Search This Blog

Showing posts with label World Literature. Show all posts
Showing posts with label World Literature. Show all posts

Saturday, April 4, 2020

ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் (Oedipus complex) நவீன தீர்வு ?

காமத்தின் மூலம் உளவியல் என்ற கொள்கையை முன்வைத்தவர் உளவியலின் தந்தை என்று கருதப்படும் சிக்மண்ட் ஃபிராய்ட் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளர்களில் ஒருவர். கார்ல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், ஐன்ஸ்டீன் போன்றோருக்கு இணையாக வைத்துப் போற்றப்படுபவர். குழந்தைமை, ஆளுமை, நினைவாற்றல், பாலியல், சிகிச்சை முறை போன்ற சொற்களுக்குப் புதிய அர்த்தங்களை உருவாக்கிக் காட்டியவர்.’காமத்தின் மூலம் கடவுள்’ என்ற கோட்பாட்டை ஓஷோ முன் வைப்பதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்னமே ‘காமத்தின் மூலம் உளவியல்’ என்ற கோட்பாட்டை முன் வைத்தவர். 

ஃபிராய்ட் (1856 1939) ஆஸ்திரியாவில் பிறந்த ஒரு மருத்துவர், நரம்பியல் நிபுணர். ஆனால், அவரிடம் சிகிச்சைக்கு வந்த பலருக்கு இருந்தது உடல் பிணிகள் அல்ல; உளம் சார்ந்த பிரச்சினை களே என்பதை அறிந்து மனித மனதின் செயல்பாடுகள் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டார். அதிலிருந்து முகிழ்ந்தவைதான் மனம் மாற்றிய அவரது கோட்பாடுகள்.
ஒரு பிறந்த குழந்தைக்கும் இந்த உலகத்துக்கும் இடையே இருக்கும் முதல் தொடர்பு தாயின் மார்பகம் மட்டுமே. குழந்தையின் தாய் என்பது தாயின் மாபகம்தான். பின்னர்தான் அது தனது தாயின் முகம், உடல், தாயின் வாசனை போன்ற இதர அம்சங்களை உணர்ந்து கொள்கிறது. தாயின் மேல் காதல் கொள்கிறது. இந்தக் காதலை ஃபிராய்ட் ‘ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்’ (Oedipus complex) என்று அழைக்கிறார்.
ஒரு குழந்தையின் மூன்று வயது முதல் ஐந்து வயது வரையிலான காலத்தை இந்த ஈடிபஸ் சிக்கலுக்கான காலக்கட்டமாக சிக்மண்ட் ஃபிராய்ட் வரையறுக்கிறார். ஓர் ஆண்குழந்தை தனது பால்ய பருவத்தை வெற்றிகரமாகக் கடந்து செல்ல வேண்டுமானால் அது ஈடிபஸ் சிக்கல் பருவத்தைக் கடந்து சென்றாக வேண்டும் என்பது ஃபிராய்டியக் கோட்பாடு.
ஃபிராய்டுக்குப் பின் வந்த இன்னொரு முக்கியமான உளவியலாளரான லக்கான் ஃபிராய்டின் கோட்பாட்டை அனுமானமாக்கிக் காட்டினார். ஆனாலும், ஃபிராய்டின் ஈடிபஸ் சிக்கல் என்ற கோட்பாட்டை அவர் மறுக்கவில்லை.
ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் என்பது மனநோய். கிரேக்க வீரன் ஈடிபஸ். பிறக்கும் போதே தந்தையைக் கொன்று தாயை மணப்பான் என்னும் சாபத்துடன் பிறக்கிறான். பயத்தில் அவனை மலையிலிருந்து தள்ளிவிடுகின்றனர். பழங்குடியின மக்களிடம் வளரும் அவன் இந்த ரகசியத்தை அறிந்து நாடு நோக்கி செல்கிறான். வழியில் வழிப்போக்கனிடம் யார் வழிவிடுவது என்று சண்டை மூள்கிறது. சண்டை பெரிதாக வழிப்போக்கனை கொன்றுவிடுகிறான். வழிப்போக்கனாக வந்தவன் நாயகன் சென்றுகொண்டிருக்கும் நாட்டின் அரசன். அரசனற்ற நாட்டிற்கு பதவியேற்க சில மாயப்புதிர்களை விடுவிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். அதை விடுவித்து விதவையான ராணியை மணக்கிறான். அவர்களுக்கு குழந்தைகளும் பிறக்கின்றன. இறந்த அரசன் யாரென அறிய முற்படும் போது வெகு நாட்களுக்கு முன் தான் கொன்ற வழிப்போக்கனே அரசன் என்றறிகிறான். இதை ராணியும் அறியும் போது தான் ஈடிபஸிற்கு தான் தந்தையை கொன்று தாயை மணந்து கொண்டதையும் அறிந்து கொள்கிறான். அவள் சாபம் பலித்ததையறிந்து தற்கொலை செய்து கொள்கிறாள். ஈடிபஸ் தன் கண்களை குருடாக்கிக் கொள்கிறான். இதைத் தான் சிக்மண்ட் ஃப்ராய்டு காம்ப்ளக்ஸாக மாற்றுகிறார். தாயின் மீது மகனுக்கும் தந்தையின் மீது மகளுக்கும் காமம் சார்ந்த ஈர்ப்பு இருந்தே வருகிறது. இது தவறில்லையா என்னும் குற்றவுணர்ச்சி எங்கு தோன்றுகிறதோ அங்கு தான் ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் ஆரம்பத்தினை கொள்கிறது. இதற்கு முடிவு இல்லையா எனும் போது கல்வியாலும் பிரக்ஞையை மேம்படுத்தி சமூகக் கட்டுபாடுகளுடன் தனிமனிதனை மாற்றும்போதும் அவனுடைய சுயமும் இச்சைகளும் கலாச்சார மீறல்களை மீறாமல் இருக்கும் என்கிறார்.
இதை டி.எச்.லாரன்ஸ் தன்னுடைய "SONS AND LOVERS" நாவலில் ஊடுபாவலாக சென்று தர்க்கங்களையும் தீர்வுகளையும் கொடுக்கிறார்

சுரங்கத்தில் வேலைப்பார்க்கும் குடும்பம் வால்டர் மோரலுடையது. அவருடைய மனைவி கெர்ட்ரூட் கப்பார்ட். அவர்களுடைய குழந்தைகள் வில்லியம், ஆன்னி, பால். கணவர் சுரங்கத் தொழிலுக்கு செல்வதால் அங்கிருந்த களைப்பினை போக்க நிச்சயம் மதுவினை உட்கொண்டாக வேண்டும். ஆனால் அது அதிகமாகும் தருணங்களில் அதுவே மனைவின் வதைபடுதலுக்கு காரணமாகிவிடுகிறது. இதனால் முழுதும் நொந்த மனைவியிடம் கணவன்பால் இருந்த காதல் காணாமலாகிறது. இதை அவளே உணரும் போது என்னிடம் இருக்கும் காதலை யாருக்கேனும் நான் பங்கிட்டுக் கொள்ள வேண்டுமே என ஏங்குகிறாள். மூத்த மகன் வில்லியமிடம் பாசத்தை பொழிகிறாள். வில்லியம் வேலை கிடைத்து நாட்டிங்காம்ஷைரிலிருந்து லண்டன் சென்றுவிடுகிறான். அங்கு அவன் காதல் வயப்பட்டு ஒரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வருகிறான். பின் நிமோனியா காய்ச்சலில் இறந்தும்விடுகிறான். இதற்கு பின் தான் நாவல் தன்னுடைய தீவிரத் தன்மையை எய்துகிறது.
காதலை வெளிக்காட்ட இருந்த வடிகாலான வில்லியம் இறந்தவுடன் அவளுடைய கவனம் முழுக்க பாலிடம் செல்கிறது. இது பாலினை எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது என்பதே நாவலின் மீதக்கதையாகிறது. கப்பார்ட்டின் குணமும் எண்ணமும் அவளை வசீகரம் மிக்கவளாக அதே நேரம் சமூகத்தின் பார்வையில் வன்மம் நிறைந்தவளாக மாற்றிவிடுகிறது. சிறந்த உதாரணம் எனில் வில்லியம் தான் காதலிக்கும் பெண்ணின் புகைப்படத்தை அனுப்புகிறான். அவள் எல்லாவற்றிலிருந்தும் குறைகளை தேடியெடுத்து குமுறிக் கொண்டே இருக்கிறாள். இது பின்னர் பாலிடமும் நீள்கிறது. தன்னுடைய அன்பை பங்கெடுக்க யாரேனும் வந்துவிடுவார்களோ என்னும் எண்ணமே நாவல் முழுக்க அவளை உருவாக்கிக் கொண்டு வருகிறது.

