Search This Blog

Saturday, February 2, 2019

உம்ரா ''செய்வது'' எப்படி?


கொஞ்சம் நீண்ட பதிவு படித்து பயன் பெறுங்கள்....
அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! (அல் குர்ஆன் 2:196)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.ஷஹீஹ் புகாரி..1773,,,,
 
இப்போது
உம்ராவின் வணக்க வழிபாடுகளை ஒருமுறை பார்ப்போம்.
1. குளித்தல்.
2. அனுமதிக்கப்பட்ட ஆடையை அணிந்து கொள்ளுதல்.
3. தவாஃபை துவங்கும் வரை தல்பியா கூறுதல்.
4. ஹிஜ்ர் உட்பட ஏழு முறை கஅபாவில் தவாஃப் செய்தல்.
5. மகாமு இப்ராஹீமில் இரு ரக்அத்துக்கள் தொழுதல்.
6. ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஸஃயீ செய்தல்
7. தலை முடியைக் கத்தரித்துக் கொள்ளுதல்.
மேற்கண்ட வணக்கங்களைச் செய்து விட்டால் உம்ரா முடிந்து விடுகின்றது.
உம்ராவில் இடம்பெற்ற இந்த வணக்கங்களில் 1. இஹ்ராம், 2.கஅபாவை தவாஃப் செய்தல், 3.ஸஃபா, மர்வாவுக்கிடையில் ஸஃயீ செய்தல் ஆகியவை இல்லையெனில் உம்ரா இல்லை என்றாகிவிடும்.....
இஹ்ராம்
"இஹ்ராம்' என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும்
உம்ராவை மட்டும் செய்ய நாடினால் "லப்பைக்க உம்ரதன்'' என்று
கூறுவதே இஹ்ராம் ஆகும்...
இஹ்ராமில் ஆண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவை 1. தலையை மறைக்கக் கூடாது 2. தையல் ஆடை அணியக் கூடாது.
"இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப் பாகையையோ,தொப்பியையோ, கால் சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச்சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள்'' என்று விடையளித்தார்கள்.(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 134, 366, 1542, 1842, 5794)....
பெண்களுக்கு மட்டும் தடையானவை இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 1838)
இவ்விரண்டும் பெண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவையாகும்.....
இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்...
ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரக்கூடியவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களை இஹ்ராம் கட்டுவதற்காக நிர்ணயம் செய்துள்ளனர். அந்த இடங்களை அடைந்ததும் இஹ்ராம் கட்ட வேண்டும்.
மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபாஎன்ற இடத்தையும், ஷாம் (சிரியா) வாசிகளுக்கு ஜுஹ்ஃபாஎன்ற இடத்தையும், நஜ்துவாசிகளுக்கு கர்னுல் மனாஸில்என்ற இடத்தையும், யமன்வாசிகளுக்கு யலம்லம்(இப்போதைய ஸஃதியா) என்ற இடத்தையும் இஹ்ராம் கட்டும் இடங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். இந்த எல்லைகள் இந்த இடங்களில் உள்ளவர்களுக்கும், இந்த இடங்களில் வசிக்காமல் இந்த இடங்கள் வழியாக ஹஜ், உம்ராவை நாடி வரக்கூடியவர்களுக்கும் இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைகளுக்கு உட்பட்டு வசிப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடமே எல்லையாகும். மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்ட வேண்டும்எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1524, 1526, 1529, 1530, 1845.
இந்தியாவிலிருந்து செல்பவர்கள் யலம்லம்வழியாகச் செல்வதால் அங்கே இஹ்ராம் கட்ட வேண்டும். ஆடை அணிவதற்குப் பெயர் இஹ்ராம் அல்ல என்பதை நாம் குறிப்பிட்டுள்ளோம். விமானம், கப்பல், போன்றவற்றில் புறப்படுபவர்கள் முன்பே ஆடையை அணிந்து விட்டாலும், அந்த இடத்தை அடையும் போது தல்பியா கூறி இஹ்ராம் கட்ட வேண்டும்.....
யலம்லம்என்பது மக்காவுக்கு வடக்கே உள்ள ஒரு மலையாகும். இது மக்காவிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது....
மக்கா நகரின் புனிதம்
மக்கா நகரை இறைவன் புனித பூமியாக ஆக்கியிருக்கிறான். அதன் புனிதம் கெடாத வகையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் புனிதத் தன்மை மக்கா நகருக்கு மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள ஹரம் எல்லை முழுவதற்கும் பொதுவானதாகும்.
அல்லாஹ் மக்கா நகரைப் புனித பூமியாக்கியிருக்கிறான். மனிதர்கள் அதைப் புனிதமானதாக ஆக்கவில்லை. அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் அங்கே இரத்தத்தை ஓட்டுவதும், அங்குள்ள மரங்களை வெட்டுவதும் ஹலால் இல்லைஎன்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ,நூல்: புகாரி 104, 1832, 4295)....
இஹ்ராமிற்குப் பின் தடுக்கப்பட்ட காரியங்கள்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான தடைகள்
1. தலை மற்றும் உடலில் உள்ள முடிகளைக் களையக் கூடாது 2. நகங்களை வெட்டக் கூடாது. 3. நறுமணம் பூசக் கூடாது 4. திருமண ஒப்பந்தம் செய்யக் கூடாது. 5. உடலுறவு கொள்ளக் கூடாது. 6. ஆசையுடன் தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் போன்றவை கூடாது. 7. வேட்டையாடுதல் கூடாது....
தல்பியா கூறுதல்
அதன் பின்னர் மக்காவில் ஹரமை அடைகின்ற வரை தல்பியா சொல்ல வேண்டும்.
لَبَّيْكَ اَللهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لآ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لآ شَرِيْكَ لَكَ
"லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(பொருள் : இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு இணையானவர் எவருமில்லை.)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1549, 5915
