Search This Blog

Wednesday, June 11, 2014

நெல்லிமரப் பள்ளிக்கூடம்

நந்தினி சேவியர்












அந்தப் பள்ளிக்கூடம் கட்டப்பட்ட காலம் பற்றி இவனுக்கு எதுவும் தெரியாது.

இவனது அம்மா அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்ததாகவும், இவனது மாமா குஞ்சியப்புமார் எல்லாம் அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்ததாகவும் இவன் அறிந்திருந்தான்.

மதுர மரங்கள் சூழப்பெற்ற வயல் வெளித் தாமரைக் குளத்தைத் தாண்டி வரம்பினால் நடந்து ஒரு மண் ஒழுங்கையால் ஏறி இவன் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு  போயிருக்கிறான்.

பெரிய தாட்டான் குரங்குகள் வாகை மரங்களில் தாவுகின்ற குழைக்கடைச் சந்தியால் திரும்பி கேணியடியால் செல்லும் பிறிதொரு பாதையாலும் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு இவன் போயிருக்கிறான்.

சுற்றிவர மாமரங்கள் சூழப்பெற்ற கிடுகால் வேயப்பெற்ற இரண்டு மடுவங்கள் கொண்டது தான் அந்தப் பள்ளிக்கூடம்.

இவனது அப்பு இவனைத் தோளில் உட்கார வைத்து ஒரு சரஸ்வதி பூசைக்கு மறுதினம் அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தது இவனுக்கு ஞாபகம்.

கந்தசாமி, செல்லம், சபாரத்தினம், சந்தியாப்பிள்ளை பூமணி, கோயிலம்மா, ராசலிங்கம், சின்னான் என்கின்ற கதிரவேலு ஆகியோருக்கு ஏடு திறந்ததும் அதே நாள்தான்.

தொய்வுக்கார மீனாட்சியம்மா என்கின்ற ரீச்சர் தான் இவனுக்கு ஆனா, ஆவன்னா, சொல்லிக் கொடுத்த முதல் ரீச்சர்.

பள்ளிக்கூட வாயிலில் நெடுத்து வளர்ந்திருந்த சர்க்கரை நெல்லி மரத்தின் கீழ் வட்டமாக இருந்து ‘அறஞ் செய விரும்புஎன்று கத்திக் கத்தி ஆத்திசூடி வரிகளைப் படித்ததும் இவனுக்கு நினைவிருந்தது.

வேறு பாடசாலை மாணவர்கள் ‘உமா வாசகம்படிக்க இவனும் நெல்லி மரப்பள்ளிக்கூட மாணவர்களும் பாலபாடம், பாலபோதினி படித்ததும் இவனுக்கு ஞாபகத்திலிருக்கிறது.

மிக நோஞ்சானாக இருந்த இவனை நாலாம் வகுப்பு காசிநாதன் ஷகடுகர்| என்று செல்லமாக கூப்பிட்டதும் இவனுக்கு நினைவிருக்கிறது.

முரடான காசிநாதன் பின் நாட்களில் ஷசண்டியன் காசி|யாகியதும் இவனது நினைவிலில்லாமலில்லை.  நெல்லிமரப் பள்ளிக்கூடத்தில் இவன் படித்த காலத்தில் பெரிய சூரியகிரகணம் ஒன்று வந்ததும் இவனுக்கு நினைவிருக்கிறது.

பொன்னையா வாத்தியார் கண்ணாடி ஒன்றில் கரும்புகை பிடித்து அதற்குள்ளால் மாணவர்களைச் சூரியன் பார்க்க வைத்ததும்  இவன் நினைவில் உண்டு.

பொன்னையா வாத்தியார் கரும்பலகையில் கீறும் பூனைக்குட்டிகளின் படமும் இவனுக்கு ஞாபகமிருக்கிறது.

பொன்னையா வாத்தியாரின் மோட்டார் சைக்கிள், அச்சைக்கிளின் பின்புறமுள்ள மருந்துகள் உள்ள பெட்டி எல்லாம் அவனது ஞாபகத்திலுண்டு. பொன்னையா வாத்தியார் ஒரு முறிவு நெரிவு வைத்தியரும், விசகடி வைத்தியரும் கூட.

