Search This Blog

Sunday, January 24, 2016

இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர்

இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர்........ 1962 முதல் தமிழ் திரையுலகில் பல நல்ல, வெற்றிப் படங்களை வழங்கிய அற்புத இயக்குனர். சிவாஜி கணேசனை வைத்து 1967 முதல் 1987 வரை 20 படங்களை இயக்கியுள்ளார். அவை: தங்கை, என் தம்பி, இருமலர்கள், அன்பளிப்பு, திருடன், தெய்வமகன், எங்கிருந்தோ வந்தாள், எங்கமாமா, பாபு, தர்மம் எங்கே, பாரதவிலாஸ், அவன் தான் மனிதன், அன்பே ஆருயிரே, டாக்டர் சிவா, பைலட் பிரேம்நாத், விஸ்வரூபம், லாரி டிரைவர் ராஜாகண்ணு, வசந்தத்தில் ஓர் நாள், குடும்பம் ஒரு கோவில், அன்புள்ள அப்பா. எம்.ஜி.ஆரை வைத்து ஒரே படம்: அன்பே வா. மற்றும்....... வீரத்திருமகன், நானும் ஒரு பெண், காக்கும் கரங்கள், ராமு, அதே கண்கள், அவள், தீர்க்கசுமங்கலி, பத்ரகாளி, பெண்ஜென்மம், வணக்கத்துக்குரிய காதலியே.......... இன்னும் சில படங்களை இயக்கியுள்ளார்.
1963-ம் ஆண்டு ஏவி.எம். தயாரித்த படம் 'நானும் ஒரு பெண்.' இந்த படத்தை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். படத்தில் கறுப்பு பெண்ணாக விஜயகுமாரி நடித்து இருந்தார். கதாநாயகனாக எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்தார். கறுப்பாக பிறக்கும் பெண்களும் மனித இனம்தான். அவர்களுக்குள்ளும் நல்ல குணமுள்ள இதயம் இருக்கிறது என்கிற கருத்துக்களோடு, கறுப்புப் பெண்களுக்காக வாதாடிய படம் இது என்றே கூறலாம்.

இந்த படம் வெற்றிகரமாக ஓடியதால் ஏ.சி.திருலோகசந்தரின் வாழ்க்கைக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. அவர் புகழ் பெற்ற இயக்குனரானார். இந்த படம் பற்றி திருலோகசந்தர் கூறியதாவது:-

'நானும் ஒரு பெண்' கறுப்பு பெண்களுக்காக வாதாடிய படம். எனக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம். இந்தப் படத்தில் ஜெமினி-சாவித்திரியை நடிக்க வைக்க வேண்டும் என்று ëஅனைவரும் கூறினார்கள். அந்த எதிர்பார்ப்பிலிருந்து மாறுபாடாக இருக்கவேண்டும் என்று, ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் வாதாடி எஸ்.எஸ்.ராஜேந்திரனையும், விஜயகுமாரியையும் நடிக்க வைத்தேன். அவர்கள் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டினார்கள்.

'நான் அழுதாலும் ஜனங்கள் சிரித்து விடுவார்கள்' என்று கூறிய நாகேசை, அந்தப் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க வைத்தேன். பிற்காலத்தில் 'சர்வர் சுந்தரம்' மூலமாகவும்தான் சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை நிரூபித்தார்.' இவ்வாறு ஏ.சி.திருலோகசந்தர் கூறினார்.

இந்த 'நானும் ஒரு பெண்' என்ற படத்தை தெலுங்கிலும், இந்தியிலும் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். தெலுங்கு படத்தில் என்.டி.ராமராவும், இந்திப்படத்தில் தர்மேந்திராவும் நடித்தனர். 1965-ல் ஏவி.எம். தயாரித்த 'காக்கும் கரங்கள்' படத்தை ஏ.சி.திருலோகசந்தர் கதை எழுதி இயக்கினார். படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கினார். 1966-ம் ஆண்டு ஏவி.எம். தயாரிப்பின் முதல் கலர் படமான `அன்பே வா' வெளியானது.

இந்தப் படத்திற்கு, கதை எழுதி இயக்கினார், திருலோகசந்தர். எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, நாகேஷ், அசோகன் ஆகியோர் நடித்தனர். சிம்லாவில் படப்பிடிப்பு நடந்தது. எம்.ஜி.ஆர். பார்முலாவுக்கு முற்றிலும் மாறுபட்ட படம் 'அன்பே வா.' மற்ற படங்களைப் போல இல்லாமல் இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். பெரிய பணக்காரராக நடித்து இருப்பார்.