அதே நேரம் பாலின் வாழ்க்கை காதலுக்கான இடமே இல்லாமல் வறண்டு இருக்கிறது. அங்கு இருக்கும் ஒரே சோலையாக அவனுடைய அம்மா இருக்கிறாள். மிரியம் மற்றும் க்ளாரா என இரண்டு பேர் அவனுடைய வாழ்க்கையில் வருகிறார்கள். இதில் க்ளாரா ஏற்கனவே மணமாகி விவாகரத்து இல்லாமல் பிரிந்து இருப்பவள். இருவருக்கும் அவன் மீது காதல் இருக்கிறது. ஆனால் பாலிடம் இருக்கும் நிலையற்ற தன்மை அவன் மீதான வெறுப்பை அவர்களுக்குள் கொடுக்கிறது.

பாலிற்கு ஒருக்கணம் தேவையெனவும் மறுக்கணம் இவ்வுலகம் தாயால் மட்டுமே இருந்தால் நன்றாக இருக்குமே எனவும் இரு எல்லைக்கு இடையில் ஊசலாட வைக்கிறது. மிரியமிடம் நேரடியாகவே சொல்கிறான் நான் மணமே செய்து கொள்ள போவதில்லை. அம்மாவுடன் இருந்தால் அதுவே போதும் என. அவனுடைய முட்டுக்கட்டையாக தாயின் அன்பே நாவல் முழுக்க இருக்கிறது.

ஈடிபஸின் பிரச்சினையில் தாய் யார் என்பது மகனுக்கு தெரியாமல் மாயத்தன்மையில் இருக்கிறது. இங்கோ என்ன பிரச்சினை ஏன் நிகழ்கிறது என எல்லாமே தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அப்படியிருக்கையில் ஏதேனும் ஒரு இருத்தல் காணாமல் போனால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியுமல்லவா ? இது நாவலில் நிகழும் தர்க்கமாக மாறுகிறது. சிறைப்பட்ட வாழ்க்கை தான் காதலுடன் இருப்பதா என்னும் கேள்வியையும் சுமந்துகொண்டு செல்கிறான். என்ன ஆகிறது என்பதை மனதிலிருந்து சிறிதும் நீங்காத வண்ணம் சொல்லி நாவலினை முடிக்கிறார்.

நவீனம் செய்ய வேண்டிய எல்லா விஷயங்களையும் இந்நாவல் செய்கிறது. ஈடிபஸின் பிரச்சினையை வெளிப்படையாக்கி தாயின் பார்வையில் அதை நியாயமாக்க முற்பட்டால் அதுவே லாரன்சின் நாவலாக மாறுகிறது. முடிக்கும் போது எல்லாவித கலாச்சாரத்திற்குள்ளிருந்தும் வெளியே நிற்கும் ஒரு கருவையே இந்நாவல் பேசுகிறது என்பதை முழுமையாக புரிந்து கொள்ளலாம். அவர் நியாயப்படுத்துவதை நம்மால் எதிர்க்கவும் முடிவதில்லை என்பதில் தான் நாவல் தன் வெற்றியை கொள்கிறது.
Thanks www.kimupakkangal.com/,siruva.blogspot.com,www.aanthaireporter.com

ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille 1897 - 1962)

காமத்தையும் காரத்தையும் ஒப்பிட்ட ஃப்ரெஞ்ச் தத்துவ அறிஞர் ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille 1897 - 1962).
சமூகவியல், தத்துவம், பொருளாதாரம், மானுடவியல், இலக்கியம் போன்ற பல துறைகளில் அறிஞராக விளங்கிய ஜார்ஜ் பத்தாயின் (1897 - 1962) முக்கியத்துவம் என்னவென்றால், அவரது சிந்தனை அவரது காலத்தை விட ஒரு நூற்றாண்டு முன்னால் இருந்தது. அதாவது, 2030இல் சொல்ல வேண்டியதை 1930-லேயே சொன்னார் பத்தாய். அதனால்தான் அவரை யாருக்கும் புரியாமல் போய் விட்டது. கருத்துச் சுதந்திரத்தை அதி தீவிரமாகப் பாராட்டக்கூடிய ஃப்ரான்ஸிலேயே ஜார்ஜ் பத்தாய் யாருக்குமே தெரியாத ரகசியப் பெயரில் எழுத வேண்டியிருந்தது. காரணம், அவர் புதினங்கள் ஒழுக்கக் கேடானவையாக (immoral) இருந்தன. 1940களில் எழுதப்பட்ட அவரது புத்தகங்கள் 1990களில்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. ஆனால் பத்தாயை தெரிதா, ஃபூக்கோ, ஜூலியா க்றிஸ்தவா, சூஸன் சொண்டாக் ஆகியோரின் துணை கொண்டு வாசித்தால்... இல்லை, அதெல்லாம் கூட வேண்டாம்; பத்தாயின் புனைகதைகளைப் புரிந்துகொள்வதற்கு அவருடைய கட்டுரைகளேதான் திறவுகோல். இவர் காலத்தில் வாழ்ந்த சக ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்களையெல்லாம் விட ஏராளமாக எழுதினார் என்றாலும் உயிரோடு இருந்த போது யாரும் இவரை அங்கீகரிக்கவில்லை; சரியாக விவாதிக்கவும் இல்லை.  இவ்வளவுக்கும் உலகிலேயே அதிக அளவில் எழுத்தாளர்களைக் கொண்டாடும் தேசம் ஃப்ரான்ஸ்.  ஒரு பாப் பாடகரைப் போல் உலகம் முழுவதும் அறியப்பட்ட எக்ஸிஸ்டென்ஷியலிச சூப்பர் ஸ்டாரான ஜான் பால் சார்த்தர் கூட ஜார்ஜ் பத்தாயை மட்டமாகவும் கிண்டலாகவும்தான் குறிப்பிட்டார்.  ”பத்தாய் ஒரு தத்துவவாதி அல்ல; அவர் ஒரு mystic.  இலக்கியம் என்பது மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவுவதாக இருக்க வேண்டும்”  என்பது சார்த்தரின் நிலைப்பாடு.  இது கிட்டத்தட்ட மார்க்சீயவாதிகளின் நிலையை ஒத்தது.  ஆனால் பத்தாய் இதை ஸ்தாபன ரீதியான சித்தாந்தம் (Status quo) என்று ஒதுக்கித் தள்ளினார்.   சார்த்தருக்கும் பத்தாய்க்கும் நடந்த விவாதங்கள் Excremental Vs Existential என்று பேசப்பட்டது.

