Search This Blog

Saturday, February 2, 2019

இலங்கை அரசியலில் முஸ்லிம்களின் சேவை

இலங்கை அரசியலில் ஆரம்ப காலம் தொட்டே முஸ்லிம்களின் தியாகம் போராட்டம் சேவை அளப்பரியதே!
இது தொடர்பான சிறு துளிகள்
இலங்கைத் திரு நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை முடுக்கி விடுவதில் முஸ்லிம்களின் பங்களிப்பு தீர்க்கமானது, உறுதியானது , வலுவுள்ள தாக்கத்தை உண்டு பண்ணியது.

எம்.சி.எம்.கலீல்
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தேசேர் மொஹம்மத் மாக்கான்மாக்கார், டாக்டர் டி.பி. ஜாயா,டாக்டர் எம்.சி.எம்.கலீல்,அப்போதைய அப்துல் ராஸீக் ( பின்னால் சேர் ராஸீக் பரீத் )ஆகிய பெருந்தலைவர்கள் தேசத்தை ஒற்றுமைப்படுத்தி உறுதிப்படுத்தி அதை சுதந்திரத்தை நோக்கி உந்தித் தள்ளுகின்ற மகத்தான பணியைச் செய்தார்கள்.
முஸ்லிம்கள் நாட்டினுடைய அரசியல்,அபிவிருத்திப் பணிகளுக்கு ஒரு போதும் முட்டுக்கட்டையாக இருந்ததேயில்லை.சித்திலெப்பை, வாப்புச்சி மரைக்கார், ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ் போன்ற மேமக்கள் சிங்கள பெருங்குடியினரோடு உறவை நெருக்கமாக ஆக்கிக் கொண்டார்கள்.
சித்திலெப்பை
ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ்
வாப்புச்சி மரைக்கார்
ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா விடுதலைக்கு மேற்கொண்ட அளப்பரிய பெரும் பணிகள் 16 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டன. நாட்டை அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பதற்கு அவர்கள் மேற்கொண்ட முனைப்புக்களைப் பற்றி ஸ்ரீலங்கா பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் கண்ணியத்திற்குரிய டாக்டர் கே.டபிள்யூ. குணவர்தன அவர்களே மிக்க சிறப்பித்துக் குறிப்பிடுகிறார்.
சேர் ராஸீக் பரீத்
வலிமை மிக்க அந்நிய ஏகாதிபத்தியவாதிகளோடு சில கட்டங்களில் இணங்கிப் போவதை ராஜ தந்திர நடவடிக்கையாக சிங்கள ஆட்சியாளர்கள் கருதத் தலைப்பட்ட நேரத்தில் கூட, முஸ்லிம்களும் சிங்கள பெருங்குடி மக்களும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு உறுதியான, பிடிவாதமான எதிர்ப்பைக் காட்டினார்கள்.
மன்னன் மூன்றாம் விஜயபாகு தனது ஆட்சிக்குக்கட்டுப்பட மறுத்த, தனது ராஜாங்க வணிகத்திற்கு குறுக்கீடு செய்த போர்த்துக்கீசர்களை எதிர்த்துப் போர்ப் பிரகடணம் செய்ய முற்பட்ட போது கூட, முஸ்லிம்களின் ஒத்துழைப்பையே அவன் நம்பி நின்றான்.
மன்னன் மாயதுன்னவுக்கு முஸ்லிம்கள் கொடுத்த ஒத்துழைப்பு, இராணுவப் பணிகளில் மட்டுமல்ல ராஜதந்திர தூதுவப் பணிகளிலும் அவர்களுடைய திறமை கொடி கட்டிப் பறந்த காலம் அது.கள்ளிக் கோட்டையிலிருந்து மன்னன் மாயாதுன்ன அடிக்கடி உதவி பெறுவதற்கு பெரிதும் முஸ்லிம்களே காரணமாக இருந்தார்கள். மலபார் இராணுவ வீரர்களும், கடற்படை வீரர்களும் போர்த்துக்கீச ஏகதிபத்தியவாதிகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்த தொல்லைகளின் காரணமாகத் தான் போர்த்துகீசர் கவனம் நம் பக்கம் இருந்து திசை திரும்பி அதன் காரணமாக சிங்களப் படையினர் சற்று நிம்மதி மூச்சு விட முடிந்தது.இந்த சூழ்நிலை உருவாவதற்கு முஸ்லிம்களே காரணமாக இருந்தார்கள்.சிங்களப் போர் இயந்திரம் மிகத் திறமையாக செயற்படுவதற்கு அதன் அதி மகத்தான உறுப்பாக முஸ்லிம் பெருமக்களின் பணி அமைந்தது என்பது வரலாற்றில் மறக்க முடியாத உண்மையாகும்.
சேர் மாக்கான் மாக்கார்
சேர் முஹம்மத் மாக்கான் மார்க்கார், 1939 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் நாள் ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற அனைத்திலங்கை முஸ்லிம் அரசியல் மாநாட்டில் பேசிய பொழுது, நாட்டின் அனைத்து சமயத்தினரதும் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையுமே மிக அழுத்தமாக வலியுறுத்தினார்.


