Search This Blog

Showing posts with label Tamil Kavithaikal. Show all posts
Showing posts with label Tamil Kavithaikal. Show all posts

Tuesday, December 29, 2020

பைத்தியக்காரர்கள். கே. சச்சிதானந்தனின் கவிதை

 















பைத்தியக்காரர்களுக்கு

ஜாதியோ, மதமோ இல்லை.
பைத்தியக்காரிகளுக்கும்.
நம்முடைய பாலுறுப்புப் பிரிவினை
அவர்களுக்கு பாதகமல்ல.
அவர்கள் முன்முடிவுகளுக்கு
அப்பாற்பட்டவர்கள்.
அவர்களின் பரிசுத்தம்
நம்மால் அங்கீகரிக்கப்படுவதில்லை.

பைத்தியங்களின் மொழி கனவுகளால் ஆனதல்ல.
வேறொரு யதார்த்தத்தினுடையது.
அவர்களின் சிநேகம் நிலவைப் போன்றது,
பௌர்ணமியன்று அது உருகி வழிகிறது.
மேலே பார்க்கும்போது
அவர்கள் காண்பது நாம்
கேட்டேயறியாத தேவதைகளின் மொழியைத்தான்.
அவர்கள் சிலிர்ப்பதாய் நாம் நினைப்பது
சூன்யமான சிறகுகள் உதிரும்போதுதான்.
ஈக்களுக்கும் ஆத்மா உண்டென்று அவர்கள் நினைக்கிறார்கள்.

வெட்டுக்கிளியின் தேவன் பச்சை நிறத்தில்
நீண்ட கால்களுடன் குதித்து
நடக்கிறான் என்றும் கருதுகிறார்கள்.
சிலசமயம் மரங்களிலிருந்து
குருதி கொட்டுவதைக் காண்கிறார்கள்.
சிலசமயம் தெருவில் நின்று
சிங்கங்கள் கர்ஜிப்பதைக் காண்கிறார்கள்.
சிலசமயம் பூனையின் கண்களில்
சொர்க்கம் ஜொலிப்பதைக் காண்கிறார்கள்.
இந்த விஷயங்களில் அவர்களும் நம்மைப் போலத்தான்.

ஆனாலும் எறும்புகள் கூட்டம் சேர்ந்து பாடுவதை
அவர்களால் மட்டுமே கேட்க இயலும்.
அவர்கள் சூன்யத்தில் விரல் அசைக்கும்போது
நடுக்கடலிலே சுழற் காற்றினை
தன் வயப்படுத்துவது போலவும்,
கால் அழுத்தி உதைக்கும் போது
ஜப்பானின் எரிமலையை வெடித்துச்
சிதறாமல் காப்பது போலவும்,
நினைக்கிறார்கள்.

பைத்தியக்காரர்களின் நேரம் வேறு.
நம்முடைய ஒரு நூற்றாண்டு
அவர்களுக்கு ஒரு நொடி மட்டுமே.
இருபது நொடி போதும்,
அவர்கள் கிறிஸ்துவைச் சென்றடைய.
ஆறு நொடிதான்
புத்தனுக்குச் செல்ல.
ஒரு பகல் போதும்
வெடித்துச் சிதறிய
ஆதித்துகள்களை உணர.
பூமி கொதித்து உருகுவதால்தான்
அவர்கள் எங்கேயும் இருக்க முடியாமல்
நடந்து கொண்டேயிருக்கிறார்கள்.

பைத்தியக்காரர்கள்
பைத்தியங்கள் அல்ல,
நம்மைப் போல.

 

Monday, November 2, 2020

தோழிமார் கதை.

.ஆத்தோரம் பூத்த மரம்

ஆனை அடங்குமரம்
கெளையெல்லாம் கூடுகட்டி
கிளியடையும் புங்கமரம்..
புங்கமரத்தடியில்
பூவிழுந்த மணல்வெளியில்
பேன்பார்த்த சிறுவயசு
பெண்ணே நெனவிருக்கா.?
சிறுக்கிமக பாவாடை
சீக்கிரமா அவுறுதுன்னு
இறுக்கிமுடிபோட்டு
எங்காத்தா கட்டிவிட..
பட்டுச் சிறுகயிறு
பட்டஇடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில் நீ
எண்ணைவெச்சே நெனவிருக்கா.?
கருவாட்டுப் பானையில
சிலுவாட்டுக் காசெடுத்து
கோணார் கடைதேடிக்
குச்சிஐசு ஒன்னுவாங்கி
நாந்திங்க நீகொடுக்க
நீதிங்க நாங்கொடுக்க..
கலங்கிய ஐஸ்குச்சி
கலர்கலராக் கண்ணீர்விட.
பல்லால்கடிச்சுப்
பங்குபோட்ட வேளையில
வீதிமண்ணில் ரெண்டுதுண்டு விழுந்திருச்சே நெனவிருக்கா.?
கண்ணாமூச்சி ஆடையில
கால்க்கொலுச நீதொலைக்க
சூடுவைப்பா கெழவின்னு
சொல்லிசொல்லி நீஅழுக..
எங்காலுக் கொலுசெடுத்து
உனக்குப் போட்டனுப்பிவிட்டு
என்வீட்டில் நொக்குப்பெத்தேன்
ஏண்டீ நெனவிருக்கா?
வெள்ளாறு சலசலக்க
வெயில்போல நிலவடிக்க
பல்லாங்குழிஆடையில
பருவம் திறந்துவிட..
என்னமோ ஏதோன்னு
பதறிப்போய் நானழுக
விறுவிறுன்னு கொண்டாந்து
வீடுசேர்த்தே நெனவிருக்கா.?
ஒன்னா வளந்தோம்
ஒருதட்டில் சோறுதின்னோம்
பிரியாதிருக்க ஒரு
பெரியவழி யோசிச்சோம்..
ஒரு புருஷன்கட்டி
ஒரு வீட்டில்குடியிருந்து
சக்களத்தியா வாழச்
சம்மதிச்சோம் நெனவிருக்கா.?
ஆடு கனவுகண்டா
அருவா அறியாது
புழுவெல்லாம் கனவுகண்டா
கொழுவுக்குப் புரியாது..
எப்படியோ பிரிவானோம்
இடிவிழுந்த ஓடானோம்.!
வறட்டூரு தாண்டி
வாக்கப்பட்டு நாம்போக..
தண்ணியில்லாக் காட்டுக்குத்
தாலிகட்டி நீபோக
எம்புள்ள எம்புருசன்
எம்பொழப்பு என்னோட..
உம்புள்ள உம்புருசன்
உம்பொழப்பு உன்னோட..
நாளும் கடந்திருச்சு
நரைகூட விழுந்திருச்சு..
வயித்துல வளந்தகொடி
வயசுக்கு வந்திருச்சு
ஆத்தோரம் பூத்தமரம்
ஆனையடங்கும் புங்கமரம்
போன வருசத்துப்
புயல்காத்தில் சாஞ்சிருச்சு!!
-- கவிப்பேரரசு வைரமுத்து.

