Search This Blog

Monday, August 5, 2019

சுமந்திரன் சட்டத்தரணியா? or அரசியல் பிரதிநிதியா?


 
Karunakaran Sivarasa
அரசியல் ரீதியாக மேற்கொள்ள வேண்டிய பல விடயங்களைச் செய்யாமல் விட்டுவிட்டு அந்தத் தவறுகளை மறைப்பதற்காக நீதி மன்றில் வழக்காடி வென்றதாகப் படம் காட்டுவது தமிழர்களை படு முட்டாளாக்கும் செயற்பாடே...
அரசியல் தீர்மானங்களைச் சரியாக எடுத்திருந்தால் அல்லது தீர்மானங்களை எடுப்பதற்கு முயற்சித்திருந்தால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கும். இப்படி நீதிமன்றப்படிகளில் ஏறி இடைக்காலத் தடை உத்தரவு என்ற சில்லறைத் தீர்வுகளைப் பெற வேண்டி வராது...
இதைத்தான் முன்னரும் தமிழ்த் தலைவர்கள் செய்தனர். தங்களுடைய அரசியல் பணிகளைச் செய்யாமல் அவர்கள் பிரபல சட்டத்தரணிகளாகவே புகழ் பெற்றனர்...
அரசியற் தலைவர்களாகச் செயற்பட்டிருந்தால் பல விடயங்களில் முன்னேற்றமும் மாற்றமும் ஏற்பட்டிருக்கும்.
ஏனென்றால் அரசியல் என்பது வித்தை அல்ல. அது ஒரு விளைவு.
ஆகவே தமிழ்ச்சனங்களின் காதுகளில் பூவைப்பதை விட்டு விட்டு ஆக்கபூர்வமாக - அரசியல் ரீதியாகச் செயற்பட்டு தீர்வைக் காண முயற்சியுங்கள். 
  அரசியலில் சுமந்திரன் கீழிறங்குவதையும் மனோ கணேசன் மேலுயர்வதையும் பார்க்கிறோம். இருவரும் ஆட்சியிலுள்ள ஐ.தே.க அரசாங்கத்தையே ஆதரிக்கின்றனர். மனோ கணேசன் வெளிப்படையாக ஆதரிக்கிறார். சுமந்திரன் மறைத்துச் சுழித்து விளையாட முற்படுகிறார். ஆனால் மனோ அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டிய இடத்தில் ஆதரிக்கிறார். எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்க்கிறார். நெருக்கடியைக் கொடுக்க வேண்டிய இடத்தில் நெருக்கடியைக் கொடுக்கிறார். இதுதான் சாணக்கிய அரசியல். அவரே சொல்வதைப்போல தேவைக்கேற்ப ஆதரவாளராகவும் எதிர்த்தரப்பு ஆளாகவும் செயற்படுகிறார்.

ஆனால், சுமந்திரனோ எப்போதும் ரணிலையும் அவருடைய அரசாங்கத்தையும் பாதுகாப்பதையே குறியாகக் கொண்டிருக்கிறார். ரணிலுக்குத் தலையிடி என்றால் பதறிப்போய் பனடோலும் தண்ணீருமாக ரணலின் காலடியில் நிற்கிறார். இதுதான் சனங்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. இதை மறைப்பதற்கே அவர் நீதி மன்றத்தின் மூலமாகப் போராடுவதாகக் காட்டுகிறார். இதில் இரண்டு வகையான உத்திகளைச் சுமந்திரன் கையாள முற்படுகிறார்.

1. மனோ கணேசன் போன்றவர்கள் ஏற்படுத்துகின்ற நெருக்கடியிலிருந்து ரணிலைக் காப்பாற்றுவது. அதாவது, தமிழர்களுக்குச் சாதகமான அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன என சிங்கள மக்களிடம் கேள்வி எழுந்தால், அப்படியெல்லாம் இல்லை. இது நீதி மன்ற நடவடிக்கையே தவிர, அரசியல் ரீதியானதல்ல என்று காட்டுவதற்கு.

2. அரசியல் தீர்மானமாக இவற்றை மாற்ற முடியாதவாறு நீதி மன்ற விவகாரமாக முடக்கி வைத்திருப்பது.

ஆக மொத்தத்தில் தானும் செய்யாமல் மற்றவர்களையும் உருப்படியான காரியங்களைச் செய்ய விடாமல் தடுக்கும் வேலை இது.


ஆனால், இதைச் சனங்கள் உணராத விதமாக தான் இலவசமாக வழக்குப் பேசுவதாகக் காண்பிக்கிறார் சுமந்திரன்.

நஞ்சை இலவசமாகக் குடிக்கக் கொடுப்பதைப் போன்ற காரியம் இது.

இல்லையென்றால் தமிழர்கள் எல்லாம் பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிப்பதற்குச் சம்மதம் என்று சொல்லியிருப்பாரா? அதுவும் பாராளுமன்றத்தில்....

இதற்குப் பிறகும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக்கட்சியும் ஈழத்தமிழருடைய அரசியலின் விடிவெள்ளியாகச் செயற்படும் என்று யாராவது கனவு கண்டால் அதை விட முட்டாள் தனம் வேறில்லை.

