Search This Blog

Showing posts with label Tamil Kavithaikal. Show all posts
Showing posts with label Tamil Kavithaikal. Show all posts

Monday, September 17, 2018

கவிதைகளை எழுதுவது கவிதையாகாது

ஒரு நாட்டுப்பாடல்
~ ஜிபிக்னியூ ஹெர்பெர்ட்
மொழியாக்கம்: வ.கீதா - எஸ்.வி.ராஜதுரை
உழவனின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
விதைத்து அறுப்பது
என்றான் உழவன்.
தையல்காரனின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
கிழியாத, வெதுவெதுப்பான ஆடைகளைத் தயாரிப்பது
என்றான் தையல்காரன்
தளபதியின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
கொரில்லாவுக்கு எதிராக பூர்ஷ்வா வர்க்கத்தின்
இராணுவத்தை
வழிநடத்திச் செல்வது என்றான் தளபதி
கவிஞனின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
எனக்குத் தெரியாது என்றான் கவிஞன் -
ஆனால் கவிதைகளை எழுதுவது
கவிதையாகாது மகனே!
Kutti Revathi

Sunday, November 19, 2017

ஜமீலின் நதியில் ஒரு மீன் குஞ்சாக நீந்திப் பாரத்தல்


வடிந்து கொண்டிருக்கும் பெருமழையைப் பையிலிட்டு அடைத்தபின் அதற்கான பலவர்ணங்களைத் தீட்டி மகிழ்கிறான் ஒருவன். அவன் அணிவித்த நிறங்களத்தனையும் ஒவ்வொரு சாயலாக இடம்பெயர்ந்து செல்கின்றன.
முதலில் ஒரு குழந்தையின் மனதாக...
அதன்பின்னர் முதிர்ந்த காலத்தைக் கூறும் பாத்திரமாக அடுத்து கனவுகளுக்குள் வாழும் உணர்வாக,
இப்படியாக மாறும் உணர்வுகளை மழையின் நிறங்களாகக் காட்டியிருக்கிறார் கவிஞர் ஜமீல்.
ஈழத்தின் கவிதைப்பரப்பில் பின்நவீனச் சாயலானது இவரது படைப்புக்கள்.
ஒரு குழந்தையின் மனமாகவே இவர் பேசுகிறார்.குழத்தையின் உள்மனதிலிருந்து பட்டாம்பூச்சியாகிப்பறக்கும் அவர்களது கனவுகள் வரைக்கும் இவரது தொகுதியில் சிறகடித்துப்பறக்கின்றன.
குழந்தை மனதிற்கு அப்பாலும் இவரது கவிதை வெளி பரத்திருக்கின்றது. அது காதலாகவோ நிலையில்லா அரசியலாகவோ சமூகத்தின் உடைந்த குரல்களாகவோ அது இருக்கின்றது.
பின்நவீனத்தின் ஒப்புவித்தல்களை எளிய வடிவில் இலாவகமாக ரசணைக்குறிப்புகளோடு விளங்கிக் கொள்ள முடிவது இவரது எழுத்துக்களின் வெற்றியே.
'அவன் பையில் ஒழுகும் நதி' பல இன்சுவைகளோடும் குழத்தைகளின் நிறக்கனவுகளோடும் மகிழ்விக்கின்றன.
இத்தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ள பல கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டும் நிலையினை எம்முள் கொணர்ந்து விடுகின்றன.
அட்டைப்படத்தின் நிறங்களோடு மகிழ்விக்கும் இந்நிலை கடைசிப்பக்கம் வரை நீண்டு கொண்டே செல்கின்றதெனலாம்.
இடைவிடாது சிறகடித்துக்கொண்டிருக்கும் கடலின் உட்புறத்தை இவர் அறிகிறார். இக்கடலை பறக்கச் செய்தல் எவ்வாறு என தனது எழுத்துக்களில் வர்ணிக்கிறார்.
மீண்டும் 'பனியில் உறையும் ஒளி'யில் அவதியுறும் நிலவொளிக்கு ஆடைபோர்த்தித் தவழ விடுவது கூடுதல் அழகு சேர்க்கிறது.
கனவுகளால் பாரிக்கும் சிறுவனின் புத்தகப்பை அவனது கனவுகளுக்கே ஆபத்தாகி விடுவதை கவிஞர் சமூகத்திற்கே ஓர் அறிவுரையாகச் சொல்கிறார்.
இரவு விடிவதற்குள் உடைமாற்றித்தயாராகும் குழந்தையின் உள்ளத்தில் விடியலென்றாலே சிறைக்கூண்டு தானே என்ற எண்ணங்களை உருவாக்கும் இச்சமூகம் பொல்லாத பாவியெனச் சொல்லத்தோன்றுகின்றது.
பட்டாப்பூச்சியை இரசிக்கும் மனங்களை அதன் மெலிந்த சிறகாகவே நினைத்து விடுகின்றனர். அது காற்றில் தூக்கி வீசப்பட்டு அங்குமிங்கும் அலைந்தலைந்து கடைசியில் மண்ணாகவே உக்கிவிடுகிறது.
இதிலிருந்து விடுவிக்கப்படுதல் தான் சுதந்திரம். இக்கவிதைகள் பலவற்றின் கருத்துக்கள் இவ்வாறே காணப்படுகின்றன.
அலைதலுக்காகவே வாழ்தல் என்பது போலாகிவிட்ட நம் வாழ்க்கை இரசிப்பதற்காக உருவாக்கப்படவேண்டும்.
அவை எமக்காகப் பங்கிடப்படவேண்டுமெனச் சொல்லும் சில கவிதைகளை இங்கு காணலாம்.
தனிமையில் பெருகும் எண்ணவோட்டங்கள் பெரும் சொற்குவியல்களாகி நீத்திக்கொண்டிருக்கின்றன. அவைகள் நாம் உறங்கும் அறையெங்கும் முத்தங்களைப் பொழித்து ஒரு துணையாக இருந்துவிடுகின்றது.
பின்பொரு நாளில் எம்மைப் பிரமிக்கவும் வைக்கிறது.
இது தான் கவிஞர் ஜமீலின் இத்தொகுப்பு.
மனங்களையும் மனது செல்லும் இடங்களையும் அவர் நன்கறிகிறார்.
நடுநிசி வீதியும் அங்கு உலாவுகின்ற முலையூட்டிகளும் அவர் எழுத்துக்களுக்கு நண்பர்களாகி விடுகின்றன. அவர்வாழும் நெய்தல்,மருதம் அவருக்குள் எண்ணங்களை உசுப்பிவிட்டு தானும் எழுந்து கொள்கின்றன.
வாழ்வியலையும் குழந்தைமனதையும்
சமூகத்தின் இரசணைகளோடு ஒப்புவிக்கும் இத்தொகுப்பு அவரது ஏனைய தொகுப்புக்களைப் போன்று சிறப்பாகவே இருக்கிறது.
*****
றஹ்மதுல்லாஹ்.