திக்ருகள், துஆக்கள் ஆகியவற்றை உரத்த குரலில் கூறுவது திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.ஆனாலும், தல்பியாவை மட்டும் உரத்த குரலில் சொல்லுமாறு ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன.
என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும்என்று கட்டளையிட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸாயிப் பின் கல்லாத் (ரலி) ,நூல்கள்: ஹாகிம், பைஹகீ)
ஹரமை அடைந்த பின் தல்பியாவை நிறுத்தி விட்டு, தவாஃபுல் குதூம் என்ற உம்ராவுக்கான தவாஃப் செய்ய வேண்டும்.....
தவாஃபுல் குதூம்
"குதூம்' என்றால் வருகை தருவது என்று பொருள். மக்காவுக்கு வருகை தந்தவுடன் செய்யப்படுவதால் இதற்கு "தவாஃப் அல்குதூம்' என்று கூறப்படுகிறது.
இந்த நாளில் தான் "தவாஃப் அல்குதூம்' செய்ய வேண்டும் என்று வரையறை ஏதும் கிடையாது. ஒருவர் இஹ்ராம் கட்டி எப்போது மக்காவில் பிரவேசிக்கிறாரோ அப்போது இதைச் செய்ய வேண்டும்....
கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும்.
தவாஃபுக்காக ஹரமுக்குள் சென்றதும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட வேண்டும். ஹஜ்ருல் அஸ்வத் அமைந்துள்ள அந்த மூலையிலிருந்து தவாஃபைத் துவக்க வேண்டும்.
கஅபாவைச் சுற்றும் போது ஹிஜ்ர் என்ற பகுதியையும் சேர்த்தே சுற்ற வேண்டும். ஒவ்வொரு சுற்று முடியும் போதும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட வேண்டும். முடிந்தால் முத்தமிட வேண்டும்; முடியாவிட்டால் கையால் தொட்டு முத்தமிட வேண்டும்; அதற்கும் இயலாவிட்டால் சைகையால் முத்தமிட வேண்டும்.
முதல் மூன்று சுற்றுக்களின் போது விரைந்து செல்ல வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1611
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1612, 1613, 1632, 5293
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தவாஃப் அல்குதூம்' செய்யும் போது மட்டும் முதல் மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1644, 1617....
ருக்னுல் யமானி
கஅபாவின் இரண்டு மூலைகளில் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூலை ருக்னுல் யமானி என்று கூறப் படுகின்றது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொடுவது நபி வழியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் "யமானி' எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 166, 1609....
ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே "ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப்(ரலி)
நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616....
மகாமு இப்ராஹீமில் தொழுதல்..
இவ்வாறு ஏழு சுற்றுக்கள் முடிந்த பின் மகாமு இப்ராஹீம் அமைந்திருக்கும் இடத்தில் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும். (முஸ்லிம் 2137)...
ஸஃபா, மர்வாவில் ஸஃயீ செய்தல்
"தவாஃபுல் குதூம்' எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரத்அத்கள் தொழுது விட்டு ஸஃபா,மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓட வேண்டும். இதற்கு ஸஃயீ என்று பெயர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்து இரண்டு ரக்அத்கள் தொழுத பிறகு "ஸஃபா' "மர்வா'வுக்கு இடையே ஓடினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1616, 1624, 1646, 1647, 1767, 1794, 4188...
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபாவை அடைந்ததும் "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்''என்ற (2:158) வசனத்தை ஓதினார்கள். "அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக'' என்று கூறிவிட்டு ஸஃபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன் மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி "லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா'' என்று கூறி இறைவனை பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சம தரைக்கு வந்ததும்) "பதனுல் வாதீ'என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும் வரை நடந்தார்கள். ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 2137....
ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்ய வேண்டும்.
ஸஃபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று, மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வருவது மற்றொன்று என்ற கணக்கில் ஏழு தடவை சுற்ற வேண்டும்.
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு தடவை ஸஃயு செய்தார்கள். ஸஃபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137....
நபி (ஸல்) அவர்கள் மர்வாவில் முடித்ததிலிருந்து "ஸஃபாவிலிருந்து மர்வா வந்தால் ஒரு தடவை என்றும்,மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வந்தால் இரண்டு தடவை'' என்றும் விளங்கலாம்....
முடியைக் கத்தரித்தல்...
"தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு''என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்....
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 1694...
இத்துடன் உம்ரா நிறைவேறி விடுகின்றது. ஆண்களாக இருந்தால் தலையை மழித்தல்,பெண்களாக இருந்தால் தலை முடியைக் கத்தரித்தல் மூலம் உம்ரா முடிவுக்கு வருகின்றது....


No comments:

Post a Comment