வழிபடும் முறைகள் , முறையான மந்திர ஜெபங்கள் தெளிவாக தெரிந்து இருந்தால் , ஒவ்வொரு ஆலயமும் நமக்கு பொக்கிஷங்கள். ஆனால், அது எல்லாம் அவ்வளவு எளிதில் கிடைத்து விட்டால், தெரிந்து விட்டால் , தண்டனைகளுக்கும் நம் ஆட்கள் விலை பேச ஆரம்பித்து விடுவார்களே..
இந்த பாவமா, சரி - இதுதான் பரிகாரம், இவ்வளவு ரேட் ஆகும்? என்ன சொல்றே..? இந்த ரேஞ்சுக்குத் தான் போய்விடும்.. செஞ்ச தப்புக்கு, தண்டனை அனுபவிச்சு, இவ்வளவு கஷ்டம் அந்த தப்புனாலதான்னு - அவர் உணர்ந்து , மனப் பூர்வமாக , இனி அந்த தவறை செய்வதில்லை என்று உணரும் வரை, பரிகாரங்கள் எதுவும் பலன் அளிப்பதில்லை. தெய்வமும், கண்ணை மூடிக் கொண்டு , கல்லாகவே இருந்து விடும்.
அதெல்லாம் ஓகே, நிஜமாவே கடவுள் இருக்கிறாரா? நாமதான் பைத்தியக்காரன் மாதிரி , கோவில் கோவிலா சுத்திக்கிட்டு இருக்கிறோமே, ஒருவேளை - இதெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு ஆகிட்டா....?
நிஜமா , நெஞ்சை தொட்டு சொன்னா , இந்த மாதிரி பயம் நம்ம எல்லோருக்குமே இருக்கும். ஒருவேளை எல்லாமே , பொய் தானோ..? பணமும், நேரமும் விரயம் தானோ..?
சரி, இந்த நேரத்தை ரொம்ப ஆக்கப்பூர்வமா , வேறு ஏதாவது செய்ய முடிஞ்சா
உருப்படியா நல்ல விஷயங்கள் செய்ய முடிஞ்சா , தாராளமா செய்யுங்க. உங்களை வருத்தி , நீங்கள் செய்யும் முயற்சி - கண்டிப்பாக தெய்வம் கொடுக்கும் வரம் போல தான். கடவுளை மட்டும் நம்பிக்கிட்டு, சோம்பேறித்தனமா சுத்திக்கிட்டு இருக்கிறதுக்கு இது எவ்வளவோ மேல்.. !
அதை விட்டுட்டு, புகை , குடி போதை , பொண்ணுங்க சகவாசம் இப்படி கெட்டுப் போறதுக்கு - கோவில் கோவிலா போயி நேரம் விரயம் ஆனாக் கூட பரவா இல்லை. பிறந்ததே சினிமா பார்க்க , சினிமா சம்பந்தமா செய்திகள் படிக்க மட்டுமேனு இன்னும் நிறையே பேர் இருக்கிறாங்க.
இண்டர்நெட்லேயும் , அதுக்கு ஏத்த மாதிரி - கலர் , கலரா , உரிச்ச கோழிகளா , கவர்ச்சிப் படங்களை போட்டு , இந்த மாதிரி பசங்களை மேலே யோசிக்க கூட விடாம , ஒரு பெரிய கூட்டமே இருக்கு. இப்படியே , ஒருவேளை வாழ்க்கை முடிஞ்சு போயிட்டா , பாவம் இவங்கள்லாம் என்ன செய்வாங்களோ தெரியலை..
அடப் பூ.. இவ்வளவுதானானு ..அவங்க ஒரு கால கட்டத்துலே யோசிக்கிறப்போ..காலம் , எங்கேயோ கடந்து போய் நிற்கும்..! இந்த மாதிரி , என்ன செய்றோம்னே தெரியாம , காலத்தை கடத்துறதுக்கு ,தெய்வ அனுக்கிரகம் வேண்டி காலம் கடத்துறது எவ்வளவோ பரவா இல்லைன்னு நான் நினைக்கிறேன்..
