Search This Blog

Wednesday, July 26, 2023

படித்து உருப்படாமல் போகிற வர்க்கம்

 

கல்வி தான் மனித குலத்தை ஏழ்மையில் இருந்து காப்பாற்றும், விடுவிக்கும் போன்ற புத்தொளிக் கால லட்சியங்கள் பாதி உண்மை மட்டுமே.
சொல்லப் போனால் கல்வி நம்மை ஒரு பொறிக்குள் மாட்ட வைத்துவிடும் எனத் தோன்றுகிறது. நான் இதை என் வாழ்க்கையில் இருந்தே புரிந்துகொண்டேன், ஏனென்றால் இன்னமும் சமூக சிந்தனையாளர்களும் கல்வியாளர்களும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
நாட்டை ஆள்பவர்கள் பொரும்பாலானவர்கள் படித்தவர்கள் அல்ல. படிப்பின் காலம் முடிந்துவிட்டதெனத் தோன்றுகிறது.
இன்னொரு பக்கம் கல்வி நம்மை பொருளாதார ரீதியாக முடக்கி விடுகிறது. அது நமது சம்பாத்திய திறன் குறித்து ஒரு தாழ்வுணர்வை ஏற்படுத்துகிறது.
உதாரணம் மாதச் சம்பளத்திற்கு வேலைசெய்யும் ஒருவரிற்கு ஒரு லட்சம் வேண்டுமெனில் அவர் தன் ஊதியம் என்ன, செலவீனம் என்னவென கணக்கிட்டு பணத்தை சேர்த்து வைத்து அதை ஈட்ட வேண்டும். அதற்கு நேரம் எடுக்கும். ஒருவேளை எதிர்பாரா செலவுகள் வந்தால் அவரது இலக்கு இன்னும் தள்ளிப் போகும். உடனே கடன் வாங்குவார்.
ஆனால் பணத்துக்கு மாத வருமான வேலையை நம்பியிராதவர்களுக்கு வேறு நூறு வழிகள் பணம் ஈட்டத் தெரிகின்றன. அவர்கள் கடன் வாங்கினால் அது தம் வணிகத்தை மேம்படுத்தவோ அல்லது நட்டத்தில் இருந்து வெளிவரவோ தான் வாங்குவார்கள்.
வேலைக்கு போகும் ஒருவர் ஆண்டு முழுக்க போராடி சேர்க்கும் பணத்தை அவர்களால் சில நாட்களில் சம்பாதிக்க முடியும், முடியாமலும் போகலாம், ஆனால் ஒரு சாத்தியம் அவர்களுக்குத் தெரிகிறது, அது இவர்களிற்கு தெரியாது.
படிப்பைக் கொண்டு ஒருவர் ஏழை நிலையில் இருந்து மத்திய வர்க்கத்திற்கு போய் விடுகிறார். ஆனால் அதன் பிறகு அவர் தேங்கி விடுவார். பொருளாதாரம் சுணங்கினால் அவருடைய சம்பளம், வேலையில் வளர்ச்சி இல்லாமல் ஆகும். அவரது பிள்ளைகளும் பெரும்பாலும் மத்திய வர்க்கமாகவே இருப்பார்கள். இதை இன்று மத்திய வர்க்கப் பொறி என்கிறார்கள்.
எமது நாட்டில் ஏழைகளை விட மத்திய வர்க்கமே மிகப்பெரிதாக இருப்பது இதனால் தான்.
ஏனென்றால் படிப்பு நாம் செல்வந்தர் ஆகவோ சுதந்திரமாக இருக்கவோ சொல்லித் தரப்படுவதில்லை.
பாடசாலையிலோ, பல்கலைக்கழகத்திலோ நீங்கள் எப்படி பணக்காரர் ஆவது என சொல்லித் தர மாட்டார்கள். எப்படி ஒருவரிடம் வேலை பார்ப்பது என்றே சொல்லித் தருவார்கள்.
கல்வியின் நோக்கமே மத்திய வர்க்க அடிமைகளை உருவாக்குவது தானோ எனத் தோன்றுகிறது. அந்த உண்மையை எதிர்கொள்ள விரும்பாமலே நாம் கல்வியின் மகத்துவம், விடுதலை மார்க்கம், அறிவின் சிறப்பு என கதையழந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு பெரும் உலகம் நம்மைச் சுற்றி உள்ளதை நாம் கவனிப்பதில்லை. படிக்க படிக்க நாம் உண்மையில் இருந்து விலகிக் கொண்டே போகிறோம்.
படிக்காதவர்கள் எதில் பணம், எது எதிர்காலம் என்பதில் கூடுதல் தெளிவாக இருக்கிறார்கள்.