எல்லாவற்றையும் விட ஆச்சரியம், பத்தாயுமே தன்னை ஒரு ‘மிஸ்டிக்’ என்றே சொல்லிக் கொண்டார். அவர் எழுத்துகளில் அடிக்கடி ‘உள்ளார்ந்த அனுபவம்’ என்ற வார்த்தை தென்படுகிறது. பாலியல் அனுபவம் அப்படிப்பட்டதுதான் என்பது பத்தாயின் கருத்து. உதாரணமாக, பத்தாயின் மதாம் எத்வார்தா சிறுகதையை எடுத்துக் கொள்வோம். (இதையும் பத்தாய் யாருமே அறியாத ரகசியப் பெயரில்தான் எழுதினார்.) தெரிதா போன்றவர்களின் சிந்தனையில் பெரும் பாதிப்பை நிகழ்த்திய மற்றொரு ஃப்ரெஞ்ச் தத்துவவாதியும், இலக்கியக் கோட்பாட்டாளருமான Maurice Blanchot இந்தக் கதையைப் பற்றி, ’the most beautiful narrative of our time' என்று குறிப்பிடுகிறார். அதில் உள்ளார்ந்த அனுபவமும் பாலியல் அனுபவமும் ஒன்றாக இணையும் ஒரு காட்சியைப் பார்ப்போம்:
She was seated, she held one long leg stuck up in the air, to open her crack yet wider she used her fingers to draw the folds of skin apart . .. 'Why', I stammered in a subdued tone, 'why are you doing that?' 'You can see for yourself ', she said, 'I'm GOD'.

ஜார்ஜ் பத்தாய் அவருடைய காலத்தில் அங்கீகரிக்கப்படாமல் போனதற்குக் காரணம், அவருடைய சிந்தனை, எழுத்து எல்லாமே அப்போது முற்றிலும் புதிதாக இருந்தது. உதாரணமாகச் சொன்னால், அவர் பச்சையான போர்னோ மொழியில் கதைகளை எழுதினார்.  அதற்கு அப்போது போர்னோ எழுத்து என்பதைத் தவிர வேறு எந்த அர்த்தமும் கொடுக்கப்படவில்லை.  1928-இல் அவருடைய ”கண்ணின் கதை” என்ற நாவல் Lord Auch என்ற பெயரில் வெளிவந்தது.  பல ஆண்டுகளுக்கு அந்தப் பெயரில் எழுதியது யார் என்றே தெரியாமல் இருந்தது.  Auch என்ற வார்த்தை aux chiottes  என்ற பேச்சு வழக்கின் சுருக்கம்.  கிட்டத்தட்ட அதன் பொருள், நீ கக்கூஸுக்குத்தான் லாயக்கு.  ஆக, Lord Auch என்பதை கக்கூஸ் நாயகன் என்று மொழிபெயர்க்கலாம்.  போர்னோ மொழியில் எழுதப்பட்ட ”கண்ணின் கதை” ஒரு போர்னோ நாவலாகவே கருதப்பட்ட நிலையில் அந்த நாவலைப் பற்றி 1962-இல் ரொலான் பார்த் Metaphor of the Eye என்ற கட்டுரையை பத்தாயின் பத்திரிகையான Critique-இலேயே எழுதினார்.  அந்தக் கட்டுரைதான் முதல் முதலாக ”கண்ணின் கதை” என்பது போர்னோ நாவல் அல்ல; தத்துவார்த்தமாக விரியும் பல அர்த்தத் தளங்களைக் கொண்ட நாவல் என்பதை நிலைநாட்டியது.  அந்தக் கட்டுரையை ரொலான் பார்த் எழுதிய போது ஜார்ஜ் பத்தாய் உயிரோடு இல்லை என்ற முக்கியமான தகவலை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  அது மட்டும் அல்ல; பத்தாயின் மற்றொரு நாவலான My Mother  அவரது மரணத்துக்குப் பிறகே பிரசுரமாயிற்று.  ஈடிபஸ் காம்ப்ளக்ஸை அடிப்படையாகக் கொண்ட, வெளிப்படையான மொழியில் எழுதப்பட்ட நாவல் அது.  பத்தாய் 1935-இல் எழுதி முடித்த Blue Moon என்ற நாவலும் 1957-இல் தான் பிரசுரமாயிற்று.  இந்த நாவல் எப்படி இருக்கும் என்பதை இங்கே நான் விவரிப்பது கூட சாத்தியம் இல்லை.  ஆனால் பத்தாய் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லப்படுவது எப்படியென்றால், 1935-இல் அவர் எழுதியதெல்லாம் 1939-இலிருந்து ஐரோப்பிய நகரங்களில் நிகழத் துவங்கியது.  பாலியலும் மரணமும் ஒன்றுக்குள் ஒன்று சிக்கிக் கொள்ளும் தத்துவார்த்த முரண் பற்றிய நாவல் அது. 
1936-இல் பத்தாய் Acephale என்ற ரகசிய வாசகர் வட்டத்தைத் துவக்கினார்.  வட்டத்தின் சார்பில் அதே பெயரில் ஒரு பத்திரிகையும் ஆரம்பிக்கப்பட்டது.  ஆஸிஃபால் என்ற கிரேக்க வார்த்தைக்கு  ”தலையற்ற” என்று பொருள்.   இதன் உறுப்பினர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வட்டம் பற்றிய செய்திகளை வெளியே சொல்லக் கூடாது என்பது முக்கியமான விதி.  ஆஸிஃபால் வாசகர் வட்டம் இரண்டாம் உலகப் போர் (1939)  துவங்கிய போது முடிவுக்கு வந்தது.  1936-39 நான்கு ஆண்டுகளில் ஐந்து இதழ்கள் வெளிவந்தன.  முதல் இதழ் எட்டு பக்கங்களைக் கொண்டிருந்தது.  இந்த வட்டத்தில் பல ரகசியமான விதிகள் கடைப்பிடிக்கப் பட்டன. உதாரணமாக, வட்ட உறுப்பினர்கள் யூத எதிர்ப்பாளர்களோடு பழகக் கூடாது; சந்தித்தால் கூட கை குலுக்கக் கூடாது.  தலையை வெட்டி தண்டனை கொடுப்பது சரியே.  ஃப்ரெஞ்சுப் புரட்சியின் போது 16-ஆம் லூயியின் தலை வெட்டப்பட்டதை வட்டம் ஆதரித்தது.  அதேபோல் வட்டத்தில் தியான வகுப்புகளும் மற்ற தாந்த்ரீக செயல்முறைகளும் நடத்தப்பட்டன.  
பத்தாயை, அவருடைய பாலியல் எழுத்தை எப்படி மிஸ்டிஸிஸத்துக்குள் அடக்குவது? இரு உடல்களின் சேர்க்கையை அவர் ”ஒருமை” என்கிறார். ஈருடல், ஓருயிர் என்று சொல்வோம் அல்லவா, அதுதான் அவர் சொல்லும் மிஸ்டிக் அனுபவம். இதை அவர் மரணத்தோடு இணைக்கிறார். ஏனென்றால், மரணம்தான் சிருஷ்டியின் விதை. இலக்கியத்தைக் கூட பத்தாய் அப்படித்தான் வரையறுக்கிறார். 
Literature (fiction) took the place of what had formerly been the spiritual life; poetry (the disorder of words) that of real states of trance.
”ஆன்மிகம் இருந்த இடத்தை இலக்கியம் பிடித்துக் கொண்டது; கவிதை என்பது தியானத்தின் இடத்தைப் பிடித்துக் கொண்டது.”
பத்தாயின் எழுத்தில் இருவித மரணங்கள் நிகழ்கின்றன. ஒன்று, பாத்திரங்களின் மரணம். இரண்டாவது, எழுத்தாளனின் மரணம். ஆம், பத்தாய் தன் ஒவ்வோர் எழுத்திலும் தன்னையே மறுதலித்துக் கொண்டு செல்கிறார். தன்னுடைய கதையாடலைத் தானே கலைத்துப் போடுகிறார். (நான் எழுதுவது புத்தகம் அல்ல; வாசகருக்கு அது ஒரு சவால்: பத்தாய்). தானே தன்னுடைய பிரதியில் இல்லாமல் போகிறார். அர்த்தத்துக்கு எதிரான எழுத்தை உருவாக்குகிறார். இப்படியாக எழுத்தின் அதிகாரத்தை நொறுக்கி விடுகிறார். இது பத்தாய் பற்றிய தெரிதாவின் ஒரு வாசிப்பு.


