அனைத்துமான வேதியல்..!
வேதியல் என்பது வாழ்வில் சுவையான ஓர் அத்தியாயம். அதனை தவிர்த்து நாம் வாழ இயலாது என்பது தெரியுமா..நண்பரே..!உங்கள வாழ்வின் ஒவ்வொரு துடிப்பிலும், ஒவ்வொரு செயலிலும் வேதியல் ஒன்றிப்போய் இருக்கிறதே..! யார் வாழ்க்கையானாலும் சரி, அண்டம் முதல், அமீபாவரை என்றாலும் சரி..! அமீபா முதல் ஏழாம் அறிவு வரை என்றாலும் சரி..! வேதியலின்றி, அதன் வினைச் செயல்பாடுகள் இன்றி, அவற்றைச் சந்திக்காமல் நாம் வாழவே முடியாது, அது தெரிந்தாலும், தெரியாவிட்டாலும்..கூட! பிரபஞ்சத்திலிருந்து, நம் உடலில் உள்ள அனைத்து செல்களிலும், உண்ணும் உணவிலும், பார்க்கும் கல், மண்ணிலும் வேதியியல் ஊடுருவி நிற்கிறது. நம் வாழ்வில் அனைத்துப் பொருட்களிலும் வேதியல் இரண்டறக் கலந்திருக்கிறது. அவனன்றி அணுவும் அசையாது எனற பழமொழியை மாற்றிப் போடவேண்டும். வேதியல் இன்றி அணு அசையாது என்பதுதான் உண்மை.பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளிலும் இயற்பியல்,வேதியல் மற்றும் கணிதம் கலந்தே உள்ளது.
புகை வழியே மணம்..!
வேதியலின் துவக்கம் நறுமணத் தைலமாக/அழகுசாதனப் பொருட்களாகவே இருக்க வேண்டும் என்பதுதான் விஞ்ஞானிகளின் கணிப்பு. நறுமணத் தைலத்திற்கு பர்பியூம் (Perfume) என்பது ஆங்கிலப் பெயர்.இந்த வார்த்தை லத்தீன் மொழியிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் புகையின் வழியே ("through smoke") என்பதே. ஏனெனில் துவக்க காலத்தில் வாசனை மிகுந்த மூலிகைகளின் வேர்,பூ, பட்டை போன்றவற்றை எரித்தே இதனைத் தயாரித்தார்கள். அதனாலேயே நறுமணத் தைலத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது. ஆதிகாலத்தில் சீனர்கள், இந்தியர்கள், இஸ்ரேலியர்கள், கார்தஜினியர்கள், அரேபியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள் எனப் பலரும் நறுமணத் தைலத்தை அவர்களின் கலாச்சாரத்திற்குள் எந்தெந்த வகையிலோ நுழைத்தனர்.அது மட்டுமல்ல. மனித சமுதாயத்தின் நாகரிகத்தில் பெரும் பங்கு வகிப்பது நறுமணம்தான்.
நாகரிகத் தொட்டிலும்..நறுமணப் பிறப்பும்..!
மனிதனில் மட்டுமல்ல, அனைத்து விலங்கினங்களிலும் கூட இணையை ஈர்ப்பதற்கு, இணை சேர காந்தமாய் பயன்படுவது நறுமணம்தான்.ஆனால் மனிதன்தான் செயற்கையான நறுமணத்தை தனது சொந்த செயல்பாட்டுக்கு பயன்படுத்தியவன்.. நறுமணத் தைலம் முதன் முதல் தயாரிக்கப்பட்ட இடம் மனித நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்பட்ட மெசபடோமியாதான்.ஆனால் எகிப்தியர்களும் நறுமணத்தைலம் தயாரித்தனர் என்றும் சொல்லப்படுகிறது.எப்படி தெரியுமா? எகிப்திய மன்னர்களும், ராணிகளும் நறுமணத் தைலம் பயன் படுத்தியதாக பதிவுகள் உள்ளன. அதே சமயத்தில் எகிப்தில் இறந்த மனிதர்களை பல இலைகள் மற்றும் தைலங்கள் கொண்டு பதப்படுத்தி, அதன் பின்னர் மம்மியாக்கி பிரமிடுகளில் வைத்தனர். அதன் பின் நறுமணத்தைலம் தயாரிப்பைச் செழுமைப் படுத்தி பயன்படுத்தியவர்கள் ரோமானியர்களும், அரேபியர்களும்தான். எகிப்தின் ஆதிகால நறுமணத் தைல பாட்டிலின் வயது 3,000 ஆகும். எகிப்தியர்கள்தான் முதன் முதல் கண்ணாடியிலான நறுமணத் தைல பாட்டிலைக் கண்டுபிடித்தவர்கள். அவர்கள்தான் கண்ணாடியை பொதுவான பயன் பாட்டிற்கு கொண்டுவந்தவர்களும் கூட.
