Search This Blog

Wednesday, August 15, 2012

ஜனநாயகமும் மனித உரிமைகளும்;



மனித மாண்பு
மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒரேயொரு வித்தியாசம் இருக்கின்றது என்று சொல்லுவார்கள். அந்த வித்தியாசம்தான் மனிதர்களுக்கு இருக்கும் ஆறாவது அறிவான பகுத்தறிவு என்று கருதப்படுகின்றது. இந்தப் பகுத்தறிவு என்ன தன்மையானது என்று பார்த்தால், நியாயம் எது அநியாயம் எது, சரி எது பிழை எது என்று பகுத்துப் பார்த்து உணர்ந்து அதைப்போல நடக்கவைக்கும் மூளையின் செயற்பாடு என்று சொல்லலாம். இந்த வரைவிலக்கணத்தை நாங்கள் ஒத்துக்கொள்வோமானால்;, நியாயம், அநியாயம், சரி, பிழை என்பவற்றை எந்த அளவு கோலை வைத்துக் கொண்டு நாங்கள் தீர்மானிக்க முடியும் என்ற கேள்வியே உதிக்கின்றது. ஏதை நியாயம் என்று நாங்கள் சொல்லுகின்றோம்? ஏன்?
இந்தக் கேள்விக்குப் பதில் தேடும்போதுதான் மனித மாண்பு என்கின்ற விடயத்தை நாங்கள் விளங்கிக் கொள்ள வேணடியதாகிறது. மாண்பு என்பது, சுய கௌரவம், பரஸ்பர மரியாதை, சுய ஆளுமை போன்ற பல அர்த்தங்களை உள்ளடக்கியிருக்கும் சொல்லாகும். மனிதர்களாகப் பிறந்திருக்கும் நாங்கள் மாண்புடன் வாழவேண்டும். அவ்வாறு வாழ்ந்தால்தான் மனிதர்கள் ஆவோம், இல்லாவிடில் மிருகங்களுக்கு சமனாவோம். எனவே, நாம் நியாயம் என்று கூறுவது மனித மாண்பினை உயர்த்தும் வலுப்படுத்தும் சகல விடயங்களையும் குறித்துத்தான். நாம் அநியாயம் என்று சொல்லுவது மனித மாண்பினை அழிக்கும் சகல விடயங்களையுமே.
உதாரணமாக, மனிதர்களை மரியாதை கூடிய மேம்பட்ட வாழ்க்கையைக் கொடுக்கும் கல்வி யாருக்காவது கிடைக்காவிடில் அதை அநியாயம் என்று கூறுகின்றோம் இல்லையா? ஒருவர் சுதந்திரமாக தனது கருத்தினைக் கூறும் பேச்சுச் சுதந்திரம் இல்லாவிடில் அதையும் அநியாயம் என்கின்றோம் இல்லையா? ஒருவர் சுதந்திரமாகச் சிந்திக்கவும் பேசவும் பங்குகொள்ளவும் கல்வி கற்கவும்தான் அவருடைய மாண்பு அங்கு நிலைப்படுகின்றது. ஆகவே, நாம் ஆறறிவு கொண்ட மனிதர்கள் என்பதனால் மாண்புடன் வாழக் கடமைப்பட்டவர்கள் என்றும் சொல்லலாம். அதைத்தான் நீதி என்றும் நியாயம் என்றும் மனிதகுலம் கருதுகின்றது.
மனிதர்கள் மாண்புடன் வாழ வழி செய்யத்தான் ஜனநாயகம், மனித உரிமைகள் என்கின்ற இந்த இரண்டு கருத்தோட்டங்களும் உலகத்தில் உருவாயின. ஏந்த இடத்திலும் ஜனநாயகமும் மனித உரிமைகளும் இல்லாவிட்டால் அங்குள்ள மக்கள் மாண்புடன் வாழ முடியாது, அவர்கள் விலங்குகள் போலத்தான் வாழ வேண்டும். இதனால்தான் சுயமரியாதையுடன் வாழ விரும்பும் எவரும் மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பேணுவதற்காக உழைத்தல் அவசியமாகின்றது. இந்த இடத்தில், ஒரு கேள்வி எழுகிறது. மனிதர்கள் மாண்புடன் வாழவே பிறந்தவர்கள் என்றால், ஏன் அவர்கள் அப்படி வாழும் வாழ்க்கையை நாம் பிரத்தியேகமாகப் பாதுகாக்க வேண்டியிருக்கின்றது? இதற்குப் பதில் சொல்ல வேண்டுமென்றால் இங்குதான் அரசு என்கின்ற விஷயத்துக்கு வருகின்றோம்.
அரசு என்றால் மனிதர்களை ஆட்சி செய்வதற்காக மனிதர்களால் உருவாக்கப்பட்ட இயந்திரம் என்று சொல்லாம். பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் எல்லோரும் ஒரு ஒழுங்கு முறையுடன் வாழவேண்டுமானால் அங்கு அவர்களுக்கு ஒரு அரசு தேவைப்பட்டது. இந்த அரசு காலத்துக்குக் காலம் உருவத்தில் மாறி வந்திருக்கின்றது. முன்னர் இராசாக்கள் ஆண்டார்கள். அவர்கள் காலத்துக் கதைகளையும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்தானே. 'யாரங்கே! இவன் தலையைச் சீவிக் கொன்று விடுங்கள்!!' என்று இராசா கட்டளையிட்டால் அது நிறைவேற்றப்பட்ட காலமும் இருந்தது. இந்த அமைப்பின்கீழ் மனித மாண்பு எவ்வளவு சிதைந்து போனது என்பதைச் சொல்லத்தேவையில்லை. இந்த நடைமுறை அநியாயம் என்று மனிதர்கள் கருதியதால்தான் இந்த முறையை மாற்றிக்கொண்டு புதிய அரசு முறைகளைக் கொண்டு வந்தார்கள்.
இதற்குப் பின்பான காலத்தில்தான் தேர்தல்கள் மூலம் மக்கள் தெரிவு செய்கின்ற பிரதிநிதிகள் ஆளும் அரசாங்கம் நடைமுறைக்கு வந்தது. இன்று, இப்படிப்பட்ட 'மக்கள் அரசாங்கம்' என்று நாம் கூறுகின்ற அரசாங்கம் இருந்தும், எங்கள் நிலை கிட்டத்தட்ட அரசர் காலத்து நிலையாக இருக்கவே காண்கின்றோம். எங்கள் நாட்டை எடுத்துப் பாருங்கள். ஒரு விசாரணையும் நீதியுமின்றி எங்களில் எத்தனைபேர் துப்பாக்கிக்குப் பலியாகினர். இந்த சம்பவங்களில் அனேகமானவை எங்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசின் வேலையாகவும், ஏனையவை அரசு அல்லாத ஆயுதக்குழுக்களின் வேலையாகவும் நாம் காண்கின்றோம். இந்த ஆயுதக்குழுக்களை இயங்க வைப்பதிலும்கூட எங்களது அரசின் பங்கு கணிசமாக இருப்பதைக் காணலாம்.
இந்தப் பயங்கரவாத  சூழ்நிலையின் காரணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதாவது, ஒரு சிலருக்கு அளவற்ற அதிகாரம் நிலைக்க வேண்டுமானால், ஏனைய மக்களெல்லோரும் தங்கள் மாண்பினை இழக்க வேண்டியது அவசியமாகின்றது என்பது இதிலிருந்து எங்களுக்குத் தெரிகின்றது. நாங்கள் ஒழுங்காக வாழுவதற்கு அரசு உதவுகின்ற அதே நேரத்தில், அதிலிருந்து கொண்டு எங்களை ஆள்பவர்கள் அளவற்ற அதிகாரங்களைத் தமது கைகளில் வைத்திருக்கவும் அரசு உதவுகின்றது. எனவேதான், அரசின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தி, அது மக்களின் மேம்பாட்டுக்கும் மாண்பு மிகுந்த வாழ்க்கைக்கும் இயைபானதாக மாற்ற வேண்டும். இதற்கு, மக்களாகிய நாம் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் விசேடமாகப் பாதுகாக்க வேண்டியுள்ளது. ஆதலினால்தான் நாம் ஜனநாயகத்தினதும் மனித உரிமைகளினதும் அடிப்படைகளைக் கற்றுக் கொள்வோம். இவை ஏன் எப்பொழுதும் அரசுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றது என்பதையும் விளங்கிக் கொள்வோம்.
மனித உரிமைகள்
மனிதர்களின் மாண்பினைப் பேண உதவும், அடிப்படையான விழுமியங்களை மனித உரிமைகள் என்று சொல்லுவோம். பிரதானமாக, மனித உரிமைகள் என்பனவை மனிதர் கொண்டிருக்கவேண்டிய விழுமியங்களே என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இவை பிறகு சட்டங்களாக அமுல்படுத்தப்படுகின்றன. மனித உரிமைகள் என்னும் கருத்தியல் ஒரு சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவை ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் சமத்துவமாகவும் ஒன்றிணைந்து வாழ வழி செய்கின்றன.


மனித உரிமைகள் ஐந்து வகைப்படும்.
1) குடியுரிமைகள்
வாழ்வதற்கான உரிமை, சுதந்திரமாக நடமாடுவதற்கு உரிமை, கருத்துச் சுதந்திரம், விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை, பிரசாவுரிமை, மனிதாபிமானமற்ற செயல்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை, சட்டத்தின் முன் சமவுரிமை போன்றவை குடியுரிமைகளாகும். இவற்றை ஆராய்ந்து பார்த்தீர்களானால், இவை தன்னிச்சையாக மனம் போன போக்கில் அரசு மக்களின்மீது தனது அதிகாரத்தைப் பிரயோகிக்க விடாமல் மக்களைப் பாதுகாக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
2) அரசியல் உரிமைகள்
அமைதியாக ஒன்று கூடும் மற்றும் சங்கம் அமைத்துக்கொள்வதற்கான உரிமை, தகவல்களைப் பெறும் உரிமை, சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமை போன்றவை அரசியல் உரிமைகளாகும். இவை மக்கள் தங்களது சார்பில் ஆட்சி செய்வதற்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய வைக்கவும், அந்தப்பிரதிநிதிகள் ஆட்சியை சரிவர நடத்துகிறார்களாவென கண்காணிக்கவும், இந்த ஆட்சிக்கூடாகத் தங்கள் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்துவைக்கப் பங்களிக்கவும், வழிவகுக்கின்றன.
3) பொருளாதார உரிமைகள்       4) சமூக உரிமைகள்
பொருளாதார உரிமைகளும் சமூக உரிமைகளும் மக்கள் தகுந்த வாழ்க்கைத்தரத்தோடு கௌரவமாக வாழுவதை உறுதி செய்கின்றன. பட்டினியிலிருந்து விடுபடுவதற்கான உரிமை, வேலை செய்யும் உரிமை, வேலைக்குரிய தன்மானமான ஊதியத்தினைப் பெறுவதற்கு உரிமை, கல்வி சுகாதாரம் போன்ற பொது அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை, தொழிற்சங்க உரிமை, ஓய்வு பெற்றபின்னரோ அல்லது தொழிலை இழந்த தருணத்திலோ வாழ்க்கையைப் பாதுகாக்க உதவும் சமூகப் பாதுகாப்பிற்கான உரிமை போன்றன சமூக பொருளாதார உரிமைகளுக்குள் அடங்கும்.
பசியில் வாடுபவனுடன் அரசியல் கதைக்க முடியுமா? முதலில் பசியைத் தணித்து விட்டுத்தான் மிகுதிக்கதைகளைச் சொல்லலாம் இல்லையா? மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்போதுதான் அவர்கள் தங்கள் குடியுரிமைகளைப் பற்றியோ அரசியல் உரிமைகளைப் பற்றியோ யோசிக்க முடியும் என்கின்ற கருத்தோடுதான் சமூக பொருளாதார உரிமைகள் பற்றிய கருத்து உருவாக்கப்பட்டது. தன்னுடைய மக்களுக்கு இந்த உரிமைகளையெல்லாம் உத்தரவாதப்படுத்தும் பொறுப்பு ஒவ்வொரு அரசுக்கும் உள்ளது.
4) கலாசார உரிமைகள்
கலாசார உரிமைகள் மனிதர்களின் உள ஆரோக்கியத்தைப் பேணுவதற்காகவே கொண்டுவரப்பட்டன எனலாம். எல்லா மனிதர்களுக்கும் தங்களுடைய மொழி, பாரம்பரியங்கள், சடங்கு முறைகள், குல வழக்கங்கள் இவையெல்லாவற்றையும் அனுசரிக்கும் தேவைகள் உண்டு. அவ்வாறுதான் ஒவ்வொரு குழுக்களுடைய அடையாளங்கள் பேணப்பட்டு அவற்றுடைய பரம்பரைகள் பாதுகாக்கப்படுகின்றன. தூன் எந்த இனம், மொழி, மதம், பிரதேசம் நாட்டினைச் சேர்ந்தவர் போன்ற தன்னடையாளங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் அவசியமாகின்றது. எனவே, மொழி, பாரம்பரியங்கள், சடங்கு முறைகள், குல வழக்கங்கள் போன்றவற்றைப் பின்பற்றும் உரிமைகள் வழங்கப்படுகின்றன.
கலாசார உரிமைகள் குழு உரிமைகள் என்னும் வகைப்படுத்தலுக்குக் கீழ் அடங்கும். யாராவது தனிமனிதனாக இருந்து தனது மொழி மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாக்க முடியுமா? உதாரணமாக, ஐஸ்லாந்தில் எஸ்கிமோக்கள் மத்தியில் ஒரு இலங்கைத் தமிழர் அல்லது இஸ்லாமியர் வாழ்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தனது மொழியையோ மதத்தையோ தொடர்ந்து பின்பற்றத்தான் முடியுமா? தன்னையொத்த மனிதர்கள் இருந்தால்தானே அவர்களுடன் தமிழில் உரையாடலாம், சேர்ந்து ஒரு பள்ளிவாசலைக் கட்டி தொழுகைக்குப் போகலாம்? எமது பண்பாட்டினைப் பின்பற்றுவதற்கு ஒரு சமூகம் தேவை. தனியே விட்டால் அவர்கள் எஸ்கிமோக்களின் வாழ்க்கையைப் பினபற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே கலாசார உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதற்கு அவற்றிற்கேயுரிய குழுமங்களின் இருப்பும் முக்கியமாகின்றது. அதேபோல மறுபக்கத்தில், அந்தக் குழு தொடர்ந்து இருப்பதற்கு கலாசார உரிமைகள் பாதுகாப்பது அவசியமாகின்றன. இதனால், மனித உரிமைகள் கோட்பாட்டில் தனிநபர் உரிமைகளைப் போலவே, குழு உரிமைகளும் மிக முக்கியமான அங்கம் வகிக்கின்றன. அக்குழுக்களின் பேரில்தான், அவை தமது விடயங்களைத் தாமே தீர்மானிப்பதற்கான சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டிருக்கின்றது.
ஜனநாயகம்
மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் தீர்மானங்களில் பங்கேற்க வகை செய்யும் அரசாங்கத்தின் நடைமுறையை ஜனநாயகம் என்று கூறுவோம். நடைமுறை என்பதோடு, இது ஒரு அரசியல் சித்தாந்தம் என்றும் விளக்கலாம். அதைவிட, இது மனித சமூகத்தின் இலட்சிய நோக்காகவும் ஒரு வாழ்க்கைப் பண்பாடாகவும் கருதப்படுகின்றது.
ஜனநாயகம், மக்களையும் அதிகாரத்தையும், இந்த இரண்டுக்கும் இடையிலான தொடர்புகளையும் நிர்ணயிக்கும் கட்டமைப்பாகும். அதிகாரம் என்பது ஒருவருக்கோ, ஒரு சிலருக்கோ மட்டுமல்லாமல், ஒரு நாட்டிலுள்ள சகலருக்கும் கிட்டும் வகையில் ஒழுங்கமைக்கப்படும் ஆட்சி முறையே ஜனநாயகம் ஆகும். இவ்வாறு சகலருக்கும் சமமாக ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டுமானால் அங்கு எல்லாருக்கும்,
அவர்கள் உடல் உடைமைகளுக்கு சம பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்
தம்முடைய வாழ்க்கையையும் தொழிற்றுறையையும் மேற்கொள்ள சம வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும்
அரசியலில் பங்கெடுக்க சமவாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும்
சட்டத்துக்கு அமைவான முறையில் தாங்கள் விரும்பிய கருத்துக்களைத் தெரிவிக்கவும், விரும்பியதை எழுதவும் அதன்படி நடக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும்
சுதந்திரமாகப் பொதுவில் கூட்டம் கூட அனுமதி வழங்கப்படவேண்டும்,
அமைப்புக்களாகவும் சங்கங்களாகவும் கட்சிகளாவும் இயங்கும் முழுச் சுதந்திரம் வழங்கப்படவேண்டும்
எழுந்தமானமான கைதுக்களிலிருந்தும் தடுப்புக்காவல்களிலிருந்தும், (கொலை அச்சுறுத்தல்களிலிருந்தும் கூட) பாதுகாப்பு வேண்டும்
மேலே கூறியவற்றிலிருந்து, ஜனநாயகம் நடைமுறைப்படுத்தப்படவேண்டுமானால் அங்கு மனித உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படவேண்டும் என்பது தெளிவாகின்றது. அதேபோல, மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டுமானால் அதற்கு ஜனநாயகம் அவசியமாகின்றது என்பதையும் யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஜனநாயகம் சரிவர இயங்குவதற்கு மூன்று நிபந்தனைகள் உண்டு. அவையாவன,
1) தகுந்த முற்போக்கான சட்டங்கள்
ஒரு நாட்டின் சட்டங்கள், அந்நாட்டிலுள்ள மனிதர்களெல்லோரும் இயங்கும் பொதுவிதிகளைக் குறிக்கின்றன. இவை கட்டாயமாக மனித உரிமைக் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்படவேண்டும். சட்டங்களை நாம் சரியாக அனுசரிப்பதால் எமது சமூகத்தில் ஒழுங்கு நிலைநாட்டப்படுகின்றது, எல்லோருக்கும் நீதியும் நியாயமும் கிடைக்கின்றது. சகல நிறுவனங்களும் நியாயத்தின் அடிப்படையில் இயங்க வழிசெய்யப்படுகின்றது. எல்லோரும் சமமாகப் பங்களிக்கவும் சமவாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளவும் சட்டங்கள் உதவுகின்றன.
எந்தளவு அதிகாரமுள்ள அரசியல் தலைவரானாலும், ஒரு நாட்டின் சட்டங்களை மீறுவதற்கு முடியாது என்ற வகையில் அச்சட்டங்கள் சட்டத்தரணிகளாலும், நீதிபதிகளாலும், ஊடகவியலாளர்களாலும், படித்த சமூகத்தினாலும் பொது மக்களினாலும் பாதுகாக்கப்படவேண்டும். அத்துடன், அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமான முறையில் சட்டங்களை மாற்றுவதையும் தடை செய்ய வேண்டும். மொத்தத்தில், சிறியதோ பெரியதோ, நாமெல்லாரும் சட்டத்தை மதித்து நடக்கப் பழக வேண்டும்.
2) நடுநிலையான சுதந்திரமான நீதித்துறை
எல்லோருக்கும் நீதி கிடைக்க வழிசெய்யும் கருவி சட்டங்கள் என்று பார்த்தோம். சுட்டங்கள் மீறப்படும்பொழுது அதைத் தடை செய்கின்ற அதிகாரம் நீதிமன்றங்களுக்கே உண்டு. எனவே நீதித்துறை சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் இயங்குவது ஜனநாயகத்துக்கான முக்கிய நிபந்தனையாகும். நீதித்துறையும் நீதி மன்றமும், சட்டப் பிரகடனங்களை மேற்கொள்ளவும், அரசியல் யாப்பையும் மனித உரிமைகளையும் மீறும் அரசியல் தூண்டலிலான செயல்களை செல்லுபடியற்றதாக ஆக்கவும் அதிகாரம் உள்ளது. அவை அப்படியே இயங்கவும் வேண்டும்.
3) ஊழல் இன்றிய நிறுவனங்கள்
பணத்துக்கு ஆசைப்படாதவர்கள் யாருமே இல்லையென்று சொல்லலாம். பொது நிறுவனங்கள் அதிக தொகையான பணத்தைக் கையாளுவதனாலும், அப்பணம் செலவழிக்கப்படுவதற்கு  தனிநபர்கள் பொறுப்பாக இருப்பதனாலும், நிதிகள் கையாடப்படுவது சகஜமாகி விட்டது. இத்துடன், பொறுப்பான பதவிகளில் தங்கள் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் அமர்த்துதல் என்பதும் ஊழல் செயற்பாடாகும். ஊழலானது ஜனநாயக நடைமுறைக்கு பெரும் அச்சுறுத்தலாகும். ஏனெனில், பணத்தைக் கொண்டும் செல்வாக்கைக்கொண்டும் எந்தச் சட்டமும் வளைக்கப்படலாம்.
ஊழலை அழிக்க ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் பொதுவாகவே வழங்கும் கருத்தாகும். அனேகமாக எல்லோரும் ஊழல் பேர்வழிகள் என்பதோடு, ஒருவர் ஊழலில் ஈடுபடும்பொழுது ஏனையவர்கள் பேசாமல் இருப்பதே இதற்குப் பிரதான காரணங்களாகும். ஏனையவர்கள் என் பேசாமல் இருக்கிறார்கள் என்றால், அந்த இடத்தில் தாங்கள் இருந்திருந்தாலும் அதையேதான் செய்திருப்பார்கள் என்கின்ற உணர்வே மற்றவர்களின் வாயை அடைத்து வைக்கின்றது. அத்தோடுகூட, ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நிலைகளில் சிறு சிறு ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதனால்தான் பெரும் ஊழல் நடக்கும்போது அதனை அனுதாபத்துடன் நோக்கத் தலைப்படுகிறார்கள்.
இதிலிருந்து, ஊழல் என்பது ஒரு சமூகத்தின் பண்பாடு என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். அது, மக்கள எல்லோருடைய அங்கீகாரத்துடனும்தான் நடக்கின்றது. இந்தப் பண்பாட்டை நாமெல்லோரும் இணைந்து மாற்றினாலன்றி அது மாறாதுதான். ஊழல் நடவடிக்கை எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிறு நன்மைகளைக் கொடுத்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அது எங்கள் சமூகத்துக்கே அளப்பரிய கேட்டினை விளைவிக்கின்றது என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும். ஊழலினால் சமூகத்துக்கும் சகல மக்களுக்கும் நீண்ட கால நன்மை பயக்கும் பொதுச் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றனளூ இவ்வாறு நாட்டின் செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிந்து விடுவதால் அவர்கள் சர்வாதிகாரிகளாக மாற உதவுகின்றது.
இதனை நாம் மனமார உணர்வோமாயின் ஊழல் இல்லாத சமூகத்தை நிச்சயமாக உருவாக்க முடியும். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, கண்காய்வாளர் நாயகத்தின் அலுவலகம், பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குக்குழு, ஊடகவியலாளர்களின் அமைப்புக்கள் இவையனைத்தும் ஊழலுக்கெதிராகப் போராடவேண்டும். இதைத் தவிர எங்கள் பாடசாலைக் கல்வியில் ஊழலின் தீமை பற்றிய அறிவுறுத்தலை ஒவ்வொரு வகுப்பிலும் கொண்டுவரவேண்டும். மதத் தலைவர்கள் தங்கள் ஆசியுரைகளின்போது ஒவ்வொரு முறையும் ஊழலின்றி சுத்தமாகவும் நேர்மையாகவும் வாழுவது பற்றிய அறிவுரைகளைக் கூறிக்கொண்டேயிருக்கவேண்டும். பெற்றார் தமது பிள்ளைகளுக்கு அறிவுரை கூறும்பொழுது அவர்கள் நேர்மையான பொது ஒழுக்கத்தைக் கைக்கொள்வது எவ்வளவு முக்கியமென விளக்க வேண்டும். இப்படி கிரமமாக நாமெல்லோரும் முயன்றோமென்றால் ஊழலை இல்லாதொழிக்கலாம்.

