிந்து போயிருக்கின்றதென்பதை யாரும் உணர்வது கிடையாது. எங்கள் நாட்டின் அரைவாசி அரசியல்வாதிகள் பெண்களாக இருந்தால் அரசியல் உறவுகள் எப்படி இருக்குமென்று சும்மா கற்பனை பண்ணிப் பாருங்களேன்.  

5. அரசியலில் ஈடுபடுவதற்கு நிறையப் பணம் தேவை. பிரச்சாரத்திற்குக் கொஞ்சம் பேரை வேலைக்கு அமர்த்த வேண்டும், போஸ்டர் அடிக்க வேண்டும், விளம்பரங்கள் செய்ய வேண்டும், பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.  இதற்குத் தேவையான  முதல் எல்லாம் ஆண்களின் கைகளில்தான் இருக்கின்றன. பெரிய முதலாளி என்றால், அல்லது பெரிய தொழிலதிபர் என்றால், அல்லது பெரிய பிஸ்னஸ்மேன் என்றால் உங்கள் மனக்கண்களில் தெரிபவர்கள் யார்? ஆண்கள் அல்லவா? அத்தகைய பணக்காரர்கள்தான் பின்பு அரசியலிலும் ஈடுபடுகிறார்கள். இந்தப் போட்டியிலும் பெண்கள் அடிபட்டுப்போய்விடுகிறார்கள்.

6. கற்பொழுக்கம் பெண்கள் மீது மட்டும்தான் எங்கள் சமூகத்தினால் சுமத்தப்படுகின்றது. அந்த ஒழுக்கத்தில்தான் அவர்களின் குடும்ப கௌரவமும் தங்கி நிற்கின்றது எனக் காட்டப்படுகின்றது.  இதை மீறும் பெண்களை அவர்கள் குடும்பமும் எங்கள் சமூகமும் ஒரேயடியாக ஒதுக்கி வைத்து விடும். இதனால் எமது பெண்கள் சமூகத்துக்குப் பயந்தவர்களாக வாழ்கின்றார்கள். இந்த நிலையில் அவர்களை ஒரே அடியில் வீழ்த்துவதற்கு அவர்களின் ஒழுக்கத்தைப் பற்றி மட்டும் கதைத்தால் போதும். உடனேயே அவர்களின் குடும்பம் 'நீ அரசியலில் இறங்கியதும் போதும் எங்கள் மானம் பறந்ததும் போதும்..' என்று சொல்லி வீட்டில் உட்கார்த்தி விடுகின்றது. இதனால்தான் பெண்கள் அரசியலில் இறங்கும் அனேகமான சந்தர்ப்பங்களில் அவர்களின் சொந்த வாழ்ககையின் ஒழுக்கத்தைப் பற்றிய கீழ்த்தரமான வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதே நேரம் ஆண் அரசியல்வாதிகள் ஒருவித வெட்கமுமில்லாமல் வைப்பாட்டிகள் வைத்துக் குடித்துக் கும்மாளமடிக்க முடியும். யாருக்குத் தெரிந்தாலும் அவர்களுக்குப் பாதகமில்லை.

7. அரசியல் அதிகாரம் என்பது ஒரு சக்தி வாய்ந்த போதைப்பொருள் போன்றது. அதை வைத்திருப்பவர்கள் யாரும் இலேசில் அதனை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஆண்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பெண்கள் கைகளில் கொடுப்பதற்குத் தயங்குவதும் இதே காரணத்தினால்தான். எங்கள் நாட்டில், குறிப்பாக ஆட்சிக்கு வரக்கூடிய பிரதான கட்சிகளை, பெண்களை வேட்பாளர்களாகப் போடவைப்பதே மலைப்பான காரியமாகும். அவர்களை அப்படியே வேட்பாளர்களாகப் போடவைத்தாலும், பின்பு வாக்குகள் எண்ணும் இடத்திலேயோ அல்லது விருப்பு வாக்குச் சீட்டுக்கள் விழும் இடத்திலேயோ மோசடி செய்து வாக்கு மாறாட்டம் பண்ணி விடுகிறார்கள் ஆண் அரசியல்வாதிகள். அங்குள்ள பெண் வேட்பாளர்களோ ஏமாந்து உதவியற்று நிற்கின்றார்கள். எந்த உரிமையையும் போராடித்தான் மனிதர்கள் பெற்றார்கள். பெண்களுக்கான வாக்குரிமைக்கு அந்தக் காலத்தில் எங்கள் பூட்டிமார்கள் எவ்வளவு போராடினார்கள் தெரியுமா? அதே போல அரசியல் பங்கெடுப்பிற்கான உரிமையையும் போராடிப் பெறுவதற்கான தெம்பு எங்கள் பெண்கள் மத்தியில் இன்னும் வரவில்லை.

8. மத நம்பிக்கைகளும் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு சிலசமயங்களில்  தடையாகின்றன. இந்த நிலைமை அனேகமாக வேதங்களை மதத் தலைவர்கள் எவ்வாறு அர்த்தம் கற்பிக்கின்றார்கள் என்பதிலேயே தங்கியிருக்கின்றது. மதத் தலைவர்களெல்லோரும் ஆண்களாக இருப்பதனால், அவர்கள் தங்களுக்கு சாதகமாகவே வேதங்களுக்கும் பொருள் கொடுப்பது சாத்தியமாகும்.
எனவே, அரசியலில் பெண்களின் பங்கேற்றலுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்று நாம் நம்பினால், மேற்கூறிய ஒவ்வொரு தடையையும் தகர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்குண்டு. இவற்றை ஒரேயடியாகத் தகர்ப்பதற்கு, ஆசன ஒதுக்கீடுகள் உதவுகின்றன. இத்தனை பெண்கள் பாராளுமன்றத்திலேயோ அல்லது உள்ளுராட்சி மன்றங்களிலேயோ கட்டாயமாக அமரவேண்டும் என்பது சட்டபூர்வமாகக் கொண்டுவரப்பட்டால், அரசியல் கட்சிகள் வேறு வழியின்றி யாரையாவது பெண்களை அமர்த்தியேயாகவேண்டும். ஆரம்பத்தில் ஆண் அரசியல்வாதிகளின் உறவினர்களாகத்தான் இந்தப் பெண்கள் இருக்கக்கூடும் என்றாலும்கூட, பெண்கள் அரசியல் அதிகாரத்தில் இருக்கும் வழக்கம் நாள் செல்லச் செல்ல அதிகளவு பெண்களை அரசியலுக்குள் இழுக்கும். எந்த மாற்றம் வேண்டுமென்றாலும் சமூகத்தை முதலில் அதற்குப் பழக்கப்படுத்தவேண்டும், அவ்வளவுதான்.
நாங்கள் முன்பு பார்த்ததுபோல, உள்ளுராட்சி மன்றங்கள் மக்கள் பங்கேற்கும் ஜனநாயக முறைக்கான முக்கிய அங்கங்கள் என்பதனால், அவற்றிலே பெண்கள் பங்குபற்றுவது மிக அவசியமாகின்றது. எனவே, எதுதான் இல்லையென்றாலும், உள்ளுராட்சி மன்றங்களிலாவது பெண்கள் சரிசமமாகப் பங்குபெறுவதற்காக நாமெல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து உழைக்க வேண்டும்.

