Search This Blog

Wednesday, November 19, 2014

மூன்று தமிழ் சங்கங்களிலும் ஈழத்தவர்களின் பங்களிப்பு ,,,,,,,,

தமிழ் வளர்க்க முற்காலத்தில் மூன்று சங்கங்கள் இருந்ததா என்பதற்கு முதலில் சான்றுகளையும் வாத பிரதிவாதங்களையும் அறிஞர்கள் கருத்துகளையும் பார்ப்போம்.பின்னர் சங்கங்கள் பற்றிய விபரங்களை தொகுப்போம்.முடிவில் அதில் ஈழத்தவர் பங்குபற்றினார்களா என்பதை தெளிவுபடுத்துவோம்.

கி பி 8 நூற்றாண்டில் இறையனார் களவியல் உரையில் தான் மூன்று சங்கங்கள் பற்றிய விபரங்கள் முதலில் தெரியவருகின்றது.பிற்கால ஆய்வாளர்கள் மூன்று சங்கம் இருந்தன என்று பலர் ஏற்றுகொள்கின்றார்கள்.சிலர் முதல் இரண்டு சங்கள் இருந்தது என்பதை ஏற்றுகொள்ள சான்றுகள் போதாமல் இருந்தாலும் மூன்றாவது ஒரு சங்கம் இருந்தது என்று கூறுகின்றார்கள்.இவ்வாறு கூறுபவர்களில் டாக்டர் எஸ். கிருட்டினசாமி அய்யங்கார், கே.ஏ. நீலகண்ட சாத்திரியார், இரா. இராகவ ஐயங்கார், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகியோர் முக்கியமானவர்கள். சிலர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது என்பது முழுதும் கற்பனை கதைகட்டல் என்கின்றார்கள்.அவர்களில் கே.என். சிவராச பிள்ளையும், பி.தி. சீனிவாசய்யங்காரும் குறிப்பிடத்தக்கவர்கள்.இதில் வாத பிரதிவாதங்களாக முன்வைக்கும் கருத்துக்களின்படி எல்லோர் கருத்திலும் நியாயம் இருக்கிறது.ஆனால் முடிவில் சங்கம் இருந்ததை ஏற்றுகொள்ள வேண்டியே இருக்கிறது.

எம் முன்னோர்களின் வரலாறுகளை பார்க்கும் பொழுது அவர்கள் அறிவு பூர்வமாக எம்மை விட பலமடங்கு அறிவாளிகள் என்பது உண்மையான விடயம்.விமானங்களில் பயணம் செய்தார்கள் என்பது போன்ற விடயங்களை கற்பனை என்றவர்களும் இன்றைய நிலையில் ஏற்றுகொள்ள முன்வருகின்றார்கள். உலகில் மத்திய தென் அமேரிக்கா நாடுகளிலும் எகிப்திலும் இருக்கும் 200 வரையான பிரமிட்டுக்களை 4000/4700 ஆண்குகளுக்கு முன் கட்டினார்கள்.அவ்வாறான உறுதியான கட்டிடங்களை இன்றைய எமது நவீன வசதிகளை கொண்டு கட்டமுடியாமலே இருக்கிறது.எம் முன்னோர்கள் அவ்வாறு வாழ்வியலில் பல சாதனைகளை செய்து இருக்கின்றார்கள் என்பது ஆராச்சியாளர்கள் நாளுக்கு நாள் கொண்டுவரும் புராதன தகவல்களில் இருந்து அறியமுடிகின்றது.ஞாபக சக்தியிலும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலிலும் அவர்கள் எம்மை விட பல மடங்கு மேன்மையானவர்கள்.அவர்கள் எமக்காக பல முன் ஏற்பாடுகளை வாழ்வில் செய்து எமக்கு வாழ வழிகாட்டியவர்கள் சங்கம் வைத்து தாய் மொழியையும் வளர்த்து இருப்பார்கள் என்பதை தமிழ் உலகம் ஏற்றுகொள்கின்றது.