எகிப்தின்.. பண்டைகால.. வேதியல்..!
எகிப்தில் முகத்தை பல வண்ணங்கள் கொண்டு அழகு செய்வதும், மம்மியின் கண் இமைக்கு வண்ணம் தீட்டுவதும் சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கிறது. அழகுப்பொருளுக்கான காஸ்மெடா என்ற வார்த்தை ரோமானிய அடிமைகளால் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அவர்கள், அவர்களது எஜமானர்களை வாசனைத் தைலம் கொண்டு குளிப்பாட்டுவார்களாம். ஆனால் கி.மு. 7,000-4,000 ஆண்டுகளில் ஆலிவ் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெயுடன் கலக்கப்பட்ட நறுமணச் செடிகளை இணைத்து புதிய கற்கால மக்கள் களிம்பு உருவாக்க பயன்படுத்தியதாய் தெரிய வருகிறது. ஆனால் பச்சைக் களிமண்ணில் கியூனிபாரம் எழுத்துக்கள் உருவாக்கிய பின்னரே, அனைத்து செய்முறைகளும் பதிவு செய்யப் பட்டன. முதல் வேதி விஞ்ஞானி தப்புட்டி பெலாட்டிகல்லிமின் (Thapputi -Belatikallim ) நறுமணத்தைலத் தயாரிப்பும் இப்படி பதிவு செய்யப்பட்டதுதான். எகிப்தில் சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆண்களும், பெண்களும் வாசனை மிகுந்த எண்ணெய் மற்றும் களிம்புகளை தங்களின் உடல் வாசனைக்காகவும், தோல் மென்மை பெறவும் தடவிக் கொண்டதாக தெரிய வருகிறது.
முதல் வேதி விஞ்ஞானி..பெண்..! தப்புட்டி பெலாட்டிகல்லிம். .!
மனிதனின் மிக துவக்ககால வேதியல் பதிவு என்பது சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிடைத்துள்ளன. மனித நாகரிகத்தின் தொட்டில் எனப்படும் மெசபடோமியாவிலேயே,மனிதனின் சுவையான வேதியல் ஈடுபாடு தெரிகிறது. அப்போது வேதியலை விஞ்ஞானமாகப் பார்க்காமல், கலையாகவே பார்த்தனர். உலகின் முதல் வேதி விஞ்ஞானி பெண் தானாம். அடிக்க வராதீர்கள் நண்பா. அதுதான் உண்மை..! இதை நான் சொல்லவில்லை நண்பரே.. . வரலாறு கூறுகிறது. முதன் முதல் வேதியல் தொடர்பான,களிமண் பதிவுகளும், தற்போது கண்டுபிடித்த அந்தக் காலத்திய நறுமணத்தைல தயாரிப்பின் மிச்ச சொச்ச பாத்திரங்களும், பாட்டில்களும், சைப்ரஸ் தீவிலுள்ள பைய்ர்கோஸ் மாவ்ரோராகி (Pyrgos Mavroraki)என்ற இடத்தில் கிடைத்துள்ளன. சைப்ரஸ் தீவு எகிப்துக்கு வடக்கில் மத்திய தரைக்கடலில் காண்ப்படும் பெரிய தீவாகும். இங்கே துவக்ககால மனித செயல்பாடுகளின் பொருட்கள், கி.மு பத்தாயிரம் ஆண்டுகால தொல்பொருட்களாக, நன்றாக பதப்படுத்தப்பட்டு பாதுகாப்புடன் இருந்தன. அவை புதிய கற்கால மனிதர்களின் சொத்துக்கள் எனறும் சொல்லப்படுகிறது. அவை அனைத்துக்கும் சொந்தக்காரர் ஒரு பெண் என்றும் தெரிய வருகிறது. எனவே முதல் வேதியியலாளர் ஒரு பெண் என்றும் அந்த தகவல்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன.அந்தப் பெண் வேதியியலாளர், ஏராளமான பொருள்களைக் கொண்டு, உடலில் தடவும் பலவகையான நறுமணத் தைலத்தை தயாரித்தாராம். அவர் பெயர் தப்புட்டி பெலாட்டிகல்லிம்( Thapputi -Belatikallim ) என்பதாகும். வரலாற்றைத் திருப்பிப் போட்ட பெண் தப்புட்டி.