கலந்துரையாடலுக்கான கேள்விகள்

1. நீங்கள் வளரும் பருவத்தில் உங்கள் குடும்பத்தில் யார் அரசியல் ஆர்வத்துடன் இருந்தார்கள் என்பதை உதாரணக்கதைகள் கொண்டு விளக்க முடியுமா?

2. அரசியல் மாற்றத்தினால் உங்கள் வாழ்க்கை மாறிப்போன ஏதாவதொரு சம்பவத்தைக் கூறுங்கள். அவ்வாறாயின், அரசியலை எவ்வளவு முக்கிய அம்சமாகக் கருதுகின்றீர்கள்? அதில் நீங்கள் ஈடுபடுவது முக்கியம் என்று நிiனைக்கிறீர்களா?

3. இங்கு குறிப்பிட்ட தடைகளைவிட வேறேதும் தடைகள் பெண்களுக்கு உண்டா?

4. உங்கள் ஒவ்வொருவருக்கும் எற்பட்ட அரசியல் அனுபவங்களைக் கூறுக. அதில் நீங்கள் பங்காளர்களாகவா அல்லது பார்வையாளர்களாகவா இருந்தீர்கள்? ஏன்?

5. மாற்றங்களின் தன்மை பற்றி இங்கே ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதைப் பற்றி உமது அபிப்பிராயம் என்ன?

6. பெண் பிரதிநிதிகளுக்கான ஆசன ஒதுக்கீடு அவசியம் என்று நினைக்கிறீர்களா?

7. பெண்களை அரசியலில் பங்குபெறச் செய்வதற்கு உங்கள் பிரதேசத்தில் என்னென்ன பணிகளைச் செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஓன்றொன்றாக விவரிக்க

8. இது தொடர்பாக நாம் செய்யவேண்டிய, செய்யக்கூடிய  நடவடிக்கைகளை முதலிலிருந்து முன்னுரிமைப்படுத்தி எல்லோரும் பார்க்கும் வண்ணம் எழுதி எடுத்துக்கொள்ளுக.

9. ஆரம்பிக்கவேண்டிய நடவடிக்கைகள் என்று நீங்கள் குறிப்பிடும் நடவடிக்கைகளை உங்களில் யார் எப்போது செய்து முடிக்கப்போகிறீர்கள்? ஓவ்வொருவரும் உங்கள் சொந்த நடவடிக்கைத் திட்டத்தினைப் போடுங்கள். அதை ஒவ்வொருவராகவோ பலராகவோ செய்து முடிக்கலாம். உங்கள் அடுத்த வாசகர் வட்டக் கலந்துரையாடலில், நீங்கள் சொன்ன விடயங்களெல்லாம் செய்து கொண்டு வந்திருக்கிறீர்களா என்று நிறுவவேண்டும் என்பதை தயவு செய்து மறக்காதீர்கள்.








இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 17வது திருத்தச் சட்டமும் நிலைபேறான சமாதானமும்