சங்கங்கள் ஏன் 3 ஒன்றாக தொடர்சியாக இருக்கவில்லை என்ற கேள்வி யாருக்காவது வருமாயின் அதற்கு முக்கியமான காரணமாக பலரும் வைக்கும் தரவு முதல் 2 சங்கங்களின் அழிவுக்கும் கடல் அழிவு ஒன்றுதான்.கடை சங்க அழிவுக்கு காரணம் களப்பிரர்களின் வருகையும் தமிழத்தின் வீழ்சியும்.அதற்கு பின்னர் பல்லவர்காலத்தில் தொடங்கிய வளர்சி இன்றுவரை தொடர்ந்தாலும் மேற்கு நாட்டவர்கள் வருகையால் பிற மொழிகளின் பாதிப்பால் இன்று ஒரு இக்கட்டான நிலையில் தான் தமிழ் மொழி இருக்கிறது.

கி பி 250/300 அளவில் மூன்றாம் சங்கம் களப்பிரர்கள் தமிழகத்தை கைப்பற்ற முடிவுக்கு வருகிறது என்று பார்த்தால் அதற்கு முதல் மொத்தமாக 9990 ஆண்டுகள் தமிழ் வளர்த்தார்கள் என்று பார்த்தால் முதல் சங்கம் அண்ணளவாக கி மு 9690 அளவில் ஆரம்பித்து இருக்கின்றார்கள்.9990 ஆண்டுகள் என்பது இறையனார் கி பி 8ம் நூற்றாண்டு கணிப்பு ஆனால் கடைசங்க புலவர் நக்கீரனார் கணிப்பின் படி முதல் சங்கம் தொடங்கியது. கி மு 9000 ஆண்டளவில் அத்திலாந்து சமுத்திரம் என்ற நூல் எழுதிய மேலைத்தேச ஆய்வாளர் முதல் மிக பெரிய கடல் அழிவு ஏற்பட்டது என்று குறிப்பிட்ட காலம் கி மு 9583 ஆண்டாகும். இந்த கடல் கோளின் பின்னரே முதல் சங்கம் உருவாகி இருக்க வேண்டும்.இந்த கடல் அழிவில் குமரிக்கண்ட பகுதிகள் அழிந்தது என்றாலும் இரண்டாவது கடல் கோளில் தான் தென் மதுரை அழிந்தது என்று வரலாற்றில் வருகின்றது அந்த இரண்டாவது கடல் கோள் நடந்த காலம் கி மு 6087 முதல் சங்கம் 4440 வரிடம் நடந்தது என்ற இறையனார் கருத்து இங்கு பிழைக்கின்றது. அந்த கணக்கு சரியாக வரவேண்டும் என்றால் முதல் சங்கம் கி மு 10 527 இல் தொடங்கி இருக்க வேண்டும்.முதல் கடல் அழிவு நடந்த காலம் கி மு 9583 ,,ஆனால் கந்த புராண வரலாறு நடந்த காலம் என்று ஈழத்து புலவர்கள் கணித்துள்ள காலம் கி மு 9000 ஆகும்.முதல் சங்கத்தில் முருகன் ,அகத்தியர் ,சிவன் ,நாகராஜன் என்போரை புலவர்களாக குறிப்பிடபட்டு உள்ளதால் அகத்தியர் ஈழம் வந்து முருகனுடன் தமிழ் கற்று அங்கிருந்து பொதிகை மலை சென்றார் என்று ஒரு புராண வரலாற்றில் வருகின்றது.எனவே கடை சங்க புலவர்களில் ஒருவரான நக்கீரர் குறிப்பிட்ட கி மு 9000 என்ற காலபகுதி முதல் சங்கம் தொடங்கியகாலமாக இருக்கும்.கிமு 9583 இல் பெரும் கடல் அழிவுகளை சந்தித்து மீள் இணைந்த மக்கள் வளர்சி பெற்று வர சில நூற்றாண்டுகள் தேவைபட்டு இருக்கும்.வரலாற்றில் சூரன் காலத்துக்கு பின்னரும் ஒரு சிறு கடல் கோள் வருகின்றது.