உலகப் பதிவுகளில் முதன்மையான பெண்கள்..!
சரித்திரப் பதிவுகளின் துவக்கத்திலிருந்தே, பெண்கள் கலாச்சாரத்திலும், நாகரிக செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. அதிலும் தப்புட்டி, வேதியல் உலகை மக்களுக்கு மிகத் தெளிவாக தெரிவித்துள்ளார். அவை எதிர்கால மக்களுக்குப் பயன்படும் படியாகவும் தனது தயாரிப்புகள், அது தொடர்பான மூலப் பொருட்கள்
போன்றவற்றைத் தெளிவாக, பச்சைக் களிமண் பலகைகளில், கியூனிபாரம் எழுத்துக்களில் பதித்து வைத்துள்ளார். அவரை நாம் கட்டாயம் பாராட்டத்தான் வேண்டும்.
. கியூனிபாரத்தில்.. தப்புட்டியும்.. தைலம் தயாரிப்பும்..!
தப்புட்டி பெலாட்டிகல்லிமின் நறுமணத்தயாரிப்புகள் பற்றி
ஏராளமான தகவல்கள் கியூனிபாரம் பச்சைக்களிமண் பதிவாக பலகைகளில் உள்ளன..! இதுதான் உலகின் மிக,மிகப் பழமையான பதிவு என்றும் கூறப்படுகிறது.இந்த பதிவு மனித நாகரிகத்தின் தொட்டில் எனப்பட்ட மெசபடோமியாவில் இருந்திருக்கிறது. இந்த இடம் தற்போதைய ஈராக்கைச் சேர்ந்ததுதான். தப்புட்டிதான் உலகின் முதல் வேதியியலாளர் என்றும் உலக மக்களால் பல தடயங்கள் மூலமாக பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டும் வருகிறது.வினோதமான, வித்தியாசமான, அற்புதமான பெண்களைப் பற்றி எல்லாம் வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. அந்த முதன்மைப் பெண்களில் தப்புட்டியும் ஒருவர். மிகப் பழமையான நறுமணத்தைலம் தயாரித்த இடத்தை சைப்ரசில், 2005 ம் ஆண்டு,தோண்டி எடுத்தனர்.இந்த றுமணத்தைலம் தயாரிப்பு இடம் சுமார் 4,000 ௦௦௦ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் இதுதான் தப்புட்டியின் நறுமணத் தைலத்தொழிற்சாலை என்றும் சொல்லப்படுகிறது.
நறுமணத்தைலத் தொழிற்சாலை வளாகமும்.. மூலப்பொருள்களும்..!