அடிமட்ட வணிகர்களில் பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள் உண்டு. ஆனால் அவர்களுக்கு சாமர்த்தியமும் ஆதரவும் இருந்தால் முன்னேறும் வாய்ப்புகள் பிரகாசமானவை. மத்திய வர்க்க ஊழியர்களுக்கோ அப்படி எந்த எதிர்காலமும் இல்லை. அவர்கள் வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியாக பொந்துக்கள் வாழும் எலிகளே. கடன், கடனுக்கு மேல் கடன் என எச்சிற் பருக்கைகளை நம்பி இருட்டில் ஒளிந்திருப்பவர்களே. ஒவ்வொரு அரசாங்கமும் வரியை அதிகப்படுத்துகையில் மென்னி நெரிக்கப்படுபவர்களே. எதையும் துணிந்து செய்யும் சொல்லும் துணிச்சல் அற்றவர்களே.
இந்த அடிப்படையான உண்மை அறிந்தவரக்ள் மேல்தட்டை சேர்ந்த வணிக சமூகங்கமே. அவர்களே அரசாங்கத்தின் மேல் அமர்ந்து கட்டுப்படுத்துகிறார்கள். மிகச்சொற்பமாகப் படித்த அவர்களிடம் மிகப்பெரிய படிப்பாளிகள் கைகட்டி நிற்கிறார்கள் என்பதே எதார்த்தம்.
நம் கல்வியமைப்பு இந்த அடிப்படை உண்மையை எல்லாருக்கும் சொல்லித் தந்தால் நம் மக்கள் மிக வேகமாக வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.
பௌதீக உலகுக்கு வெளியே நாம் கற்கும் அத்தனை அறிவுகளும் ஒருவித சுயகிளர்ச்சிக்கான விளையாட்டு மட்டுமே எனத் தோன்றுகிறது.
கல்வி சமத்துவத்தை, சுதந்திரத்தை, விடுதலையைத் தருகிறதா? இல்லையென்பேன். அதிகாரமும் பணமுமே இவற்றைத் தருகிறது.
அதிகாரத்தையும் பணத்தையும் கல்வியைக் கொண்டு அடைய முடியாது. வணிகம் பணத்தையும், அரசியல் அதிகாரத்தைத் தருகிறது.
அரசியலில் மிக அதிகமாக படித்தவர்கள் மக்களிடம் இருந்து விலகி இருப்பதால் அவர்கள் வெற்றி பெறுவதில்லை. அதிகாரத்தையோ பொருளாதார ஸ்திரத்தன்மையையோ அடைவதில்லை.
பண்பாட்டு அறிவை எடுத்துக் கொண்டால் படித்தவர்கள் ஒருவித மீபொருண்மை, கடப்புநிலைவாதத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் - அவர்கள் தமக்காக அன்றி இல்லாத அருவங்களுக்காக வாழ்கிறார்கள். அவர்கள் பயந்தாங்கொள்ளிகளாக இருக்கிறார்கள்.
கல்வியும் வேலையும் உலகம் முழுக்க மனிதனின் முதுகெலும்பை உடைத்துவிடுகின்றன.
படித்து காற்சட்டை அல்லது சேலை கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேலைக்குப் போகிறவர்களை விட அழுக்கு சாரம் அல்லது சட்டையுடன் மூலைக்கு மூலை காய்கறி/ மீன் விற்பவர்களே மேலானவர்கள் என நினைக்கிறேன்.
இந்த காற்சட்டை கோஷ்டி நம் பொருளாதாரத்தில் சிறிய சலனம் ஏற்பட்டால் வீட்டில் வேலையின்றி உட்கார்வார்கள், ஒவ்வொரு இடமாக வேலை கேட்டு அலைவார்கள், ஆனால் இந்த காய்கறி/ மீன் வியாபாரிகள் அழியவே மாட்டாரக்ள்.
இத்தனை இத்தனை அடிமைகளை உற்பத்தி செய்யும் கல்வியமைப்பில் பல்கலைக்கழகப் படிப்பிற்காக ஒரு குழந்தை தன் வாழ்வின் முதல் 25, 26 ஆண்டுகளை வீண் உழைப்பில் செலுத்துவதை நாம் ஏன் இவ்வளவு கொண்டாடுகிறோம் என எனக்குப் புரியவில்லை.
Thanks

Thirunavukkarasu Senthan

No comments:

Post a Comment