இந்த கடல் கோளிலும் முருகன் புரிந்த போர் அனர்தியிலும் தான் வீர மகேந்திரம் அழிந்தது.சூரன் காலம் கி மு 9583/9000 இடைப்பட்ட காலமாக கருதலாம்.பண்டிதமணி கணபதிப்பிள்ளை
பண்டிதமணி சின்னத்தம்பி போன்ற அறிஞர்கள் சூரன்காலத்தை கி மு 9000 முற்பட்டது என்று உறுதிபடுத்துகின்றார்கள். அதனால் அண்ணளவாக கி மு 9000 என்பது சரியானதாக இருக்கும்.முதல் சங்க காலம் 4440 என்பது அடுத்த கடல் அழிவு கி மு 6087 ஏற்பட்டதால் மிகைபடுத்த பட்டதாக இருக்கலாம் முதல் சங்க புலவர்கள் தொகை 4449 என்று கூறுகின்றார்கள் இது ஆய்வுக்கு உரியவிடயம்.அந்த காலத்தில் வாழ்ந்த ஒன்றிணைந்த தமிழர்களின் தொகை 80 கோடி என்று சில புராண தரவுகள் கூறுவதால் புலவர்கள் எண்ணிகை அந்தளவு இருக்கலாம்.(9000...6087)2913 ஆண்டுகள் 89 அரசர்கள் ஆண்டார்கள் என்பது ஏற்றுகொண்டாலும் இவர்கள் பாண்டியர்கள் என்பது ஒரு புகழ் மாலை சூடும் முற்றிலும் பொய்யான கூற்று என்று நான் கூறுகின்றேன்.

அதற்கு ஆதாரமாக தென் மதுரை என்பது இன்றைய இந்தியர்கள் கற்பனை பண்ணும் மதுரைக்கு கீழே பக்கத்தில் இல்லை. தென் மதுரை என்று ஆய்வு செய்த வரைபடம் காட்டும் இடம் ஆய்வாளர்கள் பட விளக்கத்தோடு உறுதிப்படுத்தும் இடம் ஆபிரிக்க மடகஸ்காருக்கும் அவுஸ்ரெலியாவுக்கும் அண்ணளவாக நடுவிலும் இலங்கையின் அம்பாந்தோட்டைக்கு நேர் தெற்கு பக்கமாக அதே சமதூரத்தில் மடகஸ்கார் அவுஸ்ரேலிய நேர்கோட்டை 90 பாகையில் வெட்டி சந்திக்கும் இடத்தில் இருக்கிறது.எனவே இன்றைய மதுரையை கி ,மு 500 பிற்பட்ட காலத்தில் பாண்டியன் ஆண்டான் என்பதை வைத்து கி மு 6087 ம் ஆண்டுக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அதாவது கி மு 9000 ஆண்டு ஆரம்பிக்கபட்ட தென் மதுரை சங்கத்தை பாண்டியன் காய்கின வழுதி முதல் கடுங்கோன் வரை ஆரம்பிக்க வைத்து பாதுகாத்தார்கள் என்பது வெறும் பொய் புகழ் மாலையே தவிர உண்மை இல்லை. மூவேந்தர் ஆட்சி தொடங்கி முதலில் சேரர்கள் ஆள்வதாக வரும் காலம் கி மு 500/600 காலப்பகுதிதான்.அதற்கு முதல் மூவேந்தர் பற்றிய செய்திகள் சேர சோழ பாண்டியர் என்ற பெயரில் எங்கும் உறுதிபடுத்த தக்கவகையில் இல்லை என்பதே உண்மையாகும்.அதற்கு முற்பட்ட காலத்தில் இவர்கள் நாக வம்சமாகவோ சூரிய வம்சமாகவோ ,சந்திர (குரு)வம்சமாகவோ ,யது வம்சமாகவோ இருந்தார்கள் என்பதே உண்மை.எனவே முதல் சங்கத்தை கி மு 9000 ஆண்டுகளுக்கு முன்னம் பாண்டியன் ஆரம்பித்தான் பாதுகாத்தான் என்பது முழு பொய்யான விடயம்.எனவே இந்த கருத்தை திரும்ப திரும்ப அவர் கூறினார் இவர் கூறினார் என்று எழுதுபவர்கள் மறுபடியும் எழுதுவதற்கு முன்னம் சிந்திக்கவும்.

