இளைப்பாறி ஏழெட்டு வருடங்களாகியும் ஆதியிலிருந்து எனக்கு ஆகிவந்த நல்ல பெயருக்கு இன்னும் பதினாறு வயசுதான். பொதுவில், ஒருவர் அரச சேவையிலிருந்து இளைப்பாறியதும் அவரிடமிருந்து மற்றவர்கள் பெற்று வந்த பயன்பாடுகள் அற்றுப் போக நேர்வதால் அவர் சார்ந்த ஈடுபாடு குறைவது அல்லது முற்றாக இல்லாமல் போவது வழமையான ஒன்று. என் விடயத்தில் இதற்கு மாறாக நடந்திருக்கிறது.
இன்றைக்கில்லை, வெள்ளைவேட்டி வாலாமணியில் படிப்பிக்கப் போய்வந்த அந்த ஆரம்ப நாட்களிலேயே மதிப்பும் மரியாதையும் அபரிமிதமாக வந்து அமைந்து விட்டது எனக்கு. அந்த மரியாதைப் பூவின் இதழ்கள் இன்னும் என் இல்லம் நாடி மணம் பரப்பியபடியே இருக்கின்றன. இதில் முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டும். கிடைத்த கௌரவத்தை கட்டுக்குலையாமல் காத்துக் கொள்வது ஒன்றும் சாதாரணமான விசயமல்ல. சிறிது பிசகினாலும் சரிந்து விட வாய்ப்புண்டு.
இன்னமும், என்னைத் தெரிந்தவர்கள் எங்கே கண்டாலும் நின்று நாலு வார்த்தை சுகம் விசாரிக்காமல் விலகமாட்டார்கள். அவசர காரியமிருப்பின் போகிறபோக்கில் தலையாட்டி சிரித்துவிட்டுத்தான் போவார்கள். சிநேகமான சைகைகள் வழி தம் அன்பை வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஒரு திருப்தி.
சொந்த இடத்தில் மட்டுப்படாமல் வெளியூர்களிலும் என் கௌரவம் பாய்ந்து பரவியிருக்கிறது. நேற்றுக்கூட, நிலாவெளிப் பக்கமிருந்து கூட்டமாக வந்திறங்கினார்கள். எல்லாரும் வசதியாக இருக்க நாற்காலிகள் பத்தாமல் சிலர் முற்றத்திலும் நின்று கொண்டிருந்தார்கள். அடுத்த வாரம் அவர்கள் பகுதிப் பள்ளிக்கூடத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. மாவட்ட கல்வி அதிகாரி பிரதம விருந்தினராக வருவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார். விழாவைத் தலைமை தாங்கி நடத்திக் கொடுக்கும்படி என்னை வற்புறுத்திக் கேட்டார்கள். வழக்கத்தில் நானாகத் தேடிப் போய் உதவி செய்கிற பழக்கமுள்ளவன், வீடு தேடி வந்து விண்ணப்பவர்களின் முகம் முறிப்பேனா? முன்னரைப் போல் உடம்புக்கு முடியாவிடினும், வருகிறேன் என்றதும் வந்தவர்கள் அத்தனை பேர் முகங்களிலும் முழுநிலவு!
என் வாழ்க்கை முழுக்கவும் இப்படித்தான். பிள்ளைகளுக்குப் படிப்பித்தது போக, மிகுதி நேரத்தில் பெரும்பகுதி மற்றவர்களின் கஷ்டங்களைக் கேட்பதிலும் நிவர்த்திகள் சொல்வதிலும் கழிந்திருக்கிறது. படிப்பித்தலை வெறும் தொழிலாகக் கொள்ளாமல் பிள்ளைகளை உயர்த்திவிடும் ஏணியாகவே கருதி வாழ்ந்திருக்கிறேன்.