அவர் சொன்னார் : நான் முஸ்லிம்களுக்குத் தக்க அளவிலான பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கோரிய போது, நான் வெறும் 50:50 என்ற கணக்கு வழக்கு விகிதாசாரங்களில் மட்டும் நம்பி நின்றுவிடவில்லை. எல்லா விகிதாசார கணக்கு வழக்கு புள்ளி விபரங்களும் ஒரு தலைப்பின் கீழ் அடங்கி விடுகின்றன.அத் தலைப்பு என்னவென்றால்,அது தான் ஒரு நல்லாட்சி அமைவதாகும்.
நல்லாட்சி அல்லது அரசு என்பதென்ன? இதைச் சுருக்கிக் குறுக்கி இரண்டே சொற்களில் அடக்கிவிடலாம். நீதியும் நியாயமும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் நீதியாக நடந்து கொள்வதும் அனைத்து சமுதாயங்களுக்கும் நியாயம் செய்வதுமாகும்.அதே நீதி நியாயத்தின் அடிப்படையில் தான் நான் அப்போதோ அல்லது இனி எப்போதுமோ ஒரு பெரும்பான்மைச் சமுதாயத்தை சிறுபான்மை நிலைக்கு இட்டுச் செல்லவதை விரும்பினேனில்லை. அதனால்தான் என்னுடைய நல்லெண்ணத்துக்குச் சான்றாக,இந்நாட்டை சிங்களவர் ஆள்வதை நான் ஆட்சேபிப்பதாயில்லை என்று சொல்கின்ற அளவிற்கு வந்தேன். இந்த என்னுடைய ஒரு பேச்சே போதும். நான் ஒரு வகுப்பு வெறியனல்லன் என்பதை மெய்ப்பித்திட.