இருளின் வெளிச்சம்


வெளிச்சத்தைவிட
இருளே
எனக்கு விருப்பம்.

விதை வளர்கிறது
மண்ணறை இருட்டில்.
குழந்தை வளர்கிறது
கருவறை இருட்டில்.

ஆக்கங்கள் யாவும்
அழகான இருளில்தான்.

வெளிச்ச முத்தத்திலோ
விளம்பர முத்தத்திலோ உண்டா
இருட்டு முத்தத்தின் இன்பம்?

மோதல் தளர்வதும்
காதல் வளர்வதும்
இருட்டில்தான்.

கருவறையிலும்
கல்லறையிலும்
கூடவே இருப்பது
இருட்டுதான்.

வெளிச்சங்கள் யாவும்
வந்து போகலாம்
இருட்டின் நட்பு
நிரந்தரமானது.

வெளிச்ச வண்ணங்கள்
பூசிக்கொள்ளாத
இருட்டை நம்பலாம்
எந்த நாளும்.’

Nagore Rumi

Sunday, November 12, 2017

நிராகரித்தலென்பது


இரக்கமற்ற ஓர் சொல்லின்
விதையிலிருந்து அரும்புகிறது ...
நமது நிராகரிப்புகளின் பச்சை

ஒரு குழந்தை
தாயின் முத்தத்தை மறுப்பதிலிருந்து
துவங்குகிறது அதன் முதல் வலி

அதனை ஏற்பதென்பது
அத்துனை சுலபமான விடயமல்ல
தவிரவும் யாரும் விரும்பி ஏற்பதுமில்லை

ஒருத்தர் மீதான நம்பிக்கையும்
அதீதமான பிரியமும் உடைகிற போது
நிராகரிப்புகளும் உடன் நிகழ்ந்து விடுகிறது
அது தவிர்க்க முடியாதுமாகும்

நிராகரிக்கப் படாமல்
இங்கு யார்தான் ஜீவிக்கிறார்கள்
அதிலிருந்து யாருமே தப்ப மடியாது

ஆயினும் இன் நிராகரிப்புகள்
எதுவுமே நிரந்தரமானதல்ல

காலம் நம்மை
எப்போது நிராகரிக்குமென்று
யாராலூம் கணித்து சொல்ல முடியாது

அத்துயர்மிகு கணம் வரை
வாழ்ந்து தொலைய வேண்டியதுதான்

0
ஜமீல்

Wednesday, November 8, 2017

நீலக் குறிஞ்சி



மலையெல்லாம் நீலக்குறிஞ்சிகள்
பூத்த வருடம் நான் பிறந்ததாக
பாட்டி சொன்னாள்
...
இளமை தளிர் கொண்ட காலத்தில்
மலைவெளியில் அப்பூக்கள்
மீண்டும் பூத்தபோது மழையின் நிறம் நீலம்
எனக் கண்டுணர்ந்தேன்
குறிச்சிப் பூக்களின் நீலவெளிச்சம்
தொடுவானில் பிரதிபலிப்பதை தரிசிக்கையில்
காத்திருப்பின் கனியும் அந்நிறத்தில்
தான் இருந்தது
கித்தார் மரத்துப் பூக்களின் வாசனை
கண்டடையாத காதலனின் உருவத்தை
ஆழ் மனதில் வரையத் துவங்கியது
வரையாடுகளின் சினைப்பருவ காலத்தை
வனாந்தரம் மறைத்து வைப்பது போலவே
தளிருடலை மறைத்து வைக்கத் துவங்கினேன்
நீர்க் கடம்ப மரத்தின் தாகத்தை
சிற்றோடைகள் அறியும் சமயம்
வேர்கள் சர்ப்பநடனமிடும்
காட்டுவாசியின் இசை
வெறுமையின் துல்லிய உண்டியலில்
சேர்க்கப்படுவதை அறிவேன்
பூம்பாறைப் பூக்களின் ஆகிருதியை
தாங்கயியலாது மனம்
பனிப் பாறைகளில் சறுக்கும்
காத்திருப்பு தனிமையில் இடறுவது
பள்ளத்தாக்கிலிருந்து குறிஞ்சிப் பூஞ்சருகுகள் வீழ்வது
நீலத்தின் நிவறுதல் நிலைமொழியாய்
வானத்திற்கு ஏகியதும் இங்ஙனமே
காட்டில்தான் நீலக்குறிஞ்சி பூக்கும்
காத்திருந்து காதலனோடு தரிசிக்கவும்
நாம் இங்கிருந்து வாழ்ந்து போன பிறகும்
Composed By - Thenmozhi Das

Saturday, October 28, 2017

ஜாதிக்காய் பிஞ்செனக் காமம்



மயிலின் முன்கழுத்தென நீலமேறி
வளைந்து ஓடும் ஓடையென வெட்கம்
முத்தம் விலக்க மறுகுகிறது
நீரின் நிழல் அருந்தும்
தவளைக்குஞ்சின்
வயிற்றில் கண்ணாடி வளையல்
சுழல்வதென உடலுக்குள் ஆசை
சூல் கொள்கிறது
காட்டுப்புறாவின் மேனியில்
விளையும்
கந்தகப் பொன்பச்சை நிறத்தை
உருகுமென் கண்கள் அணிகின்றன
காலின் பெருவிரல்
அருகில் இருக்கும் சிறுவிரலை
உரசிக் கொளுத்தும் தீ
மூளையில் மேகமென விரைகிறது
நீ அருகில் வருகையில்
காந்த மலையின்
சுனையின் சுற்றுச் சூழலில்
காற்றின் கலவரம்
என்னைத் தொலைக்கிறது
ஜாதிக்காய் பிஞ்சென காமம் காய்க்கையில்
நாற்பது விரல்களில்
நாயனச் சூத்திரமும்
காந்தள் இதழ் சுவைக்க
கசியும் நன்னீர் ஊற்றும் நம்மை
கற்பகக் காடாய்ப் படைக்கிறது
உனது
கற்கடகக் கைகளில்
வெளிமானெனத் துள்ளும்
உடலுக்குள் உருகும் மனதில்
முத்த நரம்புகள் பூக்கத் துவங்குவதை ரசிக்கிறாய்
ஊறும் உன் அணுக்கள்
நெத்திலிகளாய் நீச்சலடிப்பதையும்
உனது உதடுகள் பறக்கும் அணிலென
எனது ஸ்தனங்களில் இடறத் துடிப்பதையும்
பொன்துகள்களாய் செவிப்பறையில் பூசுகிறாய்
புருவ மத்தியில் இழந்த
புத்தியின் கொடியில்
பூனைக்காலிப் பூக்கள்
பூத்துக் கறுக்கத் துவங்கிவிட்டன
கால்கள் சர்ப்பங்களாகையில்
காமம் களவென விளைந்த கனவுகளை வெல்கின்றன
வெள்ளி நிலவின் உட்கருவில்
பனி ஊறுகையில்
தாகத்தின் நிறம் வெள்ளை எனவும்
தாமரையில் சுடரும் ஒளி
உயிரின் தண்டில் ஊடுருவுவதையும்
உன்னிடம் எப்படிச் சொல்வேன்
Composed by - Thenmozhi Das
10.5.2016
Thanks to - Mega Aruna Chalam

Tuesday, September 19, 2017

என் நடுங்கங்களில் நீ...