இந்தக் குணம் என் தாயாரிடமிருந்து கிடைத்த பாரம்பரிய முதுசம். பத்து வருடங்களுக்கு முன் பரமபதம் அடைந்துவிட்ட என் அம்மா ஒரு இளம் வயதுக் கைம்பெண். இரத்தக் கொதிப்பென பின்னாளில் புரிந்து கொண்ட சுகவீனத்தில் தந்தையார் நித்திரைப்பாயிலேயே மூச்சு அடங்கிவிட, பிரச்சனைகளின் மத்தியில் தட்டத்தனியாக கஷ்டம் தெரியாமல் என்னை வளர்த்தாள் அம்மா. எழுத்துக்கூட்டி வாசிக்கும் படிப்பறிவை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி முடிந்தது இது என்று இன்று நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. அயலாரோடும் மிக அன்னியோன்யமாக இருக்க முடிந்திருக்கிறது அவளால். யாரையும் மனம் நோக விடமாட்டாள். தராசைப் பிடித்துக்கொண்டு அளந்து பேசுவது போல் ஒரு நிதானம். சொல்லின் சிக்கனம் செயலின் தாராளத்தை மட்டுப்படுத்தாமல் பார்த்துக் கொள்வது அவளது சிறப்பு. நல்லது கெட்டதுக்கு முதலாளாய் ஓடிப்போவாள். அவசியத்துக்கு ஐஞ்சுபத்து கைமாற்றுக் கொடுக்கவோ அவசரத்துக்கு காப்புச்சங்கிலி இரவல் அளிக்கவோ தயங்கமாட்டாள். ஒருவிதத்தில் அம்மா அயலில் சம்பாதித்து வைத்த மரியாதை என் பெயருக்கு எருவாயிற்று என்றே சொல்ல வேண்டும்.
அம்மா சமைத்து நீங்கள் பார்த்திருக்க வேண்டும். கறிச்சட்டி அடுப்பில் ஏறி இறங்குகிற இடைவெளியில் அம்மாவின் அசைவுகளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பது எனக்குப் பிடித்தமான விசயமாக இருந்திருக்கிறது. சாம்பலில் கழுவி மூடி வைத்த பாத்திரங்களில் காய்கறிகளை அதனதன் அளவுகள் மாறாமல் நறுக்கிப் போடுவாள். தேங்காயை சிதிலமாக்காமல் சரிபாதி பிளந்து பூ துருவி முதல்பால் கடைசிப்பால் என கறியின் தேவைக்கேற்ப அதற்குண்டான பாத்திரங்களில் பிரித்து வைத்துக் கொள்வாள். அம்மி முன்னால் கால்நீட்டியிருந்து பக்குவம் குறையாமல் அரைத்து வைத்துக் கொண்ட பலசரக்குத் திரணையை கொதிக்கும் குழம்பில் நேரம் அறிந்து இடுவாள். உப்புப்புளி பார்க்க அகப்பையில் துளியளவு கிள்ளி உள்ளங்கையில் விட்டு நாக்கிடம் ருசி கேட்கும் தோரணையில் கண்களை மேல்நிறுத்தி தனக்குள்ளே ரசிப்பாள். கொதித்துவரும் குழம்பில் முதல்பாலை விட்டு கறியின் கொதிப்பை அடக்கி இறக்கிவிட்டு அடுத்த கறிக்கான ஆயத்தங்களை தொடர்வாள். அம்மாவின் அசைவுகள் எல்லாமே ஒரு நேர்த்தியான சடங்கிற்குண்டான பொலிவோடு திகழ்வதைப் பார்த்திருக்கிறேன்.
மேகத்துள் மிதக்கும் பால்நிலவும் மெழுகு தந்தம் காட்டி தத்துபுத்தென நடந்து வரும் யானையும் அன்னையிடம் வயிறுமுட்ட பால் குடித்து மழலை உதிர்க்கும் குழந்தையும் என்றுமே அலுக்காத காட்சிகள் எனக்கு. அம்மாவின் சமையலுக்கு இவற்றோடு சேர்ந்து கொள்வதற்கான அத்தனை அருகதையுமுண்டு. கொய்யக மறைவில் குழந்தைக்குப் பாலூட்டும் தாயின் அக்கறையை அம்மாவின் ஒவ்வொரு அசைவிலும் நான் ரசித்திருக்கிறேன். அந்த ஈடுபாட்டுணர்வு என் இரத்தத்தில் ஊறிவிட்டது.