https://minnambalam.com/
சாரு நிவேதிதா



Friday, April 3, 2020

பாலியலும் தமிழ்ப்புனைவும்: பிராய்டில் இருந்து கலகம் வரை

பாலியலை காத்திரமாக நேரடியாக பேச பொதுவெளியில் தடை உள்ளது. அதனால் வெகுஜன இதழ் கதைகளில் பாலியல் வேறுவிதமாக எழுதப்பட்டது. மிகையாக குற்றவுணர்வு தோன்ற சற்று வக்கிரமான சித்திரங்களுடன். ஆனால் சிற்றிதழ்களில் பாலியல் எழுத அபாரமான சுதந்திரம் இருந்தது. பாலியல் கதைகள் எழுதினவர்கள் உடனடியாக கவனிக்கப்பட்டார்கள்
அவை பொதுவாக மூன்று வகை. 
கிளர்ச்சி பாலியல் எழுத்து. 
உளவியல் பாலியல். 
அரசியல் பாலியல். 
இந்த மூன்று வகையுமே முக்கியம் தான்.
கிளர்ச்சி பாலியல் எழுத்தின் சமகால உதாரணம் வா.மு.கோமு, ஜே.பி சாணக்யா ஆகியோர். இருவருக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. கோமுவின் சித்தரிப்புகள் பெண் காமம் பற்றின ஆணின் பகற்கனவுகள். ஏற்கனவே பாலகுமாரன், புஷ்பா தங்கதுரை போன்றவர்கள் ஒரு ஒழுக்கமனதுக்குள் இருந்து எழுதியவற்றை அநேகமாய் அதே மொழியில் ஆனால் ஒழுக்க நெருக்கடி இன்றி அரை சிட்டிகை எதார்த்தமும் சேர்த்து எழுதுவது கோமுவின் பாணி. அவரை தீவிர இலக்கிய-வணிக இலக்கியத்துக்கு இடையேயான பாலியல் பாலம் எனலாம். ஜே.பி சாணக்யா ஒருவகையில் கோணங்கி, எஸ்.ராவின் மரபின் தொடர்ச்சி. குறியீட்டு/உருவக மொழியில் பாலியல் உறவுகள் பற்றி பேசுபவர். ஆனால் நமது பாலியல் கதை மரபை உடைத்து காமப் பிறழ்வை சுவாரஸ்யமான நடையில் எழுதியவர் சாரு நிவேதிதா. ஒருபால் உறவு, சுயமைதுனம், taboo காமம் ஆகியவை அவரது களம். பரவசமான நடையில் எழுதப்பட்ட உன்னத சங்கீதம் தமிழின் கிளர்ச்சியான பாலியல் எழுத்தின் சிறந்த உதாரணம். சாருவை நாம் தி.ஜானகிராமனுடன் ஒப்பிடலாம்.
தி.ஜானகிராமன் இரண்டாவது வகை பாலியல் எழுத்தாளர். Taboo தான் அவரது முக்கிய களம். ஆனாலும் நிகழாமல் அடக்கி வைக்கப்பட்ட காமம். இதனால் மிக கற்பனை சாத்தியம் கொண்டதாக தி.ஜாவின் புனைவுகள் விளங்குகின்றன. 
வயதில் மூத்த யமுனாவை பாபு மோகிக்கும் கதை மோகமுள். 
மகன் அம்மாவை காமுறும் கதை அம்மா வந்தாள். தி.ஜா சாரு, கோமு, சாணக்யா அளவுக்கு சர்ர்சைகளை உருவாக்கவில்லை. அதற்கு இரு காரணங்கள். ஒன்று அவர் ஒரு இலக்கிய காமத்தை எழுதினார். நிஜ வாழ்வில் இருந்து சற்றே விலகிய நாடகீயமான காமம் ஆ.மாதவனும் இந்த ராஜபாட்டையில் தான் சென்றார். உதாரணமாய் “முலைகளை வெறித்தான் என்பதை “கழுத்துக்கு கீழ் மேடிட்ட பகுதியில் பார்வையை ஓட்டினான் என எழுதுவது. இரண்டாவது சொற்றொடர் தான் அதிக கிளர்ச்சி தருவது என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் அது நம்மை அதிர்ச்சியுற வைக்காது. தி.ஜாவும் ஆ.மாதவனும் பிராய்டின் உளப்பகுப்பிவியலால் கவரப்பட்டவர்கள். வெளிப்படாமல் மனதுக்குள் தேங்கிய காமமே மனிதனின் அனைத்து செயல்பாடுகளையும் செலுத்துகிறது என்றார் பிராயிட். ஆக “அம்மா வந்தாளில் அம்மா தன் பாலியல் குற்றவுணர்வில் இருந்து விடுபட மகனை வேதபாடசாலையில் பயிற்றுவிக்க அனுப்புகிறாள். மகனுக்கு அம்மா மீது உள்ள மோகத்தில் இருந்து விடுபட வேண்டும்  அதற்கு அவன் வேதம் படிக்காமல் அம்மாவுக்கு நிகரான மற்றொரு பெண்ணை அணுகி காதலிக்கிறான்.
ஆனால் ஆ.மாதவனை விட தி.ஜாவில் வாசிப்பு சுதந்திரம் அதிகம். சமீபமாக வெளிவந்த பிரான்சிஸ் கிருபாவின் “கன்னி மற்றொரு குறிப்புணர்த்தும் taboo கதை. சாரு “மோகமுள்ளுக்கான ஒரு எதிர்வினைக்கதை எழுதி உள்ளார். “முள் என்றொரு சிறுகதை. அதில் கதைசொல்லி தன் அத்தை உடனான காமத்தை வெளிப்படையான லகுவான மொழியில் பேசுகிறான். தி.ஜாவில் இருந்து சாரு மற்றும் கோமுவரை உள்ள தூரம் வாசலுக்கும் படுக்கைக்கும் இடையே இருப்பது தான். இன்றுள்ள “மலர்மஞ்சத்தை அடைய நமக்கு ஐம்பது ஆண்டுகள் பிடித்துள்ளன. அதே வேளையில் நிகழ்ந்து முடியும் காமத்திற்கு இலக்கியமதிப்பு குறைவு என்ற நகைமுரணையும் சொல்லியாக வேண்டும்.
இன்றைய பாலியலுக்கும் நேற்றைய பாலியலுக்கும் மற்றொரு முக்கிய வித்தியாசம் உள்ளது. அது அரசியல்.