என்னுடைய வெளி நாட்டு நண்பர் , சென்ற முறை திருவண்ணாமலை போனப்போ ஒரு கேள்வி கேட்டார்.
ஒருவேளை கடவுள்னு ஒருத்தரும் இல்லை , எல்லாமே கற்பனை தான்னு ஆகிட்டா என்ன பண்ணுவீங்க?
ஒரு வினாடி எனக்கு ரொம்ப மனசு கஷ்டமாகிடுச்சு. அப்புறமா சொன்னேன்.. ஒருவேளை கடவுள் இல்லைன்னு ஆயிடுச்சுன்னா, அதனாலே பாதிக்கப் படுறதுலே நான் முதல் ஆளா இருப்பேன் சார்.
நீங்க எப்படி பாதிப்பு அடைவீங்க?
ஏதோ , இவ்வளவு நாள், ஏனோ தானோன்னு ஓடிடுச்சு. கஷ்டப்பட்டுட்டோம். ரொம்பவே மனசு வேதனை, ஏமாற்றம், நம்பிக்கை துரோகம், அதனாலே இழப்பு, வலி, வேதனை எல்லாம் அனுபவிச்சுட்டேன். என்னைக்காவது ஒரு நாள் , அந்த ஆண்டவன் கை கொடுத்து மேலே தூக்கிவிடுவான்னு நம்பிக்கைல தான், தொடர்ந்து போராடிக்கிட்டு இருக்கிறேன்.. அப்படி இருக்கிறப்போ , அப்படி ஒன்னுமே இல்லைனா , நொறுங்கிப் போயிடுவேன் சார் னு சொன்னேன்.
ஒரு நிமிஷம் என் கண்ணை உத்துப் பார்த்தார் . அவருக்கு என்ன தோணியதோ , தெரியலை.
கவலையே படாதீங்க.. ! மத்தவங்களுக்கு எப்படியோ, உங்களுக்கு, உங்க நல்ல மனசுக்கு , அந்த ஆண்டவன் கண்டிப்பா உங்களை நல்ல நிலைல வைப்பான். உங்க கிட்ட அந்த கடவுளை நான் பார்க்கிறேன்னார்..!
ஏன் கிட்ட அவர் பார்த்தாரோ இல்லையோ, அவரோட அன்பான வார்த்தைகள்..., அந்த அண்ணாமலையாரோட வார்த்தையாகத் தான் நான் உணர்ந்தேன்.
அதன்பிறகு ஒவ்வொரு நாளும், அந்த இறைவனின் அண்மையை நான் உணரும்படி , எனக்கு கிடைத்துக் கொண்டு இருக்கும் அற்புத அனுபவங்கள் , ஏராளம். மிகப் பழமை வாய்ந்த, அதே சமயம் காலம் காலமாக - பலரது வாழ்க்கையில் அதிசயங்கள் நிகழ்த்திக் கொண்டு இருக்கும் ஆலயங்கள் பற்றி , என்னுடைய தேடல் தொடங்கி , இன்னும் சென்று கொண்டே இருக்கிறது.
நமக்கு மட்டும் எல்லாம் கிடைச்சிட்டாப் போதுமா ? நமக்கு தெரிந்த விஷயங்களை , ஒரு நாலு பேருக்கிட்ட பகிர்ந்து கொள்ளலாமே என்று எண்ணியதில் ஆரம்பித்ததுதான் இந்த இணைய தள முயற்சி.
சரி , விஷயத்துக்கு வருவோம்..!
சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக , தன்னை நம்புபவர்களுக்கு, வேண்டுவனவற்றை வாரி வழங்கி, வெற்றி மேல் வெற்றி பெற வைத்து - புகழின் உச்சியில் வைத்து , குதூகலமடையச் செய்பவள் - அன்னை துர்க்கா பரமேஸ்வரி. சத்தமே இல்லாமல் ,ஏராளமான அரசியல் வாதிகளும், கலை உலகை சேர்ந்தவர்களும், ஆன்மீக தொண்டர்களும் - ஆசி பெற்றுச் சென்று கொண்டு இருக்கும் அன்னை இவள்.
