Search This Blog

Tuesday, July 14, 2015

'மெல்லிசை மன்னர் ' எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்!

சென்னை தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார்.
87 வயதான பிரபல திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை 4.15 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
மெல்லிசை மன்னர் விஸ்வநாதனின் உடல், சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதி சடங்குகள் நாளை காலை 10 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மாயானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எம்.எஸ்.விஸ்வநாதன் வாழ்க்கை குறிப்பு...

எம்.எஸ்.விஸ்வநாதன் 1928 ஜூன் 24 ஆம் தேதி கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். அவரது முழுப்பெயர் மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன். அவரது பெற்றோர் மனயங்கத் சுப்பிரமணியன் - நாராயணி குட்டி. எம்.எஸ்.விஸ்வநாதன், 1945 முதல் 2015 வரை 60 ஆண்டு காலம் திரைத்துறையில் கோலோச்சியவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 1,200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

1953ல் வெளிவந்த 'ஜெனோவா' படத்துக்கு முதன் முதலாக இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தியுடன் இணைந்து 700 படங்களில் இசை அமைத்துள்ளார். 500 படங்களுக்கு மேல் தனியாக இசை அமைத்துள்ளார்.
‘புதிய பறவை’ படத்தில் வரும் ‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு அதிகபட்சம் 300 இசைக் கருவிகளையும், ‘பாகப்பிரிவினை’ படத்தில் வரும் ‘தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு 3 இசைக் கருவிகளையும் பயன்படுத்தியவர். பியானோ, ஆர்மோனியம், கீ போர்டு அற்புதமாக வாசிப்பார்.
கர்நாடக இசை மேதைகள் எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களை தன் இசையில் பாடவைத்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போரின் முடிவில் 1965ல் போர் முனைக்குத் தன் குழுவினரோடு சென்று ஆர்மோனியத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு, காயமுற்ற படை வீரர்களுக்காகப் பாடியவர்.

நடிகர் சிவாஜி கணேசன், எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு 'மெல்லிசை மன்னர்' என்ற பட்டத்தை வழங்கி பெருமை சேர்த்தார். 'நீராரும் கடலுடுத்த' என்ற தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மோகன ராகத்தில் இசை கோர்த்துள்ளார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

இசை அமைப்பாளர்கள் இளையராஜா, தேவா, கங்கை அமரன் பாடல்களில் பாடிய எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன்சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் பாடல்களுக்கும் குரல் கொடுத்துள்ளார்.
மெல்லிசை மன்னர், கலைமாமணி, திரை இசை சக்கரவர்த்தி உள்ளிட்ட பல பட்டங்களையும் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசின் விருதையும் பெற்றவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில். பிறந்த வருடம் 1928 ஜூன் 24.
ன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள். கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள். லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார். கிட்டத் தட்ட 1951-ல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் எம்.எஸ்.வி-யின் இசை ராஜ்யம்தான்!

நடிக்கவும் ஆர்வம். 'கண்ணகி' படத்தில் நடிக்க ஆரம்பித்த எம்.எஸ்.வி, 'காதல் மன்னன்', 'காதலா... காதலா' உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நகைச்சுவையில் கொடி கட்டுவார்எம்.எஸ்.வி.
இசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி, கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால்வைத்தது இல்லை!

மெல்லிசை மன்னருக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. ஆனால், பேரதிர்ச்சி... தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ இவருக்குக் கிடைக்கவில்லை!

குரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடக கச்சேரி தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறை வேற்றினார்!

இஷ்ட தெய்வம் முருகன். எந்தக் கணமும், பேச்சுக்கு நடுவிலும் உச்சரிக்கும் வார்த்தையும் 'முருகா முருகா'தான்!
மிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோகசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறார். அது, தமிழ் சினிமாவின் பொற்காலம்!

சொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்தார் மெல்லிசை மன்னர். குறிப்பாக,உச்சஸ் தாயியில் பாடின பாடல்கள் பெரும்புகழ் பெற்றவை. 'பாசமலர்' படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி!

எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் ராமமூர்த்தியோடு இணைந்து 10 வருடங்களுக்கு மேல் கொடிகட்டிப் பறந்தார். அந்த நாட்களில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணை பெரிதாகப் பேசப் பட்டது வரலாறு. பிறகு, அவர்கள் பிரிந்தார்கள்!

மெல்லிசை மன்னர், சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார்.

இளையராஜாவோடு சேர்ந்து, 'மெல்லத் திறந்தது கதவு', 'செந்தமிழ்ப் பாட்டு', 'செந்தமிழ் செல்வன்' என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார். ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட ராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம்!

'புதிய பறவை' படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக்கொண்டு 'எங்கே நிம்மதி' பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்தார். 'பாகப் பிரிவினை' படத்தில் 'தாழையாம் பூ முடிச்சு' பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக்கொண்டு இசைக்கோர்ப்பு செய்தார்!

தன் குரு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இருக்கும்போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு, அவரது மனைவியைத் தன் தாய்போல் கருதி, அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார்!




1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக் காட்டியவர் சந்திரபாபு!

உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்குத்தான். எகிப்திய இசையைப் 'பட்டத்து ராணி' பாடலும், பெர்சியன் இசையை 'நினைத்தேன் வந்தாய் நூறு வயது'விலும், ஜப்பான் இசையைப் 'பன்சாயி, காதல் பறவை'களிலும், லத்தீன் இசையை 'யார் அந்த நிலவிலும்', ரஷ்ய இசையைக் 'கண் போன போக்கிலே கால் போகலாமா'விலும், மெக்சிகன் இசையை 'முத்தமிடும் நேரமெப்போ' பாடலிலும் கொண்டுவந்தார்!

'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் இடம்பெற்ற 'முத்தான முத்தல் லவோ' பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல். 'நெஞ்சம் மறப்பதில்லை' பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது!

இந்தியாவில் முதன்முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவரும் எம்.எஸ்.விதான். சேலத்தில் நடைபெற்ற அந்த இசை நிகழ்ச்சி அந்த நாளில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது!

பியானோ, ஹார்மோனியம், கீ-போர்டு மூன்றையும் பிரமாத மாக வாசிப்பார். சற்று ஓய்வாக இருக்கும் பொழுதுகளில் வீட்டில் பியானோவின் இசை பெருகி நிரம்பி வழியும்!
சினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி இருந்த எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப் பட்டுப் பாடி இருக்கிறார்கள்!

வி.குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார். எம்.எஸ்.வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக்கொள்ளாத பெரும் மனப்போக்கினால் நிகழ்ந்தது இது!





" கிராமஃபோன் கம்பெனியில் அப்பா வயலின் வாசிக்கப் போவார் நானும் கூடவே போவேன். அப்போ தனியா மாடியில் வயலின் வாசித்துக் கொண்டிருப்பேன். இதைப் பார்த்த இசையமைப்பாளர் சி.ஆர். சுப்பராமன் என்னைப் பாராட்டி தன்னோடு சேர்த்துக் கொண்டார். இதெல்லாம் 1939-ல் நடந்தது. கொஞ்ச காலம் அங்கே இருந்துவிட்டு ஏவிஎம்மின் சரஸ்வதி ஸ்டோர்ஸ், பிறகு "ஹெச்எம்வி' ஆர்க்கெஸ்ட்ராவில் பணிபுரிந்தேன். இதற்கிடையில் மீண்டும் சி.ஆர். சுப்பராமன் என்னை அழைத்தார். வேலைக்காரி, நல்லதம்பி போன்ற பல படங்கள் வெற்றியடைந்து கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த அவர் "என் கூடவே இரு' என்றார்.