இதற்கு முன்வரிசை பின்வரிசை என்கிற வித்தியாசம் பாராத மனப்பாங்கு தேவை. வகுப்புகளில் வெறுமனே படிப்பித்தலோடு மட்டுப்படாமல் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க என்னால் முடிந்திருக்கிறது. குறிப்பாக, பின்வாங்குப் பிள்ளைகளின் ஒவ்வாமையை மனங் கொள்வது முக்கியமெனக் கருதினேன். அவர்களில் ஒளிந்திருக்கும் பலதரப்பட்ட திறமைக்கூறுகளை வெளிக்கொணர வேண்டியது ஆசிரியனின் கடமையென உணர்ந்தேன். படிப்பு தவிர்ந்த ஏனைய காரியங்களில் சிதறுகிற அவர்களது கவனத்தை ஒருமுகப்படுத்தி விட்டால் அவர்களது சிறப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்தி விடலாம்.
வீட்டுக்கணக்கு செய்ய புத்தகம் வாங்கமுடியாத பிள்ளைகளின் வறுமை கண்டு நான் உதவியிருக்கிறேன். மந்தமான மாணவர்களை பள்ளிக்கூடம் விட்டபின் நிற்பாட்டி சொல்லிக் கொடுப்பேன். விடுதலை நாட்களில் பாடம் எடுப்பேன். வகுப்பில் கடைசி மாணவன் எனக் கருதப்படுகிறவன் கூட என் பாடத்தில் சித்தியடைந்துவிடுவான்.
இளைப்பாறிய பின் உடல் நலம் சற்று குன்றிவிட்டது உண்மைதான். ஓடியோடி ஊருக்கு உழைத்ததால் அல்சர் நீரழிவு என்று நானாவித உபாதைகளின் ஊற்று நிலமாக ஆகிவிட்டீர்கள் என்று திடகாத்திரமான உடலைக் கொண்ட இளைப்பாறிய நண்பர் ஒருவர் சொன்னார். காலாகாலத்தில் கல்யாணம் பண்ணியிருந்தால் ஏலாத காலத்தில் மனைவிமக்கள் கையில் ஏந்தியிருப்பார்களே என்றும் ஆதங்கப்பட்டார்.
என்ன செய்வது - திருமண உறவில் கவனம் தீவிரமாகாமலே என் காலம் கடந்து விட்டது. தயாராயிருந்த போது பெண் பொருந்தி வரவில்லை. பொருந்தியபோது நான் தயாராயில்லை. அம்மா சதா சண்டை போட்டுக் கொண்டுதான் இருந்தாள். அவளுக்காகவாவது ஒப்புக் கொண்டிருக்கலாம். கடைசிவரை மாமிமருமகள் சண்டை அனுபவம் கிட்டாமலே அவள் காலமாகிப் போனாள். பார்க்க எடுக்க பக்கத்தில் ஆளில்லாமலிருப்பது ஒரு விதத்தில் கஷ்டந்தான். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அரக்கப் பரக்க ஓடித் திரிகிற சம்சாரிகளைப் பார்க்கிறபோது அந்தச் சாகரத்திலிருந்து தப்பிப் பிழைத்ததும் புரியவே செய்கிறது.
இப்போது என் சேவை வேறு தோற்றப்பாடுகளை எடுத்திருக்கிறது. ஆலோசனை கேட்டு வருபவர்கள் பெருகிவிட்டார்கள். ஐயாவிடம் போனால் நிச்சயமாக இதற்கு ஒரு புத்தி சொல்வார் என்கிற நம்பிக்கையோடு வருகிறார்கள். நானும் என்னாலான நல்லதுகளை சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
நேற்றுக்காலை ஒரு தகப்பன் மகளைக் கூட்டி வந்தார். பத்தாம் வகுப்பு அரசு பரீட்சையை நல்ல தரத்தில் சித்தியெய்தியிருந்தாள் அவள். புதிய வகுப்பில் ஒரு குறிப்பிட்ட பிரிவை அவள் தேர்ந்தெடுக்க வெண்டும். அது கலையா வர்த்தகமா பொறியியலா அல்லது மருத்துவமா என்பதை என் மூலமாகத் தீர்மானித்துக் கொள்வதே அவரது வருகையின் நோக்கம். விசயத்தைச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார். அவர் இதே கேள்வியை வகுப்பாசிரியரிடம் கேட்டிருக்கலாம். ஒருவேளை இதற்குள் கேட்டுமிருப்பார். இருக்கச் சொல்லிவிட்டு முதலில் அவரிடமே பேச்சுக் கொடுத்தேன்.
