நான் தமிழில் சிறுகதைகள் எழுதத் தொடங்குகிறபோது Joyce-னுடைய Dubliners கதைகளை முன் மாதிரியாகக் கொண்டு நகராத, Emotionless கதைகளைத்தான் எழுத முயன்றேன். எனக்கு Stream of consciousness என்கிற கயிற்றரவு உத்தி அவ்வளவாகத் தமிழுக்கு ஏற்ற விஷயமாகப்படவில்லை; அதற்கு ஒரு வசன வார்த்தை வளம் வேண்டும்; தமிழில் அது இன்னும் ஏற்படவில்லை என்று எண்ணுகிறேன். புதுமைப்பித்தனின் கயிற்றரவு, நினைவுப்பாதை முதலிய சிறுகதைகளிலும், லா.ச.ராமாமிருதம் கொட்டுமேளம், பாற்கடல் போன்ற கதைகளிலும் கையாளுகின்ற அளவுக்கு மேல் Stream of consciousness உத்தியைத் தமிழில் கையாள முடியாது என்றே நான் நினைக்கிறேன். சாதாரணமாக இந்த உத்திதான் Joyce-இன் சிறப்பு என்று சொல்லுவார்கள்.
பி.ஏ வகுப்பில் எனக்கு ஏதோ ஒரு பரிசு வந்தது. அதற்கு என் பேராசிரியர் Khadya ”என்னென்ன புஸ்தகங்கள் வேண்டும்?” என்று கேட்டார். நான் சற்றும் தயங்காமல் Thus spake Zarathustra - Nietzshe எழுதிய ஒன்று, Walt Whitman Leaves of Grass இரண்டும் என்று சொன்னேன். இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடான கருத்து நூல்கள். நீட்ஷே சர்வாதிகாரவாதி. இன்று அவர்தான் ஹிட்லருக்கு மூலகாரணம் என்று சொல்பவர்கள் உண்டு. Whitman ஜனநாயகவாதி. இருவரிடமும் எனக்கு ஈடுபாடிருந்தது குறிப்பிட வேண்டிய விஷயம்.
நீட்ஷேயின் கருத்துகள் மிகவும் புரட்சிகரமானவை. Beyond Good and Evil, AntiChrist, Thus spake Zarathustra போன்ற நூல்கள் ஐரோப்பிய சிந்தனைப் போக்கைக் கணிசமான அளவில் பாதித்தவை. ஜெர்மன் வசனத்தில் நீட்ஷேயின் போக்கு மிகவும் புரட்சிகரமானது. மிகவும் காவியமயமான சிந்தனைகளைக் காவிய நயமேயற்ற வார்த்தைகளில் சொல்லிவிடுகிற சாமர்த்தியம் நீட்ஷேயிடம் உண்டு. இதைக்கற்றுக்கொள்ள மிகவும் பாடுபட்டேன் என்றால் மிகையாகாது. கருத்திலும் நீட்ஷே, மிகவும் பிற்போக்கானது என்று கருதப்பட்ட மனுஸ்மிருதி சிந்தனைகளை ஆதரித்தார். விஞ்ஞான ரீதியில், கிறிஸ்துவ நரகம், ஸ்வர்க்கம் பற்றிய சிந்தனைகளையும் தலைகீழாகப் புரட்டியவர் அவர்.
தைரியமாகச் சிந்திக்க அறிந்து கொள்வதற்கு நீட்ஷேயை ஒவ்வொருவரும் படிக்கவேண்டியது அவசியம். அவர் கருத்துகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதல்ல விஷயம். சிந்தனைத் தெளிவு, தீவிரம், அழுத்தம், அதைச் சொல்வதில் ஓர் உத்தி இவ்வளவும் நீட்ஷேயினால் எனக்கு ஏற்பட்ட பாதிப்பாகும். சமுதாய வாழ்விலே நாம் ஏற்றுக்கொள்கிற பல அடிப்படையான விஷயங்களை ஒன்றுமில்லை என்று ஆக்கியவர் நீட்ஷே.
அதே அளவில் நாம் நல்லது என்று நம்பியிருப்பதெல்லாம் கெட்டது அல்ல என்கிற சிந்தனையை ஐரோப்பாவிலே முதல் முதலாகத் தொடங்கித் தந்து, நல்லது தீயதைக் கடக்கும் ஒரு நியதியை உற்பத்தி செய்து தந்தவர் டாக்டர் ஸிக்மண்ட் ஃப்ராய்டு. அவர் சிந்தனைகள் காரணமாக குடும்ப உறவுகள் தளர்ந்தன. மனித வாழ்வின் அடிப்படை தனிப்பட்ட செக்ஸ் உணர்வுதான் என்று சொல்லி, கலை இலக்கியம் எல்லாவற்றிலும் புதுநோக்குகளைச் சாத்தியமாக்கியவர் Freud. இதைத்தவிர சற்றேறக்குறைய அதே சமயத்தில் நான் படித்த Jack Londonனின் Martin Eden என்கிற நாவலும் என்னை வெகுவாகப் பாதித்தது. இலக்கியகர்த்தாவாக வாழ விரும்பிய ஒருவன் எப்படிப்பட்ட சோதனைகளுக்குள்ளாவான் என்று Martin Eden-னில் Jack London விமர்சிக்கிறார். இதைத்தான் இலக்கிய கர்த்தாகளுக்கு மிகவும் அவசியமானதோர் நூலாக நினைக்கிறேன்.
