Search This Blog

Wednesday, November 4, 2020

நடிப்பிலும் நடனத்திலும் முத்திரை பதித்தவர் ஈ.வி.சரோஜா.



தமிழ்ப்படவுலகில் நடிப்பு, நடனம் ஆகிய இரு துறைகளிலும் சிறந்து விளங்கி பிரபலமான, மிகக் குறைவான நடிகைகளில், இவ்விரு துறைகளிலும் முத்திரை பதித்து, ஏராளமான ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றவர் ஈ.வி.சரோஜா என்பது மிகையன்று.
இவரது சொந்த ஊர் திருவாரூரை அடுத்த, எண்கண் என்ற
கிராமமாகும்.வேணுபிள்ளை-ஜானகி தம்பதியருக்கு ஒரே மகளாக, 1935ஆம் ஆண்டில் பிறந்தவரான சரோஜா, தனது ஏழாவது வயதிலேயே தந்தையை இழந்தார்.நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த சரோஜாவை, இவரின் தாயார், அக்கால நடன மேதையான வழுவூர் ராமய்யா பிள்ளையிடம் பயிற்சிக்கு அனுப்பவே, அவரும் சரோஜாவை சென்னைக்கு அழைத்துச் சென்றார்.
வழுவூர் ராமய்யா பிள்ளையிடம் நடனக் கலைகளை கற்றுக் கொண்டு நன்கு தேர்ச்சி பெற்ற சரோஜாவின் நாட்டிய அரங்கேற்றம் 1951ஆம் ஆண்டில் சென்னை ரசிக ரஞ்சினி சபாவில் நீதிபதி ஏ.எஸ்.பி.அய்யர் முன்னிலையில் நடந்தேறியபோது, அனைத்து தரப்பினரின் பாராட்டு மாலைகள் ஒருசேர சரோஜாவுக்கு குவிந்தன.இந்த வேளையில் சிவாஜி கணேசன் நடித்து வந்த ‘என் தங்கை’ என்ற நாடகத்தை அதே பெயரில் அசோகா பிக்சர்ஸ் பட நிறுவனத்தார், எம்ஜிஆரை நாயகனாக்கி திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டிருந்தனர்.
இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு தங்கையாக மீனா என்ற பாத்திரத்தில் நடிப்பதற்கு இளம்பெண் ஒருவரை பட அதிபர்கள்
தேடிக் கொண்டிருந்தனர்.நடன நிகழ்ச்சியில் சரோஜாவை பார்த்த இவர்கள், தங்கள் படத்தில் இவரை நடிக்க வைப்பதற்கு முடிவெடுத்து அவரை ஒப்பந்தம் செய்தனர்.பார்வையற்றப் பெண்ணான மீனாவின் நடிப்பு இந்தப் படத்தில் மிக முக்கியமான வேடமாகும்.தங்கைக்காக தனது வாழ்வையே அர்ப்பணிக்கும் ஏழை அண்ணன் ராஜேந்திரனாக,
எம்ஜிஆரின் உணர்ச்சிப்பூர்வ நடிப்பும், அதற்கு ஈடாக சரோஜாவின் உருக வைக்கும் பாத்திரமும், படத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கின.இதில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை எடுத்த எடுப்பிலேயே சரோஜா கவர்ந்தார்.