முடிவுரை
'மக்கள் எல்லோரும் தீர்மானம் எடுத்தலில் பங்கேற்க ஜனநாயக நடைமுறை வேண்டும். ஆனால் அந்த ஜனநாயக நடைமுறையைப் பேணுவதற்கு மக்கள் எல்லோரும் பங்கேற்க வேண்டும்..'      
இதுவரை நீங்கள் வாசித்த விடயங்களிலிருந்து அறிந்து கொண்டதை சுருக்கமாகக் கூறினால், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், பெற்றார், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், கணக்காய்வாளர்கள் போன்ற இத்தனை பேர்களும் சேர்ந்து செயற்பட்டால்தான் ஜனநாயகத்தைப் பேணலாம். பார்க்கப் போனால்,  இந்த மக்கள் குழுவினர் எங்கள் சமூகம் முழுவதையும் உள்ளடக்குகின்றனர் அல்லவா?
ஏதைப் பெறுவதற்கும் நாம் ஒரு விலை கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். பரீட்சையில் திறமையான சித்தி கிடைப்பதற்கு இரவும் பகலும் கடுமையாகப் படிக்க வேண்டுவதே நாம் கொடுக்கும் விலையாகும். அதே போல் நிறையப் பணம் சம்பாதிப்பதற்கு நாம் கடும் உழைப்பை விலையாகக் கொடுக்கின்றோம். இதேபோலத்தான் சுதந்திர ஜனநாயகத்தை நாம் பெறுவதற்குக் கொடுக்கவேண்டிய விலை எந்நேரமும் விழிப்பாக இருப்பதே என்று ஒரு அறிஞர் கூறினார். எனவே பொதுவில் நடப்பதை அறிய முயற்சி செய்யாது, ஒன்றும் தெரியாத அசட்டு மனிதர்களாக நாம் வாழும்போது எங்கள் வாழ்க்கையையே நாமே பாழாக்குகின்றோம்.  




கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1. குழு அங்கத்தவர்களெல்லோரும் 'நியாயம்', 'அநியாயம்', 'மனித மாண்பு' இவையெல்லாவற்றுக்குமான உதாரணங்களைத் தந்து அவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகளைத் தெளிவாக்கிக்கொள்க.
2. எங்கள் நாட்டில் சமீப காலங்களில் மனித உரிமைகள் பேணப்பட்டனவா இல்லையா என்பதை உங்கள் அனுபவங்களைக் கொண்டு விளக்குங்கள். இதில் நீங்கள் கண்டது, பிறர் சொல்லக் கேட்டது, பத்திரிகையில் வாசித்தது, என்பவற்றை அடக்கலாம். நீங்கள் விவரிக்கும் ஒவ்வொரு உரிமையும் மனித உரிமைகளின் எந்த வகையைச் சேர்ந்தது என்று சொல்ல முடியுமா?

3. உங்களது கிராமத்தவர்களினால் மனித உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் உண்டா?


4. 'ஜனநாயகம்', மனித உரிமைகள்', 'சட்டங்கள்', இவற்றுக்கிடையிலான தொடர்புகள் என்ன?

5. ஏங்களது நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றதா இல்லையா? எப்படிப் பாதுகாக்கக்படுகின்றது? எப்படி மீறப்படுகின்றது?


6. ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க நீங்கள் என்னென்ன செய்யலாம்?

7. ஏந்த நடவடிக்கையோடு ஆரம்பிப்பீர் என்பதை ஒவ்வொருவரும் விளக்கி அதற்கான உபாயங்களைக் கலந்துரையாடி குறித்துக் கொள்க.