அறிமுகம் 
இலங்கையில் வாழும் சகல இனங்களும் குழுமங்களும் பங்குகொள்ளும் ஜனநாயகத் தன்மை பொருந்திய ஒரு அரசினைத் தாபிப்பதன் மூலமே நிலைபேறான சமாதானத்தை நாங்கள் கட்டியெழுப்பலாம். அப்படியானதொரு அரசைப் பற்றிய தெளிவான தரிசனத்துடன் எங்கள் மக்கள் ஒரு நீண்ட கால நோக்கில் குறி தவறாது வேலை செய்வதனால் மட்டுமே அதை நாங்கள் அடையலாம். இந்தத் தரிசனம், சகல மக்களையும்; எந்தவித பேதமுமின்றிப் பரிபாலனம் செய்யும்; ஒரு அரசியலமைப்புச் சட்டத்தின் உருவம் பற்றியும், அது இயற்றும் அரசியல் கட்டமைப்புக்களின் பண்பாடு பற்றியும், எங்கள் நீதித்துறை பற்றியும் இருக்கவேண்டும்.
அரச நிர்வாகத்தில் கட்சி அரசியலைக் களைந்து அது நடுநிலையாக சகல மக்களுக்கும் சேவையாற்றும் வகையில் செய்வதே மேற்கூறிய நிலையை அடைவதற்கான முதல் படியாகும். எங்கள் நாட்டில் 1972ம் ஆண்டுதான் அரச நிர்வாகம் அமைச்சரவைக்குக் கீழ் கொண்டுவரப்பட்டது. அதற்குப் பிறகு அரச உத்தியோகத்தர்களின் சகல நடவடிக்கைகளிலும் அவர்களின் நியமனம், மாற்றல்களிலும் அரசியல்வாதிகள், குறிப்பாக அமைச்சர்கள், தலையிடும் நிலைதான். இதன் விளைவாக எங்கள் அரச துறையில், ஊழலும், தகுதியற்றவர்களின் நியமனங்களும் அதன் காரணமான திறன் விரயமும், மற்றும் வேலை வெளியீடு குறைந்த தன்மையும் அதிகரிக்கலாயின. இப்படி அடிப்படைப் பிரச்சினை இருக்கும்போது, சும்மா நீதியான தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்றோ, சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படவேண்டுமென்றோ, ஊழல் ஒழியவேண்டுமென்றோ, எவ்வளவு பேசியும் பயனில்லை. இக்குற்றங்களுக்கெதிராக வழக்குப் போட்டு நீதி மன்றத்திற்குச் சென்றாலோ அங்கும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள்தான் விசாரணைக்கு அமர்ந்திருக்கிறார்கள். அநியாயம் நடப்பது மட்டுமல்ல, அதனைத் தட்டிக் கேட்பதற்கும் இன்று எங்கள் நாட்டில் வழியில்லாமல் போய்விட்டது.    
இதற்காகத்தான் எங்களது நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் 17வது திருத்தம் 2004ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திருத்தம் தற்போதைய அரசு கட்டமைப்பில் ஜனாதிபதிப் பதவியினால் அனுபவிக்கப்படும் அளவு கடந்த அதிகாரங்களையும் அமைச்சரவையின் கூடுதல் அதிகாரங்களையும் மட்டுப்படுத்தி சமநிலைப்படுத்த எத்தனித்த ஒரு சிறிய முயற்சியாகும். அது, அரச நிர்வாகமானது அமைச்சரவையின் கீழிருந்து (ஜனாதிபதியின் கீழிருந்தும் என்றும் வாசிக்கலாம்) எடுக்கப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட சுயாதீன 'பொதுச் சேவைகள் ஆணைக்குழு', 'பொலிஸ் சேவைகள் ஆணைக்குழு', 'நீதித்துறை ஆணைக்குழு' என்பனவற்றின் கீழ் கொண்டுவரப்படவேண்டும் என்று பணித்தது. அரசியல்வாதிகளின் பொம்மைகளாக இருக்காத அரச நிர்வாகிகள் செயற்படுவதற்கான தளம் அமைக்கப்படவேண்டுமென்று இறுதி நோக்கம் கொண்டது.
ஆனால், எங்களது அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு அம்சமாக இருந்துள்ளபோதிலும், 17வது திருத்தத்தின் அமுலாக்கம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. அதனை செயற்படுத்துவதற்கு எங்கள் அரசாங்கம் தயக்கம் காட்டி வருகின்றது. இதனால், 17வது திருத்தச் சட்டம் என்றால் என்ன என்பதை நாமெல்லோரும் அறிவது முக்கியமாகின்றது.   
17வது திருத்தம் என்ன கொண்டிருக்கின்றது?; 
 அரச இயந்திரத்தின் முக்கிய பதவிகளின் நியமனங்களைத் தீர்மானிப்பதற்காக அமைக்கப்படும் அரசியலமைப்புச் சபைதான் 17வது திருத்தத்தின் பிரதான அம்சமாகும். இதன் அங்கத்துவம் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கும் சகல கட்சிகளினாலும் தீர்மானிக்கப்படும். அரசியலமைப்புச்சபை எடுக்கும் தீர்மானங்களெல்லாமே கலந்துரையாடல் மூலமும் முற்றான இணக்கப்பாட்டுடனும் எடுக்கப்படவேண்டுமென விதிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானங்களை ஜனாதிபதி செயற்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தவிர, குறிப்பிடப்பட்ட வௌ;வேறு ஆணைக்குழுக்களின் பொறுப்புக்கள் என்ன என்பதையும் இது வரையறுக்கின்றது. 
அ. அரசியலமைப்புச் சபை
பிரதமமந்திரி, பாராளுமன்ற சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஒருவர், பிரதம மந்திரியும் எதிர்க்கட்சித் தலைவரும் தரும் சிபாரிசுகளின் அடிப்படையில் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஐவர், பிரதம மந்திரியும் எதிர்க்கட்சித் தலைவரும் இல்லாத ஏனைய அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் சுயேச்சை உறுப்பினர்களினாலும் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஒருவர், என இவர்களே அரசியலமைப்புச் சபையின் அங்கத்தவர்களாவார்கள்.
பின்வரும் வகையான நியமனங்கள், ஜனாதிபதியினால் சிபாரிசு செய்யப்பட்டு அரசியலமைப்புச் சபையின் முழு அங்கீகாரத்துடன்தான் மேற்கொள்ளப்படவேண்டும் என இத்திருத்தச் சட்டம் கோருகின்றது: 
1. தேர்தல் ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் சேவைகள் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்சம் ஊழல்களை ஆராயும் நிரந்த ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, எல்லைகள் நிர்ணயிக்கும் ஆணைக்குழு போன்ற சகல ஆணைக்குழுக்களினதும் அங்கத்தவர்கள் 
2. உயர் நீதிபதியும் உயர் நீதிமன்றத்தின் ஏனைய நீதிபதிகளும், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவரும் நீதிபதிகளும், நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் தவிர்ந்த அங்கத்தவர்கள்
3. சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், ஐஜிபி (பொலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல்), பாராளுமன்ற நிர்வாக ஆணையாளர், பாராளுமன்ற செயலாளர் நாயகம்.
ஆ. பொதுச்சேவைகள் ஆணைக்குழு
1. இது 9 அங்கத்தவர்களைக் கொண்டிருக்கும். அவர்களில் குறைந்தது 3 பேர்கள் அரச நிர்வாகத் துறையில் குறைந்த பட்சம் 15 வருடங்கள் அனுபவம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். இதன் தவிசாளரை சபையின் சிபாரிசுடன் ஜனாதிபதி நியமிப்பார். இது, பாராளுமன்றத்திற்கே பொறுப்புக் கூற வேண்டியது. வருடாவருடம் தனது நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையைப் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கும். 
இவ்வாணைக்குழுவின் பொறுப்புக்களாவன,
2. திணைக்களத் தலைமைகள் தவிர்ந்த சகல அரச உத்தியோகத்தர்களினதும் நியமனங்கள், மாற்றல்கள், பதவியேற்றங்கள், ஒழுக்காற்று நடவடிக்கைகள், வேலை நீக்கங்கள் அனைத்தும் ஆணைக்குழுவே தீர்மானிக்கும். திணைக்கள அதியுயர் அதிகாரிகள் தொடர்பான தீர்மானங்களெல்லாம் ஆணைக்குழுவின் ஆலோசனையின்பேரில் அமைச்சரவையினால் மேற்கொள்ளப்படும்.
3. ஒவ்வொரு மாகாணத்திற்கும் இவ்வகையான மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு இருந்து மாகாணசபையின் அதிகாரத்திற்குட்பட்ட தீர்மானங்களை மேற்கொள்ளும். அத்துடன் மாகாண சபைகளுக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்கும்.
ஆயினும், அரச உத்தியோகத்தரின் பணிகள் தொடர்பான சகல கொள்கைகளும் அமைச்சரவையினால் வரையப்படவேண்டும் என்பதைக் கவனிக்க.
ஆ. தேர்தல் ஆணைக்குழு
இதில் அரசியலமைப்புச் சபையினால் சிபாரிசு செய்யப்பட்டு ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் 5 அங்கத்தவர்கள் பதவி வகிப்பர். இவர்கள் நிர்வாகத்துறையிலோ கல்வித் துறையிலோ அல்லது வேறெந்தத் துறையிலுமோ பெயர் பெற்றவர்களாக இருக்கவேண்டும். இதன் தவிசாளரை சபையின் சிபாரிசுடன் ஜனாதிபதி நியமிப்பார். நேர்மையானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களையும் வாக்குக்கணிப்புக்களையும் நடத்துவதே இவ்வாணைக்குழுவின் நோக்கமாகும். இது பாராளுமன்றத்திற்கு மட்டுமே பொறுப்புக் கூறும் அதிகாரங்கள் கொண்டது. வருடாவருடம் தனது நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையைப் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கும். 
இதன் பொறுப்புக்களாவன,
1. சகல வகைத் தேர்தல்களையும் நடத்துதல்
2. வாக்காளர் பதிவேடுகளைத் தயாரித்தலும் பேணுதலும்
3. தேர்தல்களின்போதான சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்தல், அதற்கான ஒத்துழைப்பினை சகல படையினரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளல்
4. தேர்தல்களின்போது அரசுக்குச் சொந்தமான எந்த அசையும் அசையாச் சொத்துக்களையும் தேர்தல் பிரச்சார விடயங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தடுத்தல்
5. தேர்தல் நடவடிக்கை தொடர்பான எந்த நெறிப்படுத்தலையும் எந்த ஊடகங்களினூடாகவும் அறிவித்தல்
6. பொலிஸ் சேவைகள் ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் தேவைகளைத் தெரிவித்தல். தேர்தல்களின்போது தேர்தல் ஆணைக்குழுவின் நெறிப்படுத்தலின்கீழ் பொலிஸ் ஆணைக்குழுவும் பொலிஸ் உத்தியோகத்தர்களும்  இயங்குவதற்கு விதிக்கப்பட்டிருக்கின்றது. தேர்தல் ஆணைக்குழு விதிக்கும் கடமைகளைச் செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கெதிராக எந்த வித சட்ட நடவடிக்கையும் எடுக்க இயலாது என்பதும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
7. தேர்தல்களை முறையாக நடத்துவதற்கு ஆயுதப்படையினரின் சேவைகளையும் இவ்வாணைக்குழு கோரலாம். இதனை ஜனாதிபதிக்கு விடும் சிபாரிசு மூலம் செய்யலாம்.
இ. நீதிச் சேவைகள் ஆணைக்குழு
இது உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசரையும் வேறு இரு நீதிபதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். பிரதம நீதியரசர் இதற்கு தவிசாளராக இயங்குவார்.
இதன் பொறுப்புக்களாவன, 
1. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மாற்றல் விவகாரங்கள்
2. நீதிச் சேவை உத்தியோகத்தர்களின் நியமனங்கள், மாற்றல்கள், பதவியுயர்வுகள், ஒழுக்காற்று நடவடிக்கைகள், வேலை நீக்கங்கள் போன்றவற்றைத் தீர்மானித்தல்
3. இவர்கள் எல்லோருக்குமான பயிற்சி, திறனாய்வு போன்ற விடயங்களைத் தீர்மானித்தல் 
 ஈ. பொலிஸ் சேவைகள்; ஆணைக்குழு
இது 7 அங்கத்தவர்களைக் கொண்டிருக்கும். இதன் தவிசாளரை சபையின் சிபாரிசுடன் ஜனாதிபதி நியமிப்பார். பொதுச் சேவைகள் ஆணைக்குழுவைப்போலவே இவ்வாணைக்குழுவின் அதிகாரங்களும் மாகாண பொலிஸ் சேவைகள் ஆணைக்குழுவின் அதிகாரம் தொடர்பாக மட்டுப்படுத்தப்படும். இதன் பொறுப்புக்களாவன,
1. ஐஜிபியுடன் ஆலோசித்து, சகல பொலிஸ் உத்தியோகத்தினரதும் நியமனங்கள், பதவியுயர்வுகள், மாற்றல்கள், ஒழுக்காற்று நடவடிக்கைகள், மற்றும் வேலை நீக்கங்கள் போன்றனவற்றைச் செயற்படுத்துதல்
2. எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தரைப் பற்றி பொதுமக்களிடமிருந்து வரும் முறைப்பாடுகளைப் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுத்தல்
3. பொலிஸ் உத்தியோகத்தர்களின் பயிற்சி, திறன் விருத்தி போனறன தொடர்பான நடவடிக்கைகள் எடுத்தல் 
கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1. எங்களுக்கு சுயாதீனமாக இயங்கும் ஆணைக்குழுக்களும், சுதந்திரமாக இயங்கக்கூடிய அரச உத்தியோகத்தர்களும் ஏன் தேவை? பின்வரும் அட்டவணையைப் பூர்த்தி செய்து பார்க்க. அதை வைத்து உங்கள் விளக்கங்களை குழுவுக்கு முன்வைக்கலாம்.