அடுத்து 1954இல் டி.ஆர்.மகாலிங்கத்தின் சொந்தப் படைப்பான சுகுமார் புரொடக்க்ஷன்ஸ் ‘விளையாட்டு பொம்மை’ படத்தில்
குமாரி கமலாவுடன் இணைந்து சரோஜா நடித்தார்.தொடர்ந்து 1955இல் ஏ.பி.நாகராஜனின் ‘பெண்ணரசி’ படத்திலும் எம்ஜிஆருடன் ‘குலேபகாவலி’ படத்திலும், ஆர்.எஸ்.மனோகர் நடித்த ‘நல்ல தங்காள்’ படத்திலும், ஜெமினி கணேசன் நடித்த ‘நீதிபதி’ படத்திலும் அடுத்தடுத்து சரோஜா நடித்தார்.1956இல் தங்கவேலுவுடன் ‘அமரதீபம்’ படத்தில் தோன்றிய சரோஜா, இந்த ஆண்டில் ‘நன்நம்பிக்கை’, ‘பாசவலை’, ‘மறுமலர்ச்சி’, ‘மதுரைவீரன்’, ‘ரம்பையின் காதல்’, ஆகியப் படங்களிலும் திறம்பட நடித்தார்.
‘எங்க வீட்டு மகாலஷ்மி’, ‘கற்புக்கரசி’, ‘நீலமலைத் திருடன்’, ‘புதுமைப்பித்தன்’, ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ ஆகியப்
படங்கள் 1957ஆம் ஆண்டில் சரோஜாவின் அபார நடிப்புடன் திரைக்கு வந்தன.தொடர்ந்து ‘கடன் வாங்கிக் கல்யாணம்’, ‘காத்தவராயன்’, ‘குடும்ப கௌரவம்’, ‘பிள்ளைக்கனியமுது’, ‘பூலோக ரம்பை’ ஆகியப் படங்கள் 1958இல் சரோஜாவின் நடிப்பு நடனம் இரண்டையும் புலப்படுத்தி வெளியீடு கண்டன.1959இல் ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’, ‘சுமங்கலி’, ‘தங்கப்பதுமை’, ‘மனைவியே மனிதனின் மாணிக்கம்’ ஆகியப் படங்களிலும் சரோஜா இடம் பெற்றார்.
சரோஜாவின் அற்புத நடிப்பை புலப்படுத்தும் விதமாக 1960இல் ‘
ஆட வந்த தெய்வம்’, ‘மணப்பந்தல்’, ‘பங்காளிகள்’, மற்றும்
‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ ஆகியப் படங்கள் திரைக்கு வந்தன.தொடர்ந்து ‘கைதி கண்ணாயிரம்’, ‘படிக்காத மேதை’, ‘பாட்டாளியின் வெற்றி’, ‘இரத்தினபுரி இளவரசி’, ‘ராஜபக்தி’ ஆகியப் படங்கள் இவரின் நடிப்பை பாராட்டும் விதமாக ரசிகர்களை மகிழ்வித்தன.1961இல் ‘பாக்கியலஷ்மி’ படத்திலும், 1962இல் ‘வீரத்திருமகன்’ படத்திலும் சரோஜாவின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும் நடனமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன.
இவர் தனது சகோதரர் ஈ.வி.ராஜனுடன் இணைந்து, ஈ.வி.ஆர் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி 1963ஆம் ஆண்டில் ‘கொடுத்து வைத்தவள்’ என்ற படத்தையும் 1969இல் ‘தங்கச் சுரங்கம்’ என்ற படத்தையும் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கொடுத்து வைத்தவள் படத்தில் எம்ஜிஆருக்கு இணையாக சரோஜாவின் நடிப்பு தரமாக அமைந்திருந்தது.இப்படத்தில் பித்தனாக விடும் எம்ஜிஆரை சந்தர்ப்பவசத்தில் மணந்து கொள்ளும் துர்ப்பாக்கியப் பெண்ணாக சரோஜா திறம்பட நடித்திருந்தார். எம்ஜிஆருடன் இவர் பாடும் ‘என்னம்மா சௌக்கியமா எப்படி இருக்குது மனசு’ என்ற பாடல், இவரை ரசிகர்களின் கண் முன்னே கொண்டு வரும் இனிமையானப் பாடலாகும்.
தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஏறத்தாழ 70 படங்களில் நடித்திருக்கும் சரோஜா, எம்ஜிஆருடன் நடித்திருந்த ‘கொடுத்து வைத்தவள்’ படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு இல்லத்தரசியாகவே தனது வாழ்நாளைக் கழித்தார்.பிரபல இயக்குநர் டி.ஆர். ராமண்ணாவுக்கு இரண்டாவது மனைவியான இவருக்கு நளினி என்ற பெயரில் ஒரே ஒரு மகள் உண்டு.சரோஜா 1974ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியிடமிருந்து கலைமாமணி விருது பெற்றார்.2002ஆம் ஆண்டில் முத்தமிழ் பேரவை சார்பில் ‘நாட்டிய செல்வி’ என்ற விருதையும், 2004ஆம் ஆண்டில் தமிழக அரசின் எம்ஜிஆர் விருதையும் சரோஜா பெற்றுள்ளார்.
மதுரை வீரன் படத்தில் ‘வாங்க மச்சான் வாங்க’, ஒன்று பட்டால் உண்டு வாழ்வு படத்தில் ‘சல சல ராகத்திலே’ மற்றும் ‘துணிந்தால் துன்பமில்லை’, மணப்பந்தல் படத்தில் ‘உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்’, பாக்கியலஷ்மி படத்தில் ‘காதலெனும் வடிவம் கண்டேன்’ மற்றும் ‘காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே’, கொடுத்து வைத்தவள் படத்தில் ‘நீயும் நானும் ஒன்று’ மற்றும் ‘மின்னல் வரும் தேதியிலே மழை பொழியும்’ ஆகியப் பாடல்கள் சரோஜாவின் அபிநயங்களை நினைவுக்கு
கொண்டு வரும் ரம்மியமானப் பாடல்களாகும்.
நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா, 2006ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 3ஆம் நாள் உயிரிழந்தார்.நடிப்பு, நடனம் இவையிரண்டிலும் திறம்பட மிளிர்ந்த ஈ.வி.சரோஜாவின் மறைவு, ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதை மறுப்பாரில்லை.

புலவர் மணி ஏ.பெரியதம்பி பிள்ளை



புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை
கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டக் கவிதைப் பாரம்பரியத்தின் சிறப்பு மிக்க ஒருவராக விளங்குகின்றார். இவர் கவிஞர் மாத்திரமல்ல, கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர், இலக்கிய ஆய்வாளர், மேடைப் பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி.
பிறப்பு-ஜனவரி 8, 1899
மட்டக்களப்பு.
இறப்பு-நவம்பர்2.1978 (அகவை 79)
தேசியம்-இலங்கைத் தமிழர்
வாழ்க்கைச் சுருக்கம்.
மட்டக்களப்பு மாவட்டம், மண்டூரில் ஏகாம்பரப்பிள்ளை வண்ணக்கர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் பெரியதம்பிப்பிள்ளை. மண்டூரில் உவெசுலியன் மிசன் தமிழ்ப் பாடசாலையில் வே. கனகரத்தினம், மு. தம்பாப்பிள்ளை ஆகியோரிடம் ஆரம்பக்கல்வியைக் கற்ற இவர் யாழ்ப்பாணத்துப் புலோலியைச் சேர்ந்த சந்திரசேகர உபாத்தியாயர் என்பாரிடம் தமிழ் படிக்கத் தொடங்கினார். தொடர்ந்து உயர்கல்வியினைக் கல்முனையிலும் கற்றார். பின்னர் யாழ்ப்பாணம் சென்று நாவலர் காவியப் பாடசலையில் சேர்ந்து தனது கல்வியைத் தொடர்ந்தார். நாவலர் காவியப்பாடசாலையில் புலவர்மணி அவர்களோடு, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையும் சக மாணவராகக் கல்வி பயின்றார். அங்கே புலவர்மணி ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் முறையாகக் கற்றுத் தமிழில் பாண்டித்தியம் அடைந்தார். அவர் காவியப் பாடசாலையில் மாணாக்கராயிருந்த காலத்தில் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பண்டிதர் மயில்வாகனனாரிடத்திலும் (சுவாமி விபுலாநந்தர்) இடையிடையே சென்று பாடங்கேட்டு வந்தார்.