Iyyappa Madhavan
பனிக்கால அந்தியில் விழித்த கதவினுள் வந்தாய்
தேகத்தினுள் நிசப்தமாய் விரவினாய்
என் நடுக்கங்களில் நீ உறைந்தவேளை ...
நிர்வாண நினைவில் ஏங்கி எரிந்தேன்
அதீத சீதளத்தில் உன் வேட்கையில் புதைய
மாய பிம்பமாய்ப் புலுனுற்றேன்
என் பசலை நிலை கண்டு
பரிதிகளாய் வந்திருந்து மோதிய வேளை
பெரும்காடெனப் பற்றிக்கொண்டேன்

நீயோ பனிச்சாம்பலிலிருந்து உயிர்ப்பித்தாய்
புனைந்த அழகில் கிறங்கிக் கிடந்தவனை
உன் வாஞ்சையாக மாற்றிக்கொண்டாய்
கை வளையல்களும் காற்கொலுசும் மீட்டியபோது
இசையாய்க் கரைந்துபோனேன்
உன் பித்தில் நீயாகவே இருந்தேன்

மந்த மாருதம் காதல் மென்னுணர்வுகள் இசைத்தன
உன் தோளில் நான் சாய்ந்தேன்
என் தோளில் நீ சாய்ந்தாய்
மலர்களாயின தூறிய சாரல்கள்
நறுமணம் தோய்ந்து உருகிக் மறைந்தோம்

அந்தி முடிய இருளின் வருகையில்
விண்மீன்களாய் ஒளிர்ந்தது நாணம்
நிலவொளியில் அந்தகாரம் தேய்ந்து சுருங்க
சயனத்திலிருப்பது போல் விழித்திருந்தோம்

இமைகள் மூடாதிருந்தது நீண்ட கனவு.

Saturday, September 16, 2017

அன்னா அக்மதோவா கவிதைகள்

மொழியாக்கம்: வ.கீதா, எஸ்.வி. ராஜதுரை
ஆழ்கிணற்றின் அடியாழத்திலுள்ள ஒரு வெள்ளைக்கல் போல
என்னிடத்தில் ஒரே ஒரு நினைவு மட்டும்....
அதை நான் போக்க முடியாது, போக்க விரும்புவதுமில்லை
அது ஒரு உவகை, அது வேதனையும் கூட.
எனக்குத் தோன்றுகிறது என் கண்களை உற்றுப் பார்ப்பவருக்கு
அது தெளிவாகத் தெரியுமென்று.
சோகம் ததும்பும் கதையொன்றைக் கேட்பவரை விட
அவர் நெஞ்சம் மேலும் கனக்கும், துயருறும்.
எனக்குத் தெரியும் கடவுளர் மனிதரைக்
கல்லாக மாற்றியுள்ளனர்,
மனங்களை அப்படியே விட்டுவைத்து.
அந்த அற்புதமான சோகங்கள்
இன்னும் எஞ்சியிருக்க வேண்டுமென்று
என் நினைவாக மாற்றப்பட்டு விட்டாய் நீ.

நான் உன்னைப் பார்க்கவில்லையெனில்

மொழியாக்கம்: தி.இரா.மீனா

நான் உன்னைப் பார்க்கவில்லையெனில் –...
நிமிடங்களை நூற்றாண்டுகளாக முடிவற்றவைகளாக உணர்வேன்
ஒரு முறை உன்னைப் பார்த்திருந்தால் —
மீண்டும் இரக்கமற்ற வகையில் நெஞ்சுக் காயத்தோடு.
நான் உன்னைப் பார்க்கவில்லையெனில் -
இருட்டிலும் உறைபனியிலும் காற்றாய்க் கிடப்பேன்
ஒரு முறை உன்னைப் பார்த்து விட்டால் —
ஏதோ ஒன்றால் கருக்கப்பட்டு சுருங்குவேன்

நான் உன்னைப் பார்க்க விரும்பினால் —
தேவதைகளின் கரங்கள் சொர்க்கத்திற்கு என்னை அனுப்பும்
நான் ஒருமுறை உன்னை பார்த்திருந்தால் -
நரகத்தின் கொடுமைகள் தரப்பட்டிருக்கும்
என் அமைதிக்குத்தான் இழப்பு
உன்னுடனோ அல்லது நீயில்லாமலோ —அது சிதைவுதான்
எனக்கு பூமி கிடைக்கவில்லை

நான் சொர்க்கத்திலிருந்து விலக்கப்பட்டவள்.

வெள்ளை இரவு

மொழியாக்கம்: தி.இரா.மீனா
நான் கதவைப் பூட்டவில்லை
...
மெழுவர்த்திகளையும் ஏற்றவில்லை,
நீ அறியவும் மாட்டாய், கவலையுமில்லை
தூங்கப் போகுமளவுக்கு
எனக்கு பலமில்லை
வயல்வெளிகள் நிறமிழந்தன
சூரியாஸ்தமனம் பைன்மரங்களை இருளாக்கியது
எல்லாம் இழந்த நிலைதான்
இந்த வாழ்க்கை சாபமான நரகம்தான்
கதவருகில் உன்குரல் கேட்டு போதையாகிறேன்.
நீ வருவாயென நிச்சயம் தெரியும்

அந்த எதிரொலி

மொழியாக்கம்: தி.இரா.மீனா

கடந்த காலத்திற்கான பாதைகள் என்றோ மூடப்பட்டுவிட்டன...
நான் இறந்த காலத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்யமுடியும்?
அதில் என்ன இருக்கிறது?இரத்தத்தால் உரசப்பட்ட கற்கள்
அல்லது சுவறான கதவுச்சிறை
அல்லது எதிரொலி, அதுதான் என்னை எப்போதும் வருத்துகிறது
அமைதி, உறுதி என்று நான் பிரார்த்தனை செய்தபோதும்
எதிரொலி ஒரு பழங்கதையாகவே இருக்கிறது.

அதையும் என்நெஞ்சில் மட்டுமே சுமக்கிறேன்.