சிறுபான்மையினர் அரசியற் சட்டச் சாசனப் பாதுகாப்பிற்காகச் செய்த முயற்சி, சுதந்திரம் வழங்குவதைக் கிடப்பில் போட்டிட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஒரு சாக்காக அமைந்திடக் கூடாதே என்பதற்காக டாக்டர் டி.பி.ஜாயா வெளியிட்ட கருத்துக்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சொற்பொழிவாக இன்னும் மிளிர்கின்றன! உள்ளத்தைத் திறந்து கொட்டி,உணர்வுகளை வலுவுள்ள சொற்களாக அவர் வடித்துத் தந்த அந்தப் பேருரை, அதில் அவர் முஸ்லிம்களின் நோக்கு, போக்கு என்ன என்பதை தீர்க்கமாக வரையறுத்துக் காட்டியமை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே அதிர வைத்ததோடு, இனிவரும் வருங் காலமெல்லாம் இந்நாட்டில் பிறக்கக்கூடிய சந்ததியினரையுங் கூட முஸ்லிம்களுக்கு நன்றிக் கடன்பட்டவர்களாக ஆக்கி விட்டது.
டாக்டர் டி.பி. ஜாயா
தான் சான்று நின்றவர்களாலேயே தான் வருத்தப்படுத்தப்பட்ட நிலையிலுங் கூட டாக்டர் ஜாயா, இந்நாட்டின் அனைத்து சமுதாயங்கள் மத்தியிலும் ஒருமித்த கருத்து உடன்பாடு கண்டிட பேரவாக் கொண்டு செயல்பட்ட அதே நேரத்தில், கிடைக்க வேண்டிய சுதந்திரம் முஸ்லிம்களால் தான் கெட்டது என்ற ஒரு கருத்து எக்காலத்திலும் இந்து முஸ்லிம் சமுதாயத்தின் மீது சுமத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் அவர் மெத்தக் கண்ணுங் கருத்துமாக இருந்தார்.அவருடைய அந்த வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பேச்சு இந்நாட்டு மக்களின் மனதில் பாரியத்தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, மக்களை ஐக்கியப்படுத்தி, சுதந்திரப் போராட்டத்தை ஒரு அர்த்தமுள்ள விவகாரமாகவும் ஆக்கி விட்டது.
சுதந்திரப் பாதையில் ஒரு மைல்கல்லான சட்டசாசன சபையில் சோல்பரித் திட்டத்தின் மீது டாக்டர் ஜாயா பேசிய பேச்சு ஆதிக்க எதிர்ப்பிற்கு இஸ்லாம் காட்டுகின்ற வேகத்தையும், முஸ்லிம்களின் இயல்பான சுதந்திர வேட்கையையும் தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியது.”முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் சுதந்திரம் என்பது அவர்களின் பண்பாட்டின் அடித்தளம். முழுமையான சுதந்திரத்திற்காக மேற்கொள்ளப்படும் எந்தப் போரிலும், போராட்டத்திலும் முன்னணியில் தான் நிற்க வேண்டுமென அவர்களுடைய மார்க்கம் அவர்களுக்கு ஆணையிடுகிறது. முழுமையான சுதந்திரத்திற்கான ஒரு போர் என்றால் அதில் முஸ்லிம் தனது சொந்த நலனையுங் கூட கருதாது களத்தில் குதிப்பான்.சுதந்திரம் முதலில் வரட்டும். தன்னை எதிர்நோக்கும் இதர பிரச்சனைகளை அப்போது சந்தித்துக் கொள்ளலாம் என்பதே அவனது தெளிவான நிலை.”
தன்னுடைய இந்த முத்தாய்ப்புப் பேச்சால், முஸ்லிம், நாட்டை தனது சமுதாயத்திற்கு முன்னால் வைப்பான் என்ற கருத்தையே தியாகி, தீரர் ஜாயா நிலை நாட்டினார். அவருடைய அரசியல் மதி நுட்பமும், ஆழ்ந்த அறிவும், சுதந்திரப் போராட்டக் காலத்தில் அவர் மேற்கொண்ட நிலைப்பாடு ஒன்றும் தவறானதல்ல என்பதையே இத்தனையும் மெய்ப்பிப்பதாக இருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த எந்தவொரு ஆட்சியும், அரசும் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக வந்திடத் துணிந்ததில்லை.
முஸ்லிம்கள் தாமாகவே தான் தமது முன்னேற்றப் பாதையில், தமக்கிடையேயுள்ள ஒற்றுமையின்மையின் காரணமாக அடிக்கடி தடைக் கற்களைப் போட்டுக் கொள்கிறார்கள்.
ஒழுங்கான ஒற்றுமை மாத்திரம் நம்மிடையே அமைந்தால் அன்று டி.பி.ஜாயா எடுத்த முடிவு எத்துணை சரியானதென்பதை மெய்ப்பிக்கும். தியாகி டி.பி.ஜாயாவின் நம்பிக்கை வீண் போகவில்லை என்பதற்கு சான்றாக இன்று அனைத்துத் துறைகளிலும் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு உரிய ஆக்கமும் , ஊக்கமும் தருகின்ற ஒரு நியாய சிந்தனையுள்ள ஜனாதிபதியை மாண்புமிகு ரணசிங்க பிரேமதாச அவர்களைப் பார்க்கின்றோம்.
அரசியல் சாசன ரீதியாக நமக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற பாதுகாப்புக்குள்ளேயே வாழ்க்கையில் சகல வட்டங்களிலும் நம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான வழிவகைகளை செம்மையாக அமைத்துக் கொள்ள முடியும்.ஆனால் அதை நாம் ஐக்கியமாகத் தான் சாதிக்க முடியும். இறுதியாக ஒன்றை சொல்லி வைக்க விழைகின்றேன். நாட்டின் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டையாக முஸ்லிம் இருந்ததில்லை. அதன் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக அவன் ஒருபோதும் இருந்திட மாட்டான் என்ற விடயம் யாருடைய அவதானத்திலிருந்தும் நழுவி விடக் கூடாது.
சிறப்பு உரையில் பழமையின் தொய்மையும் உண்மையும் இருந்தது அதனால் என்னை வெகுவாக கவர்ந்தது.
நன்றி
Nazeem Mohammed


No comments:

Post a Comment