எல்லாரையும் போல, மகள் டாக்டராக வரவேண்டும் என்று விரும்புவதாகச் சொன்னார். முடியாவிட்டால் எஞ்சினியர் என்று ஒரு படி மட்டும் கீழிறங்க அவர் தயாராயிருந்தார். பின்னர் பெண்ணிடம் பேசினேன். நாலைந்து பதில்களில் அவளைப் புரிந்து கொள்ள முடிந்தது. நான் அவரிடம் சொன்னேன். உங்கள் மகள் பாடங்களில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் - நீங்கள் விரும்புகிற துறைகளில் அவளுக்கு நாட்டமில்லை என்று தெரிகிறது, பிரகாசிக்கும் வாய்ப்பும் அரிது. கஷ்டமானதை திணிப்பதிலும், இலகுவாகக் கைவரக்கூடியதை ஊக்கப்படுத்துவதே வெற்றியைத் தரும். இவளை வர்த்தகத் துறையில் விடுங்கள். இன்றைய நவீன யுகத்தில் வேறெதையும் விட பரந்துபட்ட வாய்ப்புகளை அளிக்கும் துறை இது. நீங்களே வியக்கிற அளவிற்கு சிறப்பாக வருவாள் என்றேன். அவரும் நிம்மதியாகப் போய்ச் சேர்ந்தார்.
இப்படிப் பல பேர் வருகிறார்கள். வருகிறவர்களின் மனங்களை அவற்றின் நுன்னிய தளங்களில் நின்று கூர்ந்து படிக்கிறேன் முதலில். பிரச்சனைகளின் ஆழஅகலம் புரிந்து கொண்டு அவர்களை அணுகுகிறேன். இந்த மாதிரி கவுன்சிலிங் செய்வதில் என் நேரமும் உபயோகமாகக் கழிகிறது. வந்தவர்களுக்கும் நன்மையாகிறது.
படித்தவர்களிடம் ஒரு குணம் இருக்கிறது. எல்லாம் தெரிந்த மனப்பான்மை. குறுக்குமறுக்காக கேள்விகள் கேட்பார்கள். அவர்களை ஆறுதல்ப்படுத்துவதற்கு சிறிது நேரம் எடுக்கும். படிக்காதவர்களிடம் அந்தக் கஷ்டமில்லை. கேட்டுக் கேள்வியின்றி ஏற்றுக் கொள்வதை அவர்களின் முகத்தெளிவில் கண்டிருக்கிறேன். இதிலுள்ள சுளிவுநெளிவுகள் எல்லாம் ஒரு கலையாகவே எனக்குக் கைவந்துவிட்டது அம்மாவின் சமையலைப் போலவே. வந்தவர்களின் முகம் அளந்து மனம் படித்து பொருத்தமாகப் பேசுகிற நுட்பத்தில்தான் கவுன்சிலிங் கலையின் வெற்றியே தங்கியிருக்கிறது என்பேன். அவரவருக்குப் பொருந்துகிற வார்த்தைப்பிரயோகம் மிகவும் முக்கியம், இன்னொன்று பொறுமையும்.