பொது நிகழ்வுகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொள்ளல்



1986ல் இந்தியாவில் நடந்த சம்பவமொன்று இது. ஷாபானு என்னும் முஸ்லிம் பெண்ணொருவர் தனது தன்னை தலாக் (விவாகரத்து) செய்த கணவரிடமிருந்து தாபரிப்புப் பணம் கோரி வழக்குத் தொடுத்தார். இஸ்லாமிய சட்டத்தில் தாபரிப்புப் பணம் பெறுவதற்கான அங்கீகாரம் இல்லலையாதலால் , ஷாபானு இந';தியாவின் சிவில் சட்டத்தின் கீழ் தனது வழக்கைத் தாக்கல் செய்தார். அவருடைய கணவரின் வழக்கறிஞர் உடனேயே ஒரு பூகம்பத்தைக் கிளப்பி விட்டார். ஒரு முஸ்லிம் பெண் இஸ்லாமியச் சட்டத்தை மட்டும்தான் உபயோகிக்கலாம், அவர் எப்படி இந்தியவின் பொதுச் சட்டத்தை நாடலாம் என்னும் வாதமே இந்தப் பூகம்பமாகும். இந்த வாதம், முஸ்லிம்கள் இஸ்லாமியச் சட்டத்தினைப் பாவிக்காது விட்டால் இஸ்லாமிய மக்களின் கலாசார உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என்கின்ற ரீதியில் பூதாகாரமாக உருவெடுக்கலாயிற்று. இதற்கு ஆதரவாக முழு முஸ்லிம் ஆண் சமூகமும் ஒன்று திரண்டது. அவர்கள் அறிக்கைகள் விட்டார்கள், தெருக்களில் போராட்ட ஊர்வலம் நடத்தினார்கள். அப்போதைய இந்திய பிரதம மந்திரி ராஜீவ் காந்தியிடம் முறையிட்டார்கள். ராஜீவ் சாந்தியும், முஸ்லிம் சமூகத்தினர் முழுமையாக இஸ்லாமிய சட்டத்தின்கீழ்தான் வரவேண்டும் என்றும், அவர்கள் (இந்திய பிரஜைகளாக இருந்தும்கூட) இந்திய சிவில் சட்டத்தை உபயோகிக்க முடியாதென்றும் ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர ஒப்புக்கொண்டார்.
இந்தியாவில் இருந்த பெண்கள் அமைப்புக்களும் சளைக்கவில்லை. ஷாபானுவுக்கு ஆதரவாகக் கூடினார்கள். ஒரு நிர்க்கதியாக விடப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதே முக்கிய விடயமாகையால், இந்திய பொதுச் சட்டத்தை அவள் நாடலாம் என்பதே அவர்கள் வாதம். அவர்களும் ராஜீவ் காந்தியிடம் ஓடோடிச் சென்று சட்டத் திருத்தத்தைக் கொண்டுவரவேண்டாமென்று கோரிக்கை வைத்தார்கள். அதற்கு ராஜீவ் காந்தி என்ன சொன்னார் தெரியுமா?
'ஆம், இச்சட்டத் திருத்தம் அநீதியானது என்பதை நானறிவேன். ஆனால் இஸ்லாமியத் தலைவர்கள் சனத்திரளை வீதிக்குக் கொண்டுவந்து இறக்கக்கூடியவர்கள்.  அதை வாக்குகளாகவும் மாற்றிக் காட்டக்கூடியவர்கள். உங்களுக்கு அது முடியுமா? முடியாதென்பதால் நான் அவர்கள் பக்கம்தான் சாய்வேன்..'
பெண்களோ வாயடைத்துப்போய்த் திரும்பினார்கள்.
ஆம். எங்கும் மக்கள் திரளின் சக்தியினால்தான் நல்ல மாற்றங்கள் என்றாலும் தீய மாற்றங்கள் என்றாலும்; நிகழுகின்றன. ஏந்த சக்தி வாய்ந்த தலைவரும் இறுதியில் மக்களின் ஆதரவினால்தான் அரசாளுகின்றார். அது இல்லாவிட்டால் அவர் ஒரு கணமேனும் தனது பதவியில் இருக்க முடியாது. ஏப்படி இருக்கமுடியும்? அவருக்குத் தேவையான வேலைகளைச் செய்பவர்களும் நாம் மக்களல்லவா? தட்டத் தனியாக அவர் இயங்க முடியாதல்லவா? எனவே மக்கள் ஒன்று கூடினால், முடியாதது ஒன்றுமில்லை.
மக்கள் ஒன்றுகூடி மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான இன்னுமொரு கதையைப் பார்ப்போம். இலங்கையில் பெண்களின் நிலையை மாற்றுவதற்கு இங்குள்ள பெண்கள் அமைப்புக்கள் பலகாலமாக முயன்று வந்திருக்கின்றன. 1989ம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாஸ அவர்கள் பெண்கள் அமைச்சினை உருவாக்கினார். இந்த அமைச்சினை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அதன் தலைமையின்கீழ் சிங்கள முஸ்லிம் தமிழ் பெண்கள் அமைப்புக்கள் எல்லாம் கூட்டாகச் சேர்ந்து ஒரு பெண்கள் பட்டயத்தை (றுழஅநn'ள ஊhயசவநச) 1993ம் ஆண்டு உருவாக்கின. சமவாயம் என்பது அடிப்படை மனித உரிமைகளைக் கோடு காட்டி உருவாக்கப்படும் ஒரு குறிப்பிட்ட குழுவினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய விடயங்களின் தொகுப்பாகும். எனவே, இந்தப் பெண்களின் பட்டயமானது பெண்கள் குறித்த பல பிரச்சினைகளைப் பேசியது. இது ஒரு அரசு நிறுவனத்தின்கீழ் செய்யப்பட்டதால் அதற்கு அரசாங்கத்தின் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றது.
இப்பட்டயத்தில் குடும்ப வன்முறைக்கு எதிராகப் பெண்கள் பாதுகாக்கப்படுவதைப் பற்றிப் பேசப்பட்டது. தொழிலிடங்களில் பெண்கள் பாலியல் இம்சைக்குள்ளாவதைத் தடுக்க வழிகோரப்பட்டது. நூற்றி ஐம்பது ஆண்டுகள் பழமையான எங்கள் பாலியல் கற்றச் சட்டம் புதுப்பிக்கப்படவேண்டுமென்று கோரியது. இதைத் தவிர, வெளிநாட்டவர்களை மணக்கும் பெண்களின் கணவர்களுக்கு குடியுரிமை கொடுக்காத சட்டம் மாற்றப்பட்டு ஆண்களைப் போலவே பெண்களின் வெளிநாட்டுத் துணைவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவேண்டுமென்று பரிந்துரைத்தது. இந்த ஆவணத்தின் அடிப்படையில் அடுத்த வருடங்களில் கடுமையான பிரச்சாரம் இந்த அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டது.
இன்று 2005ம் ஆண்டுக்குப் பிறகு, குடும்ப வன்முறைக்கெதிரான சட்டமும், தொழிற்தலங்களில் பாலியல் இம்சைகளுக்கெதிரான சட்டமும் செயற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏங்களுடைய கிராமங்களில் வாழும்  பெண்களைக் கேட்டுப் பாருங்கள். குடும்ப வன்முறைக்கெதிரான சட்டம் இருக்கின்றது என்று தெரிந்த ஆண்கள் மனைவியை அடிப்பது வெகுவாகக் குறைந்து விட்டது என்று தங்கள் கதைகளைக் கூறுகிறார்கள். குடியுரிமைச் சட்டங்களும் பெண்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டுவிட்டன. இதனால் வெளிநாட்டவரை மணந்த நூற்றுக்கணக்கான பெண்கள், இதுவரை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தக்கு ஓடி  அலைந்தவர்கள், இப்பொழுது ஆறுதல் பெற்றிருக்கிறார்கள். பார்த்தீர்களா? ஏங்கோ எல்லோரும் இணைந்து செய் சமூகப் பணி எப்படி ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் விடிவைத் தந்திருக்கின்றது என்று. மக்கள் ஒன்று கூடி செயலாற்றுவதனால் எப்படி சாதாரண மக்களின் வாழ்க்கையை மாற்றலாம் என்பதை விளக்க இம்மாதிரியான ஏராளமான கதைகள் உண்டு. எல்லாவற்றுக்கும் மக்கள் அணிதிரளவேண்டும் என்பது தெளிவாகின்றது.
 மக்களை அணிதிரட்டுதல்
மக்கள் அணிதிரளுவது தன்பாட்டிலேயே சும்மா நிகழும் ஒரு நிகழ்வல்ல. தற்கு சில முன்னிபந்தனைகள் இருக்கின்றன.
1) தனித்தனியே தங்கள் வீடுகளுக்குள்ளிருக்கும் மக்கள், பொது நோக்கத்துக்காக ஒன்று சேரும் பண்பாட்டினை உருவாக்க வேண்டும்.
நாங்கள் எங்களுக்குத்தான் இருக்கின்றது என்று நினைக்கும் பிரச்சினைகள் யாவும் பிறருடன் ஒன்று சேரும்போதுதான் அது பொதுவில் இருக்கின்ற பிரச்சினை என்று உணர்ந்து எங்களுக்கள் ஒற்றுமையை வளர்க்க முயலுவோம். இதற்காக அடிக்கடி ஒன்று கூடி மக்கள் தங்களுக்குள் உறவு வளர்க்கப் பழக வேண்டும். புதிய மனிதர்களைச் சந்திக்கும்போது எப்போதும் பல புதிய விஷயங்களை நாம் கற்றுக் கொள்ளலாம். உண்மையான உலகத்திலிருந்து உலக நடப்புக்கள் பற்றிக் கற்றுக் கொண்டு அறிவில் முதிர்ச்சி அடையலாம். இதை விட்டு, தொலைக்காட்சி நாடகங்களில் வரும் கற்பனைக் கதாபாத்திரங்களில் நாம் மூழ்கி விடுவதனால் முதலாவது ஒன்று சேரும் பண்பினை இழக்கின்றோம், அடுத்தது உலகத்தைப் படிக்காமல் தொலைக்காட்சியின் மாய உலகத்தில் நடக்கத் தொடங்குகின்றோம். இதனால்தான் வெறுமனே தொலைக்காட்சியே கதியென்றிராமல் நாலு மனிதர்களைச் சந்தித்து சமூகம் தொடர்பாக நாம் முதிர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகின்றது.
2) ஒரு விடயத்தை அல்லது பிரச்சினை பற்றிய தெளிவினை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
ஆம். ஒரு பிரச்சினையைத் தீர்க்க மக்கள் ஒன்று கூடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால் அப்பிரச்சினையின் ஆழங்களை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமல்லவா? இந்த அறிவு பல முறைகளில் நம்மை வந்தடைகின்றது. ஒன்று எமது சொந்த அனுபவங்களினூடாக அதை ஏற்படுத்துகின்றோம். இரண்டு பிறர் சொல்லக் கேட்டுப் பயனடைகின்றோம். மூன்றாவது வாசித்து, வேறு தகவல்களைத் திரட்டி அறிந்து கொள்கின்றோம். அடுத்து, பிறருடன் கலந்துரையாடித் தெளிகின்றோம். இவையெல்லாவற்றுக்கும் நாங்கள் கூடிக் கதைக்க வேண்டும் இல்லையா?
3) ஒரு பிரச்சினை பொதுப் பிரச்சினை என்பதை அறிவதும், அதனைக் கூடிக் கலந்துரையாடித் தெளிவதும் போதாது. இதை தீர்க்கலாம் என்கின்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்துவதற்கு பொது நிகழ்வுகள் உதவுகின்றன. பொது நிகழ்வுகளில் ஏராளமானோர் கலந்து கொள்கின்ற படியினாலே, அங்கிருப்போர் மனதில் ஒரு உற்சாகம் பிறக்கின்றது. நாம் மட்டும் தனியாக இதில் ஈடுபடவில்லை, எம்மைப்போல் ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றார்கள் என்கின்ற தெம்பும் தைரியமும் உருவாக அங்குள்ள எல்லோருமே மாற்றத்தை ஏற்படுத்தத் தயாராகி விடுகிறார்கள். பிறகென்ன, மாற்றங்கள் வந்தது போலத்தான். ஆத்துடன், ஏராளமான மக்கள் கருத்து இங்கு ஒருமித்திருக்கின்றது என்று கண்டவுடனேயே அதிகாரத்திலுள்ளவர்களும் தீர்மானம் எடுப்பவர்களும் உஷாராகி மக்கள் வழிக்கு வந்து விடுவார்கள். ராஜீவ் காந்தியின் கதையில் பார்த்தீர்கள்தானே
மேலே கூறியவற்றைப் படித்துப் பார்த்து யோசியுங்கள். அவ்வளவு தகைமைகளையும் கூட்டச் சந்திப்புக்களும் பொது நிகழ்வுகளுமே எங்களுக்குத் தருகின்றன.
கூட்டங்களிலும் பொது நிகழ்வுகளிலும் நாம் பொதுவாகக் கலந்து கொள்ளும் முறைகள்
மக்கள் மத்தியில் கூட்டுறவினை உருவாக்குவதற்காகவே அனேகமாக சகல அமைப்புக்களும் சிறு கூட்டங்களையும் பொது நிகழ்வுகளையும் தொடர்ந்து ஏற்பாடு செய்தவண்ணம் இருக்கின்றன. இவற்றில் நாம் எப்படிக் கலந்து கொள்கின்றோம்? இந்த இடத்தில் வாசிப்பை நிறுத்தி விட்டு உங்கள் குழுவில் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடி கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளுங்கள். அதற்குப் பிறகு தொடர்ந்து வாசியுங்கள்.
கூட்டங்களுக்கு அங்கத்தவர்கள் சமுகமளிப்பதில்லையென்பது பரவலான குற்றச்சாட்டாகும். புல இடங்களில் குழுக் கூட்டங்களுக்கு வருவதற்கும் போக்குவரத்துச் செலவுகளைக் கேட்பதுமுண்டு. கூட்டம் நடக்கின்ற நேரத்தில் சித்தி அண்ணாமலை என்று தொலைக்காட்சித் தொடர்கள் நிகழ்ந்தால் கேட்கவே வேண்டாம். யாரும் வரமாட்டார்கள். பொது நிகழ்வுகள் என்றால் நிச்சயமாக போக்குவரத்துக்கு வானோ பஸ்ஸோ ஒழுங்கு பண்ணா விட்டால் யாரும் வரமாட்டார்கள். போதாக்குறைக்கு வந்தவர்களை உபசரித்து சிற்றுண்டி உணவுகளையும் வழங்க வேண்டியதாக இருக்கின்றது.
இதை நீங்கள் ஆற அமர இருந்து யோசித்துப் பார்த்தால் உண்மையில் வெட்கப்படவேண்டும். உங்கள் தேவைகளுக்குப் போகும்போது நீங்கள் யாரிடமாவது போக்குவரத்தச் செலவுகளைக் கேட்பீர்களா? சிற்றுண்டி கேட்பீர்களா? உதாரணமாகக் கதிர்காமத்துக்கு தல யாத்திரை போகவேண்டுமென்றால் உங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை அல்லவா? ஏனெனில் உங்களுக்கு ஒன்று உண்மையாகத் தேவைப்பட்டால் அதைச் செய்து முடிப்பீர்கள் இல்லையா?
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஒரு பொதுப்பிரச்சினையை எங்கள் சொந்தத் தேவைகளாக நாம் கருதுவது மிகக் குறைவாகவே இருக்கின்றது. குடும்பவன்முறைக்கெதிராகச்சட்டம் கொண்டுவரவேண்டும் என்கின்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுவதற்கு பொது நிகழ்வொன்றை நடத்தினால் அதில் வரும் பெண்களுக்கு போக்குவரத்து தொடக்கம் எல்லா வசதிகளையும் ஏற்பாட்டாளர்கள்தான் செய்து கொடுக்க வேண்டும். ஆனால், அது கடைசியில் சட்டமாக அமுலுக்கு வந்தால்...?.... அதனால் நன்மை அடைபவர்களும் அந்தப் போக்குவரத்து இத்தியாதிகளைக் கேட்ட பெண்களும் அவர்கள் மகள்மார்களும்தானே. இன்று விழுது அமைப்பு அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டுமென்று போராடுகின்றது. இது நிறைவேறினால், இதனால் நன்மை அடைந்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் அதிகார பூர்வமாக நுழையப்போகின்றவர்கள் யார்? சகல பெண்களும் அல்லவா? விழுது உத்தியோகத்தர்கள் அல்லவே.
இது மிக எளிமையான, ஆனால் அனேகம் பலரும் உணராத உண்மையாகும். இதை நாமெல்லோரும் மனதார உணரும்போதுதான் சமூகப் பொறுப்புடன் நடக்கும் உண்மையான நாட்டுப்பிரசைகளாக வளருவோம். இல்லாவிட்டால், ஐயோ அவன் அப்பிடிச் செய்யிறான், இவன் இப்பிடிச் செய்யிறான் நாங்கள் என்ன செய்ய என்று கையைப் பிசைந்து கொண்டு சிறுபிள்ளைத்தனமாகத்தான் நிற்போம்.
ஒரு கூட்டம் அல்லது பொது நிகழ்வு நடக்கப்போகின்றது என்றால் நாங்களே அதற்குச் செல்லுவதற்கான ஊக்கத்தினைக் கொண்டிருக்க வேண்டும். அதில் எங்கள் சமூகப்பொறுப்பினை அடையாளம் காணவேண்டும். இதனால் எங்கள் எங்கள் சொந்த வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அறிந்திருத்தல் வேண்டும். அறிந்து தெரிந்து நாங்களே எங்கள் வாழ்ககையின் போக்கினைத் தீர்மானம் செய்கின்ற செயலாளர்களாக வரவேண்டும். ஒரு நிகழ்வுக்குப் போக போக்குவரத்து வசதி உங்கள் ஊரில் இல்லையா, நீங்கள் எல்லோரும் ஒன்றுகூடி நிதியைத் திரட்டி போக்குவரத்து ஏற்பாடு செய்ய முடியாதா? ஒரு கூட்டம் நீண்ட நேரம் போகும் சாத்தியக்கூறு இருக்கின்றதா, உங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிற்றுண்டிகள் செய்து எடுத்துவர முடியாதா? யோசித்துப் பாருங்கள்.
 நிகழ்வுகளில் பங்குகொள்ளத் தயங்குவதற்கான நியாயங்கள்
கூட்டங்களில் கலந்து கொள்ள மக்கள் பஞ்சிப்படுவதற்கு காரணங்களும் இல்லாமல் இல்லை. ஒரு வித குறித்த நோக்கங்களுமின்றி, பங்குகொள்ளும் மக்களின் நேரத்தை வீணாக்கும் வகையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன என்னும் பொதுவான குற்றச்சாட்டும் உண்டு. அரச நிறுவனங்களும் அரசு சாரா நிறுவனங்களும் தங்கள் நிதிகளை வெறுமனே முடித்து அறிக்கை எழுதுவதற்காக அவசர அவசரமாக இந்த மாதிரியான கூட்டங்களையும் நிகழ்வுகளையும் ஒழுங்கு செய்கின்றனதான். அது உண்மைதான். ஆனால் அதற்காக எல்லாக் கூட்டங்களையும் நிகழ்வுகளையும் ஒரே கண்ணோட்டத்தில் நோக்க முடியாது. குறித்த முக்கியமான நோக்கங்களுக்காகவும் பொது நிகழ்வுகளும் போராட்டக் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. அவற்றை அக்கறையுடன் இனம்பிரித்துப் பார்த்து அடையாளம் கண்டு பங்குபற்றவேண்டும்.
ஒரு நிறுவனம் ஒழுங்காகக் கூட்டங்களை எற்பாடு செய்யாவிட்டால், துணிந்து அதிலுள்ள குறைகளை அவர்களுக்குச் சுட்டிக் காட்டுங்கள். ஏனெனில், அக்கூட்டங்கள் ஒழுங்காக நடந்தால் உங்களுக்குத்தான் நன்மை தருமேயொழிய அவர்களுக்கல்ல. வேண்டுமானால், அக்கூட்டங்களை எப்படி நடத்தலாம் என்று நீங்களே அவர்களுக்கு சிபாரிசுகளை வையுங்கள். எந்த விடயம் கதைக்கப்படவேண்டும், எதைப் பற்றி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதை நீங்களே சொல்லி விடுங்களேன். அவர்கள் திருந்தாமலா போகிறார்கள்? உங்கள் தேவைகளை அறிந்து உங்களுக்கு சேவை செய்யத்தான் இந்த நிறுவனங்கள் எல்லாம் இருக்கின்றன என்பதை மறவாதீர்கள்.
கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1) உங்கள் ஊரில், குறித்த நொக்கத்தை அடைவதற்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களும் பொது நிகழ்வுகளும் எவையெவையென்று கருதுகிறீர்கள்? அவற்றை நிரல்படுத்தி ஏன் என்று விளக்குக.
2) பங்குபற்றுபவர்களுடைய நேரத்தை வீணாக்கி நடத்தப்படும் சந்திப்புக்களும், கூட்டங்களும் பொது நிகழ்வுகளும் எவை? அவற்றை நிரல்படுத்தி ஏன் என்று விளக்குக.
3) நன்றாக நடத்தப்படும் கூட்டங்களுக்கு ஒழுங்காக பங்கபற்றுனர்கள் வருகை தருகிறார்களா? அதற்கு ஏதேனும் சன்மானம் எதிர்பார்க்கிறார்களா? சுன்மானம் எதிர்பார்க்கிறார்கள் என்றால் அல்லது ஒழுங்காக வருகை தரவில்லை என்றால், அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கூறுக.
4) ஒழுங்கான முறையில் நடத்தப்படாத கூட்டங்களைப் பற்றி என்ன செய்யப்போகிறீர்கள்? விளக்குக.
5) சமுகப்பொறுப்புடன் மக்கள் ஒன்று கூடுவதை ஊக்குவிப்பதற்கு என்ன செய்யலாம்? உம்முடைய நடவடிக்கையின் முதல் படி என்ன? விளக்குக.. இதனை எவ்வளவு காலத்தக்குள் செய்து முடிப்பீர் என்பதை குழுவுக்குச் சொல்லுக. ஓவ்வொரு அங்கத்தவரும் இவ்வாறான வேலைத் திட்டமொன்றை வைத்திருத்தல் நன்று.





குடும்ப வன்முறை



எங்கள் பிரதேசங்களில் பல வெளிநாட்டு உள்நாட்டு அரசு சாரா நிறுவனங்கள் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகத் தங்கள் வேலைகளை முன்னெடுப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். 'எங்களால் முடியும்' (றுந உயn) என்கின்ற பிரச்சாரம் ஒக்ஸ்பாம் என்னும் நிறுவனத்தினால் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதில் பங்குபற்றியிருக்கிறீர்களா? அப்படியானால், குடும்ப வன்முறையைப் பற்றிய விளக்கம்  உங்களுக்குத் தெரிய வந்திருக்கும். குடும்பம் என்றால் என்ன என்று விளங்கிக் கொள்வதனாலும், வன்முறை என்பது என்ன என்று விளங்கிக் கொள்வதனாலும், நாங்கள் குடும்ப வன்முறை என்னும் சமூகப் பிரச்சினையின் மூலத்தை அறிந்து கொள்ளலாம்.
குடும்பம்
அந்தக் காலம் என்றால் என்ன, இந்தக் காலம் என்றால் என்ன, மனித இனம் இந்த உலகத்தில் தொடர்ந்து வாழவேண்டுமானால் அது இரண்டு கடமைகளை அவசியமாகச் செய்ய வேண்டும். ஓன்று, மனிதர்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இவற்றை பண்டங்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்வது என விபரிக்கலாம். அடுத்தது, அவர்கள் தாங்கள் தொடர்ந்து வம்சங்களாக வாழ்வதற்கான மறு உற்பத்தியில் ஈடுபடவேண்டும். இதனை, குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது தொடர்பான சகல கடமைகளாக விளங்கப்படுத்தலாம். எங்கள் சமூகக் கட்டமைப்புக்களும் கலாசார வெளிப்பாடுகளும் எல்லாமே எப்பொழுதும் இந்த 'உற்பத்தி', 'மறு உற்பத்தி' என்னும் இரு முக்கியமான உறவுகளைச் சுற்றியே உருவாக்கப்பட்டிருக்கின்றன. உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
உற்பத்தி உறவுகள் என்றால் என்ன? உற்பத்திக்குத் தேவையான வளங்களை (மூலதனம், தொழில்நுட்பம், நிலம் போன்ற இயற்கை மூலங்கள்) உற்பத்தியில் ஈடுபடும்; மனிதன் எப்படி எடுத்துக் கொள்கின்றான் என்பதெல்லாம் உற்பத்தி உறவுமுறைகளுக்குள் அடங்கும். மறு உற்பத்தியின் உறவுகளானவை, பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதற்காக சமூகம் தன்னைக் ஒழுங்கமைத்துக்கொண்ட நடைமுறைகளாகும். முதலில் நாங்கள் தின்று குடித்து உயிர் வாழ்ந்தால் அப்புறந்தானே எமது மறு உற்பத்தி பற்றிச் சிந்திக்கலாம்? எனவே மனிதர்களின் வயிற்றுப் பிழைப்பென்பது அவர்களின் இருப்பின் அல்லது வாழ்க்கையின் முதன்மையான செலுத்திகளாக இருப்பதைப் பார்க்கலாம். ஆகவே எங்கள் பொருளாதாரக் கட்டமைப்புக்கள்தான் பின்பு எங்களின் சமூக உறவுகளைப் பெரும்பாலும் தீர்மானிக்கின்றது என்று கூறலாம்.
கீழே ஒரு அட்டவணையில், ஆதிகாலம் தொட்டு மனித சமுதாயத்தில் நிலவிய பிரதானமான உற்பத்தி உறவு முறைகளையும் அவற்றுடன் தொடர்பாக உருவாகிய மறு உற்பத்தி உறவு முறைகளையும் தருகின்றோம். அதனை ஆராய்ந்து படிப்பதன்மூலம் உற்பத்திக்கும் மறு உற்பத்திக்கும் இடையே உள்ள தொடர்புகளை நீங்கள் இன்னும் நன்றாக அறிந்து கொள்ளலாம்.

அட்டவணை
உற்பத்தி உறவு முறைகள் உற்பத்தி உறவு முறைகளுடன் தொடர்பான மறு உற்பத்தி உறவுமுறைகள்
1. மனிதன் உருவாகி முதல் 30,000 வருடங்கள்

பெண்கள் காய்கிழங்கு கனி பொறுக்குவதும் ஆண்கள் காட்டு மிருகங்களை வேட்டையாடுவதும் உற்பத்தி தொடர்பான தொழிலாக இருந்தது..
ஓரிடத்தில் உணவு மூலங்கள் முடிந்து விட்டால் அடுத்த பிரதேசத்துக்கு குடி பெயரும் நாடோடி வாழ்க்கை. சொத்து என்று கூறிக்கொள்ள எதுவும் இல்லை. எல்லாம் எல்லாருக்கும் பொதுவென வாழ்ந்த காலம்.
ஓற்றுமையாக ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக வாழ வேண்டிய நிலைமை என்பதனால் மக்கள் குடிகளாகவும் குழுக்களாகவும் வாழ்ந்த காலம்.
பெண்களும் ஆண்களும் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்த காலம். ஒரு ஆணுடன் வாழ்வது என்பது என்ன என்று அறியாத பருவம். பெண்கள் பிள்ளைகளைப் பெற்றவுடன் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய் இருந்து வளர்த்தெடுத்தனர். இங்கு சமூக மத்தியில்தான் பிள்ளைகள் வளர்க்கப்பட்டனர் என்று கொள்ளலாம். ஆண்களுக்கு தங்கள் பிள்ளைகள் யாரென்று தெரியாததோடு அவர்கள் பிள்ளை வளர்ப்பிலும் ஈடுபடவில்லை.