நெல்லி மரப்பள்ளிக்கூடத்தின் பொறுப்பாளராக - பொறுப்பாளர் போல - அவர் இருந்தாலும் தலைமை ஆசிரியர் பொறுப்பு மீனாட்சியம்மா ரீச்சருக்குத்தான்.

இவன் முதலாம் வகுப்பில் படித்த காலத்தில்தான் தாமரைக் குளத்தடியில் நன்னியரின் மகன் செல்லையன் கண்டங்கருவாலை பாம்பு கடித்து மரணித்துப் போனான்.

பொன்னையா வாத்தியாரின் விசகடி வைத்தியம் சரிவராமல் நீலம் பரிந்து சின்னானின் அண்ணன் செத்துப்போனான்.

சரஸ்வதி பூசைக்கு பூ பிடுங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் இவனும் இவனைச் சேர்ந்தவர்களும்.... பல நாட்கள் தாமரைக் குளத்தடிக்கு போகாதிருந்ததும் இவனுக்கு நினைவிலிருந்தது.

சபாரத்தினம் தண்ணீர் அள்ளி வைக்கும் கரள் பிடித்த வாளியும், பால் பேணியும், அது வைக்கப்படும் குச்சுச் சுவரும் இவனுக்கு நினைவிலேயே இருந்தது.

பூமணி தண்ணீரள்ளி வார்க்க காசியும், கந்தசாமியும், இவனும் கைமண்டையில் தண்ணீர் குடித்தமையும் ஞாபகத்திலேயே இருந்தது.

இவன் அரிவரி முடித்து வகுப்பேறி முதலாம் வகுப்புக்கு வந்த சிலநாட்களின் பின்பு நெல்லிமரப் பள்ளிக்கூடத்திற்கு ஒரு புது வாத்தியாரும் ஆங்கிலம் படிப்பிக்கவென பெரிய தோடு போட்ட ரீச்சரும் வந்திருந்தனர்.

காசிநாதன் புதுவாத்தியாருக்கு ஷமுட்டுக்காய் தலைவர்| என்று பட்டப்பெயர் வைத்து கதைத்ததுவும் இவனுக்கு ஞாபகம்.

குண்டான அந்த வாத்தியார் தடிப்பான ஒரு மூக்குக்கண்ணாடி போட்டிருப்பார்.  காது நிறைய மயிர் சடைத்திருக்கும் அவருக்கு உண்மையிலேயே பெரிய தலை.

பல தடவைகளில் அந்த வாத்தியார் மாணவர்களை பிரம்பால் விளாசியதை இவன் அறிவான்.

பொன்னையா வாத்தியாரின் சாந்த குணத்திற்கு நேர் விரோதம் முட்டுக்காய் தலை பஞ்சாட்சர வாத்தியார்.

நெல்லி மரப் பள்ளிக்கூடத்திற்கு மேற்கேயுள்ள வேதக் கோயில் கிராமத்தின் மாணவர்களில் பலர் இந்தப் பள்ளிக்கூடத்திலேயே படித்தவர்கள்.

ஐந்தாம் வகுப்பு வரையேயுள்ள இந்தப் பள்ளிக்கூடத்தில் மிகக் குறைவான மாணவர் உள்ள வகுப்பு ஐந்தாம் வகுப்புத்தான் அதில் ஐந்து பேரே படித்தனர்.

நெல்லி மரப் பள்ளிக்கூடத்தை உருவாக்கியவர் ஒரு சைவப் பெரியார் என்பதை இவன் அப்போது அறிந்திருக்கவில்லை. இவனது அம்மா இராமு வாத்தியார் என்கிற ஒருவரைப்பற்றி அடிக்கடி கூறியிருப்பதும் இவனுக்குத் தெரியும்.

இவனது அப்பு வேதக் கோயில் கிராமத்திற்கு பெண் எடுக்க வந்தமையால் வேதக் கோயில் கிராமத்தவரானவர்.

இவனது அம்மாவும், மாமாவும் குஞ்சியப்புமாரும் நெல்லி மரப்பள்ளிக்கூடத்தில் தான் படிக்தார்கள் என இவன் அறிந்திருந்தான்.  இவனது மாமாவும், சின்னக்குஞ்சியப்புவும் மூன்றாம் வகுப்பில் மூன்று வருடங்கள் படித்து பின் படிப்பை விட்டதுவும் இவனது அம்மா மூலம் இவன் அறிந்தேயிருந்தான்.