காமமும் வன்முறையும் நமக்குள் உறைந்துள்ள பண்புகள். அவை நம் தீமையை வெளிப்படுத்துகின்றன என்று இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவ எழுத்தாளர்கள் நம்பினார்கள். உதாரணமாக புதுமைப்பித்தனின் “காஞ்சனையில் காமம் ஒரு மோகினிப் பேயின் வடிவில் வெளிப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஜெயமோகன் தம்புரானும் தம்புராட்டிகளும் தோன்றும் காமப் பேய்க் கதைகள் (நிழல்வெளிக் கதைகள்) எழுதினார். தீமை கொடியது என்பதால் இந்த வகை கதைகளில் காமத்துடனான மனப்போராட்டம் பிரதானமாகிறது. ஜெயமோகன் காமத்தை தூயமிருக நிலையாக (ஊமைச்செந்நாய்), உளவியல் சிடுக்கின் விடுபலாக (பின்தொடரும் நிழலின் குரல்) சித்தரிப்பவர். அவரது பாத்திரங்கள் காமத்தின் உச்சத்தை எட்டியதும் ஏமாற்றமும் வெறுப்பும் அடைகின்றனர் (நாகம், காடு)
ஜி.நாகராஜன் விபச்சாரிகளை முன்வைத்து பல கதைகள் எழுதினார். ஆனால் அவரது விபச்சாரிகள் அபலைகள். ஒரு ஆண் தோன்றி தன்னை காப்பாற்றக் கூடும் என்று ஏங்கும் காமக் கைதிகள். இவர்கள் ஆணின் பார்வையில் படைக்கப்பட்ட கற்பனாவாத பாத்திரங்கள் என்றொரு குற்றச்சாட்டு உண்டு. ஜி.நாகராஜன் பாலியலை கையாண்ட விதம் பிரத்யேகமானது.
அவரது பாத்திரங்களுக்கு கட்டற்ற காமம் லட்சியம். ஏன்? ஜி.நாவுக்கு காமம் என்பது காமம் அல்ல. மரபில் இருந்து விடுதலை. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் எந்திரமயமாக்கம், உலகப்போர், அறிவியல் வளர்ச்சி ஆகிய காரணங்களால் மரபான விழுமியங்கள் மீது மனிதன் நம்பிக்கை இழந்தான். பரஸ்பர அன்பும் காதலும் அப்படியான ஒரு விழுமியம். ஜி.நாவின் நாயகன் காதலை மறுத்து காமத்தை மட்டும் ஏற்கிறான். அதன் எதிர்விளைவுகளை சந்திக்கிறான். இந்த மரபு vs காமம் மோதலை லா.ச.ரா தனது “அன்புள்ள ஸ்நேகிதனுக்கு கதையில் சித்தரித்திருக்கிறார்.
ஆனால் கலாச்சார அரசியல், அதிகார அரசியல், பெண்ணியம் போன்ற சமகால கருத்தாக்கங்கள் காமத்தை ஒரு அரசியல்/தத்துவப் பிரச்சனையாக்கின. சுருக்கமாக காமம் ஒரு கலகம் ஆகியது. சமூகம் காமத்தைக் கொண்டு மனிதனின் மீது அதிகாரம் செலுத்துகிறது. காமத்தை நேரடியாக எழுத்தில் சந்திப்பது இந்த அதிகாரத்துக்கு எதிரான ஒரு கலகம். ஆக இன்றைய எழுத்தில் ஒருவன் சுயமைதுனம் அல்லது ஆசனப்புணர்ச்சியில் ஈடுபட்டால் அது பீறிடும் காமத்தால் மட்டுமல்ல, சமூக அடக்குமுறையை எதிர்க்க; பொதுப்போக்கோடு உடன்படாத தனது அடையாளத்தை வலியுறுத்த. இவர்களுக்கான முன்னோடிக் கதைகளை எண்பதுகளில் எழுதியவர்கள் ராஜேந்திர சோழன், ஜெயகாந்தன் போன்றோர். பிராயிடிய காமத்துக்கும் இன்றைய அரசியல் காமத்துக்கும் இடையில் உள்ள புள்ளி இவர்கள்.
குழந்தைகள் மீதான காமம்? சுஜாதாவின் சங்கிலிகதையில் ஜெஞ்சுலட்சுமி என்ற லட்சணமான சின்ன குழந்தை ரயிலில் வருகிறது. பிரயாணிகள் அதை வாங்கி ஆளாளுக்கு ‘பச்சக் பச்சக் என்று முத்துகிறார்கள். சுஜாதா எழுதுகிறார் “பேருக்கு பேர் கொடுத்த எல்லா முத்தங்களிலும் களங்கமில்லை என்று என்னால் சொல்ல முடியவில்லை
கவிதையில் கடந்த பத்துவருடங்களில் எழுத வந்த பெண் கவிஞர்கள் அனைவருமே அநேகமாக பாலியல் அரசியல் கவிதைகள் எழுதினார்கள். பெண்மொழி என்ற சொல்லாடல் பிரபலமாகியது. சரி “ஆண்மொழி என்றால் என்ன? “திமிறிப் புடைத்து எழுந்தது காமம் என்ற சாதாரண வாக்கியத்தில் உள்ளது ஒரு ஆண்குறி விரைப்பு பற்றின உருவகம் தான் அது. இப்படி தமிழ் முழுக்க கறைப்பட்டுள்ளதால் அதனை பெண்மொழியாக்கி சலவை செய்வது இவர்களின் நோக்கம் சுகிர்தராணி குறிப்பிடத்தக்கவர். சுவாரஸ்யமாக, பிரமிளை தவிர நமது ஆண்கவிஞர்கள் மிக அரிதாகவே பாலியல் தொனிக்கும் வரிகளை (ஆடையின் இரவினுள் உதயத்தை தேடும் பருவ இருள்) எழுதினர். பெண்ணிய கவிஞர்கள் தங்களது லட்சியம் “இரவினுள் உதயத்தை (லிங்கத்தை) தேடுவது அல்ல என்று உறுதியாக மறுக்கிறார்கள். 1960இல் இருந்து இன்று நாம் பாலியல் கவிதையில் வந்துள்ள புள்ளியை பிரமிள் vs பெண்ணியம் என்று சுருக்கலாம்.