கொஞ்ச நாள் கழித்து எம்.எஸ். விஸ்வநாதனும் அங்கு வந்து சேர்ந்தார். அப்போது நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆனோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் திடீரென்று சி.ஆர். சுப்பராமன் இறந்து விடவே தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்று அவர் இசையமைக்க ஒப்புக் கொண்டிருந்த படங்களை நாங்கள் முடித்துக் கொடுத்தோம்.

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் எங்களை ஊக்குவித்தார். எங்களிடம் ""வடநாட்டில் சங்கர் - ஜெய்கிஷன் மாதிரி தென்னாட்டில் எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஏன் இருக்கக் கூடாது'' என்றார். எனக்கு வயலின் ஒன்றே போதும் என்றேன். அதெல்லாம் இருக்கட்டும், இருவரும் சேர்ந்து இசையமையுங்கள் என்று ஊக்குவித்து தன்னுடைய "பணம்' என்ற படத்தில் எங்கள் இருவரையும் இணைத்து முதன்முதலில் இசையமைக்க வைத்து டைட்டிலில் "விஸ்வநாதன்-ராமமூர்த்தி' என்று போட்டார்.
"அண்ணே... ராமமூர்த்தி என்னைவிட வயதிலும், இசை அனுபவத்திலும் பெரியவர். அதனால் அவர் பெயரை முன்னால் போடுங்கள் என்று எம்.எஸ்.வி. அவர்கள் என்.எஸ்.கே.விடம் சொல்ல "வி' பாஃர் விக்டரி அதனால் உன் பெயர் முன்னால் இருக்கட்டும் ராமமூர்த்தி உன்னை தாங்கிப் பிடிப்பார் என்றார். அன்று இணைந்து ஆரம்பித்த எங்கள் பயணம் பலநூறு படங்களுக்கு தொடர்ந்தது."
( சினிமா எக்ஸ்பிரஸ் T.K.ராமமூர்த்தி பேட்டியிலிருந்து )
விகடன் மேடையில் மறைந்த எம்.எஸ்.வி. அவர்கள் பதில் அளித்து இருந்தார். இதோ பொக்கிஷ பகிர்வாக இங்கே..வாசகர் கேள்விகள்...
கே.கலையரசன், கிடாரங்கொண்டான்.
 ''இந்தக் காலத்தில் சில திரைப்படப் பாடல் களில் 'காப்பி’ நெடி தூக்கலாக இருக்கிறது. ஆனால், அந்தக் காலத்திலேயே எம்.ஜி.ஆர். உங்களிடம் சில ரெக்கார்டுகளைக் கொடுத்து, 'இது மாதிரி இசையமைத்துக் கொடுங்க’னு சொன்னாராமே... உண்மையா?''
'' 'உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக லொகேஷன் பார்க்க வெளிநாடுகளுக்குப் போன எம்.ஜி.ஆர்., ஒரு மூட்டை நிறைய ரிக்கார்டுகளும் கேசட்டுகளும் கொண்டுவந்து கொடுத்து, 'விசு... இதை எல்லாம் கேட்டுப்பார். ஒரு ஐடியா கிடைக்கும்’னார். நான் அதை எல்லாம் ஒரு ஓரத்தில் ஒதுக்கிவெச்சுட்டு, 'அண்ணே... நான் மெட்டுப் போட்டுத் தர்றேன். அதைக் கேட்டுட்டு அப்புறம் சொல்லுங்க’னு சொல்லி, கடகடனு நிறைய மெட்டு போட்டுக் கொடுத்தேன். அதையெல்லாம் கேட்டதுமே எம்.ஜி.ஆர். என்னைக் கட்டிப்புடிச்சுக்கிட்டார். அது எல்லாமே சூப்பர் ஹிட் மெட்டு ஆனதுதான் உங்களுக்கே தெரியுமே!''