1926 ஆம் ஆண்டில் திருகோணமலை இந்துக் கல்லூரி, கத்தோலிக்க ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, மட்டுநகர் அரசினர் உயர்தரக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
கவிகள் இயற்றல்.
வெண்பா யாப்பினைக் கையாண்டு கவிதை இயற்றுவதில் புலவர்மணி மிகவும் திறமைமிக்கவராக விளங்கினார். எளிமையான சொற்களைக் கையாண்டு எல்லோருக்கும் இலகுவாக விளங்கக் கூடியவகையில் புலவர்மணி கவிதை புனைந்தார்.
புலவர்மணி கவிதைகள் என்ற தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகள் அவரது கவித்துவத்தைப் பறைசாற்றுகின்றன. சுவாமி விபுலானந்தருடன் புலவர்மணி கொண்டிருந்த தொடர்பைக் காட்டும் "யாழ்நூல் தந்தோன்", "விபுலானந்த மீட்சில் பத்து" என்னும் கவிதை நூல்கள் அவரது கவித்துவச் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றன.
எழுதியகவிதைநூல்கள்.
யாழ்நூல் தந்தோன்,விபுலானந்த மீட்சிப்பத்துஈழமணித் திருநாடுகொக்கட்டிச் சோலை, தான்தோன்றிஸ்வரர் பதிகம்,திருமாமாங்கப் பிள்ளையார் பதிகம்,ஆனைப்பந்தி சித்தி விக்னேஸ்வரர் பதிகம்சித்தாண்டிக் கந்தசுவாமி பதிகம்,திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி பதிகம்,காளியாமடு விநாயகர் ஊஞ்சல்புலவர்மணிக் கவிதைகள்,பகவத்கீதை (மூன்று பாகங்கள்)
விருதுகளும் பட்டங்களும்.
அவரது பகவத்கீதை மூன்று பாகங்களும் அப்பாடல்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களும் இவரது புலமையை உணர்த்தி நிற்கின்றன. இப்புலமைச் சிறப்பினைக் கண்டு 1950 ஆம் ஆண்டில் மட்டுநகர் தமிழ்க் கலைமன்றம் "புலவர்மணி" என்னும் விருது வழங்கிக் கவுரவித்தது. மதுரகவி, சித்தாந்த ஞானபானு போன்ற பல பட்டங்களும், கௌரவமும் வழங்கப்பட்டபோதும் "புலவர்மணி" என்ற பட்டத்தை மாத்திரமே அவர் தமது பெயருடன் இணைத்துக் கொண்டார்.
புலவர் மணி தாம் வாழ்ந்த எழுபத்தொன்பது ஆண்டு காலப்பகுதியில் தமக்கெனவொரு பாரம்பரியத்தை உருவாக்கிச் சென்றுள்ளார். சுவாமி விபுலானந்தருடைய பாரம்பரியத்திலே புலவர் மணியும் பெயர் விளங்கச் செயற்பட்டார். யோகர் சுவாமிகளது தொடர்பும் இவருக்கிருந்தது.
(இது உங்களுக்கு பயன் அளித்திருந்தால் மற்றவர்களும் பயன் பெற பகிர்ந்து கொள்ளுங்கள்.)

பாண்டியப் பேரரசில் நகர வாழ்க்கை வாழ்ந்த தமிழர்கள்


கி.மு 580-ம் ஆண்டில் பயன்படுத்திய சுடுமண்ணால் செய்யப்பட்ட கழிவுநீர்போக்கி"பைப் லைன்"(Pipe line)! மற்றும்இரண்டடுக்கு கழிவு போக்கி!! ஒன்று மூடி வைக்கப்பட்டுள்ளது!!! மற்றொன்று திறந்த வடிகால்.....மேலும்,விரிவான படங்கள் கீழடியில் இருந்து கிடைப் பெற்றுள்ளன!!!!