இவனது மாமாவுடன் சேர்ந்து ஆரம்ப நாட்களில் தாமரைக்குளத்தில் தூண்டில் போட்டு கெழுத்தி மீன் பிடித்தமையும், நுளம்புக்காக மதுரங்காய்கள் பொறுக்கியமையும், செல்லையன் செத்த பிறகு தாமரைக்குளத்துப் பாதையை மறந்தமையும் கூட இவனுக்கு நினைவிலிருந்தது.

பள்ளிக்கூடம் விட்ட பிறகு வயல் வெளியில் சின்னான் கதிரவேலுவும் சபாரத்தினமும் மல்யுத்தம் புரியும்போது கந்தசாமியே மத்தியஸ்தம் செய்வதும் கந்தசாமி சின்னானின் பக்கச் சார்பாக நிற்பதுவும், தான் சபாவின் பக்கம் நிற்பதுவும் இவனக்கு ஞாபகம்.

ஓரு தடவை செல்லம் தன் கல்லுச் சிலேற்றால் இவனை அடித்தபோது சபா தான் இவனுக்காக செல்லத்தின் சிலேற்றை வாங்கி உடைத்தமையையும் இதற்காக இவனது அப்பு செல்லத்திற்கு ஒரு புதுச் சிலேற் வாங்கிக் கொடுத்தமையும் இவனுக்க ஞாபகம்.

சின்னச் சின்னச் சண்டைகளில் சபாவும், காசியும் இவனுக்கு துணையாக இருந்தமையை இவன் மறந்திடவில்லை.  ஆனால் முட்டுக்காய் தலையர் இவனை அடித்தபோது சபாவும், காசியும், கந்தசாமியும், செல்லமும், துணைக்கு வரவே முடியாமல் போனமை இவனுக்கு ஞாபகத்திலிருந்தது.

ஷஷவாத்தியார் இவன் கிணத்துக் கட்டிலை ஏறி துலாக் கயித்தைப் பிடிச்சவன்||
ஜீவ காருண்யம் தான் இந்த விசயத்தை பஞ்சாட்சர வாத்தியாருக்கு சொல்லி வைத்தான்.

இரண்டாம் வகுப்பில் படிக்கும் கடுகரென்ற நோஞ்சானுக்கு அன்று விழுந்த அந்த அடிகள்....

இரண்டு பிரம்புக்ள முறிந்து தும்பு தும்பாக........

அடுத்து வந்த நாட்களில் வேதக் கோவில் கிராமத்து மாணவர்கள் எவரும் பள்ளிக்கூடம் போகவில்லை....

கிராமமே உறுதியாக இருந்தது.

பொன்னையா வாத்தியாரின் மோட்டார் சைக்கிள் பல தடவைகள் வேதக்கோவில் கிராமத்திற்கு வந்து போனதைப் பலர் பார்த்தார்கள்.  ஒரு தடவை தொய்வுக்கார மீனாட்சியம்மா ரீச்சரும்.... அவரது கணவரும் வந்து போனார்கள்.

பஞ்சாட்சர வாத்தியாருக்கு மாற்றம் கிடைத்து கிழக்கு ஊர் போனதாக ஒரு வதந்தியும்.... சிலகாலம் கிராமத்தில் உலாவியது.  யாரும் அதை காது கொடுத்து கேட்கவேயில்லை.

வேதக் கோவில் கிராமத்தில் திடீரென பள்ளிக்கூடம் ஒன்று உருவாகியது.  தென்னங்குற்றிகளில், பலகை அடிக்கப்பட்ட வாங்கு மேசைகளில் மாணவர்கள் படிக்கத் தொடங்கினார்கள்.

காசிநாதன் சண்டியனாக அறியப்பட்டது போலல்லாமல் சின்னான் கதிரவேலுவின் பெயர் வேதக் கோவில் கிராமத்திற்குமப்பால் பெருமையோடு பேசப்படும் வண்ணம் அவன் இறந்து போனான்.