பா.கீர்த்தனா, சென்னை-63.
''ஜெயலலிதா உங்களுக்கு ஜனாதிபதி விருதுக்கு சிபாரிசு செய்ய முன்வந்தும் நீங்கள் மறுத்தது ஏன்?''
''முதல்வர் அம்மா என்கிட்டேயே, 'உங்களுக்கு ஜனாதிபதி விருது கொடுக்க சிபாரிசு செய்யப்போறேன்’னு சொன்னாங்க. என் இசை மேல அவங்களுக்கு இருக்கிற மதிப்பின் காரணமா அப்படிச் சொன்னாங்க. 'இல்லம்மா... உங்களுக்கு வேற நிறைய வேலை இருக்கும். என்னால எதுக்கு உங்களுக்குச் சங்கடம்? வேண்டாம்மா. ஒவ்வொரு ரசிகரும் தன் மனசுல எனக்குக் கொடுத்துருக்கிற இடத்தைவிடவா விருதுகளும் பட்டங்களும் எனக்குச் சந்தோஷம் கொடுத்துடப் போகுது... நீங்க சொன்னதே போதும்மா’னு சொல்லிட் டேன். அது உண்மைதானே!''
க.சந்திரன், திருவண்ணாமலை.  
'' 'அன்னக்கிளி’ படத்தின் பாடல்கள் வெளிவந்தப்ப, அதைக் கேட்டதும் உங்க மனசுல என்ன நினைப்பு ஓடுச்சு?''
'' சிவகுமார் நடிச்ச பல படங்களுக்கு நான் மியூஸிக் போட்டிருக்கேன். 'அன்னக்கிளி’ பட வேலைகள் ஆரம்பிச்சப்பவே புது மியூஸிக் டைரக்டரை அறிமுகப்படுத்துறாங்கனு பேசிக்கிட்டாங்க. படத்தின் பாடல்களைக் கேட்டுட்டு, 'ரொம்பப் பிரமாதமா... இருக்கே’னு நினைச்சேன். அப்போ எங்கே போனாலும் இதே பேச்சாதான் இருந்துச்சு. தம்பி இளையராஜாவைப் பாராட்டினேன். 'அன்னக்கிளி’ வர்றதுக்கு முன்னயே அவரை எனக்குத் தெரியும். என் ட்ரூப்புல கீபோர்டு வாசிச்சிருக்கார். அற்புதமான மேதை. இன்னொரு விஷயம், யாரையும் நான் பொறாமை யோட பார்த்தது இல்லை. ஆனா, போட்டி இருக்கும்.''
தீன் முகம்மது, பூதமங்கலம்.
''நீங்கள் வாய்விட்டு அழுத சம்பவம் என்ன?''
''நான் கோல்டன் ஸ்டுடியோவுல ஒரு படத்துக்கு பாட்டு கம்போஸிங்ல இருந்தேன். அப்போ மெஜஸ்டிக் ஸ்டுடியோ ரெங்கசாமி கார்ல இருந்து இறங்கி வேக வேகமா வந்து, 'கண்ணதாசன் காலமாயிட்டார்’னு சொன்னார். அதைக் கேட்டதுமே எனக்கு ஈரக்குலையே நடுங்கிப்போச்சு. கண்ணீர் முட்டிக்கிட்டு வந்திருச்சு. என்ன செய்யிறதுன்னே தெரியலை. அழுது அழுது கண்ணு சிவந்துபோயிருச்சு. நெஞ்சு படபடப்பை அடக்கிட்டு கவிஞர் வீட்டுக்கு ஓடினேன். அங்கே போனா கண்ண தாசன் சோபாவுல ஜம்முனு உட்கார்ந்திருக் கார். 'டேய் விசு, நான் செத்துப்போயிட்டா நீ எப்படி அழுவேனு பார்க்க ஆசையா இருந்தது. அதான் அப்படி சொல்லச் சொன்னேன்’ னார். அதுதாங்க நான் என்னை மறந்து விம்மி வெடிச்சு அழுத தருணம்!''
அனுசுயா கோவிந்தராஜன், தஞ்சாவூர்.