இதுவரை பாடப்பட்டப் பாடல்களிலேயே இனிதானது"

மொழியாக்கம்: ஆழி செந்தில்நாதன்
ஆழமாய்ப் படிந்த பனியின் ...
கடினமான மேற்பரப்பினூடே,
உன் ரகசியமான வெள்ளை இல்லம் நோக்கி,
அமைதியாய், நாசூக்காய்
நாம் இருவரும் நடைபயில்கிறோம்,
பாதி இழந்த நிசப்தத்தில்.
இதுவரை பாடப்பட்ட எல்லாப் பாடல்களினும்
இனியதாக இருக்கிறது
இந்தக் கனவு நனவாகும் நிகழ்வு,
ஆம் என்று சொல்லி அசைகின்றன
பின்னிய கிளைகள்.

  1. Thanks Kutti Revathi


Tuesday, July 18, 2017

குவைத் பெண் கவிஞர் ஸுஆத் ஸுபாஹ் கவிதைகள்!


~~~~~~~~~~~~~~~~~~~~~~
"நான் குவைத்தின் மகள்...
மணலுக்கு மேல் தூங்கும்
இந்தக் கரையின் மகள்
அழகிய மான் போல...
என் கண்களில்
இரவின் நட்சத்திரங்கள் வெளியாகி
சந்திக்கின்றன

பேரீச்ச மரங்களும்..
இங்கிருந்து தான்...

என் பாட்டன்மார்கள் அனைவரும்
கடலுக்குப் போனார்கள்...
அசாத்தியமானவற்றைச் சுமந்து
திரும்பி வந்தார்கள்

நான் குவைத்தின் மகள்...
என் உள்ளம் காய்ந்ததாயிருப்பது
சாத்தியமானது தானா..

மரத்தினாலான குதிரை போல?...
உணர்ச்சியற்று...
மரத்தினாலான குதிரை போல?

என் வளர்ச்சியை அழித்து விடுவது
அரபியருக்கு சாத்தியமானதா?

அரபிக்கடலிலிருந்து குடித்த
பேரீச்சமரம் என் உடல்...
என் சுயத்தின் பக்கத்தின் மீது
வடிவம் கொண்டது

எல்லாத் தவறுகளும்
கவலைகளும்
அரபியரின் நம்பிக்கைகளும்"
(...)

"என் நண்பனாகி விடு...
என் நண்பனாகி விடு...
அமைதியின் துறைமுகத்திடம்
தேவையானவள் நான்

காதல் கதைகளாலும்
வேதனைச் செய்திகளாலும்
சோர்வடைந்தவள் நான்...

பெண்ணை கொலுமண்டபத்தின்
சிலையெனக் கருதும் இந்தக் காலத்தினால்
சோர்வடைந்தவள் நான்...

எனவே என்னைச் சந்திக்கும் போது நீ பேசு...
என்னைச் சந்திக்கும் போது நீ பேசு...

கீழைத்தேய ஆண்
ஒரு பெண்ணைச் சந்திக்கும் போது
ஏன் பாதிப் பேச்சை மறந்து விடுகிறான்?

அல்வாத் துண்டையோ புறாக்குஞ்சுகளையோ தவிர
அவளிடம் வேறெதையும்
ஏன் பார்க்க மறுக்கிறான்?

அவளின் மரங்களில்
ஆப்பிளைப் பறித்து விட்டு
ஏன் தூங்கிப் போகிறான்?"
(...)
"என் கவிதையால்
கண்ணியத்தின் சுவற்றை
உடைத்து விட்டேன் என்று கூறுகிறார்கள்...
ஆண்கள் தான் கவிஞர்கள்

இந்தக் கூட்டத்தில் இனி எப்படி
கவிதாயினி தோன்றுவாள்?!...
சிரிக்கவும் செய்கிறேன்...
சிரிக்கவும் செய்கிறேன்

அர்த்தமற்ற இந்த அனைத்தையும்...
நட்சத்திரங்களின் போர்க்காலத்தில்
பெண்களை உயிரோடு புதைக்க
விரும்பிக் கொண்டிருப்போரை
கேலி செய்கிறேன்

என் சுயத்தைக் கேட்கிறேன்...
ஆண்களின் பாடல் ஹலால்
ஆவது எதற்காக

பெண்களின் குரல்
கீழ்த்தரமானதாகி விட்டதா?

ஆச்சரியமான இந்தச் சுவர்களை
ஏன் நிறுத்தி வைக்கிறார்கள்...
வயல்களுக்கும் மரத்திற்குமிடையில்...
மேகங்களுக்கும் மழைக்குமிடையில்

பெண்மானுக்கும் ஆணுக்குமிடையில்
இருப்பது தான் என்ன?"

மொழியாக்கம்: Musthafa Qasimil
"إنني بنت الكويت ... بنت هذا الشاطئ النائم فوق الرمل
كالظبي الجميل ... في عيوني تتلاقى أنجم الليل
وأشجار النخيل .. من هنا...
أبحر أجدادي جميعاً ... ثم عادوا يحملون المستحيل
إنني بنت الكويت ... هل من الممكن أن يصبح قلبي يابساً ..
مثل حصان من خشب ؟ ... بارداً... مثل حصان من خشب ؟
هل من الممكن إلغاء انتمائي للعرب ؟
إن جسمي نخلة تشرب من بحر العرب ... و على صفحة نفسي ارتسمت
كل أخطاء ، و أحزان ، و آمـال العرب."
(...)
"كن صديقي... كن صديقي ... فأنا محتاجةٌ جداً لميناء سلام
وأنا متعبةٌ... من قصص العشق وأخبار الغرام
وأنا متعبةٌ... من ذلك العصر الذي يعتبر المرأة تمثال رخام
فتكلم حين تلقاني... تكلم حين تلقاني...
لماذا الرجل الشرقي ينسى حين يلقى امرأة نصف الكلام؟
ولماذا لا يرى فيها سوى قطعة حلوى وزغاليل حمام؟
ولماذا يقطف التفاح من أشجارها ثم ينام؟"
(...)
"يقولون أني كسرت بشعري جدار الفضيلة ... وأن الرجال هم الشعراء
فكيف ستولد شاعرة في القبيلة؟! ... وأضحك... وأضحك
من كل هذا الهراء ... وأسخر ممن يريدون في عصر حرب الكواكب، وأد النساء!
وأسأل نفسي... لماذا يكون غناء الذكور حلالاً
