Search This Blog

Tuesday, October 25, 2011

கிரந்தம் பற்றிய சில அடிப்படை உண்மைகள் - முனைவர் மு. இளங்கோவன்கிரந்தம் என்பது தமிழர்கள் சமற்கிருதத்தை எழுதக் கண்டுபிடித்த வரிவடிவம் ஆகும். கிரந்தம் என்பது மொழி அன்று.

வடமொழியாகிய சமற்கிருதத்துக்கு முதன்முதல் எழுத்து ஏற்பட்டது தமிழ்நாட்டில்தான் என்பார் பாவாணர் (வடமொழி வரலாறு,பக்கம்127). அதனால்தான் வேதங்களை எழுதாக்கிளவி என்றும் எழுதாமறை என்றும் குறித்தனர் போலும்.

எழுத்து இருந்தால்தானே எழுதுவதற்கு முடியும். முடி இருந்தால்தானே பின்னி சடை போடமுடியும். இல்லாதவள் பிறரின் இடிமுடியை வாங்குவதே வழக்கு.
அந்த அடிப்படையில்தான் தமிழர்களிடம் இருந்து பல மொழி சார்ந்த மூலங்களைப் (நெடுங்கணக்கு,எழுத்து வடிவம்) வடமொழியினர் பெற்றுள்ளனர்.

கிரந்தம் என்பது பண்டையத் தமிழ் ஏட்டெழுத்திலிருந்து திரிந்த எழுத்துருவாகும். அதன் காலம் கி.மு.10 ஆம் நூற்றாண்டு என்பதும் பாவாணர் கருத்தேயாம்.

இன்றுள்ள தேவநாகரி கி.பி.4 ஆம் நூற்றாண்டில் கருக்கொண்டு 11 ஆம் நூற்றாண்டில் நிறைவடைந்தது. தேவநாகரி எழுத்தையும் உற்றுநோக்கினால் அதற்கும் கிரந்த எழுத்துக்கும் உள்ள நுண்ணிய வடிவ ஒப்புமைப் புலனாகும் எனவும் குறிப்பிட்டுப் பாவாணர் 'தேவமொழி யென்னும் வடமொழிக்கு நகரங்களில் ஆளப்பெற்ற எழுத்து தேவநாகரி. தேவர் நகரங்களில் ஆளப்பெற்றது தேவநாகரி என்பர் வடமொழியாளர். அவர் தேவரென்று நாணாது குறிப்பது பிராமணரை"(பக்கம் 127) என்று எழுதியுள்ளார்.

கிரந்தம் தொடர்பாக என் பேராசிரியர் முனைவர் பே.க.வேலாயுதம் அவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தபொழுது பல செய்திகளை முன்வைத்தார். நானும் அவருமாக உரையாடியதில் நினைவுகூரப்படவேண்டிய செய்திகள் பின்வருமாறு அமைகின்றன.

ஆரியர்கள் இந்திய நாட்டுக்கு உரிமையானவர்கள் இல்லை. அவர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் என்பது வரலாறு.

அவ்வாறு வந்தவர்களுக்கு அ,ஆ,இ,ஈ என்னும் நெடுங்கணக்கு உரியது இல்லை. இந்த நெடுங்கணக்குத் தமிழர்களுக்கு உரியது.

தமிழர்களிடமிருந்தோ, வட நாட்டில் இருந்த திராவிடர்களிடமிருந்தோ தமிழ் நெடுங்கணக்கைப் பெற்றுக்கொண்டு பின்னர் தமிழை இகழ்ந்தனர்.

ஏனெனில் வேறு எந்த ஆரியமொழியிலும் இந்த நெடுங்கணக்கு அமைப்பைப் பார்க்க இயலாது. ஆல்பா,பீட்டா,காமா,டெல்டா என்றுதான் இருகின்றது. இதுதான் பின்னாளில் A B C D என்று மாறுகின்றது.

தொல்காப்பியர் கிரந்த எழுத்துகள் பற்றி விரிவாகப் பேசவில்லை. ஆனால் நன்னூல் விரிவாகப் பேசுகின்றது.

கிரந்த எழுத்துகள் கல்வெட்டில் மிகவும் குறைவு. தொல்காப்பியம், எட்டுத்தொகை,பத்துப்பாட்டில் கிரந்த எழுத்துகள் இல்லை.

சிலப்பதிகாரம்,கம்பராமாயணம்,நாலாயிர திவ்ய பிரபந்தம் நூலில் ஒரு இடத்திலும் கிரந்த எழுத்துகள் இல்லை.

கிரந்த எழுத்து வேதம் படிக்க தமிழர்களுக்கு உதவும் என்கின்றார்கள்.
இன்று பார்ப்பனர்களே வேதம் படிக்க முன்வருவதில்லை. எந்தத் தமிழன் வேதத்தைக் கேட்டான்?

வேதம் படிக்க தமிழனுக்கு உரிமை உண்டா?

