ஒரு ஊரில் ஒரு கிழவரும், கிழவியும் இருந்தனர்... கிழவர் எது செய்தாலும், கிழவிக்கு பிடிக்காது. இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும். ஒரு நாள் ஆற்றங்கரைக்கு சென்றார் கிழவர். அங்கே காலில் அடிபட்டு, நடக்க முடியாமல் இருந்தது ஒரு குருவி. பரிதாபப்பட்டு அதை வீட்டுக்கு எடுத்து வந்து, ஒரு கூண்டு வாங்கி, அதனுள் வைத்தார் கிழவர். இதை கண்ட கிழவிக்கு கோபம்... "இந்த நொண்டிக் குருவியை, இங்கு எதற்குக் கொண்டு வந்தாய்?' என்று ஆத்திரப்பட்டு, அந்த குருவியை கூண்டிலிருந்து எடுத்து வீசி எறிந்தாள். பறந்து சென்ற குருவி, பழையபடி ஆற்றங்கரை மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டது. மறுநாள், ஆற்றங்கரைக்குப் போனார் கிழவர்... அப்போது, "பெரியவரே... நீங்கள் செய்த உதவிக்கு நன்றி. அதோ பாரும்... அங்கே மூன்று பானைகள் மூடி போட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அதில், ஒரு பானையை எடுத்துக் கொண்டு, வீட்டுக்குப் போய் திறந்து பாரும்...' என்றது குருவி. கிழவரும், மூன்று பானைகளில் ஒன்றுடன் வீட்டுக்குப் போய் திறந்து பார்த்தார்... ஒரே ஆச்சரியம்... பானை நிறையத் தங்கக் காசுகள் இருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டார். "இனி செலவுக்குக் கஷ்டமில்லை...' என்று எண்ணினார். அப்போது அங்கே வந்தாள் கிழவி... "ஏது, இந்த பானை நிறைய தங்கக் காசு?' என்று கேட்டாள். கிழவரும், தான் ஆற்றங்கரை பக்கம் போனதையும், அந்த நொண்டிக் குருவி, இந்த பானையை காண்பித்ததையும் விவரமாகச் சொன்னார். அதைக் கேட்ட கிழவி, "ஓ... அந்த நொண்டிக் குருவியா! சரி... நானும் போய் அந்த குருவியைப் பார்த்துவிட்டு, இதைவிட பெரிய பானையை கொண்டு வருகிறேன் பார்...' என்று சொல்லி, ஆற்றங்கரைக்குப் போனாள். அங்கே அந்த குருவி இருந்ததைப் பார்த்தாள். கிழவியை பார்த்து, "எங்கே இந்தப் பக்கம் வந்தாய்?' என்று கேட்டது குருவி. "சும்மா தான் உன்னை பார்த்து விட்டுப் போகலாமென்று வந்தேன். உன்னை அனாவசியமாக நான் வீசியெறிந்து விட்டேன். என்னை மன்னித்து விடு. என் புருஷனுக்கு ஒரு பானையை காண்பித்தது போல், எனக்கும் ஒரு பானையை காண்பிக்க வேண்டும்...' என்று வேண்டினாள் கிழவி. குருவியும், "கவலைப்படாதே... அதோ இருக்கும் மூன்று பானைகளில், ஒன்றை எடுத்துக் கொண்டு, வீட்டுக்குப் போய் திறந்து பார்...' என்றது. கிழவியும், மூன்று பானைகளில் பெரிதாக இருந்த ஒரு பானையுடன், அவசர அவசரமாக வீட்டுக்குப் போய் பானையை திறந்தாள். அவ்வளவுதான்... பானையிலிருந்து தேளும், நட்டுவாக்காலியும் குதித்து ஓடியது கண்டு, ஓவென்று அலறி ஓடினாள். அதிக ஆசைப்படக் கூடாது; பொறாமை கொண்டு எதையும் செய்யக்கூடாது. தனக்கு எது கிடைக்குமோ அதைத்தான் அடைய வேண்டும். "அவனுக்குக் கிடைத்ததே... அதே போல் எனக்கும் கிடைக்க வேண்டும்...' என்று நினைக்கக் கூடாது. |
Search This Blog
Sunday, April 1, 2012
அதிகம்ஆசைப்பட்டால்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment