Search This Blog

Monday, January 7, 2019

ஓளவை கண்ட பெண்கள்!


படித்த கிழவியாக இருந்தாலும் காலமெல்லாம் பசியோடு போராடும் நிலையிலேயே இருந்தாள் ஒளவை. நீண்ட தூரங்களை நடந்தே கடந்தாள். சாதி பார்க்காமல் சகலரிடமும் வாங்கி உண்டாள். நாடோடி வாழ்க்கை வாழ்ந்த காரணத்தால் நிலையாக ஒரு வீடு இல்லை. ஆனாலும் அரசன் முதல் ஆண்டிவரை அனைவரிடமும் மிகுந்த செல்வாக்கு அவளுக்கு இருந்தது.
அப்படிப் பட்ட ஒளவையின் வாழ்விலும் மிகவும் கசப்பான சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன என்பதற்கு அவளின் சில பாடல்களே சான்றாக இருக்கின்றன. ஒரு கவிஞனின் பாடலில் இருந்து அவன் பிரச்சனைகளை அறிந்து கொள்ள முடியும். ஒளவையும் அதற்கு விதி விலக்கல்ல.
ஒளவை தன் வாழ்வில் பல குடும்பங்களைச் சந்தித்திருக்கின்றாள். அதந்தக் குடும்பங்களின் ஆடவர்களைப் பார்த்து அவள் பரிதாபப்பட்டிருக்கின்றாள். மனையாளால் துன்புறுத்தப்பட்ட பல ஆண்களையும் அவர்களுக்கு அவள் சொன்ன புத்திமதிகளையும் அவள் பாடல்களில் பல இடத்தில் காணலாம்.
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம்
அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம்-மெல்லிய
வாழைக்குத் தானீன்ற காய்கூற்றங் கூற்றமே
இல்லிற் கிசைந்தொழுகாப் பெண். (வாக்குண்டாம்)
படிக்காதவன் செய்யும் தவறுக்கு படித்தவன் கோபத்தில் சொல்லும் வார்த்தையே இயமனாக வந்து விடும். தரும வழியில் நடக்காத மனிதருக்கு இறுதியில் அறமே கூற்றுவனாக வந்து அழித்து விடும். மென்மையான வாழை மரத்துக்கு அதன் குலையே இயமனாக நின்று கொல்கின்றது. இது போல ஒரு மனிதனுக்கு யார் இயமன் என்றால் குடும்பவாழ்வை உணர்ந்து நடக்காத மனைவிதான் என்று சொன்னாள் ஒளவை. என்றோ அவள் சொன்னது பல வீடுகளில் இன்றும் பொருந்துகின்றது.
பெண்களின் குடும்பத்துக்கு ஒத்துவராத தன்மை பற்றிப் பாடின ஒளவை சில பெண்களின் வாய்க்கொழுப்பையும் விட்டுவைக்கவில்லை. ஒருவனுக்கு வீட்டிலே நல்ல மனைவி இருப்பாளாக இருந்தால் அந்த வீட்டிலே இல்லாத பொருள் என்று ஒன்றும் இல்லாமல் அவளாலேயே வீடு நிறைந்து இருக்கும். மாறாக கடுமையான சொற்களைப் பேசி எல்லோரோடும் வாக்குவாதம் செய்யும் பெண் வந்து ஒரு வீட்டில் சேர்ந்து விட்டால் அப்புறம் அது வீடாக இருக்காது. புலி இருக்கின்ற குகையாக மாறிவிடும் என்றாள் அவள்.
இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாளே யாமாயின்-இல்லாள்
வலிகிடந்த மாற்ற முரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும். (வாக்குண்டாம்)

மனைவி சரியில்லை. அப்போது என் செய்யலாம்? புத்திமதி சொல்லிச் சமரசம் செய்யலாமா என்றால் வேண்டாம் என்கின்றாள் ஒளவை. குற்றமுள்ள பாட்டுக்கு நல்ல இசை அமைத்தாலும் அதனால் என்ன பிரயோசனம். ஒழுக்கம் தவறிக் கொண்ட உயர்ந்த குலத்தை விட வேறு குலமாக இருப்பது நல்லது. பிறர் குறை சொல்லும் வீரத்தோடு இருப்பதை விட தீராத நோயோடு கிடப்பதே நல்லது. அது போல கெட்ட பெயர் வருவதைப் பொருட்படுத்தாமல் நடக்கும் மனைவியோடு வாழ்வதை விட தனியாகப் பிரிந்து போய் வாழ்வதே நல்லது என்பது அவளின் கருத்தாகும்.
இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று-வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி. (நல்வழி)

தனியாகப் பிரிந்து சென்று வாழ்வது என்றே முடிவாகிற்று. சரி எப்படிப் பிரிய வேண்டும்? பெற்றார் முன்னிலையிலா பெரியவர்கள் முன்நிலையிலா என்றால் ஒளவை சொன்னாள் அது ஒன்றும் வேண்டாம். பெண்சாதி நல்லவளாக இருந்தால் என்ன பிரச்சனை என்றாலும் சமாளித்துக் கொண்டு வாழலாம். சரியில்லை என்றால் கதைச்சு ஒன்றும் ஆகப் போவதில்லை.யாரும் சொல்லாமல் ஓடிப் போய் சன்னியாசி ஆகிவிடு என்றும் சொன்னாள் அவள்.
பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி வாழலாம் – சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள். (தனிப்பாடல்)

மேலே சொன்ன கருத்துக்கள் எல்லாம் ஒளவை சொல்லக் கூடாத கருத்துக்கள். அவள் தவ மூதாட்டி. தெய்வங்களோடு நேரடியாகத் தொடர்பு வைத்திருந்தவள். செந்தமிழைப் பேசும் நாக்குப் பெற்றிருந்தவள். அவள் ஏன் இப்படி மோசமாகப் பெண்களைத் தன் பாடல்களிலே தாக்கினாள் என்றால் அதற்கும் காரணம் இருக்கின்றது.
தான் வாழ்ந்த சமுதாயத்திடம் இருந்து பொன்னை பட்டாடையை வாகன வசதியை அந்தக் கிழவி கேட்கவில்லை. கூழ் கொடுத்தாலும் சந்தோசமாக வாங்கிக் குடித்துவிட்டுப் போகும் ஏழைப் பெண் அவள். ஆனால் அவளைச் சில மனிதர்கள் போற்றி அன்போடு வீட்டுக்கு சாப்பிட அழைத்துச் சென்ற போது அவர்களின் வீட்டுப் பெண்கள் சினந்திருக்கின்றார்கள். கணவன்மாரோடு எரிந்து விழுந்திருக்கிறார்கள்.
கணவனை அரிசி புடைக்கும் முறத்தால் அடித்த பெண்ணை அந்த ஆச்சி கண்டு வேதனைப் பட்டிருக்கின்றாள். வேண்டா வெறுப்போடு தனக்கு உணவு படைத்த பெண்ணைக் கண்டு அழுதிருக்கின்றாள். இந்த உணவைப் பார்க்க எனக்கு கண்கள் கூசுகின்றனவே வெட்கத்தால் சாப்பிட கைகள் மறுக்கின்றனவே பசி வர மறுக்குதே ஐயோ என் எலும்பெல்லாம் பற்றி எரிகின்றதே அன்பில்லாத ஒருத்தியிடம் வாங்கிச் சாப்பிடும் நிலை வந்துவிட்டதே என்று புலம்பியிருக்கின்றாள் அவள்.
காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே – வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தைய்யையோ
அன்பிலாள் இட்ட அமுது. (தனிப்பாடல்)

இவையெல்லாம் சேர்ந்து பொல்லாத கோபமாக உருவெடுக்க சொல்லாத வார்த்தைகளைச் சொன்னாள் அந்தத் தாய்.
இரா.ஞானசம்பந்தன்
(தமிழர் தகவல் 5.1.2019 இதழில் வெளியான எனது கட்டுரை இது)

No comments:

Post a Comment