நெல்லிமரப் பள்ளிக்கூடம் சில காலம் நெசவுசாலையாகவும்.... ஒரு தற்காலிக அச்சுக்கூடமாகவும் இயங்கி பின்னர் வெற்று நிலமாகி விட்டதாக இவன் அறிந்து கொண்டான்.

இவனது நண்பர்கள் சபா, ராசலிங்கம்.... சந்தியாம்பிள்ளை காசி, சின்னான் கதிரவேலு ஆகியவர்களைப் போல......  இவனது நினைவுகளில் இன்னும் பொன்னையா வாத்தியார், மீனாட்சியம்மா.. ரீச்சர், பஞ்சாட்சர வாத்தியார்...... அதோடு சிதைந்து போன.... நெல்லிமலைப் பள்ளிக்கூடமும்.

Interesting Research About all Blood Groups


சித்தமருத்துவத்தின் சிறப்பான பிரிவு

சித்தமருத்துவம் - தமிழ் மருத்துவம் என்று கூறுவதில் பெருமிதம் கொள்ளவேண்டும். ஏனெனில் தமிழர்கள் ஆகிய எமது பண்டைய வழியிலானோரால் உருவாக்கப்பட்டு பின்பற்றப்பட்ட எமது பண்டைய மருத்துவமே இன்றைய சித்தமருத்துவம். இது எங்கள் சொந்த மருத்துவம் அதிலும் எமது சொத்து என்றால் மிகையாகாது. அதிலும் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் சிங்கநகரை இராச்சிய கேந்திரமாகக் கொண்ட ஆரியச்சக்கரவர்த்தி முதல் தமிழ் மருத்துவம் பின்பற்றப்பட்டு வந்தது, யாழ்ப்பாணத்தின் சித்தமருத்துவர்கள் இந்தியாவில் இடம் பெற்ற சித்தமருத்துவக் கருத்தரங்குக்குச் சென்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இன்று சித்தமருத்துவம் பல்கலைக்கழகக் கற்கை நெறியளவிற்கு உயர்ந்திருப்பது பெருமைக்குரிய விடயமாகும். இந்த சித்தமருத்துவக் கற்கை நெறியில் சித்தமருத்துவம் - பொது, சித்தமருத்துவம் - சிறப்பு என்ற பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளமை சிறப்பான விடயமாகும். இதில் சித்தமருத்துவம் - பொது என்ற பாடத்தில், பொதுவான நோய்களுக்கான சித்த பரிகாரங்கள் பற்றி கற்பிக்கப்படுகிறது. சித்தமருத்துவம் - சிறப்பு என்ற பாடத்திட்டத்தில், சிறப்பான சித்தமருத்துவ சிகிச்சைமுறைகளை திரட்டிக் கற்பிக்கப்படுகின்றன. 
அந்தவகையில் சித்தமருத்துவத்தின் சிறப்பான பிரிவு சித்தமருத்துவம் - சிறப்பு (SPECIAL-MEDICINE in Siddha Medicine இந்த சித்தமருத்துவம் - சிறப்பு என்பதில்: கற்பம், வெறிநோய், வர்மம், தோற்பிணி போன்றவை முக்கியமான விடயங்களாகக் கருதப்படுகின்றன. இதில் கற்பம் என்பது காயகற்பம் என்பதாகும். இக்காயகற்பம் (REJUVENATION) (RASAYANAA – Science of Rejuvenation)என்பது உடம்பான காயத்தை கற்பம் போல் பேணிப்பாதுகாத்தல் ஆகும். காயகற்பத்தில் முக்கியமான மூன்று முறைகள் கையாளப்படும். அவையாவன: காப்பு(Prevention)இ அழிப்பு(Destruction)
 நிரைப்பு(Alteration). இதில் நோய் வராமல் உடலைக் காப்பதும், உடலில் ஏற்பட்ட நோயினை அழிப்பதும், உடலிற்குஅவசியமாக வேண்டியவற்றை மீள உடலிற்கு நிரப்புவதுமாகும். இம்மூன்று விடயங்களுக்காகவும்: தனிநபரின் வாழ்க்கை முறையை ஒழுங்கமைத்தலும், உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றங்களை மேற்கொள்வதும், சரியான கற்பமருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் காயகற்பத்தினை நடைமுறைப்படுத்தலாம். 