குழாமுக்கு மிக அவசியமான மனித உயிர்களை உற்பத்தி செய்பவர்கள் என்கின்ற அடிப்படையிலும், சாஸ்வதமான உணவுப்பொருளாக இருக்கின்ற கிழங்கு கனிகளை குழுவுக்கு வினியோகிப்பவர்கள் என்கின்ற அடிப்படையிலும், குடிகளின் சமூக வாழ்க்கையில் பெண்கள் முதன்மை ஸ்தானத்தில் வைக்கப்பட்டார்கள். இச்சமூகத்தைத் தாய்வழி சமூகங்கள் என்று ஆய்வாளர்கள் விபரிப்பார்கள்.
2. மனிதனின் அடுத்த 10,000 வருடங்கள்

மனிதர்கள் கால்நடைகளை வளர்க்கத் தொடங்கி விட்டார்கள். உபரி உற்பத்தி அதிகரிக்க குடிகளுக்குள் செல்வம் பெருகியது. உபரி உற்பத்திகள் பண்ட மாற்றுச் செய்யப்பட்டு வர்த்தகம் பெருகியது. பெண்கள் பிள்ளை வளர்ப்பில் ஈடுபட்டதனால் ஆண்களே கால்நடை மேய்ப்பதிலும் வர்த்தகத்திலும் ஈடுபட்டனர்.   அயல் குடிகளின் கால்நடைகளை அபகரிப்பதற்கு அவர்கள்; போரிடவும் தொடங்கினர்.
ஆண்களின் கைகளில் சொத்து சேரத் தொடங்கியது. முதன்முதலாக உலகத்தில் தனியுடைமை தோன்றியது.


ஆண்கள் தங்களுடைய சொத்தைக் கொடுக்க தமக்கென வாரிசு வேண்டுமெனக் கருதத் தொடங்கினர். ஒரு குடும்பத்தின் சகோதரர்கள் அனைவரும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும் வழக்கம் வந்து அதிலிருந்து ஒரு பெண் ஒரு ஆணுக்கு மட்டும் சொந்தமாகும் ஒருதார மணம் உருவாகிற்று. தனியுடைமையுடன் நாங்கள் அறியும் மணவாழ்வு நடைமுறைக்கு வந்தது. ஆண்கள் பெண்களின் மீது பிரயோகித்த அதிகாரமே திருமணம் என்னும் சடங்கு என்றால் மிகையாகாது. இத்துடன் பெண்களின் சமூக அந்தஸ்து சரியலாயிற்று. குடும்பம் என்னும் சமூகக் கட்டமைப்பு ஆரம்பமானது.
3. மனிதனின் அடுத்த 5,000 வருடங்கள்

பாரிய அளவில் விவசாயப் பொருளாதாரம் உருவாகியது. வுpவசாயம் மனித குலத்துக்கு இதுவரை காணா பொருளாதார வளர்ச்சியைக் கொடுத்தது.  நகரங்களும் நாடுகளும் உருவாகின. கலைகளும் கல்வியும் வளர்ந்தன.


ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணைகின்ற குடும்பம் நிலைபெறுகிறது. சொத்துடைமை ஆணின் கைகளில் பூரணமாகத் தேங்குகிறது. ஒரு குடும்பத்தின் உரிமையாகும் நிலத்தைத் துண்டாடுவது விவேகமில்லையாதலால், நிலத்தை ஒன்று சேர்க்கும் கூட்டுக்குடும்ப முறை நிலவியது. அதாவது சகோதரர்கள் எல்லாருமே ஒன்றாக வாழ்கின்றனர்.  இதன்மூலம் ஒரு குடும்பம் முழுவதுமே கூட்டாகத் தங்கள் நிலத்தில் பாடுபட்டு உழைத்தார்கள், தங்களுக்குள் திருமண பந்தங்களையும் வைத்துக்கொண்டு தங்கள் சொத்துக்களைப் பிரிய விடாமல் பாதுகாத்தார்கள்.


4. மனிதனின் அடுத்த 300 வருடங்கள்

தொழில் நுட்ப விரிவாக்கத்தினால் தொழிற்சாலைகள் எழுந்தன.  மனிதர்கள் தங்கள் தங்கள் நிலத்திலிருந்து பிரிக்கப்பட்டார்கள். அவர்கள் தனியே உழைப்பை மட்டும் சொந்தம் கொள்ளும் தொழிலாளிகளாக மாறினர்.






மனிதர்கள் நிலத்தை அண்டிப்பிழைப்பவர்களாக இல்லாமல், தொழில் எங்கே உள்ளதோ அங்கு போய் அத்தொழிற் துறையுடன் வாழுபவர்களாக இருந்தார்கள். அதாவது எங்கே தொழில் இருந்ததோ அங்கே வாழும் தொழிலாளிகளாக இருந்தார்கள். கூட்டுக்குடும்பம் உடைந்தது. அப்பா அம்மா பிள்ளை என வாழும் தனிக்குடும்பங்கள் தோன்றின. இங்கும் ஆண்தான் பிரதானமான உழைப்பாளியாகக் கருதப்பட்டான். பெண்கள் குறைந்த வருமானம் பெறும் உழைப்பாளிகளாக இருக்கின்றனர்.
5. மனிதனின் அடுத்த 30 வருடங்கள்
(சமகாலம்)

மூலதனம், தொழில்நுட்பம் இவை மூலமாக உற்பத்தி, ஆகியன சுதந்திரமாக நாட்டுக்கு நாடு தாவும் உலகமயமாக்கல் பொருளாதார அமைப்பு உருவாகின்றது. உற்பத்தி துண்டாடப்பட்டு கண்டம் விட்டுக் கண்டம் தாவுவதுபோல (ஒரு சப்பாத்தின் அடிப்பக்கம் கொரியாவிலும், மேற்பக்கம் சீனாவிலும் லேஸ் இந்தியாவிலும் அதன் முழுமையான உருவம் அமெரிக்காவிலும் செய்யப்படுதல்)  உழைப்பும் கண்டம் விட்டுக் கண்டம் தாவுகின்றது. தொடர்பாடல் புரட்சி ஏற்பட்டு உலகின் தூரங்கள் குறைக்கப்படுகின்றன.




மலிவான உழைப்பைத் தேடி உற்பத்தி துண்டாடப்படுவதனால்  பெண்கள் பிரதான உழைப்பாளிகளாக மாறுகின்றனர். திருமணம் என்பது அவசியமில்லாத பந்தமாக மாறுகின்றது. தனிக்குடும்பங்கள் உடைகின்றன. ஆணும் பெண்ணும் திருமணமாகாமல் (அதாவது வாழ்நாளுக்குரிய பந்தமாக இல்லாமல்) ஒன்றாக வாழும் சமூகக் கட்டமைப்பு உருவாகின்றது. இவர்கள் தங்கள் குலத்துக்குள்ளோ இனத்துக்குள்ளோ மட்டும் பார்ட்னரைத் தேடாமல், உலகளாவிய ரீதியில் சர்வதேச பார்ட்னர்களைத் தேடத் தொடங்குகின்றனர்.

இதிலிருந்து, ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழும் உறவுமுறை, அல்லது குடும்பம் என்னும் சமூகக் கட்டமைப்பு இவை பெண்கள் மீதான ஆண்களின் மேலாதிக்கத்தையே குறியாக வைத்து தோற்றுவிக்கப்பட்டன என்பதைக் காணலாம். அத்துடன், தங்களுடைய சொந்த வாரிசுகளாக பிள்ளைகளைப் பெறுவதற்கெனவும் இது ஏற்படுத்தப்பட்டது என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள். இந்த அதிகாரமானது ஒரு குடும்பத்தின் பல அங்கத்தவர்களினால் வௌ;வேறு நிலைகளில் பிரயோகிக்கப்படுகின்றது. உதாரணமாக, குடும்பத் தலைவனின் தாய் என்கின்ற உறவு தருகின்ற அதிகாரத்தில் மாமியார் மருமகளைக் கொடுமை செய்யும் நிகழ்வுகளை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறே மாமனார், கணவனின் சகோதரர்கள், மூத்த சகோதரனின் மனைவி என்று படிப்படியாக இந்த அதிகார உறவு முறைகள் அடுக்கப்பட்டிருக்கும்.  ஆகவே, ஆதிக்க உறவு முறைகளின் ஊற்றாக நாம் குடும்பத்தைப் பார்க்கலாம். குடும்பங்களில் அதிகார உறவுமுறைகளுக்குப் பழக்கப்பட்டு அவற்றை ஏற்றுக்கொள்கின்றபோது, அதே மாதிரியான அதிகார உறவுமுறைகளை சமூகத்திலும் அரசியலிலும் ஏற்றுக்கொள்ள மனிதர்கள் பழகுகிறார்கள். அப்படித்தான் ஒடுக்குமுறை சமூக அரசியல் கட்டமைப்புக்கள் எங்கள் மத்தியில் நீடித்து நிலைக்கக் கூடியதாக இருக்கின்றது.
வன்முறை
எந்த மேலாதிக்க உறவும் ஒருவருடைய விருப்பங்களையும் தீர்மானங்களையும் இன்னொருவர் மீது திணிக்கும் நடைமுறையாகும். இந்த உறவு வன்முறையின் மூலம்தான் தக்கவைத்தக்கொள்ளப்படலாம். இப்படியான வன்முறைகளுக்கு இரு நோக்கங்கள் உண்டு. முதலாவது, பயமுறுத்தி அல்லது சிறுமைப்படுத்தி அடிபணிய வைப்பதன் மூலம் எதிர்ப்பையே இல்லாமல் செய்வது, இரண்டாவது, எதிர்ப்பிற்கான தண்டனையைக் கொடுத்து அடுத்த முறை எதிர்ப்பு எழாமல் செய்வது. முன்னையது அனேகமாக உள ரீதியான செயற்பாடாகும். பின்னையது உடல் ரீதியான செயற்பாடாகும். பெரும்பாலான குடும்ப வன்முறைகள் (90 வீதமானவை என்று கூறலாம்) ஆண்களினால்தான் செய்யப்படுகின்றன. தங்களின் தேவைகளைக் கவனிக்கவென மட்டும் தங்கள் குடும்பத்தை வடிவமைக்கவும், வேறு ஆடவனுடன் தங்கள் பெண்கள் போகாவண்ணம் (இந்தப் பயம் பெரும்பாலான ஆண்களுக்கு உள்ளுர இருக்கின்றது) தடுக்கவும் கூடிய தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டவே அவர்கள் வன்முறையிலும் பாலியல் துஷ்பிரயோகங்களிலும் ஈடுபடுகின்றனர். பொதுவாகக் கணவன்மார், தந்தையர், பாட்டாமார், அதற்குப் பின்பாக மாமன்மார் என்று இந்த வரிசையில்தான் குடும்ப வன்முறையாளர்கள் தோன்றுவதைக் காணலாம்.
தங்கள் கணவன்மார்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதனால்தான் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்று அனேகமான பெண்கள் தவறாக விளங்கிக் கொள்ளுகின்றனர். குடிபோதை வன்முறையில் ஈடுபடுவதற்கான தெம்பைக் கொடுக்கின்றதேயொழிய, வன்முறையில் ஈடுபடுவதற்கான லைசன்ஸ் முழுக்க ஆண்களுக்கு மேலாதிக்கத்தினை வழங்கும் எங்கள் சமூகப் பண்பாட்டினால்தான் கொடுக்கப்படுகின்றது. எனவே, குடிப்பழக்கத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவதுடன், பெண்களின் சமூக அந்தஸ்தை உயர்த்தும் முயற்சியிலும் ஈடுபட்டால்தான் குடும்ப வன்முறையை முற்றாக ஒழிக்கலாம்.
அடுத்து, பெண்கள் தங்கள் குடும்ப அங்கத்தவர்களைப் பற்றி வெளியில் குறைகூற வெட்கப்படுவதனாலும், தமக்கு நிகழும் வன்முறையைப் பற்றி சொல்லுவதில்லை. இது யாருக்குமே உதவாத வரட்டு கௌரவமாகும். ஒரு தவறு நடக்கும்போது அதைப் பற்றி வெளிவெளியாக நாங்கள் பேச ஆரம்பிக்கத் தொடங்கும்போதே அத்தவறுக்கான மாற்று நடவடிக்கை 50வீதம் செயற்படுத்தப்படுகிறது. எப்படி என்கிறீர்களா? நாங்கள் வாய்விட்டுப் பேசும்போது அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தைரியத்தையும் எங்களுக்குள் வளர்த்துக்கொள்ளுகின்றோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பேசக்கூட முடியாவிட்டால் தைரியம் எங்கேயிருந்து வரும்? மேலும், மற்றவர்களுடன் பேசப்பேசத்தான் பிரச்சினையும் தெளிவாக எங்களாலேயே விளங்கிக் கொள்ளப்படுகின்றதுளூ உங்கள் பிரச்சினையை அறிந்தால்தான் ஏனையோர் உங்கள் உதவிக்கு வரலாம். இவ்வாறாக மக்கள் பலரின் மனஉறுதி ஒன்றுபடும்பொழுது அங்கு தீர்வு உருவாகி செயற்படுத்தப்படுகின்றது. எங்கள் மத சாத்திரங்கள்கூட சொல்லின் சக்தியைப் பற்றி எங்களுக்கு கூறுகின்றன. உங்களுடைய சொல் வாக்கியங்களின் சக்தியை எனிதாக எடை போடாதீர்கள்.
குடும்ப வன்முறைக்கெதிராக செயற்படுவது பற்றி....
ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த அரச அதிபர், அவருக்கு பெண்கள் மீதான வன்முறைக்கெதிரான வேலைத் திட்டங்கள் கொஞ்சமும் பிடிக்காது. 'தேவையில்லாமல் வெளிநாட்டு நிதிகளைக் கொண்டு எங்கள் சமூகத்தின் கலாசாரப் பண்பாடுகளை மாற்றுகிறீர்கள்.. குடும்பங்களைப் பிரிக்கிறீர்கள்...' என்று குற்றஞ் சாட்டி அத்தகைய செயற்திட்டங்களுக்கு அவர் அனுமதி கொடுப்பதில்லை.
ஆம், குடும்ப வன்முறையை ஒழிக்க, ஏன் பெண்கள் மீதான அனைத்து வன்முறைகளையும் ஒழிக்க, நாம் பாடுபடும்பொழுது நிச்சயமாக குடும்பம் என்னும் சமூகக் கட்டமைப்பினுள் மாற்றங்களைக் கொண்டுவந்தேயாக வேண்டும். அங்கு பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவமான அதிகாரங்களைக் கொண்டுவரவேண்டும். அதைவிட, குடும்ப அங்கத்தவர்கள் தங்கள் நிலைமைகளைச் சாதகமாகப் பயன்படுத்தி மற்றவர் மீது மேலாதிக்கம் செலுத்தாமல் கவனமாக இருக்கும் விழிப்புணர்வினை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். உதாரணமாக, 'இது என்டை பிள்ளை நான் என்ன வேணுமானாலும் செய்யலாம்...' என்று பல பெற்றோர்கள் சொல்லுவதை நாம் கேட்டிருக்கின்றோம். இது முற்றிலும் தவறான கருத்தாகும். எம்மில் தங்கி வாழும் எமது சொந்தப் பிள்ளையாக இருந்தாலும் நாங்கள் எங்கள் இஷ்டத்துக்கு அந்தப் பிள்ளையை ஆட்டி வைக்க முடியாது, அதற்கு இம்சைகள் புரிய முடியாது. அந்தப் பிள்ளைக்கு தனது உணர்வுகளினதும் அறிவினதும் பிரகாரம் நடப்பதற்கு சகல உரிமைகளும் இருக்கின்றன. தங்கள் பிள்ளைகளின் கருத்துக்களுக்கும், அது ஐந்து வயதாக இருந்தாலும் கூட, சமமான மரியாதை கொடுத்து இயங்கும் குடும்பங்களில் வன்முறை நிகழ மாட்டா.
எனவே மேலே குறிப்பிட்ட உதாரணத்தில் அரச அதிபர் உண்மையைத்தான் கூறினார் என்றுதான் சொல்ல வேண்டும். அதிகார முறையான ஏற்றத் தாழ்வும், வன்முறையைப் பிரயோகிப்பதுமான 'எங்கள் பாரம்பரிய கலாசாரப் பண்பாடுகளை' மாற்றினால்தான் வன்முறையை இல்லாதொழிக்கலாம். இந்த மாற்றத்தை எண்ணித்தான் அவர் பயப்படுகின்றார். அவர் மட்டுமல்ல, சமூகத்தின் பல 'பெரிய மனிதர்கள்' எல்லோரும் இந்தக் காரணத்திற்காகத்தான் பெண்கள் மீதான வன்முறைக்கெதிரான வேலைத் திட்டங்களுக்கு தங்கள் ஆதரவினைக் கொடுப்பதில்லை. அதிகாரம் தங்கள் கைகளை விட்டு நழுவுவது எவருக்கும் பிடிக்காத ஒன்றல்லவா? அதற்கு எப்பொழுதும் அவர்கள் கையெடுக்கும் அஸ்திரம் 'கலாசாரத்தை மாற்றுகிறார்கள்' என்னும் குற்றச் சாட்டாகும்.
எங்கும் எப்போதும் கலாசாரம் மாறிக்கொண்டுதானிருக்கின்றது. மாறாத கலாசாரம் ஒன்றிருக்கு என்னும் கருத்து பச்சைப்பொய்யாகும். சுpல கலாசாரங்கள் வேகமாக மாறுகின்றன, சில மெதுவாக மாறுகின்றன, அவ்வளவுதான். கலாசாரத்தை வலுக்கட்டாயமாகப் பிடித்து வைத்திருப்பவர்கள் அதனை வன்முறை மூலமாகத்தான் செயற்படுத்தலாம். வேறு வழியேயில்லை.  இதற்கு ஒரு உதாரணமாக பாகிஸ்தானில் இருந்து ஒரு கதையைச் சொல்லலாம். இஸ்லாமிய ஆட்சி கொண்டுவரப்பட்ட வேளையில் அங்கு பெண்களெல்லோரும் கையில்லாத சட்டை போடுகிறார்களேயென்ற கூக்குரல் எழுந்தது. எனவே மதத்தீவிரவாதிகள் ஒரு பிளேட்டுடன் பாதையில் இறங்கி அங்கு கையில்லாத சட்டை போட்டுச் சென்ற சகல பெண்களின் கைகளிலும் பிளேட்டினால் கிழித்து விட்டார்களாம். இப்பொழுது அங்கே பெண்கள் கைகளை மூடிய சட்டைகள்தான் அணிகின்றனர்.
பெண்கள் மீதான வன்முறைக்கெதிராக வேலை செய்பவர்கள் இந்தக் காரணியைத் தெளிவாகப் புரிந்து வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும். ஜிஏ வேண்டாம் என்கிறார் என்று பயந்தடித்து சொல்லிவிட்டு வீட்டில் இருப்பதல்ல எங்கள் பணி. ஏந்தப் பெரிய மனிதரானாலும் அவர் தவறான கருத்துக்களைக் கூறினால் அதற்கு சவால் விடத் துணிய வேண்டும். சமூகத்தில் இறங்கி இயலுமட்டும் மக்களுக்கு இதைப் பற்றி விளங்கப் படுத்தவேண்டும். ஆதிக்க உறவு முறைகளின் ஊற்றாக நாம் குடும்பத்தைப் பார்த்தாலும்கூட, இப்பொழுதே இங்கேயே குடும்பங்கள் எல்லாவற்றையும் இல்லாதொழிக்கவேண்டும் என்று கூற வரவில்லை. அம்மா, அப்பா, பிள்ளைகள் என்கின்ற சமூக அமைப்பு இப்பொழுது தோன்றியிருக்கின்றது. நாங்கள் அட்டவணையில் காட்டியதுபோல அது நாங்கள் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன, காலப்போக்கில், உற்பத்தி உறவுமுறைகள் மாற்றமடைய அது மாற்றமடைந்து கொண்டுதான் போகப் போகிறது. எந்த சமூக உருவத்தை மறு உற்பத்தியானது எடுத்துக்கொண்டாலும், அது நீதியானதும் சமத்துவமானதுமாக இருக்க வேண்டும் என்பதைத்தான் நாம் வலியுறுத்துகின்றோம். எனவே, தனிக்குடும்பம்தான் இப்போதுள்ள சமூக உறவுமுறையானால், பரவாயில்லை அது இருக்கட்டும், ஆனால் அதற்குள் அநீதிகள் நடக்கக் கூடாது என்கின்றோம்.
இந்த முறையான சமநோக்கு மக்கள் மத்தியில் ஏற்படுவதற்கு நாங்கள் அவர்களுக்கு நிறையவே எடுத்து விளங்கப்படுத்த வேண்டி நேரும். உங்கள் உறவினர்கள் நண்பர்கள் யாராயிருந்தாலும், சேர்ந்திருந்து அளவளாவிக்கொண்டிருக்கும் நேரத்தில் இதைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். உங்களைப் போல இதற்கு எதிராகப் பணிபுரியத் தயாராக இருப்பவர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்குள் தொடர்ந்த இணைந்த செயற்பாடுகளை ஊக்குவியுங்கள். இந்த முறையில் வன்முறைக்கெதிரான மக்களின் எண்ணிக்கையைத் திரட்டி அதிகரிக்கலாம். இவ்வாறு மக்கள் எண்ணிக்கை அதிகரிக்க, அவர்கள் அபிப்பிராயங்கள் வலுப்பெற, மாற்றங்கள் தானாகவே சமூகங்களில் நிகழும்.
  கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1. உமது ஊரில் நிகழும் குடும்ப வன்முறைகள் எவையென்பது தெரியுமா? நீங்கள் குறிப்பிடும் ஒவ்வொரு சம்பவத்திலும் வன்முறையைப் பிரயொகித்தவர் யார் என்றும் அவருக்கும் வன்முறைக்குள்ளானவருக்கும் என்ன உறவு? இங்கு அதிகார உறவுமுறை என்பது தென்பட்டதா?
2. 'மாற்றம் ஒன்றுதான் இந்த உலகில் என்றும் மாறாத விஷயம்..' இந்த வசனத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? புpற குழு அங்கத்தவர்களுடன் கலந்துரையாடுங்கள். ஆதி காலம் தொட்டு மாறாமல் இருந்து வருகின்ற ஏதாவது விஷயத்தை நீங்கள் காட்ட முடியுமா? உடை, உணவு, பழக்கவழக்கம், வீடு கட்டும் முறைகள், மொழி, பிரயாணஞ் செய்கின்ற முறைகள், கல்வி முறைகள், குடும்ப உறவுமுறைகள், இயற்கை இப்படி எல்லாவற்றையும் உதாரணமாகக் கொள்ளுங்கள். ஆராய்ந்த பேசி உங்கள் முடிவுகளுக்கு வாருங்கள்.
3. கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கு வன்முறையில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் உங்கள் ஊரில் நடந்திருக்கின்றனவா? அவை என்ன என்று பிற அங்கத்தவர்களுக்கு விபரியுங்கள்.
4. பெண்கள் மீதான வன்முறைகள், குறிப்பாக குடும்ப வன்முறைகளை ஒழிக்க நீங்கள் உங்கள் ஊரில் என்ன செய்யலாம்?
- சக பெண்களுடன்
- ஊரிலுள்ள பெரிய மனிதர்களுடன்
- பொதுவாக ஆண்களுடன்
- பிள்ளைகளுடன்
- பாடசாலை ஆசிரியர்களுடன்
- சமயத் தலைவர்களுடன்
- பாதிக்கப்பட்டவர்களுடன்
- பாதிப்பினை ஏற்படுத்தியவர்களுடன்
- உங்கள் பாராளுமன்ற உறுப்பினருடன் . . . . .
எப்படியான நடவடிக்கைகளை செய்வீர்?