Wednesday, October 28, 2020

தெரு நாய்கள் விதிமுறைகளற்ற வாழ்க்கை


தெருநாய்களுக்கு பெயரேதுமில்லை
எஜமானர்களுமில்லை
அதனால் யாருடைய கால்களையும் நக்க வேண்டியதுமில்லை
யாருக்காகவும் குரைக்கவோ  வாலை ஆட்டவோ
யாருடைய வீட்டிலும்
யாருக்காகவும் கிடந்து தூங்கவோ வேண்டியதில்லை.
யாருடைய பானைச் சோற்றையும் நம்பியும் அவை இல்லை
வீடன்றி வேறிடம் நோக்கிச் செல்லக் கூடாதென்ற
விதிமுறைகள் ஏதுமில்லை.
பொழுதோ வேளையோ என்றேதுமில்லை
கழுத்தில் சங்கிலியாபரணமோ
கடிவாளமோ அடைகூடோ ஒன்றுமேயில்லை.
என்றாலும் அவற்றின் வாழ்க்கை அப்படியொன்றும்
கெட்டு விடுவதில்லை
ஊரிலும் நகரிலும்
மனிதரைச் சார்ந்திருந்தாலும்
மனிதர்களைச் சார்ந்திருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை ஒருபோதும்
எதன் பொருட்டாயும் காடேகி வாழ்வதுமில்லை
கூடவும் குலவிச் சேரவும் ஆயிரம் உறவுகளுண்டு
செல்லுமிடமோ திசையெல்லாம் விரிந்து கிடக்கிறது
சொர்க்கமும் சுதந்திரமும் 
காலடியில் கொட்டிக் கிடக்கிறது
விதிமுறைகளற்ற வாழ்க்கை
சித்திப்பது எத்தனை அழகு! Karunakaran Sivarasa

Monday, September 21, 2020

நெடுமரங்கட்கு ஓர் அஞ்சலி


புற்களை விரும்பிக் கால்கள் பதிப்பீர்
குட்டைச் செடி களை உதைத்து மிதிப்பீர்
நிமிர்ந்த நெடுமரம் வணங்க மறுக்கும்
கொடுவாள் ஏந்தி வெட்டிச் சரிப்பீர்
விதைகளினின்றும் வேர்களினின்றும் மரங்கள் விளையும் விந்தை அறியா மூடர் நீவிர்
கையில் ஏந்திய ஆயுதங் கனத்து
இரும்பு நெகிழ்ந்து கயிறாய்த் திரிந்து
கையைப் பிணைத்துங் கழுத்தை நெரிக்கையில்
விழுந்த மரங்கள் வனமெனச் சூழும்
-பேராசிரியர் சிவசேகரம்
‘தேவி எழுந்தாள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து.

Saturday, June 27, 2020

மலர்தல்



நிலாவென
நான்
ஒளிர்வதாகக் கூறுகிறாய்
சூரியனாய் இருந்து கொண்டு

என்
நினைவின் அடுக்குகளில்
எத்தனையோ கதைகள்
பொதிந்துள்ளன

நிலா இரவுகள்
அன்று இருந்தது போல்
இல்லை

பால்யம்
கடந்த இந்த இரவுகளில்

பாட்டிகளின்
மரபில்
வந்து போன இளவரசனாய்

ஏழு குதிரைகளில்
நீ
வருகையில்

சூர்யகாந்தியாய்
மலர்கிறேன்

நிலா ஒளிரும் பொழுதிலும் .

Sakthi Jothi

Sunday, March 29, 2020

எனக்குப்பிடித்த கவிதைகள்



1. "ரேசன் கடைக்காரருக்கு
குழந்தை பிறந்தது....
எடை குறைவாக...!"

2. "வராந்தாவிலேயே
இருந்த
வயதான தந்தை....

இறந்த பின் 
ஹாலுக்குள் வந்தார்
புகைப்படமாய்...!"

3. “வீட்டின் பெயரோ
அன்னை இல்லம்..!

அன்னை இருப்பதோ
முதியோர் இல்லம்..!”

4. " புறாக்கள் வளர்க்கும் 
எதிர் வீட்டுக்காரர் 
என்னிடமிருந்து பறிக்கிறார் 
பூனை வளர்க்கும் 
சுதந்திரத்தை...." 
- நா. முத்துக்குமார்.

5. " பறித்த மலரை 
ஆண்டவனுக்குச் சூட்டினாலென்ன? 
கல்லறையில் வைத்தாலென்ன?

மலருக்கென்னவோ 
பறித்ததுமே வந்துவிட்டது 
மரணம் ! "

6. “சர்க்கரை இல்லை...
கொழுப்பு இல்லை...
எஜமானரோடு
வாக்கிங்
போகுது
ஜிம்மி...!”

7. "வேலிக்கு வெளியே 
தலையை நீட்டிய என் 
கிளைகளை வெட்டிய 
தோட்டக்காரனே...!

வேலிக்கு அடியில் 
நழுவும் என் வேர்களை 
என்ன செய்வாய்...?" 
-- மு. மேத்தா.