அந்தரங்கத்தின் முகம்

Karunakaran Sivarasa

அந்தரங்கத்தின் முகத்தை இன்று,
இப்பொழுது,
இதோ இந்தக் கணத்தில் காண்கிறேன்
தலையைச் சற்றுக் குனிந்து
புருவத்தை உயர்த்திப் பார்க்கிறது நம்மை
நமுட்டுச் சிரிப்போடு
அந்தப் பார்வையும் அந்தச் சிரிப்பும்
என்னைத் திறக்கிறது பலவாக
என்னை ஊடுருவுகிறது ஆழத்தில்

இதுவரை எடுத்த எல்லா எக்ஸ்ரேக்களையும் விட
எல்லா ஸ்கான்களையும் விட
இந்த அந்தரங்கத்தின் ஊடுருவல் வலியது...

அந்தரங்கம் மெல்ல உடைக்கிறது ஒவ்வொன்றையும்.
அப்போது நாறி மணப்பதென்ன?
மின்னலாகப் பளிச்சிடுவதென்ன?
ஜில்லெனக் குளிர்வதென்ன?
நெருப்பாகச் சுடுவதென்ன?

எல்லாமே நானே சேகரித்ததா?
அவளுடைய நினைவுகளும் சிரிப்பும்
அந்தக் குதூகலங்களும்...
அந்த இரண்டு பேரையும் கொன்று புதைத்ததும்
முதிராப் பெண்ணைக் கையளைந்த போது
அவள் கண்ணீர்த்துளிகளைக் கண்டு அதிர்ந்ததும்
ஏடன் தோட்டத்தில் யாருமறியாது
பழம் பறித்துப் புசித்ததும்
.........
ஓ...
புலன்களை அடைக்க முற்படுகிறேன்
ஏதோ வாடை தலைக்குள் ஏறுகிறது
கண்களைக் கூசச் செய்யும்
அந்தரங்க ஒளியின் முன்னே நிலையிழக்கிறேன்.

“துணை” என்ற குறும்படம்

“இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் மறுமணம் பற்றிய உரையாடல்களைச் செய்யப்போகிறோம்?” என்று கேள்விகளை எழுப்புகிறார் வி. சபேசன். “துணை” என்ற குறும்படத்தை இதற்காகவே அவர் ஒரு வழியாக எடுத்திருக்கிறார். இந்தப்படம் இன்று (04.08.2019) கிளிநொச்சி - கருணா நிலையத்தில் திரையிடப்பட்டது.
மறுமணம் பற்றிப் பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. உடனடியாக உங்களுக்கு நினைவுக்கு வருவது ரத்தக் கண்ணீர். இதைவிடப் பல குறும்படங்களும் இலக்கியப் பிரதிகளும் தமிழில் வந்திருக்கின்றன. ஈ.வெ.ரா இதைப்பற்றி நிறையப் பேசியிருக்கிறார். முன்னோடிகளாகப் பலர் மறுமணத்தைச் செய்து காட்டியிருக்கிறார்கள். எங்களுடைய குடும்பத்தில் கூட மறுமணம் செய்திருப்பதாக பழைய சுவடிகள் சொல்கின்றன. அம்மாவின் தாயாரான ஆச்சியின் தம்பி மூன்று திருமணங்களைச் செய்திருக்கிறார். ஆனால் கருணாநிதியைப்போலவோ கண்ணதாசனைப்போலவே அல்ல. எம்.ஜி.ஆரைப்போல என்று சித்தப்பா பகடியாகச் சொல்வார். ஒருவர் இறந்த பிறகு மற்றவர். அவர் இறந்த பிறகு அடுத்தவர் என்று. இளவயதிலேயே இவ்வளவும் நடந்ததால் அவர் மறுமணம் செய்ததைப்பற்றி யாரும் புகார் கொண்டதாகத் தெரியவில்லை. சொத்துக்குளைக் குறித்தும் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை.
1940 க்கு முதல் மறுமணம் செய்து கொள்வதென்பது ஈழத்தில் - குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பெரிய விசயமாகக் கொள்ளப்பட்டதில்லை. அன்று மருத்துவ வசதிகள் குறைவு. இதனால் ஏற்படும் இளவயது மரணங்கள் மறுமணத்துக்கான சூழலை அல்லது நிலைமையை உருவாக்கியுள்ளன என்று தோன்றுகிறது. குறிப்பாக பெண்கள் குழந்தைப்பேறு காலங்களில் கூடுதலாக மரணமடைந்திருக்கிறார்கள். இந்த மாதிரிப் பேறு கால மரணங்கள் நிகழும்போது காயாசுவாதம், கடுங்காய்ச்சல் என்றெல்லாம் பேசப்பட்டது நினைவிலுண்டு.
இளவயதில் துணையின்றி வாழ்வது கடினம் அல்லது பிள்ளைகளுக்கு ஆதரவு தேவை என்றெல்லாம் யோசிப்பவர்கள் மறுமணத்துக்கு முன்வருகிறார்கள். சிலருக்கு மறுமணம் உவப்பாக இருப்பதில்லை. அப்படியானவர்கள் அவர்களுடைய விருப்பப்படியே வாழலாம். இதெல்லாம் அவரவர் விருப்பமும் சுயாதீன நிலைப்பாடுமாகும். எதற்கும் கட்டுப்பாடுகளோ அழுத்தங்களோ வேண்டியதில்லை. ஆனால் மறுமணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு எந்த வகையிலும் குடும்பத் தடைகளோ சமூக மறுப்புகளோ வேண்டியதில்லை.
இவற்றைப்பற்றியெல்லாம் விரிந்த தளத்தில் பேச வேண்டும் என்று உணர்த்துகிறது துணை. 
Karunakaran Sivarasa