வேதம் படித்த பிறகு கோயிலில் பூசை செய்ய முடியுமா?

மனுதரும சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டம் இடம்கொடுக்குமா?.

இரண்டாயிரம் ஆண்டுகளாக ஸ ஷ ஜ ஹ க்ஷ இவற்றைச் சேர்க்கவே தமிழர்கள் அனுமதித்ததில்லை. நிலைமை இப்படி இருக்க 26 எழுத்துகளைத் தமிழில் சேர்ப்பது தமிழுக்குப் பெருங்கேடாகும்.

கிரந்தம் தேவநாகரிக்கு முந்தியது. தேவநாகரியில் சேர்க்காமல் தமிழில் சேர்ப்பது மீண்டும் மணிப்பவள நடையைக் கொண்டு வருவதற்கு ஆகும் முயற்சியாகும்.

சமற்கிருத மொழியைத் தமிழில் கலந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் புதுமொழிகள உருவாக்கித் தமிழர்களிடேயே பகையை உண்டாக்கியவர்கள் சமற்கிருதமொழியினர்.

இந்தியாவில் உள்ள ஆரியமொழிகளைத் தவிர பிற ஆரியமொழிகளில் வருக்க எழுத்துகள் உள்ளனவா?

செயற்கையாகப் பேசப்படாத ஒரு மொழியின் ஆதிக்கத்தை நிலைநாட்டவே இம்முயற்சி.

கிரந்தம், தேவநாகரி எழுத்துகள் தோன்றுவதற்கு முன்னரே சமற்கிருதத்தைப் பிராமி என்ற அசோகன் காலத்து எழுத்தில் எழுதியிருக்க வேண்டும். பிராம்மி ஆரியர்க்கு உரியது அன்று. தமிழ், தமிழி, திராவிடி, பம்மி, பிராமி என்றாகியது என்று பேராசிரியர் வேலாயுதம் குறிப்பிடுகின்றார்.

வடமொழி நெடுங்கணக்கு

தமிழில் உயிர் எழுத்து பன்னிரண்டு(அ-ஔ); மெய் எழுத்து பதினெட்டு(க-ன)

"அகர முதல னகர இறுவாய் முப்பஃதென்ப"(தொல்காப்பியம்)

இதுபோல் வடமொழி எழுத்துகளை அச்சு எழுத்து(உயிர் எழுத்து) எனவும், அல் எழுத்து (மெய்யெழுத்து)எனவும் இரண்டாகப் பகுப்பர்.

அச்சு எழுத்து பதினாறு ஆகும் (16)

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ரு, ரூ, லு, லூ, ஏ, ஐ, ஓ, ஔ, அம், அஃ (சாய்வு எழுத்துகள் வடமொழிக்கு உரியவை. எஞ்சியவை தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவானவை)

அல் எழுத்து முப்பத்தேழு (37)

க, Kha, ga, Gha, ங, ச,Chha, Ja, Jha, ஞ, ட, Tha, da, dha, ண, த, ttha, ddha, dhaa, ந, ப, pha, ba, bha, ம, ய, ர, ல, வ, Sa, Sha(ஷ), ssa(ஸ), ha(ஹ), ள, க்ஷ, ஷ்க, ஷ்ப

இறுதியில் வரும் ஷ்க, ஷ்ப என்னும் இரண்டும் கூட்டெழுத்துகளாகும். இவற்றைச் சந்தியக்கரம் என்பர். இவற்றை விடுத்துச் சமற்கிருத மெய்யெழுத்துகள் 35 என்பதும் உண்டு.

இந்த மெய்யெழுத்துகளில் உள்ள க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ள என்னும் பதினைந்து எழுத்துகளும் தமிழுக்கும் சமற்கிருதமொழிக்கும் பொதுவெழுத்துகளாகும்.

மேலும் இதில் உள்ள "எ,ஒ,ழ,ற,ன' என்ற ஐந்து தமிழ் எழுத்தொலி வடிவங்கள் கிரந்தத்தில் அவ்வாறே பயன்படுத்தப்படுகின்றன. எனவே இந்த ஐந்து தமிழ் எழுத்து வடிவங்களையும் கிரந்த அட்டவணையில் இணைக்க வேண்டும் என்பது சிறீ இரமணசர்மாவின் முன்மொழிவுகளுள் ஒன்றாகும். இவ்வாறு இணைத்தால் பின்னாளில் கிரந்த வடிவிலிருந்ததுதான் தமிழ்வடிவம் வந்தது என்று வரலாற்றைத் திரிக்கவழியுண்டு. இதற்கு முன் இவ்வாறு உரைத்தமைக்குப் பல சான்று உண்டு. இதனைத்தான் பாவாணர் பெயரன் தாத்தாவைப் பெற்றான் என்பதுபோல் என்று உவமைவழிப் பல இடங்களில் விளக்கியுள்ளார்.அவர் நூலில் கண்டுகொள்க.

நன்றி: http://muelangovan.blogspot.com/

No comments:

Post a Comment