தப்புட்டி வாழ்ந்த காலம் வெண்கல காலத்தின் துவக்கமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.அந்த தைலத் தொழிற்சாலையின் பரப்பு 35,000 சதுர அடி/4,000 சதுர மீட்டர்.. இவ்..ளோ.. பெரிய தொழிற்சாலையாக இருந்தால், அங்கு எவ்வளவு நறுமணத்தைலம் தயாரித்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.இப்படிப்பட்ட தயாரிப்புகள் எல்லாம் வெண்கலக் காலத்தில் நாம் கேள்விப்படாதவை. அந்த தொழிற்சாலை வளாகத்தில் 60 க்கும் மேற்பட்ட தைலம் காய்ச்சி வடிக்கும் கலங்கள், மூலிகை மற்றும் வேர்களைக் கலக்கும் பாத்திரங்கள், வடிகட்டும் புனல்கள், ஏராளமான நறுமணத் தைல பாட்டில்கள், அவைகளை நிரப்பத் தேவையான உபகரணங்கள் போன்றவை அந்தப் பகுதியிலிருந்து கிடைத்துள்ளன. மேலும் ஆதிகால மக்கள், செடிகள், பாதாம், மல்லி,மைர்டில் (Myrrtl) என்ற நறுமணச் செடி, குவிந்த காய் உடைய செடியின் பிசின்(Conifer resin) ,எலுமிச்சை மற்றும் கிச்சிலி போன்ற வாசனைப் பொருட்கள் பயன்படுத்தியே நறுமணத்தைலம் தயாரித்தனர். அப்போது மலர்களைப் பயன்படுத்தவில்லை.
தப்புட்டி பெலாட்டிகல்லிமின்.. திறமை..!
தப்புட்டி ஒரு நறுமணத் தைலத் தயாரிப்பாளர் மட்டுமல்ல அவர். அந்த மாளிகையின் மேற்பார்வையாளரும் கூட. அவர் அவரது சமகாலத்தவர்களை எல்லாம் விட திறமைசாலியாக முதன்மையாகத் திகழ்ந்தவர். அதானால்தான் உலகின் முதல் வேதியியலாளர் என்று பேசப்பட்டு பாராட்டவும்படுகிறார். தப்புட்டி தைலத் தொழிற்சாலையில் மிகவும் கடினமான பணிகளை எல்லாம் செய்திருக்கிறார். கியூனிபாரம் பதிவுகளில், தான் தயாரித்த நறுமணத் தைலங்களில் உள்ள மூலப் பொருட்கள் மற்றும் அவற்றைத் தயாரிக்கும் முறை பற்றியும் தெளிவாக எழுதி வைத்துள்ளார். அவற்றைப் பற்றிப் படிக்கும்போது அவர் தயாரித்த பொருட்கள் மிகவும் அரிதானவை என்றும் தெரிய வருகிறது.
ஆடம்பரம்,பகட்டை..பட்டயம் போட்ட.. நறுமணத்தைலம்..!
நாகரிகத்தின் துவக்க காலத்திலிருந்தே மனித இனம் நறுமணத் தைலத்தை நன்மணம் பரப்ப ,உருவாக்கி உலவ விட்டது என்பதுதான் உண்மை. .அந்த தைலத்திலிருந்து மிதந்து வரும் மென்மையான மணம் என்பது ஒருவரின் செல்வநிலையைத் தம்பட்டம் அடிப்பதாகவும், ஆடம்பரத்தை அறிவிப்பதாகவும்.அவர்களின் சலவைகல் அரங்குகளிலும் தூள் பரத்தியது.அந்த வாசனை..! அரச வம்சத்தினரும்,செல்வச்சீமான்களும், சீமாட்டிகளும்,தான் நறுமணத்தைலத்தில் குளித்து எழுந்தனர். பாமரர்களுக்கு அந்த வாய்ப்பு ஏது? அரசர்கள், செல்வந்தர்கள் பயன்படுத்திய நறுமணத் தைலங்கள் உடலின் மேல் தடவுவதாகவும்/தெளிப்பதாகவும், அல்லது தலையில் தடவுவதாகவும் இருந்தன. இந்த நறுமணத் தைலங்களை எல்லாம் காய்ச்சி வடித்தல் முறையில் தயாரித்ததாக தப்புட்டி அதன் குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.
