Search This Blog

Monday, March 5, 2018

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சரிவு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சரிவு கடந்த தேர்தலுக்கு முன்பே பலராலும் மதிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் கூட்டமைப்பின் விசுவாசிகளும் சில ஊடகவியலாளர்களும் இதை மறைப்பதற்கும் மறுப்பதற்கும் பாடாய்ப் பட்டனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சரிவு
தேர்தல் முடிவுகள் அதை நிரூபித்தன.
மக்களின் மன நிலையை நாடி பிடித்துப் பார்க்கத் தவறியவர்களை என்ன என்று சொல்வது?
கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணங்கள் ஒன்றல்ல. ஏராளமானவை.
அந்தக் காரணங்களும் பலரும் அறிந்தவை. இங்கே அவற்றைப் பட்டியல் போட்டு முடியாதது.
அவற்றையெல்லாம் பொறுப்போடு ஆராய்ந்து சீர் செய்வதற்குக் கூட்டமைப்புத் தயாரில்லை.
அப்படிச் சீர் செய்ய வேண்டுமாக இருந்தால், அடிப்படையிலிருந்தே மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
அதாவது அதுவொரு“ குணாம்ச மாற்றமாகும்”.
ஆனால், அதற்கு கட்சியின் உயர் மட்டத்திலும் (தலைமையிலும்) தயாரில்லை. அடிமட்டத்திலும் தயாரில்லை.
யாருமே இதைப்பற்றிச் சிந்திக்கவுமில்லை.
“தலைமை கொழும்பில் பாய் போட்டுப்படுத்தே விட்டது”.
“வால்கள்” மட்டும் வன்னியிலும் (கிளிநொச்சி, முல்லைத்தீவு) யாழ்ப்பாணத்திலும் சிலவேளை மட்டக்களப்பிலும் மெல்ல ஆடிக் கொண்டிருக்கின்றன.
தலைமைக்கு நெருக்கடியைக் கொடுத்த கஜேந்திரகுமார் அணி, சுரேஸ் அணி போன்றவற்றை தூக்கி வெளியே வீசிய பிறகு எந்தப் பிரச்சினையும் இனி இல்லை என்ற நிம்மதியில் காலாட்டிக் கொண்டிருக்கிறது தலைமை.
மிஞ்சியிருக்கும் ரெலோவும் புளொட்டும் கொழும்புடன் சமரசம் செய்து கொள்ளக் கூடியவை. கூட்டமைப்பின் தலைமைக்கு எதிர் நிலைப்பாடு எடுக்க முடியாதவை.
ஆனால், கூட்டமைப்பை விட ஏனைய தரப்புகள் பல இடங்களிலும் எழுச்சியடைந்துள்ளன.
இதையும் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கின்றன.
இதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத கூட்டமைப்பினர் பதறியடித்துக்கொண்டு ஊர் ஊராக இளைஞர்களையும் தங்களை விட்டு விலகியோரையும் தேடி, வலை விரித்து, காலில் விழுந்து, பணிந்து, கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். மன்னிப்புக் கேட்கிறார்கள். மன்றாடுகிறார்கள்.
உண்மையில் இப்படிச் செய்யவே வேண்டியதில்லை.
மாற்றங்களைச் செய்தால், மக்களுக்கு விசுவாசமாக இருந்தால், நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், உண்மையைப் பேசினால், கண்ணியமாக நடந்தால், விடுதலைக் கனவோடு வாழ்ந்தவர்களுக்கும் வீழ்ந்தவர்களுக்கும் உண்மையாகவே மரியாதை செய்தால் மக்கள் தாங்களாகவே ஆதரவைத் தருவார்கள்.
அப்படிச் செய்யாமல் ஆட்சேர்ப்பதற்கும் தேர்தலில் வெற்றியடைவதற்கும் மக்களைப் பயன்படுத்த முயற்சிப்பது தந்திரமாகும். இந்தத் தந்திரத்துக்கு மக்கள் மேலும் பாடம் படிப்பிப்பார்கள்.
இதுவே வரலாற்று உண்மை.
அதிலும் இளைய தலைமுறையினர் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.
அவர்கள் விழிப்பும் போராட்டக் குணமும் நேர்மையும் புத்திக் கூர்மையும் உள்ள அணியினர்.
நாளைய வரலாற்றை சரியாக எழுதக் கூடியவர்கள்.
இதைக் கூட்டமைப்பினர் புரிந்து கொள்வது அவசியம்.
உண்மையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பது பெரியதொரு ஆலமரமாகவே இருந்தது. இப்பொழுது அது சரிந்து விழத் தொடங்கி விட்டது.
சிறிய மரங்கள் சரிந்தால் அதைத் தடுப்பதற்கும் தாங்குவதற்கும் முட்டுக் கொடுக்கலாம்.
பெரிய மரம் (ஆலமரம்) சரிந்தால் எதுவும் செய்ய முடியாது.

தமிழர்களுடைய அரசியலை அடுத்த கட்டத்துக்கு - போருக்குப் பிந்திய அரசியலாக முன்னெடுத்துச் செல்வதற்கான சிந்தனையும் செயலூக்கமும் கொண்ட தரப்பினர் இன்னும் இல்லை.
இதை நோக்கிச் சிந்திப்பதற்கும் தமிழ்ச் சூழலில் யாரும் முன்வரவில்லை.
போருக்கு முந்திய, போர்க்கால அரசியலின் நிழற் பிரதியையே பலரும் தொடர்கின்றனர்.
அதற்கு புதிய வர்ணத்தைப்பூசிப் புதிதாகக் காண்பிக்கவே பலரும் விரும்புகின்றனர்.
இதனால்தான் அது சர்வதேசக் கவனிப்பையும் பெறவில்லை. புதிய அடிகளை முன்வைக்கவும் இல்லை. சிங்கள அதிகாரத்தரப்பை அசைக்கவும் இல்லை.
போருக்கு முந்திய, போர்க்கால அரசியலைப் போருக்குப் பிந்திய அரசியலின் தொடர்ச்சியாகக் கொள்ளவே முடியாது.
இது உலக அனுபவம்.
போருக்குப் பிந்திய சூழலில் தமிழர்களுக்கு அருமையான பல வாய்ப்புகள் கிடைத்திருந்தன.
ஆனால், அதை நோக்கி நகர்வதற்கான சிந்தனையும் உலக அனுபவமும் செயற்படுத்தத்தக்க ஆளுமைகளும் துணிச்சலும் கொண்டவர்கள் இல்லாது போயிற்று.
அப்படி அரும்பிய முளைகளையும் பழைய கண்ணோட்டத்தில் எதிர்த்து மடக்கியதும் விலக்கியதுமே நடந்தது.
இப்பொழுது மறுபடியும் பழைய பெருங்காயப் பானைக்குள்தான் கையை விட்டுத் தேடுகின்றன.
மீண்டும் பிரமுகர்களைச் சுற்றியும் தேடியுமே தமிழ் அரசியல் முன்னெடுக்கப்படுகிறது.
இது 70 ஆண்டுகாலத் தோல்வியை நூற்றாண்டுத் தோல்வியாக்கும் முயற்சியே.

கருணாகரன் சிவராசா


No comments:

Post a Comment