சுயாதீனமாக இயங்கும் ஆணைக்குழுவினது அல்லது பொது உத்தியோகத்தரது பெயர் இதனால் அல்லது இவரால் ஏற்படும் பயன்கள்

தேர்தல் ஆணைக்குழு



பொதுச்சேவைகள் ஆணைக்குழு



தேசிய பொலிஸ் ஆணைக்குழு.



இலங்iகை மனித உரிமைகள் ஆணைக்குழு.



இலஞ்சம், ஊழலை விசாரணை செய்யும் நிரந்தர ஆணைக்குழு



நிதி ஆணைக்குழு



எல்லைகள் நிர்ணயிக்கும் ஆணைக்குழு



சட்டமா அதிபர்

கணக்காய்வாளர் நாயகம்

ஐஜிபி

பாராளுமன்ற நிர்வாக ஆணையாளர் 

பாராளுமன்ற செயலாளர் நாயகம்
2. ஏன் தற்போதைய ஜனாதிபதியும் அமைச்சரவையும், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக நடக்கவேண்டியிருந்தும்கூட, 17வது திருத்தச் சட்டத்தினை அமுலாக்கத் தயங்குகின்றனர் என்று நினைக்கின்றீர்கள்?

3. 17வது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கும் நிரந்தர சமாதானத்திற்கும் தொடர்புகள் இருக்கின்றனவா? அப்படி இருக்கின்றதாயின் அது எப்படித் தொடர்பாகின்றது என்பதை விளக்குக.

4. 17வது திருத்தச் சட்டம் செயற்படுத்தப்படுவது நன்மையாயின், அதை இந்த அரசாங்கம் செயற்படுத்த வைப்பதற்கு என்ன செய்யலாம்?

5. இது தொடர்பாக நாம் செய்யவேண்டிய, செய்யக்கூடிய  நடவடிக்கைகளை முதலிலிருந்து முன்னுரிமைப்படுத்தி எல்லோரும் பார்க்கும் வண்ணம் எழுதி எடுத்துக்கொள்ளுக.


6. ஆரம்பிக்கவேண்டிய நடவடிக்கைகள் என்று நீங்கள் குறிப்பிடும் நடவடிக்கைகளை உங்களில் யார் எப்போது செய்து முடிக்கப்போகிறீர்கள்? ஓவ்வொருவரும் உங்கள் சொந்த நடவடிக்கைத் திட்டத்தினைப் போடுங்கள். அதை ஒவ்வொருவராகவோ பலராகவோ செய்து முடிக்கலாம். உங்கள் அடுத்த வாசகர் வட்டக் கலந்துரையாடலில், நீங்கள் சொன்ன விடயங்களெல்லாம் செய்து கொண்டு வந்திருக்கிறீர்களா என்று நிறுவவேண்டும் என்பதை தயவு செய்து மறக்காதீர்கள்.



முடிவுரை
'மக்கள் எல்லோரும் தீர்மானம் எடுத்தலில் பங்கேற்க ஜனநாயக நடைமுறை வேண்டும். ஆனால் அந்த ஜனநாயக நடைமுறையைப் பேணுவதற்கு மக்கள் எல்லோரும் பங்கேற்க வேண்டும்..'       
இதுவரை நீங்கள் வாசித்த விடயங்களிலிருந்து அறிந்து கொண்டதை சுருக்கமாகக் கூறினால், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், பெற்றார், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், கணக்காய்வாளர்கள் போன்ற இத்தனை பேர்களும் சேர்ந்து செயற்பட்டால்தான் ஜனநாயகத்தைப் பேணலாம். பார்க்கப் போனால்,  இந்த மக்கள் குழுவினர் எங்கள் சமூகம் முழுவதையும் உள்ளடக்குகின்றனர் அல்லவா? 
ஏதைப் பெறுவதற்கும் நாம் ஒரு விலை கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். பரீட்சையில் திறமையான சித்தி கிடைப்பதற்கு இரவும் பகலும் கடுமையாகப் படிக்க வேண்டுவதே நாம் கொடுக்கும் விலையாகும். அதே போல் நிறையப் பணம் சம்பாதிப்பதற்கு நாம் கடும் உழைப்பை விலையாகக் கொடுக்கின்றோம். இதேபோலத்தான் சுதந்திர ஜனநாயகத்தை நாம் பெறுவதற்குக் கொடுக்கவேண்டிய விலை எந்நேரமும் விழிப்பாக இருப்பதே என்று ஒரு அறிஞர் கூறினார். எனவே பொதுவில் நடப்பதை அறிய முயற்சி செய்யாது, ஒன்றும் தெரியாத அசட்டு மனிதர்களாக நாம் வாழும்போது எங்கள் வாழ்க்கையையே நாமே பாழாக்குகின்றோம்.   




கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1. குழு அங்கத்தவர்களெல்லோரும் 'நியாயம்', 'அநியாயம்', 'மனித மாண்பு' இவையெல்லாவற்றுக்குமான உதாரணங்களைத் தந்து அவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகளைத் தெளிவாக்கிக்கொள்க.
2. எங்கள் நாட்டில் சமீப காலங்களில் மனித உரிமைகள் பேணப்பட்டனவா இல்லையா என்பதை உங்கள் அனுபவங்களைக் கொண்டு விளக்குங்கள். இதில் நீங்கள் கண்டது, பிறர் சொல்லக் கேட்டது, பத்திரிகையில் வாசித்தது, என்பவற்றை அடக்கலாம். நீங்கள் விவரிக்கும் ஒவ்வொரு உரிமையும் மனித உரிமைகளின் எந்த வகையைச் சேர்ந்தது என்று சொல்ல முடியுமா?

3. உங்களது கிராமத்தவர்களினால் மனித உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் உண்டா?


4. 'ஜனநாயகம்', மனித உரிமைகள்', 'சட்டங்கள்', இவற்றுக்கிடையிலான தொடர்புகள் என்ன? 

5. ஏங்களது நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றதா இல்லையா? எப்படிப் பாதுகாக்கக்படுகின்றது? எப்படி மீறப்படுகின்றது?


6. ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க நீங்கள் என்னென்ன செய்யலாம்?
  
7. ஏந்த நடவடிக்கையோடு ஆரம்பிப்பீர் என்பதை ஒவ்வொருவரும் விளக்கி அதற்கான உபாயங்களைக் கலந்துரையாடி குறித்துக் கொள்க.

ஜனநாயகமும் மனித உரிமைகளும்;



மனித மாண்பு
மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒரேயொரு வித்தியாசம் இருக்கின்றது என்று சொல்லுவார்கள். அந்த வித்தியாசம்தான் மனிதர்களுக்கு இருக்கும் ஆறாவது அறிவான பகுத்தறிவு என்று கருதப்படுகின்றது. இந்தப் பகுத்தறிவு என்ன தன்மையானது என்று பார்த்தால், நியாயம் எது அநியாயம் எது, சரி எது பிழை எது என்று பகுத்துப் பார்த்து உணர்ந்து அதைப்போல நடக்கவைக்கும் மூளையின் செயற்பாடு என்று சொல்லலாம். இந்த வரைவிலக்கணத்தை நாங்கள் ஒத்துக்கொள்வோமானால்;, நியாயம், அநியாயம், சரி, பிழை என்பவற்றை எந்த அளவு கோலை வைத்துக் கொண்டு நாங்கள் தீர்மானிக்க முடியும் என்ற கேள்வியே உதிக்கின்றது. ஏதை நியாயம் என்று நாங்கள் சொல்லுகின்றோம்? ஏன்?
இந்தக் கேள்விக்குப் பதில் தேடும்போதுதான் மனித மாண்பு என்கின்ற விடயத்தை நாங்கள் விளங்கிக் கொள்ள வேணடியதாகிறது. மாண்பு என்பது, சுய கௌரவம், பரஸ்பர மரியாதை, சுய ஆளுமை போன்ற பல அர்த்தங்களை உள்ளடக்கியிருக்கும் சொல்லாகும். மனிதர்களாகப் பிறந்திருக்கும் நாங்கள் மாண்புடன் வாழவேண்டும். அவ்வாறு வாழ்ந்தால்தான் மனிதர்கள் ஆவோம், இல்லாவிடில் மிருகங்களுக்கு சமனாவோம். எனவே, நாம் நியாயம் என்று கூறுவது மனித மாண்பினை உயர்த்தும் வலுப்படுத்தும் சகல விடயங்களையும் குறித்துத்தான். நாம் அநியாயம் என்று சொல்லுவது மனித மாண்பினை அழிக்கும் சகல விடயங்களையுமே.
உதாரணமாக, மனிதர்களை மரியாதை கூடிய மேம்பட்ட வாழ்க்கையைக் கொடுக்கும் கல்வி யாருக்காவது கிடைக்காவிடில் அதை அநியாயம் என்று கூறுகின்றோம் இல்லையா? ஒருவர் சுதந்திரமாக தனது கருத்தினைக் கூறும் பேச்சுச் சுதந்திரம் இல்லாவிடில் அதையும் அநியாயம் என்கின்றோம் இல்லையா? ஒருவர் சுதந்திரமாகச் சிந்திக்கவும் பேசவும் பங்குகொள்ளவும் கல்வி கற்கவும்தான் அவருடைய மாண்பு அங்கு நிலைப்படுகின்றது. ஆகவே, நாம் ஆறறிவு கொண்ட மனிதர்கள் என்பதனால் மாண்புடன் வாழக் கடமைப்பட்டவர்கள் என்றும் சொல்லலாம். அதைத்தான் நீதி என்றும் நியாயம் என்றும் மனிதகுலம் கருதுகின்றது.
மனிதர்கள் மாண்புடன் வாழ வழி செய்யத்தான் ஜனநாயகம், மனித உரிமைகள் என்கின்ற இந்த இரண்டு கருத்தோட்டங்களும் உலகத்தில் உருவாயின. ஏந்த இடத்திலும் ஜனநாயகமும் மனித உரிமைகளும் இல்லாவிட்டால் அங்குள்ள மக்கள் மாண்புடன் வாழ முடியாது, அவர்கள் விலங்குகள் போலத்தான் வாழ வேண்டும். இதனால்தான் சுயமரியாதையுடன் வாழ விரும்பும் எவரும் மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பேணுவதற்காக உழைத்தல் அவசியமாகின்றது. இந்த இடத்தில், ஒரு கேள்வி எழுகிறது. மனிதர்கள் மாண்புடன் வாழவே பிறந்தவர்கள் என்றால், ஏன் அவர்கள் அப்படி வாழும் வாழ்க்கையை நாம் பிரத்தியேகமாகப் பாதுகாக்க வேண்டியிருக்கின்றது? இதற்குப் பதில் சொல்ல வேண்டுமென்றால் இங்குதான் அரசு என்கின்ற விஷயத்துக்கு வருகின்றோம்.
அரசு என்றால் மனிதர்களை ஆட்சி செய்வதற்காக மனிதர்களால் உருவாக்கப்பட்ட இயந்திரம் என்று சொல்லாம். பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் எல்லோரும் ஒரு ஒழுங்கு முறையுடன் வாழவேண்டுமானால் அங்கு அவர்களுக்கு ஒரு அரசு தேவைப்பட்டது. இந்த அரசு காலத்துக்குக் காலம் உருவத்தில் மாறி வந்திருக்கின்றது. முன்னர் இராசாக்கள் ஆண்டார்கள். அவர்கள் காலத்துக் கதைகளையும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்தானே. 'யாரங்கே! இவன் தலையைச் சீவிக் கொன்று விடுங்கள்!!' என்று இராசா கட்டளையிட்டால் அது நிறைவேற்றப்பட்ட காலமும் இருந்தது. இந்த அமைப்பின்கீழ் மனித மாண்பு எவ்வளவு சிதைந்து போனது என்பதைச் சொல்லத்தேவையில்லை. இந்த நடைமுறை அநியாயம் என்று மனிதர்கள் கருதியதால்தான் இந்த முறையை மாற்றிக்கொண்டு புதிய அரசு முறைகளைக் கொண்டு வந்தார்கள்.
இதற்குப் பின்பான காலத்தில்தான் தேர்தல்கள் மூலம் மக்கள் தெரிவு செய்கின்ற பிரதிநிதிகள் ஆளும் அரசாங்கம் நடைமுறைக்கு வந்தது. இன்று, இப்படிப்பட்ட 'மக்கள் அரசாங்கம்' என்று நாம் கூறுகின்ற அரசாங்கம் இருந்தும், எங்கள் நிலை கிட்டத்தட்ட அரசர் காலத்து நிலையாக இருக்கவே காண்கின்றோம். எங்கள் நாட்டை எடுத்துப் பாருங்கள். ஒரு விசாரணையும் நீதியுமின்றி எங்களில் எத்தனைபேர் துப்பாக்கிக்குப் பலியாகினர். இந்த சம்பவங்களில் அனேகமானவை எங்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசின் வேலையாகவும், ஏனையவை அரசு அல்லாத ஆயுதக்குழுக்களின் வேலையாகவும் நாம் காண்கின்றோம். இந்த ஆயுதக்குழுக்களை இயங்க வைப்பதிலும்கூட எங்களது அரசின் பங்கு கணிசமாக இருப்பதைக் காணலாம்.
இந்தப் பயங்கரவாத  சூழ்நிலையின் காரணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதாவது, ஒரு சிலருக்கு அளவற்ற அதிகாரம் நிலைக்க வேண்டுமானால், ஏனைய மக்களெல்லோரும் தங்கள் மாண்பினை இழக்க வேண்டியது அவசியமாகின்றது என்பது இதிலிருந்து எங்களுக்குத் தெரிகின்றது. நாங்கள் ஒழுங்காக வாழுவதற்கு அரசு உதவுகின்ற அதே நேரத்தில், அதிலிருந்து கொண்டு எங்களை ஆள்பவர்கள் அளவற்ற அதிகாரங்களைத் தமது கைகளில் வைத்திருக்கவும் அரசு உதவுகின்றது. எனவேதான், அரசின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தி, அது மக்களின் மேம்பாட்டுக்கும் மாண்பு மிகுந்த வாழ்க்கைக்கும் இயைபானதாக மாற்ற வேண்டும். இதற்கு, மக்களாகிய நாம் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் விசேடமாகப் பாதுகாக்க வேண்டியுள்ளது. ஆதலினால்தான் நாம் ஜனநாயகத்தினதும் மனித உரிமைகளினதும் அடிப்படைகளைக் கற்றுக் கொள்வோம். இவை ஏன் எப்பொழுதும் அரசுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றது என்பதையும் விளங்கிக் கொள்வோம்.
மனித உரிமைகள்
மனிதர்களின் மாண்பினைப் பேண உதவும், அடிப்படையான விழுமியங்களை மனித உரிமைகள் என்று சொல்லுவோம். பிரதானமாக, மனித உரிமைகள் என்பனவை மனிதர் கொண்டிருக்கவேண்டிய விழுமியங்களே என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இவை பிறகு சட்டங்களாக அமுல்படுத்தப்படுகின்றன. மனித உரிமைகள் என்னும் கருத்தியல் ஒரு சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவை ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் சமத்துவமாகவும் ஒன்றிணைந்து வாழ வழி செய்கின்றன.


