உறைந்து போகாமலிருக்குமோ உங்கள் உள்ளம்?
நெதர்லாந்து நாட்டில் ஒரு தொழிற்சாலையை நடத்திக்கொண்டிருந்தவர் ஓட்டோ ஃபிராங்க். யூத இனத்தைச் சேர்ந்தவர். அவரது மகள் ஆனி. வயது 13. யாருக்கும் தெரியாமல் சிறுகதைகள் எழுதிவந்தவள். துறுதுறுப்பான, நகைச்சுவை உணர்வுள்ள பெண் என்று பள்ளியாசிரியர்களிடம் பெயர் பெற்றவள்.
1940ல் ஹிட்லரின் நாஜிப்படை இந்த நாட்டிற்குள் புகுந்து, யூத மக்களைக் கைது செய்து சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பியது.
ஃபிராங்க் குடும்பத்தினர் அவர்களது தொழிற்சாலையின் புத்தக அலமாரிக்குப் பின்னால் இருந்த ரகசிய அறையில் பதுங்கிக்கொண்டனர். நண்பர்கள் சிலர் மரண அபாயத்திலும் துணிந்து இந்தக் குடும்பத்திற்கு ரகசியமாக உணவளித்து வந்தனர். ஆனி அந்த அறைக்குள்ளேயே, தனக்குப் பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த ஒரு டயரியில், வெளியுலகத்தைக் காண முடியாத ஏக்கம் உள்ளிட்ட உணர்வுகளைத் பதிவு செய்து வரலானாள். தனக்குக் கிடைத்த முதல் முத்தம், சர்வாதிகார ஒடுக்குமுறை என்று அனைத்தையும் பற்றி எழுதிவந்தாள்.
விரைவில் அந்த அறையில் ஒரு நண்பரின் குடும்பம் சேர்ந்துகொண்டது. அந்தக் குடும்பத்தின் பீட்டர் என்ற பதின்பருவத்தினன் மீது இவளுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. தந்தைக்கு இது பிடிக்காமல் போகும் என்று அஞ்சிய ஆனி, உணர்வுகளை மட்டும் பதிவு செய்தாள். ஆனிக்குக் கிடைத்த முதலாவது, கடைசி முத்தம் பீட்டரிடமிருந்துதான்.
1942ல் அந்தத் தொழிற்சாலையில் நடந்த ஒரு திருட்டு தொடர்பாக சோதனை நடத்திய பாதுகாப்பு அலுவலர், புத்தக அலமாரிக்குப் பின்னாலிருந்த அறையைக் கண்டுபிடித்தார். தகவலறிந்து வந்த ராணுவத்தினர் இரண்டு குடும்பத்தினரையும் பிடித்துச் சென்றனர். 15 வயதுக்குக் குறைந்த குழந்தைகளை நேரடியாக விஷவாயுக் கூடத்திற்கு அனுப்பினர். அப்போது 15 வயதைத் தொட்டிருந்த ஆனியைப் பெரியவர்களோடு முகாமில் அடைத்தனர். அவளுடைய தலை மொட்டையடிக்கப்பட்டு வரிசை எண் பச்சை குத்தப்பட்டது.
தினமும் கொண்டுவரப்படுகிற குழந்தைகள் கண் முன்னால் கொலைக்கூடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதைப் பார்த்து அழுதாள் ஆனி. முகாமின் சுகாதாரமற்ற, மோசமான நிலைமை பலரையும் நோயாளியாக்கியது. ஆனியின் அக்காள் மரணமடைய, சில நாட்களில் ஆனியும். இறந்த தேதி தெரியவில்லை.
1945ல் சோவியத் படைகள் வருகையைத் தொடர்ந்து யூதர்களுக்கு விடுதலை கிடைத்தது. எப்படியோ தாக்குப் பிடித்து உயிர்வாழ்ந்த ஓட்டோ ஃபிராங்க் தனது வீட்டுக்கு வந்தார். குடும்பத்தினர் அனைவரும் செத்துப்போய்விட்டதை அறிந்தார். தனிமை வாழ்க்கையை எப்படித் தொடரப்போகிறோம் என்று கலங்கிய அவரிடம், நண்பர் ஒருவர், அந்த ரகசிய அறையிலிருந்து மீட்கப்பட்ட ஆனியின் டயரியை ஒப்படைத்தார். மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு டயரியைப் பிரித்தார் தந்தை. கண்ணீரில் மூழ்கினார்.
மகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்த டயரிக் குறிப்புகளையும் ஆனியின் பிற பதிவுகளையும் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டார். கடந்த ஆண்டுகளில் 65 மொழிகளில் வெளியாகியுள்ள அந்தப் புத்தகம், உலக அளவில் அதிகமாகப் படிக்கப்பட்ட புத்தகங்களில் ஒன்றாகும். சென்ற நூற்றாண்டின் சிறந்த மனிதர்களில் ஒருவராக ஆனியை அறிவித்து கௌரவித்தது ‘டைம்ஸ்’ பத்திரிகை.
நிலைமைகள் மாறும், அன்பு மேலோங்கும் என்ற நம்பிக்கையை ஆனி வெளிப்படுத்தியுள்ள அந்த டயரியில் உள்ள முக்கியமான வாசகம்: “என்ன நடந்திருந்தாலும், இப்போதும் நான் மக்கள் தங்கள் இதயத்தில் உண்மையிலேயே நல்லவர்கள் என்றே நம்புகிறேன்.”
No comments:
Post a Comment