முதல் சங்கத்தை உருவாக்கியவர்கள் அகத்தியனார், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள். குன்றெறிந்த முருகவேள், முரிஞ்சியூர் முடிநாகராயர், நீதியின் கிழவன், என இவர்களை குறிப்பிடுகின்றார்கள். இதில் போதிய அளவு உண்மை இருக்கிறது.பொதிகை மலையில் வாழ்ந்தவர் அகத்தியர் என்ற கருத்து இருக்கிறது. பொதிகை மலை நான் மேலே குறிப்பிட்ட தென் மதுரைக்கு பக்கத்தில் தான் இருந்திருகின்றது என புவியியல் வரைபடத்தில் உள்ளது.அகத்தியர் முருகனிடம் வந்து கதிர்காமத்தில் தமிழ் கற்றது, இராவணனுடன் இசை போட்டியில் வென்றது என வரலாறுகள் இருக்கிறது.அகத்தியர் தவ முனிவராக இருந்ததால் பல காலம் சிரஞ்சீவியாக வாழ்ந்து இருக்கலாம். இமய மலையில் தவ வலிமையால் இன்றும் முனிவர்கள் சில நூற்றாண்டுகளை தாண்டியும் வாழ்கின்றார்கள் என்பது இதற்கு ஆதாரம்.(பதினெண் சித்தர்களில் பிற்காலத்தில் போகருக்கு முன் இருந்த அகத்தியர் இவர் இல்லை சித்த அகத்தியரும் போகரும் சீனர்கள்.அவர்கள் ஏன் வந்தார்கள்,ஏன் தமிழை கற்றார்கள் ,அகத்தியர் பெயரை பாவித்தார்கள் என்பன புரியாத புதிர்.வைத்திய முறைகள் பல நல்ல தமிழ் குறிப்புக்கள் முன்வைத்ததால் தமிழர்களுக்கு பயன்பட்டார்கள் என்பது உண்மை. அவர்கள் சீனர்களுக்கு எம்மை விட அதிகம் இங்கு வந்ததால் பயன்பட்டு இருப்பார்கள் என்பதும் திண்ணம் )அடுத்து சிவனையும் முருகனையும் முடி நாக அரசனையும் நீதியின் கிழவன் என்பவர் தட்ஷன் மாமனார் மனுவாக இருக்கலாம்.சிவன் தென்னாட்டில் வாழ்ந்தவர் என்பது மாணிக்கவாசகர் போன்றவர்கள் கூற்று.முருகன் கதிர்காமத்திலும் ஆறுபடை வீட்டிலும் இருந்தவர் என்பது பல புராண கூற்று.நாக ராஜன் நாகலோகத்தை அந்த காலத்தில் ஆண்டவராக இருக்கலாம். மனு தட்ஷனின் மனைவி பிரசூதி தந்தையாக வருபவர் இவர் நீதி சாஸ்திரங்களை வகுத்தவர்.இவர்கள் அனைவரும் வாழ்ந்த காலத்தை ,இடத்தை முதல் சங்கம் உருவாகிய காலத்தை நோக்குகையில் ஏற்றுகொள்ளதக்க விடயமாகும்.முதல் சங்க காலத்தில் எழுந்த நூல்களாக பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை ஆகியவற்றை குறிப்பிட்டு உள்ளார்கள் இவை எதுவும் பிற்காலத்தவருக்கு கிடைக்கவில்லை.இவற்றை எழுதுவதற்கு இலக்கண நூலாக பாவிக்கபட்டது அகத்தியம் என்று கூறப்படுகின்றது.