இதைவிட காயகற்பமுறைகளை இரு வகையாகப் பிரிக்கலாம். அவையாவன: பொதுகாயகற்பம், சிறப்புக்காயகற்பம் என்பனவாகும். இதில், பொதுகாயகற்பம் என்றால்: சாதாரணமாக சுகதேகியான ஒருவர் நோய்வராமல் தடுப்பதற்காகவும், உடலின் அழிவைபின் தள்ளிப் போடுவதற்காகவும் மேற்கொள்கின்ற கற்பமுறைகளாகும். சிறப்புக்காயகற்பம் என்றால்: நோயுள்ள ஒருவர் தன்னிடமுள்ள நோயினை முழுமையாக நீக்கவும், மீண்டும் நோய்நிலைகள் ஏற்படாது தடுப்பதற்காகவும், நோய் தன்மையினால் தனது உடலிலிருந்து அழிவடைந்த அல்லது குறைவடைந்த உடலிற்குத் தேவையான போசணைச்சத்துக்களை மீளநிரப்பும் வகையிலும் உடலின் அழிவைபின் தள்ளிப் போடுவதற்காகவும் மேற்கொள்கின்ற கற்பமுறைகளாகும்.
பொதுவாகக் கற்பமுறைகள்;: மூலிகைக்கற்பம், தாதுப்பொருள் கற்பம், ஜீவப்பொருள் கற்பம், இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், முப்பு என்பனவாம். இதில் மூலிகைக்கற்பம் என்னும் பொதுசிறப்பான கற்ப மூலிகைகளைக் கொண்டு காயகற்பத்தை மேற்கொள்ளலாகும். இந்தக் கற்பமூலிகைகளைத் தனியாகவோ, பலவற்றைச் சேர்த்தோ உரியமுறையில் தினமும் பயன்படுத்தி வருவதாகும். பொதுவாக கற்பமூலிகைகள் 108 என்று குறிப்பிட்டுள்ளனர். சித்தர் போகர் பிரதானமான கற்ப மூலிகைகளாக 45 மூலிகைகளையே குறிப்பிட்டுள்ளார். அதிகசித்தி மூலிகைகள் என 09 கற்பமூலிகைகளை சித்தர்கள் பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அதோடு இக்கற்ப மூலிகைகளைப் பயன்படுத்தி தாது, ஜீவப்பொருட்களை கற்பமருந்துகளாக்கிக் கொள்ளலாம். சித்தர்கள் அட்டமாசித்துக்களையுடைய இக்கற்ப மூலிகைகளின் பாவனை அவசியமென்று கூறியுள்ளனர். 
பொதுக்கற்ப மூலிகைகள் (General Rejuvenating Herbs) சில: இஞ்சி, அமுக்கரா, பொன்னாங்காணி, மணத்தக்காளி, கற்றாழை, கரிசாலை, வேம்பு, பிரண்டை.... 
சிறப்புக்கற்ப மூலிகைகள் (Special Rejuvenating Herbs) சில: கடுக்காய், நெல்லி, எலுமிச்சம்பழம், நன்னாரி, துளசி, வில்வை, கீழ்க்காய்நெல்லி, சேராங்கொட்டை, வெள்ளெருக்கு, நொச்சி......
தாதுப்பொருள் கற்பம்:
அயஜம்பீரக் கற்பம், அய பிருங்கராஜக்கற்பம், தங்க பஸ்பம், பூரணசந்திரோதயம்.
ஜீவப்பொருள் கற்பம்:
தாரோட்டம் (காய்ச்சாத பசுவின் பால்), காய்ச்சியபசுவின் பால், இந்திரகோபப்பூச்சி.
இயமம்,நியமம்:
தூய்மையான சிந்தனைகளுடனான நல்ல ஒழுக்கமுள்ள வாழ்க்கைமுறைமை. அதாவது நல்ல மனஒழுக்கமும், நல்லசிந்தனை, சொல், செயல் கொண்ட வாழ்க்கை நடைமுறை.
ஆசனம்:
இதில் பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியும், நாடி சுத்தியும், யோகப் பயிற்சியில் ஒன்றான யோகாசனமும் வாழ்க்கையில் தினமும் நடைமுறைப்படுத்தல். 
முப்பு (UniversalSalt) என்னும் முக்கியமான விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதாவது முப்பு, பூநீறு (Fussle’s Earth) என்பன சித்தமருந்துகளை முடிக்கப் பயன்படும் முக்கியமான மூலப்பொருட்கள் என்றால் அது மிகையாகாது. முப்பு என்பது, மூன்று உப்புக்களின் சேர்க்கை என்றும், மூப்பைத் தவிர்க்கும் உப்பு என்றும் இன்னும் இது மூன்று வகை அதாவது: யோக முப்பு, ஞான முப்பு, வாத முப்பு என்றும் பலர் பல சுவையான கருத்துக்களுக்கு ஆதாரத்துடன் விளக்கமளிக்கின்றனர் என்ற ஆராயப்பட வேண்டிய விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