Thanks விழுது, ஆற்றல் மேம்பாட்டு மையம் 

பயங்கரவாதம்

பயங்கரவாதம் எனபதன் வரைவிலக்கணம்
இன்றைய உலகில் இலங்கையின் ஜனாதிபதி உரையாற்றினால் என்ன, உலகத் தலைவர்கள் எங்கேனும் பேசினால் என்ன, அவர்களின் பேச்சில் நிச்சயமாக பயங்கரவாதம் என்பதைப் பற்றிய ஏதோவொரு குறிப்பு இருப்பதைக்காணலாம். அந்தளவுக்கு பயங்கரவாதம் என்கின்ற விடயம் உலக அரசுகளின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. இலங்கை அரசாங்கமும் பயங்கரவாதத்தை ஒழிக்கத்தான் யுத்தம் புரிகின்றோம் என்றல்லவா இதுவரைகாலமும் (2009ம் ஆண்டு) சொல்லி வந்தது? எனவேதான் பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை நாங்கள் விளங்கிக் கொள்ளுவது அவசியமாகின்றது.
அமெரிக்க அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு இவ்வாறு வரைவிலக்கணம் கொடுத்திருக்கின்றது:
' பயங்கரவாதம் என்பது ஏதும் அரசியல் அல்லது மதரீதியிலான, அல்லது கருத்தியலான குறிக்கோள்களை எய்துவதற்காக அரசாங்கங்களை அல்லது சமூகங்களை பயமுறுத்தவும் வற்புறுத்தவும் உதவும் சட்ட விரோதமான வன்முறைச் செயல்களாகும்.'
இந்த வரைவிலக்கணத்தில் 'சட்ட விரோதமான வன்முறைச் செயல்கள் ' என்கின்ற பதத்தைப் பார்த்திருப்பீர்கள். சட்ட விரோதமான வன்முறைச் செயல்கள் என்ற கருத்து இருக்கின்றது உண்மெயென்றால் சட்ட பூர்வமான வன்முறைச் செயல்களும் இருக்கின்றனவென்பதும் உண்மையாக வருமல்லவா? அரசுகள்தானே சட்டங்களை இயற்றுகின்றன. அதனால்தான் சட்ட பூர்வமான வன்முறையென்பது அரசுகள் மேற்கொள்கின்ற வன்முறையாக கருதப்படுகின்றது.. பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளைக் கொண்டு அரசு மேற்கொள்ளுகின்ற வன்முறை சட்ட பூர்வமான வன்முறையாகும். அரசு அல்லாத குழுக்கள் அல்லது தனிநபர்கள் மேற்கொள்ளுகின்ற வன்முறையானது சட்ட விரோதமான வன்முறையாகும். உதாரணமாக, விடுதலைப்புலிகள் கொழும்பில் தற்கொலைக் குண்டுதாரியின் வழியாக வெடிகுண்டை வெடித்து அழிவுகள் ஏற்படுத்தினால் அதைப் பயங்கரவாதம் என்று உலகு சொல்லுகின்றது. ஆனால் கிபிர் ஜெட் கொண்டு அரசு வன்னியில் குண்டு வீச்சுக்களைப் புரிந்து வெற்றி கொண்டால் அதனை யுத்தம் என்கிறது.  இதைக் கொண்டு பார்த்தால், அரசு அல்லாத எந்தக்குழுவும் வன்முறையில் இறங்கினால் அதனைப் பயங்கரவாதம் என்று சொல்லப்படுகின்றது எனவும் இந்தச் சொல்லை விளங்கிக் கொள்ளலாம். ஆனாலும், பயங்கரவாதத்துக்கு இது ஒரு பூரணமான விளக்கமல்ல.
பயங்கரவாதமும் கிளர்ச்சியும்
இன்றைய உலகில் அரசு அல்லாத குழுவினர் ஈடுபடும் வன்முறைகளை இரண்டு வகையில் நோக்கலாம்.
ஒரு அரசின் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் முகமாகவோ அல்லது ஒரு நாட்டின் ஏதோவொரு பகுதியைக் கைப்பற்றும் முகமாகவோ பிரயோகிக்கப்படும் வன்முறை ஒரு வகையானது. இது கிளர்ச்சி என்று கூறப்படும். கிளர்ச்சி என்பது ஒரு நீண்ட காலமாக செயற்படும் இயக்கமாகும். இதற்காக மக்களையும் அணி திரட்டும்;. கிளர்ச்சியாளர்கள்  அரச படையினருடன்தான் பிரதானமாக மோதுவார்கள். தங்கள் நோக்கங்களை அடைவதற்கு இவர்கள் பொதுமக்களை அல்லது பொதுச் சொத்துக்களைத்தாக்கியழிக்கும் யுக்திகளையும் உபயோகிக்க முடியும். ஆனால் கிளர்ச்சிவாதிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லாமல் செயற்படமுடியாது என்கின்ற படியால் இந்த யுக்தியை ஒரு வரையறைக்குள்தான், மக்களை அதிகம் தாக்காதவாறுதான் அவர்கள் பாவிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
மக்களின் அபிப்பிராய மாற்றம், அல்லது ஏதோவொரு கொள்கை மாற்றம் அல்லது ஏதோவொரு சம்பவத்துக்கான பழிவாங்கல் நடவடிக்கைகள் இவையெல்லாம் இரண்டாவது வகையான வன்முறையாகும். இதில் ஈடுபடுவதற்கு ஒரு சிலரே போதுமானதாகும். உதாரணமாக, 1983ம் ஆண்டு மத்திய கிழக்கில் பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய 241 அமெரிக்க இராணுவ வீரர்கள் ஒரு குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த நடவடிக்கையின் நோக்கம் பெய்ரூட்டில் அன்று நிலைகொண்டிருந்த அமெரிக்கப்படைகளை வீட்டுக்கு அனுப்புவதாகும் இந்தச் சம்பவத்தின் பின்னர் உடனேயே அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் எடுத்து அமெரிக்கப்படைகளை வாபஸ் வாங்கியது. இதே போல், பலஸ்தீனிய அகதிகளின் நிலைகளை உலகின் கவனத்தக்குக் கொண்டுவர ஜேர்மனி மியூனிக் நகரத்தில் இஸ்ரேலிய ஒலிம்பிக் வீரர்களைக் கொன்ற சம்பவத்தினையும் கூறலாம். இந்த மாதிரியான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள்  அரச படையினருடன் மோத மாட்டார்கள், அவர்களுக்கு பொது மக்கள்தான் போராட்ட களமாகும். இவர்களுக்கு மக்கள் ஆதரவும் தேவையில்லை. உண்மையில், இதனைத்தான்; பயங்கரவாதம் என்று நாம் வரைவிலக்கணம் கொடுக்கலாம்.
இவை தவிர்ந்த ஏனைய அர்த்தமற்ற வெகுசன கொலைகளை நாம் குற்றச் செயல்கள் என்கின்ற பிரிவுக்குக் கீழ் பார்க்கலாம். உதாரணமாக, அமெரிக்கப் பாடசாலையொன்றின் மாணவனொருவன் திடீரென்று ஒரநாள் காலை ஒரு தன்னியக்கத் துப்பாக்கியுடன் பாடசாலை வந்து அங்கு நூற்றுக்கணக்கான தனது சக மாணவர்களையும் ஆசிரியர்களையும் சுட்டு வீழ்த்தினான். அதற்கு ஏதுமொரு காரணம் இருந்ததாகத் தெரியவில்லை. இப்படியானவற்றைக் குற்றச் செயல்கள் என்று கூறலாமல்லவா?
ஆனால் இன்று உலக அரசாங்கங்கள் எல்லாம் இந்த மாதிரியாக வன்முறைகளை நுணுக்கமாக வேறுபடுத்திப் பார்க்க விரும்புவதில்லை. அரசு அல்லாத குழுக்களின் வன்முறைகள் ஏதோவொரு முறையில் ஏதோவொரு அரசினது அதிகாரத்துக்கு சவால் விடுவதனால், எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாகக் குவித்து பயங்கரவாதம் என்கின்ற முத்திரை குத்தி  வேரோடழிக்க அவை எத்தனிக்கின்றன. இதற்கான பல கூட்டுக்களை அமைக்கின்றன. தென்னாசிய நாடுகளின் கடந்த சார்க் மாநாட்டில் சகல நாடுகளும் பேசியது பயங்கரவாதம் என்கின்ற ஒரே பிரச்சினை பற்றித்தான்.  உலக அரசாங்கங்களின் இந்த முயற்சியில் மக்களின் பங்கு என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்வதற்கு பயங்கரவாதத்தின்  அடிமூலம் என்ன என்பதை விளங்கிக் கொண்டேயாகவேண்டும்.
அரசு அல்லாத குழுக்களின் வன்முறைகளுக்குக் காரணம் என்ன?
ஆதி காலத்தில் மனிதர்கள் சிறு சிறு குடிகளாக வாழ்ந்து வந்தனர் என்று எங்களுக்குத் தெரியும். அப்பொழுதெல்லாம் ராசாக்கள் கிடையாதுதானே. ஆனால் குடிகள் பெருகப் பெருக சின்ன அவற்றின் தலைமைத்துவமாக சின்னச் சின்ன ராசாக்கள் உருவாகினர். இந்த ராசாக்களின் ஒரு படத்தை இங்கு பாருங்கள்.