முதல் சங்கத்தை உருவாக்கியவர்கள் குமரி கண்ட தமிழர்கள்.அவர்கள் வம்சாவழியினர் இன்று உலகெங்கும் வேறு வேறு இனங்களாக கூட பிரிந்து வாழ்கின்றார்கள். ஒரு பகுதியினர் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் இன்னும் தமிழர்களாக வாழ்கின்றார்கள் என்பதுதான் உண்மையாகும்.அதலால் எனது இந்த தலைப்பின் படி முதல் தமிழ் சங்கத்தில் இணைந்த குமரி கண்டத்தில் வாழ்ந்த ஈழத்தவர்களும் பிரிந்து சென்று இன்று ஆபிரிக்க நாடுகளில் வாழ்பவர்களும் மத்திய தென் அமெரிக்க நாடுகளில் வாழ்பவர்களும் பங்கு பெற்றார்கள் என்று கூறலாம்.இதற்கு வரலாறு எழுதும் பாதையில் தனித்தே இந்தியர்கள் உரிமை கோர முடியாது.

அடுத்து இரண்டாம் சங்கம்
முதல் சங்கம் கி மு 9583 லும் அழிவுகளை சந்தித்து இருந்த தென்மதுரை கி மு 6087 லும் வந்த கடல் அழிவால் முழுமையாக அழிவடைந்து இல்லாமல் போக அதில் தப்பியவர்கள் வம்சத்தில் வந்தவர்கள் இரண்டாம் சங்கத்தை கபாட புரத்தில் ஆரம்பித்தார்கள். இரண்டாம் சங்கம் 3700 வருடங்களாக நிலைத்தது.இந்த சங்கமும் கி மு 2387 இடையில் வந்த கடல் அழிவால் அழிந்தது என்று கருதப்படுகின்றது. (கி மு 6087 இல் இருந்து 3700 வருடங்களை கழித்து பார்க்க கி மு 2387 வருகின்றது ஆனால் கடல் அழித்து உடனடியாக சங்கம் தொடங்கி இருக்க வாய்ப்பு இருக்குமா என்பது சிந்திக்க வேண்டிய விடயம். மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து அழிவுகளில் இருந்து தங்கள் கட்டமைப்புக்களை மீளமைத்து கொள்ள கொஞ்ச காலம் எடுத்திருக்கும் என்பது யதாத்தமானது)எனவே 3700 வருடங்கள் 3700 புலவர்கள் இந்த சங்கத்தை வழிநடத்தினார்கள்.59 அரசர்கள் பாதுக்காத்தார்கள் என்ற கூற்றுக்கள் ஏற்றுகொள்ள கடினமானவை.3700 வருடங்கள் 59 அரசர்கள் ஆண்டார்கள் என்றால் ஒருவர் 62 வருடங்களுக்கு மேல் ஆண்டு இருக்க வேண்டும் இது உண்மை நிலைக்கு புறம்பானது .இந்த அரசர்களும் பாண்டியர்கள் என்பது உண்மைக்கு புறம்பான கூற்று.எனவே கி மு 6087 க்கும் கிமு 2387 இடையில் இடைச்சங்கம் நிலவியது என்பதை மட்டும் ஏற்றுகொள்ளலாம் நடை பெற்ற காலம் புலவர்கள் எண்ணிக்கை பாதுகாத்த அரசர்கள் எண்ணிக்கை என்பது வேறுபடலாம் .இந்த சங்கம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பொதுவான ஒரு இடத்தில் இலங்கை வடமேற்கு பகுதியில் தென் இந்தியாவின் தென் கிழக்கு பகுதியில் இருந்து இருக்கலாம் என்று கி மு2387 இல் வந்த கடல் அழிவு தாக்கிய பகுதிகளின் எடுகோளை வரலாறுகளை வைத்து ஊகிக்க மட்டுமே முடிகின்றது. பூகோள ரீதியான கபாட புரத்தின் வரைபடம் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை.இந்த சங்கத்திலும் தென் இந்தியர்களும் ஈழத்தவர்களும் புலவர்களாக இருந்து தமிழை வளர்த்தார்கள் என்று கூறலாம்.

இரண்டாம் தமிழ் சங்கத்தை தொடங்கியவர்களாக தொல்காப்பியனார், இருந்தையூர்க் கருங்கோழி மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக் கோமான், கீரந்தை போன்றவர்கள் கருதப்படுகின்றார்கள்.இந்த காலத்தில் பாடப்பட்ட நூலகாக கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் என்பன கருதப்படுகின்றன.