அவருக்கு இப்படத்தில் தாய், தந்தை, தங்கை யாரும் கிடையாது. சென்டிமெண்டை பிரதானமாக வைக்காமல் அவர் நடித்த படம். தனது அலுவல் சிக்கல்களிலிருந்து விடுபட்டு ஓய்வெடுப்பதற்காக தனது சிம்லா பங்களாவுக்கு செல்வார் எம்.ஜி.ஆர். அந்த பங்களாவை, ஏற்கனவே சரோஜாதேவிக்கு நாகேஷ் வாடகைக்கு கொடுத்து இருப்பார். இந்த நிலையில் நாகேசுக்கு பணம் கொடுத்து, சொந்த வீட்டில் சென்று தங்குவார், எம்.ஜி.ஆர். அங்கு இருக்கும் சரோஜாதேவியை காதலிப்பதுதான் கதை. மிகவும் கலகலப்பான படம். எம்.ஜி.ஆரை வைத்து ஏவி.எம். எடுத்த ஒரே படம் இதுதான்.

எம்.ஜி.ஆரை வைத்து ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய ஒரே படமும் இதுதான். `அன்பே வா' அனுபவம் பற்றி திருலோசந்தர்:- 'நான் `குமாரி' என்ற படத்தில் உதவி இயக்குனராக இருந்தபோதே எம்.ஜி.ஆருடன் நட்பு ரீதியில் பழகினேன். அப்போது எம்.ஜி.ஆர். கழுத்தில் தங்க சங்கிலி அணிந்து கொண்டு முழுக்கை சட்டையை மடக்கி அதற்குள் ரூபாய் நோட்டை சொருகி வைத்துக்கொண்டு படப்பிடிப்புக்கு வருவார். வந்தவுடன் தங்கசங்கிலியை கழட்டி எனது கழுத்தில் மாட்டிவிட்டு, 100 ரூபாயை எடுத்து என்னிடம் கொடுத்து விட்டு மேக்கப் போட சொல்வார்.

சூட்டிங் முடிந்த பிறகு, நான் அவற்றை அவரிடம் திருப்பிக் கொடுப்பேன். `அன்பே வா' ஒரு வித்தியாசமான கதை. அதை எம்.ஜி.ஆரிடம் கூறியபோது சிரித்தார். 'நீங்கள் ஆட்டுவிக்க போகிறீர்கள். நாங்கள் ஆடப்போகிறோம். நீங்கள் எதைச் சொன்னாலும் செய்கிறேன்' என்றார். எம்.ஜி.ஆரின் வழக்கமான பார்முலாவுக்கு மாறுபட்ட தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். `கிராபிக்ஸ்' இல்லாத காலகட்டத்தில் 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' என்ற பாட்டுக்கு கார்ட்டூன்களை மலர் தூவ வைத்தோம். அந்தப் பாடல் காட்சியை பிரமாண்டமாக எடுக்கவேண்டும் என்று சொன்னார்கள். நான், 'ஒரு ரிக்ஷாவைக் கொடுங்கள் போதும்.

அக்காட்சியை எடுத்துக் காட்டுகிறேன்' என்றேன். அதுபோல, ரிக்ஷாவை வைத்தே அந்த பாடல் காட்சியை எடுத்தேன். ஒரு காலண்டரில் அச்சாகி இருந்த நட்சத்திரங்களை படம் எடுத்து, அதைத் திரையில் ஓடவிட்டோம். 'தொடர்ந்து எனக்கு படம் பண்ணுங்கள்' என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கேட்டார். எனக்கு எம்.ஜி.ஆர். நல்ல நண்பர். அப்போது சிவாஜியை வைத்து நிறைய படம் எடுத்துக் கொண்டு இருந்ததால், எம்.ஜி.ஆரை வைத்து படம் இயக்க நேரம் கிடைக்கவில்லை. எனவே, 'அன்பே வா' மட்டுமே இயக்க முடிந்தது.' இவ்வாறு திருலோகசந்தர் கூறினார்.

ஏவி.எம். நிறுவனத்திற்காக வீரத்திருமகன், நானும் ஒரு பெண் (தமிழ், தெலுங்கு, இந்தி), ராமு (தமிழ், தெலுங்கு), அன்பே வா, அதே கண்கள் (தமிழ், தெலுங்கு), எங்கமாமா, அன்புள்ள அப்பா ஆகிய படங்களை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார்.

No comments:

Post a Comment