அடுத்து சித்தமருத்துவத்தில் சிறப்பான பிரிவைப் பார்க்கையில், வெறிநோய் எனப் பெயரிட்டிருப்பினும் இதில் வலிப்புநோய் (Epilepsy) பற்றிய நோய் நிதானம், சிகிச்சை என்பன குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு உளப்பிறழ்வு (Psychological disorders) சம்பந்தமான மானசீக நோய்கள் பற்றியும் அவற்றின் தன்மையும், வகையும், சிகிச்சிக்கும் கிரிகை முறைகளும், மந்திர உச்சாடனங்களும், சிகிச்சைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை உண்மையிலேயே சிறப்பு வைத்தியமுறைகளாகும். பயித்திய நோய் (Mental Diseases)எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், நோயாளியின் நிலைமைக்கேற்ப தலைக்கு எண்ணெயும், மாமிசம் அற்ற உணவுமுறையும், தொடர்ச்சியான மந்திர உச்சரிப்பும், நோயாளியின் கிரக பலன்களுக்கமைய அதற்கான நிவர்த்திப் பரிகாரங்களும் செய்து சிகிச்சையளிக்கும் முறையும் குறிப்பிடப்பட்டது மட்டுமன்றி அந்தசிகிச்சையில் வெற்றி கண்டும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இன்று நம்மிடையே உள்ள சிலரின் பரம்பரையில் அன்றைய காலகட்டத்தில் சிறப்புத் தேர்ச்சியான சித்தமருத்துவர்கள் பயித்தியநோய்க்கு சிகிச்சித்திருக்கிறார்கள் என்பதையும் இவ்விடத்தில் கூறிக்கொள்ளவிரும்புகிறேன்.
அடுத்ததாக வர்மம் பற்றிய சிறப்பான கலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தவர்மக்கலையானது சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்ட அரிய பொக்கிசமாகும். ஆனால் இன்று இதனை ஆழமாகக்கற்கின்றவர்கள், கற்பிக்கின்றவர்கள் ஒரு சிலரே என்பது திண்ணம். ஆதியான சித்தர் பெருந்தகைகளால் உருவாக்கப்பட்ட வர்மக்கலையானது புராதன நாகரிகத்தின் இடப்பெயர்வுகள் காரணமாக சீனாதேசம் சென்று அங்கு புதுப்பொலிவு பெற்று இன்று அது அக்குப்பஞ்சர் என அழைக்கப்படலாம் என்பது எனது கருத்தாகும். வர்மக்கலை பற்றிப் பார்ப்போமானால்: இது வர்மம், வன்மம், மர்மம் என்னும் வேறுபெயர்களால் அழைக்கப்படுகிறது. 
வர்மக்கலை வுhயரெழடழபல என்று அழைக்கப்படுகிறது. வர்மம் என்பது ஜீவநிலை அல்லது உயிர்நிலை சஞ்சரிக்கும் இடம் என்று குறிப்பிடப்படுகிறது. உடலில் 108 வர்மங்கள் காணப்படுகின்றது. அவற்றில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் வர்மம் 12 எனவும், சாதாரண வர்மங்கள் 96 ஆகவும் காணப்படுகின்றன. அதாவது உடலிலுள்ள குறிப்பிட்ட 12 வர்மங்களில் தாக்கம் ஏற்பட்டால், குணப்படுத்த முடியாததாகவும், ஏனைய 96 வர்மங்களில் தாக்கம் ஏற்பட்டால், குறிப்பிட்ட முறையில் மருத்தெண்ணெய் பூசப்பபட்டு, அப்பியாசம் செய்து சீர் செய்யலாம் எனவும் அவை குறிப்பிட்ட காலங்களுக்கிடையில் செய்து கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்மத்தின் பிரிவுகள்:
தட்டு வர்மம் -  08
படு வர்மம் - 12
தொடு வர்மம் - 88
உடலின் 108 வர்ம ஸ்தானங்களும், அவை தாக்கப்பட்டால் ஏற்படும் குறிகுணங்களும், தாக்கப்பட்ட வர்மத்தை இளக்கும் முறைகளும், எவ்வளவு காலத்திற்குள் இளக்கப்பட வேண்டும், சாத்தியம், கஸ்ட சாத்தியம், அசாத்;தியம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.