அவர் ராசாவாக வந்தவுடனேயே அவருக்குக் காவலுக்கு ஈட்டியுடன் ஒருவர் நிற்கின்றார் அல்லவா? ஏன்? அன்று ஈட்டியுடன் நின்ற அரசர்கள் பிறகு காலம் செல்லச் செல்ல ஒரு காவலாளர் கூட்டத்துடனும் பெரிய படைகளுடனும் ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். இன்று பாதுகாப்பு அமைச்சும், ஆயுதப் படைகளும் இல்லாத எந்த நாடும் இருக்கின்றதா?
இதிலிருந்து ஏன்ன தெரிகிறது? மக்கள் மயப்படாத எந்த ஆட்சியாளரும் ஆயுதங்கள் கொண்டுதான் தன்னை நிலைநிறுத்துகின்றார், தனது ஆட்சியினைப் பாதுகாக்கின்றார். சுருங்கக் கூறினால் வன்முறையைப் பிரயோகிக்கும் வாய்ப்பை வைத்து பயமுறுத்திக் கொண்டுதான் எந்த அரசனோ எந்த அரசாங்கமோ மக்களை அடக்கிக் கொண்டு ஆட்சி செய்ய முடிகிறது. இன்று உலகில் நடக்கும் யுத்தங்களில் 99 வீதமானவை உள்நாட்டு யுத்தங்கள், அதாவது ஒரு அரசாங்கம் தனது பிரஜைகள் மீது செய்யும் யுத்தங்களாகும். அரசு ஆயுதம் கொண்டுதான் மக்களை அடக்கி ஆளுகின்ற படியினால், மக்களை ஆயுதம் தூக்க விடக்கூடாதுதானே. அதனால்தான் அரசு அல்லாத எவரும் ஆயுதம் பிரயோகிப்பதை சட்டத்துக்கு விரோதமான செயல் என்னும் சட்டங்களை இயற்றி விட்டிருக்கின்றன.
அரசுகள் ஆயுதபாணிகளாக இருப்பதனால்தான், அதன் அதிகாரத்துக்கு சவால் விடும் எந்தக் குழுவும் தானும் ஆயுதம் தூக்க வேண்டியதாக உள்ளது. இன்றைய அரசுகளின் அதிகாரங்களின் அளவுகளை யோசித்துப் பாருங்கள். அப்பப்பா. சொல்லி முடியாதே. அவை யாருக்கும் என்னவும் செய்யலாம் என்கின்ற அளவுக்குத் தங்களை மத்தியில்; பலப்படுத்திக்கொண்டு வந்திருக்கின்றன. இந்த அரசுகளை ஆட்டம் காண வைக்க வேண்டுமானால் வன்முறையைப் பிரயோகிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றுதான் பலரும் நினைக்கின்றனர்.
அத்துடன், பேச்சுக்கு இல்லாத மதிப்பு வன்முறைக்கு உண்டல்லவா? எங்களது நாட்டில் ஏராளமான சிங்கள மக்கள் இனப்பிரச்சினை பிரபாகரனினால்தான் தோன்றியது என நம்புகின்றார்கள். ஆனால் பிரபாகரன் பிறக்க இருபது ஆண்டுகளுக்கு முன்னமேயே பிரச்சினை வலுப்பட்டுவிட்டது என்பதை அறியமாட்டார்கள். ஏனெனில் அப்போதெல்லாம் தமிழ் அரசியல் தலைவர்கள் வெறுமனே கதைத்துக் கொண்டிருந்தபடியால் சிங்கள மக்கள் அதைக் கவனிக்கவில்லை. பிரபாகரன் துப்பாக்கியைத் தூக்கியதும்தான் தமிழ் தேசிய பிரச்சினை என்று ஒன்றிருக்கின்றது என்று உலகமெல்லாம் அறிந்து கொண்டது. இந்தக் காரணங்களுக்கெல்லாம்தான் சாதாரண மக்கள் ஆயுதம் தூக்கக் கிளம்புகின்றனர்.
சமூகத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டத்தான் அரசாங்கங்கள் ஆயுதப்படைகளை வைத்திருக்கின்றன என்று சிலர் சொல்லலாம். உண்மைதான். ஆனால் ஆயுதப்படைகளின் மூலம் அடக்க வேண்டிய சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் அப்படித்தான் என்ன? யோசித்துப் பாருங்கள்.
மேலும், பயங்கரவாதப் பிரச்சினை இருப்பது அரசாங்கத்துக்கு அனுகூலமான காரியமாகும். பயங்கரவாதப் பிரச்சினையைக் காட்டிக் காட்டியே மக்களைப் பயத்துடன் வாழ வைத்து ஆட்சிக்கு அடங்கி நடக்க வைக்கலாம். அதைச் சாட்டியே ஜனநாயகமற்ற சட்டங்களைக் கொண்டுவரலாம். பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டுமேயென்ற விசனத்தில் மக்கள் இம்மாதிரியான அநீதியான சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள். இச் சட்டங்கள் அமுலுக்கு வந்தபின்னர் அதை வைத்துக் கொண்டு தனக்கு எதிராகக் கிளம்பும் எல்லாவகையான எதிர்ப்புக்களையும் அரசாங்கம் அடக்க வெளிக்கிடும். எங்கள் நாட்டில் 1979ம் ஆண்டு அமுலுக்கு வந்த பயங்கரவாதத் தடைச்சட்டம் இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும். தமிழ் தேசியப் போராட்டத்தை அடக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் பின்னர் தென்பகுதியில் ஜேவிபி கிளர்ச்சியாளர்களை அடக்கவும் 60,000க்கு மேற்பட்ட தென்னிலங்கை மக்களைக் கொன்று குவிக்கவும் உதவியது. பிறகு எதிர்க்கட்சிகளை மிரட்டி அடக்கவும் உதவியது.
இந்தச் சட்டத்தின் உதவியுடன்தான் இதுவரை, 30 வருட காலங்களாக நூற்றுக்கண்கானோர் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்படவும், தனி ஆயுதக்குழுக்களை அரசு வைத்துக் கொண்டு மக்களைக் கொலை செய்யவும், கடத்தவும், வெகுசன ஊடகங்களை மிரட்டவும், ஊடகவியலாளர்களை கொலை செய்யவும், கூட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்கவும் முடியுமாக இருந்திருக்கின்றது.    
பயங்கரவாதப் பிரச்சினையும் மக்களும்
ஆயுதந்தூக்கி வன்முறையில் ஈடுபடுகின்ற மக்கள் குழுக்களை பயங்கரவாதிகள் என்று பயங்கரமான முத்திரை குத்தி அரசாங்கங்கள் செய்யும் பிரச்சாரத்திற்கு கண்ணை மூடிக்கொண்டு மக்கள் துணை போகக் கூடாது. எப்பொழுதும் எந்த வன்முறை நடவடிக்கைகளினதும் மூலங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மூலப் பிரச்சினையைத் தீர்க்க முயலவேண்டும். அதுதான் நிரந்தரமான அமைதியைக் கொண்டு வரும். ஒரு நாட்டில் அல்லது சமூகத்தில் அரசியல் நோக்கம் குறித்த வன்முறைகள் தலையெடுக்காமல் இருக்க வேண்டுமானால் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
முதலாவதாக, நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் ஏதோவொரு முறையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்கள் எல்லோரும் ஏதோவொரு அளவிலாவது தங்கள் தேவைகளைத் தாமே நிறைவேற்றுக்கூடிய கட்டமைப்புக்களைக் கொண்டு வரவேண்டும். இந்தத் தேவையை எங்கள் உள்ளுராட்சி மன்றங்களும் மாகாண சபைகளும் ஓரளவில் பூர்த்தி செய்கின்றன. இந்தக் கட்டமைப்புக்களுக்கு மென்மேலும் அதிகாரங்களை வழங்குமாறு நாம் வலியுறுத்திக்கொண்டேயிருக்க வேண்டும். இவற்றை மென்மேலும் அதிகார பூர்வமான கட்டமைப்புக்களாக மாற்ற முயலவேண்டும். ஒரு உள்ளுராட்சி மன்றமானது வெளியுறவு விவகாரம், தேசிய திட்டமிடல் நடவடிக்கை ஆகியவை தவிர்ந்த சகல விடயங்களையும் பார்க்கும் ஆற்றல் கொண்டது உங்களுக்குத் தெரியுமா?
இரண்டாவதாக, யாருக்கும் ஏதாவது குறைகள் இருந்தால், அவர்கள் கூறுவதை ஆட்சியாளர்கள் கவனமாகக் கேட்பதை உறுதி செய்ய வேண்டும். நான் துவக்குத் தூக்கினால்தான் இனி என்னை யாரும் கவனிப்பார்கள் என்று யாருமே சிந்திக்க இடமளிக்கப்படாது. இதில் எங்கள் வெகுசன ஊடகங்களுக்கு பெரும் பங்கு இருக்கின்றது. எந்தச் சின்னக் குழுவாக இருந்தாலும் அவர்களின் குறைகளைப் படம் போட்டு இவை காட்ட வேண்டும். அவர்களின் குரலைக் கேட்பது மட்டுமல்ல அவற்றைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாக, நீதியாக, காரண காரியங்களுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மூன்றாவதாக, தனது பிரஜைகளுக்கெதிராக ஒரு அரசு வன்முறை பிரயோகிப்பதற்கு எந்தக் காரணம் கொண்டும் இடமளிக்கக்கூடாது. தனது பிரஜைகளின் அங்கீகாரத்துடன்தான் ஒரு அரசு ஆட்சி செய்கின்றது. அரசுகள் கொண்டுள்ள இறைமையானது, (அதாவது சுதந்திரமாக தன்னிச்சையாக செயற்படக்கூடிய தன்மை) அவற்றின் மக்களால்தான் வழங்கப்படுகின்றது. எனவே, தனக்கு அதிகாரம் வழங்கும் மக்களுக்கெதிராக ஒருபோதும் ஒரு அரசு அடக்குமுறையைப் பிரயோகிக்க இயலாது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  அந்த மாதிரியான சட்டங்களைக் கொண்டுவந்தாலும், தனது ஆயுதப் படைகளை மக்கள் மீது ஏவி விட்டாலும், நாங்கள் விழிப்பாக இருந்து அதனை நிற்பாட்டுவதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
நான்காவதாக, ஒரு அரசு எவ்வளவுதான் அதிகாரம் வாய்ந்ததாக இருந்தாலும் அதனை ஆட்டம் காண வைக்க மக்களால் முடியும் என்கின்ற நம்பிக்கையுடன் நாம் இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் மக்கள், கூட்டங்கள் கூட்டிப் பொதுப் பிரச்சினையை ஆராய்வதையும் கூட்டாக செயற்படுவதையும் கைவிடக்கூடாது. கூட்டங்கள் கூடுவதை எந்த உருவில் அரசு மறித்தாலும் அதனை எதிர்க்க வேண்டும். இன்று எங்கள் நாட்டில் பொதுக்கூட்டங்கள் கூடவேண்டுமானால் பொலிஸ் அனுமதி வேண்டும். ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத்தான் இந்த நடைமுறை என்று சொன்னாலும், மறைவில் தமக்கு ஒவ்வாத கூட்டங்களை தடை செய்வதற்கே இந்த ஆயுதம் பிரயோகிக்கப்படுகின்றது என்பது வெள்ளிடை மலையாகும்.  போதாக்குறைக்கு பிரதேசம் தோறும் சிவில் பாதுகாப்புக் குழுக்களையும் நிறுவி பொலிஸ் மூலமாக மக்களை வேவு பார்க்க அரசாங்கம் முயலுகின்றது. இதை நாங்கள் பார்த்தறிந்து கொள்ள வேண்டும். ஒன்று கூடி அதனை மாற்ற முயற்சிக்க வேண்டும்.
இப்படியான பல புதிய சட்டங்களையும் நடைமுறைகளையும் கொண்டு வந்துதான் ஐரோப்பா கனடா ஸ்வீடன் நோர்வே ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் வன்முறையையும் பூசல்களையும் இல்லாதொழித்திருக்கிறார்கள். இங்கள்ள ஆயுதப்படைகள் வரவர சடங்குகளுக்கான படைகளாக மாறிக்கொண்டு வருகின்றன. ஏனெனில் அவற்றுக்கான தேவை அநதச் சமூகங்களில் குறைந்து கொண்டு வருகின்றது. அவர்களுக்கு அதைச் செய்யலாமென்றால் எங்களுக்கும் முடியுந்தானே.
கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1. எங்கள் நாட்டில் அல்லது சமூகத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களை, கிளர்ச்சிவாதிகளின் வன்முறை, பயங்கரவாதிகளின் வன்முறை, அர்த்தமற்ற வன்முறைக் குற்றச் செயல்கள் என்று வகை பிரித்து ஆராய்ந்து பாருங்கள். இவற்றின் நோக்கங்கள் எவையாக இருந்தன? அப்பிரச்சினைகளின் மூலங்கள் என்ன?
2. பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்கள் என்னென்ன இருக்கின்றனவென்பது தெரியுமா?
3. தெரியாவிட்டால் அதனை அறிந்து கொள்ள என்ன நடவடிக்கை எடுப்பீர்?