ويصبح صوت النساء رذيلة؟
لماذا يقيمون هذا الجدار الخرافي ... بين الحقول وبين الشجر ... وبين الغيوم وبين المطر
وما بين أنثى الغزال وبين الذكر؟"

Thanks 
Kutti Revathi

Saturday, July 1, 2017

வண்ணத்துப் பூச்சியும் கடலும் ~ பிரமிள்


சமுத்திரக் கரையின்
பூந்தோட்ட மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி

வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது

முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.

சூன்யத்தின் பெருவெளியில் ஒரு சிறு துளி

இருளடர்ந்து வரும் அந்திப்பொழுதொன்றில்
ஏதேனும் ஒரு ஆற்றின் பரப்பை பார்க்கையிலே
மனது பிசையும் உணர்வை உதற முடியவில்லை
என்னால் எப்போதுமே

மனதின் விசாலங்களை
சூன்யம் சூழும்போதெல்லாம்
பெருமணல் பரப்பிக்கிடக்கும்
அந்தி நேரத்து ஆற்றோரத்தை
தனியாய் அளைந்து திரிய
மனது விளைகின்றது..........

முன்பனிக்காலமொன்றில்
குளிர் சுருட்டும் உடலோடு
தோழனொருவனின் நெஞ்சினில் சாய்ந்தபடி
நிலவை வெறித்த
ஆற்றோர தில்லை மர வாழ்வை
எப்படி நான் மறந்து போனேன்.......

மெலிதான அரவத்திலும்
துணுக்குற்று விழித்தெழுவதும்
பின் நீளும் இரவுகளை
கதை மொழிந்து கடத்துவதும்.
ஆட்காட்டியின் கேவலிலே
அனைத்தும் அடங்குவதும்
சோவெனப் பெய்யும் மழையில்
விறைத்து நடுங்குவதும்
எப்படி மறந்தேன் என் தில்லை மர வாழ்வை?

ஆழப்படுக்கையினில்
அழவற்ற அற்புதங்களைப்
பொதித்திருக்கும்
கோரைக்களப்பாறு அமைதியாய்
தூங்கும் நடு நிசி நேரத்திலே
துள்ளியெழும் கயல் மீனில்
நிலவு தெறிக்க உண்டாகும்
வெள்ளி வளைவுகளை ரசித்த
தருணங்களை எப்படி நான் மறந்து போனேன்?

அந்த இரவுகள் அச்சங்களில் முடிந்தது
அந்த இரவுகள் அழுகைகளில் முடிந்தது
அந்த இரவுகள் மரணங்களோடு முடிந்தது
அந்த இரவுகள் காதலின் துயரோடு முடிந்தது
ஆனாலும் யாவற்றையும் மீறி
அந்த இரவுகள் நம்பிக்கையோடு முடிந்தது

எப்படி மறந்தேன் என் தில்லைமர இரவுகளை?.....
Yuvendra Rasiah

Sunday, June 18, 2017

தகப்பன் சாமி (கவிஞர். சுமதி ஸ்ரீ)



விபரமறியா வயதில்
விரலிரண்டை
துப்பாக்கியாக்கி
நான் சுடும்போது
விழி பிதுக்கலோடு
நாக்கும் நீட்டி
செத்துப்போவதாய்
பாவனை செய்து
பின் சிரிப்பாய்...
என் கையால் சாவதே
சந்தோஷம் என்பதாய்...

மேல் சட்டையில்
துளை மாறிய பொத்தானும்
கால் சட்டை தெரியக் கட்டிய
கைலியுமாய்
விடுதிக்கு வந்து
என் மானம் வாங்குவதாய்
புலம்புகையில்
நீ நீட்டிய
மஞ்சள் பையில் இருந்தது
எனக்கான புதுத்துணி...

போட்டா புடிச்சா
ஆயுசு குறையும் என
பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வுக்கும்
புகைப்படம்
எடுக்க விடாமல்
அடம் பிடித்த அப்பா(வி) நீ...

விடுமுறைக்கு
வரும்போதெல்லாம்
சிறுவாட்டு காசை
கறியாக்கி
என் இலை நிரப்பி
உன் மனம் நிறைவாய்...

விடுதிக்குக் கிளம்பும் நாளில்
வாசலடைத்துக்
கோலம்போடச் சொல்வாய்...
வாரம் கடந்தாலும்
அதைப் பெருக்காமல்
இழைகளுக்குள் சிக்கிய
புள்ளிகளில்
என் முகம் பார்த்து
மகிழும்
உன் மனசுக்காகவே
பொய்யெனப் பொய்த்தது
நம்மூர் மழை...

இருந்தும் என்ன...
ஒற்றை ரோஜாவுக்கும்
ஒரேயொரு வாழ்த்து அட்டைக்கும்
ஓடிவந்து விட்டேன் நான்...
நீ ஏற்க மறுத்த
என் காதலனோடு...

பிரசவத்திற்குப் பிந்திய
முடி உதிர்தலென
வேகமாய்
கழிந்த காலம்
கொண்டு வந்தது
உன் மரணச் செய்தியை!

வறட்டி மூடிய
முகம் காணவும்
கொடுத்து வைக்கவில்லை
எனக்கு...
முன்பொருநாள்
நான் சுவரில் எழுதி வைத்த
என் விடுதி தொலைபேசி எண்ணில்
என்னையே
பார்த்து மகிழ்ந்த நீ
எந்தப் பொங்கலுக்கும்
வெள்ளையடிக்கவே இல்லையாம்...

அடைமழை நாளொன்றில்
அச்சுவர் இடிந்து விழ
அடுத்த நாளே
படுக்கையில் விழுந்து
கொஞ்சம் கொஞ்சமாய்
நீ செத்துப்போனதை
தண்டட்டி குலுங்க
நெஞ்சிலடித்துக்கொண்டு
அலுமேலு ஆச்சி
சொன்னபோது...
‘அப்பா’வென பெருங்குரலெடுத்து
அழத் தொடங்கினேன்...

நீயோ…
என் பொருட்டு சாவதே
சந்தோஷம் என்பதாய்
சிரித்துக்கொண்டிருக்கிறாய்
விளக்கின் பின்னே உள்ள
புகைப்படத்தில்...
அன்று சிரித்தது போலவே!

Monday, June 5, 2017

காயா


