Search This Blog

Monday, August 29, 2011

துணிவு கொள்!                                                           -முனைவர். வி. தேன்மொழி.
சில மாதங்களுக்கு முன்பே அம்மா இந்தியாவிலிருந்து வாங்கி அனுப்பிய புடவையை இளையநிலா அன்றுதான் உடுத்தினாள். கண்ணாடி முன்பு நின்று தன் பிம்பத்தையே உற்றுப் பார்த்தாள். அவளுக்கே அவள் மேல் ஆசை வரும் போல் இருந்தது. பிறகு, அறிவழகன் அவள் மேல் ஆசை வைப்பதற்குச் சொல்லவா வேண்டும். நீளமாகப் போட்ட பின்னல் அவள் பின்னழகைத் தொட்டு நின்றது. தலையில் சூடிய மல்லிகைப் பூ கமகமத்தது. கைப்பையை எடுத்துத் தோளில் போட்டாள்.
வாசலுக்கு வந்து செருப்புக்குள் காலை நுழைத்தபடியே கைப்பைக்குள் எல்லாம் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டாள். பிறகு கிளம்பும் முன் ஒரு நிமிடம் நின்று பிரார்த்தனை செய்து விட்டு மாடிப்படியை விட்டிறங்கி மின்தூக்கியை அடைந்து பொத்தானை அழுத்தி விட்டுக் காத்திருந்தாள்.
சிறிது நேரத்தில் மின்தூக்கியின் கதவு திறந்தது. உள்ளே நுழைந்து மீண்டும் பொத்தானை அழுத்தினாள். மின்தூக்கி பதினோறாவது மாடியில் இருந்து கீழ் நோக்கிச் செல்லத் தொடங்கியது. கண்களை மூடிக்கொண்டு அன்றைக்குச் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளை மனதிற்குள் ஒருமுறை மீண்டும் அவசரமாக அசை போட்டாள். அவள் மனதிற்குள் ஏதோ ஒன்று குறுகுறுத்தது. கண்களைத் திறந்தாள். அருகில் நின்று கொண்டிருந்த இளைஞன் அவளை அப்படியே விழுங்கி விடுவதைப் போலப் பார்த்தான்.
‘‘நீங்க இங்க புதுசா வந்திருக்கீங்களா?’’
"ஆம்" என்பதைப் போல் அந்த ஆடவனின் கேள்விக்கு எரிச்சலுடன் தலையாட்டி வைத்தாள்.
‘‘இதுக்கு முன்னாடி எங்க இருந்தீங்க?’’
‘‘வுட்லண்ட்ஸ்’’
அதற்கு மேல் அவனுக்கு அவளிடம் என்ன கேட்பது என்று தெரியவில்லை. ஆனால் அவன் விழிகள் மட்டும் அவளுடைய கொடியிடையை அவ்வப்போது தொட்டுச் சென்றது. அதை இளையநிலாவும் கவனித்தாள். அவளுக்கு அவன் பார்வை என்னவோ போலிருந்தது. சற்று நேரத்தில் மின்தூக்கி தரைத்தளத்தைத் தொட்டது.
மின்தூக்கியிலிருந்து வெளியே வந்ததும் அவள் பேருந்து நிறுத்தத்திற்கு விரைந்தாள். அவள் காத்திருந்த பேருந்து வந்ததும் ஜன்னலோர இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டாள். பேருந்திற்குக் காத்திருக்கும் போது இளையநிலாவுக்கு அறிவழகனின் நினைவுதான் வந்தது. அவள் ஒரு தனியார் பொறியியல் நிறுவனத்தில் வேலை பார்ப்பவள். பைப்பிங் சம்பந்தமான திட்டவேலை ஒன்றினை முடித்துத் தருவதற்கான ஒப்பந்தத்தில் அவள் வேலை பார்க்கும் நிறுவனம் இணைந்திருந்தது. ஏற்கனவே மெக்கானிக்கல் துறையில் பட்டப்படிப்பு முடித்தவள். இருந்தாலும் பைப்பிங் தொடர்பான விஷயங்கள் அவளுக்குப் போதுமான அளவு தெரியாததனால் அவளுடைய நிறுவனமே பணம் செலுத்தி டி.பி.எஸ் என்ற பட்டயப்படிப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
கிட்டத்தட்ட அந்தப் படிப்பு முடியும் நிலையை எட்டி இருந்தது. அதிலும் ஒரு பிரச்சனை. அவளுக்குப் பாடம் சொல்லித் தருபவன்தான் அறிவழகன். அவள் பாடம் படித்தாள். அறிவழகன் அவளைப் படித்துக்கொண்டிருந்தான். அன்று வகுப்பறையை அடைந்து கணினி முன்பாக அமர்ந்ததும் இளையநிலா தான் குறித்து வைத்திருந்த சந்தேகத்தை மறக்காமல் அவனிடம் கேட்டாள்.
‘‘பைப்பின் உள்ளே வாஷர் -ஐப் பொருத்தினால் எத்தனை இன்ச் இடைவெளி விடவேண்டும்?