உடலிலுள்ள வர்ம ஸ்தானங்களைப் பார்க்குமிடத்து:
தட்டு வர்மம் - 08
பெரு மூளை வர்மம், நேம வர்மம், பொற்சைக்கால வர்மம், புய வர்மம், மைய வர்மம், மூச்சடக்கி வர்மம், மூத்திலகால வர்மம், கச்சை வர்மம்.
படு வர்மம் - 12
திலர்த்தவர்மம், நட்சத்திரவர்மம், செவிகுத்திவர்மம், உறக்காலவர்மம், தும்மிவர்மம், நேர் வர்மம், அடப்பகலவர்மம், உறுமிவர்மம், வலியஅத்திச் சுருக்கிவர்மம், சிறியஅத்திச் சுருக்கிவர்மம், கல்லடைக்காலவர்மம்,
தொடு வர்மம் - 88
மேல் சுளியாடிவர்மம், நடுவரிமத்திமவர்மம், நட்டெல்லுவர்மம், கீழ் சுளியாடிவர்மம், சுழற்சிவர்மம், முண்டெல்காலவர்மம், பள்ளைவர்மம், சுருக்கிகாலவர்மம்,  கொக்கிநரம்புவர்மம், விஷ சம்பவவர்மம், தாலிகவர்மம், அண்டக்காலவர்மம், உந்திவர்மம், தொப்பூழ் குழிகாலவர்மம், ஒட்டுவர்மம், லிங்கவர்மம், விரைவர்மம், விந்துவர்மம், காக்கட்டைகாலவர்மம், கைகொட்டிகாலவர்மம், சடபிறவர்மம், விலங்குவர்மம், சுளுக்குவர்மம், மொழிவர்மம், துதிக்கைவர்மம்,.........என இன்னும் பலகுறிப்பிடப்பட்டுள்ளது.


அடுத்து தோற்பிணி பற்றிய சிறப்பான சிகிச்சை முறைகள் சித்தமருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தோலில் ஏற்படக் கூடிய சாதாரண நோய்நிலைமை முதல், பாரதூரமான தீவிர நோய்நிலைமைகள் பற்றி நோயின் காரணங்கள்(Causes), நோய் நிதானம்(Diagnosis), நோயின் உபத்திரவங்கள்(Complications), நோய்க்கான சிகிச்சைகள்(Treatments). நோய்க்கான பத்திய அபத்தியம் என்பன தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக: இப்பகுதியில், படைமுதல் காலாஞ்சிகப்படை வரை குறிப்பிடப்பட்டுள்ளது. புடை என்பது தேமல்- Herpes, படர்தாமரை–Ring worm infestation, Psoriasis, காளாஞ்சிகப்படை- Psoriasis,
தொழுநோய், பெருநோய்-Leprosy> வெண் குஸ்டம்- Leucoderma இன்னும் பல குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு சித்தமருத்துவம் - சிறப்பு என்ற பகுதியில் சிறப்புச் சிகிச்சையுடைய நோய்நிலைமைகள் உள்ளடக்கப்பட்டிருப்பதே சித்தமருத்துவத்தின் சிறப்பாகும்.
செ.போல்ரன் றஜீவ்(B.S.M.S)
சித்தமருத்துவர்
<e-mail: drsrprajeev@gmail.com>