அடுத்து மூன்றாவது தமிழ் சங்கம்
இந்த சங்கம் கி மு 2387 இல் ஏற்பட்ட கடல் கோளில் கபாட புரம் மூழ்கிய பின்னர் அண்ணளவாக 800 வருடங்களின் பின்னர் தான் அறிவு சார் பெரியோர்கள் ஒன்று கூடி உருவாக்கி இருக்கின்றார்கள். அதாவது கிமு 1550 இல் உருவான இந்த சங்கம் 1850 ஆண்டுகள் கி பி 300 வரை நடந்ததாக கூறுகின்றார்கள். சில ஆய்வாளர்கள் கருத்துப்படி கி மு 200/300 தொடக்கம் கி பி 250/300 வரையான காலம் என்கின்றார்கள். இந்த காலத்தில் மதுரையை பாண்டியர்கள் ஆண்டார்கள் என்ற கூற்று சரியானது இந்த காலத்தில் பாண்டியர்கள் ஆதரவு சங்கத்துக்கு இருந்தது என்பதை ஏற்றுகொள்ளலாம்.சில புலவர்களின் பாடல்களும் வேறு சில சான்றுகளும் அதை உறுதி படுத்துகின்றன.முன்னைய சங்கங்களோடு ஒப்பிடும் பொழுது மூன்றாவது சங்கத்தில் புலவர்கள் குறைவாகவே இருந்து இருக்கின்றார்கள்.எனவே இந்த சங்கத்தின் இறுதி 500/600 வருடங்கள் இந்த சங்கத்தை பாண்டியர்கள் பாதுகாத்தார்கள் புலவர்களை இணைத்து தமிழ் வளர்த்தார்கள் என்ற கருத்தை தாராளமாக ஏற்றுகொள்ளலாம். அந்த காலத்தில் மூவேந்தர் அரசாண்ட காலம்.அதை விடுத்து 9990 வருடங்கள் பாண்டியர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள் என்பது அதீத கற்பனை அவர்களுக்கு கீர்த்தி உண்டாக்க கூறப்பட்ட புகழ்மாலை.

மூன்றாம் தமிழ்சங்கத்தை தொடக்கியவர்களாக சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடை அரனார், பெருங்குன்றூர் கிழார், இளந்திரு மாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மதுரை மருதன் இளநாகனார், கணக்காயர் மகனார் நக்கீரனார் போன்றவர்கள் கருதப்படுகின்றார்கள்.இந்த காலத்தில் பாடப்பட்ட நூல்களாக, நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை என தொடங்கி ஐம்பெரும் காப்பியங்களும் இதிகாசங்களும் இந்தகாலத்தில் தான் எழுத்துருவம் பெற்றன.மூன்றாம் சங்ககாலத்தில் ஈழத்து பூதத்து தேவனார் என்று ஈழத்து புலவர் இருந்தார் என்று பல சான்றுகள் இருக்கின்றன.

கி மு 200/300 காலத்தில் ஈழத்தின் வடக்கு ,வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட ஒரு கடல் கோளால் மணி பல்லவம் என்று கூறப்படும் யாழ் தீவுகள் அடங்கிய யாழ் குடாநாட்டு பகுதி பெரும் சேதத்துக்கு உள்ளானது. இந்த கடல் அழிவால் தான் யாழ் தீவுகளும் மன்னார் முனை தீவும் உருவாகி இருக்க வாய்ப்புள்ளது.இந்த கடல் அழிவால் பெரும் தொகையான மக்கள் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்தார்கள்.இவர்கள் இந்தியாவின் தொண்டை மண்டலத்தில் இணைந்து வாழ்ந்தார்கள்.இதை கிரேக்க ஆய்வாளர் தொலமி தனது குறிப்பில் நாகர்கள் கோர மண்டலத்தில் வாழ்ந்தார்கள் என்று கூறுகின்றார்.கோர மண்டலம் என்று அவர் குறிப்பிட்டது சோழ மண்டலம் என்று அறிஞர்கள் இன்று கூறுகின்றார்கள்.தொண்டை மண்டலத்தை கடல் அழிவால் நாகர்கள் இடம் பெயர்ந்த காலத்தில் ஆண்டவர்கள் சோழர்கள் என்பது சரியானது.