மனித உரிமைகள் ஐந்து வகைப்படும்.
1) குடியுரிமைகள்
வாழ்வதற்கான உரிமை, சுதந்திரமாக நடமாடுவதற்கு உரிமை, கருத்துச் சுதந்திரம், விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை, பிரசாவுரிமை, மனிதாபிமானமற்ற செயல்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை, சட்டத்தின் முன் சமவுரிமை போன்றவை குடியுரிமைகளாகும். இவற்றை ஆராய்ந்து பார்த்தீர்களானால், இவை தன்னிச்சையாக மனம் போன போக்கில் அரசு மக்களின்மீது தனது அதிகாரத்தைப் பிரயோகிக்க விடாமல் மக்களைப் பாதுகாக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
2) அரசியல் உரிமைகள்
அமைதியாக ஒன்று கூடும் மற்றும் சங்கம் அமைத்துக்கொள்வதற்கான உரிமை, தகவல்களைப் பெறும் உரிமை, சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமை போன்றவை அரசியல் உரிமைகளாகும். இவை மக்கள் தங்களது சார்பில் ஆட்சி செய்வதற்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய வைக்கவும், அந்தப்பிரதிநிதிகள் ஆட்சியை சரிவர நடத்துகிறார்களாவென கண்காணிக்கவும், இந்த ஆட்சிக்கூடாகத் தங்கள் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்துவைக்கப் பங்களிக்கவும், வழிவகுக்கின்றன.
3) பொருளாதார உரிமைகள்       4) சமூக உரிமைகள்
பொருளாதார உரிமைகளும் சமூக உரிமைகளும் மக்கள் தகுந்த வாழ்க்கைத்தரத்தோடு கௌரவமாக வாழுவதை உறுதி செய்கின்றன. பட்டினியிலிருந்து விடுபடுவதற்கான உரிமை, வேலை செய்யும் உரிமை, வேலைக்குரிய தன்மானமான ஊதியத்தினைப் பெறுவதற்கு உரிமை, கல்வி சுகாதாரம் போன்ற பொது அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை, தொழிற்சங்க உரிமை, ஓய்வு பெற்றபின்னரோ அல்லது தொழிலை இழந்த தருணத்திலோ வாழ்க்கையைப் பாதுகாக்க உதவும் சமூகப் பாதுகாப்பிற்கான உரிமை போன்றன சமூக பொருளாதார உரிமைகளுக்குள் அடங்கும்.
பசியில் வாடுபவனுடன் அரசியல் கதைக்க முடியுமா? முதலில் பசியைத் தணித்து விட்டுத்தான் மிகுதிக்கதைகளைச் சொல்லலாம் இல்லையா? மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்போதுதான் அவர்கள் தங்கள் குடியுரிமைகளைப் பற்றியோ அரசியல் உரிமைகளைப் பற்றியோ யோசிக்க முடியும் என்கின்ற கருத்தோடுதான் சமூக பொருளாதார உரிமைகள் பற்றிய கருத்து உருவாக்கப்பட்டது. தன்னுடைய மக்களுக்கு இந்த உரிமைகளையெல்லாம் உத்தரவாதப்படுத்தும் பொறுப்பு ஒவ்வொரு அரசுக்கும் உள்ளது.
4) கலாசார உரிமைகள்
கலாசார உரிமைகள் மனிதர்களின் உள ஆரோக்கியத்தைப் பேணுவதற்காகவே கொண்டுவரப்பட்டன எனலாம். எல்லா மனிதர்களுக்கும் தங்களுடைய மொழி, பாரம்பரியங்கள், சடங்கு முறைகள், குல வழக்கங்கள் இவையெல்லாவற்றையும் அனுசரிக்கும் தேவைகள் உண்டு. அவ்வாறுதான் ஒவ்வொரு குழுக்களுடைய அடையாளங்கள் பேணப்பட்டு அவற்றுடைய பரம்பரைகள் பாதுகாக்கப்படுகின்றன. தூன் எந்த இனம், மொழி, மதம், பிரதேசம் நாட்டினைச் சேர்ந்தவர் போன்ற தன்னடையாளங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் அவசியமாகின்றது. எனவே, மொழி, பாரம்பரியங்கள், சடங்கு முறைகள், குல வழக்கங்கள் போன்றவற்றைப் பின்பற்றும் உரிமைகள் வழங்கப்படுகின்றன.
கலாசார உரிமைகள் குழு உரிமைகள் என்னும் வகைப்படுத்தலுக்குக் கீழ் அடங்கும். யாராவது தனிமனிதனாக இருந்து தனது மொழி மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாக்க முடியுமா? உதாரணமாக, ஐஸ்லாந்தில் எஸ்கிமோக்கள் மத்தியில் ஒரு இலங்கைத் தமிழர் அல்லது இஸ்லாமியர் வாழ்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தனது மொழியையோ மதத்தையோ தொடர்ந்து பின்பற்றத்தான் முடியுமா? தன்னையொத்த மனிதர்கள் இருந்தால்தானே அவர்களுடன் தமிழில் உரையாடலாம், சேர்ந்து ஒரு பள்ளிவாசலைக் கட்டி தொழுகைக்குப் போகலாம்? எமது பண்பாட்டினைப் பின்பற்றுவதற்கு ஒரு சமூகம் தேவை. தனியே விட்டால் அவர்கள் எஸ்கிமோக்களின் வாழ்க்கையைப் பினபற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே கலாசார உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதற்கு அவற்றிற்கேயுரிய குழுமங்களின் இருப்பும் முக்கியமாகின்றது. அதேபோல மறுபக்கத்தில், அந்தக் குழு தொடர்ந்து இருப்பதற்கு கலாசார உரிமைகள் பாதுகாப்பது அவசியமாகின்றன. இதனால், மனித உரிமைகள் கோட்பாட்டில் தனிநபர் உரிமைகளைப் போலவே, குழு உரிமைகளும் மிக முக்கியமான அங்கம் வகிக்கின்றன. அக்குழுக்களின் பேரில்தான், அவை தமது விடயங்களைத் தாமே தீர்மானிப்பதற்கான சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டிருக்கின்றது.
ஜனநாயகம்
மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் தீர்மானங்களில் பங்கேற்க வகை செய்யும் அரசாங்கத்தின் நடைமுறையை ஜனநாயகம் என்று கூறுவோம். நடைமுறை என்பதோடு, இது ஒரு அரசியல் சித்தாந்தம் என்றும் விளக்கலாம். அதைவிட, இது மனித சமூகத்தின் இலட்சிய நோக்காகவும் ஒரு வாழ்க்கைப் பண்பாடாகவும் கருதப்படுகின்றது.
ஜனநாயகம், மக்களையும் அதிகாரத்தையும், இந்த இரண்டுக்கும் இடையிலான தொடர்புகளையும் நிர்ணயிக்கும் கட்டமைப்பாகும். அதிகாரம் என்பது ஒருவருக்கோ, ஒரு சிலருக்கோ மட்டுமல்லாமல், ஒரு நாட்டிலுள்ள சகலருக்கும் கிட்டும் வகையில் ஒழுங்கமைக்கப்படும் ஆட்சி முறையே ஜனநாயகம் ஆகும். இவ்வாறு சகலருக்கும் சமமாக ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டுமானால் அங்கு எல்லாருக்கும்,
அவர்கள் உடல் உடைமைகளுக்கு சம பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்
தம்முடைய வாழ்க்கையையும் தொழிற்றுறையையும் மேற்கொள்ள சம வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும்
அரசியலில் பங்கெடுக்க சமவாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும்
சட்டத்துக்கு அமைவான முறையில் தாங்கள் விரும்பிய கருத்துக்களைத் தெரிவிக்கவும், விரும்பியதை எழுதவும் அதன்படி நடக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும்
சுதந்திரமாகப் பொதுவில் கூட்டம் கூட அனுமதி வழங்கப்படவேண்டும்,
அமைப்புக்களாகவும் சங்கங்களாகவும் கட்சிகளாவும் இயங்கும் முழுச் சுதந்திரம் வழங்கப்படவேண்டும்
எழுந்தமானமான கைதுக்களிலிருந்தும் தடுப்புக்காவல்களிலிருந்தும், (கொலை அச்சுறுத்தல்களிலிருந்தும் கூட) பாதுகாப்பு வேண்டும்
மேலே கூறியவற்றிலிருந்து, ஜனநாயகம் நடைமுறைப்படுத்தப்படவேண்டுமானால் அங்கு மனித உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படவேண்டும் என்பது தெளிவாகின்றது. அதேபோல, மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டுமானால் அதற்கு ஜனநாயகம் அவசியமாகின்றது என்பதையும் யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஜனநாயகம் சரிவர இயங்குவதற்கு மூன்று நிபந்தனைகள் உண்டு. அவையாவன,
1) தகுந்த முற்போக்கான சட்டங்கள்
ஒரு நாட்டின் சட்டங்கள், அந்நாட்டிலுள்ள மனிதர்களெல்லோரும் இயங்கும் பொதுவிதிகளைக் குறிக்கின்றன. இவை கட்டாயமாக மனித உரிமைக் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்படவேண்டும். சட்டங்களை நாம் சரியாக அனுசரிப்பதால் எமது சமூகத்தில் ஒழுங்கு நிலைநாட்டப்படுகின்றது, எல்லோருக்கும் நீதியும் நியாயமும் கிடைக்கின்றது. சகல நிறுவனங்களும் நியாயத்தின் அடிப்படையில் இயங்க வழிசெய்யப்படுகின்றது. எல்லோரும் சமமாகப் பங்களிக்கவும் சமவாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளவும் சட்டங்கள் உதவுகின்றன.
எந்தளவு அதிகாரமுள்ள அரசியல் தலைவரானாலும், ஒரு நாட்டின் சட்டங்களை மீறுவதற்கு முடியாது என்ற வகையில் அச்சட்டங்கள் சட்டத்தரணிகளாலும், நீதிபதிகளாலும், ஊடகவியலாளர்களாலும், படித்த சமூகத்தினாலும் பொது மக்களினாலும் பாதுகாக்கப்படவேண்டும். அத்துடன், அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமான முறையில் சட்டங்களை மாற்றுவதையும் தடை செய்ய வேண்டும். மொத்தத்தில், சிறியதோ பெரியதோ, நாமெல்லாரும் சட்டத்தை மதித்து நடக்கப் பழக வேண்டும்.
2) நடுநிலையான சுதந்திரமான நீதித்துறை
எல்லோருக்கும் நீதி கிடைக்க வழிசெய்யும் கருவி சட்டங்கள் என்று பார்த்தோம். சுட்டங்கள் மீறப்படும்பொழுது அதைத் தடை செய்கின்ற அதிகாரம் நீதிமன்றங்களுக்கே உண்டு. எனவே நீதித்துறை சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் இயங்குவது ஜனநாயகத்துக்கான முக்கிய நிபந்தனையாகும். நீதித்துறையும் நீதி மன்றமும், சட்டப் பிரகடனங்களை மேற்கொள்ளவும், அரசியல் யாப்பையும் மனித உரிமைகளையும் மீறும் அரசியல் தூண்டலிலான செயல்களை செல்லுபடியற்றதாக ஆக்கவும் அதிகாரம் உள்ளது. அவை அப்படியே இயங்கவும் வேண்டும்.
3) ஊழல் இன்றிய நிறுவனங்கள்
பணத்துக்கு ஆசைப்படாதவர்கள் யாருமே இல்லையென்று சொல்லலாம். பொது நிறுவனங்கள் அதிக தொகையான பணத்தைக் கையாளுவதனாலும், அப்பணம் செலவழிக்கப்படுவதற்கு  தனிநபர்கள் பொறுப்பாக இருப்பதனாலும், நிதிகள் கையாடப்படுவது சகஜமாகி விட்டது. இத்துடன், பொறுப்பான பதவிகளில் தங்கள் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் அமர்த்துதல் என்பதும் ஊழல் செயற்பாடாகும். ஊழலானது ஜனநாயக நடைமுறைக்கு பெரும் அச்சுறுத்தலாகும். ஏனெனில், பணத்தைக் கொண்டும் செல்வாக்கைக்கொண்டும் எந்தச் சட்டமும் வளைக்கப்படலாம்.
ஊழலை அழிக்க ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் பொதுவாகவே வழங்கும் கருத்தாகும். அனேகமாக எல்லோரும் ஊழல் பேர்வழிகள் என்பதோடு, ஒருவர் ஊழலில் ஈடுபடும்பொழுது ஏனையவர்கள் பேசாமல் இருப்பதே இதற்குப் பிரதான காரணங்களாகும். ஏனையவர்கள் என் பேசாமல் இருக்கிறார்கள் என்றால், அந்த இடத்தில் தாங்கள் இருந்திருந்தாலும் அதையேதான் செய்திருப்பார்கள் என்கின்ற உணர்வே மற்றவர்களின் வாயை அடைத்து வைக்கின்றது. அத்தோடுகூட, ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நிலைகளில் சிறு சிறு ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதனால்தான் பெரும் ஊழல் நடக்கும்போது அதனை அனுதாபத்துடன் நோக்கத் தலைப்படுகிறார்கள்.
இதிலிருந்து, ஊழல் என்பது ஒரு சமூகத்தின் பண்பாடு என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். அது, மக்கள எல்லோருடைய அங்கீகாரத்துடனும்தான் நடக்கின்றது. இந்தப் பண்பாட்டை நாமெல்லோரும் இணைந்து மாற்றினாலன்றி அது மாறாதுதான். ஊழல் நடவடிக்கை எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிறு நன்மைகளைக் கொடுத்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அது எங்கள் சமூகத்துக்கே அளப்பரிய கேட்டினை விளைவிக்கின்றது என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும். ஊழலினால் சமூகத்துக்கும் சகல மக்களுக்கும் நீண்ட கால நன்மை பயக்கும் பொதுச் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றனளூ இவ்வாறு நாட்டின் செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிந்து விடுவதால் அவர்கள் சர்வாதிகாரிகளாக மாற உதவுகின்றது.
இதனை நாம் மனமார உணர்வோமாயின் ஊழல் இல்லாத சமூகத்தை நிச்சயமாக உருவாக்க முடியும். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, கண்காய்வாளர் நாயகத்தின் அலுவலகம், பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குக்குழு, ஊடகவியலாளர்களின் அமைப்புக்கள் இவையனைத்தும் ஊழலுக்கெதிராகப் போராடவேண்டும். இதைத் தவிர எங்கள் பாடசாலைக் கல்வியில் ஊழலின் தீமை பற்றிய அறிவுறுத்தலை ஒவ்வொரு வகுப்பிலும் கொண்டுவரவேண்டும். மதத் தலைவர்கள் தங்கள் ஆசியுரைகளின்போது ஒவ்வொரு முறையும் ஊழலின்றி சுத்தமாகவும் நேர்மையாகவும் வாழுவது பற்றிய அறிவுரைகளைக் கூறிக்கொண்டேயிருக்கவேண்டும். பெற்றார் தமது பிள்ளைகளுக்கு அறிவுரை கூறும்பொழுது அவர்கள் நேர்மையான பொது ஒழுக்கத்தைக் கைக்கொள்வது எவ்வளவு முக்கியமென விளக்க வேண்டும். இப்படி கிரமமாக நாமெல்லோரும் முயன்றோமென்றால் ஊழலை இல்லாதொழிக்கலாம்.