http://thiruttusavi.blogspot.com/2011/12/blog-post_8695.html 

'காதல்' - தமிழ் வெகுஜன இதழ்களில் மைல்கல்


தி.ஜானகிராமனின் 'குளிர்' சிறுகதை எந்த இதழில் பிரசுரமானது தெரியுமா? 'காதல்' பத்திரிகையில்! யெஸ், பத்திரிகையின் பெயரே 'காதல்'தான். மட்டுமல்ல கு.அழகிரிசாமி, ஆர்.சூடாமணி, மு.வரதராசனார், டாக்டர் மா.ராசமாணிக்கனார், வல்லிக்கண்ணன், அகிலன், மாயாவி... என பல பிரபலங்கள் இந்த மாத இதழில் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார்கள்.
ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இப்படியொரு பெயரில் மாத இதழ் ஒன்றை நடத்த இந்த 2020லும் யோசிக்கிறோம். அப்படியிருக்க 1947ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தப் பத்திரிகை பிறந்திருக்கிறது - அதுவும் தமிழில் - என்றால் எப்படி வியக்காமல் இருக்க முடியும்?
முதல் இதழில் 'காதல்' பத்திரிகையின் அவசியம் குறித்து ஆசிரியர் எழுதியிருப்பதை பாருங்கள்:
இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. இதுவரை சுதந்திரம் ஒன்றுதான் நமது ஒரே இலட்சியமாக இருந்து வந்தது. இனி, நம்முடைய லட்சியங்கள் பல.
முதலில் சென்ற நூற்றைம்பது வருஷங்களாக அல்ல, சென்ற ஆயிரம் வருஷங்களாக நம் சமூகத்தில் குவிந்து வந்த குப்பைகளை வாரிக் கொட்ட வேண்டும். மக்கள் வாழ்க்கைத் துயர்களிலிருந்து விடுபட்ட வாழ்க்கை வாழ வகை செய்ய வேண்டும். இப்பெரு நோக்கத்தோடு பல துறைகளில் பல பத்திரிகைகள் உண்டு.
அரசியல் சூதாட்டத்தைப் பற்றி எழுத பத்திரிகைகள் உண்டு. ஆனால், குடும்ப அரசியலைப் பற்றி எழுத பத்திரிகை இல்லை.
பொருளாதாரச் சிக்கலைப் பற்றி எழுத பத்திரிகை உண்டு. ஆனால், கணவன் மனைவியரிடையே எழும் சிக்கலைப் பற்றி எழுத பத்திரிகை இல்லை.
நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டும் பாதி வயிறு நிறையாத தொழிலாளிகளின் துயர்களைப் பற்றி எழுத பத்திரிகைகள் உண்டு. ஆனால், வாழத் தெரியாமல் தவிக்கும் இளம் தம்பதிகளின் துயர்களைப் பற்றி எழுத பத்திரிகை இல்லை.
நாட்டின் எல்லைகளைப் பற்றி எழுத பத்திரிகைகள் உண்டு. ஆனால், ஆண், பெண் எல்லைகளைப் பற்றி எழுத பத்திரிகைகள் இல்லை.
பாலர்களுக்கென்றும், பக்தர்களுக்கென்றும், ஜோசியத்திற்கென்றும், சினிமாவுக்கென்றும் பத்திரிகை உண்டு. போட்டிப் புதிர்களை விடுவிப்பதற்கென்றும் பத்திரிகை உண்டு. ஆனால், காதலர்களிடையே ஏற்படும் புதிர்களை விடுவிக்க பத்திரிகை இல்லை. ஆண், பெண் தூய்மையாக, மனமொத்து வாழ, வழிகாட்ட காதலர்களுக்கென்று ஒரு தனி பத்திரிகை தமிழ்நாட்டில் இதுவரை தோன்றவில்லை. அந்தக் குறையை பூர்த்தி செய்யும் ஆவலுடன் முன் வந்திருக்கிறோம்...//
இந்த குறிப்புத்தான் முதல் இதழில் இடம்பெற்றிருக்கிறது. சொன்னபடியேதான் இதழையும் ஆசிரியர் நடத்தியிருக்கிறார்.
'காதல்' இதழ் முழுக்கவே காதல் பற்றித்தான் நிரம்பி வழிகிறது. பக்கத்துக்குப் பக்கம் காதல் ரசம் சொட்டுகிறது. திகட்டத் திகட்ட இருந்தாலும் திகட்டும்படி இல்லை.
'காதல் கதை எழுதுவது எப்படி', 'காதலும் கல்யாணமும்' போன்ற தொடர்களுடன், உலகிலுள்ள பல நாட்டு அறிஞர்களும் காதல் பற்றி உயர்வாக எழுதியிருப்பவை எல்லாம் பொன்மொழியாக தொகுக்கப்பட்டு 'முத்துக் குவியல்' என்ற பெயரில் மாதம்தோறும் வெளியாகியிருக்கிறது. சிறுகதைகளும், கவிதைகளும் கூட காதலை மையமாகக் கொண்டதுதான். உள்ளூர் ஆட்களின் கதைகள் தவிர 'வெளிநாட்டு காதல் கதைகள்' என்ற தலைப்பின் கீழ் மொழிபெயர்ப்பு சிறுகதைகளையும் வெளியிட்டிருக்கிறார்.
'சாட் ரூம்', 'அனு அக்கா ஆன்ட்டி' ஸ்டைலில் - அதாவது இதற்கெல்லாம் முன்னோடியாக - 'குடும்பத்தில் நடப்பவை' என்னும் தலைப்பின் கீழ் கணவனும் மனைவியும் உரையாடுவது போல் ஒரு பகுதி இறுதி இதழ் வரை வந்துள்ளது. அந்தரங்கமான விஷயங்கள் அனைத்தும் இதில் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.
இன்று பெரும்பாலான பத்திரிகைகளில் இடம் பிடித்திருக்கும் 'அந்தரங்க கேள்வி - பதில்' பகுதியை முதன்முதலில் தமிழ்கூறும் நல்லுலகுக்கு கொடுத்தது 'காதல்'தான்.
இது போக உறவுச்சிக்கல் குறித்து உளவியல் - உடற்கூறு மருத்துவர்களின் கட்டுரைகள் மாதந்தோறும் பக்கங்களை அலங்கரித்திருக்கின்றன.
முக்கியமான விஷயம் 'காதல்' முதல் இதழ் முதல் இறுதி இதழ் வரை அதன் அட்டைப் படத்தில் இடம்பெற்றவர்கள் காதலர்கள்தான். வேறு யாரையும் அந்த இதழ் பிரசுரித்ததில்லை. விதிவிலக்கு 1948 அக்டோபர் இதழ். அந்த ஆண்டு காந்தியடிகள் கொலை செய்யப்பட்டதாலோ என்னவோ, இந்த இதழின் அட்டைப் படத்தை மட்டும் காந்தியடிகளும் கஸ்தூரிபாயும் அலங்கரிக்கிறார்கள். என்றாலும் இந்த இதழின் உள்ளே காந்திக்கும் கஸ்தூரிபாய்க்கும் இருந்த காதல்தான் தனிக் கட்டுரையாக வெளியாகியிருக்கிறது.
இப்படி துணிச்சலுடன் இந்த 'காதல்' பத்திரிகையை நடத்தியவர் அரு.ராமநாதன். வெளியீட்டாளரும், ஆசிரியரும் இவர்தான்.
1980களின் இறுதியில் 'வயல்' மோகன் என்கிற சி.மோகன்தான் Mohan Chellaswamy முதன் முதலில் அரு.ராமநாதன் என்னும் பெயரை எனக்கு அறிமுகப்படுத்தினார். 'பிரேமா பிரசுரம்' சார்பில் வெளியான 'சிந்தனையாளர் வரிசை' நூல்களை அவசியம் நான் படிக்க வேண்டும் என்று சொன்னதுடன் அந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் தனது பரிசாக அவற்றை வாங்கியும் கொடுத்தார்.
''அரு.ராமநாதன் முக்கியமான ஒரு நபர். ஆனால், தமிழ்ச் சூழல் அவரை மறந்துவிட்டது. சொல்லப்போனால் திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டிருக்கிறார்...'' என்று அடிக்கடி சி.மோகன் நேர் பேச்சில் குறிப்பிடுவார். 1990களில் 'புதிய பார்வை' இதழில் அவர் 'நடைவழிக் குறிப்புகள்' தொடரை எழுதிய போது ஓர் அத்தியாயத்தையே அரு.ராமநாதனுக்காக ஒதுக்கியிருக்கிறார்.