இடம் பெயர்ந்த ஈழ மக்கள் சிறிது காலத்தின் பின்னர் மணி பல்லவதுக்குள் உட்புகுந்த கடல் நீர் வற்றி மணல் திடல்களாக பொலிவிழந்து மணற்றி என்ற பெயரை பெற்று இருந்த காலத்தில் தங்கள் தாயகமான மணிபல்லவத்துக்கு ஒரு பகுதியினர் திரும்பி வந்து சென்று வளப்படுத்தி வாழதொடங்கினார்கள்.நாகர்கள் மீள் வருகையை யாழ்பாடி கவிவீரராகவர் வரலாற்றோடு பல வரலாற்று ஆசிரியர்கள் தொடர்புபடுத்தி இருந்தார்கள் (இதை தான் கடை சங்க காலத்தில் யாழ்பாணம் மணற்றி என்று அழைக்கபட்டது என்று இலக்கியங்களில் வருகின்றது )ஏனையவர்கள் தொண்டை மண்டலத்தில் அவர்களுக்கு அந்த காலத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்ததால் அங்கேயே வாழ தொடங்கினார்கள்.

மணிபல்லவத்தில் இருந்து வந்தவர்கள் நாகரி எழுத்தை எழுதும் திறமை உடையவர்கள்.இவர்கள் வந்த காலத்தில் தமிழத்தில் நாகரி எழுத்தில் எழுதப்பட்ட பல நூல்கள் உருவாகின. அவை ஈழத்து புலவர்களின் கையெழுத்தால் உருவானதா என்ற சந்தேகம் எழுகின்றது.பொதுவாக யோசித்துபாருங்கள்.அதுவரை செவி வழியில் பேணப்பட்டு வந்த தொல்காப்பிய செய்யுள்கள் ,இராமாயணம், மகாபாரதம்,என்பன மூலபிரதி நாகரி எழுத்து வடிவில் இருப்பதால் தான் இன்று அது வடமொழி ஆளர்கள் எழுதியது என்கின்றார்கள்.நாகரி எழுத்துதான் தமிழர்களின் புராதன எழுத்துவடிவம் என்பதை அக்காலத்தவர் நன்றாக அறிவார்கள்.இன்று எம்மவர்கள் எழுத்து இல்லாத சமஸ்கிருதத்துக்கு கடன் கொடுத்துவிட்டு அது எமது எழுத்து இல்லை என்று வாதாடி மறுக்கின்றார்கள்.ஈழத்தவர்கள் கடல் அழிவால் தென்னிந்தியா வந்து 200 வருடங்களின் பின்னர் தான் திருக்குறள் கூட எழுதப்பட்டது.திருவள்ளுவர் வள்ளுவர் குலம் என்பதில் இருந்து அவர் வம்சம் புராதன நாகவம்சம் என்பது தெளிவாகின்றது.அவருக்கு பல காலத்தால் முந்தியவர்கள் தாய் தந்தையர் பெயர்களை வரலாறுகளில் எழுதும் தென்னிந்திய எழுத்தாளர்களுக்கு அவரது தாய் தந்தையரை தெரியவில்லை அல்லது தெரிந்தும் மறைத்து வந்து இருக்கின்றார்கள்.இதனால் அவரும் ஈழத்தவரா என்ற சந்தேகம் வருகின்றது.இல்லை அவர் இந்தியர் தான் என்று நிருபிக்க முடியுமானால் அவர் உண்மை வரலாற்றை வெளியில் கொண்டுவாருங்கள்.திருவள்ளுவருக்கு தென்னிந்தியர் கடல் நடுவில் தான் தெய்வ புலவருக்கு பெரிய சிலை அமைத்து இருக்கின்றார்கள். இதுவும் கடல் கடந்து வந்தவர் வழி வந்தவர் என்ற சிறப்பை அடக்கி இருக்குமா என்பதும் சிந்திக்க தக்க விடயம்.