காய்ச்சி வடித்தல். தப்புட்டியின் கண்டுபிடிப்பு..!
சில நறுமண மூலிகைகள், செடிகள் இவற்றின் மலர்கள், இலைகள் மற்றும் வேர்களைப் போட்டு காய்ச்சி, பின்னர் காய்ச்சி வடித்தல் முறையைப் பயன்படுத்தி தயாரித்துள்ளார். அதனால்தான் நறுமணத் தைலங்கள் தெளிவாக சுத்தமாக பளிச் சென்று உள்ளன. தப்புட்டி, காசித்தும்பை (balsam), கோரைப்புல் (Cyperus) மற்றும் வெள்ளைப்போளம் (myrrh) போன்றவைகளின் மலர்கள், வேர்கள் மற்றும் இலைகள் போன்றவற்றைப் போட்டு தப்புட்டி பெலாட்டிகல்லிம் காய்ச்சி வடிகட்டி, அந்த முறையிலேயே நறுமணத் தைலம் தயாரித்ததை பதிவுகள் தெரிவிக்கின்றன. அவர் நிறைய முறை அதில் தண்ணீர் ஊற்றி ஊற்றி பின்னர் அதன் ஆவி மூலம் வடிகட்டியே தைலம் தயாரித்தார்.இதுதான் நறுமணத்தைலம் தயாரிப்பு பற்றிய மிகப் பழமையான தகவல். அவர் நின்னு(Ninu) என்பருடன் இணைந்து ஆராய்ச்சியும் செய்தார். காய்ச்சி வடித்தல் முறையை முதலில் உலகுக்குச் சொன்னவரும் தப்புட்டியே..!
முதல் பதிவான நறுமணத்தைலங்கள்..!
முதன் முதல் நறுமணத்தைலம் எகிப்தில்தான் இருந்தது என்று சொல்லப்பட்டாலும், நமக்குக் கிடைத்துள்ள பதிவுகளின் படி, மிகப் பெரிய தொழிற்சாலையான பைய்ர்கோசின் (Pyrgos) நறுமணத் தொழிற்சாலைதான் 4,000 வயதானது.அதில் கிடைத்துள்ள நறுமணப் பாட்டில்களில் லேவேண்டர், ரோஸ்மேரி, பைன் மற்றும் மல்லி மணமுடைய நறுமணத் தைலங்கள் கிடைத்துள்ள்ளன. அவை அனைத்தும் ஆல்கஹால் கண்டுபிடிக்கும் முன்பே, காய்ச்சி வடித்தல் முறையில் தயாரிக்கப்பட்டவையாகும். ஆல்கஹாலின் வயது 3,000௦௦ தான். பின்னாளில் வந்த அவிசென்னாதான் ஆல்கஹால் கலந்து இந்த முறையைப் பயன்படுத்தி நறுமணத்தைலம் தயாரித்தார்.
பேராசிரியை பெல்ஜியார்னோ &குழுவின் கண்டுபிடிப்பு:
மேலே சொல்லப்பட்ட கதையை நம் முன்னே வைப்பவர்கள் இத்தாலியின் தொல்லியல் துறையைச் சேர்ந்த தொல்லியல் விஞ்ஞானி பேராசிரியை மரிய ரோசரியோ பெல்ஜியார்னோவும், அவரது குழுவினரும்தான். தொல்லியல் துறை விஞ்ஞானி பேராசிரியை மரிய ரோசரியா பெல்ஜியோர்னோ (Maria Rosaria Belgiorno) மற்றும் அவரது குழுவினர்,.சைப்ரஸ் தீவிலுள்ள லிமஸ்ஸோல் மாவட்டத்தில் பைர்கோஸ்(Pyrgos) என்ற இடத்தில் தொல்லியல் இடம் ஒன்று 2005 ல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த இடம் இத்தாலியின் தேசிய ஆராய்ச்சிக் குழுவினருடன் தோண்டி எடுக்கப்பட்டது.அதுதான் சைப்ரஸ் தீவில் பைய்ர்கோசிலுள்ள நறுமணத் தொழிற்சாலை. அந்த இடம் வெண்கலக் காலத்தின் துவக்கததைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டது. அந்த இடம் ஒரு தொழிற்சாலை வளாகமாக இருந்திருக்கிறது.மேலும் அங்கே ஒயின், நறுமணத்தைலம் மற்றும் துணிகளுக்கு சாயம் போடும் கருநீல வண்ணம் போன்றவை தயாரிக்கும் இடமாக இருந்திருக்க வேண்டும் என்றும் அறியப் பட்டுள்ளது. அவ்விடத்தில் மாளிகையின் மிச்ச சொச்சங்களும் இருந்தன.
