Search This Blog

Tuesday, November 19, 2013

இந்திரா படுகொலை : சீக்கியர்கள் பார்வையில் !

இந்திரா படுகொலை : சீக்கியர்கள் பார்வையில் !
=====================================

இந்திரா காந்தி ஏன் அவரது பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார், சீக்கியர்களின் புனித பொற்கோயிலின் மீது இராணுவத்தை ஏவியதால் ஆத்திரமுற்ற சீக்கிய மதத்தைச் சார்ந்த அவரது பாதுகாவலர்கள் அவரை சுட்டுக் கொன்றனர் இதுதான் வரலாறு கூறும் செய்தி. ஆனால் சீக்கியர்களிடம் வேறு ஒரு காரணத்துக்காகத்தான் இந்திரா காந்தி கொல்லப்பட்டார் என்று ஒரு கருத்து உண்டு. இந்திரா படுகொலைக்கான காரணம் குறித்து குறித்து இணையத்தில் தேடிய போது இன்னொரு அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. இது சீக்கியரின் சார்பான இணையங்களில் மட்டுமே காணக்கிடைக்கிறது . சங்கத் சிங் என்பவர் எழுதிய "வரலாற்றில் சீக்கியர்கள்" ( The Sikhs in History ) என்ற நூலில் எழுதப்பட்டுள்ளது.


அன்றைய காலத்தில் அதாவது இந்திராவின் ஆட்சியில்தான் பாகிஸ்தான் எதிர்ப்புணர்வு அதிகமாக இருந்தது. சோவியத் ஆதரவு நாடாக இருந்த இந்தியா அண்டை நாடுகளுடன் (சீனா, அமெரிக்க ஆதரவு நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான்) சுமூகமான உறவுடன் இருக்கவில்லை. விடுதலை நாடான பின் இந்தியாவின் மிக மோசமான நாள்களாக இருந்தவைதான் இந்திராவினால் கொண்டுவரப்ப்ட்ட அவசரநிலைப் பிரகடனம். காஷ்மீர் பிரச்சனை, பஞ்சாப்பின் பிரிவினைவாதம் ஆகியவை உச்சத்தில் இருந்தன. பாகிஸ்தானுடன் போர் மூளும் நிலையும் இருந்தது. இந்திராவின் இறுதிச்சடங்கிற்காக வந்திருந்த பாகிஸ்தான் அதிபர் முகமது ஜியா-உல்-ஹக் இவ்வாறு கூறினார். "அல்லா சொர்க்கத்தில் இருக்கையில், ரீகன் வெள்ளை மாளிகையில் இருக்கையில், இந்திராகாந்தியின் சாம்பல் இமயமலைகளில் தூவப்பட்டபின் எனக்கென்ன கவலை". அதாவது இந்திரா காந்தி உயிருடன் இருந்திருந்தால் இந்தியாவுடனான போரைத் தவிர்க்க இயலாது, அவர் இறந்து விட்டதால் தற்போது போர் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது என்ற பொருளில் அப்படிக் கூறினார்.

சீக்கியர்களின் கருத்துப்படி, இந்திரா சீக்கியர்கள் மீது மிகப்பெரும் இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட கொடூரமான திட்டம் தீட்டியிருந்ததாகவும் அதைக் கண்டுகொண்ட இந்திரா காந்தியின் காவலர்களான பீந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோர் சீக்கியர் இனத்தைக் காக்கவே அந்தப் படுகொலையை செய்தனர். அந்த நடவடிக்கையின் பெயர் அமைதி நடவடிக்கை எனப்படும் Operation Shanti. இதன்படி பஞ்சாப்பில் பாகிஸ்தான் இராணுவத்திற்கெதிரான போரில் சீக்கியரையும் சேர்த்து அவர்கள் மீதும் போர்தொடுத்து மிகப்பெரும் அழிவை உண்டாக்குவது, அதே நேரம் இந்தியா முழுவதும் இளைஞர் காங்கிரஸ் கும்பலைக் கொண்டும் சீக்கியர்களை கலவரம், கொலை, கொள்ளைகள் மூலம் அழிப்பது என்பதே "அமைதி நடவடிக்கை"யின் சாரம்.