நேற்றுமாலை ஒரு பெண் வந்திருந்தாள். ஆடுகள் மேய்த்த சிறுவயதில் மழைக்கு மட்டும் பள்ளிக்கூடம் ஒதுங்கியதாகச் சொன்னாள். பிறந்து வளர்ந்தது தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு குக்கிராமம். வாழ்க்கைப்பட்டது தூரத்து உறவில் மலைநாட்டின் தலவாக்கொல்லையில். புருசன் திருகோணமலைக்கு வேலை தேடி வந்ததில் சீவியம் இங்கேயே அமைந்துவிட்டது. ஒரேயொரு மகன். வயசு பதினைந்து. பையனுக்கு எட்டு வயசில் தகப்பன் வயற்காட்டில் பாம்பு கடித்து நேரத்துக்கு வைத்தியம் கிடைக்காமல் காலமாகிவிட்டார். ஏனோ தெரியவில்லை மனுசி இங்கேயே தங்கிவிட்டது.
பையன் ஒன்பதாவது படிக்கிறான். பள்ளிக்குப் போகாத நாட்களே அதிகம். கூடாத கூட்டம் வேறு, படிக்காமல் ஊர் சுற்றுகிறான். எப்படியாவது புத்தி சொல்லி பள்ளிக்குப் போக வைக்கும்படி கேட்டுக் கொள்ள வந்திருந்தவள் மரியாதைக்காக எட்டத்தில் நின்றே பேசினாள். நாலு சாத்து சாத்துங்கய்யா என்று அடிக்கிற உரிமையும் அளித்தாள். இதுதான் படிக்காதவர்களின் பண்பு.
பையன் எங்கே என்று கேட்க, இன்றைக்குக் கூட்டி வருகிறேன் என்று போயிருக்கிறாள். அநேகமாக இப்போது வருகிற நேரந்தான். கைம்பெண்ணின் வலிகள் அம்மாவிடமிருந்து எனக்கு அனுபவப்பாடம். முகம் தெரியாத அந்தப் பையனில் என்னையே இனம் கண்டது போல ஒரு பிடிப்பு உண்டாயிற்று. இவனை மடக்கி வழிக்குக் கொண்டு வருவது பெரிய விசயமில்லை. அவனது உள்ளத்தைத் தொட்டுவிட்டால் எதிர்காலம் உறுதிப்பட்டுவிடும்.
கதவு தட்டிக் கேட்கிறது. அவர்கள்தான். மகனை எனக்கு இரண்டடி தூரத்தில் தேவையானால் எட்டி அடிப்பதற்கும் வசதியாக நிறுத்திவிட்டு அவள் பத்தடி தள்ளி குறுகிப் போய் நின்று கொண்டாள்.
என்னான்னு கேளுங்கய்யா?
நீங்க அப்பிடி கதிரைல இருங்கம்மா.
சொன்னவுடன் அவள் கதிரைப் பக்கமாகப் போனாள், இருக்கவில்லை. நான் பையனைப் பார்த்தேன். குளிக்க வார்த்து கன்னஉச்சி புறித்து தலை இழுத்து பவுடர் அப்பி தோய்த்த உடுப்பு உடுத்தி கூட்டி வந்திருக்கிறாள் தாய். தாயே எல்லாம் செய்திருக்கிறாள் என்பதற்கு முகத்தில் கூடுதலாக அப்பியிருந்த பவுடர் சாட்சி சொன்னது. ஐயாவுக்கு முன்னால் கையைக் கட்டி நின்று பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருப்பாள். பையன் கறுப்பு, தாயின் நிறம். தகப்பனுடைய மூக்காக இருக்கலாம். முழிப்பாக இருந்தான்.
கண்டிப்பக்கம் நாலு வருடங்கள் வேலை பார்த்ததில் அங்கு புழக்கத்திலிருக்கும் மொழி அசைவுகள் எனக்குப் பழக்கம். அவர்களோடு அவர்களது இழுவைகளுக்கு இசைவாகப் பேசமுடியும் என்பதே எனக்கு பலந் தருகிற விசயம். முகத்தில் மேலதிக கனிவு காட்டி பையனை உன்னிப்பாகப் பார்த்தேன்.
ஏந்தம்பி இப்ப என்ன படிக்கிறே?
ஒம்போது. .. .. .. அவன் தலை நிமிராமல் நிற்க அம்மா பதில் சொன்னாள்.