உலகில், இன்றைய கால கட்டத்தில் கூட சிறந்த கழிவு நீர் போக்கிகளை அமைத்து செயல்படுத்தமுடியாமல் இருக்கும் சூழ்நிலையில்,மனிதன் நாடோடியாக திரிந்த காலத்தில் 2,600 வருடங்களுக்கு முன்னால் அறிவியலையும் மிஞ்சும் திட்டமிட்ட நகர அமைப்பு வாழ்க்கை முறையை என்னவென்று சொல்வது....
இன்று,உலகமே கீழடியில் தமிழர்களி்ன் நகர வாழக்கை அமைப்பை பார்த்து வியந்து அதிசயித்து நிற்கிறது....
கீழடித் தொல்பொருள்களின் காலம் கிமு ஆறாம் (கிமு 600) நூற்றாண்டு என்பது உறுதியாகிவிட்டது. அந்த உறுதிப்பாடு உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நிலத்தின் வரலாற்றுப் பெருஞ்சிறப்புகள் யாவை ?






**
1. அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. புத்தர் கிமு 563ஆம் ஆண்டுதான் பிறக்கிறார். கீழடித் தொல்லகம் புத்தர் காலத்திற்கும் முந்தி நிற்கிறது. இந்திய வரலாற்றின் முதற்பக்கங்கள் மொகஞ்சதாரோ, அரப்பா, அடுத்து புத்தர், மகாவீரர் என்று தொடங்கும். சான்றுகளைக் கேட்கும் வரலாறு இனி வாயடைத்து நிற்கும். இந்திய வரலாற்றின் முதற்பக்கங்களில் தமிழர் நாகரிகத்தைப் பற்றி இனிக் கூறியாகவேண்டும்.
2. அப்போது அஜந்தாக் குகைகள் குடையப்பட்டிருக்கவில்லை. அஜந்தாக் குகைகளில் புத்தமதச் செல்வாக்கு மிக்கிருப்பதால் அவை புத்தர் காலத்திற்குப் பிறகே பெரும்பாலும் குடையப்பட்டன. அதன் பழைமையான குகையினைக் கிமு இரண்டாம் நூற்றாண்டு வரைக்கும் ஏற்றுக்கொள்கின்றனர். கீழடிச் சான்றுகள் அவற்றுக்கும் முந்தியன.
3. கபாடபுரத்திற்கு நேர்ந்த கடல்கோளின் பின்னர் இன்றைய மதுரை நகரத்திற்குப் பாண்டியர்கள் இடம்பெயர்ந்தனர். அங்கே தோற்றுவித்து வளர்க்கப்பட்டதே கடைச்சங்கம். கடைச்சங்கத்தின் காலம் கிமு இரண்டாம் நூற்றாண்டு என்பதற்கே பலர் பல்வேறு குறுக்கு வழக்குகளோடு வருவர். சான்றெங்கே, ஆதாரம் எங்கே என்று நிற்பர். இப்போது கிமு ஆறாம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துகள் தெளிந்த சான்றுகளாகிவிட்டன.
4. ஆதன், சாத்தன் ஆகிய பெயர்கள் நம் இலக்கண உரைகளில் தொடர்ந்து மேற்கோள் காட்டப்படுகின்றன.
ஆதனின் தந்தை ஆந்தை எனப்படுவார். சாத்தனின் தந்தை சாத்தந்தை எனப்படுவார். பிசிர் என்ற ஊரில் வாழ்ந்த ஆதனின் தந்தையே பிசிர் ஆந்தையார் எனப்பட்டார். அகநானூறு, புறநானூறு, நற்றிணை ஆகிய சங்க இலக்கிய நூல்களில் பிசிராந்தையார் பாடிய ஆறு பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவர் யாராயினும் ஆதன் என்ற பெயர் வைக்கும் பழக்கம் தொல் தமிழரிடையே பரந்திருந்தது என்பது வெள்ளிடைமலை. ஆதன் என்பதற்கு உயிர் என்று பொருள். உயிரன்.