Thanks விழுது, ஆற்றல் மேம்பாட்டு மையம் 

பயங்கரவாதத் தடைச் சட்டமும் அவசரகாலச் சட்டமும்



பயங்கரவாதத் தடைச்சட்டம் தோன்றிய கதை
1977ம் ஆண்டுக்குப் பின்பு ஜேஆர் ஜெயவர்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த சமயம். பாராளுமன்றத்தில் அக்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 8 ஆசனங்கள் மட்டுமே வெற்றி கொண்டதனால் அதற்கு எதிர்க்கட்சித் தலைமையாகவேனும் இயங்க முடியவில்லை. தமிழீழக் கோரிக்கையுடன் தேர்தலில் இறங்கி 18 ஆசனங்களை வென்றெடுத்த தமிழர் கூட்டணியின் தலைவர் திரு அமிர்தலிங்கம்தான் இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரானார். இந்த நிலைமையில் ஆளுங்கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் தனக்கிருந்த பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு எந்தச் சட்டத்தையும் இயற்றக்கூடியதாக இருந்தது. இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுதான் அந்த அரசாங்கம் 1978ம் ஆண்டு இலங்கைக்குரிய புதிய அரசியல் யாப்பினையும் சட்டமாக்கியது. இந்த அரசியல் யாப்புதான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையைக் கொண்டு வந்தது. மேலும் இந்த யாப்பில் இலங்கைப் பாராளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அமுலுக்குக் கொண்டு வரும் எந்தச் சட்டமும், அது அரசியல் யாப்புடன் ஒத்துப்போகின்றதோ இல்லையோ, அது செயற்படுத்தப்படும் என்கின்ற அதிகாரமும் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதே வேளை 1976ம் ஆண்டுக்குப் பின்பு வட-கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நடவடிக்கைகள் சிறிது சிறிதாக அதிகரிக்கலாயின. 1976ம் ஆண்டு அவ்வியக்கம் அப்போதைய யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவைக் கொலை செய்தும் வேறு பல வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தது. எனவேதான் 1978ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பையும் அது போன்ற ஏனைய அமைப்புக்களையும் தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதைத் தவிர எங்கள் நாட்டில் 1947ம் ஆண்டின் பொதுசன பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் அவசரகாலச் சட்டமும் இருந்தது.  ஆனால் இவையெல்லாம் போதாதென்று கருதிய அரசாங்கம்  1979ம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைக் கொண்டுவர பரிந்துரைத்தது.
முதலிலிருந்தே ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்தனா அவர்கள், இந்;தச் சட்டத்தை தான் தனது பாராளுமன்றப் பெரும்பான்மையுடன் அமுலுக்குக் கொண்டுவரப் போவதாக அறிவித்து விட்டார். இதனால், இச்சட்டம் எங்கள் அரசியல் யாப்பின் கொள்கைகளுக்கு மாறாக இருக்கின்றதா இல்லையா என்பதை எமது உயர் நீதிமன்றம் பரிசீலிப்பதற்கே தேவையில்லாமல் போய்விட்டது. ஏனெனில் என்ன சொன்னாலும் சரி செய்தே தீருவதென்று ஜனாதிபதி முடிவெடுத்து விட்டாரே. இதன் காரணமாக, உயர் நீதிமன்ற நீதியரசர்களும் முன்மொழியப்பட்ட இந்தச் சட்டத்தில் பாரதூரமான பிழைகள் ஏதும் இருக்கின்றனவா என்பதை மட்டும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, யாப்பின் மனித உரிமைகள் பிரிவினைப் பார்க்காமல் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அவர்கள் தங்கள் ஒரு பக்க அறிக்கையில் 'இது எமது அரசியல் யாப்புக்கு முரணாகவில்லை' என்று சொல்லி இந்தச் சட்ட மசோதாவை பாராளுமன்றத்துக்குக் கொண்டுவருவதற்கான பச்சை விளக்கைக் காட்டி விட்டார்கள்.
1979ம் ஆண்டு ஜுலை மாதம் 19ந் திகதி சட்ட மசோதா பாராளுமன்றத்துக்கு வந்தது. இதனை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்மொழிந்தவர் யார் தெரியுமா? மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதி உறுப்பினர் கே டபிள்யூ தேவநாயகம் அவர்களே. இந்த விவாதத்தின்போது இந்தச் சட்டத்தை எதிர்த்தவர் யார் தெரியுமா? நீங்கள் நினைக்கின்ற மாதிரி எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் இல்லை. இது 'பெடியன்களை'ச் சமாளிப்பதற்காக ஒரு கொஞ்ச நாளைக்குத்தான் அமுலில் இருக்கும். நீங்கள் அவ்வளவாக இதைப் பற்றி அலட்டிக் கொள்ளாதீர்கள் என்று ஜேஆர் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், அவர் மௌனமாகிவிட்டார். அவருக்கும் 'பெடியன்களை'ச் சமாளிக்கின்ற தேவை இருந்தது போலும்.  இரு தமிழ் அரசியல் தலைவர்களின் உதவியுடன் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் இன்றுவரை எத்தனை ஆயிரம் தமிழ் உயிர்களையும், அவர்கள் வாழ்க்கையையும் அவர்கள் உடைமைகளையும் அழித்தொழிக்கப் பாவிக்கப்பட்டிருக்கின்றது தெரியுமா? இங்கு மவையகத் தமிழ் மக்கள்கூட விட்டுவைக்கப்படவில்லை. நினைத்தே பார்க்க முடியாத சித்திரவதைகள், கொடுமைகள். இதிலிருந்து, என்னதான் ஒரு சந்தர்ப்பத்துக்குத் தன்னும் செய்யப்படுகின்ற எந்த நடவடிக்கையும், அடிப்படை மனித உரிமைகளை மீறா வண்ணம் நாம் கண்காணித்தக் கொண்டேயிருக்க வேண்டும் என்று தெரிகிறது.
அன்று பாராளுமன்றத்தில் இதற்கெதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால செனநாயகதான் எதிர்த்து வாதிட்டவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் தடைச்சட்டம் இருக்கின்றதே, அவசரகாலச் சட்டம் இருக்கின்றதே, அது கூடப் போதவில்லையா என்று, தனக்கு வாக்களித்த மக்களுக்கெதிராகவே இச்சட்டம் அவசர அவசரமாக பாஸ் பண்ணப்படுகின்றது என்ற அரசாங்கத்தின் உள் நோக்கத்தை அவர் சாடினார். ஆனால், என்ன பேசி என்ன செய்ய, ஒரே நாளிலேயே இச்சட்டம் கடகடவென அங்கீகரிக்கப்பட்டு விட்டது. தற்காலிகமானது என்று சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தும் இன்று 2010ம் ஆண்டில் இது 30 வருடங்களையும் தாண்டிவிட்டது!!
இச்சட்டம் பின்பு 1982ம் ஆண்டும் பின்பு 1988ம் ஆண்டும் திருத்தப்படடது. இதில் கொடுக்கப்பட்டுள்ள ஷரத்துக்கள் போதாதென்று 2006ம் ஆண்டு மஹிந்த அரசாங்கம் இன்னுமொரு பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் கொண்டு வந்தது. இது முதலாவதாக, பயங்கரவாத நடவடிக்கை என்றால் என்ன என்பதை வரையறுத்தது. அது, பிரிவினைக்கு ஆதரவாகப் பேசுதல் ,எழுதுதல், நடவடிக்கைகளைச் செய்தல், அப்படிச் செய்பவர்களுக்கு ஏதேனும் முறைகளில் உதவுதல், என்பனவாகும். ஐந்து பேருக்கு அதிகமாகக் கூட்டம் கூடினாலும் அது குற்றமாகக் கணிக்கப்படுகிறது. இதன் கீழ், கைதாகின்றவருக்கு ஆதரவாக நீதிமன்றில் ஆஜராகும் சட்டத்தரணிகள்கூட குற்றவாளிகளாகக் காணப்படலாம்!! புலிகளின் ஆதரவாளர்களின் ஆதரவாளர்களும் கைது செய்யப்படுவது மட்டுமல்ல, அவர்களின் சொத்துக்கள் கூட அரசாங்க உடைமையாக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாதத் தடைச்சட்டமும் எமது அரசியல் யாப்பில் பொறிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளும்
இலங்கையின் 1978ம் ஆண்டின் அரசியல் யாப்பானது, பேச்சு சுதந்திரம், கூட்டம் கூடி இயங்கும் சுதந்திரம், சட்டத்தின் முன்பு சமத்துவமான பாதுகாப்பு, எழுந்தமானமான கைதுகளுக்கும் தடுத்து வைக்கப்படுதற்கும் எதிரான பாதுகாப்பு, சித்திரவதையினின்றும் விடுதலை, நீதியாக நடத்தப்படும் வழக்குகளுக்கான உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மக்களாகிய எங்களுக்கு வழங்கியுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழோ,
1. அமைச்சரின் ஆணையின் பேரில், அவர் அதிகாரம் வழங்குகின்ற அலுவலர்களினால் அவர் சந்தேகிக்கின்ற எவரும் கைதாக்கப்படலாம். கைது செய்யப்படும்போது கைது செய்யப்படுபவருக்கு காரணம் ஏதும் சொல்லத் தேவையில்லை. அவருடைய வீட்டுக்குள் அனுமதியில்லாமல் புகுந்து தேடலாம். எந்தப் பொருளையும் எடுக்கலாம்.
2. அமைச்சர் தீர்மானித்த முறையிலும் அவர் தீர்மானிக்கின்ற இடத்திலும் கைதானவர் தடுத்து வைக்கப்படலாம். முதல் 72 மணித்தியாலங்களுக்கு அவர் வெளியுலகத் தொடர்புகளின்றி, முக்கியமாக, ஒரு சட்டத்தரணியின் உதவியின்றி (எங்கள் பொதுச் சட்டம் கைதான எவருக்கும் உடனடியாகவே சட்டத்தை நாட உரிமை இருக்கின்றது என்று கூறுகிறது) தடுத்து வைக்கப்படலாம். இவ்வாறு தடுத்து வைக்கப்படும்போது அவர் கொடுக்கின்ற வாக்கு மூலங்கள் நீதிமன்றில் செல்லுபடியாகும் (எங்கள் பொதுச் சட்டத்தின் கீழ், தடுத்து வைக்கப்படும்போது சித்திரவதைகளுக்கு இடமிருக்கின்றது என்பதனால், அப்போது கொடுக்கப்படுகின்ற வாக்குமூலங்கள் செல்லுபடியாகா).  
3. கைது செய்யப்பட்டு இருப்பவரை பொலிஸ் விசாரணைக்காக எப்பொழுதும் எங்கும் கொண்டு செல்லலாம். எனவே, ஒரு நீதிமன்றின் பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எந்தக் கைதியும் பொலிஸாரினால் வேறெந்த இடத்துக்கும் கொண்டு செல்லப்படலாம்.
4. சந்தேக நபர் 18 மாதங்களுக்கு ஒருவித குற்றச்சாட்டுமின்றித் தடுத்து வைக்கப்படலாம். அப்படி அவர் விடுவிக்கப்பட்டாலும்கூட, இந்தக் காலத்துக்கு அவருடைய நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் மட்டுப்படுத்தலாம். அவர் எங்கே குடியிருக்கலாம், எங்கே வேலை செய்யலாம், எங்கே பயணஞ் செய்யலாம், எந்தவொரு அமைப்புக்களை செயற்படுத்துவதற்கும் தடை போன்றவையே இந்த மட்டுப்படுத்தலாகும்.
5. பயங்கரவாத அமைப்புக்களை ஆதரிப்பது, அதற்கு ஆதரவாக பிரசுரங்களை வெளிக்கொணர்வது, வன்முறைகளில் ஈடுபடுவது இவையெல்லாவற்றுக்கும் 5வருடம் தொடங்கி 20 வருடம் வரையிலான கடுங்காவல் சிறைத் தண்டனை உண்டு. 2008ம் ஆண்டில் கைதான ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் அவர்களுக்கு, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இரண்டு கட்டுரைகள் எழுதினார் என்ற பேரில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை எங்களது நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்டது.
6. எவரேனும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து தமக்குத் தெரிந்த தகவல்களை பொலிஸாரிடம் தெரிவிக்காமல் விட்டால் அதற்கு ஏழு வருடங்கள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை உண்டு.
இந்தச் சட்டத்தில் தில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியஅ ம்சங்கள் நிறையவே இருக்கின்றன. ஒரு அரசியல்வாதி (அமைச்சர் என்றால் வேறு யார்?) எங்களை கைது செய்வது பற்றித் தீர்மானிக்கலாம் (உண்மையில் நீதித்துறையே அதற்கான அதிகாரம் கொண்டது)ளூ பாதிக்கப்பட்டவருக்கு சட்ட உதவி இல்லாமல் பண்ணலாம்ளூ நீதிமன்றின் அனுமதியில்லாமலேயே அதன் பாதுகாப்பின் கீழ் இருக்கும் ஒரு நபரை எங்கும் (உத்தியோகபூர்வ பாதுகாப்பு இல்லாத எந்த இடமும் ) அழைத்துச் செல்லலாம்ளூ அவரை என்னவும் செய்யலாம் (ஏனெனில் எப்படிச் செய்தாலும் அவருடைய வாக்குமூலம் நீதிமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுமல்லவா?).  வழமையாக எமது சட்டங்கள், செய்யப்படும் நடவடிக்கைகளுக்கான தண்டனைதான் தரும். செய்யாத நடவடிக்கைகக்காக தண்டனை தருவது கிடையாது. எமது பயங்கரவாதத் தடைச்சட்டத்திலேயோ, ஒருவர் படையினருக்கு தமக்குத் தெரிந்த தகவலை தெரிவிக்காத குற்றத்துக்காகத் தண்டிக்கப்படலாம். இதன்மூலம் எங்கள் நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக ஒரு வேவு பார்க்கும் சமூகமாக இந்தச் சட்டம் மாற்றியது. இந்தக் காரணத்தினால் கொழும்பு மற்றும் சுற்றுப்புறச் சூழலில் வாழ்ந்த எத்தனை தமிழர்கள் தங்கள் சிங்கள அயலவர்களினால் பொலிஸாரிடம் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள். இப்படி ஒரு பேனா வீச்சிலேயே இந்நாட்டிலுள்ள தமிழ் சிங்கள மக்களிடையே இருந்த ஒற்றுமையை இது குலைத்தது.
இதைவிட முக்கியமாக, எமது நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள், ஒருவித சாட்சியங்களுமின்றி கைது செய்யப்பட்டவர் தடுப்புக் காவலில் இருந்தபோது கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே மட்டும் தீர்ப்பாகின. தடுப்புக்காவலில் நடத்தப்படும் சித்திரவதைகளின் அளவும் தன்மையும் முன்னெப்போதும் கண்டிராதவகையில் பெருகின. அந்த சித்திரவதைகளை இங்கு விவரிக்கவே அங்கம் கூசும்.
அவசரகாலச் சட்டம்
எங்கள் நாட்டில் 30 வருடங்களுக்கு மேலாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தோடு அவசரகாலச் சட்டமும் அமுலில் இருந்து வந்திருக்கின்றது. எனவே இதைப் பற்றியும் அறிந்து கொள்வது அவசியமாகும்.
அவசரகாலச் சட்டமானது, 1947ம் ஆண்டின் பொதுசன பாதுகாப்புச் சட்டம், மற்றும் எங்கள் அரசியல் யாப்பின் 76, 155 ஆகிய பிரிவுகள், ஆகியவற்றின் அடிப்படையில் செயற்படுத்தப்படுகின்றது. எமது ஜனாதிபதி அரசாங்கத்தின் வர்த்தமானியில் (அரசாங்கத்தின் கொள்கைகளையும் சட்டங்களையும் வெளியிடும் பிரசுரம்) பிரகடனம் செய்த அந்தக் கணமே அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வருகின்றது. இந்தச் சட்டம் யாப்பில் காணப்படுகின்ற சட்டங்களைத் தவிர வேறெந்தச் சட்டங்களையும் மீற வல்லது. ஆயினும் எங்களது அரசியல் யாப்பு, தானே தனது எந்தெந்நதச் சட்டங்களை ஒரு அவசரகாலச் சட்டம் மீறலாம் என்று குறித்திருக்கின்றபடியால், அவசரகாலச் சட்டம் எங்கள் அரசியல் யாப்பின் அந்தச் சட்டங்களையெல்லாம் மீறுவதற்கு அதிகாரம் படைத்திருக்கின்றது (இது அனேகமாக எங்கள் அடிப்படை உரிமைகளைக் குறித்துத்தான் இருக்கும் என்பதை நீங்கள் நாம் சொல்லாமலேயே அனுமானித்துக் கொள்ளலாம்).
பிரகடனத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி, அதனை உடனடியாகவே பாராளுமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இப்பிரகடனம் ஒரு மாதத்துக்குத்தான் செல்லுபடியாகும். அதற்குப் பிறகு பாராளுமன்றம் அதனை அங்கீகரித்தால்தான் அடுத்த மாதத்துக்கு அதனை நீட்டலாம். இப்படி மாதாமாதம் பாராளுமன்றம் கூடி அவசரகாலச் சட்டத்தினை அங்கீகரித்ததனால்தான் 1971ம் ஆண்டு தொடக்கம் (முதலாவது ஜேவிபி கிளர்ச்சி) இன்று வரை ஒரு சில மாதங்களைத் தவிர இச்சட்டம் தொடர்ந்து அமுலில் இருந்து வருகின்றது. இதைக் கொண்டு எங்கள் ஜனாதிபதி தொழிற்சங்க நடவடிக்கையை ஒடுக்குவது தொடங்கி பாராளுமன்றத்தைக் கலைப்பது வரை எதையும் செய்யலாம்.
அவசரகாலச் சட்டத்தின்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எவரையும் கைது செய்து காலவரையறையின்றி, அதாவது அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருக்கும் வரையும்,  தடுத்து வைக்க ஆணையிடலாம். ஆனால் எங்கள் நாட்டிலோ தொடர்ந்து அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்த தன்மையினால் யதார்த்தமாகப் பார்க்கப்போனால் ஒருவர் தனது வாழ்நாள் முழுக்கவே விசாரணையின்றி கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படலாம் என்ற நிலைமையே காணப்படுகிறது. மேலும், கைதாகி 15 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் தருவிக்கப்படவேண்டும் ஆயினும், அவர் நீதிபதியினால் விடுவிக்கப்பட முடியாது. அவரை மிண்டும் ரிமாண்டில் போடுவதுதான் ஒரு நீதிபதி செய்யக்கூடிய உதவியாகும். அவரை விடுவிக்க வேண்டுமென்றால் நீதியமைச்சின் நிரந்தர செயலாளரின் அனுமதி பெற வேண்டும். சுருங்கக்கூறில், ஒருவரை நிரந்தரமாகக் கைதியாக வைத்திருக்கும் யுக்தியே நமது அவசரகாலச் சட்டம் என்றால் மிகையாகாது. இந்தச் சட்டத்தின் கீழ்தான் நாம் முன்பு கூறிய பயங்கரவாதத்துக்கு எதிரான 2006ம் ஆண்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத் தடைச்சட்டமும் ஒன்றாகச் செயற்படுத்தப்பட்டால் என்ன நடக்கும்? நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த நரக துன்பம்தான் எஞ்சும். பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் 72 மணித்தியாலங்களில் சட்டத்தின் முன் கொண்டுவரப்படவேண்டும் என்பதனால், 72 மணித்தியாலங்களில் அவர்களை அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஏதோவொரு குற்றச்சாட்டை எழுதிப் போட்டுவிடுவார்கள். இங்கு 15 நாட்களின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படவேண்டும் என்பதனால் உடனே திரும்பப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஏதேனும் குற்றச் சாட்டைப் போட்டு 18 மாதங்கள் சிறை வைத்து விடுவார்கள். இப்படியே போக வேண்டியதுதான். இன்னும் இந்தச் சட்டங்கள் எங்கள் நாட்டில் அமுலில் இருக்கின்றன. இவற்றுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமும் ஒருங்கே ஒருசேர அமுலில் இருந்தால் என்ன நடக்கும்? 2007ம 2008ம் 2009ம் ஆண்டுகள் நாம் அனுபவித்த பயங்கரங்கள்தான் கூடும்.
இவை இன்னமும் அமுலில் இருக்கின்ற சட்டங்கள். இவற்றை இல்லாதொழிப்பதற்கு பல மனிதஉரிமைகள் அமைப்புக்கள் பணி புரிகின்றன. மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், மனித உரிமைகள் இல்லம் போன்றவை அவையாகும். ஆனால் நாங்கள் மக்கள் உறுதியுடன் அவர்களுக்குப் பின்னால் நிற்காவிட்டால் சிறிய நிறுவனங்களாகிய அவை ஒன்றும் செய்ய முடியாது. இச்சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வுகளை தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியிலே ஏற்படுத்தி இந்த நாடே சூழ்ந்து இந்த அநீதிகளை ஒழிக்கப் பாடுபடச் செய்ய வேண்டும்.

கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1. நீங்களேனும் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர் எவரேனும் கைது செய்யப்பட்ட அனுபவங்கள் உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் விரும்பினால் மட்டும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அப்படி மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தன?
2. அநீதிகள் எங்கள் வாழ்க்கையில் நடக்கும்போது அவற்றை நினைவு கூருவதும் அவற்றைப் பற்றிப் பேசுவதும் அவசியமானது என்று நினைக்கிறீர்களா, இல்லையா? ஏன் என்று கூறுக.
3. 'இந்தச் சட்டமெல்லாம் நமக்கப்பாற்பட்ட விசயங்கள். பேசாமல் இருந்து கொண்டு ஏதாவது ஆட்சி மாற்றங்கள் வந்தால் அதால இது மாறும் வரைக்கும் காத்திருக்கலாம்..' இப்படி உங்கள் நண்பர் சொல்லுகிறார். நீங்கள் அதற்கு என்ன பதில் சொல்லுவீர்கள்?
4. பயங்கரவாதத் தடைச்சட்டம் ஒழிக்கப்படுவதற்கு நீங்கள் உங்கள் ஊரில் இருந்து கொண்டு செய்யக்கூடிய நடவடிக்கைகள் என்ன? அவை என்னென்ன பயன்களைத் தரும்?

 Thanks விழுது, ஆற்றல் மேம்பாட்டு மையம்



இலங்கையின் அரசியல் யாப்பு (அரசியலமைப்புச் சட்டம்) 1978




அறிமுகம்
நீங்கள் ஒரு அமைப்பின் அங்கத்தவராக இருப்பின், யாப்பு என்கின்ற சொல்லின் அர்த்தம் உங்களுக்குப் புரிந்திருக்கும். யாப்பு என்பது, ஒரு அமைப்பு அல்லது நிறுவனம் இயங்குவதற்கான விதிகளும் கொள்கைகளுமாகும். அதே போலவேதான், அரசியல் யாப்பு என்பது ஒரு நாடு இயங்குவதற்கான விதிமுறைகளும் கொள்கைகளுமாகும். இது உண்மையில் தம்மைத் தாமே ஆளுவதற்காக மக்கள் இடும் ஆணையாகும். அது நாட்டுக்கு நாடு முற்றிலும் வேறுபடும். ஒவ்வொரு அரசியல் யாப்பும் அந்தந்த நாட்டின் கட்டமைப்புக்கள் வளர்ந்து வந்த வரலாற்றையும் அனுபவத்தையும் பொறுத்தும், அத்துடன் அதை எழுதியவர்களின் நோக்கங்களைப் பொறுத்தும், அது தயாரிக்கப்பட்ட முறைவழி பொறுத்தும் இப்படி வேறுபடுகின்றது. தற்போது செயற்பாட்டில் இருக்கும் எங்களுடைய யாப்பு, 1978ம் ஆண்டு ஜேஆர் ஜெயவர்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழேயே எழுதப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

உங்கள் கிராம மாதர் அபிவிருத்திச் சங்கமாக இருந்தால் என்ன, அல்லது ஒரு அரசுசாரா நிறுவனமாக இருந்தால் என்ன, உங்கள் அமைப்பின் யாப்பில் இரண்டு அங்கங்கள் இருக்க வேண்டும். முதலாவது அங்கமானது தெரிவு செய்யப்படும் உறுப்பினரது தன்மைகளும் கடமைகளும் எவை என்பதை விவரிக்கும். அடுத்த அங்கமானது நிர்வாக நடைமுறைகளைப் பற்றிக் கூறும், இல்லையா? இங்கு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்தான் தீர்மானம் எடுக்கும் அங்கத்தினர்களாக இரப்பார்கள். நிர்வாகத்தினர், பிரதிநிதிகள் எடுத்த தீர்மானத்தின்படி பணி புரியும் ஊழியர்களாக இருப்பார்கள்.

அதே போலவே, ஒரு அரசியல் யாப்பானது நாட்டின் ஆட்சியின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் (தீர்மானம் எடுப்போர்) இயங்க வேண்டிய முறை பற்றியும், நிர்வாக (ஊழியர்கள்)  நடைமுறைகள் பற்றியும் விளக்குகின்றது. இவை தவிர, இந்த இரண்டு அங்கங்களும் மிதமிஞ்சிய அதிகாரங்களோடு தம் இஷ்டத்துக்கு இயங்காத வண்ணம் பார்த்துக்கொள்வதற்கு மூன்றாம் அங்கமாகிய நீதித் துறையானது ஒவ்வொரு அரசின் யாப்பினுள்ளும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதன்படி, ஒரு அரசியல் யாப்பின் மூன்று முக்கிய அங்கங்களாக சட்டவாக்க அங்கம், நிறைவேற்று அங்கம், நீதித்துறை அங்கம் என்பனவற்றைக் கூறலாம்.

•       சட்டவாக்க அங்கமானது தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டது. இது நாட்டின் சகல கொடுக்கல் வாங்கல் பற்றியும் சகல அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் பற்றியுமான சட்டங்களை இயற்றும். அப்படி இயற்றுகின்ற இந்த மக்கள் பிரதிநிதிகள் சபையைப் பாராளுமன்றம் என்று சொல்லுவோம்.
•       பாராளுமன்றம் இயற்றும் சட்ட விதிகளை நிறைவேற்றுவதற்காக நிறைவேற்றுத் துறை இருக்கின்றது. அமைச்சுக்கள், அதன் கீழான திணைக்களங்கள், அவற்றின் அலுவலகங்கள் ஆகியன இவை. மக்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்கான சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுதல், அவர்களின் அபிவிருத்தியை முன்னேற்றுதல், மற்றும் வெளிநாடுகளுடனான உறவுகளைப் பேணுதல் போன்றவையே நிறைவேற்று அங்கங்களின் நோக்கமாகும்.
•       சட்டவாக்க அங்கமும் நிறைவேற்று அங்கமும் அரசியல் யாப்பு விதிகளுக்கமையவும் நாட்டின் சட்டங்களுக்கு அமையவும் தங்கள் கடமைகளை சரிவரச் செய்கின்றனவா என்பதைக் கண்காணிக்கவே நீதித்துறை இருக்கின்றது. நீதித்துறைக்கு எவரும் முறைப்பாடு செய்யலாம். அவருடைய வழக்கை அது எடுக்கும்.  

பாராளுமன்றம், நிறைவேற்று அங்கம், நீதித்துறை ஆகியன எப்படி கட்டமைக்கப்படவேண்டும் என்றும், அவற்றுக்கான பிரதிநிதிகளும் உத்தியோகத்தர்களும் எப்படி நியமிக்கப்படவேண்டும் என்றும், என்னென்ன விதிகளுக்குக் கீழ் அவை இயங்க வேண்டுமென்றும் எங்களுடைய அரசியல் யாப்பு தெரிவிக்கின்றது. சட்டவாக்க அங்கமாகிய பாராளுமன்றம், தானே இன்னுமொரு சட்டவாக்க அங்கமாகிய உள்ளுராட்சி மன்றங்களைத் தாபிக்கலாம். இதன் மூலம், தனது சட்டவாக்க அதிகாரங்களை வேறு பிராந்திய சட்டவாக்க கட்டமைப்புக்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதுவும் ஒரு அரசியல் யாப்பினுள் உள்ளடக்கப்படுகின்றது. இதனை அரசியல் அதிகாரப் பகிர்வு என்று கூறுவோம்.

ஒரு நாட்டின் அரசியல் யாப்பானது, அந்நாட்டின் பல சந்ததிகளுக்கு, பல நூறு வருடங்களுக்காவது தொடர்ந்து வழக்கிலிருக்க வேண்டிய பொதுச் சொத்தாகும். எனவே, சகல மக்களினதும் நலன்களைக் கருத்தில் கொண்டு தூர தரிசனத்துடன் அது இயற்றப்படவேண்டும். அத்துடன், அது மக்கள் ஆணையாகக் கருதப்படுகின்றது. அவர்கள் சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் அடங்கிய பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுகின்றது.
மக்கள் எங்களுடைய ஆணை என்பதனால் அதன் ஆக்கத்தில் நாங்கள் எல்லோரும் ஈடுபட்டிருக்க வேண்டியது அவசியமாகும். ஒரு அரசியல் யாப்பு எளிய மொழி நடையில் பொது மக்கள் எளிதில் விளங்கிக் கொள்ளும் முறையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக, தென்னாபிரிக்கா நாட்டில் ஒரு மூன்று வருடங்களுக்கூடாக, மக்கள் சமூகங்கள் பங்கு பற்றி எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து எழுதிய அரசியல் யாப்பினைத்தான் 1996ல் அதன் பாராளுமன்றம் அங்கீகரித்தது. அந்த யாப்பினை வாசித்தப் பார்த்தால் மிக எளிய நடையில் எல்லோருக்கும் புரிகின்ற விதத்தில் அது எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

ஒரு அரசியல் யாப்பினைப் பற்றி நாம் இவ்வளவு தெரிந்து கொண்டோம். இனி எங்கள் நாட்டின் அரசியல் யாப்பின் விசேட அம்சங்களைப் பார்ப்போம்.