~~~~~
மலைப்பாதைகளில் தந்திரக்காரனின் விரல்களென
அசைகின்றன பெரணிச்செடிகள்

நீரூற்றின் துளிகள்
கற்களைத் துளையிடும் இடத்தில்
நீராயுதம் என்ற சொல்லையும்
அதன் உக்கிர உருவத்தையும் மறைத்து வைக்கின்றன
எதிர்க்கையில் எனது உக்கிரம்
தீயையும் மறையச் செய்யும்
என்கின்றன துளிகள்

கரையெங்கும் விரிந்து கிடக்கும்
Rhodo dendron குறுமரப் பூக்களை
தேவகி என்றுதான் தொடுவேன்
காட்டுத்தீயை அணுகவிடாமல் தடுக்கும் இம்மரங்களை
பின் எப்படி வணங்குவது முத்தமிடுவது

ஏழிலைப் பாலை மரங்களில் பேய்கள் வசிப்பதாய்
சொல்லப்படுவதை நம்பமுடிந்ததில்லை இதுவரை
எல்லா மரங்களும் தன் அகத்தில் மூதாதையர்களை
ஒளித்து வைத்திருக்கின்றன
அங்கே அவர்கள் உறங்குகிறார்கள்
இம்மரத்தில் பலகைகள் செய்து படித்தார்கள் அமர்ந்தார்கள்
கடுங்காய்சலுக்கு மருந்தை கண்டறிந்தார்கள்
பின் எப்படி இதில் பேய் வசிக்கும்
பேய் எங்கும் இல்லை
மலைகளெங்கிலும் இல்லை

எல்லா பனிப்பொழிவையும் கடந்துவிட்ட
காயா மரத்தின் கருநீலப் பூக்கள்
தீட்டிய வாளெனப் பாயும் சிற்றோடையின் உக்கிரத்தை
நொடியில் மழுங்கச் செய்கின்றன

காயா மலர்கள் முல்லை நிலத் தெய்வத்தின் சொற்கள்
அப்பூக்களின் நிறம் தான் கடவுளின் தேகம்
மாயோன் மறுகும் மணிநீல மகரந்த ஊசிகள்
அகம் மொய்க்கும் திரு எனும் மந்திரம்
பூவெடுக்கும் எல்லாக் கிளைகளும்
இருள் விரட்டும் உடுக்கைகள்
காயா உதிர்வது காட்டில் தேவதைகளின் கும்மி
காயாவிடமிருந்து பெற்ற மொழி கசம்

இருளின் பேரகராதி இவள் தான்
பின் காயா தான் மையானாள்
எனக்குள் காளியானாள்
மனக் கசப்பின் குறியீடானாள்
விதையின்றித் தாயாகி விளைந்துகொண்டே இருக்கிறாள்

- தேன்மொழி தாஸ்
12.10.2016

Tuesday, May 23, 2017

ஆதி விருட்சம்


அது
உடலுக்கும்
பருவத்திற்கும் நடுவே
தீர்க்க முடியாத புதிரென
திங்கள்தோறும்
முகிழ்கிறது

‘தாங்கவே முடியவில்லை’
என்கிறாள் மகள்

அம்மாவுக்குத் தெரியும்
அது எப்போதும் அப்படித்தான்
மடல் பூத்த தாழையின்
மணம் போலும்
மடந்தையர் எவரும்
கடந்துவரும் இரகசியமெனவும்

பேதைமை தொலைந்து
பெதும்பையென திரளும் பொழுதில்
ஒவ்வொரு சிறுபெண்ணையும்
சேர்த்தணைக்கும் இவ்வலி
வழிவழியாகத் தொடர்ந்திருக்கிறது

துளிர்த்து இலைவிட்டு கிளைப்பரப்பியிருக்கும்
அடிபெருத்த மரத்தின்
திண்மைக்குள்
வளையமிட்டிருக்கும்
அநாதியான காலமென
அந்த நித்திய வேதனை. 


 Sakthi Jothi

Saturday, May 20, 2017

புதிய பொழுது


செவ்வானம் மூடிய அஸ்தமனத்தின் பின்
இரவின் இருளின் முற்றுப் புள்ளியோடு
முடிவடைந்ததாய் சொல்லப் பட்ட
...
நாளொன்றின் பின்னலும்
தினமொரு புதிய பொழுது
நீள்கிறது
தீர்ந்து போன பத்தியின்
சாம்பலின் நசிவிலும்
வீடெங்கும்
விரட்டி விட முடியாது
நிறைந்து கிடக்கும் வாசமாய்
நீயும் நானும் பேசி முடித்து விட்ட
வாக்கியங்களின் நீள்
அமைதியின்
பின்னும்
இன்னும்
சொல்லி விட முடியாத
தேவையுமில்லாத
உணர்வுகள் நீளப் போகின்றன
சுவாசமுடன்

- கவிஞர் திலகபாமா

Thursday, May 18, 2017

நினைவுகள் புதைக்கப்படாமலே நீறுபூத்துக் கிடக்கிறது!

ஈரம் அறியாத ஈனர்களுக்கு
இன்னமும் குடைபிடித்துக்கொண்டு
எப்படி உங்களால் எங்கள் சிதைந்த உடல் வடித்த ஊனத்தின் மேல் நின்று
மௌனிக்கமுடிகிறது?
...
இரத்தம் காய்ந்த வடலிகள்
இன்று இளம்பனைகளாய்
காலம் அவற்றின் கறைகளைக் கழுவியபோதும்
காதுகளில் இன்னமும் ஓலங்கள் கேட்டபடியே!

புதைந்துபோன சிதைவுகளோடு
நினைவுகள் புதைக்கப்படாமலே
நீறுபூத்துக் கிடக்கிறது!


எங்கள் வலிகளைத்தோண்டி தோண்டி
உங்கள் வாய்ப்புகளை தக்கவைத்ததுபோதும்

கிழக்கில் விழுந்த சூரியனின் உதயத்துக்காய்
ஆவிகளாய் நாம் அலைந்துகொண்டிருக்கிறோம்
மேற்கு நோக்கி உங்கள் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக்கொண்டிருங்கள்
பல்லிழித்தபடிக்கு!

Sivabalasundran Ambalavanar

Saturday, April 8, 2017

மாற்றம்

எனது தோலும், சதையும்
சுகத்தில் தோய்ந்தவை அல்ல

எனது ரத்தமும் துடிப்பும்
சமுத்திரத்தை விட ஆழம் குன்றியதும் அல்ல

நம்பிக்கை தரக்கூடிய சொற்களை எழுதினாலும்
எனக்கு அதனால் ஒரு பயனும் இல்லை

உறங்கும்போது வானத்தில் கலையும்
நிறங்களை நான் அறியேன்
எனது நேசத்திற்கு உகந்தவர்களையும்
இவ்வாறு இருக்கும்படி சொல்லுகிறேன்

காலம் கசப்பான தீர்ப்புகளையே எதன் மீதும் எழுதுகிறது
காற்றில் துவங்கி காற்றால் முடிவடைகிற
வாழ்விற்கு இடையில் எல்லாம்
காற்றைப் போலவே அலைகழிகிறது

பூமியின் அடி முதல் வானத்தின் கோள்கள் வரை யாவும்
வரையறுக்கத்தக்கதும், வரையமுடிந்ததுமாய் இருக்கிறது
வாழ்வு தவிர

பேசிக்கொண்டிருக்கும்போதும்
மௌனமாய் இருக்கிறேன் என அறிந்தவர் யாருமில்லை

மாற்றம் வருமெனக் காத்திருப்பதும்
மாற்றத்தை உண்டு பண்ணிக்கொள்வதும்
வீண் என நினைக்கிறேன்

- Composed By Thenmozhi Das
25.08.2008

Sunday, March 5, 2017

மறைப்பும் திறப்புமான தாவரமென

நுனி கூர்ந்து
அடியகன்ற அரசிலையினை
இடுப்பில் அணிவித்த அந்நாளிலிருந்து
உடலோடு சேர்ந்து
சிலதாவரங்களும் வளர்ந்தன