இந்து மதம் மிக மிகப் பழமையானது. தோற்றம் பற்றிய எந்த விபரங்களும் இல்லாததே இதற்கு சிறந்த சான்று. இறைவனால் நமக்கு அளிக்கப்பட்டு, சமயப் பெரியோரால் வளர்க்கப்பட்டது. மதம் சார்ந்த பல நம்பிக்கைகளையும், அதனைச் சார்ந்த பல வழிபாட்டு முறைகளையும் கொண்டது. உருவ வழிபாடு, மந்திரங்கள் ஜெபிப்பது, பிரார்த்தனை வேண்டுவது, பூரண நிலையாய் தியானம் செய்வது என பல வழிபாட்டு நிலைகளை உணர்த்துவது. அனைத்து உயிர்களும் தெய்வத் தன்மை கொண்டிருந்தாலும், தன்னுள் கொண்ட தெய்வத்தன்மையை வெளிக் கொண்டு வருவது மனிதர்களால் மட்டுமே முடியும்.
இதையே " ஞானம் பெறுவது " என்கின்றன நமது சாஸ்திரங்கள். மனிதன் ஞானம் அடைவதற்கு வழி வகுப்பதே இந்து மதத்தின் அடிப்படை நோக்கம். வழிபாட்டின் முதல் நிலையாம் " உருவ வழிபாட்டின் " பொருட்டு நமது முன்னோர்களால் அளிக்கப்பட்ட "திருக் கோவில்களின் " பெருமைகளையும், சிறப்புகளையும் தெரிந்து கோண்டு கடவுளை வழிபடுவது ஒரு ஆத்மார்த்தமான அனுபவம். முறை உணர்ந்த இறை வழிபாடே நன்மை பயக்கும். பூர்வ ஜென்மம் , நல வினை , தீவினை அதன் மூலம் கர்ம வினைகள் என்று தெளிவாக நம் சாஸ்திரங்கள் எடுத்து உரைக்கின்றன. நமக்கு தெளிவாக எடுத்துச் சொல்லத்தான் , யாரும் கிடைப்பதில்லை.
சில நாவல்களை சரித்திர கதைகளை படிக்கும்போது , நமக்கும் அந்த சரித்திரத்துக்கும் எதோ ஒரு சம்பந்தம் இருக்குமோ என்கிற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடிவதில்லை. மிக முக்கியமாக கல்கியின் பொன்னியின் செல்வனும், பால குமாரனின் உடையாரும் படித்தவர்கள், நிச்சயம் ஏதோ ஒரு கணமாவது இதை உணர்ந்து இருப்பீர்கள்.
அதை எழுதியவர்களின் அதீத திறமையா, இல்லை நிஜமாகவே நமக்கு எதுவும் தொடர்பு இருக்கிறதா , கடவுளுக்குத் தான் தெரியும். ஆனால் , கோவில் கட்டும் காலத்தில் நாம் உடன் இருந்தோமோ, இல்லையோ, ஆனால், போன பிறவி என்பது உண்மையாக இருந்தால் , நிச்சயம் இந்த ஆலயங்களை நாம் தரிசிக்க வந்து இருக்க கூடும்.
அப்படி காலத்தால் , அழியாத - சுமார் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இன்றும் அருள் அலைகள் , அளவு கடந்து வெளிப்படும் ஆலயங்கள் , நம் புண்ணிய தமிழ் நாட்டில் ஏராளம். அப்படிப் பட்ட , ஒரு ஆலயம் தான் இந்த அம்மன்குடி ஆலயம். சிறிய ஆலயம் தான்.
தமிழகத்தின் தலை சிறந்த மன்னன் என்று காலம் காலமாக , நம் நினைவில் நிற்கும் ராஜ ராஜ சோழனின் - இளமைப் பருவத்திலிருந்து , கடைசி வரை - வலக்கரமும் , இடக்கரமுமாக இருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் வந்தியத் தேவன். இன்னொருவர் அநிருத்தப் பிரம்மராயர் என்று அழைக்கப் பட்ட , அந்தணர்கள் சமூகத்தை சேர்ந்தவர். இவரும் பெரிய வீரர். சோழ மண்டலமே , மரியாதை செலுத்திய மாமனிதர் - பிரம்மராயர்.
