முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர்களையும் இப்போது பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. பெண்களும் முதுகுவலி, கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
முதுகின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது?
முதுகில் வலி உருவாக என்ன காரணம்?
வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப்படுத்துவது எப்படி?
தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப்படியாக வளரும்? முதுகெலும்பின் டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன?
“முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம், இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும்.
முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்), 12 எலும்புகள் மார்பு பகுதியிலும் (தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (லம்பார்), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக் கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது.
இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது.”
எத்தனை வயது வரை முதுகெலும்பு வளரும்? வேகமாக வளரும் காலகட்டம் எது?
“குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும் இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25 வயது வரை மிதமாகவும் இருக்கும்.”
முதுகெலும்பின் அமைப்பில் ஆண்-பெண்ணுக்கு வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா?
“முதுகெலும்பின் அமைப்பிலோ, செயல்பாட்டிலோ ஆணுக்கும்- பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் முதுகெலும்பின் வளைவுகளில் சிறு வித்தியாசம் இருக்கும். வளைவு ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்.”
பெண்கள் கோலம் போடுதல், வீடு பெருக்குதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு முதுகு வலி ஏற்படுமா?
“பெண்கள் 45-50 வயது வரை வீட்டு வேலைகளை செய்வது நல்லது. வீட்டு வேலைகளால் முதுகெலும்பிற்கோ, எலும்புகளின் நடுவில் உள்ள டிஸ்கிற்கோ எந்த பாதிப்பும் வராது. ஆனால் முதுகெலும்பில் ஏதாவது பிரச்சினையோ, நோயோ ஏற்பட்டிருந்தால் கடினமான வேலைகளை செய்யாமல் இருக்கவேண்டும். இடுப்பில் தண்ணீர் குடத்தை தூக்குவதாலும், குழந்தைகளை இடுப்பில் தூக்குவதாலும் பெண்களின் முதுகெலும்பில் பொதுவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.”
கர்ப்பம், பிரசவத்திற்கு தக்கபடி பெண்களின் முதுகெலும்பு கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா?
“பெண்களின் அடி முதுகு வளைவு அவர்களது கர்ப்ப காலத்தில் வயிற்றின் முன் பக்க வளர்ச்சிக்கு ஏற்ப, பின்பக்கம் சாய்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இதனால் வயிற்றில் குழந்தை வளர வளர முன்பக்க பாரத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில், பின்புறமாக சாய்ந்துகொண்டு கர்ப்பிணிகளால் அன்றாட வேலைகளை செய்ய முடியும். இதற்கு கர்ப்ப காலத்தில் சுரக்கும் ஹார்மோன்களும் உதவி புரிகின்றன.”
முதுகுவலி தோன்ற எத்தனை விதமான காரணங்கள் இருக்கின்றன?
“முதுகுவலி தோன்ற கீழ்க்கண்டவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.
டிஸ்க் ப்ரொலாப்ஸ்: முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல் இயங்கும் `டிஸ்க்’ என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ, காயம் பட்டதினாலோ அல்லது அழற்சியினாலோ தேய்ந்து விடும். அப்போது 2 எலும்புகளுக்கிடையே போதிய இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன் அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி வலியை உண்டு பண்ணும்.
ஸ்பாண்டிலோசிஸ்: வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும், எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளுக்கிடையே உராய்வு ஏற்படும். இதனால் அழற்சியோ, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும்.
ஆஸ்டியோபொரோஸிஸ்: உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம். இதனால் எலும்புகளில் போதிய அளவு சுண்ணாம்பு சத்து இல்லாததால் எலும்புகள் வலுவிழந்து, அடர்த்தி குறைவாகிவிடும். இதனாலும் எலும்புகளில் வலியும், எலும்பு முறிவும் ஏற்படலாம்.
ஸ்பான்டிலோலிஸ்தஸிஸ்: முதுகெலும்பு வலுவிழக்கும்போது வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து முன்புறமோ பின்புறமோ விலகி விடும். இதனாலும் முதுகுவலியோ, முதுகு தசை பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.
ஆர்த்ரைட்டிஸ்: மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே ஆர்த்ரைட்டிஸ். இது ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஆன்க்கிலோசில் ஸ்பான்டிலோசிஸ் போன்ற நோய்களின் விளைவால் ஏற்படக்கூடியதாக இருக்கும்.”
மேடு, பள்ளம் நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன பயணம் மேற்கொள்வது முதுகுவலியை ஏற்படுத்துமா?
“முதுகெலும்புகளுக்கு நடுவில் உள்ள டிஸ்க் ஷாக் அப்சர்வர் போல் செயல்பட்டு அதிக பளு தூக்குதல், குனிதல், குதித்தல் போன்ற சமயங்களில் அதிர்வுகளை தாங்கி கொள்ளும். ஆனால் டிஸ்க் தேய்ந்து விட்டாலோ அல்லது எலும்புகளில் வேறு பிரச்சினை இருந்தாலோ மேடு, பள்ளம் நிறைந்த சாலையில் செல்லும்போது டிஸ்க் அழுத்தப்பட்டு, அழுத்தம் தாளாமல் வெளியே பிதுங்கி பக்கத்தில் உள்ள நரம்புகளை அழுத்தும். இதனால் வலி ஏற்படும்.”
முதுகுவலி என்பது கழுத்து வலியும் சேர்ந்ததா? முதுகு வலிக்கும்போது கழுத்தும் சேர்ந்து வலிக்குமா?
“முதுகெலும்பில் எங்கு வேண்டுமானாலும் எலும்பு தேய்மானமோ, அழற்சியோ, டிஸ்க் ப்ரொலாப்ஸோ ஏற்படலாம். இதனால் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். பொதுவாக கழுத்து எலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்றால் கழுத்து, தோள்பட்டை, கைகளில் வலி பரவலாம்.
அதே போல் அடி முதுகில் ப்ரொலாப்ஸ் என்றால் அடிமுதுகு, இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். இரண்டு வித வலியும் சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.”
முதுகெலும்பின் அடர்த்தி குறைவு மற்றும் பிரச்சினைகளை வலி வரும் முன்பே கண்டுபிடிக்க முடியுமா?
“வலியின் அறிகுறி தெரியும் வரை முதுகெலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் பிரச்சினையை கண்டுபிடிக்க முடியாது.”
கழுத்து வலி மற்றும் முதுகுவலிக்கு இருக்கும் நவீன சிகிச்சை என்ன?
“பேக் அண்ட் நெக் கட்டமைப்பு மருத்துவத்தில், டிஸ்க் ப்ரொலாப்ஸை அறுவை சிகிச்சையின்றி கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட DRX 9000 என்ற கருவி முதுகுவலிக்கும், DRX 9000C என்ற கருவி கழுத்து வலிக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறை கிட்டத்தட்ட 86 சதவீதம் வரை வலியை குறைத்து நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும்.”
உறுப்பு மாற்று ஆபரேஷன் இப்போது பரவலாக இருக்கிறதே. முதுகெலும்புகளை எடுத்து எலும்பு வங்கிகளில் சேகரிக்க முடியுமா? அதை மாற்று ஆபரேஷன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்த முடியுமா?
“எலும்பு வங்கியில் எலும்புகள் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் முதுகெலும்புகள் சேமிக்கப்படுவதில்லை. மேலும் செயற்கை டிஸ்க்குகளை பயன்படுத்தி டிஸ்க் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை இதுவரை செய்யப்படவில்லை.