''இவரைப் போன்ற ஓர் ஆளுமையாளரை காலம் மறக்க முற்படும்பொழுது, நாம் நினைவு கூர்ந்து செயல்பட வேண்டியிருக்கிறது. அது நம் பயணத்தின் தொடர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதற்கான அவசியமாகவும் இருக்கிறது...'' என சி.மோகன் அந்தக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருப்பது சத்தியமான வார்த்தைகள்.
இதன் பிறகு அரு.ராமநாதன் எழுதிய 'வீரபாண்டியன் மனைவி' நாவலை தேடிப் பிடித்து வாசித்தேன். மூன்று பாகங்கள் அடங்கிய இந்த நாவல் ஏறக்குறைய 1700 பக்கங்கள் கொண்டது. 1953ம் ஆண்டு ஜனவரி மாத 'காதல்' இதழில் தொடங்கிய இந்தத் தொடர் 1959ம் ஆண்டு மார்ச் இதழில் முடிவடைந்திருக்கிறது.
ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளியான இந்த சரித்திர நாவல், தமிழ் வரலாற்று நாவல்களிலேயே முதன்மையானது. சிறப்பானது.
அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' மாபெரும் வெற்றியடைந்த போது, 'அது அல்ல சரித்திர நாவல். அலெக்சான்டர் டூமாஸின் நாவல்களை காப்பி அடித்து கல்கி எழுதியிருக்கிறார். உண்மையில் வரலாற்று நாவல் என்றால் இப்படியிருக்க வேண்டும்...' என நண்பர்களிடம் சூளுரைத்துவிட்டு அரு.ராமநாதன் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்ததாக சொல்வார்கள்.
இந்த நாவலில் பல புதுமைகளை இவர் செய்திருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பமும் கம்ப ராமாயணப் பாடலை கொண்டிருக்கும். நாவலின் நிலைக்களன் மதுரை என்பதால் ஒவ்வொரு அத்தியாயமும் 'ம' என்ற எழுத்துடனேயே தொடங்கும். கம்ப ராமாயணம் பால காண்டத்தில் தொடங்கி யுத்த காண்டத்தில் முடிகிறது என்றால் 'வீரபாண்டியன் மனைவி'யின் முதல் பாகம் யுத்த காண்டம்; இரண்டாவது பாகம் சுந்தர காண்டம்; மூன்றாவது பாகம் பால காண்டம்... என தலைகீழாக இருக்கும்.
இந்த 'வீரபாண்டியன் மனைவி'யின் தலைசிறந்த கதாபாத்திரம் என ஜனநாதனை சொல்லலாம். இந்த கதாபாத்திரத்துக்கு சமமாக படைக்கப்பட்ட பிற கேரக்டர்களை தமிழ்ப் புனைக்கதை உலகில் தேடினால் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுக்குத்தான் கிடைக்கும். அந்தளவுக்கு பவர்ஃபுல்லான ஸ்கெட்ச். ஜனநாயகம், அரசாட்சி தொடர்பாக ஜனநாதன் பேசும் ஒவ்வொரு வாக்கியமும் பட்டாசு. இன்றும் பொருந்தக் கூடிய நக்கல், நையாண்டி. குறிப்பாக மந்திராலோசனை அரங்கில் ஆசனங்கள் ஏன் படி வாரியாக போடப்பட்டிருக்கின்றன என்பதற்கு அந்தப் பாத்திரம் அளிக்கும் விளக்கம் இருக்கிறதே... தெள்சன்ட் வாலா.
''நான் முட்டாள்களை ஏமாற்ற முட்டாள்களுக்கு வழிகாட்டுவேனே தவிர நானே முட்டாள்களோடு ஒரு முட்டாளாக கலந்து கொள்வதில்லை!''
இன்னொரு இடம் -
''ஏகாதிபத்தியம் என்பது அடிமைப் பிரஜைகளைத்தான் உற்பத்தி செய்து என்றாவது ஒரு நாள் அன்னிய ஆதிக்கத்தின் வருகைக்கு அழிவுப்பாதை போடும். அதுதான் பல்லாண்டுகளாக பாரத தேசத்தின் சரித்திரமாக இருந்து வந்திருக்கிறது. கிராம சுயாட்சியின் மூலம் ஜனங்களின் உரிமைகளும் தனி மனிதனின் சுதந்திரமும், நல்வாழ்வும் பெருக வேண்டுமானால் ஏகாதிபத்ய முறை அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்...''
சுவாரஸ்யமான தகவல் - 'வீரபாண்டியன் மனைவி'; சாண்டில்யனின் 'கன்னி மாடம்'; விஷ்வக்சேனனின் 'பாண்டியன் மகள்' ஆகிய நாவல்கள் அனைத்தும் ஒரே வரலாற்றுக் காலகட்டத்தை சேர்ந்தவைதான். ஆனால், மூன்று நாவல்களின் டிரீட்மெண்ட்டும் வேறு வேறாக இருக்கும். சரித்திர நாவல் பிரியர்கள் ஒரே நேரத்தில் இந்த மூன்று புதினங்களையும் வாசித்துப் பார்க்கலாம்.
எனக்கு அறிமுகமாகும் அனைத்து நண்பர்களுக்கும் இந்த நாவலை படிக்கும்படி பரிந்துரைப்பேன். குறிப்பாக வெகுஜன பத்திரிகைகளில் புதிதாக எழுத வருகிறவர்கள் அவசியம் ஒருமுறையாவது 'வீரபாண்டியன் மனைவி'யை வாசிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
கூடவே இ.பாலகிருஷ்ண நாயுடு எழுதிய 'டணாய்க்கன் கோட்டை' நாவலையும் வாசிப்பது நல்லது. கோவையில் இருந்து வெளியான நாளிதழில் தொடராக வந்த சரித்திரப் புதினம் இது. நீண்ட வருடங்களாக விற்பனைக்கு கிடைக்காத இந்த நாவலை சமீபத்தில்தான் 'அம்ருதா பதிப்பகம்' தேடிப் பிடித்து அச்சிட்டிருக்கிறது. ஃபிக்‌ஷனுக்கும், நான் ஃபிக்‌ஷனுக்கும் இடைப்பட்ட அந்த எழுத்து நடையும், திப்பு சுல்தான் குறித்த சரித்திர விவரங்களும் சிலிர்க்க வைக்கும்.
ஆனால், முகநூலிலும் இணையதளத்திலும் எழுதி வரும் நண்பர்கள் 'டணாய்க்கன் கோட்ட்டை'யை படிக்காமல் இருப்பதே உத்தமம். ஏனெனில் அந்தக் கால புறச்சூழல் பிறப்பித்த நடையில் எழுதப்பட்ட அந்தப் புதினம் இணைய நண்பர்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தும்.
இந்தப் பிரச்னை 'வீரபாண்டியன் மனைவி'யில் கிடையாது. அட்டகாசமான வெகுஜன நாவல். ஆனால், எந்த விமர்சகரும் இதுவரை இந்த நாவல் பற்றி பேசியதும் இல்லை. எழுதியதுமில்லை.
நாவலுக்கு மட்டுமல்ல 'காதல்' இதழுக்கும் இதுதான் கதி.
இத்தனைக்கும் 1947 நவம்பர் மாதம் இந்தப் பத்திரிகை தொடங்கப்பட்டிருக்கிறது. அப்போது அரு.ராமநாதனுக்கு வயது 23. அதன் பிறகு, தான் காலமாகும் வரை - அதாவது 18.10.1974 வரை தொடர்ந்து காதலுடன் 'காதலை' நடத்தியிருக்கிறார். இதனை அடுத்து இவரது சந்ததியினர் இப்பத்திரிகையை விடாமல் கொண்டு வந்திருக்கிறார்கள். கடைசி இதழ் 1980ல் வெளிவந்திருக்கிறது.