இதற்கு முன் எனக்கு என்று, இந்தப் படிப்பெல்லாம் காரணமாக, ஒரு தனித்தன்மை ஏற்பட்டுவிடவே அதற்குப் பின் படித்த நூல்களில் பலவும் என்னை இந்த அளவுக்கு Jack London-இன் Martin Eden, James Joyce-ன் Dubliners, Ezra Pound-ன் விமர்சனங்கள், Fraud-ன் Psycho Analysis, Kipling-ன் Kim போலப் பாதிக்கவில்லை என்றுதான் சொல்வேன்.
படிப்பது முடிவில்லாத ஒரு காரியம். முடிவில்லாது செய்து கொண்டிருக்கிற இந்தக் காரியம் முடிவில்லாத பாதிப்புகளை நாம் அறிந்தும், அறியாமலும் நமக்குள் விளைவிக்கிறது. இலக்கியாசிரியன் ஒருவனுக்குத் தெரியாத அளவில் அவன் எழுத்தில் விமர்சகன் காணக் கூடிய அளவில் பாதிப்புகள் இருக்கலாம். இருக்க வேண்டும். இராமல் இராது. Thomas Mann, Romain Rolland, Antole Francis, Selma Lagerlof, Vemer Von Heivenstan, Knut Hamsun, Franz Khafka, William Saroyan, Maxim Gorky, Dostoevsky, Lady Muraaki இவர்களெல்லாம் நான் பின்னர் கண்டு கொண்ட நாவல் கதாசிரியர்கள்.
கவிகளில் டாண்டேயையும், ஆங்கிலக் கவிகளையும் தவிர மற்றவர்களைப் பின்னர்தான் கண்டு கொண்டேன் - Paul Valery, Rainer Maris Rilke, Lorca என்று பலரை இதே போல நாடகாசிரியர்களாக Benevente, Ibsen, Priendello இவர்களைக் கல்லூரி விட்டபிறகுதான் கண்டு கொண்டேன். இவர்களுடைய பாதிப்பையெல்லாம் தெரிந்து கொள்ளும் சக்தி என் தனித்தன்மைக்கு அதற்குள் ஏற்பட்டுவிட்டது என்று சொல்லலாம். நான் படித்த முதல் தமிழ்ச்சிறுகதை பி.எஸ்.ராமையாவின் வார்ப்படம் என்பதாகும். அதிலே ஒரு உருவமும், கருத்தும் அமைந்திருக்கிறது என்றும்,. அது மாதிரித் தமிழ்க் கதைகள் என்னால் எழுத முடியும் என்று உணர்ந்து தமிழில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன்.
புதுமைப்பித்தனின் கதைகளில் சிற்பியின் நரகத்தையும், மெளனியின் கதைகளில் காதல் சாலை என்பதையும் நான் முதன் முதலில் படித்தேன். பிச்சமூர்த்தியின் வானம்பாடி என்கிற கதையையும், தாய் என்கிற கதையையும் படித்தபோது இந்த மாதிரிக் கதைகள் நான் எழுதக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டேன்.அதேபோல் பெ.கோ.சுந்தர்ராஜனின் கதை செளந்தர்யமே சத்தியம் என்பதைப் படித்தபோது அது என்னைப் பாதித்தது - இப்படி எழுதக்கூடாது என்கிற அளவில். தியாகபூமி என்கிற நாவல் கல்கியினுடையது வெளிவந்தபோது இது மாதிரி நாவல் என்கிற பெயரில் எதுவும் எழுதிவிடக்கூடாது - கடவுள் காப்பாற்றுவாராக என்று தீர்மானித்துக் கொண்டேன்.
அதற்குப்பிறகு நாற்பதுகளில் காப்பாற்றுவதற்குக் கடவுளைக் கூப்பிட வேண்டிய சந்தர்ப்பங்கள் பலப்பல எழுந்து விட்டன. அவற்றை இங்கு விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகிறேன். தியாகபூமி முதல் அலைஓசை வரையில் கல்கி எழுத்து என்னை பாதிக்கிற எழுத்தாகவே இருந்தது என்று மட்டும் சொல்லுகிறேன். கல்கியின் எழுத்துகள் நல்ல நூல்கள் கெடுதி சக்தியின் எழுத்துக்கள் நல்ல நூல்கள் கெடுதி செய்யும் சக்தி வாய்ந்த நூல்கள் என்று ஆரம்பத்தில் சொன்னேனே அந்த ரகத்தைச் சேர்ந்தவை.
எழுதிக்கொண்டே இருந்த க.நா.சுப்பிரமணியம்
கி.அ.சச்சிதானந்தம் - வானதி பதிப்பகம், தி.நகர், சென்னை - 600017. விலை - ரூ75/-
நன்றி: சொல்வனம். ஓவியம்: ஆதிமூலம்
No comments:
Post a Comment