இலங்கையின் 1978ம் ஆண்டு அரசியல் யாப்பின். . . . . .

1)   நோக்கம்

ஒரு சுரண்டல் பொருளாதாரக் கொள்கையைச் சார்ந்த தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையை நிலை நிறுத்தத் தேவையான அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதுதான் 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்ட எங்கள் அரசியல் யாப்பின் முக்கிய நோக்கமாகும். இத்தகைய சுரண்டல் தாராளவாத பொருளாதாரக் கொள்கையானது, தங்கள் உரிமைகளைக் கோர பலமில்லாத தொழிலாளர் வர்க்கத்தினர் இருக்கும்போதும், வெளிநாட்டு மூலதனங்களுக்கான சுதந்திரமான செயற்பாடு வழங்கப்படும்போதும்தான் செயற்படுத்தப்பட முடியும்.  இப்படியானதொரு பொருளாதாரக் கொள்கையை நிலைநிறுத்த வேண்டுமானால் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஒழிக்க வேண்டும்ளூ வெளிநாட்டு மூலதனங்களை இந்நாட்டுக்குத் தருவிப்பதற்கு அதற்கு முன்னெப்போதும் இல்லாத வரிச்சலுகைகளையும் வேறு ஊக்குவிப்புக்களையும் வழங்க வேண்டும்ளூ இக்கொள்கையை முழுதாக நிறைவேற்றுவதற்கு ஒரு அரசாங்கம் பல ஆட்சிக்காலங்கள் நீடித்திருக்க வேண்டும். இவ்வளவும் செய்ய வேண்டுமாயின் ஒரு சர்வாதிகார ஆட்சியே பொருத்தமானது. எனவேதான் இச்சர்வாதிகார ஆட்சியை வலுப்படுத்துமுகமாக சகல அதிகாரங்களும் பொருந்திய நிறைவேற்று ஜனாதிபதி முறையை இந்த யாப்பு அறிமுகப்படுத்திற்று.
இது அறிமுகப்படுத்தப்பட்ட அந்த நாளில் அதைச் செய்த ஜே ஆர் ஜெயவர்தனா அவர்கள் 'ஆணைப் பெண்ணாகவும் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாதே தவிர மற்றெல்லாவற்றையும் இந்தப் பதவி செய்ய முடியும்' என்று தனது நிறைவேற்று ஜனாதிபதிப் பதவியைப் பற்றிப் பெருமிதத்துடன் கூறியிருக்கின்றார். அந்த அளவுக்கு அமைச்சரவையை அமைக்கவும், எந்த அமைச்சினையும், அவை எத்தனை அமைச்சுக்கள் ஆனாலும், தனது நேரடி அதிகாரத்தின் கீழ் கொண்டுவரவும், வரவு செலவுத் திட்டத்தின் இடைக்காலத்தில் எந்த அமைச்சினதும் நிதி வளங்களைத் தனது அமைச்சின் கீழ் கொண்டு வரவும், அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்;படுத்தவும், ஒரு வருடத்தின் பின்பு பாராளுமன்றத்தினைக் கலைக்கவும் தேர்தல்களைக் கூட்டவும், எந்தத் தவறிழைத்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படாதிருக்கவும்  எங்கள் ஜனாதிபதிக்கு சகல அதிகாரங்களும் உண்டு.  

அடுத்து தமிழ் மக்களின் தேசியப் போராட்டத்தை ஒடுக்குவது இந்த யாப்பின் முக்கிய அம்சமாகிற்று. இதற்காக பௌத்தத்தை அரச மதமாக விசேட அந்தஸ்;து கொடுத்தது. பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரங்களை வேறெந்த அமைப்புக்கும் பகிர்ந்து கொடுக்க முடியாதென்ற அம்சத்தினை இணைத்ததன் மூலம் தமிழ் மக்களுடனான அதிகாரப் பகிர்வுக்கு இடமே இல்லாமல் செய்யப்பட்டது. எனவே இது ஒரு ஒற்றையாட்சி அரசாக (ருnவையசல ளுவயவந) இயற்றப்பட்டது.

மக்கள் பங்குபற்றி எழுதும் யாப்பு தயாரிப்பது இதன் நோக்கமாக இருக்கவில்லையாதலால், இந்த யாப்பு முற்று முழுதாக ஒரு சட்டத்தரணியின் மொழியிலேயே எழுதப்பட்டிருக்கின்றது. நீங்கள் எங்கள் அரசியல் யாப்பை எடுத்து வாசித்துப் பாருங்கள். அதனை விளங்கிக் கொள்ளுவது மிகக் கடினமாக இருக்கும். இப்படியென்றால் எப்படி நாம் பொது மக்கள் அதனை அனுசரித்து நடக்க முடியும்?.... யாப்பின் விதிகள் ஆளும் தரப்பினரால் மீறப்படும்பொழுது தட்டிக் கேட்க முடியும்?

  2) உள்ளடக்கம்

 அத்தியாயம் 1 - இது மக்கள் அரசு இறைமை போன்றவற்றை விளக்குகின்றது. இலங்கை ஒரு ஒற்றையாட்சி முறையெனவும், அதன் கொடி சிங்கக் கொடியெனவும், அதன் தேசிய கீதம் ஸ்ரீலங்கா மாதா எனவும் கூறப்பட்டிருக்கின்றது.

அத்தியாயம் 2 - இலங்கை அரசு பௌத்த சமயத்திற்கான முதன்மை இடம் கொடுக்க வேண்டுமெனவும், பௌத்த சாசனத்தை பாதுகாக்கும் கடப்பாடு கொண்டதெனவும், அதே சமயம் பிற மதங்களைப் பின்பற்றுவதற்கான சகல உரிமைகளையும் ஏனைய மதப் பிரிவினருக்கு அளித்திருக்கின்றதெனவும் இந்த அத்தியாயம் கூறுகிறது.

அத்தியாயம் 3 - இதன் கீழ் இலங்கையின் சகல பிரஜைகளுக்குமான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிந்திப்பதற்கும், மனச்சாட்சிப்படி நடப்பதற்கும், விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்குமான உரிமைகள்ளூ சித்திரவதை செய்யப்படுவதிலிருந்து உரிமைளூ சமத்துவத்திற்கான உரிமைளூ எழுந்தமானமாக கைது செய்யப்படுவதிலிருந்தும் தடுத்து வைக்கப்படுவதிலிருந்தும் தண்டனை கொடுக்கப்படுவதிலிருந்தும் விடுதலைளூ நடவடிக்கை செய்யப்பட்ட காலத்திலிருந்து பிந்திய காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்களின் பேரில் தண்டனையாவதற்கெதிரான பாதுகாப்பு, போன்றவை இந்த அத்தியாயத்தில் கையாளப்பட்டிருக்கின்றன.

அத்தியாயம் 4 - இது மொழியுரிமைகளைப் பற்றி விளக்குகின்றது. சிங்களமும் தமிழும் அரசகரும மொழிகள் என்றும் ஆங்கிலம் தொடர்பு மொழி என்றும் இங்கு கூறப்படுகின்றது. அதேபோல் சிங்களமும் தமிழும் தேசிய மொழிகள் எனக் கூறுகிறது. அத்துடன் பாராளுமன்றத்திலும் உள்ளுராட்சி மன்றங்களிலும் வழங்க வேண்டிய மொழிகள் பற்றியும் கல்வி கற்க வேண்டிய மொழி பற்றியும் நிர்வாக மொழிகள் பற்றியும் சட்டங்கள் ஆக்கப்படவேண்டிய மொழி பற்றியும் இது கூறுகின்றது.

அத்தியாயம் 5 - இது பிரஜாவுரிமை பற்றிய அத்தியாயமாகும். இலங்கையின் பிரஜையாக இருக்கத் தகுதிகள் என்ன என்று இங்கு ஆராயப்பட்டுள்ளது.

அத்தியாயம் 6 - இந்த அத்தியாயம் ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்துக்கும் சட்டங்களை ஆக்குவதற்கான வழிகாட்டல் கொள்கைகளை விளக்குகின்றது.

அத்தியாயம் 7 - இது ஜனாதிபதியின் பதவி பற்றிய சகல நிபந்தனைகளையும் எடுத்துக் கூறுகின்றது. இவற்றில், அவர் பதவி வகிக்ககின்ற காலம், அவர் தெரிவு செய்யப்படும் முறை அவருடைய அதிகாரங்கள், அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமுடியாத விதத்தில் அவர் பாதுகாக்கப்பட்டிருக்கும் முறைகள், யாவையும் விளக்கப்பட்டிருக்கின்றன.

அத்தியாயம் 8 - இந்த அத்தியாயம் அமைச்சரவையைப் பற்றியது. மேலே கூறியதுபோல அமைச்சரவையை கூட்டும் நடைமுறைகள், அதன் அதிகாரங்கள் போன்றன இதில் விளக்கப்படுகின்றன.

அத்தியாயம் 9 - இது அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவது, மாற்றலாக்கப்படுவது, தண்டிக்கப்படுவது, பற்றி விளக்கும் அத்தியாயமாகும்.

அத்தியாயம் 10 11 12 - இவை பாராளுமன்றத்தின் கட்டமைப்பைப் பற்றியும் நடைமுறைகள் பற்றியும் அரசியல் யாப்பு மாற்றம் வேண்டினால் அதை நிறைவேற்றும் முறை பற்றியும் எடுத்துக் கூறுகின்றன.

அத்தியாயம் 13 - இந்த அத்தியாயம் மக்கள் அபிப்பிராயத்தைப் பெறும் கருத்துக் கணிப்புத் தேர்தல்களைப் பற்றியதாகும். இவை எந்த சந்தர்ப்பங்களில் எப்படி நடத்தப்படலாம் என்று கூறுகின்றது.

அத்தியாயம் 14 - தேர்தல்கள் நடத்தப்படவேண்டிய முறைகளை விபரிக்கின்றது.

அத்தியாயம் 15 - நீதித்துறையின் சகல கட்டமைப்புக்களையும் விபரிக்கின்றது.

அத்தியாயம் 16 - மேல் நீதிமன்றங்கள் நடத்தப்படவேண்டிய முறைகளை விளக்குகின்றது. வழக்குகள் கேட்கப்படும் முறை, அவை பதியப்படும் முறை, எல்லாமே இங்கு எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன.

அத்தியாயம் 17 - அரச நிதிகள் எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்படவேண்டும் என்று இது கூறுகின்றது.

அத்தியாயம் 18 - பொதுப் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் அதற்கு யார் பொறுப்பாவார் என்பது பற்றியும் இது கூறுகின்றது.

மேலே கூறியவற்றைத் தவிர சர்வதேச ஒப்பந்தங்கள் செய்து கொள்ளும் முறைகள், பொதுவான விடயங்கள் போன்றவற்றை அடுத்து வரும் இரண்டு அத்தியாயங்கள் விளக்குகின்றன.

3) யாப்புச் சட்டத் திருத்தங்கள்

நமது நாட்டின் அரசியல் யாப்பு 1978ம் ஆண்டு முதல் இன்றுவரை 17 சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில் இருக்கின்றது. 30 வருடங்களுக்குள் இவ்வளவு அதிகமான திருத்தங்களுக்குள்ளாகியது அதன் குறுகிய கால நோக்கங்களையே சுட்டிக் காட்டுகிறது என்று சொல்லலாம். ஒரு தூரதரிசனத்தோடு மக்கள் எல்லோருடைய நல்வாழ்வுக்காக இது செய்யப்பட்டிருப்பின் இவ்வளவு திருத்தங்கள் இவ்வளவு வேகமாக ஏற்படுத்தவேண்டிய தேவை இருந்திருக்காதல்லவா? தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில், இச்சட்டத் திருத்தங்களில் முக்கியமானவை மூன்று எனக் கூறலாம். அவையாவன, 6ம் திருத்தச் சட்டம், 13வது திருத்தச் சட்டம,; 17வது திருத்தச்சட்டம் என்பனவாகும்.

6ம் திருத்தச் சட்டம் 1983ம் ஆண்டு தமிழ் மக்களுக்கெதிரான மிகமோசமான கலவரங்கள் நடந்ததற்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட திருத்தமாகும். பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் இருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்பதே இதுவாகும். இதன்படி சகல கட்சிகளும் பாராளுமன்றத்தில் அமரும்போது தாம் நாட்டைப் பிரிக்க முயலமாட்டோமென சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளக் கேட்கப்படுவர்.

13வது திருத்தச் சட்டமானது 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சட்டத் திருத்தமாகும். இதன்கீழ் மேலதிக சட்டவாக்க அமைப்புக்களாக பிராந்திய கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டனளூ அவை முறையே மாகாணசபைகளும் அவற்றின்கீழ் உள்ளுராட்சி மன்றங்களும் ஆகும். அவற்றின் கட்டமைப்புக்களும் நடைமுறைகளும் எமது அரசியல் யாப்பில் அத்தியாயம் 17 (அ) பிரிவில் எழுதப்பட்டிருக்கின்றன. (வாசிப்பு இல 9இனைப் பார்க்க)

17வது திருத்தச் சட்டம் 2002ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாற்றமாகும். இதன்கீழ் அரசியல் தலையீடு இல்லாமல் அரச உத்தியோகத்தர்கள் தங்களது கடமைகளை ஆற்றும் வகையில் சுயாதீனமான ஆணைக்குழுக்களின் கீழ் அவர்கள் நிர்வகிக்கப்படுவதைப் பற்றிக் கூறுகின்றது. இதன்படி தேர்தல் ஆணைக்குழு, நீதித்துறை ஆணைக்குழு, பொலிஸ் சேவைகள் ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணைக்குழு ஆகியன நியமிக்கப்படவேண்டும் என இச்சட்டம் விதிக்கின்றது. (வாசிப்பு இல. 3இனைப் பார்க்க)

அரசியல் யாப்பு மாற்றத்திற்கான இயக்கம்

எங்களது 1978ம் ஆண்டு அரசியல் யாப்பு எந்த நிலைமைகளின் கீழ் எந்தெந்த நோக்கங்களுக்காகக் கொண்டுவரப்பட்டது எனக் கண்டோம். பிரதானமாக நாம் சிந்திக்க வேண்டியது என்னவெனில், நிறைவேற்று ஜனாதிபதி முறையினாலே இந்த நாட்டில் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. 1978ம் ஆண்டுக்குப் பிற்பாடு வந்த ஒவ்வொரு ஜனாதிபதியும் தனக்கு முந்தைய ஜனாதிபதியிலும்விட ஊழல் மிக்கவராக, தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மட்டுமே ஆட்சி நடத்துபவராகத்தான் இருந்திருக்கின்றார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவானவர் எமது அரசியல் யாப்புச் சட்டங்களையே மீறுபவராக மாறிவிட்டார். அரசியல் யாப்புச் சட்டத்தின்படி  ஜனாதிபதி மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதென்பதனால் உயர் நீதிமன்றமே ஒன்றும் சொல்லாமல் இருக்கின்றது.

அடுத்து, கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக புரையோடிப் போயுள்ள பிரச்சினை தமிழ் பேசும் மக்கள் தங்களுக்கென அதிகாரப் பரவலாக்கலைக் கோரும் இனப்பிரச்சினையாகும். எமது யாப்பின் ஒற்றையாட்சித் தன்மையை முற்றாக மாற்றாவிடில் இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்ட முடியாது.

மூன்றாவதாக, எங்கள் தேர்தல் முறைமைகள் மாறவேண்டும். இன்று விகிதாசாரப் பிரதிநிதித்துவம் என்கின்ற அடிப்படையிலேயே தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இதன்படி, எந்தவொரு குழுவும் மாவட்ட அடிப்படையில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டும். இந்தத் தேவையினால் சிறிய கட்சிகளுக்கும் தனிநபர்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் போய் விட்டது. பெரிய இரு பிரதான கட்சிகள் மட்டும்தான் நாட்டில் செல்வாக்கு செலுத்தலாம் என்கின்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. இது ஜனநாயகத்துக்கு பங்கம் விளைவிக்கும் நிலையாகும்.

எனவே எமது அரசியல் யாப்பினை மாற்றுவதற்காக பல சமூக செயலாளிகள் இப்பொழுது முயன்று வருகின்றனர். யாரும் இலேசில் தமது அதிகாரங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்தானே. நிறைவேற்று ஜனாதிபதி முறை இலேசில் விட்டுக் கொடுக்க முடியாத அவ்வகையான அதிகாரமாகும். அத்துடன், அரசியல் யாப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவையாகும். தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் எந்தவொரு கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது சந்தேகத்துக்குரிய விடயமாகும். ஆப்படியானால் யாப்பு மாற்றம் நிகழுமா என்பதே பெரிய கேள்வியாகும்.

இங்குதான் மக்களின் பங்கு வெளிவருகின்றது. மக்கள் ஒன்றிணைந்து திரண்டு எழுந்து வந்தால் நடைபெற முடியாதது ஒன்றுமே இல்லை எனலாம். நாங்கள் எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதங்களை எழுதியும் நேரில் சந்தித்து விண்ணப்பித்தும் வரவேண்டும். ஜனாதிபதிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். பத்திரிகைகளுக்கு உங்கள் கருத்துக்களை எழுதவேண்டும். உங்கள் உங்கள் ஊர்களில் பொதுக்கூட்டங்கள்  போட்டு இதற்கு பரந்துபட்ட மக்கள் ஆதரவினைத் திரட்ட வேண்டும். தொடர்ந்தும் தொடர்ந்தும் நாங்கள் தேய்த்துத் தேய்த்துக்கொண்டுவர கல்லுத் தானே கரைய ஆரம்பிக்குமல்லவா?

கலந்துரையாடலுக்கான வழிகாட்டிகள்:

எமது அரசியல் யாப்பினை மேலும் விளங்கிக் கொள்வதற்கு நீங்கள் வேறென்ன மேலதிக நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்று கூறுக.


Thanks விழுது, ஆற்றல் மேம்பாட்டு மையம்