''நீங்க புகழின் உச்சத்தில் இருந்த நேரத்தில் உங்களுக்கு நிகராக பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்த இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனைப் பற்றி உங்கள் நினைவுகள் என்ன?''
''ரொம்பப் பெரிய மேதைங்க அவர். நான் பெரிசா மதிக்கிற மியூஸிக் டைரக்டர்ல அவரும் ஒருத்தர். அப்போ நான் மியூஸிக் போட்ட ஒரு படத்தோட பாட்டெல்லாம் ஹிட் ஆச்சுன்னா... அடுத்ததா அவர் மியூஸிக் போட்ட பாடல்களும் ஹிட் ஆகும். ரெண்டு பேருமே பீக்ல இருந்தோம். முதன்முதலா கோரஸ் பாடுறதுக்கு நான் சான்ஸ் கேட்டுப் போனது கே.வி.மகாதேவன்கிட்டதான். என்னை அவர் சேர்த்துக்கலை. ஆனா, 'ஜூபிடர் பிக்சர்ஸுக்கே மறுபடியும் போய்ச் சேரு’ன்னு சொல்லி... எனக்கு வேட்டி, சட்டைலாம் எடுத்துக் கொடுத்து, கையில் ரெண்டு ரூபாயும் தந்து என்னை அனுப்பிவெச்சது அவர்தான். நான் கோயம்புத்தூர் ஜூபிடர் பிக்சர் ஸுக்குப் போய், எஸ்.எம்.சுப்பையா நாயுடுகிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். பல பேர் என்னை வழிப்படுத்தி இருக்காங்க. அதில் கே.வி.மகா தேவன் அவர்களுக்கு முக்கியமான இடம் இருக்கு!''
''இப்போதும் நீங்கள் அடிக்கடி முணுமுணுக் கும் பாடல் எது... ஏன்?''
''ஏன்னு சொல்லத் தெரியலை. ஆனா, 'தேவனே என்னைப் பாருங்கள்...’ பாட்டைத்தான் இப்பெல்லாம் அடிக்கடி முணுமுணுத்துட்டு இருக்கேன்.''
கே.ஆர்.முத்தையா, திருச்சி-4.
''கமல், ரஜினி இருவரும் உங்களிடம் எப்படிப் பழகுவார்கள்?''
''எனக்கு எல்லா வயசுலயும் நண்பர்கள் இருக்காங்க. கமல் என் குட்டி நண்பன். என் குடும்பத்தில் பிறக்காத பிள்ளை. முன்னாடி அடிக்கடி என் வீட்டுக்கு வருவார். அப்பல்லாம், 'எனக்கு நல்லா பாட வரும். எனக்கு உங்க மியூஸிக்ல பாடுறதுக்கு சான்ஸ் கொடுங்களேன்’னு கேட்டுட்டே இருப்பார். என்னமோ தெரியலை என் மியூஸிக்ல அவரைப் பாட வைக்கணும்னு எனக்குத் தோணவே இல்லை.
ரஜினி என்னை எங்கே பார்த்தாலும், அவர் வீட்டுல உள்ள ஒரு பெரிய மனிதரை வணங்குற மாதிரி பணிவா வணங்குவார். 'நினைத்தாலே இனிக்கும்’, 'தில்லுமுல்லு’ படங்கள்ல அவருக்காக நான் போட்ட பாட்டைக் கேட்டுட்டு, ஓடி வந்து என்னைக் கட்டிப்புடிச்சிக்கிட்டாரு. இப்பவும் எங்கேயாச்சும் பார்த்தா, 'ராகங்கள் பதினாறு உருவான வரலாறு... நான் பாடும்போது அறிவாயம்மா...’ பாட்டை வாய்விட்டு முணுமுணுப்பார். அன்பான மனுஷன்!''
ப.ராணி, நாகர்கோவில்.
''திருநீறு, சந்தனம், குங்குமம் திவ்யமா மணக்குது உங்க நெத்தியில. நீங்க எப்படி 'அல்லா... அல்லா’னு 
பாட்டுப் பாடினீங்க?''