மூன்று அங்குலமா? அல்லது நான்கு அங்குலம் விட வேண்டுமா?’’ என்று கேட்டபடி நிமிர்ந்த போது கிட்டத்தட்ட அறிவழகனின் கண்கள் அவள் கழுத்தை விட்டுக் கீழே இறங்கி நிலையாக நங்கூரமிட்டிருப்பதைப் பார்த்து விட்டாள்.
இந்தக் கதை அடிக்கடி நடப்பதுதான். அவன் பார்வை அவளுக்கு உடம்பெல்லாம் கம்பளிப் பூச்சி ஊர்வதைப் போல் இருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டாள். அவள் தன் பொறுமையின் எல்லையைக் காத்துக் கொண்டிருப்பது எப்போதும் போல் இன்றும் வாடிக்கையானது. இந்த ஆண்களுக்கு ஏன் இவ்வளவு குரூரமான புத்தி? அவளுடைய சிந்தனைத் தடைபட்டது.
பக்கத்து இருக்கையிலிருந்து சூசன் அறிவழகனை அழைத்துச் சந்தேகம் கேட்டான். அவனுடைய சந்தேகத்தைத் தீர்த்து வைத்து விட்டு அறிவழகன் தன்னுடைய அறைக்குத் திரும்பினான். சற்று நேரத்தில் அறிவழகனிடமிருந்து இளையநிலாவுக்கு அழைப்பு வந்தது.
இளையநிலா சற்று நேரம் யோசித்தாள். பிறகு, தன் அலைபேசியை (செல்போன்) எடுத்துக் கொண்டு அறிவழகனின் அறையை நோக்கி நடந்தாள். கதவை மெதுவாகத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள். அறிவழகனின் முகம் தென்பட்டது. எதிரே இருந்த இருக்கையைக் காட்டி அமரும்படி புன்னகையுடன் சைகை காண்பித்தான். அவள் உட்கார்ந்த நளினத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அறிவழகனுக்கும் இளையநிலாவுக்கும் இடையே ஒரு கனத்த அமைதி நிலவிக் கொண்டிருந்தது. அறிவழகன் மெல்ல கனைத்து அந்த நிசப்தத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான்.
‘‘நல்லாருக்கியா? ம்...? ‘’என்றான் அறிவழகன்.
மெல்லத் தலையாட்டினாள் இளைய நிலா.
‘‘நேத்து உன் ஆபீஸ்ல வேலை பார்க்கிற அருணைப் பார்த்தேன். ம்......பாப்புலர் புக் ஷாப்ல தான். கொஞ்ச நேரம் உன்னைப் பத்திதான் பேசிகிட்டு இருந்தோம். உன்னை ரொம்ப புத்திசாலின்னு சொன்னாரு.’’
‘‘அப்படியா? அவரை எனக்கு நல்லாத் தெரியும். அவர் எனக்கு நல்ல நண்பர்’’ என்றாள் இளையநிலா.
‘‘வேற ஒண்ணும் இல்ல இளையநிலா. நான் நேரா விஷயத்துக்கு வர்றேன். நீ ரொம்ப அழகாயிருக்க.’’
‘‘ம்.....எனக்கும் தெரியும் சார்’’ என்றாள் நக்கலாக.
‘‘நீ ஏன் எங்கூட நாலு நாள் தங்கக் கூடாது. பிரச்சனையெல்லாம் வராது. ரொம்ப பாதுகாப்பா இருக்கலாம். ஒண்ணும் பிரச்சனையாகாம நான் பாத்துக்கிறேன்.’’
‘‘இல்ல.........நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு இல்ல சார் நான்.’’
‘‘இளையா! எல்லா பொண்ணுங்களும் இதுக்கு ஒத்துக்க மாட்டாங்கன்னு எனக்குத் தெரியும். முதல்ல தயக்கமாத்தான் இருக்கும். பயப்படாத எல்லாம் சரியாயிரும்மா.’’
அவன் சொல்லி முடித்த சற்று நேரத்தில் இடி ஒன்று கன்னத்தில் இறங்கியது. அவன் கண்களுக்குள் இருட்டு பரவி கலர் கலராக பட்டாம்பூச்சி பறந்தது.
சரேலென அறையை விட்டு வெளியே வந்தாள் இளைய நிலா. சற்றுநேரத்தில்.........
******
‘‘உங்கள் பெயர்?’’ ஆங்கிலத்தில் வினவினார் அந்த சீனப் போலீஸ்காரர்.
‘‘இளைய நிலா’’
‘‘எப்போ இப்படி நடந்தது?’’
‘‘பத்து நிமிஷத்துக்கு முன்னாடிதான்.’’
‘‘இதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா?’’
‘‘ம்.....வச்சிருக்கேன்.’’
கைப்பையிலிருந்த அலைபேசியை எடுத்து, பதிவு செய்திருந்ததை போலீஸ்காரர் முன்பாக ஒலியேற்றினாள்.
‘‘வேற ஒண்ணும் இல்ல இளையநிலா. நான் நேரா விஷயத்துக்கு வர்றேன். நீ ரொம்ப அழகாயிருக்க..  ........ ........ ......  பேசிக் கொண்டிருந்தான் அறிவழகன்.

No comments:

Post a Comment