அந்தணர்களில்இப்படி ஒரு வீரரா, அந்த காலத்தில் என்று நினைக்கிறீர்களா? அவரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொண்டால், மேலும் வியப்படைவீர்கள். இவரை ஆட்கொண்டு , இவர் மூலமாக நம் தமிழ் நாடு முழுவதும் அருள் மழை பொழிந்தவள் அன்னை பரமேஸ்வரி.
இவர்,ராஜ ராஜனின் சேனாதிபதியாக, மதி மந்திரியாக இருந்தவர். மும்முடிச்சோழ பிரம்மராயர் ஸ்ரீ கிருஷ்ணன் ராமன் என்பது அவர் பெயர். அவர் பிறந்து வளர்ந்த இடம் இந்த அம்மன் குடி. இந்த துர்க்கையை வணங்கி , அவர் பெற்ற சக்தி ஏராளம். அவரது அத்தனை வெற்றிக்கும், கீர்த்திக்கும் இந்த அன்னையின் ஆசிதான் காரணம்.
அன்னையின் சக்தி அறிந்து - ராஜ ராஜனும், அவனது பட்ட மகிஷிகளும், ராஜேந்திர சோழனும் என்று அந்த காலத்தில் , அனைவரும் வந்து வணங்கி அன்னையின் அருள் பெற்று , மாபெரும் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தனர்.
சோழ மண்டலத்திற்கும், தனக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் என்று எண்ணுபவர்கள், ஒருமுறை இந்த அம்மன்குடி வந்து பாருங்கள்.. நீங்கள் பிரமிக்கப் போவது உறுதி..!
சரி, இனி என் அன்னை துர்கா பரமேஸ்வரி - கோலோச்சும் அந்த அம்மன்குடி ஆலயத்தை பற்றி, ஸ்தல வரலாறு பற்றி , காண்போம். !
வரலாறு : மகிஷாசுரனை வதம் செய்த பிறகு அம்பாளை பாவம் பற்றியது. அவள் தனது பாவத்தை தீர்க்க இடம் தேடி அலைந்தாள். துக்காட்சி என்ற இடத்திற்கு வந்து தனது ஆட்சியை ஆரம்பித்தாள். இதன்பிறகு தனது சூலத்தில் படிந்திருந்த ரத்தக்கறையை கழுவுவதற்கு இடம் தேடினாள். துக்காட்சியின் அருகிலுள்ள ஒரு குளத்தில் தனது சூலத்தை கழுவினாள். அங்கு அவளுக்கு பாப விமோசனம் ஏற்பட்டது. தீர்த்தத்திற்கு "பாப விமோசன தீர்த்தம்' என பெயர் ஏற்பட்டது. தன் பாவம் தீர்ந்த பூமியில் குடியிருக்க துர்க்காதேவி விரும்பினாள். அங்கேயே குடியிருந்ததால் இவ்வூருக்கு அம்மன்குடி என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் சிவலிங்கம், விநாயகர் ஆகியோரை பிரதிஷ்டை செய்து அம்பாள் வழிபட்டாள்.
சிறப்பு : இத்தலத்தில் உள்ள விநாயகரின் சிற்பம் சாளக்கிரமத்தால் ஆனது. காலையில் பச்சை, மதியம் நீல நிறம், மீண்டும் மாலையில் பச்சை நிறமாக மாறிவிடும் தன்மை கொண்டது. சிவனை தன்னுள் அடக்கிய துர்க்கை ஸ்தலம். ஒரு சிவன் கோயிலில் துர்க்காதேவிக்கு கிழக்கு நோக்கிய சன்னதி அமைந்துள்ளது இதன் தனி சிறப்பாகும்.