தோழிகளோடு
கள்ளிச்செடியின் பழம்பறிக்கத்
தெருவெங்கும் அலைந்த நாட்களில்
தன்னுள் முளைக்கத் தொடங்கிய
முட்தாவரமொன்றினை உணர்ந்தாள்

செழித்திருக்கும் உன்னிச் செடி வளைத்து
இலைபறித்து.
கனிகொய்து
தாம்பூலமென ஒருவன் நீட்டியபொழுது
அவளுள் ஒரு பூ மலர்ந்தது

தென்னையின்
பச்சையோலை மறைப்பில்
அவளை உள்ளமர்த்தியபொழுது
உளத் துணையாக
தாவரங்களே எப்பொழுதும்
உடனிருப்பதாக நம்பத்தொடங்கினாள்

வேம்பின் கிளையொடித்து
தழையாடை உடுத்திய ஒருநாளில்
அம்மா சொன்னாள்
அப்படியே அம்மனென இருப்பதாக
அப்போது இறைவியானாள்

மாவிலைகளைத் தோரணங்களாக்கி
வீடு, வீதியெங்கும் தொங்கவிட்ட
மங்கல நிகழ்வினை தொடர்ந்து
மறைப்பும் திறப்புமான தாவரமென
தன்னையுணர்ந்தவள்
பறித்து பதியமிட்ட
இன்னுமொரு பச்சை உயிரென
தனக்குள் வளரத் தொடங்கியிருந்தாள்.

நன்றி : நான்காவது கோணம்
கரிகாலன்
ஓவியம்: Jeeva Nanthan

Tuesday, January 17, 2017

Henry & June Movie (Anais Nin’s Diary)

Henry & June is a 1990 American biographical drama film directed by Philip Kaufman, and stars Fred Ward, Maria de Medeiros and Uma Thurman. It is loosely based on Anaïs Nin's French book of the same name, and tells the story of Nin's relationship with Henry Miller and his wife, June.
The film was nominated for Best Cinematography at the 63rd Academy Awards. It is one of three Oscar-nominated films to be released with an NC-17 rating, the other films are Wild at Heart (1990) and Requiem for a Dream (2000).
Paris, France in 1931. Anaïs Nin is in a stable relationship with her husband Hugo, but longs for more out of life. When Nin first meets Henry Miller, he is working on his first novel. Nin is drawn to Miller and his wife June, as well as their bohemian lifestyle. Nin becomes involved in the couple's tormented relationship, having an affair with Miller and also pursuing June. Ultimately, Nin helps Miller to publish his novel, Tropic of Cancer, but catalyzes the Millers' separation, while she returns to Hugo.

இந்தக் கவிதை, பிலிப் காஃப்மனின் “ஹென்றி அன்ட் ஜூன் ” (Henry and June ) என்னும் திரைப்படத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டில் பிரபலமான இலக்கிய ஆளுமைகள் இருவரின் இளம் பிராயத்து வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம் இது. இளம் பெண் படைப்பாளியுமான அனைஸ் நின் 1931இல் பாரிஸில் அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி மில்லரைச் சந்தித்தப் பின், சுய தேடலுக்கான பயணத்தை மேற்கொண்ட அவர், தனது அனுபவங்கள் அனைத்தையும் டயரிகளில் எழுதுகிறார்! அனைஸின் டயரிகளில் மறைக்கப்பட்ட பகுதிகளை அடிப்படையாகக் கொண்டது “ஹென்றி அன்ட் ஜூ” படம்.
தனது டயரிகளின் மூலம் பிரபலமான அனைஸ், பல நாவல்களையும், சர்ரியலிஸப் பாணியிலான ஒரு வசன கவிதையையும் எழுதியுள்ளார்.
-------------
நிர்வாண உடலில் பூசப்பட்ட
ஓவியங்களுக்கு உள்ளேயும்
சுயநிறமிழக்காத முலைகளைப்
பார்த்துக்கொண்டே வருகிறாள் அனைஸ்
எனக்குத் தெரியும்
கனிந்த ராஸ்பெர்ரி பழங்களை விடவும்
இனிமை மிக்கதொரு
அழகியின் முலைகளை ருசித்தவள் இவளென

இரகசியங்கள் ஏதும் மறைக்கப்படாத
நாட்குறிப்பேட்டின் பக்கத்தில்
அவளைப் பற்றி அனைஸ்
இப்படி எழுதி வைத்திருக்கிறாள்

“எனக்குள் தீராத ஒரு கொடுங்கனவு இருந்தது
அப்போதுதான் June
திடீரென இந்நகரத்திற்குத் திரும்பியிருந்தாள்
நாங்கள் தாழிடப்பட்ட ஒரு அறையில் தனித்திருந்தோம்
அப்போது
ஆடைகளை ஒவ்வொன்றாகக் களையத் துவங்கினேன்
அவளது ஆடைகளைக் களையச் சொல்லிக் கெஞ்சினேன்
அவள் இரு கால்களுக்கிடையே
அணைக்கயியலாது கனலும் நெருப்பினைக்
காணவேண்டுமெனச் சொன்னேன்”

கையில் சிரெட்டுடன் படுத்திருந்தாள் ஜூன்
எல்லாப் பருவகாலத்துக் குளிரும் திரண்ட கோளமென கண்கள் அவ்வறையில் நடப்பட்டிருக்க
ஒரு ஆணின் முதுகென
சிகரெட்டில் கனல் இறங்கியபின்
வெளிப்பட்ட புகையின் சுருள் வளையங்களுக்குள்
அனைஸின் முலைகள் பூக்களெனச் சிக்கின
June தன்னிரு குடைக்காளான்களால்
அப்பூக்களை நசுங்கச் செய்தாள்

இதைப்பற்றித் தன் நாட்குறிப்பேட்டில்
“June என்மேல் அசைகையில்
என் உடல் முழுவதையும்
ஆண்குறி தழுவுவதுபோல் உணர்ந்தேன்”
என எழுதினாள் அனைஸ்

புணர்தலுக்குப்பின் பிரிக்கயியலாப் பட்டாம்பூச்சிகளென
இரு ஜோடி உதடுகள் கூடிக் கிடந்ததை
மறக்கவே முடியவில்லை என்னால்

இப்போது ட்ரம்பெட்டின் இசையைக் கேட்கிறேன்
சிறு தொலைவில்
ஹென்றி பெருங்கனவுடன் வருகிறான்
இசையை விடவும் இசைக்கின்ற கலைஞர்கள் அற்புதமென
உடலொரு திசையில் நடக்க
உதிர்ந்த நாவல் பழங்களென அனைஸின் கண்கள் அந்நகரத்துச் சாலையைக்
குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக்கடக்கின்றன