5. ஒடிய மாநிலம் புவனேசுவரம் உதயகிரிக் குகைகளின் நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ள காரவேலனின் கல்வெட்டு பதின்மூன்று நூற்றாண்டுகளாய் நிலவிய சேர சோழ பாண்டியர்களின் கூட்டாட்சி வலிமையைக் கூறுகிறது. “தமிர தேக சங்காத்தம்” என்பது அக்கல்வெட்டினில் உள்ள தொடர். ஒடிய மன்னன் காரவேலன் அசோகருக்குப் பிறகு அப்பகுதியினை ஆண்டவன். கிமு இரண்டாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவன். “அக்கல்வெட்டினில் இருப்பது பதின்மூன்று நூற்றாண்டுகள் இல்லை, வெறும் பதின்மூன்று ஆண்டுகளாகத்தான் இருக்கவேண்டும்” என்ற வழக்கும் ஓடியது. கீழடியில் பெருந்தமிழர் நாகரிகம் செழித்து வளர்ந்திருக்கும் நிலைமையைக் காண்கையில் காரவேலன் கல்வெட்டு கூறுவது பதின்மூன்று நூற்றாண்டுகளாகவே இருக்க வேண்டும்.
6. வைகை ஆறு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு பேராறாக நிறைந்து ஓடியிருக்க வேண்டும். அதன் கரைவெளி எங்கும் பாண்டியப் பேரரசில் பெருவாழ்வு வாழ்ந்த குடிகளின் தடயங்களைக் கண்டெடுத்திருக்கிறோம்.
7. எழுத்துமுறை தோன்றுவதற்கு முன்பே பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேச்சுமுறை நிலவியிருக்க வேண்டும். மொழித்தோற்றத்தின் இளமைக் காலம் இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லும். அனைத்தையும் கொண்டு கூட்டிப் பார்க்கையில் தமிழ் மொழியின் தொன்மையைப் பகரும் சான்றுகள் பல பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்தியவை என்பது தெளிவாக நம் கண்ணுக்கே தெரிகிறது.
8. கீழடியில் தங்க அணிகள் கிடைத்திருக்கின்றன. தொலைவுத் தேயங்களிலிருந்து வருவிக்கப்பட்ட மணிகள் கிடைத்திருக்கின்றன. மண்ணைக் கொண்டு பாண்டங்கள் செய்தல் என்னும் தொழில்நுட்பம் சிறப்படைந்திருக்கிறது. இருப்புப் பொருள்களும் பல்வேறு மாழைப் பொருள்களும் (உலோகம்) பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. தனிப்பான்மையான குடிவாழ்வின் தன்னிகரற்ற வரலாற்று வளர்ச்சி நிலைகள் இவை.
9. இன்றைய நிலைப்பாட்டிலிருந்து வரலாற்றினைப் பார்ப்பது தவறு. சாதிகள், பழக்கவழக்கங்கள், என இன்று நாம் பற்றிப் பழகியிருக்கும் சிறு கண்களைக்கொண்டு பழைமையில் தேடுவது நன்றன்று. ஒற்றை நிலையில் ஒரு நிலத்தின் வரலாறும் அமையாது. காலப்போக்கில் அது பல்வேறு நிலைகளுக்கு முகங்கொடுத்தாக வேண்டும். நம் வரலாறெங்கும் அவ்வாறே நிகழ்ந்தது.
எது எப்படியாயினும் அன்றைக்கும் இன்றைக்கும் இக்குடிவாழ்வின் பற்றுதலாக இருப்பது ஒன்றேயொன்று. அதுதான் முன்னைப் பழையதும் பின்னைப் புதியதுமான தமிழ்மொழி !