1. 26.11.2018 வெள்ளிக்கிழமை இரவு மகிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை அரசியலமைப்பை மீறிய செயல், ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கை, அரசியல் சதி என்றால், அதை எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சம்மந்தன் உடனடியாகக் கண்டிக்கவில்லை. அது தவறு என்றும் சொல்லவில்லை. இது தவறெனச் சம்மந்தன் கருதியிருந்தால் மகிந்த ராஜபக்ஸ பதவியேற்ற அன்றிரவே தனது எதிர்ப்பையும் மறுப்பையும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அது எதிர்க்கட்சித் தலைவருக்குரிய பொறுப்பாகும்.
2. மறுநாள் மகிந்த ராஜபக்ஸ சம்மந்தனை அழைத்தது தனக்குரிய பெரும்பான்மைக்கான ஆதரவைப் பெறுவதற்காகவே. எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சம்மந்தனை மகிந்த அழைக்கவில்லை. அப்படிப் பேசவும் இல்லை. இதைத் தெரிந்து கொண்டே சம்மந்தன் மகிந்த ராஜபக்ஸவைச் சந்திக்கச் சென்றிருந்தார்.
கூட்டமைப்பின் தலைவர் என்ற அடிப்படையிலேயே “சந்திரிகா குமாரதுங்கவின் தீர்வுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா?” எனக் கேட்டதை நாம் அவதானிக்கலாம்.
முதலில் இந்தச் சந்திப்பே தவறானது.
ஏனெனில் பிரதமரை நியமித்தபோது குறைந்த பட்ச நாகரீகமாக அதைப்பற்றிய தகவலை உத்தியோகபூர்வமாக சபாநாயகருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஜனாதிபதி தெரியப்படுத்தியிருக்க வேணும். அப்படிச் செய்யவே இல்லை. இந்த நிலையில் மகிந்த ராஜபக்ஸவை பிரதமராக ஏற்றுக்கொண்டே சம்மந்தன் சந்தித்திருக்கிறார். அந்த அடிப்படையில்தான் சந்திரிகா முன்வைத்த தீர்வுத்திட்டத்தை அமூல்படுத்தமுடியுமா என்று கேட்டதும்.
இதன் மூலம் மகிந்த ராஜபக்ஸவின் பிரதமர் நியமனத்தைச் சம்மந்தன் ஏற்றிருக்கிறார். அதாவது கூட்டமைப்பின் தலைவர் என்ற அடிப்படையிலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையிலும்.
சம்மந்தனின் கோரிக்கையை அல்லது அந்த நிபந்தனையை மகிந்த ராஜபக்ஸ ஏற்றிருந்தால் இன்று அவர் கூட்டமைப்பின் ஆதரவோடு பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்ற தலைவர். பிரதமர். அதற்குப் பிறகு பாராளுமன்றத்தைக் கலைக்கும் முடிவை மைத்திரி எடுப்பதற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது. இப்போதைய குழப்பங்கள், இழுபறிகள், பாராளுமன்ற மோதல்கள் போன்றவையும் வேறு விதமாகியிருக்கலாம். இல்லாமலும் போயிருக்கும். அதாவது சட்டபூர்வமான பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நீடித்திருப்பார்!
(இப்படியெல்லாம் செய்து விட்டு முன்பின் முரணாக “மகிந்த ராஜபக்ஸவின் பிரதமர் நியமனம் சட்டவிரோதமானது” என்று கூட்டமைப்பினால் எப்படிச் சொல்ல முடியும்?)
3. பாராளுமன்றம் கலைக்கப்பட்டபோது அது அரசியல் சாசனத்துக்கும் மக்களுடைய ஆணைக்கும் எதிரானது. ஜனநாயக விரோதமானது என்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலையிலிருந்து தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை.
4. நீதிமன்றத் தீர்ப்பையடுத்துப் பாராளுமன்றம் கூடியபோது அதிகாரப்போட்டிக்காக பாராளுமன்றத்தில் முறைகேடாக உறுப்பினர்கள் நடந்து கொண்டமையை எதிர்க்கவோ கண்டிக்கவோ இல்லை. ஆனால், அதற்கான எதிர்ப்புக்குரலைக் கொடுத்திருக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவருக்குரியது.
5. மகிந்த ராஜபக்ஸவின் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதை மறுத்து ஜனாதிபதி அடாத்தாகச் செயற்படுவதை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்தானத்திலிருந்து இதுவரையில் சம்மந்தன் எதிர்க்கவில்லை. அப்படி ஒரு அறிக்கை கூட வந்ததில்லை.
6. அதிகாரப் போட்டியின் காரணமாக நாட்டுக்கும் ஆட்சிக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நெருக்கடி மற்றும் பாதகமான நிலைமை குறித்து மக்களுக்கு உத்தியோக பூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் எதையும் சொல்லவேயில்லை. இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சியில் நாட்டிலுள்ள முக்கியமான தரப்பினருக்குள்ள பொறுப்பை உணர்த்தி அவர்களை அணிதிரட்ட வேண்டிய கடமையையும் செய்யவில்லை.
7. ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை போன்றவற்றின் மீது மக்களுக்கு நம்பிக்கையீனமும் மரியாதைக்குறைவும் ஏற்பட்டிருக்கும்போது அந்த வெற்றிடத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பு அதற்கான குரலை உயர்த்துவது. அதை அவர் செய்யத் தவறியுள்ளார்.
8. இந்தக் காலகட்டத்தில் சம்மந்தன் மகிந்த, மைத்திரி, ரணில் ஆகியோரைப் பல தடவை சந்தித்திருக்கிறார். அவர்களுடன் கூட்டமைப்பின் தலைவராகப் பேசியிருக்கிறாரே தவிர, எதிர்க்கட்சித் தலைவராக இல்லை. ஒரேயொரு தடவை மட்டுமே ஜனாதிபதிக்கு நீங்கள் தொடர்ந்து தவறுகளைச் செய்கிறீர்கள் எனக் கூறியிருக்கிறார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவருடன் நீங்கள் சந்திக்கிறீர்கள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு தரப்பினரின் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி, அவரவரின் பொறுப்புகளுக்குப் பதிலளிக்கும் நிலையை உணர்த்தியிருக்க வேணும்.
(நடந்த சந்திப்புகளை நினைவு கொண்டு பார்த்தால் இந்த உண்மை புரியும்).
(நடந்த சந்திப்புகளை நினைவு கொண்டு பார்த்தால் இந்த உண்மை புரியும்).
சம்மந்தன் செய்திருக்க வேண்டியதும் செய்ய வேண்டியதும்
கருணாகரன்
2015 க்குப் பிறகு இலங்கை அரசியலில் மிகப் பலமுடைய தலைவராக இருப்பவர் திரு. சம்மந்தன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அடுத்த நிலையில் உள்ளவர் என்று சொல்ல முடியும். எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற இருநிலைகளிலும் அவருடைய பலம் மிக உயர் வலுவுடையது. அதாவது எதையும் தீர்மானிக்கும் அரசியற்சக்தி இப்பொழுது சம்மந்தனிடமுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவினதும் ஐ.தே.கவினதும் அரசியல் தலைவிதியைத் தீர்மானித்துக் கொண்டிருப்பதே இன்று சம்மந்தன்தான். ஏன் மகிந்த ராஜபக்ஸவினுடையதும்தான்.
சம்மந்தன் நினைத்திருந்தால், மகிந்த ராஜபக்ஸவின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடித்து அவரைப் பிரதமராக்கியிருக்க முடியும். ரணிலைக் களத்திலிருந்து அகற்றுவதும் தொடர்ந்து வைத்திருப்பதும் கூடச் சம்மந்தனின் கைகளிலேயே உள்ளது.
தற்போதைய நெருக்கடி நிலை நீடிப்பதும் முடிவுக்கு வருவதும் கூடச் சம்மந்தனின் கைகளிலேயே தங்கியுள்ளது. இதனால்தான் அவரை மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்ஸவும் ரணில் விக்கிரமசிங்கவும் ஆள்மாறி ஆளாக அடிக்கடி அழைத்துப் பேசுகிறார்கள். தமக்கு ஆதரவளிக்குமாறு கேட்கிறார்கள் (கெஞ்சுகிறார்கள்).
இது ஏறக்குறைய 2009 க்கு முன்பு விடுதலைப்புலிகளிடம் இருந்த பலத்துக்கும் வாய்ப்புகளுக்கும் நிகரானது. அதையும் விடப் பலமானது எனலாம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தடுமாற்றங்களில்லாமல், வெளிச்சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களில் சிக்கிச் சீரழியாமல், சுமந்திரனின் தனிப்பட்ட விருப்பங்களுக்கெல்லாம் இழுபடாமல் துணிவோடும் தூரநோக்கோடும் நல்ல முடிவுகளைச் சம்மந்தன் எடுப்பாராக இருந்தால் எதையும் செய்ய முடியும். மாற்றங்களை உண்டாக்க முடியும்.
ஆனால், இதெல்லாத்தையும் பெறுமதியற்று வீணாக்கிக் கொண்டிருக்கிறார் சம்மந்தன். (மடியில் மாணிகக் கற்கள் விழுந்து கொண்டேயிருக்கின்றன. அவ்வளவையும் அவர் மண்ணாக்கிக் கொண்டிருக்கிறார்). அவருடைய கைத்தடியாக இருக்கும் சுமந்திரன் ஆணைக்கொம்பாக மாறியதன் விளைவே இது.
இதில் முதல் பலியாகியிருப்பது சம்மந்தன். சம்மந்தன் பலியாகியிருப்பதன் மூலமாக தமிழ் மக்கள். மட்டுமல்ல, முழு இலங்கைத்தீவும்தான்.
No comments:
Post a Comment