Search This Blog

Tuesday, July 24, 2012

'ஆட்டிசம் அறிவோம்‘ Autism

ஏப்ரல் 02 - உலக ஆட்டிசம் விழிப்பு உணர்வு தினம்.

ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, உலகம் முழுவதும் ‘ஆட்டிசம்' குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படும் தினம் இது.
ஆட்டிசம் குறித்து முழுமையாக அறிய, அண்மையில் ‘டாக்டர் விகடன்‘ இதழில் வெளிவந்த சிறப்புக் கட்டுரை இதோ...

'ஏன் என் குழந்தை மட்டும் கூப்பிட்டா, என்னைத் திரும்பிப் பார்க்கலை; என் கண்ணைப் பார்த்துப் பேசலை; மற்ற குழந்தைகளோட சேர்ந்து சகஜமா விளையாடலை; காரணமே இல்லாம அடிக்குது; கிள்ளுது; ஏன் இத்தனை முரட்டுத்தனமா நடக்குது?’ என்பன போன்ற கேள்விகள் ஒரு தாய்க்கு இருந்தால் அவரது குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருக்கலாம் என்கிறது மருத்துவம்.

''ஆயிரத்தில் ஒரு குழந்தைதான் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படுகிறது. ஆனால், எல்லோரும் பயப்படுவதுபோல் ஆட்டிசம் என்பது ஒரு மன நோய் அல்ல. இதை 'மூளை முடக்கு' என்கிறது மருத்துவம். இதற்கான சிகிச்சை முறையும் மிக எளிதானது!'' என்கிறார் குழந்தை நல மருத்துவர் ஜான் மில்லர்.

''மத்திய அரசு, மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலில்தான் இவர்களைச் சேர்த்திருக்கிறது. ஆனால், எம்.ஆர்.ஐ, சி.டி. ஸ்கேன், இ.சி.ஜி. எனப் பல்வேறு சோதனைகளில், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மூளையைப் பரிசோதித்துப் பார்த்தபோது, இது மூளை பாதிப்பு அல்ல என்கிற உண்மை தெரியவந்தது. வயிற்றில் ஏற்படக்கூடிய மெட்டபாலிக் தொடர்பான பிரச்னைதான் ஆட்டிசம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட கலிஃபோர்னியாவைச் சேர்ந்த டெம்பிள் க்ரான்டைன் தன்னைப் பற்றிய சுயசரிதை எழுதும்போது, 'எங்களுக்கு நிறைய அறிவு இருக்கிறது. எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை எங்களால் மிகச் சரியாக புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அதை உங்களுக்குப் புரியவைப்பதற்கான மொழிதான் எங்களுக்குத் தெரியவில்லை’ என்கிறார். இதுதான் நிதர்சனம்.

ஆட்டிசக் குழந்தைகளை உலகம் சம்பந்தப்பட்ட நடைமுறை விஷயங்களுக்குள் கொண்டுவருவதும் பேசவைப்பதும்தான் கடினமே தவிர, அவர்களுக்கு அறிவுத் திறன் அதிகம். காது, மூக்கு, வாய், தொண்டை என உடல் ரீதியாகவும் அவர்கள் ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள். பசி, தூக்கம், வலி என்று அத்தனை உணர்வுகளும் உணர்ச்சிகளும் அவர்களுக்கு உண்டு. ஆனாலும் அதை வெளிப்படுத்த வார்த்தைகள் மட்டும்தான் தெரியாது. பேச வேண்டும் என்கிற எண்ணத்தை அவர்களுக்குள் கொண்டுவந்துவிட்டால், ஆட்டிசம் பாதித்தக் குழந்தைகளை எளிதாக மீட்கலாம்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, சாப்பாடு, தூக்கம் என அன்றாடப் பழக்க வழக்கங்களை ஒழுங்குப்படுத்த பயிற்சி தரவேண்டும். கம்ப்யூட்டர், டி.வி, செல்போன், லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்கள் ஆட்டிசம் பாதித்தக் குழந்தைகளுக்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இதுபோன்ற எலெக்ட்ரானிக் பொருட்கள்மீதுதான் இந்தக் குழந்தைகளுக்கு ஈர்ப்பு அதிகமாக இருக்கும். எனவே கவனமாக இதைத் தவிர்க்க வேண்டும்.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளோடு அன்போடு நாம் நெருங்கிப் பழகும்போதுதான் அவர்களும் சகஜமாக நம்மை நெருங்கி வருவார்கள். அதனால், பூங்கா, கடற்கரை, கோயில்... என அவர்களோடு நேரத்தை செலவிடுவது நல்லது.

நீச்சல், ஸ்கேட்டிங், சைக்கிள் ஓட்டுதல் போன்ற விளையாட்டுடன் கூடிய உடற்பயிற்சிகள் அவர்களது உடற்திறனை அதிகப்படுத்தும். தன்னுடைய வேலைகளைச் சுதந்திரமாகத் தானே செய்யக்கூடிய பயிற்சியையும் கொடுக்கும்!'' - நம்பிக்கையோடு சொல்லும் ஜான் மில்லர் தொடர்ந்து, ''அமெரிக்கா உலகிற்கு கொடுத்த மோசமான விஷயங்களில் இந்த ஆட்டிசமும் ஒன்று!

ஆட்டிசம் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்கர்கள்தான். அமெரிக்கர்களின் உணவு முறையும், வாழ்க்கை முறையும்தான் இதற்குக் காரணம். ஒருவரை இன்னொருவர் எப்படித் தொட வேண்டும் என்பதற்குகூட எழுதப்படாத சட்டம் வகுத்திருக்கும் நாடு அது. குழந்தைகளை இடுப்பில்கூடத் தூக்க மாட்டார்கள். பெற்றோர்கள் குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரமும் குறைவு. இதன் விளைவு... அவர்களுக்குள் தொடு உணர்வு என்பதே குறைந்துவிட்டது. இந்த வாழ்க்கை முறையைத்தான் இப்போது நாமும் தத்தெடுத்திருக்கிறோம்'' என்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால், நமது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் முறையாகக் கடைப்பிடித்தாலே ஆட்டிசம் பாதிப்புகள் நம்மைத் தாக்காது!

No comments:

Post a Comment