சிறப்பு : இத்தலத்தில் உள்ள விநாயகரின் சிற்பம் சாளக்கிரமத்தால் ஆனது. காலையில் பச்சை, மதியம் நீல நிறம், மீண்டும் மாலையில் பச்சை நிறமாக மாறிவிடும் தன்மை கொண்டது. சிவனை தன்னுள் அடக்கிய துர்க்கை ஸ்தலம். ஒரு சிவன் கோயிலில் துர்க்காதேவிக்கு கிழக்கு நோக்கிய சன்னதி அமைந்துள்ளது இதன் தனி சிறப்பாகும்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இக்கோயில் கி.பி.944ல் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோயில் இது. இங்கு பார்வதிக்கு தனி சன்னதி உள்ளது.
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விழங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள விநாயகரை வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன் : சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல சிறப்பு : அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் இடமாக இருந்தாலும் இக்கோயிலில் கைலாசநாதரே மூலவராக இருக்கிறார். அம்பாள் துர்க்கா பரமேஸ்வரி என்ற பெயரில் எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள். மகிஷாசுரமர்த்தினி என்றும் இவளை கூறுகிறார்கள். ஒரு சிவன் கோயிலில் துர்க்காதேவிக்கு கிழக்கு நோக்கிய சன்னதி அமைந்துள்ளது இதன் தனி சிறப்பாகும். நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்கை விளங்குவதால் இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பூஜை உண்டு.
அதிசய விநாயகர்: இத்தலத்தில் உள்ள விநாயகரின் சிற்பம் சாளக்கிரமத்தால் ஆனது. காலையில் பச்சை, மதியம் நீல நிறம், மீண்டும் மாலையில் பச்சை நிறமாக மாறிவிடும் தன்மை கொண்டது. வழுவழுப்பான கல்லால் ஆனது. விநாயகரின் வயிற்றில் நாகம் உள்ளது. எனவே நாகதோஷம் உள்ளவர்கள் இந்த விநாயகரை வழிபடுகின்றனர். கையில் தவசுமாலை வைத்துள்ளார். இவருக்கு தபசு மரகத விநாயகர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. விநாயகரின் துதிக்கை அவரது உடலோடு ஒட்டாமல் துளையிட்டு சிற்பத்திறமையுடன் செய்யப்பட்டுள்ளது.
அந்த வினாயகர் வெளிச்சத்தில் ஒரு நிறமும், இருட்டில் ஒரு நிறமுமாக இருப்பார். வெளிச்சம் பட அந்த வினாயகரின் நிறம் வெள்ளையாக இருக்கும். சற்று மழைமேகம் திரண்டால் வினாயகரின் மேனி கருப்பாகி விடும். அந்தக்கல் நிறம் மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
இங்குள்ள சூரியன் குழந்தை வடிவ தோற்றத்தில் உள்ளார். எனவே இவரது காலில் "தண்டை' என்ற அணிகலன் அணியப்பெற்றுள்ளது. இந்த அணிகலனை குழந்தைகளே அணிவார்கள். இங்குள்ள துர்க்கைக்கு நூறு கண்கள் இருப்பதாக ஐதீகம். மழை இல்லாத காலங்களில் இந்த அம்பிகைக்கு பூஜை செய்தால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. இங்கு யோகசரஸ்வதி சிலையும் உள்ளது. சரஸ்வதியின் கையில் வீணை இல்லை. இதற்குபதிலாக தவத்தில் ஆழ்ந்திருப்பது போல் சரஸ்வதி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கைலாசநாதரின் வலதுபாகத்தில் துர்க்கை காட்சி தருகிறாள். எட்டு கைகளுடன் எட்டுவித ஆயுதங்கள் தாங்க சிம்ம வாகனம், மகிஷன் தலை ஆகியவற்றுடன் சாந்த முகத்துடன் காட்சி தருகிறாள்.
அடுத்த முறை , கும்பகோணம் செல்லும்போது - அவசியம் இந்த கோவிலுக்கும் சென்று வாருங்கள். கும்பகோணத்தில் இருந்து , உப்பிலியப்பன் கோவில் வழியாக இந்த ஊருக்கு செல்ல வேண்டும்.
அந்த பராசக்தியின் அருள் நம் எல்லோருக்கும் கிடைக்க மனமார வேண்டுகிறேன்..!
Read more: http://www.livingextra.com/2011/09/blog-post_21.html#ixzz1YZtN3NNz