4,000ஆண்டுகால நறுமணத்தைலம்.. தயாரிப்பு..!
பேராசிரியை மரிய ரோசரியோவும், அவரது குழுவினரும் மிகவும் கஷ்டப்பட்டு அந்த இடத்தை சேதாரமின்றி தோண்டி எடுத்தனர். அது மட்டுமல்ல. அந்த நறுமணத் தைலத் தொழிற்சாலையில் கிடைத்த 4 பாட்டில்களில் ஒட்டிக்கொண்டிருந்த நறுமணத் தைலத்தை வைத்துக் கொண்டு, அதிலிருந்து சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நறுமணத் தைலத்தையும் தயாரித்து விட்டனர். அது தொடர்பாகவும், எப்படி அவற்றித் தயாரிப்பது என்பது பற்றியும் பேராசிரியை பெல்ஜியார்னோ ஒரு புத்தகம்மும் எழுதி உள்ளார். பேராசிரியை பெல்ஜியார்னோ ஒவ்வொரு நறுமணத்தைலத்தையும் தயாரிக்க 6 மாதம் ஆயிற்று. அவற்றை அந்த கியூனிபாரம் பலகையில் கூறியுள்ள படியேதான் தயாரித்தார்.
மிச்ச சொச்ச தைலமும்.. புது நாமகரணங்களும்..!
அது மட்டுமின்றி, அங்கே இருந்த பாத்திரங்களிலேயே அவற்றைத் தயாரித்தார். அவற்றிற்கு, அப்ரோடைட் (Afridite), எலினா (Elena), ஆர்ட்டிமிடிஸ் (Artemides) மற்றும் எரா (Era) என்றும் பெயர் சூட்டினார். அப்ரோடைட் தைலத்தில் ஆலிவ் எண்ணெய், லாரல், கொத்தமல்லி மற்றும் டர்பண்டைன் இணைந்து இருந்தன. ஆர்ட்டிமிடிஸில் பாதாம், நறுமணச் செடி மைர்ட்ல் (Myrrtl), பார்ஸ்லி (Parseley) மற்றும் டர்பண்டைன் இருந்தன. எராவில் ஆலிவ் எண்ணெய், ரோஸ்மரி (Rosemary), பச்சை சோம்பு மற்றும் லாவண்டர் இருந்தது.
பழமை போன்ற புதுமை தயாரிப்பு..!
பேராசிரியை பெல்ஜியார்னோ இந்த நறுமணத்தைலம் பற்றிச் சொல்லும் கருத்தாவது. “இப்படி ஒரு செய்முறை இந்த காலத்தில் வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் 4,000 ஆண்டுகளுக்கு முன்னால் என்பது கற்பனை செய்ய முடியாத, நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விஷயம் என்பதே” அவர் கருத்து. தப்புட்டி செய்த்தைவிட. அவரின் செய்முறையை கியூனிபாரம் பலகைகளிலிருந்து படித்து, அந்த முறையிலேயே, பழமைவாய்ந்த நறுமணத்தைலம் தயாரித்த பேராசிரியை பெல்ஜியார்னோயும் அவரது குழுவினரும் பெரும் பாராட்டுக்குரியவர்கள் ஆவார்.
No comments:
Post a Comment