ஏறக்குறைய 33 ஆண்டுகள் வெற்றிகரமாக, அதுவும் ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையான 'காதல்' இதழ் எவரது நினைவின் அடுக்கிலும் இப்போது இல்லை என்பது மிகப்பெரிய சோகம்.
அவ்வளவு ஏன்... இந்த இதழ் வெளிவந்துக் கொண்டிருந்த நாளிலேயே தமிழகம் 'காதல்' பற்றி பேச மறுத்திருக்கிறது. இதற்கு உதாரணம் 'கல்கி' இதழ்.
1963ம் ஆண்டு ஆகஸ்டில் 'குண்டு மல்லிகை' என்ற சமூக நாவலை 'கல்கி' வார இதழில் அரு.ராமநாதன் தொடராக எழுதியிருக்கிறார்.
இதற்கான அறிவிப்பில் ''தமிழ் மக்களின் இதயங்களில் நிலையான இடம் பெற்றுவிட்ட 'இராஜராஜ சோழன்' நாடகத்தை அளித்த திரு. அரு.ராமநாதன் எழுதிய சமூகத் தொடர் 'கல்கி' இதழில் விரைவில் ஆரம்பமாகிறது...'' என்றுத்தான் குறிப்பிட்டது.
அப்போது 'காதல்' இதழ் 16வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்தது. ஆனாலும் 'காதல்' ஆசிரியர் என்று சொல்ல 'கல்கி' தயங்கியது.
இந்த நிலை என் அப்பாவுக்கும் இருந்தது. நிச்சயம் என் அப்பா, தன் இளமைக் காலத்தில் 'காதல்' பத்திரிகையை படித்திருப்பார். ஆனாலும் என்னிடம் அது குறித்து பேசியதேயில்லை. பதிலாக வெவ்வேறு இதழ்கள், தொடர்கதைகள் குறித்து பல இரவுகள் விடிய விடிய என் தலையை கோதியபடி பேசியிருக்கிறார். வியர்வை மணம் வீசும் அவர் தொப்பையில் தலைசாய்த்தபடி அவற்றை எல்லாம் கேட்டது இப்போதும் நினைவில் இருக்கிறது. 'குண்டு மல்லிகை' நாவல் கூட அப்பா பைண்டு செய்து வைத்திருந்த அடுக்கில் இருந்து எடுத்துத்தான் படித்தேன். அப்போது 'காதல்' குறித்து நான் கேள்விப்படாத நேரம்.
'வயல்' மோகனை சந்தித்த பிறகுதான் 'காதல்' குறித்து அறிந்தேன். அப்பாவிடம் கேட்டபோது புன்னகையே பதிலாக கிடைத்தது.
ஏறக்குறைய இதே குணத்துடன்தான் 1947 - 1980 காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். வெகுஜன வாசகர்களாக இருந்த அவர்கள் அனைவரும் 'காதல்' பத்திரிகையையும் அறிந்திருக்கிறார்கள், தொடர்ச்சியாக படித்திருக்கிறார்கள்.
ஆனால் -
அதை வெளியில் சொல்ல கூச்சப்பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் முறைகேடான உறவுகள் சார்ந்த காதலை 'காதல்' பத்திரிகை பிரசுரித்ததேயில்லை. கணவன் - மனைவி; காதலன் - காதலி ஆகியோருக்கு இடையில் இருக்க வேண்டிய இணக்கத்தைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்திருக்கிறது.
என்றாலும் இதழ் குறித்து விவாதிக்கும் துணிச்சல் ஒருவரிடமும் இல்லை. 1960களின் பிற்பகுதிக்கு பிறகு 'காதல்' இதழில் கவர்ச்சிகரமான படங்கள் இடம்பெற ஆரம்பித்திருக்கின்றன. அதற்காக 'சரோஜாதேவி', 'பருவகாலம்', 'விருந்து' அளவுக்கெல்லாம் இறங்கவில்லை.
அப்படியிருக்க ஏன் தமிழ்ச் சமூகம் 'காதல்' என்ற பெயரில் ஓரு வெகுஜன இதழ் 33 ஆண்டுகள் வெளிவந்தது என்பதையே பதிவு செய்ய மறுக்கிறது என்று புரியவில்லை. அத்துடன் பழைய புத்தகக் கடையிலோ, கரையான் அரிப்பதற்காகவே உயிர் வாழும் வாடகை நூலகத்திலோ கூட ஏன் ஒரு 'காதல்' பிரதி ஒன்று கூட காணக்கிடைக்கவில்லை என்பதற்கும் பதில் கிடைக்கவில்லை.
சமீபத்தில் ரோஜா முத்தையா நூலகத்தில் 'காதல்' இதழ்களை பார்க்க நேர்ந்தது. ஆச்சர்யம் கலந்த வியப்புத்தான் ஏற்பட்டது. இதோ இந்த நிமிடம் வரை அந்த உணர்வு நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
என்ன மாதிரியான உள்ளடக்கத்தை எல்லாம் சர்வசாதாரணமாக அரு.ராமநாதன் கொடுத்திருக்கிறார்... அவற்றை எல்லாம் அந்தக் கால 'குமுதமும்', 'ஆனந்த விகடனும்' எப்படியெல்லாம் உருமாற்றி பயன்படுத்திக் கொண்டன என்பதை நினைக்கும்போது -
ஒன்றுத்தான் தோன்றியது.
இந்த ஜானர் ஏன் இப்போது இல்லாமல் போய்விட்டது? திருமணமாகாத 23 வயது இளைஞனுக்கு இப்படியொரு பத்திரிகையை திருச்சியிலிருந்து தொடங்க வேண்டும் என்று எப்படி தோன்றியது?
விடை தெரியா கேள்விகள். 1950 வாக்கில் சென்னை வந்த அரு.ராமநாதன் 'கலைமணி' என்னும் சினிமா மாத இதழை 1949 ஏப்ரல் முதல் நடத்தியிருக்கிறார். சில ஆண்டுகள் மட்டுமே வெளியான இந்த இதழில் உதவி ஆசிரியராக தன் வாழ்க்கையை தொடங்கியவர்தான் பிற்காலத்தில் 'வாண்டு மாமா' என்று புகழப்பட்ட கிருஷ்ண மூர்த்தி.
அதே போல் 1954ம் ஆண்டு சிரஞ்சீவியை ஆசிரியராக கொண்டு 'மர்மக் கதை' என்னும் மாத நாவலையும் (பாக்கெட் நாவல், க்ரைம் நாவலுக்கு எல்லாம் முன்னோடி) வெளியிட்டிருக்கிறார்.
'கலைமணி'யும் சரி, 'மர்மக் கதை'யும் சரி அதிக ஆண்டுகள் தாக்குப் பிடிக்கவில்லை. 'காதல்' மட்டும்தான் இறுதி வரை கம்பீரமாக வந்திருக்கிறது.
என்றாலும் 'காதலை'ப் பற்றி பேசத்தான் ஆளில்லை. அன்றும் இன்றும் நிஜ வாழ்வில் அதுதானே நிலமை?
பின் குறிப்பு:
1. 'தங்கப் பதுமை', 'பூலோக ரம்பை', 'ஆரவல்லி' போன்ற படங்களுக்கு திரைக்கதை - வசனம் அரு.ராமநாதன்தான்.
2. டி.கே.எஸ். நாடகக் குழு நடத்திய போட்டிக்காக இவர் எழுதியதுதான் 'இராஜராஜ சோழன்' நாடகம்.
3. இதுவரை 350க்கும் மேற்பட்ட நூல்களை 'பிரேமா பிரசுரம்' வெளியிட்டிருக்கிறது.
4. 'அசோகன் காதலி' இவர் எழுதிய முதல் சரித்திர நாவல். குறுநாவல் என்றும் சொல்லலாம்.
5. தன் இறுதிக் காலத்தில் இவர் எழுதிய 'வெற்றிவேல் வீரத்தேவன்' சரித்திர நாவலை வாசிக்காமல் இருப்பதே இவருக்கு நான் செய்யும் மரியாதை. 'வீரபாண்டியன் மனைவி'யை எழுதியவரா இந்த நாவலையும் படைத்திருக்கிறார் என்ற அதிர்ச்சியில் மாரடைப்பே வந்துவிடும்.
6. தன் கனவுப் படைப்பாக 'ரசியா பேகம்' சரித்திர நாவலை நினைத்திருந்தார். அதற்காக குறிப்புகளையும் சேகரித்திருந்தார். ஆனால், எழுத ஆரம்பிப்பதற்குள் தன் 50வது வயதில் காலமாகிவிட்டார்.
கே. என். சிவராமன்