பொற்கோயில் தாக்குதலில் பல சீக்கியர்கள், பிந்தரன்வாலே கொல்லப்பட்ட பிறகும் இந்திராகாந்தி மனநிறைவு அடையவில்லை. எனவே அதைவிட பலமடங்கு கொடிய ஒரு திட்டம் தீட்டப்பட்டு, அது குறித்து முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனைகளும் நடத்தப்பட்டுவிட்டன. இந்தத் திட்டத்தின்படி குரு நானக்கின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் சீக்கியர்கள் கூடியிருக்கும் வேளைகளில் நவம்பர் மாதத்தின் முதலிரண்டு வார நாட்களில் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்குவது, காஷ்மீர் எல்லையிலல்ல பஞ்சாப் எல்லையில். பாகிஸ்தானின் எல்லையோரத்திலுள்ள ஜலந்தர், அமிர்தசரஸ், குருதாஸ்பூர், ஃபெரோஸ்பூர், கபுர்தலா ஆகிய மாவட்டங்களில் மீது வான்தாக்குதல் இராணுவ, துணை இராணுவத்தாக்குதல் மூலம் அழிப்பது என்பது திட்டம். இதற்குத் தோதாக பாகிஸ்தான் இராணுவத்தை சிறிது உள்வாங்க அனுமதித்து விட்டு, அதன்மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் சீக்கியர்களுக்கு அழிவை உண்டாக்குவது என்பது திட்டம். காரணம் கேட்டால் பாகிஸ்தான் படையெடுக்கிறது, அதற்கு ஆதரவாக சீக்கியர்களும் அவர்களுடன் இணந்து கொண்டு இந்தியாவுக்கெதிரான போரில் ஈடுபட்டார்கள் என்று பரப்புரை செய்துவிட வேண்டியது சீக்கியர்களுக்கெதிரான இந்த எதிர்ப்புணர்வைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் இளைஞர் காங்கிரஸ் குண்டர்களைப் பயன்படுத்தி அவர்களுக்கெதிரான கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டு இனப்படுகொலையை ஏவுவது இதுதான் அமைதி நடவடிக்கை.

இதற்காக கொல்லப்படுவதற்கு (அக்டோபர் 31, 1984) மூன்று நாள்கள் முன்பு 1984 அக்டோபர் 27 -ம் நாளில் காஷ்மீர் சென்ற இந்திராகாந்தி இராணுவத் தளபதியான வைத்யா என்பவரைச் சந்தித்து, பாகிஸ்தான் எதிர்பாராவிதமாகத் தாக்குதல் நிகழ்த்தினால் எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்குமாறு அறிவுறுத்தச் சென்றார் என்பது இந்திராகாந்தியின் முதன்மை உதவியாளரான பி.சி. அலெக்ஸாண்டர் என்பவரின் குறிப்பில் இருக்கிறது. அதாவது பஞ்சாப்பில் தாக்குதல் நடத்தும் வேளையில் பாகிஸ்தான் காஷ்மீர் எல்லையிலும் போரை தொடங்கும் நிலை வரலாம் என்பதற்காக. 1993 - ம் ஆண்டில் பாகிஸ்தான் அதிபரான குலாம் இஷாக் கான் இந்திரா காந்தி பாகிஸ்தானுடன் போருக்கு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் பத்து நாட்கள் முன்பாகவே கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்திரா காந்தியின் இந்த இரகசியத் திட்டம் அவரது சிறப்பு உதவியாளரான ரஜிந்தர் குமார் தவான் (இவர்தான் இந்திரா காந்தியின் கொலையையின் சாட்சி) என்பவரின் மூலமாக அறிந்த பீந்த் சிங் என்ற சீக்கிய காவலர் சத்வந்த் சிங் என்ற மற்றொரு சீக்கிய காவலருடன் இணைந்து இந்திராவை சுட்டுக் கொன்றார்கள். சுட்டபின்பு துப்பாக்கிகளைக் கீழே போட்டுவிட்டு "நான் செய்ய வேண்டியதை செய்து விட்டேன். நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள்" என்று கூறினார் பீந்த் சிங். இதனால்தான் சீக்கியர் மீதான போரைத் தடுத்தற்காகவே இந்திரா கொல்லப்பட்டார் என்று கருதுகின்றனர் சீக்கியர்கள்.

நன்றி : தமிழ்வினை இணையம் .

No comments:

Post a Comment