8. "ஒவ்வொரு முறையும் அவன் அவளை 
பிறந்த வீட்டுக்கு அனுப்பும் போதெல்லாம் 
திரும்பவும் அவர்களை 
ஒன்று சேர்த்து வைக்கிறது 
ஹோட்டல் சாம்பார்!" 
-S. செல்வகுமார்

9. "பேருந்தில் 
சிதறுகிறது நாணயங்கள்.... 
தேடலுக்குப்பிறகு 
கிடைத்தன.... 
சில நாணயங்கள் 
தொலைந்தன... 
சிலர் நாணயங்கள்...!" 


10. "கோழித்திருடனை
ஜெயில்ல போட்டாங்க...
ஜெயில்ல அவனுக்கு
கோழிக்கறி போட்டாங்க..!"
- ஒப்பிலான்.

11. "மாங்கல்யத்தின் மகிமையை 
மனைவி அறிவாள் …
மணவாளன் அறிவான் …
அவர்கள் இருவரையும் விட 
மார்வாடியே 
அதிகம் அறிவான்...!' 
-- கவிஞர் தமிழன்பன்.

12. "காற்றில் பறந்து
பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கிய
நடனம் முடியவில்லை !"

Sunday, January 5, 2020

மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதைகள் 11 புத்தகங்கள்

மனுஷ்ய புத்திரன் (பிறப்பு:மார்ச் 151968) என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கிய இவர் கடந்த 20 ஆண்டுகளாக பத்திரிகை ஆசிரியர், தமிழின் மிக முக்கிய கவிஞர் , இலக்கியவாதி என பல்வேறு இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது சென்னையில் வசிக்கும் இவர் உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழ் போன்றவற்றை நடத்தி வருகிறார்.




“மனுஷ்யபுத்திரன் கவிதைகள் இயல்பாக அமைவதற்குக் காரணம் அவரது உரையாடல் தன்மைதான் என்று எனக்குப் படுகிறது. அந்த முன்னிலை அவருக்கு தன்னைத் தொகுத்துக் கொள்ளவும் தெளிவாக அடுக்கி முன்வைக்கவும் உதவும் மையமாக உள்ளது. அவர் கவிதைகளின் தனித்தன்மையும் சிறப்பும் இதுவாகும்.”


 ஜெயமோகன்
அளித்தலும் ஏற்றலும்
.......
'இந்த நேரத்தில் உங்களுக்கு
ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்' என்றான் தயங்கித் தயங்கி
நான் இருமலைக் கட்டுப்படுத்திக்கொண்டு

மெல்ல எழுந்து உட்கார்ந்தேன்

அவனது கண்கள் அன்பினால்

தளும்பிக்கொண்டிருந்தன.

இனம் புரியாத குற்ற உணர்வினால்

தவித்துக்கொண்டிருந்தான்



எனக்கு மிகப்பெரிய உதவிகள்

தேவையாக இருந்தன

எனக்கு எதுவுமே

தேவையில்லாமலும் இருந்தன

அவனோ மிக எளிய மனிதன்

அவனுக்கே உதவிகள் தேவைப்படலாம்

ஆனால் அவன் பிடிவாதமாக கேட்டுக்கொண்டே இருந்தான்
" சொல்லுங்கள் உங்களுக்கு ஏதாவது செய்ய
என்னை அனுமதியுங்கள்" என்றான்

மறுக்க விரும்பினேன்
ஏதோ ஒன்றை செய்வதைக் காட்டிலும்
உடனிருப்பதற்கு சிறந்த வழிகள் இருக்கின்றன
என்பதைச் சொல்ல விரும்பினேன்
என் மறுப்பின் வழியே
அவனது இயலாமை எதையும் காயப்படுத்திவிடலாகாது என அஞ்சினேன்
நான் அந்தியின் மஞ்சள் ஒளியையையே
மெளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்

நீண்ட யோசனைக்குப் பிறகு
இந்த உலகிலேயே மிகச்சிறிய ஒன்றை
அவனிடம் கேட்டேன்
அது எனக்கு தேவையாக இருந்த ஒன்றுகூட அல்ல
ஆனால் அது அவனை நம்பவைக்க போதுமானதாக இருந்தது
அது ஒரு பறவையிடம்
ஒரு சிறிய இலையைக் கொண்டுவரும்படி
கேட்பதுபோன்றது

அவன் என்னைப் பார்த்துக்கொண்டதற்கான
நிம்மதியை அடைந்தான்
எப்போது வேண்டுமானாலும்
எது வேண்டுமானாலும் கேளுங்கள் என்றான்
பரவசத்துடன்

அளித்தலுக்கும்
ஏற்றலுக்கும் நடுவே
நடுங்குகின்றன
அன்பின் ஆயிரம் சுடர்கள்

காலை 6.05
5.1.2020
மனுஷ்ய புத்திரன்
நம் காலத்தைப் பிளந்து அதனுடைய குருதியைப் பருகத்தந்து கொண்டேயிருக்கிறார் மனுஷ்ய புத்திரன்.

நம்முடைய இந்தக் காலம் சாதாரணமானதல்ல. மிகக் கொடூரமானது. வலி நிரம்பியது. தந்திரங்களாலும் கீழ்மைகளாலும் உருக்குலைக்கப்பட்டது. கண்ணியமற்றது. பொய்மைகளில் திளைத்தது. இப்படியே இந்தக் காலத்தைச் சிதைத்து வைத்திருக்கின்றன நம்மைச்சுற்றியும் நம்முள் ஊடுருவியுமுள்ள ஒவ்வொரு தரப்பும். ஆனாலும் இதை ஒப்புக்கொள்ள மறுத்து மினுக்கம் காட்டுவதற்கே அவை தொடர்ந்தும் முயற்கின்றன. இதற்காகவே நீதி பற்றிய போதனைகளிலும் நியாயங்களைப் பற்றிய கற்பிதங்களிலும் தொடர்ந்தும் இவை ஈடுபடுகின்றன.

இந்தக் காலத்தின் மேன்மையான தருணங்கள் என்பது கணப்பொழுது மின்னலைப்போன்றவை. அல்லது வானவில்லைப்போல சில மணித்துளிகளோடு கரைந்து போகின்றவையாகி விட்டன. இது அறிவின் யுகம், நீதியின் காலம், உரிமைகள் பகிரப்படும் உலகம் என்றெல்லாம் நம்ப வைக்கப்படுகிறோம். ஆனால், இவற்றுக்கு நேர் கீழாகவே நடைமுறைகள் உள்ளன. இதைப் புரிந்து கொண்டாலும் எளிதில் இவற்றை நம்மால் முறியடித்து விட முடிவதில்லை. ஆனாலும் எதிர்ப்புக்குரல்கள் அங்கங்கே எழுந்து கொண்டேயிருக்கின்றன. இது ஒன்றே நமக்கான ஆறுதலும் திருப்தியும்.