எங்க படிக்கிறே?
சந்திப்பள்ளியில படிக்கிறான்யா. நடைதூரத்தில வூடு இருக்குதுங்கய்யா. .. .. ..
இப்போதும் பதில் சொன்னது அவள்தான்.
அம்மா நீங்க சும்மாயிருங்க பையன் பதில் சொல்லட்டும்.
சரீங்கய்யா என்று சொன்னவள் நாலு விரல்களை வாயில் வைத்து மன்னிப்புக் கோருவது போல சற்றுப் பின்வாங்கி நின்றாள்.
போன பரீட்சையில கணிதத்தில் எத்தனை மார்க் வாங்கினே?
வலதுகால் பெருவிரலால் நிலத்தில் அரைவட்டம் போட்டுக் கொண்டிருந்தான் குனிந்த தலை நிமிராமல். அடுத்ததெரு சந்தி மில்லில் அரிசி அரைக்கும் ரீங்காரம் மட்டும் மிகக் கிட்டத்தில் கேட்ட அளவிற்கு அமைதி நிலவிற்று.
பத்தோ பதினைஞ்சு மார்க்குதான்ய்யா. .. .. .. எனக்குச் சங்கடம் நேராதிருக்க தாய்தான் இப்போதும் மெல்லிய குரலில் சொன்னாள்.
உங்க கணக்கு வாத்தியார் பெயர் என்ன?
..........
இப்போ ஒம்போதாவது வகுப்பு சிலபஸ் மாத்தியிருக்காங்கன்னு சொல்றாங்களே உண்மையா?
.........
அடுத்த வருசம் ஜீசீஈ பரீட்சை வருதே அதுக்கு ஒன்னை சேத்துப்பாங்களோ?
............
அவனிடமிருந்து பதிலில்லை. தாய் ஏதாவது சொல்ல முயற்சித்திருப்பாள். இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. சங்கடத்தில் நெளிந்ததைத் தவிர அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.
அவன் பக்கமாக இருந்த சுவரில் திடீரென முளைத்த ஒரு பல்லி, அதனைத் துரத்திய இன்னொரு பல்லி, அந்தந்த இடத்திலேயே தரித்து நின்றன. பையனது பார்வை பல்லிகளின் பக்கம் படர்ந்தது. எனக்கு முன்னால் நிற்கிற பயம் அற்றுப் போய் அடுத்து நிகழப்போவதை ஆர்வம் துளிர்க்கப் பார்த்தான். எங்கள் இருப்பைச் சட்டை செய்யாத இரண்டாவது பல்லி முதலாவது பல்லிக்குப் பக்கத்தில் ஊர்ந்து அதன் மேல் ஏறிக் கொண்டது. பையன் வைத்தகண் எடுக்காமல் நின்றான். நான் தாயைப் பார்த்தேன். உங்களைத்தான் நம்பி வந்திருக்கிறேன் என்று கேட்கும் அதே வேண்டுதல் முகம். நிலைத்து நின்ற பல்லிகளைக் கலைக்கவும் பையனது கவனத்தைத் திருப்பவுமாக, சுவர்ப்பக்கம் கையை விசுக்கி நான் சப்தமிட, எதையும் காதில் போட்டுக் கொள்ளாத பல்லிகள் வெகு சாவதானமாக சிறிது நேரம் கழித்து தம்பாட்டில் எங்கோ மறைந்து கொண்டன.
சரி படிப்பை விடு. அப்பனில்லாம ஒன்னை கஷ்டப்பட்டு வளர்த்திருக்கிறாவே உங்க அம்மா அதை நெனைச்சுப் பாத்தியா தம்பி.
இப்போது காலை மாற்றி மீண்டும் அரைவட்டம் போடுவதில் முனைப்பாக இருந்தான்.
காலை ஆட்டாம கொஞ்ச நேரம் சும்மா நில்லு.
காலை ஆட்டாதறா என்று தாயும் அதட்டினாள்.