''அல்லா,  இயேசு, கிருஷ்ணர் எல்லாருமே எப்போதும் நல்லவங்களுக்குப் பக்கத்துலேயே இருப்பாங்க. 'முகமது பின் துக்ளக்’ படத்துல 'அல்லா... அல்லா...’ பாட்டை நான் நாகூர் ஹனீபாவைப் பாட வைக்கணுங்கிற முடிவோடதான் இருந்தேன். அவர் குரல்தான் அந்தப் பாட்டுக்குப் பொருத்தமான குரல்னு நிச்சயமா நம்பினேன். ஆனா, சோ அந்தப் பாட்டை நான்தான் பாடணும்னு ஒரே பிடிவாதமா இருந்தாரு. நான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன். 'சரி... யாரையெல்லாம் நீ பாட வைக்கணும்னு விரும்புறியோ அவங்க பேரோட, உன் பேரையும் சீட்டு எழுதிப் போட்டுக் குலுக்கி எடுப்போம்’னார் சோ. அது மாதிரியே குலுக்கிப் போட்டு எடுத்தா, என் பேர் எழுதுன சீட்டுதான் வந்துச்சு. 'சரி... ஆண்டவன் சித்தம் அதுதான்போல’னு நானும் பாடினேன். அந்தப் பாட்டு வெளியாகி பட்டிதொட்டி லாம் பிரபலமான பிறகு, சோ ஒரு உண்மையைச் சொன்னார். அது... சீட்டு எழுதுனப்ப எல்லா சீட்டுலயுமே என் பேரைத்தான் எழுதிவெச்சிருக்கார் அந்த மனுஷன்!''
டி.ராகுல், தோப்பூர்.
''கவியரசு கண்ணதாசன் பயங்கர பிடிவாதக்காரராமே... அப்படியா?''
''பிடிவாதம்கிறது பெரிய வார்த்தை... கொண்ட கொள்கைல உறுதியா இருப்பார். அந்தக் கொள்கைக்குச் சரியான நியாயமும் வெச்சிருப்பார். 'யாரை நம்பி நான் பொறந்தேன்... போங்கடா போங்க; என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க...’ பாடல் பதிவு. பாடல் வரிகளைப் படிச்சுட்டு கவியரசுகிட்ட நான் சொன்னேன், 'என்ன கவிஞரே... வாடா போடானு மரியாதை இல்லாம எழுதியிருக்கீங்க. இதே மாதிரிதான், 'போனால் போகட்டும் போடா’ன்னும் எழுதிஇருந்தீங்க. இதெல்லாம் நல்லாவா இருக்கு?’ உடனே கண்ணதாசன் பளிச்னு சொன்னாரு, 'டேய்... நீ விஜயவாடாங்கிற ஊரைக்கூட 'விஜயவாங்க’னு சொல்றவன். நான் எழுதறதுக்கு மெட்டு போடுறதுதான் உன் வேலை. அதை மட்டும் ஒழுங்கா பார்த்துக்க.. போதும்’னு பட்டுனு சொல்லிட்டார். அதுக்கு அப்புறம் நான் எதுவும் பேச முடியுமா என்ன? அவரோட பிடிவாதம்லாம் இப்படித்தான் இருக்கும்.''

லதா ராமகிருஷ்ணன், திருச்சி-9.
''சமீபத்தில் வெளியானதில் நீங்கள் மிகவும் ரசிச்ச தமிழ்ப் பாட்டு எது?''
''ஒரு பாட்டு இல்ல... சில பாடல்களைச் சொல்லலாம். தம்பி இளையராஜா இசையமைச்ச 'நீதானே பொன் வசந்தம்’, ஏ.ஆர்.ரஹ்மான் இசைஅமைச்ச 'விண்ணைத் தாண்டி வருவாயா’... படப் பாடல்கள் எல்லாம் கேட்குறதுக்கு ரொம்ப இனிமையா இருந்துச்சு. புதுசாவும் இருந்துச்சு!''
- ஆனந்த விகடன்

No comments:

Post a Comment