எனினும் இதையும் கடந்து அதிகாரத்தின் குரூரம் மிக நுண்ணிய முறையில் பிரயோகிக்கப்படுகிறது. அந்தளவுக்கு நமது சூழலிலுள்ள இன்னொரு தரப்பின் அறிவு அதிகாரத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. நாம் நம்பிக் கொண்டிருக்கும் அறமும் பண்பாடும் சட்டங்களும் ஆட்சியும் மரபும் சமூகமும் எப்படிச் செயற்படுகின்றன? என்ற எண்ணற்ற புதிர் மூட்டங்களில் இதையெல்லாம் ஒரு கலைமனம் எப்படி அணுகுகிறது? இதில் ஒரு கவிமனதின் கொந்தளிப்பு எப்படியானது? என்பதை மிகச் சிறப்பாகக் காட்டுகின்றன மனுஷ்ய புத்திரனின் கவிதைகள். அவரளவுக்கு நம் காலத்தைக் கவிதைகளில் திறந்து காட்டியவர் வேறு யாருமில்லை. இந்தப் பத்தாண்டுகளில் மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதைகள் ஒவ்வொன்றும் இதற்கு நல்ல சாட்சி.

தத்தளிப்பாக, எதிர்ப்புக்குரலாக, காலச்சாட்சியமாக, விமர்சனமாக, வரலாற்றுப் பதிவாக எனப் பல நிலைகளில் இந்தக் கவிதைகளைத் தந்திருக்கிறார் மனுஷ்ய புத்திரன். ஆனால் எந்தக் கவிதையிலும் இயலாமையின் நிழலை அவர் படியவிட்டதில்லை. கழிவிரக்கத்தின் சாயல் தென்பட்டதில்லை. இது அவருடைய இயக்கத்தின் இயல்பென்றே தோன்றுகிறது. அந்த வகையில் மனுஷ்ய புத்திரன் இந்தக் காலமுகத்தையுடையராகி இருக்கிறார்.

இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு சிறிய நிகழ்வும் கூட மனுஷ்ய புத்திரனைத் தீண்டுகின்றன. அதை அவர் உணரும் விதம் மிக ஆச்சரியமூட்டுவது. இதனால்தான் அவரால் எதையும் கவிதையாக எழுதி விட முடிகிறது. இந்தக் காலத்தில் நிகழ்த்தப்படும் அபத்த நாடகங்கள் தருகின்ற அதிர்ச்சியை விடப் பயங்கரமானது அவற்றின் திரைகளை விலக்கும் மனுஷ்ய புத்திரனின் கவிதைச் செயல். இவ்வளவு அநீதிகளின் மத்தியில், இவ்வளவு அபாயங்களின் நடுவில்தான் நாம் உள்ளோம் என்ற உண்மையை உணர்த்துவதன் மூலம் இந்த அதிர்ச்சியை உருவாக்குகிறார் மனுஷ்ய புத்தரன். உறைந்து போயிருக்கும் நம் அசண்டையீனத்தின் மீதும் இயலாமை உருவாக்கியிருக்கும் மௌனத்தின் மீதும் இந்த அதிர்ச்சி சலனங்களை உருவாக்க முனைகிறது. தினமும் பொதுவெளியில் சக மனிதர்களுக்காகவும் பாதுகாப்பானதொரு எதிர்காலத்துக்காகவும் எழுத்தாளனாகத் தொடுக்கின்ற அறத்துக்கான வழக்குகளாக இந்தக் கவிதைகளைக் கொள்ள முடியும்.

சமானியர்கள் தொடக்கம் சமூகத்திலுள்ள ஒவ்வொரு வர்க்கத்தினருக்கும் மனுஷ்ய புத்திரன் ஊட்டுகின்ற ஒளி பெரியது. விழிப்புணர்ச்சியும் அகத்தூண்டலும் மிக வலியன. குறிப்பாகப் பெண்களின் பிரச்சினைகளை உணர்ந்து பேசிக் கௌரப்படுத்தியவை மனுஷ்ய புத்திரனின் கவிதைகள். நகரத்துக்கு வரும் பெண்கள் சிறுநீர் கழிப்பதற்கான இடங்களில் அவஸ்தைப்படுவதிலிருந்து... நம் சமூகச் சூழலில் பெண்கள் படுகின்ற சிரமங்கள், அசௌகரியங்கள், சங்கடங்கள், அவர்களின் மீது நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகள், கொடுமைகள் என ஒவ்வொன்றைப் பற்றியும் நுணுக்கமான முறையில் கவிதைகளில் அவதானிப்புச் செய்திருக்கிறார் மனுஷ்ய புத்திரன்.
அவர்களுடைய ஒவ்வொரு உத்தரிப்புகளையும் மன அவசங்களையும் பற்றிச் சிந்தித்திருக்கிறார். அந்தளவுக்கு பெண்களை, அவர்களின் வாழ்நிலையைப்பற்றி விதவிதமாக பல்வேறு கோணங்களில் எழுதியிருக்கிறார். இந்த வகையில் நவீன தமிழ்க்கவிஞரில் முக்கியமானவராகவும் உள்ளார் மனுஷ்ய புத்திரன். .

இவ்வாறு 1000 கவிதைகளோடு 11 புத்தகங்கள் வருவதென்பது பெரிய விசயமே. வாழ்த்துகள். 
Karunakaran Sivarasa






எனக்கு நானே அளித்துகொண்ட மலர்
.............................
நூற்றுக்கணக்கான கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். இன்று ஏனோ மனம் சற்றே உணர்ச்சிவசப்படுகிறது. ஒரு வேளை நான் இல்லாமலேயே கூட இந்தக் கூட்டம் நடந்திருக்கலாம். வாழ்வின் பெரும் கருணை இன்னும் எங்கோ மிஞ்சியிருக்கிறது. வாழ்வதற்காக எப்போதும் போராடி வந்திருப்பவர்கள் களத்தைவிட்டு அவ்வளவு எளிதில் அகன்றுவிடமாட்டார்கள். எந்த சரிவிலும் பற்றிக்கொள்ள ஒரு பிடி மண் கிடைக்கும்.