ஆட்டம் சட்டென்று நின்றது. நான் ஆத்திரப்பட்டுவிட்டதாக அவன் நினைத்திருப்பான். எனக்கு ஆத்திரம் இலேசில் வராது. இது தேவை கருதிய ஒரு சிறு நடிப்பு. கடிதோச்சி மெல்ல எறிக - வள்ளுவப் பெருந்தகை சொன்னது - அடிக்கிற மாதிரி கத்து, கடிச்சு உதறுகிற மாதிரி நெருங்கு ஆனா அடி மெதுவாகப் படட்டும் என்று. பிள்ளையை பள்ளிக்குப் போக வைக்கத் துடிக்கும் இந்த ஏழைத்தாயை எப்படியாவது ஆறுதல்ப்படுத்த வேண்டும்.
கடேசியா எப்போ பள்ளிக்குப் போனே?
போய் பத்து நாளாச்சய்யா - தாய்.
கடைசிமணிக்கு காத்திருக்கிற மாணவனாக அவன் தெரிந்தான். தாயை திரும்பிப் பார்த்துவிட்டு தலை குனிந்தான்.
எனக்கு மூளை நரம்பில் மெலிதான துடிப்பு உண்டான ஒரு உணர்வு! இது அதிகம். முளைத்து மூனு இலை விடாத பையனுக்கு வயசுக்கு மீறிய கொழுப்பு. இத்தனை கேள்விகள் கேட்டும் ஒரு தலையாட்டல் கூட இல்லாமல் கல்லுளிமங்கனாய் நிற்பது நிச்சயமாக அதிகம்.
வாயில கொழுக்கட்டையா வைச்சிருக்கே?
அவன் திடசங்கற்பம் சிறிதும் குறையாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான்.
களவாணிப்பயலே, இப்போ வாய தெறக்கப் போறியா இல்லையா?
எனக்குக் சதிரம் கொஞ்சமாக நடுங்கிற்று.
வாயைத் திறக்காட்டி ஒன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிப் புடுவன் களவாணிப்பய புள்ளை.
அவன் முகத்தில் முறைப்பு உருவானது போல் ஒரு அசைவு தோன்றிற்று. உறுதிப்படுத்திக் கொள்ள கண்ணாடியைப் போட்டுக் கொண்டேன். இல்லை அவன் முறைக்கவில்லை. முறைத்திருந்தாலாவது ஏதோவொரு விதத்தில் பதில் சொல்ல ஆயத்தமாகிறானெனக் கொள்ளலாம். ஒருவித சலனமுமற்று எப்படி இவனால் ஒற்றைப்பிடியில் நிற்க முடிகிறது!
டேய் கள்ளப்பயலே ஒன்னை
அப்போதுதான் நான் எதிர்பாராத அந்த இடி என் தலையில் நேராக இறங்கிற்று. அவனிடமிருந்தல்ல, அவளிடமிருந்து.
நானும் வந்ததிலிருந்து பாக்கிறேன். களவாணிப்பயமவனே கள்ளப்பயலேன்னு விடாம கத்திக்கிட்டிருக்கியே, இதுதான் நீ புத்தி சொல்ற லெச்சணமா? மத்தவங்க பொருளுக்கு ஆசைப்படாத ஆளய்யா என் புருசன். குடிப்பாருதான். களவுக்கெல்லாம் போகமாட்டாரு. எம் புள்ளை படிக்காம ஊர் சுத்துறவன்தான். களவெல்லாம் எடுக்கமாட்டான். அப்படிப்பட்ட புள்ளையை இப்பிடித் திட்றியே நீயெல்லாம் பெரிய மனுசனாய்யா?
நான் உறைந்து போய் அவளைப் பார்க்க, உரு வந்தவள் போல, நீ வாடா மவனே, பெரிய மனுசனாம் பெரிய மனுசன், பெரிசா பேச வந்துட்டாரு என்றவாறே மகனின் கையை தறதறவென இழுத்தாள்.
திடீரென உண்டான குழப்பத்தில் கண்மூடித் திறக்குமுன் தெருக்கதவை தடாரெனச் சாத்துகிற சத்தம் கேட்டது