ஆடையணியவிரும்பாத வெளிச்சமென சிலர்
நிர்வாணமாய் அலையும்
உணவு விடுதிக்குள்ளே
நிரம்பிய மதுக்கிண்ணமென அவள் நுழைகையில்
ரிச்சர்டு இவ்வாறு கூறத் துவங்கினான்

“அவன் என்னிடமிருந்தும் hugoவிடமிருந்தும்
உன்னைத் திருடிக்கொண்டான்
எனது முக்கியமான சில சிந்தனைகளை எடுத்து தனது நாவலில் பதிவு செய்துவிட்டான்
என்னை உன் காதலன் என்றும்
உன் கணவனுக்கு மிகச்சிறந்த நண்பனென்றும் நினைத்துக்கொண்டிருந்தேன்
anais
அவன் கடுமையாகச் சித்ரவதை செய்யக்கூடியவன்
புரூக்லைனிலிருந்து வந்த காட்டுமிராண்டி
என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறான்
வெளியே நண்பனாக நடித்துக்கொண்டு
ஆத்மார்த்தமான நண்பர்களைக்கூட
தன் படைப்புக்கான
கச்சாப் பொருளாகப் பயன்படுத்துகிறான்
இன்னும் ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன்
எனது வீட்டுக்குள்
இனி புணர்ச்சியில் ஈடுபடக் கூடாது”

ரிச்சர்டு அவ்விடம் விட்டுப் போன பின்
அனைஸின் விருப்பம்
ஹென்றியை விடுதியின் அறைக்குள் அழைக்கிறது

இருண்ட நினைவுகளை வெட்டியெறியப்பட்ட
படச்சுருளெனக் காயும் கம்பளிக்குள்ளே
வெண்ணிற களிமண் தோட்டமெனச்
சரிந்து கிடக்கும் அவள் தேகத்தில்
பறிக்கச் சொல்லி நீட்டிய
ரோஜா மொட்டுக்களை அவன் சுவைக்கிறான்
பின் இருள்விலகாத் தீவின் ஒருவழிப் பாதையில்
அவன் நீரூற்று பாய்ந்து அடங்குகிறது

அக்கணம் ஓயாத trumpetன் ஓசையை அவ்வறையின்
குளிரூட்டப்பட்ட ஜன்னல் மழைத்துளிபோல் நீட்ட
கதகதப்பான நிர்வாணத்துடன் ஓடிச்சென்று
கதவு திறக்கிறாள்.

எண்ணற்ற இசைக் கருவிகளின் ஆரவாரத்துடன்
அடங்காத காட்டினின்று புறப்பட்ட வெட்டுக்கிளிகளென
அந்நகர வீதியை
நிர்வாணத்தால் வீழ்த்தியிருந்தார்கள்

திராட்சைப் பழத்தின் மேல்தோல் கிழித்துப் போர்த்தி
அனைஸ் அவ்வழியே நடக்கத் துவங்குகிறாள்

கழுகின் முகமேந்திய நீல உடலொன்று
அவளைப் பின்தொடர்கிறது

புத்தாடை அணிந்த சிறுமியின் கர்வத்துடன்
ஓவியங்களை உடுத்திய மனிதர்கள்
ஏதேன் தோட்டத்து ஆதிக் குகையைத்
தன் நடனத்தில் வரைந்து காட்டி அலைகையில்

முலைகளையே உன்னதமான ஆடையெனக் கருதும்
ஒரு பெண்ணைக் கடக்கிறாள் anais

அப்போதும் நீலவுடல் அவளைப் பின்தொடர்கிறது
தண்ணீரின்மேல் மரக்கட்டைகளை அடுக்கி
இசைக்கும் ஒருவனை
அயராமல் அவள் பார்த்துக்கொண்டிருக்கையில்
தொடர்ந்து வந்த கழுகு முகத்தின் உடல் அவளை
ஒரு நொடியில் வீழ்த்திப் புணர்கிறது

அவள் இனிமையின் விளிம்பில் கண்களைத் தாழ்த்தும்போது
I love you pussy willo என்கிறது அக்கழுகு
முகத்திலறைந்த அவ்வார்த்தையில்தான்
தன்னைப் புணர்வது கணவனென உணர்கிறாள் அனைஸ்

அன்றிரவு அவள் எழுதிய நாட்குறிப்பேட்டில்
“ஹென்றிக்கு எதிரான உணர்வுகளுடன்
முழுமையாகக் கணவனுக்கு என்னைக் கொடுத்தேன்
அந்த அனுபவம் உடல்ரீதியான பேரின்பம்
ஹென்றிக்கு நான் இழைத்த முதல் துரோகம்
இருப்புக் கொள்ளாமல் இருக்குமளவுக்கு
நான் மாறியிருக்கிறேன்
ஏற்பட்டிருக்கும் உற்சாகத்திலும் சாகச உணர்விலும்
இனி முற்றிலும் உண்மையானவளாக இருக்க வேண்டும்
அதே சமயத்தில்
ரகசியமாக வேறொரு மனிதனைச் சந்திக்கவும் விரும்புகிறேன்
பாலுணர்வைத் தூண்டக்கூடிய
அநேகக் கற்பனைச் சித்திரங்கள்
என்னிடம் இருக்கின்றன
எனக்கு அவ்வின்பம் தேவையாகவும்
இருக்கிறது.”

Poetryplay written by - Thenmozhi Das in Tamil
Screenplay Written by - Philip Kaufman in English
Annis written Dairy - in French

■ Thenmozhi Das 1st Experimental Poetry
Written on ..... 01.08.2005
----------------
 


2005 ல் இணை இயக்குநராக பணியாற்றிய காலம் மனதில் திரைக்கதையை விடவும் இனிமை மிக்க கவிதையை / திரைக்கதையை விட காட்சிபூர்வமாய் ஏன் இயற்றக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் வந்தது . எத்தகைய உலகத்தரமான சினிமாவையும் ஒரு கவிதை எளிமையாய் கைக்கொள்ளவும் கடக்கவும் மீறவும் முடியுமா எனப் பரிசோதிக்கத் தோன்றியது .... எனது வாழ்வு இயக்குநராவது அல்ல . கவிதையே எனது வாழ்வு. இதில் நான் என்ன வித்தியாசம் செய்ய இயலும் என நினைத்தேன்.
இக் கவிதை எழுதி முடித்த போது
எத்தகைய கலையையும் விட
"கவிதையே ஆகச் சிறந்த கலை" என -மனம்
உறுதி கொண்டது .
காரணம் கவிதைக்குள் திரைக்கதையை தகர்க்க முடிவது மட்டுமல்ல. .. இசையையும் எழுப்ப முடிகிறது.
ஒரு கவிதை ஒரு திரைக்கதையை விட
எவ்விதத்திலும் குறைந்ததல்ல .

- தேன்மொழி தாஸ்
Cinema - cut to - Poetry