இந்த நாட்களில் எவ்வளவு அன்பு கிடைத்ததோ அதை சற்றே சமன் செய்ய வெறுப்பும் வன்மங்களும் கிடைத்தன. அந்த வெறுப்பிற்குப் பின்னே எந்த இலக்கிய சமூக மதிப்பீடுகளும் இல்லை. பொறாமையிலிருந்தும் ஆற்றாமையிலிருந்தும் பெருகும் கசப்பு அது. நான் செய்யும் வேலைகளும், எனக்குக் கிடைத்த சிறிய அடையாளங்களும் என்னை நானே அழித்துக்கொண்டு எனக்கென்று எந்த தனிப்பட்ட வாழ்க்கையும் இல்லாமல் உருவாக்கிகொண்டவை..



கடந்த ஓராண்டில் 1150 கவிதைகளை 1700 பக்கங்களில் எழுதிய பிறகும் இதோ இன்று அதிகாலைநான்கு மணியிலிருந்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். இந்தப் பைத்திய நிலைக்காக கொடுத்தவிலைகள் கொஞ்சமல்ல. சொந்த வாழ்க்கையிலும் சமூக இலக்கிய வாழ்க்கையிலும் எவ்வளவு அவமானங்கள், இழப்புகள். ஆனால் நான் சாகும்வரை இதைத்தான் செய்வேன். இன்னும் கொஞ்சம் இதற்காக் என்னை எரித்துக்கொள்வேன். ஒவ்வொரு கவிதையையும் யாரோ ஒரு வாசகனோ வாசகியோ ’இது என் இதயத்தின் ரகசியம்’ என கண்ணீர் மல்க சொல்லும்போது நான் செய்யும் வேலைக்கான அர்த்தம் கிடைக்கிறது.

பொதுவாக என் புத்தக வெளியீட்டு விழாக்களில் நான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. அன்றைக்கு என ஏதாவது ஒரு துயரம் என்னைத் துரத்தும். மனம் வாடிப்போவேன். ஆனால் இன்று நான் பிடிவாதமாக உற்சாகமாக் இருக்க விரும்புகிறேன். நான் ஒரு பெரிய வேலை செய்தேன் என்ற நிறைவின் நிமித்தமாக. எனக்கு நானே ஒரு சிறிய மலரை அளித்துக்கொள்கிறேன்.
என்மீது யாருகேனும் ஏதேனும் வருத்தங்கள் இருக்கலாம். சொற்களின் பைத்திய நிலையில் வாழ்பவன் என்பதால் மன்னிக்கலாம்தானே . எழுதுகிறவனுக்கு கிடைப்பது ஒன்றுமில்லை. இந்தப் பெருந்தனிமை உணர்ச்சியைத் தவிர
என் நேசத்திற்குரியவர்கள் இந்த நாளில் என்னோடு இருப்பது நான் இன்னும் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை எனக்குத் தருகிறது

மனுஷ்ய புத்திரன்
5.1.2020

Thursday, August 15, 2019

வேசங்கள் தரித்தலின்றி சாத்தியமற்றது வாழ்வு



வேசங்கள் தரித்தபடிதான்
நமக்கு வாய்க்கப்பட்ட இவ்வாழ்வினை
நகர்த்தித் தொலைய வேண்டியிருக்கிறது
அன்றி நிர்ப்பந்தத்திற்குள்ளாகிறோம்
நம்மை கடந்து செல்பவர்களை
அல்லது நாம் கடந்து செல்பவர்களை
நிறைய சமாளிக்க வேண்டி நேரிடுகிறது
சில சமயம் மழுப்பவும் தோணூகிறது
அவர்கள் என்ன நினைத்து விடுவார்களென்றே
பாதி வாழ்க்கை ஐயத்துடனும்
மீதி வாழ்க்கை பதட்டத்துடனும் கழிகிறது
மிக நெருக்கடியான தருணங்களில்
தப்பித்துச் செல்வதற்காக
கள்ளச் சாட்டுகளை முன் வைக்கிறோம்
இரத்த உறவுகளுடன் அடிக்கடி ஊடாடும்
தேவைகள் இருப்பதனால்
புதிது புதிதாக முகங்களை
மாற்றி மாற்றி அணிந்து கொள்கிறோம்
சில தருணங்களில்
அவர்களை வசப்படுத்தவென
நேசம் மீந்த வார்த்தைகளை கையாள்கிறோம்
மெருகூட்டிப் பேசுகிறோம்
இயன்றளவு செதுக்கிச் செப்பனிட்டாலும்
கைசேதப்பட்டு நிற்கையில்
காலை வாரிவிட நினைத்தலினிடை
வாழ்தலில் அறமென்பது சாத்தியமற்றதாகிறது
எதிரும் புதிருமான இவ்வாழ்வினை
வேசங்கள் தரிக்காமல் வேறெப்படி
கொண்டு செல்ல முடியுமென கருதுகிறீர்கள்
0
ஜமீல்