தென்னிந்திய மற்றும் ஈழத்து புலவர்களோடு இயங்கிய மூன்றாம் சங்கம் அதாவது கடை சங்கம் கி மு 250/300 களப்பிரர்கள் தென்னிந்தியாவுக்குள் புகுந்த பொழுது அழிவுகளை சந்தித்தது. அவர்கள் புலவர்களை தாக்கினார்கள் தென்னிந்தியர்கள் வழிபாட்டு முறைகளில் பல இடைஞ்சல்களை புகுத்தினார்கள், இதனால் தான் தென்னிந்திய வரலாற்றில் களப்பிரர்கள் காலம் இருண்ட காலமாக கருதப்படுகின்றது.இந்த களப்பிரர்களை 300 வருடங்களுக்கு மேலாக செய்த கடும் சண்டைகளுக்கு பின்னர் முழுமையாக அழித்து கி பி 575 இல் சைவத்தையும் தமிழையும் தமிழர்களையும் காப்பாற்றியவர்கள்.ஈழத்தில் இருந்து தென்னிந்தியா சென்று தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த மணி பல்லவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.பல்லவர்கள் ஈழத்தவர் என்பதை ஈழத்தின் சிறந்த ஆய்வாளர்களில் ஒருவரான முதலியார் இராசநாயகம் அவர்கள் தனது யாழ்பாண சரித்திரம் என்ற நூலில் ஏற்கனவே தெளிவாக கூறி இருக்கின்றார்.

பல்லவர்கள் முழுமையான தமிழகத்தை கைப்பற்றி கோவில்களை கட்டினார்கள் சிற்பகலை ஓவியக்கலை கட்டிட கலை என்பனவற்றோடு பக்தி இலக்கியங்களையும் வளர்த்தார்கள்.களப்பிரர் காலத்தில் சைவத்துக்கு இடையூறாக தோன்றிய காளாமுகர்கள் கபாலிகர்களை மற்றும் பல இடைஞ்சலான சமயங்களை அகற்றி .சைவ சமயத்தை ஒளிபெற செய்தார்கள். தங்கள் தாய் தெய்வ வழிபாட்டை தமிழகத்தில் மேன்மைபடுத்தினார்கள் இவர்கள் காலத்தில் தோன்றிய கிபி788/820ஆதி சங்கரர் தோன்றி சக்தி வழிபாட்டை முழு இந்தியாவிலும் மீண்டும் புத்துயிர் பெற செய்தார்.பல நூல்கள் எழுதினார்.பல்லவர் கால இறுதியில் தான் நாம் இன்று பயன்படுத்தும் தமிழ் நெடுங்கணக்கு எழுத்துவடிவம் உருவாக்கம் பெற்றது.அதற்கு முன் நாகரி எழுத்தில் தான் வரலாறுகளை எழுதி வந்தார்கள்.பல்லவர்கள் இறுதி காலத்தில் தான் தமிழை ஆதரித்தார்கள் என்று பலர் அறியாமல் எழுதி வருகின்றார்கள். அதற்கு காரணம் அவர்கள் தமிழை எழுத தமிழர்கள் கண்டுபிடித்த நாகரி எழுத்தை பலகாலமாக பயன்படுத்தினார்கள் என்பதால் முன்வைக்கப்படும் பொய் குற்றசாட்டு.தமிழையும் தமிழர்களையும் வையகத்துள் நீடூழி வாழ வைத்தவர்கள் பல்லவர்கள்.

எனவே ஈழத்தமிழர்கள் மூன்று தமிழ் சங்கங்களில் மட்டும் அல்ல இன்றைய தமிழின் வளர்சிக்கும் அடிக்கல் நாட்டிவைத்து தாய் மொழியையும் தாய் நிலங்களையும் காப்பாற்றியவர்கள் இன்று ஈழத்தில் அவர்களை காப்பாற்றுவதற்கு உலகத்தின் உதவியை நாடி நிற்கின்றார்கள்.இது காலத்தின் கொடுமை.,,,,,,,,,நன்றி வணக்கம் ,,சிவமேனகை ,