அறிவை நேசித்த, அறிவாக உருப்பெற்றிருந்த ஏதென்ஸ் நகரத்தின் முகப்பினை இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக அலங்கரித்துக் கொண்டிருப்பவர் தத்துவஞானி சாக்ரடீஸ்.
குட்டையான பருத்த உருவம், வழுக்கைத் தலை, வட்ட முகம், விரிந்த மூக்கு, அகன்ற வாய், ஆழ்ந்த சிந்தனையுடன் உற்றுநோக்கும் கண்கள், முழங்கால் வரை தொங்கும் தளர்ந்த அழுக்கான ஆடையுடன் இருந்த சாக்ரடீஸ்தான் "கேள்வி கேள்" என்று சொன்னதற்காக கொல்லப்பட்ட முதல் அறிவுஜீவி.
மனசை ஆராய்ந்த அறிஞன்
தனக்கு முன்னாள் இருந்த தத்துவ ஞானிகள் மரத்தையும் கல்லையும் நட்சத்திரங்களையும் ஆராய்ந்துகொண்டிருந்தபோது, சாக்ரடீஸ் மனித மனதை ஆராய்ந்தார்.
மனதைப் போன்று மர்மங்கள் நிரம்பிய ஆய்வுப் பொருள் வேறொன்றில்லை என்று சாக்ரடீஸ் உணர்ந்திருந்தார்.
மனிதன் யார்? எப்படி வந்தான்? மனிதனின் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் என்னவாகிறான் போன்ற கேள்விகளை சாக்ரடீஸ் எழுப்பினார்.
ஏதென்ஸ் நகரத்தின் மூலை முடுக்குகளில், கோயில்களில், நாடக அரங்குகளில், விளையாட்டுத் திடல், சந்தை, பொதுமக்கள் கூடுமிடங்களில் எல்லாம் சாக்ரடீஸ் பேசிக்கொண்டே இருந்தார்.
``கற்பிக்கப்பட்ட எதையுமே ஏற்றுக்கொள்ளக்கூடாது, அறிவினால் சீர்தூக்கிப் பார்த்து ஏற்புடையதாக இருப்பதை மட்டுமே ஏற்க வேண்டும்” போன்ற பகுத்தறிவு சிந்தனைகளைப் பரப்பிய சாக்ரடீஸ் ஏதென்ஸின் பெரியார்.
நகர குடியரசாக இருந்த ஏதென்ஸின் ஆட்சியாளர்கள் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். மக்கள் பழமையை நம்புகிறவர்களாகவும், மரபான மத நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்களாகவும் இருக்கும்வரைதான் தங்களால் தொடர்ந்து ஆட்சியாளர்களாக இருக்க முடியும் என்ற தெளிவு கொண்டவர்கள். "எல்லாவற்றையும் கேள்வி கேளுங்கள்" என்ற சாக்ரடீஸின் பின்னால் கூடிய இளைஞர்கள் கூட்டத்தைக் கண்டு, ஆட்சியாளர்கள் அச்சப்பட்டார்கள். இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டால் ஆட்சியதிகாரம் நம் கையில் நீடிக்காது என்பதற்காக சாக்ரடீஸை கொல்லும் வாய்ப்பினை உருவாக்கினார்கள்.
அறிவுக்கு எதிரான முதல் வழக்கு
ஏதென்ஸ் நகரத்தில் நீதிபதிகளையும் மக்களே தேர்ந்தெடுப்பார்கள். அமெச்சூர் வழக்கறிஞர்கள். இத்தகைய நீதிமன்றத்தில் மெலிட்டஸ் எனும் கவிஞனும், அநீதன் எனும் தோல் வியாபாரியும் சாக்ரடீஸ்மீது குற்றம் சுமத்துகிறார்கள். அறிவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட முதல் வழக்கு. ``ஏதென்ஸ் நாட்டு மக்கள் வணங்கும் கடவுளை சாக்ரடீஸ் வணங்குவதில்லை, சந்திரனை மண் என்கிறார், சூரியனைக் கல் என்கிறார். கடவுள்களால் விளக்கப்படாத மறைபொருட்களை ஆராயத் தொடங்கியதின் மூலம் நகரத்துக்குத் தீமையை உண்டாக்கப் பார்க்கிறார். கெட்டதை நல்லதுபோல் பேசி இளைஞர்களைக் கெடுக்கிறார்’’ என்பன உள்ளிட்டவையே சாக்ரடீஸ்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். நீதிமன்றம் சாக்ரடீஸ் மீதான குற்றச்சாட்டை உறுதிசெய்கிறது.
குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போதுசாக்ரடீஸுக்கு 70 வயது. ``என்னுடைய எதிரிகள் அநீதியும் அறிவின்மையும்தான்” என்ற சாக்ரடீஸின் வாதம், இன்றும்பொது வாழ்வில் போராட முன்வருபவருக்கான திறவுகோல்களாக இருக்கின்றன.
"கடவுளையும் கடவுள் கோட்பாட்டையும் ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால், எங்கே கடவுளை ஒப்புக்கொள்ள மறுத்துவிடுவேனோ என்று பயப்படுவதே அதைவிட நாத்திகமாக இருக்கிறது" என்ற சாக்ரடீஸ், எப்போதும் யாருக்கும் ஆசிரியராக இருந்து போதித்தது இல்லை. அவருக்கென்று எந்த பள்ளியும் இல்லை. அவரின் தர்க்கவாதத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் அவரைப் பின்பற்றினார்கள்.
தீர்ப்பு எழுதிய பின்புதானே குற்றச்சாட்டே பதிவு செய்யப்பட்டது? நாடகத்தின் அடுத்த காட்சிபோல் சாக்ரடீஸுக்கு மரண தண்டனை கொடுக்கலாமா? மன்னிப்புக் கொடுக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 501 பேர் கூடியிருந்த அவையில், சாக்ரடீஸ் எனும் காலத்தைக் கடந்து புகழ்பெறப் போகும் ஞானி, தீர்ப்பை எதிர்நோக்கி நிறுத்தப்பட்டிருந்தார். `ஜனநாயகம், ஆட்சியாளர்களின் ஏவலாளியாக மாறும் ஆபத்தையும் உட்கொண்டது’ என்பதை காலம் சாக்ரடீஸின் வரலாற்றில் இருந்தே அறிந்துகொண்டது.
அறிவைக் கொண்டாடும் நகரம், அறிவை நேசிக்கும் நகரம், அரங்கங்கள்தோறும் தர்க்கம் செய்து கொண்டிருக்கும் நகரம், சாக்ரடீஸை மரணத்தின் வாயிலில் நிறுத்தி வைத்திருந்தது. வாக்களித்தார்கள் கூடியிருந்தோர். மன்னிக்கலாம் என 220 பேரும், மரண தண்டனை அளிக்கலாம் என 281 பேரும் வாக்களித்தனர். 61 வாக்கு வித்தியாசத்தில் உலகத்தின் ஆகச் சிறந்த தத்துவ ஞானியின் மரணம் தீர்மானிக்கப்பட்டது. தன்னை வீழ்த்த நினைத்தவர்களுக்கு, அவர்களின் வெற்றிக்கான பரிசாகத் தன் உயிரையே கொடுக்கத் தயாரானார் சாக்ரடீஸ்.
ஒரு மாத காலம் கை கால்களில் கட்டப்பட்ட சங்கிலியுடன் சிறைச்சாலையில் நண்பர்களுடன் தர்க்கம் செய்தார் சாக்ரடீஸ். சிறையில் இருந்த காலத்திலும் எழுதினார். கப்பல் நாளைத் திரும்பி வரப்போகிறது என்பதையறிந்த சாக்ரடீஸின் நண்பன் கிரிட்டோ, சிறையில் இருந்து தப்பிச் செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக சாக்ரடீஸிடம் சொல்கிறான்.
``மரண தண்டனை நிறைவேற்றாமல் போனால்கூட இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் இயற்கை மரணம் அடையப்போகும் நான், சிறையில் இருந்து தப்பிச் சென்று என் கொள்கைகளுக்கு முரணாக நடந்துகொள்ள விரும்பவில்லை” என்று மறுத்துவிடுகிறார்.
ஒரு கோப்பை விஷம்
மரண தண்டனை நிறைவேற்ற வேண்டிய நாள். கை கால் சங்கிலிகள் விலக்கப்படுகின்றன. எப்போதும் விஷம் கொண்டுவருபவனின் கை அன்று நடுங்குகிறது. தான் எப்படி விஷத்தைப் பருக வேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டறிகிறார் சாக்ரடீஸ். பிறகு குளித்துவிட்டு வருகிறார். சிறைக் காவலன் சொல்லியபடி ஹெம்லாக் என்ற அந்த விஷத்தை மிச்சமின்றி பருகுகிறார். ஓரிடத்தில் நிற்காமல் அறை முழுக்க நடக்கிறார். கால்கள் சோர்ந்துபோக படுக்கையில் அமர்கிறார். சோர்ந்துபோன பிறகு கால் நீட்டி படுக்கிறார். அவரின் கால்களை அழுத்திவிட்ட காவலன், “நான் அழுத்துவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்கிறான். “இல்லை” என்கிறார். காவலன் அழுத்துவதை நிறுத்திக்கொள்கிறான்.
கால்களில் பரவிய விஷம், இதயத்துக்கு வருகிறது. சாக்ரடீஸுக்கு மூச்சடைப்பதுபோல் இருக்கிறது. போர்த்தி இருந்த போர்வையை விலக்கி, நண்பன் கிரிட்டோவை அழைக்கிறார். “கிரிட்டோ, நான் அஸ்குலபியஸ் தெய்வத்துக்கு சேவல் பலியிடுவதாக வேண்டிக்கொண்ட வேண்டுதல் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. மறக்காமல் அக்கடனை நிறைவேற்றிவிடு” என்று சொல்கிறார். சில நிமிடங்களில் உயிர் பிரிகிறது.
அறிவின் திடத்தை உலகத்துக்கு நிரூபிப்பதற்காக ஒரு கோப்பை விஷத்தை, தேநீர் பருகுவதுபோல் நிதானமாகப்பருகித் தன்னையே பலியிட்டுக்கொண்டார் சாக்ரடீஸ்
மரணம் ஒரு கலை
Thanks