இது முதன் முறையல்ல



அவர்கள் ஏலவே திட்டமிட்டபடி
தனித்தனியாகப் பிரிந்தும்
கூட்டம் கூட்டமாகவும்
பலமற்ற விலங்குகளை பிடித்துண்ணும்
கழுதைப் புலிகள் போன்று
எங்கள் பூர்வீக நிலங்களுக்குள்
இருளின் புதரி்ல் பதுங்கியபடி ஊடுருவினர்
முதலில் எங்களது வணக்கஸ்தலங்களை
அடித்து நொறுக்கினர்
புனித நூல்கள் மீதும்
தொழுகை விரி்ப்புகள் மீதும்
காலைக் கிளப்பி மூத்திரம் அடித்தனர்
பின்னர் குடியிருப்புகளுக்குள்ளும்
கடைத் தொகுதிகளுக்குள்ளும்
பரவசத்துடன் நுழைந்தனர்
அங்கு அவர்கள் என்ன அளிச்சாட்டியம்
புரிந்திரிப்பார்களென்று
விபரிக்கத் தேவையில்லையென கருதுகிறேன்
அதற்கான அவகாசமும் என்னிடமில்லை
இவ்வாறு அவர்கள் அத்து மீறி வருவது
இது முதன் முறையல்ல
இதற்கு முன்னரும்
நிறையத் தடவைகள் வந்திருக்கின்றனர்
அவர்கள் வழமைபோல்
எங்களை நெருங்கும்போது
அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தது
ஊரடங்கச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தன
துப்பாக்கிகளை வெளியே நீட்டியபடி
கவச வாகனங்கள் அணியணாயாய் நின்றன
எல்லாவற்றையும் கடந்து
சிப்பாய்களின் தோழ்களில் அமர்ந்தபடி
மிக இலகுவாக தங்களது தாகத்தை
தீர்த்துச் சென்றனர்
அவர்கள் திரும்பிச் செல்லும்போது
அவர்களது கரங்களில்
எங்களது ரத்தம் படிந்திருந்தது
மாறாக அவர்களிடத்தில்
மனசாட்சி இருந்திருக்கவில்லை
நேயம் இருந்திக்கவில்லை
எங்களது வாழ்வை தீக்கிரையாக்கிச் செல்லும்
ஒவ்வொரு தடவையும்
நாங்கள் நிராயுதபாணிகளாகவே நின்றிருந்தோம்
தவிரவும் அன்பை மட்டுமே போதிக்கும்
புத்தனின் சீடர்களுக்கெதிராக
வேறு என்ன செய்யலாமென கருதுகிறீர்கள்
0
ஜமீல்

Monday, August 5, 2019

அந்தரங்கத்தின் முகம்

Karunakaran Sivarasa

அந்தரங்கத்தின் முகத்தை இன்று,
இப்பொழுது,
இதோ இந்தக் கணத்தில் காண்கிறேன்
தலையைச் சற்றுக் குனிந்து
புருவத்தை உயர்த்திப் பார்க்கிறது நம்மை
நமுட்டுச் சிரிப்போடு
அந்தப் பார்வையும் அந்தச் சிரிப்பும்
என்னைத் திறக்கிறது பலவாக
என்னை ஊடுருவுகிறது ஆழத்தில்

இதுவரை எடுத்த எல்லா எக்ஸ்ரேக்களையும் விட
எல்லா ஸ்கான்களையும் விட
இந்த அந்தரங்கத்தின் ஊடுருவல் வலியது...

அந்தரங்கம் மெல்ல உடைக்கிறது ஒவ்வொன்றையும்.
அப்போது நாறி மணப்பதென்ன?
மின்னலாகப் பளிச்சிடுவதென்ன?
ஜில்லெனக் குளிர்வதென்ன?
நெருப்பாகச் சுடுவதென்ன?

எல்லாமே நானே சேகரித்ததா?
அவளுடைய நினைவுகளும் சிரிப்பும்
அந்தக் குதூகலங்களும்...
அந்த இரண்டு பேரையும் கொன்று புதைத்ததும்
முதிராப் பெண்ணைக் கையளைந்த போது
அவள் கண்ணீர்த்துளிகளைக் கண்டு அதிர்ந்ததும்
ஏடன் தோட்டத்தில் யாருமறியாது
பழம் பறித்துப் புசித்ததும்
.........
ஓ...
புலன்களை அடைக்க முற்படுகிறேன்
ஏதோ வாடை தலைக்குள் ஏறுகிறது
கண்களைக் கூசச் செய்யும்
அந்தரங்க ஒளியின் முன்னே நிலையிழக்கிறேன்.

Thursday, August 1, 2019

.தற்கொலை செய்து கொண்ட காஃபிடே உரிமையாளர் சித்தார்தா குறித்து மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதை

படித்ததில் பிடித்தது. கவிஞர் இரா.இரவி.

ஒரு பிரபலமான உணவகத்தை
உருவாக்கிய மனிதன்
தண்டனைக்கைதியாக
மரணமடைந்த நாளில்
பல்லாயிரக்கணக்கானோர்
அந்த உணவகங்களின் தோசைகளை
ருசித்து உண்டுகொண்டிருந்தார்கள்

ஒரு பிரலமான காஃபி ஷாப்பை
உருவாக்கிய மனிதன்
காரை ஒரு பாலத்தின்மேல் நிறுத்திவிட்டு
ஆற்றில் தலைக்குப்புற பாய்ந்த நாளில்
பல்லாயிரக்கணக்கானோர்
அந்த காஃபி ஷாப்களின்
தம் காதலருடனோ நண்பருடனோ
கிசுசுத்த குரலில்
அந்தரங்கமாக உரையாடிக்கொண்டிருந்தார்கள்

ஒரு பிரபலமான பியரை
உருவாக்கிய மனிதன்
நாட்டை விட்டு தலைமறைவாக ஓடிக்கொண்டிருந்தபோது
பல்லாயிரக்கணக்கானோர்
அந்த பியரை நுரைபொங்கத் திறந்து
கிறங்கும் கண்களுடன் அருந்திக்கொண்டிருந்தார்கள்

யாரோ ஒரு பிரபல துணிக்கடை முதலாளின் சொத்துகள்
ஜப்தி செய்யப்படும்போது
பல்லாயிரக்கணக்கானோர்
ஆனந்தமாக அங்கே பண்டிகைக்கு துணிவாங்கிக்கொண்டிருக்கிறார்கள்

யாரோ ஒரு வைரவியபாரி
திவாலானதற்கான மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கும்போது
அவன் விற்ற வைரங்கள்
பல்லாயிரக்கணக்கானோர்
முக்கில் ஒளிமங்காமல் மின்னிக்கொண்டிருக்கின்றன

யாரோ ஒரு நடிகை
மனம் கசந்து நாற்பது தூக்க மாத்திரைகளை
விழுங்கிக்கொண்டிருந்த அந்தியில்
பல்லாயிரக்கணக்கானோர்
திரையில் அவள் ஆடை சற்றே விலகுவதற்காக
பரிதவிப்புடன் காத்திருக்கின்றனர்