முடிவுரை
'மக்கள் எல்லோரும் தீர்மானம் எடுத்தலில் பங்கேற்க ஜனநாயக நடைமுறை வேண்டும். ஆனால் அந்த ஜனநாயக நடைமுறையைப் பேணுவதற்கு மக்கள் எல்லோரும் பங்கேற்க வேண்டும்..'      
இதுவரை நீங்கள் வாசித்த விடயங்களிலிருந்து அறிந்து கொண்டதை சுருக்கமாகக் கூறினால், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், பெற்றார், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், கணக்காய்வாளர்கள் போன்ற இத்தனை பேர்களும் சேர்ந்து செயற்பட்டால்தான் ஜனநாயகத்தைப் பேணலாம். பார்க்கப் போனால்,  இந்த மக்கள் குழுவினர் எங்கள் சமூகம் முழுவதையும் உள்ளடக்குகின்றனர் அல்லவா?
ஏதைப் பெறுவதற்கும் நாம் ஒரு விலை கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். பரீட்சையில் திறமையான சித்தி கிடைப்பதற்கு இரவும் பகலும் கடுமையாகப் படிக்க வேண்டுவதே நாம் கொடுக்கும் விலையாகும். அதே போல் நிறையப் பணம் சம்பாதிப்பதற்கு நாம் கடும் உழைப்பை விலையாகக் கொடுக்கின்றோம். இதேபோலத்தான் சுதந்திர ஜனநாயகத்தை நாம் பெறுவதற்குக் கொடுக்கவேண்டிய விலை எந்நேரமும் விழிப்பாக இருப்பதே என்று ஒரு அறிஞர் கூறினார். எனவே பொதுவில் நடப்பதை அறிய முயற்சி செய்யாது, ஒன்றும் தெரியாத அசட்டு மனிதர்களாக நாம் வாழும்போது எங்கள் வாழ்க்கையையே நாமே பாழாக்குகின்றோம்.  




கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1. குழு அங்கத்தவர்களெல்லோரும் 'நியாயம்', 'அநியாயம்', 'மனித மாண்பு' இவையெல்லாவற்றுக்குமான உதாரணங்களைத் தந்து அவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகளைத் தெளிவாக்கிக்கொள்க.
2. எங்கள் நாட்டில் சமீப காலங்களில் மனித உரிமைகள் பேணப்பட்டனவா இல்லையா என்பதை உங்கள் அனுபவங்களைக் கொண்டு விளக்குங்கள். இதில் நீங்கள் கண்டது, பிறர் சொல்லக் கேட்டது, பத்திரிகையில் வாசித்தது, என்பவற்றை அடக்கலாம். நீங்கள் விவரிக்கும் ஒவ்வொரு உரிமையும் மனித உரிமைகளின் எந்த வகையைச் சேர்ந்தது என்று சொல்ல முடியுமா?

3. உங்களது கிராமத்தவர்களினால் மனித உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் உண்டா?


4. 'ஜனநாயகம்', மனித உரிமைகள்', 'சட்டங்கள்', இவற்றுக்கிடையிலான தொடர்புகள் என்ன?

5. ஏங்களது நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றதா இல்லையா? எப்படிப் பாதுகாக்கக்படுகின்றது? எப்படி மீறப்படுகின்றது?


6. ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க நீங்கள் என்னென்ன செய்யலாம்?

7. ஏந்த நடவடிக்கையோடு ஆரம்பிப்பீர் என்பதை ஒவ்வொருவரும் விளக்கி அதற்கான உபாயங்களைக் கலந்துரையாடி குறித்துக் கொள்க.