எவ்வளவு நிம்மதியானது
ஒரு தோசை சாப்பிடுபவனாக மட்டும் இருப்பது
ஒரு காஃபி அருந்துபவளாக மட்டும் இருப்பது
ஒரு பியர் குடிப்பவனாக மட்டும் இருப்பது
ஒரு வைர மூக்குத்தி அணிபவளாக மட்டும் இருப்பது
ஒரு சட்டை வாங்குபவனாக மட்டும் இருப்பது
திரையங்கில் வெறும் பார்வையளார்களாக மட்டும் இருப்பது

சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கியவர்கள்
அழியும்போது
சாம்ராஜ்ஜியங்கள் அழிவதில்லை
அப்போது அது உருவாக்கியவர்களிடமிருந்து
ஒரு தனித்த உயிரியாக பிரிகிறது
தன்னை உருவாக்கியவர்களை
அது தாட்சண்யமற்று கைவிடுகிறது

நீங்கள் மலையடிவாரங்களில்
உங்கள் ஆடுகளை மேய்க்கும்போது
நிம்மதியாக சற்றே கண்ணயர்கிறீர்கள்

மலைகளை
சுமந்து நடப்பவர்களை
மலைகள் மெல்ல
பூமிக்குள் அழுத்துகின்றன

அருமை... ஹைக்கூ...

R Ravi Ravi

Thursday, January 3, 2019

கதிமாறி ஆடும் ஊசலோ காலம்


காத்திருந்தபோது
காலி அறையில் மாட்டியிருந்த
பழைய
கடிகாரத்தைப்
பார்த்துக்கொண்டிருந்தேன்..

சாவி கொடுக்க மறந்தது போல
நேரம் நகரவேயில்லை

சந்தித்தபோது
நிமிர்ந்து பார்க்கவும்
தோன்றவில்லை
பரவசத்தில்
படபடக்கும் மனத்தை
நிதானம்
நிதானமென
சமாதானப்படுத்துகிறது
மணிக்கட்டு
நாடித் துடிப்பு
நினைவிற்கும்
மறதிக்கும் நடுவே
கதிமாறி
ஆடும் ஊசலோ
காலம்

 Sakthi Jothi

Tuesday, October 9, 2018

விசம்...........


அலங்கரிக்கப்பட்ட
கழிவுகளை
கவர்ந்திழுக்க்கிறது
கண்கள்.

தேவையானவை
தேவையற்றுப்போக
தேவையற்றவை
தேவையாகிப்போனது
எனக்கு.
என்
உயிரணுக்கள்
ஒவ்வொன்றுக்குள்ளும்
ஒளித்து வைக்கப்படுகிறது
விசம் .
காலை
அருந்தும்
தேநீருடன்
ஆரம்பிக்கிறது
என்
அழிவு.
நஞ்சுகளை
தின்று தின்றே
நகர்கின்றன
என்
நாட்கள்
விசத்தையும்
கொடுத்து
விசம் முறிக்க
மருந்தையும்
கொடுத்து
என்னிடம்
வெற்றிகொள்கிறது
வியாபாரம்.
என்
கடைசி
மூச்சைக்கூட
முதலாளிகள்தானே
முடிவு செய்கின்றனர்
பஞ்ச
பூதங்களையும்
பாழாக்கிவிட்டு
நஞ்சை
வேளாண்மை
செய்கிறது
விஞ்ஞானம்.
இயற்கையின்
கதவுகளை
மூடிவிட்டு
இரசாயனங்களுக்குள்
இழுக்கப்படுகிறேன்
நான்.
முப்பாட்டன்
காலத்து
முறைகளையெல்லாம்
மூட்டிகட்டிவிட்டு
கண்ட கண்ட
கன்றாவிகளுக்குள்
கரைந்துவிடுகின்றேன்
நாளும்.
எழுபது
வயதில்
வரவேண்டியவை
எல்லாம்
ஏழு வயதிலேயே
வர
நாற்பது
வயதுக்குள்ளாகவே
நரகத்துள்
விழுகிறேன்.
வீதிக்கொரு
வைத்தியசாலை
வீட்டுக்கொரு
மருந்தகம்....
அனுபவிக்கப்போகிறது
அடுத்த
தலைமுறை.
ஆரோக்கியவான்களை
இனி
அகராதியில்
மட்டுமே
பார்க்கலாம்.....
Sivaratnam Navatharan

Monday, October 8, 2018

கவிதையியல் அல்லது அழகியல் செயல்பாடு

ஒரு மொழிதலில் இருக்கும் ஆறு அம்சங்களில் மேலாதிக்கம் செலுத்தும் ஒன்று வேறுபட்ட மொழியியல் செயல்பாட்டைக் கொண்டிருப்பதாக யாக்கப்சனின் மொழியியல் தகவல்தொடர்பு மாதிரியில் விளக்கப்படுகிறது. மொழிதல்களில் கவிதையியல் செயல்பாடு மேலாதிக்கம் செலுத்தினால்(உதாரணமாக இலக்கியப் பிரதிகள்), மொழி அதிகம் ‘இருண்மை’ மிக்கதாகவும் குறிப்பான் மற்றும் ஊடகத்தை(மற்றும் அதன் பொருளாம்சாம் உட்பட) அல்லது வடிவம், பாணி அல்லது சங்கேதம் போன்றவற்றில் குறைந்தபட்சம் குறிப்பீடு, உள்ளடக்கம், ‘தகவல்’ அல்லது குறிப்பால் உணர்த்தும் பொருள் போன்றவற்றை வலியறுத்துவதாகவும் மரபுரீதியான உரையாக இல்லாமலும் இருக்கும்.
அது போன்ற பிரதிகள் வெளிப்பாட்டின் வடிவம் மற்றும் வினையை முன்வைப்பதாகவும் ‘இயற்கையான’ அல்லது ‘ஊடுருவத்தக்க’ உறவாக குறிப்பான் மற்றும் அதன் குறிப்புப் பொருளைக் குறைத்துக் காட்டுவதாகவும் இருக்கும். இந்தப் பொருளில், கவிதையியல் செயல்பாடு மேலாதிக்கம் செலுத்தும் பிரதி சுய-குறிப்புப் பொருளாக உள்ளது: வடிவமே உள்ளடக்கம் மற்றும் ‘ஊடகமே(அல்லது மொழியே) அதன் தகவல்’.
யாக்கப்சனின் மாதிரியை முன் வைத்து பின்னர் வளர்க்கப்பட்ட மாதிரிகளில் கவிதையியல் செயல்பாடு முறையான செயல்பாடாகக் கொள்ளப்பட்டது. கவிதையியல் செயல்பாடு ஆகுபெயராக அல்லாமல் அதிமான உருவகமாகவும் புறப்பொருளைச் சுட்டாமல் அதிகமான அகப்பொருளைக் கொண்டும் இருக்கும்.
பல்பொருள்:பிரதியியல் நியமனவாதத்தை(உதாரணமாக பின்அமைப்பியல்வாதிகள்) மறுப்பவர்கள், பிரதிகளின் ‘பல்பொருள்’ இயல்பை வலியுறுத்துகிறார்கள்-பன்மை பொருள்களைக் கொண்டதாகக் கூறுகிறார்கள்.
பல்குரல்கள்:ஒற்றைக் குரலுக்கு மாற்றாக ஒரு பிரதியின் கதையாடலில் இருக்கும் பல்குரல்கள் ஒரு விருப்பப்பட்ட வாசிப்பு அல்லாமல் பல்வேறு வகைப்பட்ட வாசிப்புகளை ஊக்குவிக்கின்றன.
பின்நவீனத்துவம்:இந்த வழுக்கும் சொல், நவீன காலத்திற்குப் பிந்தையதாகவும் பின்அமைப்பியலுடன் இயைந்து வந்த தத்துவமாகவும், கட்டுடைப்பு, முற்போக்கு ஐயமுறு வாதம், உறவுவாதம் போன்றவற்றுடன் முரண் அடிப்படை நிலைப்பாட்டைப் பகிர்வதுமான ஒன்றாகவே கொள்ளப்படுகிறது. விளக்கத்தை எதிர்க்கும் விளக்கமாகவே பின்நவீனத்துவம் இருப்பது அவலம்.
ஓர் ஒற்றை ‘கோட்பாட்டை’க் கொண்டதாக பின்நவீனத்துவத்தைக் கூறமுடியாது(குறித்தலுக்கு வெளியே எந்த ஓர் உண்மையும் இருப்பதாக எந்த ஒரு பின்நவீனத்துவக் கோட்பாட்டாளரும் கூறவில்லை). ‘பின்நவீனத்துவ’ அழகியல் ‘இயக்கம்’ எதுவும் இல்லை. பின்நவீனத்துவம் அதிகமான முறிவுகளைக் கொண்டதாகவும் பன்முகம் கொண்டதாகவும் உள்ளதாகும். இருந்தாலும், பின்நவீனத்துவ பிரதிகள் மற்றும் நடைமுறைகளின் பண்பில் உள்ள அம்சங்கள் அவலம் மற்றும் அதிகப்படியான உட்பிரதியியலைப் பிரதிபலிப்பவையாக இருப்பதாகும்-பிரதிகளுக்கு, வகைமைகளுக்கு, ஊடகங்களுக்கு இடையே உள்ள எல்லைகள் மங்கி பிரதியின் கட்டமைப்பு மற்றும் கட்டமைக்கப்பட்டச் செயல்பாடு மீது மட்டும் கவனத்தைக் குவிப்பவையாக உள்ளன.
வெகுஜன கலாச்சாரத்தையும் ‘தீய ரசனையை’ உள்ளிழுப்பதாகவும் இருப்பதால் நவீனத்துவத்திலிருந்து பின்நவீனத்துவம் வேறுபடுகிறது. லியோடார்ட் 1979ல் எழுதிய ‘பின்நவீனத்துவ நிலை’ என்ற நூலிலிருந்து அதன் காலம் கணக்கிடப்படுவதாகவும் சில சமயங்களில் தோன்றுகிறது. அதிலிருந்து ‘மீமெய் கதையாடல்களின் மீதான அவநம்பிக்கையை’க் காட்டுவதாக பின்நவீனத்துவ கோட்பாடு கொள்ளப்படுகிறது.

Mubeen Sadhika

Monday, September 17, 2018

முதல் லெஸ்பியன் கவி என்று புகழப்படும் சாப்போவின் 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டகவிதை

முதல் லெஸ்பியன் கவி என்று புகழப்படும் சாப்போவின் 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட, காதலின் முழுமையும் வசீகரமும் நிறைந்த கவிதை

Sappho seemingly penned these lines to a female lover in the seventh century BC, becoming one of the first notable lesbian poets in the process. In fact, the word "lesbian" derives from the name of her home: the island of Lesbos. Since Sappho's time, many famous lesbian poets have followed in her spiritual footsteps.



அவன் ஒரு கதாநாயகனை விட மேலானவன்
என்னுடைய கண்களில் அவன் ஒரு கடவுள்
உன்னருகில் உட்கார அனுமதிக்கப்படும் அந்த ஆள்
தூண்டும் உன்னுடைய குரலின்
இனிமையான முணுமுணுப்புகளை நெருக்கமாக
கேட்டுக்கொண்டிருக்கிறானே
சிரிப்பு என்னுடைய இதயத்துடிப்பையே
வேகமாக்குகிறது
உன்னைத் திடீரென்று சந்தித்தால்
என்னால் பேச முடியாது
என்னுடைய நாக்கு உடைந்திருக்கிறது
மெல்லிய தீக்கொழுந்து என்னுடைய
சருமத்தின் அடியில் பாய்கிறது
எதையுமே என்னால் பார்க்கமுடியவில்லை
என்னுடைய செவிப்பறைகள் தாளமிடுவதையே
கேட்கிறேன்
நான் வியர்வை வடிய நிற்கிறேன்
நடுக்கம் என்னுடைய உடலை அசைக்கிறது
உலர்ந்த புல்லை வெளுப்பாக மாற்றுகிறது
அது மாதிரியான நேரங்களில்
மரணம் என்னிலிருந்து தூரத்தில் இல்லை.
Kutti Revathi